Saturday 27 September 2014

விளாடிமீர் நீ எங்கே இருக்கிறாய்?

உதயசங்கர்

DSC01926

இந்த ஆண்டும் சைபீரியாவில் குளிர் காலம் துவங்கும் அறிகுறிகள் தோன்றிவிட்டன. காத்யா என்ற செங்கால்நாரை அவளுடைய அம்மாவுக்காகக் காத்திருந்தாள். வெளியே இரை தேடப்போன அவளுடைய அம்மா இரண்டு நாட்களாகியும் இன்னும் திரும்பவில்லை. அவளுடைய பாய்ஃப்ரெண்டு விளாடிமீர் வேறு காத்யாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவன் அவளிடம், “ வா.. நாம் போகலாம் உன் அம்மா பின்னால் வந்து விடுவாள்..” என்று சொல்லிச் சமாதானப்படுத்துகிறான். ஆனால் காத்யாவுக்கு அவளுடைய அம்மாவை விட்டு விட்டு வர மனமில்லை. அவள் விளாடிமீரிடம் “ ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்.. இன்னும் கொஞ்ச நேரம்.பார்க்கலாம்.” என்று கெஞ்சுகிறாள். பனியின் அடர்த்தி கூடி காற்று கனத்து வருகிறது. இன்னும் தாமதித்தால் பனி அடர்ந்த காற்றில் பறக்க முடியாது. விளாடிமீர் காத்யாவிடம் உறுதியாகச் சொல்கிறான்.

“ காத்யா..இனி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கும் ஆபத்து.. உன் அம்மா பின்னால் வந்து சேர்ந்து கொள்வாள்.. நம்பு..”

ஆனால் காத்யாவுக்குப் புரிந்து விட்டது. இனி ஒருபோதும் அம்மா திரும்பி வரமாட்டாள். துக்கத்துடன் விளாடிமீரைப் பார்த்தாள். அந்தப் பார்வையிலிருந்து என்ன புரிந்ததோ விளாடிமீர் தன் சிறகுகளை விரித்து ஒரு உலுப்பு உலுப்பிவிட்டு காற்றில் முன்னேறத் தொடங்கினான். நீண்ட பெருமூச்சுடன் காத்யாவும் விளாடிமீரைப் பின் தொடர்ந்தாள். இனி நீண்ட நெடிய பயணம் தான். சில நாட்களுக்குப் பின் காத்யாவும் தற்காலிகமாகத் தன் துக்கத்தை மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஆண்டுக்கு முன்னால் போன திசை எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது. ஏதோ நேற்று போய்வந்த மாதிரி இருக்கிறதே. எத்தனை விதமான நிலங்கள். எத்தனை விதமான பறவைகள். எத்தனை விதமான தப்பவெப்ப நிலைகள்..அடடா..

எத்தனை நாட்கள் கழிந்தன என்று தெரியவில்லை. கனவில் பறப்பது போலவே இருந்தது காத்யாவுக்கு. தன்னுடன் பறந்து வரும் தன் உறவினர்களான செங்கால்நாரை கூட்டத்தாரைப் பார்த்தாள். அவர்கள் அனைவரும் ஒரு தியானநிலையில் ஒரே குறிக்கோளுடன் பறந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய இந்த பயணத்திட்டம் அவர்களுடைய இனத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடியது என்ற சிந்தனை எல்லோரிடமும் இருந்தது. ஒரே சீராக சிறகுகளைக் காற்றில் விரித்து மிதந்தபடி எப்போதாவது சிறகுகளை அசைத்து காற்றின் நுட்பத்தையும் வலிமையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பறத்தலின் வேகத்தையும், தன்மையையும் மாற்றிக் கொண்டு பறந்து கொண்டிருந்தார்கள்.

லேசான வெப்பக்காற்று வீசத்தொடங்கியது. இந்தியாவுக்குள் நுழைந்து விட்டோமென்று புரிந்தது. இது வரை சற்றும் முன்னும் பின்னுமாக பறந்து கொண்டிருந்த விளாடிமீர் இப்போது காத்யாவுடன் இணைந்து பறந்தான். அவ்வப்போது காத்யாவைக் காதலுடன் பார்த்து ” க்ர்ர்ர்க்க் ” என்று சிரித்தான். அவனுடைய காதலைப் புரிந்து கொண்ட விதமாக காத்யாவும் “ க்ர்ர்ர்க்க்” என்று பதில் சொன்னாள். தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி தென்கோடியை நோக்கிப் பறந்தனர். பார்க்கப் பார்க்க பழைய ஞாபகங்கள் அப்படியே பொங்கி வந்தன.

அவர்கள் போய்ச்சேர வேண்டிய இடம் ஒரு பெரிய குளம். தண்ணீர் கெத்து கெத்தென்று அலையடித்துக் கொண்டிருக்கும். கரையோரம் எங்கும் முள்மரங்கள் அடர்ந்து செறிந்திருக்கும். இதமான தப்பவெப்பம். நல்ல உயரமான முள் மரத்தைப் போனவுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நடாஷா பொறாமை பிடித்தவள். பேராசை கொண்டவள். தனக்கு மட்டும் தான் எல்லாம் வேண்டும் என்று நினைப்பாள். அவள் கண்படாமல் ஒதுங்கி ஒரு மரத்தில் கூடு கட்ட வேண்டும். விளாடிமீர் நல்ல ஆண்மகன். சிறந்த கூடு கட்ட உதவுவான். அந்தக் கூட்டில் நான் முட்டையிட்டு அதை அடை காப்பேன். எனக்குப் பசிக்கும்போது நான் இரை தேடப்போவேன். அப்போது விளாடிமீர் அடைகாப்பான். அவன் நல்ல தகப்பனாகவும் இருப்பான். நாங்கள் இருவரும் சேர்ந்து குஞ்சுகளை நன்றாக வளர்ப்போம். ஆம் பலசாலியாக. மறுபடியும் ஐயாயிரம் மைல் தூரம் போக வேண்டுமே. அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தக் குளத்தில் போதும் போதும் என்கிற அளவுக்கு மீன்கள் இருக்குமே. அங்கே இந்தப்பருவத்தில் வந்து சேர்கிற நூற்றுக்கணக்கான பறவைகளுக்கான மீன்களைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கும் அந்தக் குளம். எத்தனை தலைமுறைகளைப் பார்த்திருக்கும் அந்தக் குளம். எத்தனை ஆயிரம் பறவைகள் தங்கள் இணையோடு வந்து குஞ்சுகளோடு குடும்பமாகத் திரும்பிப் போவதைப் பார்த்து ஆசீர்வதித்திருக்கும் அந்தக் குளம். இதையெல்லாம் நினைத்துப் பார்த்த காத்யாவுக்குக் கண்ணீர் பொங்கியது.

அப்போது திடீரென குழப்பமான குரல்கள் கேட்டன. ஒரே புலப்பமும், கோபமும், அழுகையுமாய் பறவைகளின் குரல்கள் ஒலித்தன. ஒன்றையொன்று பிரித்துப் பார்க்க முடியாதபடி குரல்கள் கலந்து ஒரே கூப்பாடாய்க் கேட்டது. அருகில் நெருங்கிப் பார்த்த காத்யாவுக்கும், விளாடிமீருக்கும், அவர்களுடைய கூட்டத்தாருக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தலைமுறை தலைமுறையாய் சைபீரியாவிலிருந்து வந்து இறங்குகிற அள்ளியள்ளி மீன்களைத் தின்னத் தருகிற அந்தக் குளம் அங்கே இல்லை. அந்தக் குளத்தைச் சுற்றி காடாய் வளர்ந்த முள் மரங்களும் அங்கே இல்லை. ஏன் அப்படியெல்லாம் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லை.. அங்கே பதினைந்து தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு விரிந்து படர்ந்திருந்தது. அதன் நிழல் கூட கீழே விழவில்லை. காத்யாவுக்கு எதுவும் புரியவில்லை. அழுகை அழுகையாய் வந்தது. அவளுடைய கனவுகள் எல்லாம் சில கணங்களிலேயே மடிந்ததை நினைத்து கரைந்தாள்.

