Showing posts with label மோகன்தாஸ் வடகரா. Show all posts
Showing posts with label மோகன்தாஸ் வடகரா. Show all posts

Tuesday, 16 September 2014

புதிய அகராதி

உதயசங்கர்

Mohan Das (98)

மண்டியா தேசத்து ராஜா ஒரு குண்டக்கமண்டக்க ஆள். அவர் நினைப்பது போலத்தான் மண்டியா தேசத்து மக்களும் நடக்க வேண்டும். பாவம் மக்கள். ஒரு நாள் மண்டியா தேசத்து மண்டு ராஜா மத்தியானம் தன் யானை வயிறு நிறைய பலகாரங்களும் பட்சணங்களும் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி ஆலைச் சங்கு போல பெரிய ஏப்பத்தை வெளியிட்டார். அந்த ஏப்பக்காற்று அவர் என்னென்ன பலகாரங்களைச் சாப்பிட்டார் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே சென்றது. பின்னர் ஒரு கவுளி வெத்திலையை ஆடு தழையை மென்று தள்ளுவதைப்போல அரைத்துத் தள்ளினார். அதன்பிறகு எப்போதும் அரண்மனை அதிர குறட்டை விட்டபடி தூங்குவார். சிலநேரம் தூங்கி மறுநாள் காலையில் எழுந்திரிப்பதும் நடக்கும். அதிலொன்றும் விசேஷமில்லை. ஆனால் காலையில் எழுந்து சாயந்திரம் எழுந்தது மாதிரியே நடந்து கொள்வார். அரண்மனையில் விளக்கேற்றச் சொல்வதும் காலை பத்து மணியை இரவு பத்து மணியென்று நினைத்து மறுபடியும் தூங்கப் போய் விடுவார். சிலசமயம் இப்படியே ஒரு வாரம் வரை கூட இரவும் பகலும் மண்டுராஜாவுக்கு மாறி விடும். அதனால் என்ன என்கிறீர்களா? அவருக்கு மாறி விட்டதென்றால் மண்டியா தேசத்துக்கே மாற வேண்டும். அதான் பிரச்னை. மண்டுராஜா ஏதாவதொரு நாள் ஏதாவதொரு காலப்பொருத்தத்தில் மறுபடியும் சரியான சுழற்சியில் வரும்வரை மண்டியா மக்களும் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்க வேண்டியதிருக்கும்.

இப்பேர்ப்பட்ட மண்டு ராஜாவைப் பார்க்க அரண்மனைக்கு ஒரு நாள் மத்தியானம் ஒரு செந்நாப்புலவர் வந்தார். அப்போது தான் ராஜா ஏப்பம் விட்டு விட்டு வெத்திலையை அரைத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். செந்நாப்புலவரோ எப்படியாவது மண்டுராஜாவிடம் தன் மொழிப்புலமையெல்லாம் காட்டி ஏராளமான வெகுமதிகள் வாங்கிச் செல்லலாம் என்று ஆசைப்பட்டார். அதனால் ராஜாவைப் பார்த்து,

“பானை வயிறோனே

யானை நடையழகா

அறிவிற் சிறந்த அமுதோனே

அழகிற் சிறந்த அழகனே

இப்படி ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார் புலவர். ராஜாவுக்கோ தூக்கம் வந்து விட்டது. அதோடு அவருடைய அழகைப் பற்றியும், அறிவைப் பற்றியும் அவருக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே செந்நாப்புலவர் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார் என்றும் கிண்டல் செய்கிறார் என்றும் நினைத்துக் கோபம் வந்தது. உடனே செந்நாப்புலவருக்கு ராஜாவைக் கேலி செய்ததற்காக நூறு கசையடி கொடுப்பதோடு இப்போது இருக்கிற மொழி அகராதியை மாற்றி எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்க வில்லையென்றால் அவருடைய தலையை சீவி விடும் படியும் ஆணையிட்டார்.

பாவம் செந்நாப்புலவர்! கெஞ்சிக் கதறி கசையடியிலிருந்து தப்பித்துக் கொண்டார். ஆனால் அகராதி எழுத வேண்டுமே. என்ன செய்ய… ஒரு முடிவு செய்தார். முட்டாள் என்றால் அறிவாளி என்று மாற்றினார். வருகிறேன் என்றால் வரமாட்டேன் என்று மாற்றினார். இப்படி எல்லாவற்றையும் நேரெதிராக மாற்றி எழுதி ராஜா கையில் கொடுத்து விட்டு மண்டியா தேசத்தை விட்டு ஓடியே போய் விட்டார். பொழுது போகாமல் இருந்த ராஜாவுக்கு இந்த அகராதி ரெம்பப் பிடித்துப் போய் விட்டது. உடனே நாட்டு மக்களுக்கு இந்த அகராதிப்படியே இனி பேசவேண்டும். எழுதவேண்டும் என்று ஆணையிட்டார். மன்னர் ஆணையாச்சே மீற முடியுமா? எல்லோரும் பள்ளிக்கூடம், வீடு, கடை, சாலை, எல்லாவற்றிலும் புதிய அகராதிப்படியே எல்லாம் மாற்றப்பட்டது. எப்படி?

வா என்று கூப்பிட்டால் போய் விடவேண்டும். போ என்று சொன்னால் வர வேண்டும். அதே போல தா என்றால் தரக்கூடாது. தராதே என்றால் தர வேண்டும். வேண்டும் என்றால் வேண்டாம் என்று அர்த்தம். வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தம். மக்கள் குழம்பிப் போனார்கள். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வாங்க என்று சொன்னால் அவர்கள் கோபித்துக் கொண்டு போய் விட்டார்கள். கடைகளில் பொருள் வேண்டும் என்று சொன்னால் வேண்டாம் என்று நினைத்து தரவில்லை. வேண்டாம் என்று சொன்னதையே தந்தார்கள். ராஜாவுக்கு ஜாலியாக இருந்தது. தினசரி அரண்மனை வேலையாட்களிடம் இந்தப் புதிய அகராதி விளையாட்டை விளையாடினார். அவர்கள் குழம்பிப் போய் ராஜா அழைத்தால் போவதா இல்லையா அழைக்காமலிருந்தால் அவரிடம் போய் நிற்க வேண்டுமா என்று புரியாமல் ராஜாவையேச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நாடே குழம்பிப் போயிருந்தது.

இந்த நேரத்தில் அருகிலிருந்த பிங்கிஸ்தான் நாட்டு ராஜா மண்டியா தேசத்தின் மீது போர் தொடுக்கப்போவதாக ஓலை அனுப்பியிருந்தார். மண்டியா தேசத்து ராஜா பயந்தாங்குளி அதுவும் போர் என்றால் அவ்வளவு தான். உடனே மந்திரியிடம் பதில் அனுப்பச் சொன்னார். மந்திரியும் பிங்கிஸ்தான் நாட்டுக்கு மண்டியா தேசத்து புதிய அகராதியின் படி ஓலை அனுப்பினார்.

“ நாங்கள் பலசாலி. போருக்குத் தயாராக இருக்கிறோம். உங்கள் நாட்டுக்குக் கப்பம் கட்ட மாட்டோம். நீ ஒரு கோழை. போருக்கு வா..”

அவர் எழுதிய ஓலையைப் படித்த பிங்கிஸ்தான் ராஜாவுக்கு கோபம் தலைக்கேறியது. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? மண்டியா தேசம் பிங்கிஸ்தானிடம் சரணடைந்தது. அப்போது தான் தெரிந்தது ஓலையின் புதிய மொழி அகராதி விவகாரம். மொழிபெயர்ப்பாளர் சொன்னார்.

“ நாங்கள் பலவீனமானவர்கள். போருக்குத்தயாராக இல்லை. உங்கள் நாட்டுக்குக் கப்பம் கட்டி விடுகிறோம். நீ ஒரு பலசாலி. போருக்கு வர வேண்டாம்..”

பிங்கிஸ்தான் ராஜாவும் அந்த நாட்டு மக்களும் சிரிக்கிற சத்தம் கேட்கிறதா?

Saturday, 29 December 2012

பரிநிர்வாணம்

உதயசங்கர்

Mohan Das (186)

சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் வெங்கியின் அலுவலகம் இருந்தது. அவனைப் பார்த்து ஒரு இருபது வருடங்களாவது இருக்கும். அவன் சொன்ன இலக்கஎண்ணில் ஒரு நான்கு மாடிக்கட்டிடம் நின்று கொண்டிருந்தது. எனக்கு நம்பமுடியவில்லை. இந்தக் கட்டிடத்திலா வெங்கி வேலை பார்க்கிறான். இருக்காது. பக்கத்தில் உள்ள அட்ரஸ் இல்லாத ஏதாவதொரு சிறிய ஓய்ந்து போன கட்டிடத்தில் வேலை பார்ப்பானாக்கும். சும்மா நாம தேடி அலையக்கூடாதுன்னு இந்த அட்ரஸைக் கொடுத்திருப்பான். இப்போது ஃபோன் செய்ததும் அவன் அப்படியொரு கட்டிடத்திலிருந்து சுமாரான உடையில் அதே ஒல்லிப்பிச்சானான உடம்புடன் வெளியே வருவான் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன். அலைபேசியில் அவனை அழைத்தேன். ஓ என்ற ஆச்சரியத்தொனியுடன் ஆரம்பித்தான். நான் அந்த நான்கு மாடிக்கட்டிடத்தின் வாயிலில் நின்று கொண்டிருப்பதைச் சொன்னேன். அவன் அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்து லிஃப்டில் மூன்றாவது மாடிக்கு வரச்சொன்னான். எனக்கானால் ஆச்சரியம்.

வெங்கி பிராமணர் வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும் தப்பிப் பிறந்திருந்தான். கொஞ்சமும் படிப்பு வரவில்லை. அதோடு எல்லாவிதமான சேட்டைகளையும் செய்து கொண்டிருந்தான். பீடி, குடிப்பது, மிலிட்டரி ஹோட்டலில் புரோட்டா, கறி வறுவல் சாப்பிடுவது, ( சாராயமும் குடிப்பான் என்று கேள்வி, ஆனால் உறுதியாகத் தெரியாது ) எப்போதும் காவாலிப்பயகளோடு சுற்றிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடுவது, எம்.ஜி.ஆர். சினிமாவைக் குறைந்தது பத்து தடவையாவது பார்ப்பது, உரிமைக்குரல் லதா ரசிகர் மன்றத்தலைவராக இருப்பது, என்று எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். ஆள் ஒல்லின்னா ஒல்லி அப்படியொரு ஒல்லி. எலும்புகளின் மீது தோல் மூடியிருக்கும் அவ்வளவு தான். ஆனால் எல்லோருடனும் வலுச்சண்டைக்குப் போவான். இடுப்பிலிருந்து ஒட்டிவைக்கப்பட்ட இரண்டு கால் எலும்புகளும் தசையின் சப்போர்ட் இல்லாததினால் லேசாக வளைந்து கப்பக்காலாக மாற முயற்சித்துக் கொண்டிருக்க, வெங்கி ஒரு ராஜநடை நடந்து இந்த உலகத்தை எகத்தாளமாக ஒரு பார்வை பார்ப்பான் பாருங்கள் அதை இந்தப் பிறவியில் மறக்க முடியாது. வாயில் புகைந்து கொண்டிருக்கும் பீடியுடன் கால்களில் ஒட்டாத ஒரு டவுசரும் அதற்கு மேல் சுருட்டி சுற்றப்பட்ட கைலியும், வீசும் காற்றில் எப்படியாவது வெங்கியிடமிருந்து தப்பித்து விட முடியாதா என்று கடும்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அழுக்குச் சட்டையும் அணிந்து நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்துக்கு சாயங்காலவேளையில் உலா வருவான். அப்படியே மைதானத்துக்கு வெளியே உட்கார்ந்து பந்து வீசுபவனுக்கும், மட்டை அடிப்பவனுக்கும் ஒரே நேரத்தில் ஆலோசனை சொல்வான். அதைக் கேட்ட மாதிரியும், கேட்காத மாதிரியும் நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். இருட்டில் பந்து கொஞ்சங்கூட கண்ணுக்குத் தெரியாமல் போகும் வரை எங்கள் விளையாட்டு தொடரும். அதுவரை எங்களோடு தான் இருப்பான் வெங்கி. எங்களை விட வயதில் மூத்தவன். ஆனால் எங்களிடம் சகஜமாகப் பழகுவான். எல்லோரும் டேய், போடா, வாடா, என்று தான் பேசிக் கொள்வோம்.

