Wednesday 6 May 2020

மாடப்புறாவின் கனவு


மாடப்புறாவின் கனவு

உதயசங்கர்

மாடப்புறா விரித்த சிறகுகளை மடக்கியது. அப்படியே அந்த நகரத்தின் மிக உயர்ந்த கட்டிடத்தின் மாடத்தில் வந்து உட்கார்ந்தது.. நேற்று தான் அங்கே குடிவந்தது. அதற்கு முன்பு வரை தூரத்திலிருந்த ஒரு கிராமத்தில் குடியிருந்தது. பாழடைந்த ஒரு கிணற்றில் பொந்துக்குள் கூடு கட்டி மூன்று முட்டைகளிட்டு குஞ்சு பொரித்தது. ஒருநாள் ஆடு மேய்க்கும் பையன் அந்தக் கிணற்றில் இறங்கி கூட்டைக் கலைத்து குஞ்சுகளை எடுத்துக் கொண்டு போய் விட்டான். அதைப் பார்த்து பயந்த மாடப்புறா அங்கிருந்து பறந்தது. பறந்தது. பறந்து கொண்டேயிருந்தது. பல ஊர்களைத் தாண்டி இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தது.
நகரம் பாலைவனம் போல இருந்தது. ஒரு மரமோ, செடியோ, புல்லோ, பூண்டோ, எதுவும் இல்லை. எங்கு பார்த்தாலும் ஒரே சத்தம். எப்போதும் பாம் பீம் தாம் தூம் கீச்ச் கிரீச்.. பௌ கௌ.. சௌ.. என்று விதவிதமான சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சத்தத்துக்கும் திடுக் திடுக்கென்று மாடப்புறாவின் நெஞ்சு துடித்தது. முதலில் புரியவில்லை. இந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது? கொஞ்சநேரம் கழித்துத் தான் தெரிந்தது. சாலையில் புகையைக் கக்கிக்கொண்டே அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான. வண்டிகள் தான் அந்தச் சத்தம் போட்டன. அந்த வண்டிகளின் சத்தமும் கருப்பாய் கக்கிய புகையும் அப்படியே மேகங்களைப் போல எல்லோர் தலை மீதும் மிதந்து கொண்டிருந்தன.
மாடப்புறாவுக்கு வயிறு பசித்தது. ஏதாவது தானியங்கள் கிடைக்குமா என்று பார்ப்பதற்காகக் கீழே இறங்கியது. இறங்குவதற்கு இடமில்லை. அவ்வளவு கூட்டம். எல்லோரும் கூட்டம் கூட்டமாய் ஊரைக் காலி செய்வதைப்போல போய் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் மாடப்புறா கவனித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் முகம் வாயை மூடி முகமூடி அணிந்திருந்தார்கள். சிடுசிடுவென்றிருந்தார்கள். கீழே புகை அடர்ந்திருந்தது. காற்றே இல்லை. மாடத்தில் பரவாயில்லை. இந்த அளவுக்கு மோசமில்லை. மாடப்புறாவால் மூச்சுகூட விடமுடியவில்லை. தலை சுற்றியது. மேலே பறந்து போய் விடலாம் என்று சிறகுகளை அசைத்தது. இரண்டடிக்கு மேல் பறக்க முடியவில்லை. அப்படியே மயங்கிக்கீழே பொத்தென்று விழுந்தது. செத்துவிடுவோம் என்று நினைத்தது மாடப்புறா. நினைவு கொஞ்சம் கொஞ்சமாக மங்கியது.
அப்போது யாரோ அதைக்கையில் தூக்கினார்கள். அதன் முதுகில் பிஞ்சு விரல்கள் தடவிக்கொடுப்பதை மாடப்புறா உணர்ந்தது. திடீரென சுத்தமான காற்றை மாடப்புறா சுவாசித்தது. அதற்கு உணர்வு வந்தபோது ஒரு குழந்தையின் கையில் முகமூடியுடன் இருந்தது. அந்தக்குழந்தையின் அப்பா,
“ ஆதிரா… பேசாம அதை கீழே போட்டுட்டு வா.. ஆக்சிஜன் சிலிண்டர் ஒரு கிலோ இரண்டாயிரம் ரூபாய்… உனக்கே பத்தாது.. இதில புறா வேறையா? “ என்று சொன்னார். அதைக் கேட்டதும் இன்னும் இறுக்கமாக அந்தப் புறாவை இறுக்கிக் கொண்டது அந்தக்குழந்தை. மாடப்புறா கண்விழித்தபோது வீட்டுக்குள் ஆக்சிஜன் நிரம்பிய அறையில் ஒரு அட்டைப்பெட்டியில் இருந்தது. அந்த அறைக்குள் சில செடிகள் இருந்தன. அவை தான் காற்றைச் சுத்தம் செய்தன.
மாடப்புறா எழுந்து ஒயிலாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா. அவள்,
“ பின்னாடி தோட்டத்தில ஒரு செடி நட்டு வைச்சிருக்கேன்.. அது பெரிசானதும் நீ அதில போய் இருந்துக்கோ..” என்று சொல்லி மாடப்புறாவுக்காக கையை நீட்டினாள். சிறு சிறகடிப்புடன் அந்தக்கையில் உட்கார்ந்தது மாடப்புறா. இப்போது மாடப்புறாவுக்கு நம்பிக்கை வந்தது. அது கண்களை மூடியது.
இப்போது நகரத்தில் மோட்டார் வண்டிகளே இல்லை. எல்லோரும் சைக்கிளில் போனார்கள். நடந்து போனார்கள். சாலையின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள் அடர்ந்து குடை மாதிரி நிழல் தந்து கொண்டிருந்தன. செடிகளும், கொடிகளும் நிறைந்திருந்தன. எல்லாவிதமான பறவைகளின் சத்தம் மட்டும் தான் கேட்டது. பூச்சிகளின் ரீங்காரம் மெல்லிசையாகக் கேட்டது. சுத்தமான காற்று வீசியது. குழந்தைகள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சாலைகளில் போய்க் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி ததும்பியது.
ம்ம்க்குர்ர்ர் ம்ம்க்குர்ர் …. மாடப்புறா அங்கேயிருந்த உயர்ந்த கட்டிடத்தின் மாடத்தில் தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தது. அந்தக் கனவு இனித்தது.


5 comments:

  1. அருமையான கதை தோழர். கனவு மெய்படட்டும்

    ReplyDelete
  2. அருமையான கதை தோழர்.. இன்றைய சூழலையும் கதையின் பேசுபொருளாக இருந்தது சிறப்பு.. மாடப்புறாவும் அந்தக் குழந்தையும்... ஆக்ஸிஜன்... செடி என்பன புதிய தளத்தில் கதை நகர்ந்தது அமர்க்களம்.. நன்று ... வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. கனவு கைகூடும், வானம் வசமாகும்.
    வாழ்த்துகள் thoz2.
    -பிரியசகி

    ReplyDelete
  4. வாழ்த்துகள். அருமையான கருத்தான கதை.

    ReplyDelete
  5. சைக்கிள்
    மோட்டர் வண்டி
    வேகத்தில்
    செல்லும் நாள் நிச்சயம்
    வரும்.அப்பொழுது
    நாமும் மாடப்புறாவும் ஆரோக்கியமாக திரியலாம்.நல்ல கதை
    வாழ்த்துகள்.

    ReplyDelete