நூற்றுக்கணக்கான பறவைகள் அழுது கரைந்தபடி அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. அந்தப் பறவைகளின் அழுகுரலைக் கேட்டுப் பயந்து போன குடியிருப்பு வாசிகள் வனத்துறைக்குத் தகவல் சொன்னார்கள். வனத்துறையும் பொறுப்பாக வந்து இந்த நூற்றுக்கணக்கான பறவைகளை விரட்ட வழி தெரியாமல் பட்டாசு வெடித்தார்கள். கொடூரமான அந்தச் சத்தத்தினால் பயந்து அலறிய பறவைகள் திக்குத் தெரியாமல் பறந்தலைந்தன. அந்தக் களேபரத்தில் காத்யா விளாடிமீரைத் தொலைத்து விட்டாள். அவள் மட்டுமல்ல. இன்னும் ஏராளமானவர்கள் தங்கள் சொந்தங்களைத் தவற விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மாயாஜாலம் போல அந்தக் குளமும் முள்மரங்களும் மறுபடியும் தோன்றி விடாதா ?

இப்போது காத்யாவும் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். சைபீரியாவை அவள் மறந்து விட்டாள். அவளுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் என்றாவது விளாடிமீர் வருவான். வந்து அவளை சைபீரியாவுக்கு அழைத்துக் கொண்டு போவான் என்று காத்திருக்கிறாள் காத்யா.. இரவின் அமைதியில் அவள் அழைத்துக் கொண்டிருக்கிறாள். விளாடிமீர்..என் அன்பே…நீ எங்கே இருக்கிறாய்? விளாடிமீர்..!…. …நீ எங்கே இருக்கிறாய்? அவளுடைய ஈரமான குரல் ஈரமில்லாத அந்தக் காங்கிரீட் அடுக்குமாடிக்கட்டிடத்தில் மோதிக் கொண்டேயிருக்கிறது….இன்னமும்…

 

DSC00207

Wednesday 17 September 2014

நவீனபுத்தம்

உதயசங்கர்buddha1

ஒரு போதும் ஒரு வார்த்தையும்

உதிர்க்காமல் உறைந்திருப்பதற்கு

ஒரு வார்த்தையேனும் பேசுங்கள்

ஒரு போதும் ஒரு செயலும்

செய்யாது வாளாவிருப்பதை விட

ஏதையேனும் செய்யுங்கள்

ஒரு போதும் ஒரு கனவும்

காணாது உறங்குவதை விட

ஒரு கனவையேனும் காணுங்கள்

ஒரு போதும் ஒருவரையேனும்

காதலிக்காதிருப்பதை விட

ஒரு முறையேனும் காதலியுங்கள்

ஒரு போதும் கருணைநதியில்

கை நனையாதிருப்பதை விட

ஒரு முறையேனும் காருண்யம் செய்யுங்கள்

ஒரு போதும் ஒரு துளிஅன்பையும்

யார் மீதும் வைக்காதிருப்பதை விட

ஒரு முழக்கயிற்றில் தொங்கி விடுங்கள்

உலகம் பிழைக்கட்டும்.

Tuesday 16 September 2014

புதிய அகராதி

உதயசங்கர்

Mohan Das (98)

மண்டியா தேசத்து ராஜா ஒரு குண்டக்கமண்டக்க ஆள். அவர் நினைப்பது போலத்தான் மண்டியா தேசத்து மக்களும் நடக்க வேண்டும். பாவம் மக்கள். ஒரு நாள் மண்டியா தேசத்து மண்டு ராஜா மத்தியானம் தன் யானை வயிறு நிறைய பலகாரங்களும் பட்சணங்களும் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி ஆலைச் சங்கு போல பெரிய ஏப்பத்தை வெளியிட்டார். அந்த ஏப்பக்காற்று அவர் என்னென்ன பலகாரங்களைச் சாப்பிட்டார் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே சென்றது. பின்னர் ஒரு கவுளி வெத்திலையை ஆடு தழையை மென்று தள்ளுவதைப்போல அரைத்துத் தள்ளினார். அதன்பிறகு எப்போதும் அரண்மனை அதிர குறட்டை விட்டபடி தூங்குவார். சிலநேரம் தூங்கி மறுநாள் காலையில் எழுந்திரிப்பதும் நடக்கும். அதிலொன்றும் விசேஷமில்லை. ஆனால் காலையில் எழுந்து சாயந்திரம் எழுந்தது மாதிரியே நடந்து கொள்வார். அரண்மனையில் விளக்கேற்றச் சொல்வதும் காலை பத்து மணியை இரவு பத்து மணியென்று நினைத்து மறுபடியும் தூங்கப் போய் விடுவார். சிலசமயம் இப்படியே ஒரு வாரம் வரை கூட இரவும் பகலும் மண்டுராஜாவுக்கு மாறி விடும். அதனால் என்ன என்கிறீர்களா? அவருக்கு மாறி விட்டதென்றால் மண்டியா தேசத்துக்கே மாற வேண்டும். அதான் பிரச்னை. மண்டுராஜா ஏதாவதொரு நாள் ஏதாவதொரு காலப்பொருத்தத்தில் மறுபடியும் சரியான சுழற்சியில் வரும்வரை மண்டியா மக்களும் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்க வேண்டியதிருக்கும்.

இப்பேர்ப்பட்ட மண்டு ராஜாவைப் பார்க்க அரண்மனைக்கு ஒரு நாள் மத்தியானம் ஒரு செந்நாப்புலவர் வந்தார். அப்போது தான் ராஜா ஏப்பம் விட்டு விட்டு வெத்திலையை அரைத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். செந்நாப்புலவரோ எப்படியாவது மண்டுராஜாவிடம் தன் மொழிப்புலமையெல்லாம் காட்டி ஏராளமான வெகுமதிகள் வாங்கிச் செல்லலாம் என்று ஆசைப்பட்டார். அதனால் ராஜாவைப் பார்த்து,

“பானை வயிறோனே

யானை நடையழகா

அறிவிற் சிறந்த அமுதோனே

அழகிற் சிறந்த அழகனே

இப்படி ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார் புலவர். ராஜாவுக்கோ தூக்கம் வந்து விட்டது. அதோடு அவருடைய அழகைப் பற்றியும், அறிவைப் பற்றியும் அவருக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே செந்நாப்புலவர் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார் என்றும் கிண்டல் செய்கிறார் என்றும் நினைத்துக் கோபம் வந்தது. உடனே செந்நாப்புலவருக்கு ராஜாவைக் கேலி செய்ததற்காக நூறு கசையடி கொடுப்பதோடு இப்போது இருக்கிற மொழி அகராதியை மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்க வில்லையென்றால் அவருடைய தலையை சீவி விடும் படியும் ஆணையிட்டார்.

பாவம் செந்நாப்புலவர்! கெஞ்சிக் கதறி கசையடியிலிருந்து தப்பித்துக் கொண்டார். ஆனால் அகராதி எழுத வேண்டுமே. என்ன செய்ய… ஒரு முடிவு செய்தார். முட்டாள் என்றால் அறிவாளி என்று மாற்றினார். வருகிறேன் என்றால் வரமாட்டேன் என்று மாற்றினார். இப்படி எல்லாவற்றையும் நேரெதிராக மாற்றி எழுதி ராஜா கையில் கொடுத்து விட்டு மண்டியா தேசத்தை விட்டு ஓடியே போய் விட்டார். பொழுது போகாமல் இருந்த ராஜாவுக்கு இந்த அகராதி ரெம்பப் பிடித்துப் போய் விட்டது. உடனே நாட்டு மக்களுக்கு இந்த அகராதிப்படியே இனி பேசவேண்டும். எழுதவேண்டும் என்று ஆணையிட்டார். மன்னர் ஆணையாச்சே மீற முடியுமா? எல்லோரும் பள்ளிக்கூடம், வீடு, கடை, சாலை, எல்லாவற்றிலும் புதிய அகராதிப்படியே எல்லாம் மாற்றப்பட்டது. எப்படி?

வா என்று கூப்பிட்டால் போய் விடவேண்டும். போ என்று சொன்னால் வர வேண்டும். அதே போல தா என்றால் தரக்கூடாது. தராதே என்றால் தர வேண்டும். வேண்டும் என்றால் வேண்டாம் என்று அர்த்தம். வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தம். மக்கள் குழம்பிப் போனார்கள். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வாங்க என்று சொன்னால் அவர்கள் கோபித்துக் கொண்டு போய் விட்டார்கள். கடைகளில் பொருள் வேண்டும் என்று சொன்னால் வேண்டாம் என்று நினைத்து தரவில்லை. வேண்டாம் என்று சொன்னதையே தந்தார்கள். ராஜாவுக்கு ஜாலியாக இருந்தது. தினசரி அரண்மனை வேலையாட்களிடம் இந்தப் புதிய அகராதி விளையாட்டை விளையாடினார். அவர்கள் குழம்பிப் போய் ராஜா அழைத்தால் போவதா இல்லையா அழைக்காமலிருந்தால் அவரிடம் போய் நிற்க வேண்டுமா என்று புரியாமல் ராஜாவையேச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நாடே குழம்பிப் போயிருந்தது.

இந்த நேரத்தில் அருகிலிருந்த பிங்கிஸ்தான் நாட்டு ராஜா மண்டியா தேசத்தின் மீது போர் தொடுக்கப்போவதாக ஓலை அனுப்பியிருந்தார். மண்டியா தேசத்து ராஜா பயந்தாங்குளி அதுவும் போர் என்றால் அவ்வளவு தான். உடனே மந்திரியிடம் பதில் அனுப்பச் சொன்னார். மந்திரியும் பிங்கிஸ்தான் நாட்டுக்கு மண்டியா தேசத்து புதிய அகராதியின் படி ஓலை அனுப்பினார்.

“ நாங்கள் பலசாலி. போருக்குத் தயாராக இருக்கிறோம். உங்கள் நாட்டுக்குக் கப்பம் கட்ட மாட்டோம். நீ ஒரு கோழை. போருக்கு வா..”

அவர் எழுதிய ஓலையைப் படித்த பிங்கிஸ்தான் ராஜாவுக்கு கோபம் தலைக்கேறியது. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? மண்டியா தேசம் பிங்கிஸ்தானிடம் சரணடைந்தது. அப்போது தான் தெரிந்தது ஓலையின் புதிய மொழி அகராதி விவகாரம். மொழிபெயர்ப்பாளர் சொன்னார்.

“ நாங்கள் பலவீனமானவர்கள். போருக்குத்தயாராக இல்லை. உங்கள் நாட்டுக்குக் கப்பம் கட்டி விடுகிறோம். நீ ஒரு பலசாலி. போருக்கு வர வேண்டாம்..”

பிங்கிஸ்தான் ராஜாவும் அந்த நாட்டு மக்களும் சிரிக்கிற சத்தம் கேட்கிறதா?

Monday 15 September 2014

ஜங்க் ஃபுட் தேசம்

உதயசங்கர்

child-obesity

மண்டியா தேசத்து ராஜா அரசவையில் உள்நாட்டு முதலாளிகளிடமும், வெளிநாட்டு முதலாளிகளிடமும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார். எல்லா முதலாளிகளும் தங்களுக்குக் கிடைக்கும் லாபம் போதவில்லை. இன்னும் அதிகமான லாபம் கிடைக்க மண்டியாவில் சில சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராஜாவைச் சந்திக்க வந்திருந்தார்கள். இதெல்லாம் மந்திரிகளின் ஏற்பாடுதான். ஏனெனில் மந்திரிகளே வேறு ஆட்களின் பெயர்களில் நிறைய தொழிற்சாலைகளையும், கம்பெனிகளையும் நடத்தி வந்தார்கள். ராஜாவுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. முதலாளிகளின் வேண்டுகோளை ஏற்று பொருட்களின் விலையை ஏற்றுவதற்கு சம்மதித்தார். அதற்கான சட்டங்களில் கையெழுத்து போடப் போகும்போது அரண்மனைக்கு வெளியே கூச்சல், குழப்பம் கேட்டது.

ராஜா எழுந்து அரண்மனை உப்பரிகைக்குச் சென்று பார்த்தார். கூட்டம் கூட்டமாக விவசாயிகள் அரண்மனையின் வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். உடனே மந்திரியிடம் அவர்களை உள்ளே அனுப்பும்படி ஆணையிட்டார். அவ்வளவு பேரையும் உள்ளே அனுப்பினால் தாங்காது என்று நினைத்த மந்திரி ஒரு இருபது பேரை மட்டும் உள்ளே அழைத்து வர சேவகர்களுக்கு ஆணையிட்டார் மந்திரி. இருபது விவசாயிகள் ராஜாவைப் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ராஜா அவர்களிடம்

“ உங்களுக்கு என்ன பிரச்னை? ஏன் எல்லோரும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்.. மாதம் மும்மாரி பெய்கிறதல்லவா.. மூன்று வேளையும் அறுசுவை உணவு கிடைக்கிறதல்லவா?..”

என்று அப்பாவியாய் கேட்டார். அதற்கு அந்த விவசாயிகள் “ ராஜாதிராஜாவே.. மழை பெய்து இரண்டு வருடங்களாகி விட்டது… விவசாயம் பொய்த்து விட்டது..விவசாய நிலங்கள் அழிந்து வீடுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஏதோ கொஞ்சநஞ்சம் விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது… அதுவும் அழிந்து விடும் போல இருக்கிறது…நாங்கள் வாழ வழியின்றி தவிக்கிறோம்..”

என்று கண்ணீர் விட்டனர். அதைக் கேட்ட ராஜா மந்திரியைப் பார்த்தார். மந்திரி தலையைக் குனிந்து கொண்டார். ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் ராஜா மந்திரியிடம் மாதம் மும்மாரி பெய்கிறதா என்று கேட்கும்போது அவர் ஆமாம் ராஜாவே என்று பதில் சொல்லுவார். ராஜா விவசாயிகளை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே வந்தார்.

வெளிநாட்டு முதலாளிகளிடம் “ உங்கள் லாபம் அதிகரிக்க இன்னொரு புது வழி இருக்கிறது. கொஞ்சநஞ்சம் நடந்து கொண்டிருக்கிற விவசாயத்தையும் நிறுத்தி விடச் சொல்கிறேன்.. ஆனால் உங்கள் கம்பெனியிலிருந்து விலை மலிவாக என் நாட்டு மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியுமா…”

என்று கேட்டார். உடனே அந்த முதலாளிகள் ஈயென்று பல்லைக் காட்டிய படியே, “ அப்படியே ராஜா.. உங்களுக்கு இலவசமாக ஆண்டு முழுவதும் உணவு கொடுத்து விடுகிறோம்.. ஏதோ ஏழை நாடுகளுக்கு எங்களால் இயன்ற சேவை….” என்று சொன்னார்கள். ராஜாவுக்கும் மகிழ்ச்சி. உடனே நாடெங்கும் முரசறையச் சொன்னார்.

ஐந்து பைசாவுக்கு டர்கரும், பத்து பைசாவுக்கு கூட்சாவும், ஏழு பைசாவுக்கு பாண்ட்விச்சும் மூன்று பைசாவுக்கு காக்கா, டூப்சி, குளிர்பானங்களும் இருபத்திநாலு மணி நேரமும் வீட்டுக்கு வீடு கொண்டு வந்து கொடுக்கப்படும். வீட்டிலிருந்த படியே கூப்பிடுவதற்கு அல்லைபேசி இலவசமாகத் தரப்படும். ஆனால் அதிலிருந்து அழைக்கப்படும் ஒவ்வொரு அழைப்புக்கும் ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். உணவுப்பொருட்கள் பற்றிய விளம்பரங்களைப் பார்ப்பதற்கு வீட்டுக்கு வீடு விலையில்லா தொல்லைக்காட்சிப் பெட்டியொன்று வழங்கப்படும். ஆனால் அதில் விளம்பரங்களைத் தவிர வேறு எதுவும் ஒளிபரப்பாகாது. அப்படி நிகழ்ச்சிகள் இல்லாத சமயத்தில் தொல்லைக்காட்சிப் பெட்டியின் திரையில் கூட்சா தின்ற படி இருக்கும் ராஜாவின் அகன்ற முகம் மட்டுமே தெரியும். அதைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

இப்படியான அறிவிப்புகளை வெளிநாட்டு கம்பெனிகள் செய்ததைப்பார்த்து ராஜாவே மகிழ்ந்து போனார். இப்போது மக்கள் மூன்று வேளையும் கூட்சா, டர்கர், பாண்ட்விச், காக்கா, டூப்சி, குருளைக்கிழங்கு சிப்ஸ், டப்பைக்கிழங்கு ஃபிங்கர்சிப்ஸ், என்று விதவிதமாகச் சாப்பிட்டுக் கொண்டு வீட்டிலேயே கிடந்தனர். விளம்பரங்கள் புதிது புதிதாக வந்தன. விளம்பரங்களில் மண்டியா தேசத்து மக்களின் மனங்கவர்ந்த சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் நடித்தனர். அவர்கள் சாப்பிடுவதனாலேயே மக்களும் அதைச் சாப்பிட்டனர். வியாபாரம் பெருகியது.

ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நம்முடைய பாரம்பரிய உணவுமுறைகளை மாற்றக்கூடாது. வெளிநாட்டு உணவுப்பொருட்களால் புதிய நோய்கள் உருவாகும் என்று மன்றாடினர். ஆனால் ராஜா கேட்கவில்லை. மந்திரியும் கேட்கவில்லை.

மண்டியா தேசத்தில் ஜங்க்ஃபுட் வியாபாரம் கொழித்து நடப்பதைக் கண்ட மற்ற வெளிநாட்டு முதலாளிகளும் இங்கே கடை விரித்தனர். ஒருத்தருக்கொருத்தர் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைத்தனர். ராஜாவுக்கும் மக்களுக்கும் கொண்டாட்டம். ஆனால் நாட்டில் விவசாயம் இல்லை. ஒரு உணவுப்பொருள் கூட உற்பத்தி ஆகவில்லை. நாளாக நாளாக அரசாங்கத்தின் கஜானாவும், மக்களின் கைப்பணமும் கரைந்தது. சரியாக அந்த நேரத்தில் எல்லாவெளிநாட்டுக் கம்பெனிகளும் தங்களுடைய உணவுப்பொருட்களுக்கு விலையை ஏற்றி விட்டனர். மக்களால் வாங்க முடியவில்லை.

அதோடு இந்த கூட்சாவையும், டர்கரையும், பாண்ட்விச்சையும், காக்காவையும், டூப்சியையும் சாப்பிட்டு எல்லோரும் குண்ண்ட்ட்டாகி விட்டனர். சதை மலைகளைப் போல அசைந்து கொண்டிருந்தனர். உடல் மெலிய வெளிநாட்டு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. அப்போது மண்டியாவின் பாரம்பரிய மருத்துவர் ஒருவர் எல்லோரும் மெலிவதற்கான மருந்துகளைச் சூத்திரமாக எழுதி வைத்திருக்கிறார் என்று ஒரு ரகசியப்பத்திரிகையில் செய்தி வெளிவந்தது. உடனே அந்த செய்தி மக்களிடம் பரவியது. பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடுங்கள். உணவே மருந்து மருந்தே உணவு இதுவே மந்திரம்.மக்கள் இதைப் படித்தார்கள். என்றாலும்  மண்டியா நாட்டுக்குச் சொந்தமான, பாரம்பரியஉணவுப்பொருட்கள் என்னவென்றே எல்லோருக்கும் மறந்து போனது. அந்த கூட்சா, டர்கர், பாண்ட்விச், காக்கா, டூப்சி, போன்ற உணவுப்பொருட்களுக்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள். அதைச்சாப்பிடாமல் இருக்கமுடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

உங்கள் நாட்டில் அப்படியெல்லாம் இல்லை அல்லவா? அதற்கப்புறம் அந்த மண்டியா நாட்டில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா.. அந்த ஜங்க் ஃபுட் தேசம் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமையாகி விட்டது. அந்த நாட்டு தொல்பொருள்ஆய்வாளர்கள் மண்டியா நாட்டு பாரம்பரியமான உழவுத்தொழில் பற்றியும், உணவுப்பொருட்கள் பற்றியும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்…

Sunday 14 September 2014

நோயும் ஆரோக்கியமும் - ஒரு உளவியல் மற்றும் தத்துவப்பார்வை

 

உதயசங்கர்

abstract-landscape-paintings-common-thread 

நோய் என்பது ஒரு வெளிப்பாடு, ஒரு இருத்தல் நிலை, ( state of being ) ஒரு குறிப்பிட்ட நெருக்கடியான சூழ்நிலையில் உடலும் மனமும் மேற்கொள்ளும் செயல். அந்த வெளிப்பாடு அல்லது செயலின் மூலமாகவே உயிரைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். உயிர் வாழ்வததொன்றே உயிரின் உச்சபட்ச லட்சியம். அந்த லட்சியத்துக்காக புறவயமாகவும், அகவயமாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது உயிரியக்கம். அந்த மாற்றங்களையே நாம் பொதுவாக நோய் என்கிறோம் இந்த மாற்றங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அகவயமான, புறவயமான நெருக்கடிகள் ஒட்டு மொத்த உயிரியக்கத்தில் நிரந்தரமாக ஏற்படுத்தும் மாற்றங்கள். ( chronic ) இரண்டாவது அவ்வப்போது தற்காலிகமாக புறவயமாக ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க உடலோ மனமோ மேற்கொள்ளும் செயல்கள். ( acute ). மூன்றாவது விபத்து, அறுவைச்சிகிச்சை, போன்ற வெளிப்படையான தாக்குதல்களுக்கு ( mechanical injuries ). ஈடு கொடுத்து உயிரியக்கம் ஏற்படுத்தும் மாற்றங்கள்.

நோய் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவதாக ஒட்டுமொத்த உயிரியக்கத்தில் ஏற்படும் பாதிப்புகள், அடுத்ததாக குறிப்பிட்ட இடங்களில், உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அல்லது நெருக்கடியில் உயிரியக்கம் உயிர் மீட்சிக்காக எடுக்கும் நடவடிக்கையினால் மட்டுமே அந்த உயிர் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். எளிய உதாரணமாக தூசி நிறைந்த காற்றைச் சுவாசிக்கும் போது உயிரியக்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் நுரையீரல்களைப் பாதுகாக்கவும் எடுக்கும் நடவடிக்கையான தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், போன்றவை அந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை. அது நோய் அல்ல. அந்தச் சூழ்நிலையில் உயிரியக்கம் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கை. இந்தச் செயலுக்கு மருந்துகளோ, இதைச் சரி செய்ய வேண்டிய அவசியமோ கிடையாது.

ஒரு குறிப்பிட்ட நெருக்கடிநிலையில் உயிரியக்கம் அந்த நெருக்கடி நிலையிலும், அந்த நெருக்கடிநிலையிலிருந்து மீண்ட பிறகும் உயிர் வாழ வேண்டியுள்ளது. இதற்காக அந்த நெருக்கடிநிலைக்கு ஏற்றவாறு ஒரு தனித்தன்மையுள்ள நிலையை உயிரியக்கம் மேற்கொள்கிறது. அத்தகைய நிலைதான் நோய் நிலையாக ஆகிறது. குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்றவாறு இணங்கிப் போவதற்காக உயிரோடிருப்பதைத் தொடர்ந்து இயக்கும் உயிர் இயக்கம் சார்ந்த எதிர்வினையே நோய். அதாவது நமது உயிரியக்க அமைப்பினால் மேற்கொள்ளப்படும் தனித்தன்மையுள்ள நிலை.

நோய் என்பது நீக்கப்பட வேண்டியதல்ல. மாற்றப்படவேண்டிய ஒன்று.

மேலே குறிப்பிட்ட நெருக்கடியோ, சூழ்நிலையோ, இல்லாத போதும் அப்படிப்பட்ட சூழ்நிலை இருப்பதான பாவனையில் உயிரியக்கம் எடுக்கும் அதே நடவடிக்கைகள் அதாவது தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், போன்றவை தான் சரி செய்யப்பட வேண்டியவை. இதையே நோய் என்கிறோம். கடுமையான நெருக்கடிகளிலிருந்தும், சூழ்நிலைகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள உயிர் மேற்கொள்ளும் நடவடிக்கையே நோய் என்று புரிந்து கொணடோமானால் இந்த நடவடிக்கைகள் உயிரியக்கத்தில் சில பதிவுகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவுகள் மீண்டும் இதே போன்ற சூழ்நிலை அல்லது நெருக்கடிகள் வரும்போது மட்டுமே மீண்டும் இதே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் உயிரியக்கத்தில் ஏற்பட்ட நலிவு காரணமாக இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதாவது இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் தான் நலமாக இருக்கமுடியும் என்ற தவறான பதிவு காரணமாக உண்மையில் நெருக்கடியான சூழ்நிலையில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இப்போது அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை இல்லாத போதும் தேவையான நடவடிக்கை என்ற பாவனை ஏற்பட்டு நிகழ்கிறது. அதன் மூலமே உயிர் தன்னை மீட்டுக் கொண்டதாகக் கற்பிதம் செய்கிறது. இந்தக் கற்பிதமே நோய்.

துரத்திவரும் அல்சேஷன் நாயிடமிருந்து தப்பிக்க ஓடுவது என்பது தான் அந்தச் சூழ்நிலையில் உயிரியக்கம் செய்ய வேண்டிய பொருத்தமான எதிர்ச்செயல். ஆனால் எந்த நாயும் துரத்தாத போதும் அல்லது குட்டி நாய் துரத்தும் போதும் தலை தெறிக்க ஓடும் பொருத்தமற்ற எதிர்ச்செயல் தான் நோய்நிலை. ஒரு முறை ஏற்பட்ட அநுபவமானது ( நெருக்கடிநிலை ) தங்களுடைய வேர்களின் மூலம் சில அனிச்சையான செயல்களை உருவாக்கி விடுகிறது. அந்த அநுபவத்தின் மூலம் ஏற்பட்ட நோய்நிலை தன் வேர்களை உயிரியக்கத்தில் விட்டுச் செல்வதன் மூலம் எத்தனை முறை பூட்டிய வீட்டின் பூட்டை இழுத்துப் பார்த்தாலும் மனம் சமாதனமடைவதில்லை என்பது மட்டுமில்லாமல் அனிச்சைச் செயலாக மாறி விடுவதும் உண்டு. பூட்டை இழுத்துப் பார்க்கும் நடவடிக்கை திருடர்களைப் பற்றிய நியாயமான பயத்தினால் அந்தச் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. ஆனால் எந்த திருட்டுப் பயமும் இல்லாத போதும் பூட்டை இழுத்துப் பார்க்கும் பொருத்தமற்ற எதிர்ச்செயல் நோயாக மாறி விடுகிறது. அப்படி அனிச்சைச் செயலைச் செய்வதன் மூலமே அவர் தான் நலமாக இருப்பதான உணர்வைத் தருகிறது. ஆனால் தொடர்ச்சியான பொருத்தமற்ற எதிர்ச்செயல்கள் நோயின் ஆணிவேராக உருப்பெறுகின்றது. இந்த நோயின் வேர்கள் உயிரியக்கத்தில் வேர் கொண்டு விடுவதால் நாளடைவில் இதன் வளர்ச்சிப்போக்கில் விதை செடியாகி மரமாகி பூத்து காய்த்து கனிந்து விடுவதைப் போல இந்த நோய்நிலையும் பரம்பரை நோயாக மாறுகிறது.

நோயிலிருந்து மீட்டல்

ஒரு நெருக்கடிநிலைக்கு பொருத்தமற்ற எதிர்ச்செயலைச் செய்வதன் மூலம் நோய்நிலை உருவாகிறது. அதாவது அல்சேஷன் நாய்க்கும் குட்டி நாய்க்கும் உள்ள வித்தியாசத்தை உணரமுடியாமல் அல்சேஷன் நாய்க்கு எடுத்த எதிர்ச்செயலையே குட்டி நாய்க்கும் எடுக்கிறது உயிரியக்கம். இந்த நோய்நிலையைக் குணப்படுத்த பொருத்தமற்ற எதிர்ச்செயலை மாற்ற வேண்டும். நீக்கக்கூடாது. அதாவது பின்னால் துரத்திவருவது அல்சேஷன் அல்ல. அது ஒரு குட்டி நாய். அல்சேஷன் அளவுக்கு பயங்கரமானதோ, ஆபத்தானதோ இல்லை. அதற்கு தலைதெறிக்க ஓடும் எதிர்ச்செயல் தேவையற்றது. அல்சேஷனைக் கண்டு ஓடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று உயிரியக்கம் உணரவைத்தலே நோயிலிருந்து மீட்டல் ஆகும். அப்படி உணரும்போது உயிரியக்கம் பொருத்தமான எதிர்ச்செயலை பொருத்தமான நெருக்கடிநிலை அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கும்.

ஆரோக்கியம்

இதற்கு மாறாக ஆரோக்கியம் அந்தக் கணத்தில், அந்தக் கணத்தின் உயிர்த்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்ற மாதிரி ( கூடுதலாகவோ குறைவாகவோ அல்லாமல் ) எதிர்வினை புரிவதும், எதிர்கொள்வதும், சூழ்நிலையின் பரிமாணத்துக்கேற்ப துடிதுடிப்புடன் செயல்படுவதும், நெருக்கடியின் தன்மைக்கேற்ப உயிரியக்கம் பொருத்தமான எதிர்ச்செயல்கள் புரிவதும் இயற்கைவிதிகளுக்கேற்ப உயிர் தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் நிகழ்கிறது. சரியான சூழ்நிலையில் வளர்ந்து வரும் செடி பொருத்தமான எதிர்ச்செயல்கள் புரிவதன் மூலம் சரியான சமயத்தில் சரியான காலத்தில் பூக்கிறது. அந்தப் பூக்கள் மணம் வீசி அனைவருக்கும் மகிழ்வூட்டுகிறது. ஆரோக்கியம் ஒன்றே எந்தத் தடையுமின்றி தன்னை முழுமையாகத் அர்ப்பணிக்கத் தூண்டுவது. எல்லா நரம்புகளும் முறுக்கேற்றப்பட்ட, வாசிப்பதற்குத் தயாராக உள்ள வீணை போன்றது ஆரோக்கியம். அதில் எல்லாஸ்வரங்களும், எல்லாராகங்களும் அலைகடலென பொங்கி வரும். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. எந்தத் தயக்கமோ, பயமோ, பிரமையோ, பலகீனமோ கிடையாது. இசைவெள்ளமென பாய்ந்து பரவத் தயாராக இருக்கும். ஆனால் ஏதேனும் ஒரு நரம்பு பலகீனமாக இருந்தாலோ, அறுந்து போயிருந்தாலோ, அந்த வீணையால் முழுமையான, பரிபூரணமான இசையைத் தர முடியாது. என்ன முயற்சி செய்தாலும் இசை ஊனமாகவே தான் பிறக்கும்.

எனவே ஆரோக்கியம் என்பது ஐ யாம் ஓ.கே. யூ ஆர் ஓகே. மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அவர்கள் அறிவாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே உற்பத்தித்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே சமூகமாக வாழவும் அந்தச் சமூகத்தில் ஒற்றுமையாக வாழவும் விழைகிறார்கள்.மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அமைதியாக வாழவும், படைப்பூக்கம் மிக்கவர்களாக வாழவும் தயாராகிறார்கள். படைப்பூக்கம் மிக்கவர்களே சமூகத்தில் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவச் செய்கிறார்கள்.

ஆரோக்கியமும் சிலபல முன்நிபந்தனைகள் கொண்டது. ஒரு தனிமனிதனோ, மனிதக்கூட்டமோ ஆரோக்கியமாக இருக்க அவர்களுடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மட்டும் காரணிகளாக இருக்க முடியாது. அவர்கள் வாழும் சமூகம், ஏற்றதாழ்வுகளில்லாத, சமத்துவமான, எல்லோருக்கும் இடமளிக்கிற, எல்லோரையும் அங்கீகரிக்கிற, எல்லோருக்கும் சமவாய்ப்பு தருகிற, போட்டி,பொறாமைகள் இல்லாத, பள்ளம் மேடில்லாத, நீதியான, அறவுனர்ச்சிமிக்க சமுகமாக இருக்கும்போதே சமூகம் முழுமைக்குமான உண்மையான ஆரோக்கியம் சாத்தியம். அதுவரை ஆரோக்கியம் என்பது தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் பெரும்போராட்டமே.

Camera360_2014_1_12_113310

Thursday 4 September 2014

யாரும் யாரும்

உதயசங்கர்

unspeakable-grief-of-knowing

யாரும் காணாத ஒரு கனவில்

யாரும் கேட்காத ஒரு இசை

யாரும் சொல்லாத ஒரு சொல்லில்

யாரும் படைக்காத ஒரு படைப்பு

யாரும் உண்ணாத ஒரு விருந்தில்

யாரும் தின்னாத ஒரு பண்டம்

யாரும் நுகராத ஒரு மணமுள்ள மலரில்

யாரும் காணாத ஒரு வண்டு

யாரும் செய்யாத ஒரு காதலில்

யாரும் தொடாத ஒரு ஸ்பரிசம்

யாரும் பார்க்காத ஒரு காலத்துகளில்

யாரும் மரணிக்காத ஒரு மரணம்

யாரும் இல்லாத பெருவெளியில்

யாரும் யாருமற்ற நான்.

DSC00088

Wednesday 3 September 2014

பதட்டநோயும் மானுட சமூகமும்

 

உதயசங்கர்

மனிதகுலம் தோன்றிய காலந்தொட்டு காலங்காலமாக நோய்களினாலும், இனக்குழுச் சண்டைகளினாலும், இயற்கைப்பேரிடர்களினாலும், இறந்தவர்களை விட கடந்த நூற்றாண்டில் இறந்தவர்கள் அதிகம். கடந்த நூற்றாண்டில் தொடங்கிய அந்தத் துயரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. கடந்த நூற்றாண்டில் வளர்ந்து வந்த முதலாளித்துவ நாடுகள் தங்களது வியாபாரச்சந்தையை விரிவுபடுத்துவதற்காக நாடுகளைப் பிடிக்க போர்களை நடத்தினர். முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தனர். அப்போதிருந்து இப்போது வரை உலகமுழுவதும் மக்கள் நிரந்தரமான அச்சத்திலேயே வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இனம், மொழி, மதம், சாதி, பிரதேசம், என என்னென்ன வழிகளில் எல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்த முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் பிரிவினைகளை ஏற்படுத்தி வாழ்வை நிச்சயமின்மையின் கொடுங்கரங்களில் கொடுத்து விட்டிருக்கின்றனர். ஒவ்வொரு பெருந்துயரிலிருந்தும் மீண்டு மறுபடியும் இன்னொரு பெருந்துயரில் தங்கள் இன்னுயிரை விடுகின்றனர் மக்கள். சுழன்றடிக்கும் சுனாமி அலைகள் போல தொடர்ந்து நிரந்தரமான பயத்திலும், துன்பத்திலும் தள்ளப்பட்டுள்ள மக்கள் எப்போதும் பதட்டத்திலேயே இருக்கும்படி வைக்கப்பட்டுள்ளார்கள்.

 

பதட்டநோயின் அறிகுறிகள்

பதட்டநோய் ஒரு வித மனதில் ஒருவித இறுக்கத்தை உருவாக்குகிறது. அதோடு ஒரு முட்டுச்சந்துக்குள் மாட்டிய உணர்வு, திசை தெரியாத வெளியில் தனியே இருப்பதான உணர்வு, உயிர்பயம், அடிவயிற்றில் வலி, மூச்சுத்திணறல், படபடப்பு, நெஞ்சிலோ அடிவயிற்றிலோ பாரம், எப்போதும் பய உணர்வு, அழுத்தும் கவலைகள், எல்லாவிதமான பயங்கள் ( phobias ) அசுத்தத்தின் மீதான ஒவ்வாமையுணர்வு, என்று பலவிதமான அறிகுறிகள் இருக்கலாம். ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.

சிக்மண்ட் ஃபிராய்ட் எல்லாவிதமான உளவியல் நோய்களுக்கும் பதட்டநோயே காரணம் என்று சொல்கிறார். பதட்டநோய் நாம் நினைப்பதை விட மிக நுட்பமாக, மிக வலிமையாக நமது ஆழ்மனதில் நுழைந்து நம்முடைய உடல் நிலைகளிலும், உளவியலிலும் பெரும் மாற்றங்களை உருவாக்க வல்லது. பதட்டநோயின் அறிகுறிகளென சொல்லப்பட்டிருப்பதை விட எண்ணிலடங்கா அவதாரங்களை எடுக்கக்கூடியது.

 

பதட்டநோயின் பரிணாமம்

வரக்கூடிய ஆபத்தை முன்னுணரும் மூளையின் எதிர்வினையே பதட்டநோய்வேராக இருந்திருக்க முடியும்.. பாலூட்டிகளின் மாறிக் கொண்டேயிருக்கும் மூளை வளர்ச்சியின் விளைவாகவும், அச்சுறுத்தல் அகற்றப்பட்ட பின்பும் ஞாபகச்சில்லுகளில் பதிந்து விட்ட அநுபவச்சிற்பங்களாகவும் பதட்டநோய் இருக்கிறது. பதட்டநோய் உயர்பாலூட்டி இனங்களில் பரிணாமவளர்ச்சி அடைவதற்கு முன்பே புதிய ( நியோ ) - பாலூட்டிகளின் மூளையிலே பதிந்திருக்கிறது. புதிய ( நியோ ) பாலூட்டிகளே பகுத்தறிவையும், முடிவெடுக்கும் குணாதிசயத்தையும் கொண்டிருந்தவை. அதனாலேயே மனிதமூளை தொழில்நுட்பம், சட்டதிட்டம், போன்ற நவீனப்பிரச்னைகளைத் தாங்குகிற சக்தியைப் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் ஊர்வனவும் தொல்பாலூட்டிகள் சந்தித்த பிரச்னைகளான ஆபத்தைத் தவிர்த்தல், போட்டி, இணைவிழைச்சு, போன்றவற்றை எதிர்கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றன. இந்த மூன்று மூளைகளின் பரிணாமவளர்ச்சியும் ஒருங்கிணைந்தும் சுதந்திரமாகவும் இன்றைய உயர்நிலை பாலூட்டிகளான மனிதனிடம் செயல்படுகின்றன.

 

எது பதட்டநோய்?

பதட்டநோயை வரையறுப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஒரு வகையில் சாதாரண தற்காலிக உணர்ச்சிநிலை தான் பதட்டநோயாக மாறுகிறது என்று சொல்லலாம். உணர்ச்சிகளின்அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள உயிரியக்கம் மேற்கொள்ளும் ஒரு தற்காப்பு நடவடிக்கையே பதட்டம் என்று சொல்லலாம். அது ஒவ்வாத உணர்ச்சிநிலையாக இருக்கலாம். மிகச்சிறந்த சாதனைகளைத் தருவதற்கான நேர்மறையான ஊக்கசக்தியாகவும் பதட்டநோய் இருக்கக்கூடும். எந்தக் கட்டத்தில் ஒரு உணர்ச்சி நேர்மறையான பதட்டநோயாகவும், எதிர்மறையான பதட்டநோயாகவும் மாறுகிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். வாழ்க்கை சூழ்நிலைக்கு அல்லது நெருக்கடிக்கு பொருத்தமற்ற எதிர்வினையை உயிரியக்கம் எடுப்பதே இத்தகைய பதட்டநோய்க்குக் காரணம். இளமைக்காலத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வாழ்க்கை அழுத்தங்கள் பதட்டநோயைக் கட்டமைக்கின்றன.

 

பதட்டநோயின் வகைகள்

PicsArt_22-03-2014 09_06_07 PM

புறவயமாகவோ அகவயமாகவோ ஏற்படும் அழுத்தத்தினால் உணர்ச்சிநிலையில் உருவாகும் தற்காப்புநிலை உடல் செயல்பாடுகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். இது நீண்டநாள் நோயாகவும் மாறும். பதட்டநோயைப் பொறுத்தவரை பொதுவாக மூன்று விதமாக பிரிக்கலாம். பரம்பரையாக உயிரியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை. வாழ்வில் ஏற்பட்ட அநுபங்களினால் உளவியல் ரீதியாக சுலபத்தில் இலக்காகும் தன்மை, சில குறிப்பிட்ட வாழ்வநுபவங்கள் அல்லது சம்பவங்களினால் ஏற்படும் குறிப்பிட்ட உளவியல் பாதிப்புக்கு இலக்காகும் தன்மை, இவற்றுள் கடைசியாக வகைப்படுத்தப்பட்ட பதட்டநோய் சமூகபயம், ஆட்கொள்ளப்படும் உளவெறி, குறிப்பிட்ட பயங்கள், பீதி, இவற்றின் காரணமாக உருவாகிறது.

மேலும் பல காரணங்களாக, சுயபாதுகாப்புக்கு ஆபத்து, மனசாட்சியின் நெருக்கடியின் விளைவாக தோன்றும் முரண்பாடு, கொள்கையில் தோல்வி, சுயமரியாதை இழப்பு, அன்றாடம் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அழுத்தங்கள், தவறான நம்பிக்கைகள், தவறான சிந்தனைகள், உடல் நோய்கள், சமூகமுரண்பாடுகள், பாலுறவு பிரச்னைகள், பேராசை, உளவியல் விபத்து, போன்றவையினால் பதட்டநோய் தோன்றும்.

 

பதட்டநோய் மருத்துவ வரலாறு

முதன்முதலாக வரலாற்றில் உளவியல்-உடற்கூறியல் நோய் மத்திய கால இஸ்லாமிய வரலாற்றில் பெர்சிய உளவியல் மருத்துவர்களான அகமது இபின் சாகுல் அல்-பல்கியும், காலி அப்பாஸும் இந்த நோயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்களே முதன்முதலாக ஒரு மனிதனது மனமும் உடலும் ஒன்றையொன்று பாதிக்கின்றது என்று கண்டுணர்ந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபிரான்ஸ் அலெக்சாண்டர் உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தார். ஜார்ஜ் குரோட்டெக்குடன் ஏற்பட்ட தொடர்பினால் சிக்மண்ட் ஃபிராய்ட் உளவியல்-உடலியல் நோய்களைப் பற்றி ஆழ்ந்த ஈடுபாடு காட்டத்தொடங்கினார். அந்தக் காலத்தில் ஜார்ஜ் குரோட்டெக் உடல்நோய்களை உளவியல் சிகிச்சையின் மூலம் குணமாக்கும் சாத்தியங்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.ஹோமியோபதியின் பிதாமகரான ஹானிமன் தன்னுடைய ஆர்கனான் நூலில் மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நோயில் காணப்படும் எல்லாக்குறிகளையும் ( symptoms ) அதாவது உடற்குறிகளுடன் முக்கியமான மனக்குறிகளையும் ஒரு மருத்துவர் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் அந்நோயை அழிக்கச் சரியான ஒத்த மருந்தை தேர்ந்தெடுக்க முடியும். அதாவது எந்த மருந்து இயற்கை நோய் தோற்றுவித்த உடற்குறிகளையும், மனக்குறிகளையும் நோயற்ற ஒருவரின் உடலில் தோற்றுவிக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும், என்று அழகாக விவரித்துள்ளார். ஆக மனம் உடலையும், உடல் மனதையும் பாதிக்கவே செய்கிறது. பதட்டநோய் மனதில் ஏற்படும் நெருக்கடியினால் மட்டுமல்ல, உடலில் ஏற்படும் மாறுபாடுகளினாலும் வரும்..

கற்காலத்துக்கு முன்பிருந்தே உயிர்பயத்தினால் ஏற்பட்ட பதட்டநோய் மனித நாகரிகம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய விசுவரூபம் எடுத்திருக்கிறது. நவீன சமூகத்தின் சிக்கல்கள், இன்னும் மனிதனை பதட்டமுள்ளவனாக்கியிருக்கிறது. வேற்றுமையின்மை, ஏற்றதாழ்வின்மை, சமத்துவம், நிச்சயத்தன்மை, பாதுகாப்புணர்வு, வாழ்வுக்கான உத்திரவாதம், எல்லோருக்கும் சமவாய்ப்பு, என்று மானுட சமூகம் முன்னேறிச் செல்லும் போது தான் பதட்டநோய் மனிதர்களிடமிருந்து முற்றிலும் ஒழிந்து போகும்.

Tuesday 2 September 2014

ஆசைராஜாவின் ஆசை

உதயசங்கர்Photo-0115

 

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். உலத்திலுள்ள அத்தனை பொருட்கள் மீதும் அவர் ஆசைப்பட்டார். அவர் ஆசைப்படாத பொருளே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஆசை மீதே ஆசை கொண்டவர். அதனால் மக்கள் அவரை ஆசைராஜா என்று அழைத்தனர். ஆசைராஜாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? உடனே அவருடைய மந்திரிபிரதானிகள் அவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அது உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் வரவழைத்து ராஜாவிடம் கொடுத்தனர். இப்படி ஆசைராஜா உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அநுபவித்து விட்டார். உடைகளா? உலகத்திலேயே மிகச்சிறந்த உடைகள் அவரிடம் ஏராளமாய் இருந்தன. அவற்றையெல்லாம் உடுத்தி உடுத்தி அவருக்குச் சலிப்பு வந்து விட்டது. அதேபோல உலகிலே மிகச்சிறந்த உணவுகளைச் சாப்பிட ஆசை கொண்டார். உடனே அவருடைய மந்திரிபிரதானிகள் உலகத்திலுள்ள அத்தனை சிறந்த உணவுப்பண்டங்களைச் சமைக்கும் சமையல்காரர்களை கூட்டிக் கொண்டுவந்து ஆசை ராஜாவுக்கு விதவிதமாய் சாப்பாடு செய்து கொடுத்தனர். சிறிது நாட்களிலே ஆசைராஜாவுக்கு அதிலும் சலிப்பு வந்து விட்டது.

உலகத்திலே மிக மென்மையான மெத்தை அவருக்குக் கசந்து விட்டது. மிகச்சிறந்த கலைப்பொருட்களும் அவருடைய ஆசைக்கு முன்னால் வெகுநாள் நிற்க முடியவில்லை. ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வமூட்டவில்லை. அவர் எப்போதும் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தார். இதனால் மந்திரிப்பிரதானிகள் கவலை கொண்டனர். உடனே நாடெங்கும் முரசறைந்து ஆசை ராஜாவின் ஆசையை யார் தூண்டுகிறார்களோ அவர்களுக்கு ஆசைராஜாவின் அருமை மகளான இளவரசியைத் திருமணம் முடித்துக் கொடுத்து நாட்டில் பாதியும் தருவதாக அறிவிப்பு செய்தனர்.

இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டு உலகத்தின் எல்லாமூலைகளிலிருந்தும் இளைஞர்கள் வந்தனர். ஒவ்வொருத்தரும் விதம் விதமாகப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவுப்பொருட்கள், கலைப்பொருட்கள், கவிதைகள் என்று ஆசைராஜாவின் முன்னால் வந்து காண்பித்தனர். ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆசையை மூட்டவில்லை. வந்த எல்லோரும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள். அப்போது அரண்மனைக்குத் துணி துவைக்கும் சலவைக்காரன் சலவைத்துணியைக் கொடுக்கப்போகும்போது இளவரசியைப் பார்த்து விடுகிறான். மணம் முடித்தால் இளவரசியைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான்.

ஆசைராஜாவின் அறிவிப்பை அவனும் கேட்டான். அவனும் என்னவெல்லாமோ யோசித்துப்பார்த்தான். எதுவும் பிடிபடவில்லை. இளவர்சியைக் கலியாணம் முடிக்க முடியாமல் போய் விடுமே என்று கவலைப்பட்டான். கவலை அவனைப் பாடாய்படுத்தியது. அவன் மெலிந்து துரும்பாகி விட்டான். அதைப்பார்த்த அவனுடைய பாட்டி, “ ஏண்டா பேரப்புள்ள என்னடா கவலை.. எதாயிருந்தாலும் சொல்லு.. “ என்று கேட்டாள். கடைசியில் அவனும் பாட்டியிடம் அவன் கவலையைச் சொன்னான். அவனுடைய பாட்டியும், “ அடக் கோட்டிக்காரப்பயலே இதுக்குத்தானா இம்புட்டு கவலைப்பட்டே…” என்று சொல்லி அவனை அருகில் அழைத்து காதில் ரகசியம் சொன்னாள். அதைக்கேட்ட அவனும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான்.

அன்று அரசவையில் வழக்கம்போல ஆசைராஜா எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தார். சற்றுமுன்னர் அவர் முன்னால் பல்லியையும் பாச்சாவையும் கொண்டு வந்த இரண்டு பேரை சிறையில் அடைக்கச் சொல்லி விட்டார். மூன்றாவதாக அரண்மனைச் சலவைக்காரன் போனான். அவன் கையில் எதுவும் கொண்டு போகவில்லை. மந்திரிப்பிரதானிகள் அவனிடம், “ ராஜாவுக்கு என்ன கொண்டு வந்தாய்? “ என்று கேட்டனர். அவன் அமைதியாக அரசவையில் உள்ளவர்களை ஒரு முறை நிதானமாகப் பார்த்தான். பின்னர் மடியிலிருந்து ஒரு புளியம்பழத்தை எடுத்து எல்லோருக்கும் காண்பித்து விட்டு வாயில் வைத்து ருசித்து சப்புக் கொட்டினான். அதைப் பார்த்த ஆசைராஜாவுக்கு வாயில் தானாக எச்சில் ஊறியது. அரசவையில் இருந்த மந்திரிப்பிரதானிகள் எல்லோருடைய வாயிலும் எச்சில் வழிந்தது. ஆசைராஜா சிம்மாசனத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார்.

“ என்னால ஆசைய அடக்க முடியல.. அடக்க முடியல..” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே சலவைக்காரனிடம் கையேந்தினார். அவனும் தயாராக வைத்திருந்த இன்னொரு புளியம்பழத்தை எடுத்து ஆசைராஜாவிடம் கொடுத்தான். ஆசைராஜா முகத்தைச் சுளித்து, பல் கூச சப்புக் கொட்டி புளியம்பழத்தை ருசித்தார். மந்திரிப்பிரதானிகளும் ருசித்தனர்.

ஆசைராஜா சொன்ன மாதிரி பாதி நாட்டையும் கொடுத்து இளவரசியையும் கலியாணம் முடித்துக் கொடுத்தார். அதன் பிறகு என்ன செய்தார் தெரியுமா? நாடெங்கும் புளியமரங்களை நட்டு வளர்த்தார். அதன்பிறகு அவருடைய ஆசைநோய் அடங்கி விட்டது.

கதை சொன்னவர் – டி.சந்திரலேகா/ மருதன்வாழ்வு

நன்றி- தமிழ் இந்து

Monday 1 September 2014

இன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

உதயசங்கர்ki.ra

அன்று மழை பெய்து கொண்டிருந்தது

மாரிஸும் நானும்

இடைசெவல் பேருந்து நிறுத்தத்திலிருந்து

நடந்து வந்து கொண்டிருந்தோம்

உங்கள் வீட்டிற்கு நயினா..

கந்தகபூமியின்

கரிசல்காட்டு மக்களின்

மனசின் ஈரம் போல

வரவேற்றீர்கள் உங்கள் இசைக்குரலால்

ஓலைப்பாயில் மோளும்

ஓசையுடன் இலக்கிய சர்ச்சைகள்

ஆரவாரமான கூப்பாடுகள்

வசியம் செய்து

வசத்துக்கு கொண்டு வந்தீர்கள்

உங்கள் இனிய குரலால்

உங்களிடமிருந்து

புதிய தகவலோ வாழ்வநுபவமோ

முன்கூட்டியே

ஒரு மெலிதான செருமலை

அனுப்பி வைக்கும் எங்களுக்கு

இலக்கியத்தை மட்டுமில்லை

வாழ்க்கையையும் பார்ப்பது எப்படியென்று

வலிமையாகக் கற்றுக்கொடுத்தீர்கள்

உங்கள் மென்மையான குரலில்

2

இருளும் ஒளிரும்

விருவோடிய மண்ணை

வெறித்தபடி திரிந்தோம்

விரக்தியுடன் நாங்கள்

மெலிந்துயர்ந்த உருவத்தில்

அதிராத நடையில்

ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப்பெருமாள் ராமனுஜன்

என்று எல்லோருக்கும் அன்பான

எங்கள் நயினா நீங்கள் வந்தீர்கள்

கீற்றாய் சிந்திய புன்ன்கையுடன்

நீங்கள் கரிசல்க்காட்டை

உழுது வைக்கச் சொன்னீர்கள்

மழை வருமா என்றோம்

நீங்கள் எங்களிடம்

விதை விதைக்கச் சொன்னீர்கள்

முளைக்குமா என்றோம்

எங்களை வெள்ளாமைக்குத்

தயாராகச் சொன்னீர்கள்

வீடு வந்து சேருமா என்று சந்தேகப்பட்டோம்

தீர்க்கதரிசி நீங்கள்

மழை பொழிந்தது

விதை முளைத்தது

வெள்ளாமை வீடு சேர்ந்தது

வாய்மொழி இலக்கியமாம்

வட்டார இலக்கியமாம்

கரிசல் இலக்கியமாம்

என்று ஏகடியம் பேசிச் சிரித்தவர்கள்

இன்று தமிழுக்குப் பெருங்கொடையென்று

புல்லரித்து அலைகிறார்கள்

பிராமண வெள்ளாள மேலாண்மை

இலக்கியக் கரம்பைக்கட்டிகளை

உடைத்தது உங்கள் முன்னத்தி ஏர்

தமிழிலக்கியத்திற்கு

புதிய திசை காட்டினீர்கள்

தமிழையும் புதிதாக மாற்றினீர்கள்

புதிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது

இப்போது

3

மடிசஞ்சியான

மத்தியதர வர்க்க தமிழிலக்கியத்தில்

உழைக்கும் கிராமத்தான்களும்

உரிமை கோர வைத்தவர் நீங்கள்

விதவிதமான பசியை மட்டுமல்ல

கரிசல்க்காட்டு பண்டங்களின்

விதவிதமான ருசிகளையும்

சொன்னீர்கள்

கரிசல்ச்சீமையின்

புதிய எழுத்தாளர் படையை

அணி திரட்டியவர் நீங்கள்

கரிசல் இலக்கியத்தின்

மூலவர் நீங்கள்

உற்சவ மூர்த்தியும் நீங்களே

இப்போது வெக்கையும்

வியர்வையும் பொங்கும்

புதிய மனிதர்கள்

புதிய இலக்கியத்துக்குள்

நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்

4

தேசிய நெடுஞ்சாலையில்

கடக்கும்போதெல்லாம்

ஒரு குழந்தையின்

குதூகலம் பொங்கிவரும்

இடைசெவலைப் பார்க்கும்போது

எங்கள் ஞானத்தந்தை

சுற்றித் திரிந்த பூமியல்லவா

5

இன்னும்

ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு

இதோ இடைசெவல் பஸ் நிறுத்தம்

உங்கள் வீட்டிற்கு

நடந்து கொண்டிருக்கிறோம்

நானும் மாரீஸும்

ஒரு நூற்றாண்டாய் மழை

பெய்து கொண்டிருக்கிறது

கனிவான சிரிப்புடனும்

கருப்பட்டிக் காப்பியுடனும் நீங்கள்…