கீழே உள்ள விநாயகர்கோவில் சந்துக்குள் இருந்த நான் எப்படி மேட்டுத்தெருவிலுள்ள பிராமணப்பையன்களோடு சேர்ந்தேன் தெரியுமா? கிரிக்கெட் தான். ஊரெல்லாம் ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்க மேட்டுத்தெரு பையன்கள் மட்டும் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்குக் கல்லூரியில் வரும் ஹிந்து பேப்பரிலும், ஸ்போர்ட்ஸ் ஸ்டாரிலும், வருகிற சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், கிர்மானி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராகவன், மொகிந்தர் அமர்நாத், சுரீந்தர் அமர்நாத், புகைப்படங்களைப் பார்த்தே கிரிக்கெட் விளையாடும் ஆசை வந்தது. எப்படியும் இந்திய அணியில் சேர்ந்து விட வேண்டும் என்று கனவு கண்டேன். ரேடியோவில் வர்ணனை கேட்டேன். டோனி க்ரேய்க்கின் ஹவ் டூ பேட்? என்ற புத்தகம் வாசித்தேன். கிரிக்கெட் என்னை ஒரு பைத்தியக்காரனாக்கி விட்டது. உண்மையை மறைக்காமல் சொல்லவேண்டுமானால் கிரிக்கெட் மட்டுமல்ல. மேட்டுத்தெருவில் இருந்த நளினியும் தான் என்னைப் பைத்தியக்காரனாக்கி விட்டாள். பிறகென்ன கிரிக்கெட் விளையாடுவதற்காகவும் நளினியின் தரிசனத்திற்காகவும் மேட்டுத்தெருவிலேயே கிடந்தேன். நல்ல உச்சி வெயிலிலும், இரவு தெரு விளக்கின் வெளிச்சத்திலும் கூட கிரிக்கெட் பிராக்டீஸ் செய்தேன். நளினியின் வீட்டெதிரே காலியாக இருந்த ஒரு சிறிய இடத்தைத் தேர்வு செய்து இந்தக் காரியங்களைச் செய்தேன்.

இப்படி இரவு பகலாக சச்சின் கூட பிராக்டீஸ் செய்திருக்கமாட்டாரே. சச்சினுக்கு முன்னாடியே நீங்கள் இந்திய அணிக்கு வந்திருக்க வேண்டுமே என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கத் தான் செய்கிறது. என்ன செய்ய? நான் இந்திய அணியில் சேர்ந்து உலகப்புகழ் பெற முடியாமல் போனதுக்கு யார் காரணம் தெரியுமா? இந்த வெங்கி தான். இரவு பகலாய் கிரிக்கெட் விளையாடி கவாஸ்கர் மாதிரி ஓபனிங் பேட்ஸ்மேனாகி விட்டேன். போதாக்குறைக்கு கிர்மானி மாதிரி கீப்பிங்கும் செய்து கொண்டிருந்தேன். எங்களுடைய மெஜஸ்டிக் கிரிக்கெட் கிளப் தெருத் தெருவாக, அப்புறம் ஊர் ஊராகப் போய் கிரிக்கெட் மேட்ச் ஆடினோம். எனக்கு மவுசு கூடிக் கொண்டிருந்தது. கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் மேட்டுத்தெரு பையன்களின் ஆதிக்கம் தான். கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இரண்டாம் இடம் பெற்றோம். பெருமை தாங்கவில்லை. இதையெல்லாம் கேள்விப்பட்டு நளினி என்னிடம் ஓடி வந்து அந்த மூன்று வார்த்தைகளைச் சொல்லி விடுவாள் என்று எதிர்பார்த்தேன். அப்படியெதுவும் நடக்கவில்லை. ஏழை தமிழ் எழுத்தாளனாகி இந்த அநுபவங்களையெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று லவித்து விட்டது.

ஒரு நாள் அந்தியில் நாங்கள் பால்பண்ணை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். வழக்கம் போல வெங்கியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பவுண்டரிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாகராஜனுக்கும் அவனுக்கும் ஏதோ வாக்குவாதம் வந்து விட்டது. என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அன்றைய மேட்சில் நாங்கள் அதாவது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த எங்களுடைய அணி ஜெயித்து விட்டது. உடனே நாகராஜன் வெங்கியிடம் “ சொன்ன மாதிரி செய்டா..” என்று சொன்னான். நாங்கள் என்ன என்று கேட்டதுக்கு எங்களுடைய அணி ஜெயிக்காது. அப்படி ஜெயித்து விட்டால் வெங்கி அந்த மைதானத்தை அம்மணமாய் சுற்றி வருவதாகப் பந்தயம் போட்டிருக்கிறான். நாங்கள் இந்தப் பந்தயத்தின் பந்தயப்பொருளை நினைத்து சிரித்துக் கொண்டிருக்க, ரமேஷ் “டேய் எங்களுக்குக் கண் அவிஞ்சு போகவா..? “ என்று சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் வெங்கி கால்வாசி மைதானத்தைச் சுற்றியிருந்தான். எங்களுக்கு வாயடைத்து விட்டது.

பார்க்கவும் முடியவில்லை. பார்க்காமலிருக்கவும் முடியவில்லை. எங்களுடைய சிரிப்பு நின்று ஒரு தர்மசங்கடமான நிலைமை உருவானது. யாருக்கும் எதுவும் ஓட வில்லை. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நாங்கள் நாகராஜனைத் திட்ட ஆரம்பித்தோம். ஆனால் அதற்குள் வெங்கி எங்களுக்கு அருகில் வந்து விட்டான். எதுவுமே நடக்காத மாதிரி அவனுடைய டிரவுசரையும், கைலியையும் சட்டையையும் அணிந்து கொண்டு திகைத்துப் போயிருக்கும் எங்களைப் பொதுவாகப் பார்த்துக் கொண்டே ” என்ன போலாமா? “ என்று கேட்டான். எதுவும் பேசாமல் அவன் பின்னால் போனோம்.

அடுத்த ஒரு வாரத்துக்கு எங்களுக்கு வெங்கியை எப்போது பார்த்தாலும் மைதானத்துக் காட்சியே நினைவுக்கு வந்தது. அந்த அதிர்ச்சியை முழுங்கிச் செரிமானம் ஆகுமுன்னால் அதைவிட இன்னொரு முக்கியமான அதிர்ச்சியை எனக்குத் தந்தான் வெங்கி. நளினியை அவன் காதலிப்பதாகவும், அவளும் அவனைக் காதலிப்பதாகவும் சொன்னான். எனக்கு எதுவும் புரியவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. அப்படியே கிரிக்கெட்டை விட்டேன். நளினியை விட்டேன். மேட்டுத்தெருவை விட்டேன்.

அந்த வெங்கியைத் தான் இப்படி ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலுள்ள ஒரு அலுவலகத்தில் சந்திக்க நேரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. வாழ்க்கை விசித்திரமானது தான். மனதுக்குத் தான் எத்தனை வேகம்? லிஃப்டில் நான் சென்று கொண்டிருந்த சில நிமிடங்களுக்குள் பழைய காட்சிகளை எல்லாம் புது பிரிண்ட் போட்டு ஓட்டிக் காட்டி விட்டதே. லிஃப்டிலிருந்து வெளியேறி வலது பக்கம் திரும்பினேன். ஒஞ்சரித்திருந்த அலுவலகக் கதவின் வழியே ஒரு குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அது வெங்கியின் குரல் தான். அந்தக் குரலைக் கேட்டதும் அப்படியே திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தேன். அசரீரி போல அந்தக் குரல் ஒலித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

“ என்ன பெட் கட்டறே.. யார் தோக்கறாங்களோ அவங்க இந்த பில்டிங்க “ நியுடா”  சுத்தி வரணும்.. என்ன ஓ.கே.யா ? “

வெங்கி மாறவில்லை.

Tuesday, 27 November 2012

திருடன் கொண்டு போன நாய்க்குட்டி

மலையாளம்- மாலிMohan Das (3)

தமிழில்-உதயசங்கர்

ராமுவுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைத்தது.நாய்க்குட்டியின் தலையும் வாலும் கருப்பு. உடம்பும் கால்களும் வெள்ளை. அழகான நாய்க்குட்டி. அதே சமயம், உஷாரான நாய்க்குட்டி.

நாய்க்குட்டி இரவில் வராந்தாவில் படுத்து உறங்கும். ராமுவின் அறைக்கு வெளியே தான் வராந்தா இருந்தது. ராமு அறைக்கதவைத் திறந்தே வைத்திருப்பான்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பனிரெண்டு ஆனது. ஒரு மணிச்சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ராமு விழித்து விட்டான். நாய்க் குட்டியும் விழித்து விட்டது. மணிச்சத்தம் அருகில் வந்து கொண்டேயிருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் தூரத்தில் கேட்காமலே போய் விட்டது.

” நாய்க்குட்டியே! இந்த மணிச்சத்தம் எதுக்குன்னு தெரியுமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- தெரியாது என்ற அர்த்தத்தில்.

“எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ராத்திரி பனிரெண்டு மணி ஆயிருச்சின்னா ஒரு திருடன் ரோட்டு வழியே நடந்துபோவான். திருடி விட்டு மணியடித்துக் கொண்டே வீட்டுக்குப் போவான். திருடன் போகிறான் என்று எல்லோருக்கும் தெரியணுமாம்..அதுக்குத் தான் மணியடித்துக் கொண்டு போகிறான்..என்ன உனக்குப் பயமாருக்கா நாய்க்குட்டி?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- பயம் இல்லை என்ற அர்த்தத்தில்.

அடுத்த ஞாயிறு வந்தது.இரவு மணி பதினொன்றரை ஆகி விட்டது. நாய்க்குட்டி என்ன செய்தது தெரியுமா? சத்தம் போடாமல் எழுந்து கேட்டிற்கு அடியில் நுழைந்து ரோட்டில் போய் உட்கார்ந்து கொண்டது. அவனுக்கு திருடன் எப்படி இருப்பான்னு கொஞ்சம் பார்க்கணும்!

மணி பனிரெண்டு அடித்தது. அதோ வருகிறான் திருடன் மணியை அடித்துக் கொண்டு. திருடனைப் பார்த்தபோது நாய்க்குட்டி பயத்தில் நடுங்கியது. அரிவாள்மீசை, முட்டைக்கண்கள்,கருப்பு நிறம்,பயங்கரமான ஆள்!

நாய்க்குட்டிக்கு வீட்டிற்குப் போனால் போதும் என்று தோன்றியது. அவன் கேட்டின் அடியில் நுழைய முயற்சித்தான். திருடன் பாய்ந்து ஒரே பிடி. உடனே நூலை வைத்து வாயில் ஒரு கட்டு. நாய்க்குட்டிக்குக் கடிக்கவும் முடியாது, குரைக்கவும் முடியாது. திருடன் நாய்க்குட்டியைக் கையில் எடுத்தான்.மணியை அடித்துக் கொண்டு ஒரே நடை.

முதலில் நாய்க்குட்டி மிகவும் பயந்து போய்விட்டது. பின்பு பயம் இல்லாமல் போய் விட்டது. அவன் யோசித்தான். வாயை மட்டும் தானே கட்டியிருக்கிறார்கள். மூக்கை கட்டவில்லை. கண்ணைக் கட்டவில்லை. அவன் மூக்கைத் திறந்து வைத்தான்.கண்ணைத் திறந்து வைத்தான்.எல்லாமணங்களயும் முகர்ந்து உள்வாங்கினான்.எல்லாகாட்சிகளையும் பார்த்தான். எல்லா மணங்களையும், எல்லாக்காட்சிகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டான்.

பத்து மைல் தூரத்திலிருந்தது திருடனின் வீடு. திருடன் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தான். திருடனின் மனைவி திருடி கதவைத் திறந்தாள். திருடன் நாய்க்குட்டியோடு வீட்டிற்குள் சென்றான். திருடி பத்திரமாய் கதவை அடைத்தாள்.

“திருடி இந்த நாய்க்குட்டி நல்லாருக்கா?” என்று திருடன் கேட்டான்.

“திருடா ரொம்ப நல்லாருக்கு..” என்று திருடி சொன்னாள்.

திருடி நாய்க்குட்டியை சங்கிலியால் கட்டிப் போட்டாள். சோறும் பாலும் கொடுத்தாள். பின்பு படுத்து உறங்கினாள்.

நாலைந்து நாள் கழிந்த பிறகு என்ன நடந்தது தெரியுமா? திருடி யோசித்தாள். எவ்வளவு நல்ல நாய்க்குட்டி! நாய்க்குட்டி திருடி சொன்னபடியெல்லாம் கேட்கிறது. கடிப்பதில்லை. குரைப்பதில்லை.திருடி அதை அவிழ்த்து விட்டாலோ வாசல்படி கூட தாண்டுவதில்லை!

ஆனால் இதெல்லாம் வெறும் நாடகம் என்று அவளுக்குத் தெரியாது. அவளை எப்படியாவது ஏமாற்றி விட்டு ஓடிப் போகணும். அதுதான் நாய்க்குட்டியின் திட்டம்.

ஒரு ராத்திரி. மணி ரெண்டு இருக்கும். திருடியும் திருடனும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். நாய்க்குட்டி பதுங்கிப் பதுங்கி ரோட்டில் இறங்கியது.பின்பு ஒரே ஓட்டம்! முன்பு திருடன் தூக்கிக் கொண்டு வரும்போது முகர்ந்த மணங்கள், பார்த்த காட்சிகள், எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டே சென்றது.அது பத்து மைல் ஓடி ராமுவின் வீட்டை அடைந்தது. கேட்டின் கீழே நுழைந்து உள்ளே சென்றது. நாய்க்குட்டி இல்லாததினால் ராமு வாசலை பூட்டியிருந்தான். நாய்க்குட்டி சன்னல் வழியே எட்டிப் பார்த்தது. சத்தமாய் நாலைந்து குரைப்பு!

ராமு எழுந்து விட்டான். குரைப்பொலியை உற்றுக் கேட்டான். வேறு நாயோ? இல்லை. நம்மோட நாய் தான். ராமு வாசல் கதவைத் திறந்தான். நாய்க்குட்டி ராமுவின் மேல் ஒரே பாய்ச்சல். பின்னர் நக்கோ நக்கென்று நக்கிக் கொஞ்சியது.

அடுத்த ஞாயிறு ராத்திரி வந்தது. பனிரெண்டு மணி ஆனது. அதோ கேட்கிறது மணிச்சத்தம். திருடன் திருடி விட்டு வீட்டுக்குப் போகிறான்.

“நாய்க்குட்டி! ரோட்டிற்குப் போக வேண்டாமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- வேண்டாம் என்ற அர்த்தத்தில்.

காலையில் ராமு கேட்டைத் திறந்தான்.

“போறியா.. நாய்க்குட்டி!” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது-இல்லை என்ற அர்த்தத்தில்!

புகைப்படம்-மோகன் தாஸ்வடகரா

Saturday, 24 November 2012

புல்புல்தாரா பாட்டு

 

Mohan Das (186)

உதயசங்கர்

 

என்னுடைய சித்தப்பா சண்முகநாதனின் வீட்டுக்குப் போயிருந்தேன். வீடு அமைதியாகக் கிடந்தது. போன மாதம் தான் சித்தப்பா தவறிப் போய்விட்டார். ரோட்டில் போய்க்கொண்டிருந்த மாடு கலைந்து அவரை முட்டித் தள்ளி விட்டது. தடுமாறிக் கீழே விழுந்ததில் பிட்டியில் நல்ல அடி. வெளியே காயம் எதுவும் இல்லை. ஆனால் பத்து நாட்களுக்குள் சிறுநீரகச் செயலிழப்பு, கைகால்களில் விரைப்பு, என்று ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக வந்து அவரை மரணத்துக்கு இட்டுச் சென்று விட்டது. எனக்குத் தொலைபேசியில் தகவல் வரும்போது நான் மும்பையில் எங்கள் கம்பெனி வேலை விஷயமாகப் போயிருந்தேன். போனவாரம் தான் அங்கேயிருந்து திரும்பி வந்தேன். இந்த ஒரு மாதமாகச் சித்தப்பாவின் ஞாபகங்கள் மனதில் அலையடித்துக் கொண்டேயிருந்தது. எதிர்பாராத தருணங்களில் மனிதர்களை வீழ்த்துவதில் மரணத்துக்குத் தான் எத்தனை குரூர திருப்தி.

லீவுக்காக மன்றாடிக் கேட்டு வாங்கி கோவில்பட்டிக்கு வந்து இறங்கியதிலிருந்தே மனம் நிலை கொள்ளவில்லை. மனம் இறுகி பாறை மாதிரி கனத்துப் போனது. எல்லாஊர்களையும் போல கோவில்பட்டியும் மாறியிருக்கிறது. ஆனால் என் சித்தப்பா குடியிருந்ததெருவும் வளவும் இந்த மாற்றத்திற்கு சவால் விட்டுக் கொண்டு மாறாமல் அப்படியே இருந்தன. சுற்றிலும் சாக்கடைகள் சூழ்ந்திருக்க அதில் கால்களை அளைந்தபடி பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த வளவில் இருந்த ஆறு வீடுகளில் மூன்றாவது வீட்டில் – அதாவது ஒரேஒரு பத்தி உள்ள குச்சில் என் சித்தப்பா குடியிருந்தார். வீடு நெருங்க நெருங்க மனம் இளகியது. சித்தியைப் பார்த்தவுடன் அழுது விடுவேனோ என்று பயந்தேன்.

எப்போதும் வெளித்தெரியும் எத்துப்பல் சிரிப்புடன் என் கைகளை ஆவலுடன் பற்றிக் கொள்ளும் என் சித்தப்பா இப்போது இல்லை. அந்தக் கைகளின் காய்ப்பையும் மீறி அன்பின் துடிப்பை நான் உணர்வேன். என் மீது ஒரு அலாதிப் பிரியத்தை வைத்திருந்தார் என் சித்தப்பா அல்லது அப்படி வைத்திருப்பதாக நினைப்பதில் நான் பெருமைப்பட்டேன்.

ஆனால் எதிர்பார்த்ததைவிட சித்தி தைரியமாக இருந்தாள். துக்கத்தை அடக்கிக் கொள்கிற பக்குவம் சித்திக்கு இருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். சாதாரணமாய் என் வேலையைப் பற்றி, அம்மாஅப்பாவைப் பற்றி, தம்பி தங்கையைப் பற்றி விசாரித்தாள். ஒவ்வொரு விசாரிப்புக்கும் நடுவே ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டாள். எனக்குச் சங்கடமாக இருந்தது. எப்பவுமே இந்த மாதிரி துக்கம் விசாரிக்கும் தருணங்களில் என்ன மாதிரியான வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று எனக்குத் தெரியாது. பாவமாய் முழித்துக் கொண்டிருப்பேன். பரிதாபமான என் முகத்தைப் பார்த்து துக்கவீட்டுக்காரர்கள் எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்புவார்கள். அப்படித்தான் இப்போதும் முழித்துக் கொண்டிருந்தேன்.

குத்துவிளக்கின் அருகில் கதம்பமாலை சூடிய போட்டோவுக்குள்ளிருந்து என் சித்தப்பா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். சித்தி தரையை விரலால் தேய்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் தானோ என்னவோ என்மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தார் என் சித்தப்பா. பாலிய காலத்தில் பெரும்பகுதி நேரத்தை என் சித்தப்பாவுடனேயே கழித்திருக்கிறேன். என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு அவருடைய எத்துப்பல் உதடுகளால் சும்மா முத்திக் கொண்டேயிருப்பார். எனக்கு வெட்கமாகவும், சந்தோஷமாகவும், இருக்கும். என் அப்பாவுக்கு மாறுதல் கிடைத்து மதுரை செல்லும்வரை என் சித்தப்பா என்னைத் தூக்கிக் கொண்டே திரிந்தார். இதனால் சித்திக்கும் அவருக்கும் சண்டைகூட வந்திருக்கிறது.

“ ராமநாதா..மேலே அட்டாலையில் இருக்கிற அவுக டிரங்குப்பெட்டியை இறக்கணும்.. அந்த ஸ்டூலைப் போட்டுக்கோ.. எனக்கு ஸ்டூல் மேலே ஏறணும்னால பயமாருக்கு…எங்க..அவுகள மாதிரி விழுந்துருவேனோன்னு…”

சித்தி என்னைப்பார்த்து விரக்தியுடன் சிரித்தாள். நான் எழுந்து ஸ்டூலைப் போட்டு அட்டாலையிலிருந்து அந்தப் பழைய டிரங்குப்பெட்டியை இறக்கினேன்.

” வேற ஏதும் எடுக்கணுமா..சித்தி..”

”வேற என்ன இருக்குன்னு பாரு..”

என்றாள் சித்தி. நான் மறுபடியும் ஸ்டூலில் ஏறிப்பார்த்தேன். நீள்சதுரமாய் துணியினால் மூடப்பட்ட ஒரு பார்சல் இருந்தது. பிறகு குட்டிச்சாக்குகளில் கட்டப்பட்டிருந்த பாத்திரமூட்டைகள். நான் அந்த நீள்சதுரப்பார்சலை இழுத்து இறக்கினேன். டைப்ரைட்டர் மிஷின் மாதிரி தெரிந்தது. ஒரே தூசி. அப்படியே அசங்காமல் மேலே சுற்றியிருந்த துணியைச் சுருட்டி எடுத்தேன். வித்தியாசமான ஒரு இசைக்கருவி என் முன்னால் இருந்தது.

” இது என்னது சித்தி..”

ஒரு கணம் அதையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்தி. பின் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு,

” இதுவா தம்பி.. புல்புல்தாரா.. உஞ்சித்தப்பாவுக்கு உசிரு.. எப்பவும் இதில உட்காந்து வாசிச்சிக்கிட்டே இருப்பாரு.. ரூப்பு தேரா மஸ்தானா அப்ப ரெம்ப பேமஸ் யார் கேட்டாலும் உடனே அந்த இடத்திலே உட்கார்ந்து இதை வச்சி வாசிக்க ஆரம்பிச்சிருவாரு.. நான் சின்னப்பிள்ளையா இருக்கறப்ப எவ்வளவு பாட்டு கேட்டிருக்கென்.. அதுக்காகவே இவரைக் கலியாணம் செய்ஞ்சிக்கிடணும்னு நெனச்சேன்.. ஆனா எல்லாம் உங்கம்மா கலியாணத்தோட போச்சு.. அதுக்கு மறுநாள் மூட்டை கட்டி வைச்சவர் தான்.. ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னு எடுத்து வைச்சு ஒரே ஒரு பாட்டை மட்டும் திரும்பத் திரும்ப வாசிச்சிக்கிட்டேயிருப்பாரு.. ஏன் வேற பாட்டை வாசிக்கறதானேன்னு கேட்டா ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான். எப்பேர்க்கொண்ட குணவான்.. எனக்கு ஒரு குறை உண்டுமா.. என்னமா வைச்சிருந்தாக.. இப்படித் தனியாத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டாகளே..”

என்று அழுகையும் புலம்பலுமாகச் சொன்னாள் சித்தி. எனக்கு எதுவும் பேசத்தோணவில்லை. நான் புல்புல்தாராவின் பொத்தான்களை அமுக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட நாட்களானதால் பொத்தான்கள் கிறீச்சிட்டன. ஓரத்திலிருந்த சிறு பெட்டியில் கம்பிகளை மீட்டுகிற கார்டுகள் கிடந்தன. அதில் ஒன்றை எடுத்து கம்பிகளை மீட்டிக் கொண்டே பொத்தான்களை அமுக்கிப் பார்த்தேன். திடீரென “ டொய்ங்ங்ங்…” என்று கம்பி அதிர்ந்தது. அந்த சத்தம் நாராசமாய் இருந்தது. எப்படி சித்தப்பா இதை வசப்படுத்தினார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதன்பிறகு எழுந்து சித்தி சமைக்கப்போனாள். நான் கொஞ்சநேரம் அந்தப் புல்புல்தாராவுடன் போராடினேன். பின்னர் நாலுக்குநாலு குச்சுக்குள்ளேயே அங்குலம் அங்குலமாக நடந்தும் உட்கார்ந்தும் பொழுதை நகர்த்திக் கொண்டிருந்தேன். சாப்பிட்டுவிட்டு கிளம்பப்போன என்னை சித்திதான்,

” ஏண்டா.. கொஞ்சம் வெயில்தாழ போயேன்..”

என்று சொன்னாள். எனக்கும் அசதியாகத் தான் இருந்தது. படுத்த உடனேயே தூக்கம் சுழலாய் என்னைச் சுருட்டி விழுங்கியது.

திடீரென புல்புல்தாராவின் இசையொலி கேட்டது. கண்களைத் திறக்க நினைத்தாலும் திறக்க முடியவில்லை. ஆனால் அந்த இசை ஒரு பழைய தமிழ்த்திரைப்படப்பாடலாக மாறிக்கொண்டேயிருந்தது. கூடவே கலியாணவீட்டு ஆரவாரம். கலகலப்பு.

திருமணத்துக்கு முதல் நாளிரவாக இருந்தது அந்தக்காட்சி. ஊரிலிருந்து ஒவ்வொருத்தராக வந்து கொண்டேயிருந்தார்கள் ஒவ்வொரு குடும்பமாய் வர வர அறிவிப்புகளும் வந்து கொண்டேயிருந்தன.

சங்கரங்கோயில் கோமதி மயினி வந்தாச்சி.. புதூர் வேலம்மையாச்சி வந்தாச்சி.. திருநெவேலி நெல்லையப்பன் வந்துட்டான்..

உடனே ஒரு அலை போல குசலங்களும், கேலியும், சிரிப்பும், கும்மாளமும் எழுந்து அடங்கும். இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் வாடகைக்கு எடுத்திருந்த ஜமுக்காளத்தில் இளவட்டங்கள் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது போரடித்தபோது பாட்டுப்பாடினார்கள். சிலர் இராச்சாப்பாட்டை முடித்துவிட்டு இரண்டாம்பிளே சினிமாவுக்குப் போனார்கள். சிலர் இங்கும் அங்கும் உட்கார்ந்துகொண்டோ நின்று கொண்டோ குடும்பப்பிரச்னைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பொடிசுகள் ஒவ்வொருவர் கால்மாட்டுக்குள்ளும் நுழைந்து ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர்.

இரவு பந்தி பலுமாறலில் இருந்த சம்முகநாதன் அப்போது தான் முன்னால் வந்து முற்றத்திற்கு வந்து யாரையோ எதிர்பார்த்த மாதிரி சுற்றும் முற்றும் பார்த்தான். அவனைப் பார்த்தவுடன் செல்லையா,

“ சம்முகண்ணே.. வாங்க ஒரு கை போடலாம்..”

என்று கூப்பிட்டான்.

” இல்லடே சோலி கிடக்கு.. அடிக்கடி என்னயத்தான் கூப்பிடுவாக..”

என்று பெருமையுடன் சொன்னான். அப்போது செல்லையாவுக்குப் பக்கத்திலிருந்த வேலுமாமா,

” ஏல சம்முகம்.. உனக்கு யோகமில்லேயடா.. என்ன ஒழைச்சி என்ன செய்ய.. எல்லாம் மிஸ்ஸாயிருச்சேடா..”

என்று சொல்லவும் சம்முகநாதனின் முகம் இருண்டுபோய் விட்டது. நிலைமையை சங்கரநாராயணன் தான் சமாளித்தான்.

” சும்மா இரிங்க….மாமா.. எந்த நேரத்தில என்ன பேசுதுன்னே தெரியாது.. சம்முகம் நீ போய் உன்னோட புல்புல்தாராவ எடுத்துட்டு வந்து ரெண்டு பாட்ட அவுத்துவிடுடே..”

என்று சொன்னவுடன் சம்முகநாதனின் முகம் பிரகாசமாகிவிட்டது. உடனே உள்ளே போய் புல்புல்தாராவை எடுத்துக் கொண்டு வந்தான். அவன் எடுத்து வருவதைப் பார்த்த கோவிந்தமாமா ” எந்த நேரத்தில என்ன வேல பாக்கல தலைக்கு மேல சோலி கிடக்கு “ என்று சொன்னதைப் பொருட்படுத்தவில்லை சம்முகநாதன். சபைக்கு நடுவில் அதை வைத்து கம்பிகளை முறுக்கி கார்டை எடுத்தான். செல்லையா உடனே,

” சம்முகண்ணே.. ரூப்பு தேரா மஸ்தானா?”

என்று கேட்டான். அதைக்கேட்டதும் சங்கரநாரயணன்,

” என்னா அழகுடா அந்தப்பய ராஜேஷ்கன்னா..”

என்று சொல்ல, அதை இடைமறித்து வேலுமாமா,

” ஏல சர்மிளாடாகுர் அந்தப்பிள்ளைக்கென்ன கொறச்சலா..”

என்று தன்னுடைய ஓட்டைப்பல்லைக் காட்டிச் சிரித்தார். சம்முகநாதன் ஒரு கணம் கண்களை மூடினான். கைவிரல்கள் பொத்தான்களில் வேகவேகமாகத் தாளமிட பாட்டு அந்த முரட்டுக்கம்பிகளிலிருந்து கசிந்து பரவியது. எந்தப் பாட்டை வாசித்தாலும் அந்தப் பாட்டின் அத்தனை நெளிவுசுளிவுகளையும் வாசித்தான். மனம் ஒன்றி ஒருவித லயத்துடன் தலையாட்டிக் கொண்டே அவன் வாசித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். அந்த இரவின் அமைதியில் அவர்கள் எல்லோருடைய மனங்களும் ததும்பிக் கொண்டிருந்தன.

அந்தத் ததும்பலின் உச்சகட்டமாக ஒரு சோகமான இசைப்பனுவல் வந்தது. யாருக்கும் அது என்ன பாட்டு என்றே புரியவில்லை. ஆனால் செல்லையா மகாபளுவன். மெதுவாகப் பக்கத்திலிருந்த சங்கரநாராயணனிடம் முணுமுணுத்தான். மன்னாதி மன்னன் படத்தில் வருகிற கண்களிரண்டும் உன்னை எங்கே என்று தேடுமோ என்ற பாட்டு. அதை ஒருவருக்கொருவர் சொல்லித் தெரிந்து கொண்டபோதும் சம்முகநாதன் கண்களைத் திறக்காமல் மெய்ம்மறந்து வாசித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும்போது வேறு ஒரு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. அவன் முகபாவம் கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டேயிருந்தது. கண்களும் புருவமும் சுருங்கின. வாய்கூட லேசாய் கோணியது. ஒரு அபூர்வமான பாவம் அவன் முகத்தில் கூடி வந்தது. எல்லோரும் வைச்சகண் வாங்காமல் சம்முகநாதனையே பார்த்துக் கொண்டிருக்க கடையநல்லூர்கலியாணம் பெரியப்பாவின் குரல் கேட்டது,

” ஏல சம்முகம் போதும்ல..காலைல..ஆறுமணிக்கு கோயில்ல இருக்கணும் பாத்துக்க.. போய்த்தூங்குங்க..”

கர்ணகடூரமாய் ஒலித்த அந்தச் சத்தத்தில் ஒருகணம் சம்முகநாதன் உடல் நடுங்கி விட்டது. இசையின் கடைசித்துணுக்கோடு ஒரு விம்மலும் கேட்டது. கேட்டது என்று சங்கரநாராயணனும், ச்சே..ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லை.. என்று செல்லையாவும் பேசிக் கொண்டனர். அவர்கள் திரும்பிப் பார்க்கும்போது சம்முகநாதன் புல்புல்தாராவைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே போய்க் கொண்டிருந்தான்.

என் காதுக்குள் யாரோ கிசுகிசுப்பாய் சொல்லிக்கொண்டேயிருந்த மாதிரி இருந்தது. கண்களைத் திறக்க முடியாமல் திறந்தேன். இருட்டத் தொடங்கியிருந்தது. சித்தி அடுக்களையிலிருந்தாள். சித்திதான் கதை சொல்லிக் கொண்டிருந்தாளா? ஆனால் நேரில் பார்த்த மாதிரியே இருந்ததே. சித்தப்பாவின் அந்த முகம். அதில் தெரிந்த உணர்ச்சிகள். எல்லாவற்றுக்கும் மேல் அந்த விம்மல். குழப்பத்துடன் எழுந்து கைகால் முகம் கழுவினேன். சித்தி கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு புறப்படத்தயாரானேன்.

சித்தி, குத்துவிளக்குக்கு அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சித்தப்பாவின் புகைப்படத்தைக் கயில் எடுத்து முந்தானையால் துடைத்து மீண்டும் கீழே வைத்தாள். பின்னர் மெலிந்து நீண்ட கரங்களால் குத்துவிளக்கை ஏற்றினாள். அப்படியே சித்தப்பாவின் படத்துக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கினாள். எழுந்து நிமிரும்போது,

” அவுகளுக்கு உங்கம்மாவைக் கட்டணும்னுதான் ஆசை..உங்கம்மாவுக்கும் அந்த நெனப்பு இருந்திருக்கு..உங்க சித்தப்பாவை யாருக்குத்தான் பிடிக்காது! என்ன செய்ய? உங்கம்மாவக் கட்டியிருந்தா இன்னும் கொஞ்சநாள் இருந்திருப்பாரோ என்னமோ? எல்லாம் எந்தலையெழுத்து அவரைக் கூட்டிட்டுப்போயிட்டு…”

என்று முணுமுணுத்தாள். அது ஏதோ அசரீரி மாதிரி எனக்குள் இறங்கியது. நான் உள்ளுக்குள் நடுநடுங்கிப் போனேன். அதற்குப் பிறகு எனக்கு வந்த யோசனையெல்லாம் என் அம்மாவை எப்படி நான் எதிர்கொள்ளப்போகிறேன் என்பது தான்.

நன்றி- கணையாழி அக்டோபர்2012

புகைப்படம்- மோகன் தாஸ்வடகரா SketchGuru_20121121212036

Thursday, 22 November 2012

வர்ணாசிரமத்தின் உடலரசியல்

 

உதயசங்கர்Mohan Das (52)

 

வேட்டைச்சமூகம் மறைந்து வேளாண்சமூகம் உருவாகத்துவங்கும் போது குடிமைச்சமூகத்தில் வேலைப்பிரிவினைகள் தோன்றின. இந்த வேலைப்பிரிவினைகள் தான் முதன்முதலில் மனிதர்களை மேல் கீழ் அடுக்குகளில் பிரித்து வைத்த ஆதிப்பிரிவினை எனலாம். ஆனால் இந்த அடுக்குகளில் இருந்த மனிதர்களுக்கு அந்த அடுக்கில் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. ஒரு அடுக்கிலிருந்து இன்னொரு அடுக்கிற்கு மாறுவதில் எந்தக் குழப்பமும் இல்லை. வேலைப்பிரிவினையின் அடிப்படையில் நீர்மையாக அமைந்த ஒரு பிரிவினை மட்டுமே அப்போதைய குடிமைச்சமூகத்தில் இருந்தது. உதாரணத்துக்கு வேளாண்மை செய்தவர் மருத்துவராகவும், மருத்துவராக இருந்தவர் தச்சுவேலை செய்யவும் அதனடிப்படையில் அந்தந்தத் தலைமுறை மனிதர்கள் வேலைப்பிரிவினையின் அடுக்குகளில் பிரித்து வைக்கப்பட்டனர். இதே மாதிரி பிளட்டோவின் உலோகத்தத்துவமாகவும் கிரேக்கத்தில் பிறந்தது. மனிதர்களை தங்கமாகவும், வெள்ளியாகவும், தாமிரமாகவும், இரும்பாகவும் பிரித்திருந்தது அந்தத் தத்துவம். ஆனால் எந்த உலோகமும் எந்த உலோகமாகவும் உருமாற்றம் அடையும்படியான நீர்மையான விதிமுறைகள் அதில் இருந்தன. அதனால் ஸ்பார்ட்டகஸ் என்ற அடிமை அரசனாகவும் முடிந்தது. இந்த நீர்மையான அமைப்பில் ஒரு ஜனநாயக உணர்வு இருந்தது. குடிமைச்சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் எந்த அடுக்கிலிருந்தும் எந்த அடுக்கிலும் மாறுவதற்கான வாய்ப்புகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. பிராமணீயம் முதலில் இதைத் தகர்த்தது. நீர்மையான இந்த வேலைப்பிரிவினைகளை தாங்கள் கைப்பற்றிய ஆன்மிக அதிகாரத்தின் துணையோடு இறுகச் செய்தது. வேலைப்பிரிவினைகளை பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் கொண்டு வந்தது. அதன் மூலம் ஒரு புதிய உடல் எந்த சாதியில் பிறக்கிறதோ அந்த உடல் அந்தச் சாதியினரின் தொழிலைச் செய்யவேண்டும். அந்த உடல் கருப்போ, சிவப்போ, முட்டாளோ, புத்திசாலியோ, பலவானோ, பலகீனனோ, எப்படியிருந்தாலும் அந்த உடல் அது பிறந்த சாதிக்குரிய தொழிலைச் செய்யவேண்டும். வர்ணாசிரமக்கோட்பாட்டின்படி அந்தச் சாதிக்குரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

குடிமைச்சமூகத்தில் உடலுழைப்பு, மூளையுழைப்பு என்று வேலைப்பிரிவினைகளைச் செய்து கொண்டிருந்த உடல்களை சுத்தம்/அசுத்தம் என்ற அடிப்படையிலேயே மனுஸ்மிருதி பிரித்தது. உடலுழைப்பை அசுத்தமானதாகவும் மூளையுழைப்பு சுத்தமானதாகவும் நிலை நிறுத்தியது. சாதியப்படிநிலைகளில் பிராமணரைத் தவிர சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர், எல்லோரையும் சுத்த/அசுத்தத்தின் படிநிலையில் வரிசைப்படுத்தியது. அந்த வரிசையின் உயர்ந்த அல்லது மேல் படியில் பிராமணர்கள் தங்களை இருத்திக் கொண்டனர். அதற்கு அவர்கள் கைப்பற்றிய ஆன்மீக அதிகாரம் பயன்பட்டது. வர்ணாசிரமத்தின் அடுத்தடுத்த படிநிலைகளில் அடுத்தடுத்த சாதிகளை இருத்தி வைத்தனர். எந்தப்படிநிலைகளிலும் இல்லாமல் கீழே சேற்றில் பஞ்சமர்களை வீழ்த்தினர். ஒப்பீட்டளவில் சுத்தமும் அசுத்தமும் தீண்டாமைத் தத்துவத்தின் அளவுகோலாகப் பயன்பட்டது. அதாவது தற்காலிகத் தீண்டாமை தீட்டு என வரையறுக்கப்பட்டு அதனைக் கழிப்பதற்கென ( சுத்தப்படுத்துவதற்கென ) சடங்குகள் உருவாக்கப்பட்டு அதைப் பிராமணர்கள் செய்வதன் மூலம் தீட்டான மனிதர்கள், இடம், பொருள், மீண்டும் தங்கள் பழைய நிலைமையை அடைவார்கள். பிறப்பிலிருந்து இறப்பு வரை (பிள்ளை பிறந்த வீடு, பூப்படைந்த வீடு, இறந்தவீடு, )தற்காலிகத் தீண்டாமை என்கிற தீட்டுகளை ஒவ்வொரு சாதியினரும் சடங்குகள் மூலமாக கழிக்கின்றனர். அதனால் அவர்களை தீண்டாமை என்ற தத்துவத்தை அவர்களுடைய முழுவாழ்வில் கடைப்பிடிக்கச் செய்திருக்கிறது அதனால் தான் எல்லாச்சாதியினர் மனதிலும் தீட்டு, தீண்டாமை ஒரு தவறாகவோ, அபத்தமாகவோ, அருவெறுப்பாகவோ தோன்றவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தீண்டாமையின் உச்சத்தில் பிராமணர்கள் தங்களை இருத்திக் கொண்டார்கள். அதன் அதலபாதாளத்தில் தலித்துகளை வைத்தது. அதாவது இன்னொரு வகையில் வியாக்கியானம் செய்தோமானால் தீண்டாமையின் உச்சத்தில் இருக்கிற பிராமணர்கள் யாரையும் தீண்டக்கூடாது, அதே போல அவர்களையும் யாரும் தீண்டக்கூடாது. பிராமணர்களைத் தீண்டியவர்கள் தீட்டாவதில்லை. அவர்கள் பிராமணரைத் தொட்டதினால் ஏற்பட்ட தீட்டைப் போக்கக் குளித்துச் சுத்தம் செய்து கொள்வதில்லை. ஆனால் மற்றவர்களைத் தீண்டிய அல்லது மற்றவர்களால் தீண்டப்பட்ட பிராமணர் தீட்டாகி விடுகிறார். அவர் மற்றவர்கள்தீண்டியதால் அல்லது தீண்டப்பட்டதால் ஏற்பட்ட தீட்டை சடங்குகள் மூலமோ குளித்துச் சுத்தம் செய்தோ தன்னைப் புனிதப்படுத்திக் கொள்கிறார். இப்படியே தீண்டாமையின் கீழ்நிலையில் இருக்கும் தலித்துகளின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அவர்கள் மற்றவர்களைத் தீண்டியதால் அல்லது தீண்டப்படுவதால் அவர்கள் தீட்டாவதில்லை. அதற்காக அவர்கள் தீட்டுக் கழிப்பதில்லை. ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் அல்லது அவர்களால் தீண்டப்பட்டவர்கள் தீட்டாகி விடுகிறார்கள். அவர்கள் தீட்டுக் கழிக்கிறார்கள். ஆக ஒரே செயல் வர்ணாசிரமக்கோட்பாட்டின் உச்சத்தில் இருக்கிற பிராமணர்களுக்கு மேன்மையாகவும் அதன் அடிமட்டத்தில் இருக்கிற தலித்துகளுக்கு கீழ்மையாகவும் மாறியது. ஆன்மீக அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த தன் இருத்தலுக்கான அத்தியாவசியத் தேவையாக தீண்டாமையை உருவாக்கி அதை நிலைநிறுத்தியது. அது மட்டுமல்ல மற்ற சாதியினருக்கும் அதை மடைமாற்றம் செய்தது. தீண்டாமை என்பது பிராமணியம் உடலுழைப்பின் மீது கொண்ட வெறுப்புணர்வு. அந்த வெறுப்புணர்வை உடல்களின் மீது விதித்தது. இந்த சாதியில் பிறந்த உடல் தூய்மையானது என்றோ தூய்மையற்றது என்றோ பிறப்பின் அடிப்படையில் உறுதிப்படுத்தியது. அதற்கு தூய்மை/ தூய்மையின்மை என்ற தத்துவார்த்த விளக்கத்தைக் கொடுத்தது. அதற்கு பஞ்சபூதத்தத்துவத்தைப் பயன்படுத்தியது தான் விநோதம்.

இந்த உலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றால் ஆனது. பஞ்சபூதங்கள் இல்லையெனில் உலகம் இல்லை. இவை அனைத்தும் சமமானவை. தூய்மையானவை. பரிசுத்தமானவை. தூய்மை செய்பவை. தன்னைத்தானே தூய்மை செய்து கொள்பவை. இந்த பஞ்சபூதங்களில் ஒன்று இல்லையெனினும் உலகம் இல்லை. இந்த உலகம் நிலைத்திருக்க பஞ்சபூதங்கள் அவசியமானவை. இயற்கையின் அங்கமான மனித உடல்களிலும் இந்த பஞ்சபூதங்கள் இருப்பது இயற்கையே. வியர்வை, மலம், மூத்திரம், சளி, வாயுக்கள், என்ற ஐந்து தூய்மையின்மைகள் உடலின் இயங்கியலில் வெளிப்படுவது இயல்பு. இந்தத் தூய்மையின்மைகளை வைத்து உடலுழைப்பு செய்யும் உடல்களை தூய்மையற்ற உடல்கள் என்றும் எனவே தீண்டத்தகாத உடல்கள் என்றும் வரையறுத்தது பிராமணியம். தீண்டத்தகுந்தவர்கள் தங்கள் அசுத்தங்களைக் கொட்டும் கிட்டங்கியாக தீண்டத்தகாதவர்களை வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

பஞ்சபூதங்களின் நேர்மறையான அர்த்தத்தை மாற்றி அதற்கு எதிர்மறையான அர்த்தத்தைக் கொடுத்து தங்களுடைய அதிகாரப்படிநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது பிராமணியம். தீண்டத்தகாதவர்களை அந்த நிலையிலேயே வைத்திருப்பதற்கு இந்த பஞ்சபூதங்களையே பயன்படுத்தவும் செய்கிறது. நிலமே தீட்டானதாக மனுஸ்மிருதி சொல்கிறது. நிலத்தில் உழைப்பைச் செலுத்துவதைத் தவிர அவர்களை நிலத்தை விட்டு விலக்கி வைத்திருக்கிறது. நீர் அவர்களுக்கு விலக்கப் பட்டிருக்கிறது. காற்று வீசும் திசையிலிருந்தும் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். நெருப்பையும் அவர்கள் தன்னிச்சையாகப் பயன்படுத்தமுடியாது. ஆனால் நெருப்பினால் அவர்களை புடம் போடுவார்கள் ( நந்தன் ) வெளியிலிருந்தும் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி அவர்களுக்கு பஞ்சபூதங்களையும் விலக்கிவைத்து அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக, அசுத்தமானவர்களாக காட்டுவதில் தந்திரமாக செயல்பட்டிருகிறது பிராமணியம்.

இயற்கையின் அங்கம் தான் உடல் என்பதால் பஞ்சபூதங்கள் எல்லாஉடல்களிலும் இருக்கின்றன. அப்படியென்றால் எல்லாஉடல்களும் அது மூளையுழைப்பு உடலாக இருந்தாலும் சரி, உடலுழைப்பு உடல்களாக இருந்தாலும் சரி, சமமான மதிப்புடையவையே. சமமான மதிப்புடைய உடல்களுக்கிடையில் சமத்துவம் வேண்டும். இதற்கு பஞ்சபூதங்களின் நேர்மறையான அர்த்தத்தை மீட்டெடுக்க வேண்டும். எல்லாமூலகங்களும் முக்கியமானவை. எந்த ஒரு மூலகமும் எந்த ஒரு மூலகத்தை விட குறைந்ததில்லை. அதே போல யாரும் யாருக்கும் குறைந்தவரில்லை. இந்த சமத்துவம் வருவதற்குத் தீண்டாமை ஒழிப்பு என்ற மேலோட்டமான கருத்து போதாது. ஏனெனில் ஏற்கனவே சொன்ன மாதிரி எல்லாசாதியினரும் இந்தத் தீண்டாமையை தீட்டு என்ற தற்காலிக வடிவத்திலேனும் தொடர்ந்து தங்கள் வாழ்வில் எதிர்கொண்டு வருகிறார்கள். அதற்கு அவர்களுடைய மனம் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய மனதை வசப்படுத்துவதற்காகவே சடங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே சடங்குகள் இருக்கும் வரை தீட்டு, தீண்டாமை இருக்கும். சாதிகள் இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். எனவே அம்பேத்கார் சொன்ன மாதிரி சாதிகள் ஒழிந்தால் தான் பிராமணியம் ஒழியும். பிராமணியம் ஒழிந்தால் தான் மானுட சமத்துவம் மலரும்.

நன்றி- மலைகள் இணைய இதழ்

புகைப்படம்- மோகன்தாஸ்வடகரா

Monday, 19 November 2012

ஊசிப்போன முத்தம்

உதயசங்கர்Mohan Das (79)

 

ஊசிப்போன முத்தமொன்று

என் வாசல் கதவைத் தட்டியது

கதவைத் திறக்குமுன்னே

வாசனை துளைத்தது

தயக்கம் என் கைகளைக்

கட்டிவிட முயற்சித்தது

எச்சரிக்கை என் கால்களில்

விலங்கினைப் பூட்டியது

பயம் என் கண்களில்

இருளைப் பூசியது

முத்தப்பசியினால்

உயிர்வாடிக் கிடந்தாலும்

கதவைத் திறக்கவில்லை

ஊசிப்போன முத்தமேயானாலும்

சுயமரியாதையுள்ளதல்லவா?

என்னைப் புறக்கணித்து  ஊசிப்போன முத்தம் 

சென்ற பாதையெங்கும்

மோப்பம் பிடித்துத் திரிகிறேன்.

கிடைக்காதா ஊசிப்போன முத்தத்தின்

  சிறுருசியேனும்?

புகைப்படம்- மோகன்தாஸ் வடகரா

Tuesday, 21 August 2012

தீட்டு, தீண்டாமை, விலக்குதல்…….

 

உதயசங்கர்

Mohan Das (99)

இந்திய சமூகத்தின் நடைமுறை வாழ்வில், தீட்டு, தீண்டாமை, விலக்குதல், இந்த மூன்று செயல்களும் மிக முக்கியமானவையாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கேள்வியுமின்றி, எந்த விமர்சனப்பார்வையுமின்றி இவற்றை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இதை பண்பாட்டு விழுமியங்களாக, பாரம்பரிய உன்னதங்களாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான் சாதாரண மக்களே,

“ அதுக்காக நம்ம பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சம்பிரதாயத்தை விட்டுர முடியுமா? “

“ தீட்டுக் கழியாம எங்கேயும் போகக் கூடாது..”

“ அதைத் தொடாதே.. தீட்டாயிரும்..”

என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அது மட்டுமல்ல. ஜனநாயகஎண்ணம் கொண்டவர்களுக்குக் கூட இந்த கொடிய நடைமுறைகள் கண்ணை உறுத்துவதில்லை. அநுதாபமும், பரிதாபமும், உதவியும் செய்தால் போதுமானது என்ற சிந்தனை வருகிறது. ஒட்டு மொத்தமாக இந்த நடைமுறைகளை ஒழிப்பதற்கான செயல் திட்டம் பண்பாட்டுத் தளத்தில் துவங்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிராமணியமும், மனுதர்மமும் எப்படி தீட்டை, தீண்டாமையை, விலக்குதலை, மக்கள் மனதில் தந்திரமாகப் புகுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இவற்றின் உள்ளார்ந்த தத்துவம் என்ன? என்பதையும் அந்தத் தத்துவத்தின் நடைமுறைகள் என்ன? என்பதைக் குறித்தும் புரிந்து கொண்டால் தான் பண்பாட்டுத் தளத்தில் அதை எதிர் கொள்வதற்கான புதிய பண்பாட்டு ஆயுதங்களை உருவாக்கமுடியும்.

விலக்குதல், தீட்டு, தீண்டாமை, என்ற வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்க ஒரே அர்த்தமுள்ளவை போலத் தோன்றினாலும் அடிப்படையில் மிக ஆழமான வேறுபாடுகளைக் கொண்டவை. பெரும்பாலும் தங்களுடைய தொடர்பெல்லைக்கு வெளியே நிறுத்துதல் என்ற அளவில் இந்த மூன்று செயல்களும் ஒரே மாதிரியான அர்த்தம் தருவதாகக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்வாதாரமான உடல், உணவு, உடை, உறைவிடம், தான். ஆனால் விலக்குதலும், தீட்டும், தற்காலிகமானவை. நடைமுறையில் எல்லோர் வாழ்விலும் இந்தத் தீட்டும், விலக்குதலும், அவர்களுடைய வாழ்வனுபங்களூடாக நடக்கின்றன. தலித்துகள் உட்பட எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.

விலக்குதலை மிகச் சாதாரணமாக, சுய காரணங்களாக, எனக்குக் கத்தரிக்காய் பிடிக்காது, எனக்கு முட்டை பிடிக்காது, சாப்பிட்டால் ஒவ்வாமை வந்து விடும். உடல் நலம் கெட்டுவிடும் அவரைப் பிடிக்காது, இவரைப்பிடிக்காது பச்சை நிறம் பிடிக்காது இன்ன பிற விஷயங்களைச் சொல்லலாமென்றால் சமூகக் காரணங்களாக ஊர் விலக்கம், சாதி விலக்கம், வீட்டு விலக்கம் என்று சொல்லலாம். சுயகாரணங்கள் ஒவ்வொரு தனிநபரைப் பொறுத்தும் மாறிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தும் வேறு வேறு பொருட்கள், வேறு வேறு நபர்கள், வேறு வேறு விஷயங்கள் என்று மாறிக் கொண்டேயிருக்கும். அதே போல சாதி விலக்கம், ஊர் விலக்கம், வீட்டு விலக்கமும் ஒரு இனக்குழு அல்லது சாதியின் எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்றாததற்கான தண்டனையாக அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகம் எடுக்கிற முடிவுப்படி ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அந்த இனக்குழு அல்லது சாதியிலிருந்து விலக்கப்படும். ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் விலக்கப்பட்ட அந்தத் தனிநபர் அல்லது குடும்பம் மீண்டும் அந்த இனக்குழு அல்லது சாதியில் மீண்டும் சேருவதற்குப் பரிகாரம் உண்டு. அதை அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகமே பரிகாரத்தைச் சொல்லிவிடும். பரிகாரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதே மாதிரி தான் ஊர் விலக்கமும், வீட்டு விலக்கமும். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் விலக்குதலுக்கு பரிகாரம் இருக்கிறது என்பதும் அதைச் செய்தால் மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான். விலக்குதல் சேர்த்தலையும் இணைத்தபடியே தான் வருகிறது. இதையும் தீண்டாமை என்று சொல்லலாமென்றால் அது தற்காலிகமானது என்பது மட்டுமல்ல அதில் தீண்டுதலுக்கான நடைமுறையும் இருக்கிறது.

மனிதனின் பிறப்பு, இறப்பு, பூப்படைதல், பெண்களின் மாதவிடாய் நாட்கள், போன்றவற்றை தீட்டாக கற்பித்து வந்திருக்கிறார்கள். இதெல்லாவற்றுக்கும் அசுத்தம் எதிர்வு தூய்மை என்ற கருதுகோளை முன்வைத்தும், அசுத்தமான இடங்களில் தான் ஆவிகள் நடமாடும் என்ற கற்பிதத்தின் அடிப்படையிலும் தீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தை பிறந்த வீடென்றால் பதினாறு நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் வீட்டோடு சேர்க்க ‘ வீடு சேர்த்தல் ‘ என்ற சடங்கை நிகழ்த்துகிறார்கள். அன்றிலிருந்து வீட்டுக்குள் தாயும் குழந்தையும் சேர்க்கப்பட்டு அன்றாட நடைமுறை வாழ்வில் இணைகிறார்கள். அவர்கள் இப்போது வெளியே வரலாம். எல்லோருடனும் கலந்து பழகலாம். அது வரை அவர்கள் தீட்டானவர்கள். தீண்டத்தகாதவர்கள். ஆக பிள்ளை பிறந்தவீட்டுத் தீட்டு ஒரு சடங்கின் ( பரிகாரம் ) மூலம் கழிக்கப்படுகிறது.

பெண் பூப்படைதலும் தீட்டு. அவளைத் தனியே வீட்டு முற்றத்திலோ, தனிக்குடிலிலோ, தனிமைப்படுத்தி வெளியுலகிலிருந்து விலக்கி வைத்து, தலைக்குத் தண்ணீர் ஊற்றினாலும், புண்ணியார்த்தனம் என்ற சடங்கை ( பரிகாரம் ) ஒரு பிராமணர் வந்து செய்த பிறகே அந்தத் தீட்டு கழிகிறது. தீட்டுக் கழிந்த பின்னே அந்தப்பெண் வெளியுலகோடு கலந்து பழகலாம். அது வரை இருந்த தற்காலிகத் தீண்டாமை மாறி தீண்டுதலுக்கான நடைமுறை வந்து விடுகிறது. அதன் பிறகும் அது தொடர்கிறது என்பது பெரிய கொடுமை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் பெண் தனிமைப்படுத்தப் படுவதும், மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ கழிந்து அவள் குளித்தபிறகு தான் வீட்டுக்குள் மற்ற பொருட்களைத் தீண்ட அநுமதிக்கப்படுவாள். அது வரை அவளுக்குத் தனித் தட்டு, தம்ளர், படுக்கை, உடை, உறைவிடம். வயதாகி மாதவிடாய் நிற்கும்வரை அந்தப் பெண் இந்தத் தற்காலிகத் தீண்டாமையிலிருந்து தப்பமுடியாது. ( இப்போது நகரங்களில் நவீன வாழ்வின் பல காரணிகளால் இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது ) இங்கேயும் தீண்டாமை தற்காலிகமானது. தீண்டப்படுவதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது.

இறப்பு வீட்டிலும் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை அந்த வீடும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களும் தீட்டாகவேக் கருதப்படுகிறார்கள். கருமாதி விஷேசம் ( பரிகாரம்) முடிந்ததும் அந்த வீடும், வீட்டிலுள்ளவர்களும் தீட்டுக் கழிந்தவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மற்றவர்களைத் தீண்டுவதோ மற்றவர்கள் அவர்களைத் தீண்டுவதோ தீட்டாகாது. இதுவும் தற்காலிகமான தீண்டாமை தான்.

மேலே குறிப்பிட்ட தீட்டு குறித்த முக்கியமான நிகழ்வுகளில் தற்காலிக தீட்டினால் விலக்கப்பட்ட மனிதர்களை, பொருட்களை, தீட்டு கழியுமுன்பே தீண்டிவிட்டால் தீண்டியவர் தன்னுடைய உடலைக் கழுவிச்( குளித்து) சுத்தம் செய்வதன் மூலம் உடனே அந்தத் தீட்டைக் கழித்து விடலாம். தீட்டினால் விலக்கப்பட்டவர்கள் தான் தீட்டு கழிவதற்காகக் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சடங்கு நடத்திய பின்பே மற்றவர்களைத் தீண்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு அது தேவையில்லை. தீட்டுக்காரரைத் தொட்ட தீட்டை குளித்தால் போக்கி விடலாம். தீட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வீட்டுக்காரர்கள் சில நாட்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் சிறிது நேரத்துக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்து உடனே குளித்து தன் தீண்டாமையைப் போக்கிக் கொள்ளலாம்.

இப்படிச் சில நாட்கள், சிறிது நேரம் தீண்டத் தகாதவர்களாக, மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்ட பொருட்கள், விலக்கப்பட்ட இடம், சில சடங்குகளைச் செய்வதன் மூலம் மீண்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுகிறார்கள். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பிறப்பு, சாவு, பூப்படைதல், மாதவிடாய் காலம், என்று மாறி மாறி தற்காலிகமாகத் தீண்டத்தகாதவர்களாகவும், பரிகாரங்களுக்குப்பின் தீண்டத்தக்கவர்களாகவும் நிலை மாறிக் கொண்டேயிருக்க வைப்பதன் மூலம் பிராமணியம் தீண்டாமை என்ற வருணாசிரமத்தின் இழிவான நடைமுறையை எல்லோரையும் பின்பற்ற வைத்துள்ளது. இது தான் பிராமணியத்தின் இழிவான தந்திரம்.

நடைமுறையில் எல்லாசாதியினரும் தங்கள் வாழ்நாளில் சில காலம் தீட்டினால் தீண்டத் தகாதவர்களாக இருப்பதனால் தீண்டாமைக்கு அவர்களுடைய மனம் வசமாகிவிட்டது. அதை இயல்பாகப் பார்க்கும் மனநிலை உருவாகிறது. சாதியப்படிநிலையை ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் வருணாசிரமப்படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளை தீண்டத்தகாதவர்களாக வைத்திருப்பதை எந்தக் கேள்வியும் இன்றி உறுதிப்படுத்தும் நடைமுறை உருவாகிறது. தலித் மக்களின் எழுச்சியை, விழிப்புணர்வைச் சகிக்க முடியாத மனநிலை பிராமணியத்தால் சமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம், தீட்டு எல்லாம் பயன்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் குறிப்பாக இடது சாரிகள் இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களுக்கு எதிராக சமரசமில்லாத யுத்தம் தொடுக்க வேண்டிய காலம் இது.

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Friday, 17 August 2012

எழுத்துகளின் தேசம்

உதயசங்கர்Mohan Das (28)

சின்னமுத்து ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தான். மூணாங்கிளாஸ் படித்துக் கொண்டிருக்கும் போது அவனுடைய அப்பா இறந்து விட்டார். கட்டிடவேலையில் கையாளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தவறி மாடியில் இருந்து விழுந்து விட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஒரு மாதகாலம் சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் போய் விட்டது. அப்பாவைக் கவனிக்க வேண்டி அம்மாவும் வேலைக்குப் போகவில்லை. அதனால் ஏகப்பட்ட கடன். அம்மாவுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. சின்னமுத்துவின் படிப்பு நிறுத்தப் பட்டது. சின்னமுத்துவுக்கும் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க வேறு வழி தெரியல. அழுகை அழுகையாய் வந்தது. ஒரு நாள் முழுக்க அழுது கொண்டிருந்தான். அம்மா ஒரு வாக்குறுதி தந்தாள். கடன் அடைந்துவிட்டால் அவனை மறுபடியும் பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைப்பதாகச் சொல்லியிருந்தாள். பாவம் அவளும் என்ன செய்வாள்.

டீக்கடை அண்ணாச்சி ரெம்ப நல்லவர். எப்போதாவது அவன் டீக்கிளாஸைக் கழுவும் போது தவறிக் கீழே விழுந்து உடைந்து விட்டால் மட்டும் அவ்ன் பிடதியில் ஒரு அடி விழும். மற்றபடி திட்டுவதோடு சரி. சின்னமுத்து சுறுசுறுப்பான பையன். துறுதுறுவென வேலை பார்த்துக் கொண்டிருப்பான். டீக்குடித்த தம்ளர்களை உடனுக்குடன் சுத்தமாகக் கழுவி வைப்பான். காலை எட்டு மணிக்கு தெருக்களில் இருக்கிற கடைகளுக்குப் போய் அங்கே வேலை பார்ப்பவர்களிடம்,

“ அண்ணே, டீ, காப்பி, பால், பஜ்ஜி, வடை, போண்டா, வேணுமாண்ணே!”

என்று கேட்டு அலைவான். அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டு கேட்டவர்களுக்கு கேட்டமாதிரிச் சரியாகக் கொண்டு போய் கொடுப்பான். ஆள்களுக்குத் தான் எத்தனை விதமான ருசி! வித் அவுட் சுகர், அரைச்சீனி, லைட், ஸ்டிராங், டபுள்ஸ்டிராங், மலாய் போட்டு,கடுங்காபி, பிளாக் டீ, என்று புதிய புதிய வார்த்தைகளைக் கற்றுக் கொண்டான். எல்லாத்தையும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்வான். அண்ணாச்சியும் அழகாக அப்படியே போட்டுக் கொடுப்பார். அதையெல்லாம் கொண்டு போய் கொடுத்து விட்டு திரும்பப் போய் தம்ளர்களையும் காசையும் வாங்கிக் கொண்டு வந்து அண்ணாச்சியிடம் கொடுப்பான். சிலபேர் அப்புறம் காசு தருகிறேன் என்பார்கள். அதை நினைவில் வைத்துக் கொள்வான். அன்று இரவுக்குள் அதை வாங்கி விடுவான். ஞாபகம் வைத்திருப்பது ஒன்றும் சின்னமுத்துவுக்கு பெரிய விசயம் இல்லை. அவன் மூணாங்கிளாஸ் படித்துக் கொண்டிருக்கும் போதே பதினாறாவது வாய்ப்பாடு வரை மனப்பாடம் செய்து தப்பில்லாமல் ஒப்பிப்பானே.

மத்தியான வேளையில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாக இருக்கும். அப்போது தான் அண்ணாச்சியும் உட்காருவார். அவனும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அன்று வந்த தினசரி நாளிதழ்களை எழுத்துக் கூட்டி வாசிப்பான். ஒவ்வொரு செய்தியையும் வாசித்து முடித்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி பொங்கும். பாதி நாளிதழ்களைத் திருப்புவதற்குள் மறுபடியும் வியாபாரம் சூடு பிடித்து விடும். அவன் ஏக்கத்துடன் நாளிதழை வைத்து விட்டு மறுபடியும் சுறுசுறுப்பாக அலைய ஆரம்பிப்பான். இரவு ஒன்பது மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டுக்கு புறப்படுவார் அண்ணாச்சி. அவனுக்கு அந்த நாளிதழ்களை வீட்டுக்குக் கொண்டு போய் படிக்கவேண்டும் என்று ஆசை ஆசையாக இருக்கும். ஒரு நாள் அண்ணாச்சி நல்லமனநிலையில் இருக்கும் போது மெதுவாகக் கேட்டான்.

“ அண்ணாச்சி..இந்தப் பேப்பரை நான் கொண்டு போகட்டா..”

“ எதுக்குலே..”

“வீட்ல.. வைச்சிப் படிக்க..”

“ இன்னம் என்னல.. படிப்பு..அதான் படிச்சி கிழிச்சிட்டீல்ல..”

என்று சொல்லி அதிர்வேட்டு போல சிரித்தார். அவன் அந்தத் தாளை எடுத்து மடித்து டவுசர் பைக்குள் வைத்துக் கொண்டான். கொஞ்ச நாளீலேயே அண்ணாச்சியின் குணாதிசயங்களைத் தெரிந்து கொண்டு விட்டான் சின்னமுத்து. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு முடித்ததும் உடம்பு அடித்துப் போட்டதைப் போல வலிக்கும். தூக்கம் கண்களைச் சுழற்றும். ஆனால் விளக்கைப் போட்டு, கொண்டு வந்த செய்தித்தாளை முழுவதும் படித்துவிட்டான். அவ்ன் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அம்மா கண்கலங்கினாள். சின்னமுத்துவுக்கு நாளிதழைப் படித்து முடித்ததும் அபூர்வமான புன்னகை பொங்கி வந்தது. அந்தச் சிரிப்புடனே தூங்கி விட்டான்.

ஒரு நாள் சின்னமுத்துவின் கனவில் வெள்ளைவெளேரென்று ஒரு ஊர் வந்தது. அங்கே எல்லாமனிதர்களும் கன்னங்கரேர் என்று கருப்பாய் இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! சின்னமுத்து அந்த ஊரின் மீது பறந்து கொண்டிருந்தான். நம்ப முடியாமல் திரும்பிப் பார்த்தால் கைகளோடு சேர்ந்து இறக்கைகள் முளைத்திருந்தன. அதை விட ஆச்சரியம் அருகில் நெருங்க நெருங்க அங்கே இருந்த மரங்கள், செடிகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள், எல்லாமே ஏதோ ஒரு எழுத்து வடிவில் இருந்தனர். குளத்தில் தண்ணீர் இல்லை. அதற்குப் பதில் குளம் முழுவதும் எழுத்துகள் நிரம்பியிருந்தன. அதில் நீந்திக் கொண்டிருந்த வாத்துகளும் எழுத்துக்களாகவே இருந்தன. எழுத்து மரத்தில் எழுத்துப்பூக்கள் பூத்திருந்தன. எழுத்துக் காய்களும் எழுத்துப்பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

சின்னமுத்து அங்கே உள்ள ஒரு எழுத்துத் தோட்டத்தில் இறங்கினான். எழுத்துப் பட்டாம்பூச்சிகள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து பாட்டுப் பாடின. அவனைப் பார்க்க ஊரிலிருந்த எல்லோரும் வந்தனர். முன்பே அவனைத் தெரிந்தவர்கள் போல அவனிடம் கைகுலுக்கிப் பேசினார்கள். எல்லோரும் அவர்களைத் தாங்களாகவே அறிமுகம் செய்து கொண்டனர். ஒருவர் அவனிடம் கைகுலுக்கியபடியே,

“ என் பெயர் ‘க’ ” என்றார். இன்னொருவர் முதுகை வளைத்தபடி வந்தார்.

“ என் பெயர் “ஏ’ “ என்று சொன்னார். சின்னமுத்துவுக்கு அவர்கள் எல்லோரும் நன்றாகத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். சிலர் கை குலுக்கும்போதே அவர்கள் உருவத்தைப் பார்த்து அவர்களுடைய பெயரைச் சொல்ல ஆரம்பித்து விட்டான். அவ்னுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது ஒரு சுழற்காற்று வீச ஆரம்பித்தது. எல்லா எழுத்துகளும் பறக்க ஆரம்பித்தன. “சின்னமுத்து” என்று அந்தக் காற்று அலறியது. அந்தச் சத்தத்தில் அவன் முழித்து விட்டான். அவனுடைய அம்மா அவ்ன் தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டே அருகில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

“ கண்ணு.. மணி ஆயிருச்சிடா.. எந்திரிச்சி பல் தேய்ச்சி குளிடா”

என்று அன்போடு சொன்னாள். அவன் எழுந்து வேலைக்குக் கிளம்பினான்.

அன்றிலிருந்து எங்கே எந்தத் துண்டு பேப்பர் கிடைத்தாலும்கூட சின்னமுத்து படித்துக் கொண்டே திரிந்தான். ரோட்டில் போகும்போது கூட படித்துக் கொண்டே போனான். ஒரு முறை டீயைக் கொட்டி விட்டான். ஒரு முறை சைக்கிளில் மோதி விட்டான். நல்லவேளை ஒருமுறை மோட்டார்சைக்கிள்காரன் பிரேக் போட்டு நிறுத்தினான். யார் என்ன திட்டினாலும் சிரித்தான். அண்ணாச்சியும் சத்தம் போட்டுப் பார்த்தார். ஆனால் அவன் வாசிப்பதை நிறுத்தவே இல்லை.

ஒரு நாள் டீக்கடை அண்ணாச்சி அவனிடம்,

“ பள்ளிக்கூடம் போறியாடா?”

என்று கேட்டார். பள்ளிக்கூடம் என்ற வார்த்தையைக் கேட்டதும் சின்னமுத்துவின் முகம் மலர்ந்தது. அவன் வேகமாகத் தலையாட்டினான். அண்ணாச்சி அவனைப் பார்த்து,

“ ஆனா கலையிலியும் சாயந்திரமும் வேலைக்கு வந்துரணும்..சரியா..”

என்று சொன்னார். சின்னமுத்து உற்சாகமாய்

“ சரி அண்ணாச்சி..” என்று கத்தினான். அவர் சிரித்துக் கொண்டே,

” நாளைக்கி உங்கம்மாவை வரச்சொல்லு..” என்று சொல்ல சின்னமுத்து உடனே,

” ரெம்ப நன்றி அண்ணாச்சி “ என்று சொன்னான். அதைக் கேட்ட அண்ணாச்சிக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவர் அதிர் வேட்டுப் போல சிரித்துக் கொண்டே,

“ அடச்சீ.. படுக்காளிப் பயலே ..” என்று சொல்லி சின்னமுத்துவின் கன்னத்தில் தட்டினார். சின்னமுத்துவைச் சுற்றி எழுத்துகள் பறந்து கொண்டிருந்தன. சின்னமுத்துவும் அந்த எழுத்துக்களோடு காடு, மலை, நாடு நகரங்களின் மீது பறந்து கொண்டிருந்தான்.

புகைப்படம்-மோகன்தாஸ் வடகரா

Friday, 10 August 2012

பாய்மரப்பாடல்

உதயசங்கர்

Mohan Das (17)

ததும்பிக் கொண்டிருக்கிறது என் கோப்பை

பீத்தோவனின் இசைக்கோர்வையை

தன் உடலில் வரைந்து திமிறிய

கடலின் அலைகளைப் போல

உயர்ந்தும் தாழ்ந்தும்

எதையோ வேண்டுகிறது உன்னிடம்

துடிதுடிப்புடன் தன் இதயத்தை

உன் திசை நோக்கிப் படகாய் செலுத்துகிறது 

உயிர்க்காற்றின் காதலைச்

சடசடக்கும் பாய்மரத்துணியில் 

பாடல்களாய் எழுதுகிறது 

நடுங்கும் உன் உதடுகளின்

கரைகளில் சலசலக்கும் சிற்றோடையாய்

ஊர்ந்து உன் உயிரை

என் கடலில் முத்தெடுக்க

அழைக்குமென் கோப்பையின்

குரல் கேட்கிறதா?

ததும்பும் என் கோப்பைக்கும்

உன் உதடுகளுக்கும் உள்ள தூரத்தில்

ஊஞ்சலாடுகிறது.

என் வாழ்வும் சாவும்

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

Saturday, 28 July 2012

முற்றத்து நீர்

உதயசங்கர்

Mohan Das (76)

உமாவின் வேலை தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அருகிலிருக்கும் அடி பம்பில் இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வந்து வீட்டில் ஊற்றவேண்டும். வீட்டு முற்றத்தைப் பெருக்கித் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்பு பாடங்களைப் படிக்க வேண்டும். மேடும் பள்ளமுமான மண்தரை முற்றத்தில் உமா தெளித்த தண்ணீர் அங்கங்கே சின்னச் சின்னப் பள்ளங்களில் தேங்கிக் கிடந்தது.

கோடைவெயில் உக்கிரமாய் அடித்தது. உமா முற்றத்தில் தண்ணீர் தெளித்து விட்டுப் போனதும் எங்கிருந்தோ ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்தது.கீழே பள்ளங்களில் தேங்கிக் கிடந்த தண்ணீரைத் தலையைச் சாய்த்து தன் அலகால் உறிஞ்சிக் குடித்தது. இரண்டு மூன்று முறை குடித்த பிறகு தான் அதற்கு உயிர் வந்தது போல் இருந்தது. தொண்டையிலிருந்து குரலே அப்போது தான் வெளி வந்தது கீச் கீச்சென்று கத்தியபடியே உமாவின் வீட்டு வாசலை ஒரு முறை சுற்றி விட்டுப் பறந்து போய் விட்டது.

பின்பு தினமும் சாயங்காலம் சரியாக ஐந்து மணிக்கு அந்தக் குருவி வந்துவிடும். உமாவும் அதற்குள் முற்றத்தில் தண்ணீர் தெளித்திருப்பாள். வழக்கம் போல தண்ணீரைக் குடித்து விட்டு வீட்டு வாசலை ஒரு முறை சுற்றிவிட்டுப் பறந்து போய் விடும்.

சில நாட்களுக்குப் பிறகே இதைக் கவனித்தாள் உமா. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பள்ளிக்கூடத்தில் எல்லோரும் குடிக்கும் பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கக் கூடாது, தனியாக பாட்டிலில் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று வாத்தியார் கண்டிப்பாய் சொல்லி விட்டார். எல்லோரும் தொட்டுப் புழங்குகிற தம்ளரை இவள் தொடக்கூடாதாம். பள்ளிக்கூடம் போகவே பிடிக்கவில்லை. ஆனால் சுபா, செண்பகவல்லி, கனகு, இவர்கள் அப்படிச் சொல்லவில்லை. இவளுடன் தொட்டுப் பிடித்து விளையாடுவார்கள். இவள் கொண்டு போகிற கேப்பைக் களியை, வெஞ்சனத்தைச் சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பாட்டை இவளும் சாப்பிடுவாள். அவர்கள் யாரும் அவளிடம் வித்தியாசம் காட்டியதேஇல்லை.

பள்ளிக்கூடம் விடும் போதும் வருத்தம் வந்து விடும். பள்ளிக்கூடம் போகும்போதும், வீட்டுக்கு வரும்போதும் ஊரைச் சுற்றி அவள் வீடு இருக்கிற காலனிக்கு வரவேண்டும். ஊருக்குள்ளே கூடி தெருக்கள் வழியே வரக்கூடாதாம். அய்யா கண்டிசனா சொல்லிட்டாரு. அதனாலே பள்ளிக்கூடம் விட்டு வரும்போது ஆள் நடமாட்டமில்லாத பொட்டல் காடு வழியே வருவாள் உமா. பயமாக இருக்கும். அங்கே நிழலுக்குக் கூட பச்சை மரங்களோ செடி கொடிகளோ கிடையாது.

அய்யாவிடம் ஏன் அவள் மட்டும் ஊரைச் சுற்றி வரவேண்டும் என்று கேட்டிருக்கிறாள். அதற்கு அய்யா ஏதேதோ மேல்சாதி கீழ்சாதி என்று புலம்பினார். உமாவுக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. தங்களை மற்றவர்கள் சரி சமமாக நடத்தவில்லை என்பதும், இழிவு படுத்துகிறார்கள் என்பதும். இதைப் பற்றி யோசித்திருக்கிறாள். இதைச் சரி செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறாள்.

அவள் வீடு இருந்த பொட்டலில் மரம் செடி கொடி இல்லாத இடத்திற்கு எங்கிருந்து வருகிறது இந்தச் சிட்டுக்குருவி? அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதெல்லாம் பள்ளிக்கூடம் விட்டதுமே உமாவுக்கு ஒரு பரபரப்பு உண்டாகி விடும். தாமதிக்காமல் வீட்டுக்கு ஓடுவாள். அவசர அவசரமாக குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் எடுத்து வந்து தெளித்து முடித்தவுடன் வந்துவிடும் அந்தக் குருவி. எங்கிருந்து தான் வருமோ? எப்படித் தான் அதற்குத் தெரியுமோ? சர்ரென்று பறந்து வந்து விடும்.

ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து உமா வீட்டுக்கு வருவதற்கு நேரமாகி விட்டது. வழக்கமான நேரம் தாண்டி விட்டது. பறந்து வந்த குருவி முற்றத்தில் ