Tuesday 30 October 2012

கயிறு இழுக்கும் போட்டி

மலையாளம் – மாலி

தமிழில்- உதயசங்கர்Now-We-Lock-Our-Mouths-orca-killer-whale-vs-elephant-24960522-858-629

யானை எப்போதும் நினைத்துக் கொள்ளும், தான் தான் உலகத்திலேயே வலிமையானவன். திமிங்கிலத்திற்கோ? தான் தான் வலிமையானவன் என்று நினைப்பு. யானை கடலுக்குச் சென்றதில்லை. அதனால் திமிங்கிலத்தைப் பார்த்ததில்லை. அதேபோல் திமிங்கிலமும் கரைக்கு வந்ததில்லை. அதனால் யானையைப் பார்த்ததில்லை. ஆமை கரைக்கும் போகும் கடலுக்கும் போகும். அதனால் யானையையும் பார்த்திருக்கிறது. திமிங்கிலத்தையும் பார்த்திருக்கிறது. அவர்கள் இரண்டு பேரும் அடித்துக் கொள்ள வேண்டும்.அதைப் பார்த்து ரசிக்க வேண்டும். அது தான் ஆமையின் திட்டம்.

ஆமை முதலில் யானையைப் பார்த்தது.

“யானைமாமா! கடலில் திமிங்கிலம் என்று ஒரு பெரிய உயிரினம் இருக்குதாம்..அவன் யானைமாமாவைத் தூசின்னு சொல்றானாம்..கயிறு இழுக்கும் போட்டியில் அவன் யானைமாமாவைத் தோற்கடிச்சிருவானாம்..” என்று சொன்னான்.

ரெண்டாவதாக ஆமை போய் திமிங்கிலத்தைப் பார்த்தது.

“திமிங்கிலண்ணே! திமிங்கிலண்ணே! கரையில் யானைன்னு ஒரு பெரிய உயிரினம் இருக்குதாம்..அவன் திமிங்கிலண்ணனைக் கால்தூசின்னு சொல்றானாம்..கயிறு இழுக்கும் போட்டியில் அவன் எளிதாக செயிச்சிருவானாம்..” என்று ஆமை சொன்னது.

யானைக்குக் கோபம் தலைக்கேறியது. திமிங்கிலத்திற்கும் கோபம் தலைக்கேறியது. ஆமைக்குப் பொழுதுபோக்காய் இருந்தது. அவன் யானையிடம் சென்றான்.

“ஆமை! கயிறு இழுக்கும் போட்டி கரையில் வைச்சு நடத்தணும்..” என்று யானை கூறியது.

“யானைமாமா! திமிங்கிலத்துக்குக் கடலில் மட்டும் தான் இருக்கமுடியுமாம்..கரைக்கு வரமுடியாதாம். நான் முடிவு செய்றபடி நடத்தலாம்..” என்று ஆமை சொன்னது.

அவன் மறுபடியும் திமிங்கிலத்திடம் போனான்.

“ஆமையே! கயிறு இழுக்கும் போட்டி கடலில் வைச்சுத் தான் நடத்தணும்..” என்று திமிங்கிலம் கூறியது.

“திமிங்கிலண்ணே! யானைக்குக் கரையில் மட்டும்தான் இருக்கமுடியுமாம்..கடலில் இறங்க வழியில்லையாம்.. நான் முடிவு செய்றபடி நடத்தலாம்..” என்று ஆமை சொன்னது.

ஆமையின் முடிவு என்னவாக இருந்தது தெரியுமா? யானை கரையில் நிற்கட்டும்.திமிங்கிலம் கடலில் இருக்கட்டும். அப்படியே கயிறு இழுக்கணும்.! யானையும் திமிங்கிலமும் ஒத்துக் கொண்டன.

நிச்சயித்த நாள் வந்தது. கரையில் நிலத்திலுள்ள பிராணிகள் எல்லாம் கூட்டமாய்க் கூடி நின்றன. சிங்கம்,கரடி, மான், முதலான ஏராளமான மிருகங்கள். அவர்களுக்கு யானை வெற்றி பெறவேண்டும்.

கடலில் நீர்வாழ்பிராணிகள் எல்லாம் வந்து நிறைந்தன.முதலை,கொம்புச்சுறா,செம்மீன்,முதலான ஏராளமான பிராணிகள்.அவர்களுக்கு திமிங்கிலம் வெற்றி பெற வேண்டும்.

யானை கரையில் தயாராக நின்றது. திமிங்கிலம் கடலில் தயாராகக் கிடந்தது. ஆமை நீளமான கயிறு ஒன்றைக் கொண்டு வந்தது. கயிறின் இரண்டுமுனைகளிலும் வட்டமுடிச்சு போட்டது.ஒரு முடிச்சை யானையின் கழுத்திலும் இன்னொரு முடிச்சை திமிங்கிலத்தின் கழுத்திலும் மாட்டியது. அதன்பிறகு அவன் நடுவில் நின்று கொண்டான்.கையை உயர்த்தி பெருங்குரலில்” இழுங்க..” என்று கத்தினான்.

யானை இழுத்தது. திமிங்கலமும் இழுத்தது. பார்வையாளர்கள் மூச்சை அடக்கிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதோ யானை நாலடி பின்னால் போகிறது. திமிங்கலம் நாலடி முன்னால் போகிறது. அப்படின்னா யானை வெற்றி பெறப் போகிறது என்று அர்த்தம். அதோ இப்போது திமிங்கலம் எட்டடி பின்னால் போகிறது. யானை எட்டடி முன்னால் போகிறது. அப்படின்னா திமிங்கலம் வெற்றி பெறப் போகிறது என்று அர்த்தம்.சில சமயம் யானை வெற்றி பெறப் போவதைப் போலத் தெரியும். அப்போது கரையிலுள்ள மிருகங்கள் ஆர்ப்பரித்து கூப்பாடு போடுவார்கள். சிலசமயம் திமிங்கிலம் வெற்றி பெறப் போவதைப் போலத் தெரியும்.அப்போது நீரிலுள்ள பிராணிகள் ஆர்ப்பரித்து கூப்பாடு போடுவார்கள்.கயிறு இழுக்கும் போட்டி ரெம்ப நேரம் நடந்தது. கடைசியில் என்ன ஆச்சு? யானை முன்னாலும் போகவில்லை, பின்னாலும் போகவில்லை. அதேபோலதிமிங்கலமும் முன்னாலும் போகவில்லை, பின்னாலும் போகவில்லை. இரண்டு பேரும் தன் சகல சக்தியையும் ஒன்று திரட்டி கயிற்றை இழுக்கிறார்கள். சமநிலை.

‘ட்ப்ப்’ திடீரென கயிறு அறுந்தது. யானை பத்தடிதூரத்தில் பின்னால் போய் விழுந்து கரணமடித்தது. திமிங்கலமும் பத்தடிதூரத்தில் பின்னால் போய் விழுந்து கரணமடித்தது. யானைக்கு வெற்றியுமில்லை. தோல்வியுமில்லை. அதேபோல திமிங்கலத்திற்கும் வெற்றியுமில்லை,தோல்வியுமில்லை.கயிறு தான் அறுந்துவிட்டது. கயிறு இல்லையென்றால் கயிறு இழுக்கும் போட்டி இருக்குமா? பார்வையாளர்கள் கலைந்து போனார்கள்.

ஆமை யானையைப் போய்ப் பார்த்தது.

”யானைமாமா! திமிங்கலத்துக்கு இன்னொரு தடவை போட்டி போடணுமாம்..யானைமாமா இன்னொரு தடவை கயிறு இழுக்கணுமாம்..இல்லேன்னா பயந்தாங்குளின்னு சொல்லுமாம்..” என்று ஆமை சொன்னது.

யானை தலை குனிந்து பேசாமல் நின்றது.

ஆமை திமிங்கலத்தைப் போய் பார்த்தது.

”திமிங்கலண்ணே! யானை செயிச்சிட்டதா சொல்லிகிட்டு நடக்குதாம்..திமிங்கலண்ணன் முட்டாள்னு சொல்லுதாம்..திமிங்கலண்ணனை இனி பார்த்தால் குத்திக் கொன்னுருமாம்..யானை..” என்று ஆமை கூறியது.

திமிங்கலம் எதுவும் பேசாமல் நீந்திச் சென்றது.

Sunday 28 October 2012

தாமரைப் பூவும் வண்டும்

மலையாளம் – மாலி1663153-Lotus-Flower-0

தமிழில் - உதயசங்கர்

பூமா என்று ஒரு தாமரைப் பூ இருந்தாள். தாமரைக் குளத்தில்தான் அது வாழ்ந்து வந்தாள். அங்கே வேறு தாமரைப் பூக்களும் இருந்தனர். தாமரைப்பூக்கள் காலையில் தேனைச் சுரந்தனர். தேன் குடிப்பதற்காக வண்டுகள் வந்து சேரும். பூமா சுரக்கிற தேன் மிகவும் ருசியாக இருக்கும். எல்லா வண்டுகளுக்கும் அது தெரியும். வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டு வரும். பூமா எல்லோருக்கும் தேன் கொடுப்பாள். பூமாவுக்கு எல்லோரையும் பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடித்திருப்பது யாரைத் தெரியுமா? நீலன் என்ற வண்டைத் தான். நீலன் தான் மிகநன்றாக ரீங்காரப் பாட்டு படிக்கிறவன்.

ஒரு நாள் பூமா,”நீலா இனிமேல் நீ மதியத்திற்கு மேல் வந்தால் போதும்.” என்று சொன்னாள். அதற்கு நீலன்,” ஏன் காலையிலே வந்தா என்ன?” என்று கேட்டான்.

பூமா,” காலையில நெறைய வண்டுகள் வருது..அவர்களுக்குத் தெரியாமல் நான் ஒண்ணு செய்றேன். முதல் தரமான தேனை நான் உனக்காக ஒளிச்சு வைக்கிறேன் மதியத்துக்கு மேலே நீ வந்து குடிச்சிட்டுப் போ..” என்று சொன்னாள்.

நீலன்,” மத்த வண்டுகளூக்கு தேன் கொடுக்காம இருந்தா போதாதா?” என்று கேட்டான்..

“அய்யோ அது முடியாது..எந்த வண்டு தேவைன்னு வந்தாலும் நான் கொடுப்பேன். அதுதான் என் சுபாவம்..ஆனா உன்னோட பாட்டு தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால உனக்கு நான் முதல்தரமான தேனைக் கொடுப்பேன்.” என்று பூமா சொன்னாள்.

அடுத்த நாள் நீலன் மதியத்துக்கு மேல் வந்தான்.பூமா முதல்தரமான தேனை ஒளித்து வைத்திருந்தாள். வந்த உடனே அவள் அதைக் கொடுக்கவில்லை.

“ரீங்காரப்பாட்டுப் பாடி என்னை வட்டமடி! நூறு தடவை சுற்றி வரணும்..அப்பத்தான் நான் தேன் தருவேன்..” என்று பூமா நீலனிடம் கேட்டாள்.

நீலனுக்கு எண்ணத் தெரியாது..அவன் பூமாவிடம்,” பூமா நான் பாட்டுப் பாடிக் கொண்டே உன்னைச் சுற்றி வாரேன்..நீ தான் எண்ணிக்கணும்..” என்று சொன்னான்.

அவன் ரீங்காரப்பாட்டு தொடர்ந்து பாடினான். வெகுநேரம் வட்டம் சுற்றினான். அப்போது தான் பூமா,” சரி..நூறு சுற்று முடிந்தது..” என்று சொன்னாள்.

பிறகு அவள் தேன் கொடுத்தாள்.

உண்மையில் இருநூறு தடவை நீலன் சுற்றியிருந்தான். நூறு என்று பூமா சும்மா சொன்னாள். ஏனெனில் அதிக நேரம் பாட்டு கேட்கிற ஆசை தான்.

இதையெல்லாம் இன்னொரு தாமரைப்பூ பார்த்துக் கொண்டிருந்தது.அவள் பெயர் துர்முகி. துர்முகி சுரக்கிற தேன் சிறிது கசக்கும். அதனால் வண்டுகள் அவளிடம் போவதில்லை. பூமாவும் நீலனும் பிரியமாக இருப்பதைப் பார்த்து அவளுக்குப் பொறாமை தொன்றியது.

துர்முகி,” பூமாவின் தேனில் விஷம் இருக்கிறது “ என்று வண்டுகளிடம் சொன்னாள்.

வரிசையாக எல்லா வண்டுகளூம் துர்முகியை நம்பினார்கள். அவர்கள் எல்லோரும் பூமாவை விட்டு விட்டார்கள். இதில் பெரிய கஷ்டம் நீலனும் துர்முகியை நம்பி விட்டான். அவனும் பூமாவிடம் போவதில்லை.

பூமாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா? மற்ற வண்டுகள் வராவிட்டாலும் பரவாயில்லை.நீலன் வராமல் இருந்தது தான் ரொம்ப சங்கடமாக இருந்தது. அவனும் துர்முகியை நம்பி விட்டானே!

பூமாவின் சங்கடம் துர்முகிக்கு சந்தோசமாக இருந்தது. அவள்,”பூமாவுக்கு அப்படித்தான் வேணும்” என்று நினைத்தாள்.

பூமாவுக்கு சத்யன் ஞாபகத்துக்கு வந்தான். சத்யன் ஒரு நண்டு. அவன் உண்மை தான் பேசுவான். எல்லா வண்டுகளுக்கும் அது தெரியும்.அது மட்டுமில்லை. எல்லா தாமரைப்பூக்களுக்கும் தெரியும்.

சத்யனிடம் சென்று பூமா விவரம் சொன்னாள். காலையில் சத்யன் நீலனைப் பார்த்தது.

“நீலா. பூமா சுரக்கிற தேனில் விஷமும் இல்லை..கிஷமும் இல்லை..அந்தப் பொய்சொல்லி துர்முகியின் வேலைதான் இது..நீ பெரிய தப்பு செய்ஞ்சிட்டே..” என்று கோபத்தோடு சொன்னான் சத்யன்.

நீலன்,” உண்மையா? சத்யா!” என்று கேட்டான்.

“உண்மையில்லைன்னா..என் பேர் அசத்யன்னு மாத்திக்கோ..” என்று சத்யன் சொன்னான்.

நீலன் பூமாவின் அருகில் சென்றான்.

“என்னை மன்னிச்சிரு பூமா!” என்று நீலன் வேண்டினான். பூமாவுக்கு அளவற்ற சந்தோசம். ஆனால் அந்த சந்தோசத்தை வெளிக் காட்டாமல் ,” நீலா நீ இருநூறு தடவ பாட்டுப்பாடிக் கொண்டே என்னைச் சுற்றி வந்தாத்தான் நான் உனக்கு தேன் தருவேன்..” என்று சொன்னாள்.

நீலன் ரொம்ப நேரம் சுற்றினான்.

“சரி.. இருநூறு ஆச்சு..போதும்.. தேன் குடிச்சிக்கோ..” என்று பூமா சொன்னாள்.

ஆனால் உண்மையில் முன்னூறு ஆகியிருந்தது.

நீலனும் பூமாவும் மறுபடியும் பிரியமாகி விட்டார்களா? அதைப் பார்த்து ஒரு தாமரைப்பூவின் முகம் கருத்துப் போய் விட்டது.-அவள் துர்முகி!

Wednesday 24 October 2012

பழிக்குப்பழி

street-dogs மலையாளம் – மாலி

தமிழில் - உதயசங்கர்

ஒரு ஊரில் ஒரு தெருநாய் இருந்தது. அது பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தது. ஆனால் சில சமயம் திருடியும் தின்னும். ஒரு தடவை ஒரு தவறு நடந்தது. அது ஒரு மனிதனின் வீட்டுக்குள் போனது. சமையலறைக் கதவு திறந்து கிடந்தது.தெருநாய் சமையலறைக்குள் நுழைந்தது. பாத்திரத்தில் நிறையச் சோறு இருந்தது. பாத்திரம் மூடியிருந்தது. அது மூக்கினால் மூடியைத் தள்ளிவிட்டது. மூடி கீழே விழுந்து கடமுடா கடமுடான்னு சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு மனிதன் ஓடி வந்தான். பாதி தின்னும் திங்காமலும் தெருநாய் வெளியே ஓடியது.மனிதன் கீழே கிடந்த கல்லை எடுத்தான்.ஓடுகிற தெருநாயைப் பார்த்து எறிந்தான்.கல் தெருநாயின் வலது பின்காலில் பட்டது. தெருநாய் நொண்டிநாய் ஆகிவிட்டது. அது நொண்டிக் கொண்டே ஓடிவிட்டது.

அந்த ஊரில் இருபது நாய்களுக்கும் மேலே இருந்தன. அவைகள் எல்லாம் தெருநாயின் கூட்டாளிகள். அவைகள் அந்தத் தெருநாயை நொண்டிநாய் என்றே அழைத்தன.

நொண்டிநாய்க்கு மனிதன் மேல் பகை தோன்றியது. ஒரு மனிதன்தானே தன்னை நொண்டியாக்கியது, எனவே மனிதர்களைப் பழி வாங்கணும். இதுதான் அதன் முடிவு.

ஆனால் அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? மனிதனுக்கு நாயைவிட புத்தியுண்டு. சக்தியுண்டு. எனவே பொறுமையாய் செய்யவேண்டும். முதலில் கூட்டாளிகளோடு ஆலோசிக்கவேண்டும்.

நொண்டிநாய் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

‘பிரியமான தெருநாய்களே! மிகவும் முக்கியமான ஒரு காரியம். அதைப் பற்றிப் பேச நாம் ஒரு கூட்டம் போடவேண்டும்.சனிக்கிழமை இரவு பத்து மணிக்குக் கூட்டம். இடம் ஊருக்கு கிழக்கே உள்ள மைதானம். மிக முக்கியமான காரியம். நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும். நான் காத்திருப்பேன்.’

குறித்த நேரத்தில் எல்லாத் தெருநாய்களும் ஆஜராகி விட்டன. வீட்டுநாய்களைப் போல அவைகள் கிடையாது. வீட்டுநாய்களுக்கு இரவில் காவல் வேலை உண்டு. தெருநாய்களுக்கு காவல் வேலை என்ன ஒருவேலையும் கிடையாது.

தெருநாய்கள் வட்டமாய் உட்கார்ந்தன.

நொண்டிநாய் பேசியது.” தெருநாய்களே! மனிதர்களுக்கு நாய்கள் என்றால் பெரிய வெறுப்பு. நான் அதற்கு ஒரு ஆதாரம் தருகிறேன். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வெறுக்கிறான். அப்போது அவன் எப்படி அவனைத் திட்டுகிறான்? ஏ பூனையே! என்று சொல்வதில்லை. ஏ கோழி! என்று சொல்வதில்லை. ஏ காளையே! என்று சொல்வதில்லை. மாறாக ஏ நாயே! என்று திட்டுகிறான். இனிமேல் அதற்கு நாம் ஒத்துக் கொள்ளக் கூடாது. நாம என்ன செய்யலாம்?” என்று கேட்டது.

வெறியனான ஒரு தெருநாய்,” நாம ராத்திரியில் சத்தமாய் குரைக்கணும். அப்படி மனிதர்களைத் தூங்கவிடாமல் செய்யணும்” என்று சொன்னது.

“மனிதர்களுடைய சாப்பாட்டையெல்லாம் நாம திருடி திங்கணும்..”இன்னுமொரு வெறிபிடித்த நாய் சொன்னது.

”பார்க்கிற மனுசங்களையெல்லாம் பாய்ஞ்சு கடிக்கணும்..” என்று எல்லோரையும் விட கூடுதல் வெறி பிடித்த தெருநாய் கூறியது.

“இதெல்லாம் ஆபத்தான வழிகள்..மனிதர்கள் நம்மை அடிச்சே கொன்னுருவாங்க..நான் ஒரு நல்ல வழி சொல்றேன்.. ஒரு நாய் இன்னொரு நாயை வெறுத்தால் ‘ஏ மனிதா!’ ன்னு திட்டணும்” என்று நொண்டிநாய் சொன்னது.

சரிதான். எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.

தெருநாய்களின் கூட்டத்தில் ஒரு கருங்காலி இருந்தது. கருங்காலிக்குச் சேக்காளியாய் ஒரு வீட்டுநாய் இருந்தது. கருங்காலி நடந்ததையெல்லாம் வீட்டுநாயிடம் சொன்னது. அந்த வீட்டுநாய் அவனுடைய எஜமானனான மனிதனிடம் சொன்னது.அந்த மனிதன் மற்ற மனிதர்களிடம் சொன்னான். மனிதர்களுக்கு தெருநாய்கள் மீது கோபம் வந்தது. அது தெருநாய்களுக்குத் தெரிந்து விட்டது.

நொண்டிநாய்க்கும் மற்ற நாய்களுக்கும் தகவல் கிடைத்தது.மனிதர்கள் கம்புகளோடு வருகிறார்கள். நொண்டிநாய் நொண்டி நொண்டி ஓடத் தொடங்கியது. நொண்டிகளில்லாத மற்ற நாய்கள் நொண்டாமல் ஓடத்தொடங்கின. எங்கே? அடுத்த ஊருக்கு.

நொண்டிநாய்க்குக் கருங்காலி நாயோடு வெறுப்பு தோன்றியது. நேரடியாக மோத முடியாது. ஆனாலும் அது கருங்காலியைக் கூப்பிட்டது.’ஏ மனிதா!’

மற்ற எல்லா தெருநாய்களும் அதைப் பின்பற்றி ‘ஏ மனிதா!’ என்று கூக்குரலிட்டன.

Tuesday 23 October 2012

டெங்குக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து

remedy4 உதயசங்கர்comgas_dengue_mosquito1

 

தமிழகமெங்கும் அபரிமிதமான மின் தட்டுப்பாட்டைப் போல டெங்குக் காய்ச்சலும் தினசரி பேசும் பொருளாகி விட்டது. இரண்டுமே அரசு இயந்திரத்தின் கையாலாகாத்தனத்தை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் லாவணி பாடிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஊரே தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்போது அரசியல்வாதிகள் உன்னால தான் தீப்பிடிச்சது..உன்னால தான் தீப்பிடிச்சது..என்று தீயை அணைக்கப் பயன்படுத்த வேண்டிய தண்ணீரை ஒருவருக்கொருவர் விசிறியடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக கூர்மை தீட்ட வேண்டிய ஊடகங்களோ மக்களிடம், சிக்கனமாக மின்சாரத்தைச் செலவழிப்பது எப்படி?  என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அம்பானியிடம் போய்ச் சொல்லவேண்டும் மின்சாரத்தைச் சிக்கனமாக செலவு செய் என்று. அரசு விழாக்களில் மின்சாரத்தைச் சிக்கனமாக செலவு செய்யச் சொல்லவேண்டும். பன்னாட்டுக் கம்பெனிகளிடம் போய்ச் சொல்லவேண்டும் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவு செய் என்று. ஆனால் சாமானியர்களிடம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது சுலபமல்லவா? ஏதோ தன் வீட்டில் இருக்கிற ஃபேன், டி.வி., ஃபிரிட்ஜ், நாலைந்து லைட்டுகளால் தான் இந்த மின் தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். கூடங்குளம் மின் ஆற்றல் வந்தாலும் அது சாமானியர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. பன்னாட்டு முதலாளிகளுக்கு எழுதிக் கொடுத்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் தான் போய்ச் சேரப் போகிறது. டெங்கு என்ன திடீரெனவா வந்து விட்டது? பொதுச்சுகாதாரம் பற்றிய அரசின் அக்கறையின்மை, கழிவுநீர் வாய்க்கால்கள், ரோடுகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர், என்று பல காரணங்கள் இருக்கின்றன. நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் டெங்குக் கொசுக்களுக்கு உணவாக யார் மாட்டுகிறார்கள். சாதாரண மக்கள் தானே.  அதற்கும் மக்களையே குறை சொல்வது நல்ல தந்திரம். சுகாதாரம் பற்றி மக்கள் அறியாமையிலிருந்தால் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியது யார் கடமை? இப்படிக் கேள்விகள் ஆயிரம் இருந்தாலும் வந்து விட்ட ஆபத்தை எதிர்கொள்வது எப்படி அது தான் இப்போதைய முதல் கேள்வி.

ஹொமியோபதி மருத்துவத்தில் டெங்கு, சிக்கன் குனியா, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், என்று எல்லா நோய்களுக்கும் தடுப்பு மருந்துகளும், நோய் குணமாக மருந்துகளும் இருக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் பகுதியில் டெங்குவின் பாதிப்பு இருக்குமானால் கீழ்க்கண்ட மருந்துகளை  ஹோமியோபதி மருந்துக் கடைகளில் வாங்கி நீங்களும் சாப்பிடலாம். மற்ற நண்பர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும், கொடுக்கலாம். அலோபதி மருந்துகளைப் போல எந்தப் பக்கவிளைவுகளும் கிடையாது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

1.   EUPATORIUM    PERFOLIATUM – 200 C   - 1 DRAM PILLS         இந்த மருந்துகளை தினமும் காலை ஒரு மருந்தும் மாலை ஒரு மருந்தும் மூன்று             

2.   RHUSTOX  -200C                                    - 1 DRAM PILLS           உருண்டைகளை மூன்று தினங்கள் மட்டும்சாப்பிட                                                                                                                   டெங்கு வராது.

Monday 22 October 2012

மௌனம்

dep_5923413-3d-man-prisoner-in-a-silver-cage உதயசங்கர்

 

மௌனச்சிறைக்குப் பின்னால்

நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்கள்

அல்லது

மௌனக்கூட்டிற்குள் நீங்கள்

பாதுகாப்பாய் இருக்கிறீர்கள்

மௌனச்சிறைக்கு வெளியே

இருக்கும் காவலை நீங்கள்

உங்கள் பாதுகாப்புக்காய் என்று

கற்பனை செய்கிறீர்கள்

அல்லது

மௌனக்கூட்டின் பூட்டைப் பூட்டி

பாதுகாப்பாய் இருப்பதற்காய்

சாவியை நீங்கள்

தொலைத்து விடுகிறீர்கள்

சிறைக்குள் அல்லது கூட்டிற்குள்

சிறகுகள் விரிக்கிறீர்கள்

பறக்கமுடியா

வானம் சிறியதாகி விட்டதென

திருப்தி கொள்கிறீர்கள்

வாழ்க்கையின் லட்சியத்தை

சிறையாகவோ கூடாகவோ

கனவு காண்கிறீர்கள்

ஆனால் மௌனம் எப்போதும்

ஆயுதமாகாது

பலசமயம் கோழைத்தனமாகி விடும்

உங்கள் மௌனத்தைச் சுற்றி

விடுதலையின் புயல்

வெளியே உறுமிக் கொண்டிருப்பதை

அறியவில்லையா நீங்கள்?

உங்கள் சிறையும் கூடும் கூட

புயலின் சுழலுக்குள் இருப்பது தெரியாதா?

Saturday 20 October 2012

பல்லின் வேலைநிறுத்தம்

மலையாளம் – மாலி

தமிழில் – உதயசங்கர்16820

 

நாக்கு,”வயிறே! நான் தான் உண்மையில் கொடுத்துவைத்தவன்!” என்று சொன்னது. வயிறு உடனே,”நாக்கே! நீ ஏன் அப்படிச் சொல்றே?” என்று கேட்டது. அதற்கு நாக்கு,” எனக்கு சாப்பாட்டின் ருசி தெரியும். என்னைத் தவிர வேறு யாருக்கும் ருசி தெரியாது. நான் ஒரு வேலையும் செய்ய வேண்டாம். ஆனால் இஷ்டம் போல ருசித்துச் சாப்பிடலாம். பல்லின் வேலையோ பாவம்! அவன் சாப்பாட்டை மென்று சவைக்க வேண்டும்.ஆனால் ருசி அறிய மாட்டான். முட்டாள்!” என்றது.

வயிறும் உடனே,” நீ சொன்னது சரிதான்,நாக்கே! அப்படின்னா நானும் கொடுத்து வைத்தவன் தான்.சாப்பாட்டுக்காக நானும் எந்த வேலையும் செய்வதில்லை.ஆனாலும் எனக்கு சாப்பாடு கிடைக்கிறது. என்னைத் தவிர வேறு யாருக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை. பல்லு கூலியில்லாம வேலை செய்ற சுத்தமுட்டாள்” என்று சொன்னது.

இந்த உரையாடலை பல் கேட்டது. அது தனக்குள்,”சாப்பாட்டைக் கடிப்பது நான் நொறுக்குவது நான் அரைப்பது நான் இப்படி பல வேலைகளை நான் செய்கிறேன். ஆனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.ஒரு வேலையும் செய்யாத நாக்குக்கும் வயிறுக்கும் எல்லாப் பிரயோசனமும் கிடைக்கிறது. இது அநியாயம்! அநியாயம்!’ முணுமுணுத்தது.

பல்லின் சேக்காளி கண். அதைப் பார்த்து பல் கேட்டது,” கண்ணே! நீ எனக்கு உதவி செய்வாயா?”

அதற்கு கண்,” பல்லே நான் உனக்கு உதவி செய்றேன்” என்று சொன்னது.

நாக்கிற்கு ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். வயிறுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். பல்லுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான்.கண்ணுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். இவர்கள் எல்லோருக்கும் சொந்தக்காரன் ஒரே ஆள் தான் அவன் மனிதன்.

மனிதன் மதியம் சாப்பிட உடகார்ந்தான்.அப்போது கண் தன்னுடைய வேலையைக் காட்டத் தொடங்கியது. கண் மூடிக் கொண்டது. மனிதனால் சோற்றையும் கறிகளையும் பார்க்க முடியவில்லை.மனிதனின் வலது கை இலையைத் தடவியது. சோறு என்று நினைத்து பொரியலை அள்ளினான்.பொரியலை வாய் என்று நினைத்து மூக்கிற்குள் தள்ளினாள்.

மூக்கிற்கு ரொம்ப சங்கடமாகி விட்டது. அவன் கையை அழைத்து,”வலது கையே பொரியலை வாயிலதான் வைக்கணும்.தெரிஞ்சுதா..நான் வாயில்லை..மூக்கு..எனக்கு எவ்வளவு எரிச்சல் தெரியுமா? மூச்சும் முட்டுது..” என்று சொன்னது.

வலது கை மூக்கிலிருந்து பொரியலை வாரி எடுத்தது. ரொம்பக் கஷ்டப் பட்டு அதை வாயில் வைத்தது. மனிதனுக்குச் சாப்பிட ரொம்பநேரமாகி விட்டது.

கண்,”பல்லே! நான் மனிதனைக் கஷ்டப் படுத்திப் பார்த்துவிட்டேன்.ஆனால் அவன் எப்படியோ சாப்பிட்டு விட்டான்..இனி என்னால் முடியாது.. உன் வேலையை நீயே பார்த்துக்கோ..” என்று சொன்னது.

பல் உடனே,”கண்ணே! நீ சொல்றது சரிதான்..ஆனால் நான் என்ன செய்யணும்னு சொன்னா நல்லாயிருக்கும்..” என்று சொன்னது.அதற்கு கண்,” பல்லே! நீ கடிக்காதே! நொறுக்காதே!அரைக்காதே! பேசாமல் இரு! மொத்தத்தில் வேலைநிறுத்தம் செய்யவேண்டும்” என்று சொன்னது.

மனிதன் இரவில் சாப்பிட உட்கார்ந்தான். கண் மூடவில்லை. சோறு,சாம்பார், அப்பளம், மாங்காய்பச்சடி, எல்லாம் வாயில் கிடந்தது. ஆனால் பல்தான் வேலைநிறுத்தம் செய்ததே. அவன் கடிக்கவில்லை. நொறுக்கவில்லை. அரைக்கவில்லை அசையாமல் இருந்தது. நாக்கினுக்கு பழைய மாதிரி ருசி கிடைத்தது. வயிறும் பழைய மாதிரியே நிறைந்தது.

மனிதன் உறங்கினான். இரண்டு மணி நேரம் கழிந்தது. வயிறில் ஒரு புரட்டல்.என்ன காரணம்? சாப்பாடு செரிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வலி கூடிக் கொண்டே போனது. கடைசியில் சகிக்கமுடியவில்லை. வயிறு என்ன செய்தது தெரியுமா? செரிக்காத சாப்பாட்டை மேல் நோக்கி ஒரு தள்ளு..! அதெல்லாம் வாந்தியாக நாக்கில் பட்டு வெளியே வந்தது. வாந்தியின் ருசி தெரிந்த போதோ? அய்யோ! நாக்கிற்கே வாந்தி வந்தது.

அடுத்த நாளும் அப்படியே தான் நடந்தது. அதற்கு அடுத்த நாளும் அப்படியே. நான்கு நாட்களும் அப்படியே நடந்தது. வயிறு பலகீனமாகி விட்டது. நாக்கும் பலகீனமாகிவிட்டது. கண்ணும் பலகீனமாகிவிட்டது. பல்லுக்கு மாத்திரம் பலகீனமே இல்லை!

கண்,” நாக்கே! வயிறே! உங்களால நானும் கஷ்டப் படறேன்..பல் சவைக்கவில்லையென்றாலோ? நாம காலி! பல்லுகிட்ட மன்னிப்பு கேளுங்க! அப்பத்தான் அவன் வேலைநிறுத்தத்தை விடுவான்..” என்று சொன்னது.

உடனே நாக்கு,” பல்லே! உன்னை நான் முட்டாள்னு சொன்னது தப்பு. நான் உங்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று சொன்னது.

வயிறு,” பல்லே! என்னையும் மன்னிக்கணும் இனி நான் உன்னை சுத்த முட்டாள்னு சொல்லமாட்டேன்..இது உறுதி!” என்று சொன்னது.

பல் வேலைநிறுத்தத்தைக் கை விட்டது.அது கடிக்கத் தொடங்கியது. நொறுக்கத் தொடங்கியது.அரைக்கத் தொடங்கியது.எல்லோரும் சுகமாக வாழ்ந்தனர்.முன்னே மாதிரி.

Friday 19 October 2012

அறியப்படாத குழந்தைகள் உலகம்

Cartoon_Little_Boy_Eating_a_Chocolate_Chip_Cookie_110406-130502-977042 நூல் அறிமுகம்

 

உதயசங்கர்

 

உலகம் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு கணமும் நேற்றிருந்த வாழ்வியல் நடைமுறைகளும், பண்பாட்டு விழுமியங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி எல்லாம் மாறும் போது குழந்தைகளின் உலகம் மட்டும் மாறாதா என்ன? ஆம். மாறியிருக்கிறது. தலைகீழாக அந்த அத்தத்திலிருந்து இந்த அத்தத்திற்கு இடம் மாறியிருக்கிறது. முன்பு குழந்தைகள் வெறும் எண்ணிக்கை மட்டுமே. வீட்டில் வளர்ந்ததை விட தெருக்காடுகளில் வளர்ந்தது தான் அதிகம். படிப்போ, சோறோ, துணிமணியோ எதுவும் ஒரு பொருட்டில்லை. யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமுடியாத அளவுக்கு வீட்டில் பொருளாதார நெருக்கடி, எண்ணிக்கை நெருக்கடி. பிள்ளைகள் எப்படியாவது எங்கிட்டாவது கஞ்சி குடிச்சி வளர்ந்து விடும் என்று நம்பினார்கள் பெற்றோர்கள். தன்னுடைய குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றே பல தகப்பன்மார்களுக்குத் தெரியாது. வீட்டின் வறுமையிருளைப் போக்க எப்போது வேண்டுமானாலும் பள்ளியிலிருந்து குழந்தைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு வேலைக்கு அனுப்பப்படுவார்கள். பல நேரங்களில் பள்ளிக்கூட ஆசிரியர்களே இந்தப் பணியைச் செவ்வனே செய்து விடுகிறார்கள். நீயெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்து ஏண்டா உயிரை வாங்கறே.. மாடு மேய்க்கப் போக வெண்டியதானே.. என்றோ பேசாம தீப்பெட்டிக் கம்பெனிக்குப் போய் வேலை பாத்து வீட்டுக்கு நாலு காசு சம்பாதிச்சுக் கொடுக்கலாம்ல.. ஏண்டா எங்கழுத்த அறுக்கிறே.. என்றோ நாலு நல்ல வார்த்தைகளை நிதமும் உடல் ரீதியான வன்முறைப் பிரயோகங்களுடன் சொல்லிக் கொண்டேயிருந்தால் எந்தப் பையன் தான் பள்ளிக்கூடத்துக்கு வருவான்?

அப்படி இதெல்லாம் ஒண்ணும் ரெம்ப மாறிவிடவில்லை என்ற முணுமுணுப்பு கேட்கிறது. இப்படியான நிலைமை இன்னமும் சிறு நகரங்கள், கிராமங்களில் நீடித்து வருவது நடக்கத்தான் செய்கிறது. ஆனாலும் வேறுவகையில் மாற்றங்கள் உருவாகியிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நேற்று குழந்தைகளாக இருந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இன்று ஒரு மத்தியதர வாழ்க்கை வாழக்கூடிய பெரியவர்கள் குழந்தைகள் மீது செய்கிற அழிம்பு தாங்க முடியவில்லை. முன்பு சொன்னது இல்லாமையினால், போதாமையினால் என்றால் இப்போது நடந்து கொண்டிருப்பது குழந்தைகளைப் பற்றிய அறியாமையால். தனக்குக் கிடைக்காதது, தான் ஆசைப்பட்டு ஏமாந்தது, ஏங்கித் தவித்தது, கனவு கண்டது, எல்லாவற்றையும் குழந்தைகள் மீது வரைமுறையின்றித் திணித்து குழந்தைகளை சூப்பர் ரோபோக்களாக மாற்றுகிற அவலமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதை நன்கு உணர்ந்து கொண்ட உலகமய முதலாளிகள் குழந்தைகள் வர்த்தகத்தில் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். அனைத்துப் பொருட்களையும் குழந்தைகள் மனதில் வைக்கும் விதமாக விளம்பரங்கள். அந்தப் பொருட்களின் தன்மை என்ன? அதன் விளைவுகள் என்ன? பின் விளைவுகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையோ விசாரணையோ இல்லாமல் குழந்தை கேட்டு விட்டது என்ற ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கோக், பெப்சி, போன்ற அமிலங்கள் நிறைந்த குளிர்பானங்கள், பல்சொத்தை, பிடிவாதம் போன்றவற்றை உருவாக்கும் சாக்லேட் வகைகள், கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் ஜங்க்புட் வகையறாக்கள்,என்று உணவைப் பற்றி எந்த அக்கறையுமின்றி குழந்தைகளை பொத் பொத்தென்று குட்டி ஜெயிண்டுகளாக வளர்த்து வருகிற கொடுமை ஒரு புறமென்றால்,

தன் கனவுகளின் கிட்டங்கியாக, தன் நிறைவேறா ஆசைகளை நிறைவேற்ற வந்த தெய்வப்பிறவி, தன் எதிர்கால வைப்புநிதி, என்றெல்லாம் குழந்தைகளை நினைத்து வீட்டை விட்டு வெளியில் விடாமல் வீட்டிற்குள் பாடப்புத்தகம், ரேங்க், என்ற பைத்தியக்காரத்தனமான வதைக்கூடத்துக்குள் குழந்தைகளைத் தள்ளி சித்திரவதை செய்கிற மனோபாவம் வளர்ந்து வருகிறது. இந்தச் சித்திரவதையைப் பொறுத்துக்கொள்வதற்காகச் சின்னஞ்சிறு வயதிலேயே லஞ்சமும் ஊழலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நீ ஹோம் ஒர்க் முடிச்சா சாக்லேட் தர்ரேன்.. என்றோ நீ அந்தப் பாடத்தை படிச்சி ஒப்பிச்சா கார்ட்டூன் சேனல் பாக்க விடுவேன் என்றோ பெற்றோர்கள் பேரம் பேசுகிறார்கள். இப்படித்தான் இன்றைய குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். இவையும் இது போன்ற பல குழந்தைகள் பிரச்னைகளையும் பேச வேண்டியதிருக்கிறது. விவாதிக்க வேண்டியதிருக்கிறது.

கவிஞர் மு.முருகேஷின் உள்ளே வெளியே என்ற புத்தகத்தில் குழந்தைகளின் அறியப்படாத உலகம் பற்றி பேசப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. குழந்தைகள் தினம் பற்றிய புரிதலிலிருந்து பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு, பாடச்சுமைக் குறைப்பு, பள்ளியில் ஆசிரியர் கற்க வேண்டியது, குழந்தைகள் விளையாட்டு, வாசிப்பின் அரசியல், கல்விமுறை மீதான விமர்சனம், சொந்த ஊரைத் தெரிந்து கொள்ளுதல், குழந்தைகளின் உரிமைகள், இயற்கையும் குழந்தையும், கோடை விடுமுறைக் கொண்டாட்டம், கனவுப்பள்ளி,என்று ஏராளமான சிந்தனைச் சிதறல்களை ஜனரஞ்சகமாக எழுதியிருக்கிறார் மு.முருகேஷ். குழந்தைகளைப்பற்றி, பள்ளிக்கூடம் பற்றி, கல்விமுறை பற்றி, எழுதியுள்ள மரியா மாண்டிசோரி, ஜான் ஹோல்ட், கிஜூபாய் பகேகே, பாவ்லோ பிரேயர், டோட்டோ சான், போன்ற பல சிந்தனையாளர்களின் சிந்தனைத் துளிகளை ஒரே புத்தகத்தில் வாசிக்கக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு.

குழந்தைகள் உலகம் உள்ளே வெளியே - மு.முருகேஷ்

விலை- ரூ40/

வெளியீடு- யுரேகா புக்ஸ்

சென்னை – 86

Thursday 18 October 2012

எங்கள் தாத்தாவின் காலத்தில் ஒரு மலை இருந்தது

உதயசங்கர்yaanaimalai

 

மலையொன்று இருந்தது

எங்கள் தாத்தாவின் காலத்தில்

மலையொன்று இருந்தது

கம்பீரமாய் வண்ணங்கள்

ஒளிவீசும் வானவில் கனவைப்போல

கடினசித்தமாய் எழுந்து நிற்கும்

காதலின் உறுதியைப் போல

பூமிவரலாற்றை எழுத முனைந்த

பேனா முனை போல

உவந்து அமிர்தம் சுரக்கும்

இயற்கையின் முலை போல

மலையொன்று இருந்தது

எங்கள் தாத்தாவின் காலத்தில்

மலையொன்று இருந்தது

ஒரு நாளிரவு

மைதாஸின் விரல் நீண்டு வந்து

மலையைத் தொட்டது

மின்னல் கணத்தில் மறைந்தது மலை

அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது

நகரத்து வீடுகளில் மலையின் பிரேதம்

எங்கள் தாத்தாவின் காலத்தில் ஒரு மலை

இருந்ததைச் சொல்ல

நாங்கள் அதைக் கொன்று புதைத்ததைச்

சொல்ல.

Wednesday 17 October 2012

அன்னப்பறவைகள்

Fanfare தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

 

அன்னப்பறவைகளின் கூட்டம் ஒன்று குளிர் பிரதேசங்களிருந்து வெப்பப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து பறந்து போய்க் கொண்டிருந்தது.அவர்கள் கடலின் மீது பறந்து கொண்டிருந்தனர்.இரவும் பகலுமாக, பகலும் இரவுமாக, சற்றும் ஓய்வின்றி தண்ணீரின் மீதே பறந்து கொண்டிருந்தனர்.அவர்களுக்கு மேலே முழுநிலவு தொங்கிக் கொண்டிருந்தது.கீழதுநீலக்கடல்.சிறகுகளை அடித்துஅடித்து அவர்களுக்கு களைப்பாக இருந்தது.ஆனாலும் அவர்கள் இடைவெளியின்றி பறந்து கொண்டிருந்தனர். பலமான அன்னப்பறவைகள் அணிவகுப்பைத் தலைமை தாங்கிச் செல்ல,இளையவர்களும் பலவீனமானவர்களும் தொடர்ந்து வந்தனர். ஒரு இளைய பறவை கூட்டத்திற்கு சற்று பின்னால் பறந்துவந்து கொண்டிருந்தது. அதனுடைய சக்தியெல்லாம் வடிந்துவிட்டது.இருந்தாலும் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தாலும் அதற்கு மேல் அதனால் பறக்கமுடிய வில்லை. தன் சிறகுகளை தாழ்த்திக் கொண்டு கீழ் நோக்கி இறங்கியது.தண்ணீருக்கு மிகமிக நெருக்கமாக வந்து விட்டது. அதனுடைய நண்பர்கள் எல்லாம் நிலவின் வெள்ளையொளியில் தொடர்ந்து பறந்து மங்கி மறைந்து புள்ளிகளாக மாறி விட்டனர்

அந்த இளைய அன்னம் தன் சிறகுகளை ஒடுக்கிக் கொண்டு நீருக்குள் மூழ்கியது.கடல் சுற்றிலும் சலசலத்துக் கொண்டிருந்தது.அப்படியே அதை மெதுவாகத் தாலாட்டிக் கொண்டிருந்தது. இப்போது கூட்டம் நிலவொளி வீசிய வானத்தில் மங்கிய ஒரு கோடாகத் தெரிந்தது. நிசப்தமான அந்த நேரத்தில் பறந்து கொண்டிருந்த பறவைக்கூட்டத்தின் சிறகடிப்பின் ஓசை அதற்குக் கேட்டது.

அவர்கள் போய் விட்டார்கள் என்று தெரிந்த பிறகு அது தன் கழுத்தை வளைத்துக் கண்களை மூடித் தூங்கியது. அது நீரில் அளையவில்லை. கடல் அலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தது லேசான காற்று விடியற்காலையில் கடலின் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு வீசியது.

இளைய அன்னத்தின் வெள்ளைமார்பின் மீது கடலின் அலை மோதியது. அது கண்களைத் திறந்து கிழக்கில் வானம் சிவந்திருப்பதைப் பார்த்தது.நிலவும் நட்சத்திரங்களும் மங்கிக் கொண்டிருந்தன.

அந்த அன்னம் பெருமூச்சு விட்டது. கழுத்தை நீட்டி தன் சிறகுகளை அடித்து எழுந்தது.தன் சிறகின் விளிம்பினால் தண்ணீரைத் தொட்ட படியே உயரே உயரே பறக்கத் தொடங்கியது.தண்ணீர் மிகமிக கீழே போய் விட்டது.அது முன்னால் வேகமாக எங்கே வெப்பநிலங்கள் இருக்கிறதோ அதை நோக்கி அமைதியான தண்ணீரின் மீது தன் நண்பர்கள் பறந்த திசை வழியே பறந்து சென்றது.

MN11 trumpeter swan 115_7530

Tuesday 16 October 2012

வௌவ்வாலுக்கு நன்றி

Parrot-BN_MR7817-w  மலையாளம்- மாலி

தமிழில்- உதயசங்கர்

 

ஒரு கிளியம்மா ஒரு மரத்தின் கிளையில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அந்த கூட்டில் முட்டைகளிட்டது. முட்டைகள் பொரியும். அதிலிருந்து குஞ்சுகள் வெளியே வரும். அருமைக் குஞ்சுகள்! ஹா..என்ன அழகு!.

கீழே மரத்தின் அடியில் ஒரு பொந்து இருந்தது. பொந்தில் ஒரு கெட்ட பாம்பு இருந்தது. அதற்கு கிளிமுட்டை என்று சொன்னாலே போதும். வாயில் எச்சில் ஊறிவிடும். கிளி முட்டையிட்டு விட்டது என்ற தகவல் அதற்குக் கிடைத்தது. உடனே கிளியம்மாவின் முட்டைகளை விழுங்கி விட்டது. பின்பு பொந்துக்குள் போய் சுருண்டு படுத்துக் கொண்டது. எதுவும் தெரியாதது மாதிரி. திருட்டுப்பயல்!.

கிளியம்மா திரும்பி வந்து பார்த்தால்? கூட்டில் முட்டைகளில்லை! அது கதறி அழுததது. இந்தத் துக்கத்தை எப்படி தாங்க முடியும்?

கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தின் கிளையில் ஒரு வௌவால்தாத்தா தொங்கிக் கொண்டிருந்தது. பகலெல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும், அதுவும் தலைகீழாக.

வௌவால்தாத்தாவுக்கு கெட்டபாம்பின் பழக்கம் தெரியும். எப்போதும் காலையில் பொந்திலிருந்து இறங்கிப் போகும். இரையை பிடித்து விழுங்கி விட்டு உச்சிப்பொழுதுக்குத் திரும்பி வரும். அப்புறம் பொந்துக்குள் சுருண்டு படுத்துக் கொள்ளும். தூக்கம்னா தூக்கம்! அப்படியொரு தூக்கம்!

மறுநாளும் கெட்டபாம்பு கிளம்பியது.

வௌவால்தாத்தா கிளியம்மாவைக் கூப்பிட்டது.

“கிளியம்மா! உன்னோட முட்டைகளை யாரு தின்னா தெரியுமா? பொந்திலே இருக்கிற கெட்டபாம்பு தான். நான் என் கண்ணாலே பார்த்தேன்.” என்று சொல்லியது.

கெட்டபாம்பின் மீது கிளியம்மாவுக்கு எவ்வளவு கோபம் தெரியுமா? ஆனால் என்ன செய்ய? பாவம் அது ஒரு கிளியம்மா தானே! பாம்பை என்ன செய்ய முடியும்.?

“வௌவால்தாத்தா எனக்கு உதவி செய்யுங்களேன்..” என்று அழுது கொண்டே கூறியது.

“எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்..கிளியம்மா.. நீ அடுத்தமுறை முட்டையிடும் போது எனக்குத் தகவல் சொல்லணும் தெரியுதா? மறந்திராதே!” என்று வௌவல்தாத்தா சொன்னது.

தூரத்தில் ஒரு மரத்தடியில் கீரிப்பிள்ளையின் வீடு இருந்தது. வௌவாலின் சேக்காளி கீரிப்பிள்ளை.

வௌவால் கீரிப்பிள்ளையை சென்று பார்த்து,” கீரிக்கண்னா, நீ ஒரு கெட்டபாம்பைக் கொல்லுவியா?” என்று கேட்டது.

கீரிப்பிள்ளை உடனே,”என்னது? கொல்லுவியாவா..சரியாப்போச்சு! நல்லபாம்பையே நான் கொல்லுவேன்..பின்னே கெட்டபாம்பை விடுவேனா?” என்று சொன்னது. வௌவால்தாத்தா நடந்ததெல்லாம் அதற்கு சொல்லியது. கீரிப்பிள்ளை என்ன செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தது. பிறகு மரக்கிளைக்கு திரும்பி வந்து தலைகீழாகத் தொங்கியது.

ஒரு நாள் கிளியம்மா வௌவால்தாத்தாவிடம் வந்து,”வௌவால்தாத்தா, நாளைக் காலையிலே நான் முட்டையிடுவேன்..” என்று சொன்னது.

அடுத்தநாள் பொந்திலிருந்து கெட்டபாம்பு கீழே இறங்கியது. கொஞ்சநேரம் கழித்து கிளியம்மா ரெண்டாவது முட்டையும் இட்டது. வௌவால்தாத்தா போய் கீரிப்பிள்ளையைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தது. கீரிப்பிள்ளை மரத்தடியில் உள்ள புதரில் பதுங்கியிருந்தது.

“கிளியம்மா, நீ முட்டைகளைக் கவ்வியெடுத்து மரத்தடியில் வைச்சுக்கோ! அப்புறம் கூட்டில் போய் ஒளிஞ்சிக்கோ..பத்திரமா இருக்கணும்..பார்த்துக்கோ..” என்று வௌவால்தாத்தா தன் திட்டத்தைச் சொன்னது.

மதியம் கெட்டபாம்பு பொந்திற்கு வந்தது. சுருண்டு போய் படுத்துவிட்டது. நல்லா உறங்கணும் என்று நினைத்துக் கொண்டது.

வௌவால்தாத்தா கெட்டபாம்பைக் கூப்பிட்டு,” பாம்பே! கிளியம்மா மறுபடியும் முட்டைபோட்டிருக்கு..முட்டை கீழே விழுந்திருச்சி..ஆனால் உடையல..உனக்கு அதிர்ஷ்டம்தான்..போய் முழுங்கிக்கோ..!” என்று சொன்னது.

இதைக் கேட்டவுடன் கெட்டபாம்பு நிமிர்ந்து பார்த்தது. வேகமாக மரத்தின் அடிக்கு ஊர்ந்து போனது. கிளியம்மாவின் முட்டைகளைப் பார்த்ததும் அதை நோக்கி நேராகச் சென்றது.பதுங்கியிருந்த கீரிப்பிள்ளை என்ன செய்தது தெரியுமா? ஒரே பாய்ச்சல்! ஒரே கடி! முடிந்தது கெட்டபாம்பின் சோலி!

கிளியம்மாவுக்கு சந்தோசமுன்னா சந்தோசம் அப்படி ஒரு சந்தோசம்! அது முட்டைகளைக் கவ்வி எடுத்துக் கொண்டு கூட்டிற்குத் திரும்பியது. முட்டைகள் பொரிந்து கிளிக்குஞ்சுகள் வந்தன. அதன் பிறகும் முட்டைகள் இட்டது. அவைகளும் பொரிந்தன. நிறைய கிளிக்குஞ்சுகள்!

இனி கெட்டபாம்பைப் பற்றி பயப்படவே வேண்டாம்.

அதோடு கிளியம்மா அடிக்கடி,” வௌவால்தாத்தா தாங்கள் செய்த உதவியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்.

bat16-c

Sunday 14 October 2012

டியர் அமெரிக்கன் பிரெசிடெண்ட்..

pain-and-privilege-harold-smith உதயசங்கர்

டோண்ட் ஒர்ரி..ஐ வில் மானேஜ்..

அவர்கள் முதலில் கத்துவார்கள்

கொஞ்சம் காதுகளைத் தொலைத்துவிட வேண்டும்

அவர்கள் முதலில் திட்டுவார்கள்

கொஞ்சம் மாறாப்புன்னகை பூக்கவேண்டும்

அவர்கள் முதலில் கேள்விகள் கேட்பார்கள்

கொஞ்சம் பிஸ்கட் போடவேண்டும்

அவர்கள் முதலில் முரண்டு பிடிப்பார்கள்

கொஞ்சம் ஆசை காட்ட வேண்டும்

அவர்கள் முதலில் போராடுவார்கள்

கொஞ்சம் தண்டிக்க வேண்டும்

அவர்கள் முதலில் கேட்க மறுப்பார்கள்

கொஞ்சம் கைக்கூலிகளை அனுப்ப வேண்டும்

அவர்கள் பசி பசி என்று கூப்பாடு போடுவார்கள்

கொஞ்சம் இனம், சாதி, வெறியைத் தூண்ட வேண்டும்

அவர்கள் இல்லை இல்லை என்று சொல்லுவார்கள்

கொஞ்சம் கொஞ்சமாகவே கொடுக்க வேண்டும்

அவர்கள் அந்நிய ஆதிக்கம் என்று சொல்லுவார்கள்

கொஞ்சம் தேசப்பற்று பெர்ஃபூயூம் அடிக்க வேண்டும்

அவர்கள் கம்யூனிஸ்டுகளோடு சேருவார்கள்

கம்யூனிஸம் காலாவதியாகி விட்டதென பிரச்சாரம் செய்ய வேண்டும்

அவர்கள் அணு உலை வேண்டாமென போரிடுவார்கள்

திறந்த வெளிச்சிறையில் அவர்களை அடைக்க வேண்டும்

அவர்கள் வால்மார்ட் வேண்டாம் என்பார்கள்

கொஞ்சம் நாடு முன்னேறுகிறது என்று பொய் சொல்லவேண்டும்

அப்புறம் அவர்கள் பழகிவிடுவார்கள் எல்லாவற்றுக்கும்

தாங்களாகவே முன்வந்து சிரித்துக் கொண்டே

அடிமைச்சங்கிலியில் பிணைத்துக்கொள்ள

தாங்களாகவே முன்வந்து பலிபீடத்தில் தலை கொடுக்க

என்ன கொஞ்சம்

என்னைப் போல சிரிக்காமல் கழுத்தறுக்க வேண்டும்.

இப்படிக்கு உங்கள் இந்திய விசுவாசி

அல்லது

இந்தியாவை விலை பேசும் வியாபாரி.

Friday 12 October 2012

சமூகத்தின் பாசாங்குகளைச் சுட்டெரிக்கும் சாட்டையடிகள்

 

எஸ்.வி.வேணுகோபாலன் Photo-0022

 

மனிதமனத்தின் விசித்திரம் அது அன்பால் மட்டுமே நிறையுமாறு விதிக்கப்பட்டிருப்பது. ஆனாலும் மனிதர்கள் அதைப் புரிந்து கொள்ளாது வேறு வேறு உருப்படிகளால் நிறைக்கப் பார்ப்பது, பின்னர் தவறவிட்ட அன்பே வந்து தட்டும்போது திறந்து கொள்ள இயலாது தவிப்பது, தவறான சாவியால் தொல்லைக்கு ஆளாக்கப்படும் பூட்டு பின்பு சரியான சாவிக்கும் இசைவு தர இயலாத நிலைக்குத் தள்ளப்படுவது போல் தவிக்கின்றனர் மனிதர்கள். திறந்து கொள்ளத் தயாராக இருந்த பூட்டை நமது பொறுப்பின்மை உடைத்துப் போடுகிறது. அன்பின் வரம் மறுக்கப்பட்டவர்களை சாத்தான் சுவீகரித்துக் கொள்கிறான். ஒரு போதும் மறுதிறப்பு இல்லாத உலகம் அவனுடையது. சாத்தானின் அடையாள அட்டையைப் பெற்றவர்கள் அடுத்த கணமே அவனுக்கான முகவர்கள் ஆகி விடுவது அவனது வரம். எங்கே தான் இல்லை சாத்தானின் ஆட்சி? சொற்கள் கூடத் தேவையில்லை. பார்வையாலேயே கூட அல்லது மறுக்கப்படுகிற பார்வையாலேயே கூட அவனது உலகம் அடுத்தடுத்த சதுர அடியை வென்று முன்னேறமுடிகிறது.

அவரவர் சொந்த வாழ்க்கையை- முழு வாழ்க்கையைக் கூட அல்ல, ஒரே ஒரு நாளில் கடந்து வந்த அனுபவங்களை, ஒரு மீள்பார்வை பார்க்கமுடியுமானால் நம்மிடமும் இருக்கக்கூடும் ஒர் அடையாள அட்டை. மீள்பார்வைக்குக் கண்களை இறுக்க மூடிக் கொண்டு உட்கார்ந்தால் தான் சாத்தியம் என்று கருத வேண்டியதில்லை. உயிரை உருக்கும் ஓர் இசை கேட்பவரை அவர்கள் பிறக்காத காலத்திற்கும் முன்பான ஒரு யுகத்தில் கொண்டு நிறுத்துவதில்லையா! சிறந்த இலக்கியம் நமக்குள் பார்த்துக் கொள்ளும் ஓர் அகக்கண்ணாடியை மெலிதான கதியில் முன் வைக்கிறது. நாம் வாழும் காலத்தில் சிறுமைப்படுத்தப்படும் மதிப்பீடுகளை, மலினமாக்கப்படும் பண்புகளை கை விடப்பட்ட மெல்லியல்புகளை ஒரு காட்சிச் சித்திரமாக நமக்குள் ஒட்டிக்காட்டும் வல்லமை புனைவுகளுக்கு உண்டு. உள்ளம் பதைக்கத்தக்க எத்தனை விஷயங்களை வெறும் செய்தியாக நாம் கடந்து செல்கிறோம். சரி அப்புறம் என்ற சொற்கள் அத்தகைய விஷயங்களின் மீதான வன்முறை அன்றி வேறென்ன? ஒரு சிறுகதை நம்மை விசாரணைக்கு உட்படுத்தும் அளவு கருப்பொருள் நிறைந்தது.

‘ நட்சத்திரம் விழும் நேரத்தில் ‘ சிறுகதைத் தொகுப்பு மலையாள எழுத்தாளர் கிரேஸி அவர்கள் படைத்திருக்கும் நுட்பமான புனைவுகளின் ஒரு திரட்டு. ‘ஓங்கி மண்டையில் அடித்தாற் போல் நம்மை உலுக்கி விழித்தெழச் செய்யாத ஒரு புத்தகத்தை ஏன் மெனக்கெட்டு படிப்பானேன்’ என்றார் காஃப்கா. கிரேஸியின் கதைகள் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் வெவ்வேறு முறையில் மண்டையில் மட்டுமல்ல கன்னத்திலும் பளார் பளாரென்று அறைவது போலிருக்கிறது. அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்குக் கூட மீண்டும் அவற்றுக்குள்ளே தான் பயணம் செய்ய வேண்டியதிருக்கிறது. மிகுந்த வித்தியாசமான கோணத்தில் மிகச் சிறிய கட்டமைப்புக்குள் எப்படி கிரேஸி அத்தனை வலிமையான கதைகளைப் படைக்கிறார் என்பது ஓர் அதிர்ச்சி அனுபவம் என்றால் எப்படி அதே வலுவோடு அதைத் தமிழில் உதயசங்கர் வழங்குகிறார் என்பது அடுத்த அதிர்ச்சி.

கல்லு என்னும் முதல்கதை, காமவெறிக்கு இலக்காகும் கதியற்ற ஒரு கிராமத்து இளம்பெண்ணுக்குத் தடுப்புக்காவல் அரண் அமைத்து காக்கத் துடிக்கிற ஒரு தாயின் காத்து அவனையும் வீழ்த்தியே மரிக்கிறாள். பின்னர் கல்லுவைத் தவறான பார்வை பார்த்து நெருங்கும் எவனுக்கும் முன்பாக இறந்துபட்ட தாயின் கொடி போன்ற இரண்டு கரங்களும், கோபத்தீ எரிகிற முகமும் வந்து நிற்கிறது. விசாரணை செய்யும் சாக்கில் அவளை அடையத் துடிக்கும் போலீஸ் அதிகாரியும் சரி, வேறெவனும் சரி ஒன்றே போல் இந்தப் பிணக்காட்சியைப் பார்த்துத் திணறி விழுகின்றவர்களே. கதை அங்கே முடிவதில்லை. தன் மீது காதல் கொண்டிருக்கும் வாலிபனிடம் அவள் வெட்கம் விட்டு என்னைக் கட்டிக் கொள்ளேன் எனும்போது அவனோ, இம்மாதிரியாகத் தங்கள் வாழ்வின் குறுக்கேயும் பிணக்காட்சி வரக்கூடும் என்று சொல்லி நடுங்கி மறுத்து விடுகிறான். த்னது வடிவத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் பெருகும் நிராசையின் பரிதவிப்பில் கல்லு தரையில் உருண்டு கதறுகிறாள். சமூகத்தில் தூய்மையான அன்புப் பெருவெளி கிடையாதா என்று இந்தக் கேட்பதாக எனக்குப் பட்டது. பெண் உடல் ஆண்களின் எல்லா மூர்க்கத்தனத்தையும் மறுகேள்வியின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத சமூக நியதியின் முன்பாகத் தான் நீளுகின்றன கார்த்துவின் கொடி போன்ற இரண்டு கைகளும் பிச்சுவாக்கத்தி குத்தி நிற்கிற நெஞ்சும்,கோபத்தீ எரிகிற முகமும்..

பெண்ணுடல் குறித்த அலட்சியம் அல்லது அவமதிப்பு அல்லது ஆதிக்கம் இந்தத் தொகுப்பின் மற்ற பல கதைகளிலும் வெவ்வேறு களத்திலிருந்து பறித்து வந்து தரப்படுகிறது. ’பொம்மைக்குழந்தை’ கதையில் மனமுதிர்ச்சி அடையாத இளம்பெண்ணை பொம்மைக்கான அவளது ஆர்வத்தைப் பயன்படுத்தி வசப்படுத்தும் ஆண். ‘ நாங்கள் பாவம் செய்யாதவர்கள் ‘ சிறுகதையில் இன்னதென்று தெரியாமலே அலைவுறும் தம்பியின் எதிரே கூட்டத்தால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண், அதைப்பார்த்தும் குறுக்கிடக் கையாலாகதவர்களாக வேடிக்கை பார்ப்போர், ‘ சீதாயாணம் ‘ கதையில் தனது பொருளாதாரத் தேவைக்காக மேலதிகாரிக்கு மனைவியையே படையலிடும் கணவன், வேலைக்காரப்பெண்ணை என்னவும் பேசலாம் என்று சொற்களாலேயே பலாத்காரம் செய்யும் சூழலைச் சொல்லும் ‘ இது ஜோசப்பினுடைய கதை, அன்னாவுடையதும்’ தனது எண்ணங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கத் தெரியாது சிதறும் பெண்ணைப் பங்கு போட்டுக் கொள்ளும் புறவுலகம் குறித்தது ‘ ஒரு ஜனரஞ்சகக் கதையின் முடிவு ‘

‘ பந்து ‘ கதை ஒரு விளையாட்டு வீரனின் மனைவியை முக்கியப் பாத்திரமாகக் கொண்டது. எப்போதும் தனது திறனுக்கான பாராட்டுக் கரவொலியைப் புலன்களில் உணர்ந்தால் மட்டுமே இயங்க முடியும் என்றிருக்கிற கணவனிடம் சமதையான தாம்பத்திய உறவுக்குப் பாதை பிடிபடாது தவிக்கும் அவள் த்னது சுகதுக்கங்களை அவனது விளையாட்டு வெறியிடம் ஒப்புக் கொடுத்து விட்டுத் திணறுகிற அனுபவத்தைப் பேசுவது உண்மையில் மாறுபட்ட புனைவு.

‘ பாஞ்சாலி ‘ கதை மறுவாசிப்பு என்று அமையாத ஆனால் உருவகமாக திரௌபதையின் அவஸ்தைகளை எடுத்து வைக்கிறது. பாலியல் சேட்டைகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கும் வேறு சொந்த உணர்வுகள் ஏதுமற்ற உருவமாகத் தன்னை நினைக்கும் கணவனை அவனது பாணியிலேயே கதறடிக்கிறாள் கிருஷ்ணா.

தொகுப்பு முழுவதுமே சாட்டையடியான கதைகள் நிறைந்திருக்கின்றன என்றாலும் ஒரு சில வியப்புக்குரிய தளத்தில் பின்னப்பட்டிருக்கின்றன. ஒரு சாதாரண ரயிலின் பயணத்தை, அதன் விதவிதமான கூவல்களை, வேகம் கூட்டுதலை, தணித்தலை, வழியில் ஏதாவது ஓரிடத்தில் கொஞ்சம் நின்று விட்டு நகர்வதை ஆட்டங்களோடு செல்வதை யார் தான் சிறு வயதிலிருந்தே கவனிக்காதிருந்திருக்க முடியும்… அதற்கு கிரேஸி முன்வைக்கும் காரணங்கள் அசாத்திய புனைவிலிருந்து எழுவது. வறுமை, பட்டினி, அரசியல் அராஜகம், வன்கொடுமை, போன்ற நிலைமைகளின் விளைவாகத் தண்டவாளங்களின் ஊடே கொலையுண்டோரும், தற்கொலை புரிந்தோரும் ரயில் எஞ்சினுக்கு முன் வைக்கும் வேண்டுகோளுக்கு உயிரற்ற அந்த வண்டித் தொடர் தனது இருதயத்திலிருந்து கொடுத்த உறுதிமொழியைத் தான் காலகாலமாக வழி நெடுக இப்படியான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்கிறது ‘ காட்சிகளின் மறுபக்கம் “ சிறுகதை.

மந்திரக்கண்ணாடி சிறுகதை மனிதத்தன்மை படைத்த ஒரு கள்வனின் கதை. பள்ளிச்சிறுமியை திருமண ஆசை காட்டிச் சீரழித்து விட்டு அவளை மையப்ப்டுத்தும் தொழிலில் முதல் வாய்ப்பைத் தனக்குத் தருகிற கேடுகெட்ட நண்பனுக்குத் தெரியாமல் அந்த அபலைப் பெண்ணை தப்ப விடுகிறான் அவன். தலைக்குப்பின் ஒளிவட்டம் தோன்றிய தேவனாய் தன்னை உணர்த்தும் ஒரு மந்திரக்கண்ணாடி முன் நிற்பவன் சிறைப்பறவையைத் தப்பவிட்ட கோபத்தில் நண்பன் வந்து தாக்கும் போது தானும் சாத்தானாக உருமாறுவதை அதே கண்ணாடியில் விசனத்தோடு பார்க்கும் இடத்தில் முடிகிறது கதை.

தலைப்புக்கதை ஒரு கவிதை. இதன் நாயகனும் திருடன் தான். ஆனால் அவனை உய்ர்ந்த இடத்தில் பொருத்தி அனுப்புகிறாள் அவன் திருடப்போன இல்லத்தின் பெண்மணி. அதன் பின்புலம் வேத்னையானது. முற்றத்தில் எதற்கோ நடந்து கொண்டிருக்கும் அவளை அவனும் முதலில் தவறானவளாக நினைத்துப் பிறகு திருத்திக் கொள்கிறான். அது அவன் இதுவரை பெறாத அனுபவ வெளியாக இருக்கிறது. அவளோ அவனோடு நடந்தபடி நட்சத்திரங்களைக் காட்டி அதில் வீழும் ஒன்றைக் குறித்தான விவரிப்பில் இறங்குபவள் ஒரு கட்டத்தில் நீ யார் என்று அவனைக் கேட்கிறாள். நான் திருடன் என்பவனிடம் எனது கணவரும் திருடர் தான் அவர் திருடுவது பெண்களின் புனிதத்தை..நீ? என்று அவள் கேட்கும் கேள்வியின் அதிர்ச்சிக் கணத்தில் அவன் காணாது விலகிப் போய் விடுகிறான்.

‘ ஒரோதாவும் பிரேதங்களும் ‘ கதை கவித்துவ நடையில் அமைந்த முக்கிய படைப்புகளில் ஒன்று. ரத்தமும் மாமிசமும் புதிரான மொழியில் கன்னிகாஸ்தீரிகளின் அலைவுறுதலைப் பேசுகிறது.

இப்படியாக விரியும் இந்தக் கதைகளின் கருவைக் காட்டிலும் காந்தப்புலத்தை வரைவது போன்ற நேர்த்தியோடு புள்ளிகளை கிரேஸி வைத்துக் கொண்டே போய் இணைத்துக் கலப்பது தான் வாசிப்பின் கொடை என்பது முக்கியமானது. கதைகளைக் காட்டிலும் கிரேஸியின் அப்பட்டமான மொழி கதைக்களத்தின் தன்மையை வாசகரின் உள்ளத்தில் சட்டென்று பற்றி எரியத் தக்கதாய் அதிர்ந்து பார்ப்பதாய் அய்யோ என்று இரங்குவதாய், ஓ..என்று கதறுவதாய் அமைந்திருப்பது எளிதில் கடக்க முடியாதது. குலசேகர மன்னன் ஒவ்வொரு முறை இராமாயாணம் கேட்கும் போதும் சீதையை மீட்டெடுக்கப் படையோடு கடற்கரைப் பக்கம் போய் விடுவான் என்று புராணிகர்கள் சொல்வர். இந்தக் கதைகளை வாசிக்கையில், கதையில் அப்படியான ஒன்றுதலோடு, நடக்கும் அநீதியை இடைமறித்து நாம் ஏதும் செய்யமாட்டோமா என்று பரிதவிக்கத் தக்க உணர்வுகளை கிரேஸியின் அசாத்திய எழுத்து நடை தூண்டுகிறது. தமிழிலும் அதன் வலுவைப் பெயர்த்துக் கொண்டு வந்ததில் உதயசங்கரின் ரசனை தோய்ந்த பணி மிகுந்த பெருமிதம் ஊட்டுவது.வாசல் பதிப்பகம் பாராட்டுக்குரியது. ‘ இருட்டைத் தீப்பந்தத்தால் கீறுவது ‘ என்ற தலைப்பிலான அற்புதமான அறிமுகம் ஆழமிக்கது.

கிரேஸியின் கதைகளைப் போலவே பின் இணைப்பாக சேர்க்கப்பட்டிருக்கும் அவரது நேர்காணலும், கட்டுரை ஒன்றும் சலனங்களை ஏற்படுத்த வல்ல தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவரது துணிவான எழுத்தை விடவும், அது குறித்த ஆர்ப்பாட்டம் அற்ற அவரது பதில்களில் ஒலிக்கும் நேர்மை சமூகத்தின் பாசாங்குகளைச் சுட்டெரிக்கிறது, அவரது கதைகளைப் போலவே.

நட்சத்திரம் விழும் நேரத்தில்

கிரேஸி

தமிழில்- உதயசங்கர்

வெளியீடு- வாசல் பதிப்பகம்

40-டி/3 வசந்த நகர் முதல் தெரு 

மதுரை-625003

9842102133

நன்றி – புத்தகம் பேசுது அக்டோபர் 2012

Photo-0022

Thursday 11 October 2012

எல்லாம் வந்தது

vulture உதயசங்கர்

 

தாந்தோன்றிப் பாதை மறைந்து

தார்ச்சாலை வந்தது

ஒரு வழிப்பாதை போய்

நால்வழிச் சாலை வந்தது

கால்நடையாய் நடந்த தூரம்

கார் கணத்தில் கடந்தது

கருத்த முகங்களில் எல்லாம்

வெண்மை நிறப்பூச்சாயிருந்தது

சினிமா பார்க்கக் காத்திருந்த காலம் போய்

வீட்டில் சினிமா காத்திருந்தது

கம்பு கேப்பை சோளம் போய்

பீட்சா பர்கர் வந்தது

உள்ளூர் பானங்கள் தொலைந்து

கோகோ பெப்சி நுரைத்தது

உலகம் எல்லாம் ஊருக்குள் வந்தது

எப்படி எப்படி எப்படியென்று

அண்ணாந்து வியந்த

ஆறுமுகத்துக்கு நடக்கும்போது

காலில் சங்கிலி ஓசை

கேட்டுக் கொண்டிருந்தது மட்டும்

ஏனென்று புரியவில்லை.Photo-0027

Wednesday 10 October 2012

நட்சத்திரம் விழும் நேரத்தில்..

semsar's painting

 

மலையாளத்தில்- கிரேஸி

 

தமிழில்- உதயசங்கர்

 

உலகம் இருளின் கீழ் விரைத்துப் படுத்துறங்குகின்ற பொழுதில் தான் அவனுடைய வாழ்க்கை துடிக்கத் தொடங்கும். அவனுடைய விரல்நுனியில் இந்திரஜாலமிருந்தது. தொட்டமாத்திரத்தில் சன்னல் கம்பிகள் வழிவிட்டு ஒதுங்க அலமாரிகளும் பாதுகாப்புப் பெட்டகங்களும் விரியத் திறந்தன.

அன்று, முன்பே பார்த்து வைத்திருந்த வீட்டு முற்றத்தில் பதுங்கிப் பதுங்கிச் செல்லும்போது அவன் அதிர்ச்சியடையும்படி அந்த வீட்டுக்காரி அங்கே நின்று கொண்டிருந்தாள். இருட்டில் அவள் யாரோ கள்ளக்காதலனுக்காகக் காத்திருந்தாள் என்று அவன் சந்தேகப்பட்டான். அபூர்வமாகத்தான் என்றாலும் அவன் அவளைப் பார்த்திருக்கிறான். ஒரு கள்ளக்காதலனை ஈர்க்கிற அளவுக்கு அழகு அவளுக்கு வாய்க்கவில்லை. கருத்து மெலிந்திருந்தாள். ஆனால் அவளுடைய பெரிய கண்களில் ஏராளமான துயரங்கள் தெரிந்தன. அரண்மனை போன்ற ஒரு வீடும் உயர்ந்த உத்தியோகத்திலிருந்த கணவனும் காரும் வாய்க்கப்பெற்ற ஒரு பெண்ணின் இவ்வளவு துக்கத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று அவன் ஆச்சரியப்படவும் செய்தான்.

அவள் கள்ளக்காதலனுக்காகக் காத்திருக்கவில்லை என்று கடைசியில் தான் அவனுக்கு உறுதியாயிற்று. வானத்தை நோக்கி முகம் உயர்த்தி எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமனே மனித இயல்பினாலான ஒரு குறுகுறுப்பினால் அவன் அவளுக்கு அருகில் சென்றான். அவனும் வானத்திஅ நோக்கி முகம் திருப்பினான். அவனால் பிரத்யேகமாய் எதையும் பார்க்க முடியவில்லை. திடீரென்று தான் அவனுடைய அருகாமையை அவள் உணர்ந்தாள். ஆனந்தத்தோடு அடங்கிய குரலில் அவள் கேட்டாள்;

பாரு..பாரு..அந்த நடசத்திரம் விழுகிறதைப் பார்த்தியா?

அவனைத் தன்னோடு சேர்த்து நிறுத்தி அவள் வானத்தைப் பார்த்துச் சுட்டிக் காண்பித்தாள். அவனுக்கு ஒரு நடசத்திரம் விழுவதைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை. நட்சத்திரங்கள் உள்ள வானத்தை அவன் வெறுத்தான். வெளிச்சம் எப்போதும் அவனுக்கு எதிரியாக இருந்தது.

அவனைச் சேர்த்தணைத்துக் கொண்டு அவள் நடந்தாள்.

அவளுடைய கண்கள் அப்போதும் நட்சத்திர உலகத்தில் தான் இருந்தன. விசாலமான முற்றத்தினுடைய எல்லையையும் தாண்டி அவர்கள் நடைபாதையில் இறங்கி நடந்தார்கள். வாசல் கதவின் கம்பிகள் அவர்களைத் தடுத்தன. பார்வையிலிருந்து மறைந்த நட்சத்திரத்தை நினைத்து அவள் பெருமூச்சு விட்டாள்.

அந்த நட்சத்திரம் வேறு யாருடையவோ வாழ்க்கையினுள்ளே பயணித்திருக்கும் அல்லவா?

அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். அவளுடைய இமை முடிகளில் ஒரு கண்னீர்த்துளி நட்சத்திரம் போல மின்னிக் கொண்டிருப்பதை மங்கிய வெளிச்சத்தில் அவன் பார்த்தான். அவனுடைய நெஞ்சில் தலை சாய்த்து மெல்லக் கண்களை மூடினாள்.

நடசத்திரம் விழுவதைப் பார்த்தால் கெட்ட சகுனம் என்பார்கள். ஆனால் எனக்கு அதைப் பார்க்கும்போது கட்டுக்கடங்காத சந்தோஷம் ஏற்படுகிறது. நான் வானத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு நட்சத்திரமாவது விழுவது உண்டு. முன்பும் அப்படித்தான்.

என்னுடைய அழகான தங்கை சொல்லுவாள். அக்காவைப் பார்த்து பயந்து போய் நட்சத்திரங்கள் எல்லாம் ஓட்டம் பிடிக்கின்றன.

இரக்கத்தின் ஒரு அலை அவனுக்குள் இறங்கி அவனை நனைத்தது. பின்பும் எதுவும் பேசாமல் அவன் அவளுடைய முதுகை வெறுமனே தடவிக்கொடுத்தான். அமைதியான குரலில் அவள் தொடர்ந்தாள்.

நட்சத்திரப்பொட்டுகள் சிதறிக்கிடக்கிற இந்த வானவெளி எத்தனை உபயோகமில்லாத வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கு நினைவு படுத்தும். அப்படியே என்னுடைய காயங்களையெல்லாம் நான் மறக்கத் தொடங்குவேன். நடுநிசியில் தூரத்தில் ஏதோ ஒரு மரக்கிளையிலிருந்து மறுமொழியின்றி ஒரு ஆந்தை கூவும்போது எப்படியோ எனக்குள் அமைதி ஊற்றெடுத்து நிறையும்.

அவளுடைய வார்த்தைகள் மௌனத்திற்குள் இடறி விழுந்தன. அவள் உறங்கிவிட்டாளோ என்று அவன் அதிர்ச்சியடையத் தொடங்கினான். அப்போது ஏதோ ஒரு கனவிலிருந்து விழித்தெழுந்ததைப் போல அவள் கேட்டாள்;

நீங்கள் யார்?

அப்போது அவனால் உண்மையைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பெண் அவனுடைய நெஞ்சில் தஞ்சமடைந்திருக்கிறாள்.

நான் ஒரு திருடன்.

அவன் எதிர்பார்த்தது போல அவள் நடுங்கவோ அலறி ஆட்களை கூப்பிடவோ இல்லை.

அதற்குப் பதிலாக உணர்ச்சியே இல்லாத ஒரு குரலில் அவள் சொன்னாள்;

என்னுடைய கணவரும் ஒரு திருடன் தான். ஆனால் அவர் திருடுவது பெண்களின் புனிதத்தை.. நீங்கள்?

காற்றில் அலையும் தீபஒளியைப் போல அவனுடைய இதயம் துடித்தது. சிதறித் தெறிக்கின்ற ஒரு பெருமூச்சோடு அவனுடைய முரட்டுமுகம் அவளுடைய நெற்றியில் பதிந்தது.

பின்பு, அவன் மெல்ல அவளிடமிருந்து விலகி இருளில் எங்கோ மறைந்து இல்லாமல் போனான்.

Gracy

Tuesday 9 October 2012

விலகிக் கொண்டிருக்கும் மாயத்திரை

 

உதயசங்கர்

little-boy-reading

ஆதியில் கல்வி எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இந்தியாவின் கொடிய நோயான சாதியப்படிநிலைகளில் மேல் சாதியினர் மட்டுமே கல்வி கற்கும் உரிமையைத் தங்கள் கைகளில் வைத்திருந்தார்கள். மற்ற சாதியினருக்கு கல்வி கற்கும் உரிமையைக் கொடுக்காதது மட்டுமல்ல அப்படி அவர்கள் தெரியாத்தனமாகக் கல்வி கற்றால் அவர்களுக்குத் தண்டனைகளும் கொடுக்கப்பட்டது. அரசர்களின் ஆதரவோடு மனுதர்மம் என்ற பிராமணியச் சட்டவிதிகள் கடுமையாக நிறைவேற்றப் பட்டன. பெரும்பான்மை சமூகம் கல்வியறிவற்றவர்களாக வைக்கப் பட்டிருந்தனர். கல்வி ஒரு அதிகாரமையமாக செயல்பட்டது. உடல் உழைப்பு கீழானதாகக் கருதப்பட்டது.

மேல்சாதியினர் குருகுலக்கல்வி என்ற முறையிலேயே கல்வி கற்றனர். அந்தக் கல்வியும் வேதங்கள், உபநிஷதங்கள், மனுதர்மம், ராஜ்யபரிபாலன சட்டவிதிகள் என்ற அளவிலேயே இருந்தன. குறிப்பாக பிராமணர்களும் சத்திரியர்களும் மட்டுமே கல்வி கற்றனர். மக்கள் தொழில் சார்ந்த கல்வியை அவரவர் பட்டறிவின் மூலமே அடுத்தடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுத்தனர். இதெல்லாம் குப்தர்கள் காலத்தில் உருவாகி நிலைபெற்றது எனலாம். ஆனால் இதற்கு முன்பாக சமணர்களும், பௌத்தர்களும் கல்வியை அவரவர்களுடைய சமணப்பள்ளிகளிலும், பௌத்தவிகாரைகளிலும், சொல்லிக் கொடுத்தனர். பெண்கல்வியை முதன்முதலாய் நடைமுறைப்படுத்தியவர்களும் அவர்களே. பௌத்தமும், சமணமும் இந்து மதக் கொடுங்கோன்மையால் அழிக்கப்பட்டது. மனுதர்மம் தன் ஆதிக்கத்தைப் பரப்ப ஆரம்பித்தது. கல்வி மேல்சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது. அதற்கேற்ப புராண இதிகாசங்களில் கதைகள் உருவாக்கப்பட்டன.

ராமாயணத்தில் வேதம் கற்றதுக்காக ராமனால் சம்புகன் என்ற சாதியப்படி நிலைகளில் கீழ்நிலையில் இருந்தவர் தலை கொய்யப்பட்டு கொல்லப்பட்டார். மகாபாரதத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த வில், அம்பு, எய்வதில் பிறந்ததிலிருந்தே பயிற்சி பெற்றிருந்த ஏகலைவனின் கட்டைவிரலை பலிவாங்கியதும், கீழோர்கள் கல்வி கற்க அனுமதியில்லை என்ற இசைவை மக்களிடம் உருவாக்கவே கதைகளைத் திரித்து எழுதியும், சொல்லியும் வந்தனர். இப்படி வரலாறு முழுவதும் ஏராளமான கதைகள் மக்கள் மனங்களில் செதுக்கப்பட்டன.

நவீனக்கல்விமுறை ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே உருவானது. அதுவும் கூட ஆங்கிலேயர்கள் தங்களுடைய நிர்வாக வசதிக்காக உருவாக்கிய கல்விமுறை. மெக்காலே என்ற ஆங்கிலேயர், உடலால் இந்தியனாகவும், மனதால் ஆங்கிலேயனாகவும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைச்சேவகம் செய்ய இந்தியர்களை மாற்றுவதற்காகத் திட்டமிட்டு உருவாக்கியது. அதிலும் ஆரம்பகாலத்தில் மேல்சாதியினர் மட்டுமே கல்வி கற்று ஆங்கிலேய அரசில் பதவிகள் வகித்து இந்தியமக்களை ஆங்கிலேயர்களை விடக் கொடுமைப்படுத்தினர். நவீன முதலாளித்துவத்தின் தேவையே ஒருவகையில் கல்வியை ஜனநாயகப்படுத்தியது எனலாம். கல்வி ஜனநாயப்படுத்தப்பட்டு சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் தான் இருக்கும். அதிலும் சுமார் நூறு வருடங்களுக்குள்ளாகத் தான் சாதியப் படிநிலையில் கீழ்நிலையில் உள்ளவர்களும் கல்வி கற்கிற வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதிலும் சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்குள்ளாகத் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் பள்ளிகளில் இன்னமும் சாதிப்பாகுபாடு, இழிவு, தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இதற்கு மற்ற நாடுகளில் முதலாளித்துவம் அதற்கு முந்தைய காலகட்டமான நிலப்பிரபுத்துவத்தை அழித்ததைப் போல இந்தியாவில் அழிக்க முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் சாதிப்பாகுபாடுகளை நியாயப்படுத்துகிற மனுதர்மத்தின் ஆதிக்கம் தான். எனவே முதலாளித்துவம் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து கொண்டதோடு மட்டுமில்லாமல் கை கோர்த்தும் கொண்டது.

மெக்காலேயின் மனப்பாடக்கல்விமுறையில் மக்கப் பண்ணத் திறமையிருக்கிற மாணவர்கள் மதிப்பெண்கள் அதிகம் பெறுவதும், மக்கப் பண்ணத் திறமையில்லாத மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதும் நேர்கிறது. மாணவர்களின் படைப்பாற்றல் மதிப்பெண்கள் மூலம் மட்டுமே மதிப்பிடப்படுவதால் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஒரு வித தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர்களும், பெற்றோர்களும் அவர்களை ‘ நீ எதற்கும் லாயக்கில்லை..’ என்றோ ‘ மாடுமேய்க்கத்தான் லாயக்கு..’ என்றோ திட்டி தண்டனைகள் கொடுத்து அவர்கள் மனதில் ஒரு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறார்கள். மற்ற சக மாணவர்கள் முன்னால் அவமானப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி கசக்கிறது. பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு உதிரி தொழில் சார்ந்த வேலைகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

எல்லா குழந்தைகளையும் அவரவர் படைப்பூக்கம், திறமை, விருப்பம், ஆர்வம், சார்ந்து இன்றையக் கல்விமுறை அரவணைப்பதில்லை. அவர்களை ஊக்குவிப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் கல்விமுறையில் இல்லை. இதற்கு ஒரு வரலாற்றுக் காரணமும் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே கல்வி என்பது வேலைக்கான ஒரு சிபாரிசுக் கடிதம் போலவோ, பாஸ்போர்ட் மாதிரியோ கருதப்பட்டு வந்ததும் காரணமாக இருக்கலாம். கல்வி கற்பதின் மூலம் நல்ல வேலையில் சேரலாம். கை நிறைய சம்பாதிக்கலாம். என்பது தான் கல்வியின் நோக்கமாக இருக்கிறது.

இருபது, முப்பது, வருடங்களுக்கு முன்னால் அரசு ஆரம்பப் பள்ளிகளும் அரசு நடுநிலைப்பள்ளிகளும், அரசு உயர்நிலைப்பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று காளான்கள் போல தெருவுக்கு ஒரு நர்சரிப்பள்ளிக்கூடங்கள், கான்வெண்டுகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருத்திருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு விதமாய் கவர்ச்சி விளம்பரம் தருகின்றன. மாண்டிசோரிக்கல்விமுறை, இசை, ஓவியம், விளையாட்டு, நடனம், யோகா, ஸ்போக்கன் இங்கிலீஷ், சுத்தமான அக்குவா குடிநீர், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், தனித்தனியாக மாணவர்கள் மீதான, கவனிப்பு, ஒழுக்கம், அது இது என்று தங்கள் பள்ளியை சந்தையில் ஒரு பொருளைக் கூவிக் கூவி விற்பனை செய்யும் வியாபாரியைப் போல விற்பனை செய்கிறார்கள். பெற்றோர்களும் தங்கள் குழந்தை எல்லாக்கலைகளிலும் விற்பன்னர் ஆக வேண்டுமென்றோ, தனியார் பள்ளிக்கூடத்தில் தான் கண்டிஷன் இருக்கும் என்றோ, இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தால் தான் பெருமை என்றோ, தங்கள் குழந்தையை மேதையாக்கி விடுவார்கள் என்றோ, அவரவர் ஊரில் எந்தப் பள்ளிக்கூடம் பெருமைமிகு பள்ளிக்கூடமோ அந்தப் பள்ளிக்கூடத்தில் தங்கள் குழந்தையை சேர்க்க ஆசைப்படுகிறார்கள். ஆசைப்பட்டால் போதுமா? ராத்திரியோடு ராத்தியாக பள்ளிக்கூட வாசல் கதவுக்கருகில் துண்டு விரித்து தூங்கி வரிசை போட்டு அப்ளிக்கேஷன் வாங்குகிறார்கள். ஊருக்குள் யாருக்கு அந்தப்பள்ளிக்கூடம் தெரியுமென்றாலும் அவரிடம் ரெகமெண்டேஷனுக்குப் போய் நின்று பள்ளிக்கூடத்தில் பெற்றோர்களுக்கு நடத்தும் இண்டர்வியூவுக்குப் போய் அவர்கள் கேட்கும் அத்தனை கண்டிஷன்களுக்கும் தலையாட்டி விட்டு எப்படியாவது, எவ்வளவு பணம் கட்டியாவது குழந்தையை அந்தப் புகழ் பெற்ற பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். கல்விக்கூடம் வியாபாரமுதலீடாகி விட்டது. அதனால் தான் புற்றீசல் போல கல்வித்தந்தைகள் நாடெங்கும் உருவாகி விட்டார்கள்.

பள்ளியில் சேர்த்த பிறகு பெற்றோர்கள் அந்தக் குழந்தையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அந்தப் பள்ளியைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அதன் கல்விச் செயல்பாடுகள் பற்றியும் கேள்வி கேட்பதில்லை. ஸ்பெஷல் டொனேஷன் வேண்டுமென்றால் பள்ளி நிர்வாகம் பெற்றோராசிரியர் கழகத்தை கூட்டுவார்கள். டொனேஷன் கேட்பார்கள். குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் பெற்றோர்களையும் கூப்பிட்டு கண்டிப்பார்கள். பெற்றோர்களும் தாங்கள் பள்ளியில் படித்த காலத்தை விட தங்கள் குழந்தை படிக்கும் போது அந்தப் பள்ளிக்கூடத்தைப் பார்த்து அப்படி பயப்படுகிறார்கள். ஏனெனில் ஏதாவது கேள்வி கேட்டால் குழந்தையை பள்ளியை விட்டு விலக்கி விடலாம் அல்லது குழந்தையை பள்ளியில் துன்புறுத்தலாம் என்ற அச்சம் காரணமாக எதுவும் பேசுவதில்லை. பள்ளியும் சரியாக ஒன்பதாவது வகுப்பு முடியும்போது சராசரியாக மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களைப் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பி விடுகிறார்கள். ஏனெனில் பத்தாவது வகுப்புத் தேர்வில் ரிசல்ட் காண்பிக்கவேண்டும் என்கிறார்கள். பெற்றோர்களின் கோபம் குழந்தையின் மீது பாய்கிறது. நியாயமாகப் பார்த்தால் பெற்றோர்களின் கோபம் பள்ளியின் மீது தானே பாய வேண்டும். புத்தம் புது மலராய் எல்.கே.ஜி.யில் கொண்டு போய் சேர்த்த குழந்தைக்கு, கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்கள் அந்தக் குழந்தைக்கு ஏற்ற முறையில் கல்வி கற்பிக்க முடியாமல் அந்தக் குழந்தையைப் பாழாக்கி, குழந்தைக்குத் தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி பள்ளியை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள்.

இதற்கு முதல் காரணம் பெற்றோர்கள் தான். பெற்றோர்களின் ஆட்டுமந்தை மனோபாவம், தங்கள் குழந்தையைப் பற்றிய அறியாமை, பொதுவெளியில் கல்வி குறித்த விவாதமின்மை, அரசாங்கத்தின் திட்டமிட்ட புறக்கணிப்பு, எல்லாம் சேர்ந்து எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய தரமான, சமச்சீரான கல்வியை மிகக் குறுகிய காலத்தில் அதாவது சுதந்திரமடைந்து அறுபத்தாறு வருடங்களுக்குள் சீரழித்து விட்டிருக்கிறது. ஆனாலும் இடதுசாரிகளின் தொடர்ந்த போராட்டங்களினால் சில மாற்றங்கள் பெயரளவுக்கேனும் ஏற்பட்டிருக்கிறது. கல்வி குறித்த விவாதங்கள் பொதுவெளியில் நிகழ்ந்திருக்கிறது. தனியார் பள்ளிக்கூடங்கள் பற்றிய கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன. சற்றே மாயத்திரை விலகுவது போலத் தோற்றம் தெரிகிறது.

நன்றி- இளைஞர் முழக்கம்

Monday 8 October 2012

அவர்கள் வருகிறார்கள்

உதயசங்கர்stormwithin

 

அவர்கள் உங்கள் நாட்டுக்குள் வருவார்கள்

நீங்கள் வரவேற்பீர்கள்

அவர்கள் உங்கள் ஊருக்குள் வருவார்கள்

நீங்கள் முகமன் கூறுவீர்கள்

அவர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைவார்கள்

நீங்கள் பழக ஆரம்பிப்பீர்கள்

அவர்கள் உங்கள் உணவுகளுக்கு மாற்றாக

அவர்களுடைய உணவுகளை சாப்பிடச் சொல்லுவார்கள்

நீங்கள் மகிழ்வோடு சாப்பிடுவீர்கள்

அவர்கள் உங்கள் உடைகளுக்குப் பதிலாக

அவர்கள் உடைகளை உடுத்தச் சொல்லுவார்கள்

நீங்கள் பெருமையோடு உடுத்துவீர்கள்

அவர்கள் உங்கள் பழக்கவழக்கங்களுக்குப் பதில்

அவர்கள் பழக்கவழக்கங்களை புகுத்துவார்கள்

நீங்கள் உடனே பின்பற்றுவீர்கள்

அவர்கள் உங்கள் கடைகளுக்குப் பதில்

வால்மார்ட்டைக் கொண்டு வருவார்கள்

நீங்கள் உலகம் சுருங்கி விட்டதென புன்முறுவலிப்பீர்கள்

அவர்கள் உங்கள் வளத்தையெல்லாம் சுரண்டி

அவர்கள் வளமென நம்பச் சொல்லுவார்கள்

நீங்கள் உண்மை உண்மை என்று நம்பித் தொலைப்பீர்கள்

அவர்கள் உங்களை உலகத்தரத்துக்கு முன்னேற்றுவதாகச் சொல்லி

கண்ணுக்குத் தெரியாத அடிமைச் சங்கிலி பூட்டுவார்கள்

நீங்கள் முன்னேறுவதாக நம்பிக் கொண்டிருப்பீர்கள்

ஒரு நாள் 

நீங்கள் எங்கள் அடிமை என்று முழங்குவார்கள்

சங்கிலியின் ஓசை உங்களைச் சிறைவைக்க

நீங்கள் விடுதலைக்காக ஏங்கத் தொடங்குவீர்கள் 026

Sunday 7 October 2012

பெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானதே..

black,and,white,drawing,face,girl,art,woman-a8619ec48f601bdb6c57c8a2d15adca9_h_large   

கமலாலயன்

 

மலையாளத்தில் எழுதிக் கொண்டிருப்பவரான கிரேஸியின் கதைகள் இரண்டாவது முறையாகத் தமிழுக்கு ஒரு தொகுப்பாக வந்திருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள், தேர்வு செய்யப்பட்ட ஒரு கதைத் தொகுதி, ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஆக எட்டுப்புத்தகங்களின் ஆசிரியர் கிரேஸி. கல்லூரிப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற பின் கணவர்- மகளுடன் கேரள மாநிலம் ஆலுவாவில் வசித்து வருபவர்.

” எப்படி நீங்கள் எழுத்தாளரானீர்கள்?” இந்தக் கேள்வி எழுதுகிறவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்படுகிறது. இந்தக் கேள்விக்கு யாரால் சரியாகப் பதில் சொல்ல முடியும் என்று கேட்கிறார் கிரேஸி. இருப்பினும் அவருக்குச் சொல்லுவதற்கு ஒரு பதில் இருக்கவே செய்கிறது. கிரேஸி பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு ஸ்லோகப் போட்டி நடந்திருக்கிறது. இவராக உருவாக்கிய ஒரு ஸ்லோகத்தை ‘ இப்படியான ஒன்றைக் கேள்விப் பட்டதேயில்லை.” என்று சகபிள்ளைகள் கோபிக்கின்றனர். அதைச் சொல்லுமாறு வாத்தியார் கேட்க இவருக்குச் சுத்தமாக அது மறந்து போகிறது. வாத்தியாரின் கேள்வியும் பிள்ளைகளின் கைகொட்டிய சிரிப்பும் இவரைக் கண்ணீரில் வழிந்தோடச் செய்கின்றன. அப்படி ஏதேதோ பூமிகளினூடே பிரயாணம் செய்து யாருக்கும் தெரியாமல் ஏராளமான நாலுவரிக் கவிதைகளைத் துண்டுக் காகிதங்களில் எழுதி ஒளித்து வைத்திருந்திருக்கிறார். எழுத்தில் வடிக்காதவற்றை மனசில் பத்திரப்படுத்தி அடைத்து வைத்திருக்கையில் பாடப்புத்தகத்தில் வாசித்த ஒரு கதையிலிருந்து கதையின் சாத்தியங்கள் குறித்துப் புரிந்து கொள்கிறார். தன்னுடைய சின்னச் சின்னத் துக்கங்களை கதையில் சொல்லி சிறிய கவிதைகளைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஒரு நாள் அந்தக் துண்டுக் காகிதங்களெல்லாம் சேர்ந்து அடுப்பிற்குள் ஏறி விழுந்ததையும் அவர் பார்க்க நேர்ந்திருக்கிறது. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஏற்ற வேலை இதொன்றும் இல்லையென்ற ஒரு தாக்கீது தீச்சூட்டுடன் பதிலாகக் கிடைக்கவும் செய்திருக்கிறது.

இயற்கையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உற்று நோக்க முடிகிறது இவரால். தன் உயிரைப் போல இயற்கையை சிநேகிக்கத் தொடங்குகிறார். அப்போது தான் பெண்ணும் இயற்கையும் ஒன்றே என்ற ஞானம் கைவரப் பெறுகிறது. பெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானது தான் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.

கதைகள், புனைவுகளின் இனிமைகளால் நிறைக்கப்பட்டவையென நம்புகிறோம். பொழுதுபோக்குவதற்கு உதவுபவை, எழுதுபவர்களின் கற்பனையில் உதிப்பவை, அழகியல் அம்சங்களால் அணி செய்யப்பட்டவை. நேர்க்கோட்டுத் தன்மையிலோ அல்லது அநேர்க்கோட்டுத் தன்மையிலோ மரபு சார்ந்தும் நவீன கதை சொல்லல் முறை சார்ந்தும் அமைந்திருப்பவை என்று வடிவம் பற்றிய விளக்கங்களைக் கேட்டு வருகிறோம். அப்புறம் கதைகளின் உள்ளடக்கம்-பாடுபொருள்- இருக்கவே இருக்கிறது.

இப்படியான மனப்பதிவுகள் படைப்புலகம் சார்ந்து நிலை பெற்றிருக்கின்றன. இவை எல்லாமே உண்மைகள் தாம். ஒரு பெரிய உண்மையின் பகுதி உண்மைகள். இவற்றோடும் இவற்றுக்கு அப்பாலும் தான் வாழ்க்கையின் தரிசனம் நிகழ்கிற இடங்கள் உள்ளன. அந்த வாழ்க்கையில் ” காத்திருப்போரும் மௌனிகளும் தென்பட்டு மறைகிறார்கள் ( இந்தக் கதைகளில்) விரல்களுக்கு இடையே பிளேடுகளை மறைத்திருப்போரும் தமக்குள் அசையும் பெண்டுலம் உடைந்தோரும் திருடர்களும், ஏமாளிகளும், ஏராளமாய் இருக்கிறார்கள். அவர்கள் கால் வைத்த இடத்தில் எல்லாம் நிலம் சரிகிறது. பறக்கத் துவங்கினால் இறக்கை முறிகிறது. ஒரு பொழுதைக் கடப்பது இவர்களுக்கு ஒரு யுகத்தைக் கடப்பது போல.”

மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள வாக்கியங்கள் கிரேஸி கதைகளின் தமிழ் மொழியாக்கத் தொகுப்பில் பின் அட்டையில் இடம் பெற்றுள்ளன. 23 கதைகள் மற்றும் கிரேஸியுடனான நேர்காணலும், ‘ எழுத்தாளனின் பிறப்பு’ என்ற அவரின் சுய அனுபவக் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம் பெற்றவை.

சின்னஞ்சிறிய கதைகள். ‘ ஒரு ஜனரஞ்சகக்கதையின் முடிவு ‘ மட்டுமே பெரிய கதை. 9 பக்க அளவு வந்துள்ள கதை. இத்தொகுப்பிலேயே இது ஒன்று மட்டுமே. பெரும்பாலான கதைகள் ஒன்றரையிலிருந்து மூன்று நான்கு பக்கங்களிலேயே முடிந்து விடுகின்றன. பக்கங்களின் அளவு கொண்டு சிறுகதைகளை அளக்க முடியாது. அதிலும் கிரேஸியின் கதைகளை.

வாழ்க்கையின் பிரம்மாண்டமான துகள்கள் இந்தக் கதைகளில் சிதறிக் கிடக்கின்றன. எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் அநாதி காலந்தொட்டு அலைந்து கொண்டிருக்கிற துகள்களைப் போன்றே கண்ணுக்குப் புலப்படாத தொலைவில் மிதப்பவையாய் இவை இருக்கின்றன. நட்சத்திரம் விழுவதைப் பார்த்தால் கெட்ட சகுனம் என்பார்களாம். ஆனால் நட்சத்திர உலகில் கண்கள் நிலைத்திருக்கப் பார்த்திருக்கிற அந்தப் பெண்ணுக்கு விண்மீன் பொட்டுகள் சிதறிக் கிடக்கிற அந்த வானவெளி எத்தனை உபயோகமில்லாத வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று நினைவுபடுத்துகின்றன. நட்சத்திரம் விழுவதைப் பார்க்கையில் கட்டுக்கடங்காத சந்தோஷம் ஏற்படுகிறது அவளுக்கு.

அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் திருடவருகிறவன் தான் அவன். அவனுடைய விரல் நுனிகளில் இந்திரஜாலம், அவன் தொட்ட மாத்திரத்தில் சன்னல் கம்பிகள் வழி விட்டு ஒதுங்குகின்றன. அலமாரிகளையும் பாதுகாப்புப் பெட்டகங்களையும் விரியத் திறந்து கொள்ள வைக்கிறவன் அந்தத் திருடன். அவன் அந்தப் பெண்ணின் மனக்கதவைத் திறந்து பார்க்கிற தருணம் தான் ‘ நட்சத்திரம் விழும் நேரத்தில் ‘ கதை. அரண்மனை போன்ற வீடும் உயர்ந்த உத்தியோகத்துக் கணவனும், காரும்- இப்படி எல்லாம் வாய்த்திருந்தும் கூட கருத்து மெலிந்திருந்த அவளுடைய கண்களில் தெரிந்த ஏராளமான துயரங்களின் முன்னால், காற்றில் அலையும் தீபஒளியைப் போல அவனுடைய முரட்டு இதயமும் கூட துடித்து விலகிப் போய் விடுகிறது. நடைமுறை வாழ்க்கையில் உண்மையான திருடர்கள் யார் எந்த வகையில் அவர்களை இனங்கண்டறிய முடியும். எப்படி அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்று வாழ்வது என்ற பல ஆதாரமான கேள்விகளை எழுப்புவதாக இந்தத் தலைப்புக்கதை அமைந்திருக்கிறது. ஒரு திருடனின் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண் இந்தப் பிண்ணனியில் அவனது நெஞ்சில் தஞ்சமடைந்திருக்கிற அந்த நேரம் எவ்வளவு விலைமதிப்பற்றதாக இருக்கிறது என்று மலைத்துப் போகிறோம்.

‘ காட்சிகளின் மறுபக்கம் ‘ கதை ஓர் அபூர்வப்பதிவு. ரயில்களின் சக்கரங்களில் ஏதேதோ காரணங்களால் சிக்கிச் சிதைந்து போகிற மனிதர்களின் அமானுஷ்யக் குரல்கள் எழுப்புகிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடிவதில்லை. அவை அவ்வப்போது மௌனமாக ஞாபகங்களில் மூழ்கிச் சலனமற்று நிற்கின்றன. மெதுவாக ஓடுகின்றன. ஆற்ற மாட்டாத இந்தத் துயர நினைவுகளின் குற்ற உணர்வுகளால் நீட்டி முழக்கிக் கூகூ வென அலறி ஓய்கின்றன. ஆடி அசைந்து பிரயாணம் செய்கின்றன. இப்படி ஆடி அலைந்து கடந்து சென்றது எல்லாம் புறக்காட்சிகளின் மறுபக்கத்தினூடாகவே என்று ரயிலின் ஞானக்கண்கள் உணர்கின்றன. அந்தக் காட்சிகளின் பயங்கரத்தை நினைத்து நடுங்கி நசுங்கிப் போன கனவினுடைய துர்நாற்றத்தின் வழியாக அது வேறொரு வாழ்க்கையை நோக்கி மூச்சுத் திணறியபடி செல்கிறது. பசியினால் கிராமத்திலேயே அழகாயிருந்த பாவத்தினால், பெற்ற அத்தனை பிள்ளைகளும் பெண்களாகவே பிறந்து விட்ட நிலையில் அவர்களைக் கரையேற்ற முடியாத இயலாமையால், அரசியல் களத்தின் வஞ்சகக் கயிற்றால், - தண்டவாளப்பாதைகளில் தலை வேறு முண்டம் வேறாக சிதைந்து போய்க் கிடக்கிற சகமனிதர்களின் துயரங்களைக் கண்களால் காண்கிறோமே தவிர ஒரு நாளும் அந்தக் காட்சிகளின் மறுபக்கத்தை உணர்கிறோமில்லை. ஆனால் இந்த உணர்வுகள் அத்தனையையும் அந்த ரயிலையே பேச வைத்து நமக்கு உணர்த்திவிட கிரேஸியால் முடிந்திருக்கிறது.

“ யாருக்காக யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இப்படிக் கதைகள் எழுதுகிறீர்கள்?” என்று வெறுப்பின் சூடு நிறைந்த கேள்விகள் பல கிரேஸியை எதிர்கொள்கின்றன. ‘ பெண்களுக்கு எழுத வேண்டிய விஷயங்கள் ஏராளமாயிருப்பினும் அநுபவங்கள் குறைவு தான். அப்படிக் குறைந்த அநுபவங்களைக் குறித்து எழுதுகையில் பிரச்னைகள் உண்டாகின்றன’ என்கிறார் கிரேஸி. ‘ எழுத்தில் நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டும்’ என்று நாம் சுமக்க நேர்வது சிலுவையையே. இந்தச் சிலுவை யுத்தத்தில் எழுத்தாளர்கள் – உண்மையிலேயே ஆத்மார்த்தமாக எழுதுகிறவர்கள் – ஒவ்வொரு நாளும் பலவற்றை இழந்து தான் தீர வேண்டும், உயிரையுங்கூட.

‘ உயிரை விடுகிற அளவுக்கு இல்லாவிட்டாலும் இன்றைய எழுத்தாளர்களுக்குத் தியாகம் செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன’ என்று உணர்கிறவர் கிரேஸி. ஆனால், “ எழுதும்போது நான் வாத்தியார் அல்ல.. பெண் கூட கிடையாது. என்னுடைய கதாபாத்திரம் சுதந்திரமாக எப்படி உருவாகும் என்று மட்டுமே நான் யோசித்துக் கொண்டிருப்பேன்.’ என்று துணிந்து முன் செல்கிறார். இலக்கிய வாழ்க்கையில் நீண்ட ஓர் இடைவெளி நேர்வது பலருடைய விதியாக இருக்கிறது. கிரேஸிக்கும்கூட. “ ஒரு சமயம் எனக்கு வாசிக்கக்கூட நேரம் கிடைக்கவில்லை. இப்போது இவ்வளவாவது செய்ய முடிகிறதே’ என்று அவருக்குச் சந்தோஷமாயிருக்கிறது. ‘ இந்த உலகத்தில் எக்கச்சக்கமான மக்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் எல்லோரையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. எவ்வளவு முடியும் என்று மட்டும் தெரிய வில்லை.” என மலைக்கவும் செய்கிறார்.

பொதுப்புத்தியில் உறைந்து போய்க் கிடக்கிற முன்முடிவுகளாகிய இருட்டில் ஒரோதா என்ற பெண் விசிறிக் கொண்டு நடக்கும் தீப்பந்தத்திலிருந்து தெறித்து விழுந்த பொறிகள் இந்தக் கதைகள் என்றாலும் கூட மிகையில்லை.

‘ பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் இருந்திருக்கலாம், ஆனால் ஆபத்துக் காலத்தில் அவளுடைய துணைக்கு வேறோர் ஆள் தான் வர வேண்டியிருந்தது. அது யாரென்று தெரிய புராணத்தை ஒரு தடவை முழுவதுமாக அலசி ஆராய்ந்து பாருங்கள்..’ என்று உரக்கச் சிரிக்கிற கிருஷ்ணாவின் குரல் இருட்டைக் கீறி ஒளிர்கிற ஒரு தீப்பொறி தானே? ( பாஞ்சாலி கதை )

’பந்து உருண்டையாக இருப்பது இஷ்டம் போல உருட்டி விளையாடத்தானே?’ என்கிற அம்மாவின் கேள்வி ( பந்து )

’இதயத்திற்குப் போகிற வழி சரீரத்தினூடாகத் தான்’ என்று அமைதியாகச் சிரித்துக் கொண்டே சொல்கிற கர்த்தரின் திருமேனியில் சாய்கிற சிஸ்டர் ஏஞ்சல்மேரியின் கண்கள் பொங்கி வழிகின்ற தருணம் ( ரத்தமும் மாமிசமும் )

‘ மகளே மறக்கக் கூடாது. மனிதன் என்றால் ஞாபகங்கள் இருக்க வேண்டும் ‘ என்று மகள் பெரியவளாகும் வரையில் சொல்லுகிற குட்டிச் சங்கரன் மாஸ்டர் கண்களை மூடியதும் இருட்டைப் பார்த்து கூவியலறி அழைக்கிற மகளின் அவலக்குரல் ( ஞாபகங்கள் இருக்கவேண்டும் )

இப்படியாக ‘ நம்பிவிட முடியாத மனிதர்களின் மனதில் அலையும் இருட்காற்றும் அதை வெல்லும் ஒளிக்காற்றுமாய் கிரேஸியின் கதைகள் மனதின் பரிசுத்தத்தை வேண்டுகின்றன. அவரின் சொற்கள் மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளைக் கழுவிக் கரைத்து வெளியே வாரிப் போடுகின்றன. நமது நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்கி விடவும் அவரது சொற்கள் படைத்தவையாயிருக்கின்றன!

கிரேஸி மலையாளத்தில் எழுதிய கதைகளை உதயசங்கர் தமிழில் மூலமொழியின் வாசனை மறையாமல் மொழியாக்கித் தந்திருக்கிறார்.

நட்சத்திரம் விழும் நேரத்தில்.. Gracy

மலையாளமொழிச்சிறுகதைகள்

கிரேஸி

தமிழில்- உதயசங்கர்

வெளியீடு; வாசல், 40-டி/3 முதல்தெரு, வசந்த நகர், மதுரை- 625003

தொலைபேசி-9842102133

நன்றி- தீராநதி அக்டோபர் 2012

Saturday 6 October 2012

அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருடன் தமுஎகச பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் சந்திப்பு

image

 

ஹிரோஷிமா, நாகசாகி தொடங்கி செர்னோபில்,புகுஷிமா வரை அணுசக்தியின் ஆபத்துகளுக்கு எதிராக மக்களும் விஞ்ஞானிகளும் குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் முதலாளித்துவ மைதாஸின் செவிட்டுக் காதுகளுக்குத் தான் மக்களின் குரல் கேட்கவேயில்லை. பேராசையின் தீ நாக்குகள் மனிதகுலத்தையே பூண்டோடு அழித்து விடும் என்று தெரிந்திருந்தும் புதிது புதிதாக அணு உலைகளை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நம்முடைய எதிர்காலச் சந்ததியினருக்கு அணுக்கதிர் நிறைந்த சுடுகாட்டையா கொடுக்கப் போகிறோம்?

முதலாளித்துவத்துக்கு மக்களும் பண்டங்களே. இந்த உலகமே அதற்கு லாலிபாப் மாதிரி தான். சப்பித் துப்பி விடும். வரப்போகிற வால்மார்ட்டுகளும், ஏற்கனவே வந்திறங்கியிருக்கிற பகாசுர பன்னாட்டுக் கம்பெனிகளும் உண்டு கொழுப்பதற்காக நம்முடைய வாழ்வாதாரத்தை அழிக்க யத்தனிக்கும் அரசு யந்திரங்கள். தடையில்லா மின்சாரம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு. தடையில்லா மின் தடை சொந்த நாட்டு மக்களுக்கு. மக்கள் பயன்பாட்டினால் தான் மின் தட்டுப்பாடு என்று முழங்கும் பிரச்சாரம். மக்களின் ஒரு பகுதியே இதற்கு பலியாகும் அவலம்.

ஒரு சில அரசியல்வாதிகளும் முதலாளிகளும் பல லட்சம்கோடிகளில் லஞ்சமோசடி செய்து நாட்டையே திவாலாக்கி விட்டு சவடால் பேசித் திரியும்போது, நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்துக்காக பதினாலாயிரம் கோடியை இழப்பதொன்றும் பெரிய விஷயமில்லை.

4-10-12 அன்று தமுஎகச பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜனுடன் இடிந்தகரைக்குச் சென்று அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரை சந்தித்து தமுஎகசவின் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார்.

அறவழியில் அணு உலையை எதிர்க்கும் கூடங்குள மக்களின் மீதான காவல்துறையின் ஒடுக்குமுறையைக் கண்டித்தும், அணு உலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக நிறைவேற்றும் வரை அணு உலைகளை இயக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், திருநெல்வேலியில் 13 -10-12 அன்று தமுஎகசவின். மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Thursday 4 October 2012

ரத்தமும் மாமிசமும்

 

மலையாளத்தில்- கிரேஸிGracy

தமிழில் – உதயசங்கர்

கர்த்தரிடம் அன்பு முற்றிப்போனதால் தான் குஞ்சுமேரி அவருடைய மனைவியானாள். சிறகுகள் இல்லையென்றாலும் அவள் சிஸ்டர் ஏஞ்சல் மேரியாகி விட்டாள். எல்லா இரவுகளிலும் கர்த்தர் சுவர்க்கத்திலிருந்து செம்மறியாட்டின் ரோமங்களைப் போல மிதக்கிற மேகங்களின் துணையோடு அவளுடைய உறக்கத்துக்குள் இறங்கி வந்தார். அவளுடைய இதயம் கர்த்தருடைய உதடுகளிலிருந்து உதிர் மணிகளைப் போலப் பொழிகின்ற வசனங்களைக் கொத்தியெடுத்துக் கொண்டு அதிகாலையின் பரிசுத்தத்தை நோக்கிப் பறந்து சென்றது.

படிப்பில் கெட்டிக்காரியானதால் சபை நடத்துகிற காலேஜில் ஆசிரியையானாள் சிஸ்டர் ஏஞ்சல்மேரி. டிபார்ட்மெண்டிற்குள் வலது காலை யெடுத்து வைத்து நுழைந்ததும் சிஸ்டர் ஏஞ்சல்மேரி அதிர்ந்து போய் நின்றாள்.

அங்கே கர்த்தர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இடது கால் விரல்களை ஊன்றி கைகளை லேசாய் விரித்துக் கொண்டு முன்னால் சாய்ந்து நின்ற சிஸ்டர் ஏஞ்சல்மேரி ஒரு அன்னப்பறவையை நினைவு படுத்தினாள். வெண்மையின் நிழல் கண்களில் குத்தியபோது கர்த்தர் தான் வாசித்துக் கொண்டிருந்த தடிமனான புத்தகத்திலிருந்து முகத்தை உயர்த்தினார். கர்த்தருடைய அமைதியான நீலக்கண்களிலும், கருத்த முந்திரிப்பழங்களைப் போல தோள்களை உரசிக் கொண்டு கிடக்கிற தலைமுடிச் சுருள்களிலும் சிஸ்டர் ஏஞ்சல்மேரியின் பார்வை ஆச்சரியத்துடன் பறந்து நடந்தது.

ஆர்வம் தாங்காமல் சிஸ்டர் ஏஞ்சல்மேரி முன்னால் சென்று அவள் கையில் எடுத்த கர்த்தருடைய கைகளில் ஆணித்துளைகளைத் தடவினாள். கர்த்தர் அமைதியான புன்னகையோடு சொன்னார்.

காலம் எல்லா முறிவுகளையும் ஆற்றி விடும்!

மாடப்புறாக்களைப் போன்ற மென்மையான இளம் சூடுள்ள அந்தக் கைகளில் ஆசையோடு முத்தமிட்டு கீழே வைத்த சிஸ்டர் ஏஞ்சல்மேரி பொங்கி வழிகிற கண்களைத் துடைத்தாள்.

அன்று இரவு சிஸ்டர் ஏஞ்சல்மேரி உறங்கவில்லை. கர்த்தர் ஆகாயத்திலிருந்து இறங்கி வரவுமில்லை.

அடுத்த நாள் மன உளைச்சலோடு சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய அறைக்குச் சென்றாள். கர்த்தருடைய மேலங்கியை உருவி ஒற்றை ரோமமும் இல்லாத நெஞ்சில் கருணையின் கனல் போல ஜொலிக்கிற திருஹிருதயத்தைத் தடவினாள். அப்போதும் கர்த்தர் அமைதியாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இதயத்துக்குப் போகிற வழி சரீரத்தினூடாகத்தான்.

சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய திருமேனியில் சாய்ந்தாள்.

Wednesday 3 October 2012

குட்டிப்பெண்ணும் காளான்களும்

1242886731968-girl child தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

 

 

இரண்டு குட்டிப் பெண்கள் கூடை நிறையக் காளான்களைப் பறித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.போகிற வழியில் அவர்கள் தண்டவாளங்களைக் கடக்க வேண்டியது இருந்தது. அவர்கள் ரயில்இஞ்சின் வெகு தூரத்தில் வந்து கொண்டிருந்ததாக நினைத்தனர். எனவே அவர்கள் தண்டவாளத்தை கடப்பதற்காக மேட்டின் மீது ஏறினர்.

திடீரென அவர்களுக்கு ரயில் சத்தம் கேட்டது. இருவரில் பெரியவள் திரும்பி ஓடிவந்து விட்டாள்.ஆனால் அதற்குள் சிறியவள் தண்டவாளங்களுக்கு நடுவில் போய் விட்டாள்.

பெரியவள் “திரும்பி ஓடி வராதே” என்று அவளுடைய தங்கையைப் பார்த்து அலறினாள்.

ஆனால் ரயில் வெகு அருகில் வந்து விட்டது. அந்த சத்தத்தில் அக்கா சொல்வதைச் சரியாகக் கேட்க முடியவில்லை. அவள் திரும்ப ஓடிவரச் சொல்வதாகவே தங்கை நினைத்தாள்.அதனால் திரும்பி தண்டவாளங்களைக் கடக்க முயலும் போது, தடுமாறினாள். அதில் அவள் சேகரித்திருந்த காளான்களெல்லாம் கீழே சிதறி விட்டது.அவசர அவசரமாக அவற்றைப் பொறுக்கிக் கூடையில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டிருந்தாள்.

இப்போது ரயில் ரொம்ப பக்கத்தில் வந்து விட்டது.ஓட்டுநர் எவ்வளவு வேகமாக விசில் அடிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக விசில் அடித்தார்.

பெரியவள் “காளான்களைக் கீழே போடு” என்று அலறினாள்.ஆனால் சிறியவள் என்ன நினைத்தாளென்றால் எல்லாவற்றையும் நன்றாகப் பொறுக்கச் சொல்லுகிறாள் என்று நினைத்தாள்.உடனே தண்டவாளங்களுக்கு நடுவில் தவழ்ந்து பொறுக்க ஆரம்பித்தாள்.

ரயில் ஓட்டுநரால் அவருடைய இஞ்சினை நிறுத்தமுடியவில்லை. இஞ்சின் விசிலை மட்டும் அவரால் முடிந்த மட்டும் பலமாக அடித்தார். ஆனால் இஞ்சின் அந்த சின்னப் பெண் மீது ஓடி நின்றது..

பெரியவள் அழுது அரற்றினாள். ரயிலிலிருந்த பயணிகள் சன்னல் வழியே எட்டிப்பார்த்தனர்.கார்டு

அந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன ஆயிற்றோ என்று பார்ப்பதற்கு ரயிலின் கடைசிக்கு ஓடிப் போனார். ரயில் தாண்டிய பிறகு அந்தச் சிறுபெண் தண்டவாளங்களுக்கு நடுவில் முகத்தை மூடிக் கொண்டு குப்புற படுத்துக் கொண்டிருந்தாள்.

ரயில் அவளைத்தாண்டிப் போன பிறகு தலையைத் தூக்கினாள்.முட்டி போட்டு மீதி காளான்களையும் பொறுக்கிக் கொண்டு அவளுடைய அக்காவிடம் ஓடினாள்.

Tuesday 2 October 2012

மந்திரமும் தந்திரமும்

மலையாளத்தில் –மாலி

தமிழில் – உதயசங்கர்

 

ஒரு அழகான ராஜகுமாரிக்கும் ஒரு அழகான ராஜகுமாரனுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்தனர்.ஆனால் கல்யாணம் நடக்கவில்லை.காரணம் யார் தெரியுமா? கெட்டவனான ஒரு மந்திரவாதி தான்.

ராஜகுமாரியை தான் கல்யாணம் முடிக்கவேண்டும்- அது தான் அந்த மந்திரவாதியின் ஆசை.அவன் ராஜகுமாரியின் அரண்மனைக்குச் சென்றான். பூந்தோட்டத்தில் ஒளிந்து கொண்டான். அங்கேயே பதுங்கியிருந்தான். ராஜகுமாரி பூப்பறிக்கத் தோட்டத்திற்கு வந்தாள். மந்திரவாதி சில மந்திரங்களை உச்சரித்து ராஜகுமாரியை பெண்நாயாக மாற்றினான்.பின்பு வேகமாக நடக்கத் தொடங்கினான். அந்த நாயும் மந்திரவாதியின் பின்னாலேயே போயிற்று. போகாமலிருக்க முடியாது. அத்தனை வலிமை இருந்தது அந்த மந்திரத்துக்கு.

ராஜகுமாரியைக் காணவில்லையா? ராஜகுமாரனுக்கு அளவு கடந்த துக்கம் உண்டானது. இனி என்ன செய்ய? ஒரே ஒரு வழியே இருக்கிறது. நல்லவனான ஒரு மந்திரவாதி இருந்தான். ராஜகுமாரன் அந்த நல்ல மந்திரவாதியைப் பார்த்து ராஜகுமாரி காணாமல் போனதைச் சொன்னான். நல்லமந்திரவாதி தன் மந்திரசக்தியைக் கொண்டு நடந்ததையெல்லாம் தெரிந்து கொண்டான்.

“ராஜகுமாரா! யார் கண்ணிற்கும் தெரியாமல் மறைந்திருக்கும் மந்திரம் எனக்குத் தெரியும். அதைப் போல பழைய உருவம் திரும்ப கிடைக்கவும் மந்திரம் தெரியும். ரெண்டையும் உனக்குச் சொல்லித் தாரேன்..மந்திரம் மட்டும் போதாது..ஒரு தந்திரமும் சொல்லித் தாரேன்..” என்று நல்லமந்திரவாதி சொன்னான்.

மந்திரமும் தந்திரமும் கிடைத்தவுடன் ராஜகுமாரனுக்கு சந்தோசமாகி விட்டது. அவன் நல்லமந்திரவாதியிடம் பயணம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். கெட்டமந்திரவாதியின் வீட்டைத் தேடிப் போனான். வெகுதூரத்தில் ஒரு மலை இருந்தது. அந்த மலையில் ஒரு குகை இருந்தது. அந்தக் குகையில் தான் கெட்ட மந்திரவாதியின் வீடு இருந்தது. ராஜகுமாரன் வெகுதூரம் பயணம் செய்தான்.நிறைய கஷ்டங்களைச் சந்தித்தான். கடைசியில் குகைக்கு அருகில் வந்து விட்டான்.மறையும் மந்திரத்தைச் சொல்லி மறைந்து குகைக்குள் நுழைந்து விட்டான்.

அது கெட்டமந்திரவாதிக்குத் தெரியாது. அவன் வேலை மும்முரத்திலிருந்தான். மறுநாள் காலையில் கல்யாணம்.நிறைய கூட்டாளிகளைக் கூப்பிட்டிருந்தான். பிரமாண்டமான விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.முகூர்த்தநேரம் வரும்போது தான் மந்திரவாதி மந்திரம் சொல்லி பெண்நாயை ராஜகுமாரியாக்குவான். பின்பு அவளைக் கலியாணம் செய்வான்.

ராஜகுமாரன் பெண்நாயைப் பார்த்தான். துயரத்தைச் சகிக்கமுடியவில்லை. எவ்வளவு கஷ்டம்? தன்னுடைய பிரியமான ராஜகுமாரி இந்த உருவத்திலா? ராஜகுமாரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

நல்லவேளை மந்திரவாதி வெளியே போனான். இதற்குத்தானே ராஜகுமாரன் காத்திருந்தது.ராஜகுமாரன் மந்திரவாதியின் அறைக்குள் நுழைந்தான். மேசை திறந்து மந்திரப் புத்தகத்தை எடுத்தான்.பக்கங்களைப் புரட்டி தலைப்புகளைப் பார்த்தான்.அதோ ஒரு தலைப்பு ’மனிதனை நாய்களாக மாற்றுகிற மந்திரம்’. ராஜகுமாரன் அந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து கொண்டான். காலையில் மந்திரமும் சொல்வான். தந்திரமும் செய்வான். அப்போது பார்க்கலாம் பொழுதுபோக்கு.

காலையில் என்ன ஆரவாரம்! நெருங்கிய நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் இஷ்டம் போல சாப்பிட்டார்கள். குடித்தார்கள்.பேசினார்கள். மொத்தத்தில் ஒரே கோலாகலமாக இருந்தது. கடைசியில் முகூர்த்தநேரம் வந்தது. கெட்டமந்திரவாதி மந்திரம் சொன்னான்.அந்தப் பெண்நாய் ராஜகுமாரியாக மாறியது.அப்போது ராஜகுமாரன் என்ன செய்தான் தெரியுமா? மந்திரம் சொல்லி மந்திரவாதியை ஆண்நாயாக்கி விட்டான்.

கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.இதற்கிடையில் ராஜகுமாரன் என்ன செய்தான் தெரியுமா? ராஜகுமாரியையும் மறையச் செய்தான். இருவரும் சேர்ந்து ஒரே ஓட்டம். ராஜகுமாரியின் அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.

ஆண்நாயான மந்திரவாதிக்கு ராஜகுமாரன் செய்த தந்திரம் புரிந்துவிட்டது. மனிதனாக மாறினால் தானே மந்திரம் சொல்லமுடியும்.நாயாக இருக்கிறானே! ராஜகுமாரனைக் கடித்துக் கொல்லவேண்டும்!. அந்த நாய் ராஜகுமாரியின் அரண்மனைக்கு ஓடியது.ரொம்ப தூரம் ஓடியதால் வாயில் நுரையும் கிதைப்பும் ஏற்பட்டது. வழியில் கூடியிருந்தவர்கள் அதைப் பார்த்து,”அதோ ஒரு பைத்தியக்காரநாய்..”என்று கூப்பாடு போட்டனர். எல்லோரும் சேர்ந்து அந்த நாயை அடித்துக் கொன்றனர்.

ராஜகுமாரன் மறைவிலிருந்து வெளியே வந்தான். ராஜகுமாரியையும் மறைவிலிருந்து வெளியே கொண்டு வந்தான். பின்பு அவர்கள் கல்யாணம் பிரமாதமாக நடந்தது.sher-christopher-1

Monday 1 October 2012

ஒருவேளை நீங்கள்..

உதயசங்கர்

015

ஒருபோதும் திறக்காத கதவொன்றை

தட்டிக் கொண்டிருப்பவராக

நீங்கள் இருந்தால்..

ஒருபோதும் மலராத மலரொன்றின்

முன்னால் மண்டியிட்டுப்

பிரார்த்திருப்பவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் வளையாத

வில்லொன்றை வளைத்து

அம்பு எய்ய யத்தனிப்பவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் புரியாத

வார்த்தையின் நிழலில்

அர்த்தத்தைத் தேடுபவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் முளைக்காத

மலட்டுவிதையின்

கனி தின்னும் கனவு காண்பவராக

நீங்கள் இருந்தால்

ஒருபோதும் கேளாக்காதுகளின்

வாசலில் உங்கள் குறைகளைச்

சொல்லி மன்றாடுபவராக

நீங்கள் இருந்தால்

ஒருவேளை நீங்கள்

இல்லாத கடவுளாக

ஏதுமறியாத பைத்தியமாக

அல்லது

இந்திய நாட்டின் குடிமகனாக

இருக்கலாம்.

நன்றி- வண்ணக்கதிர்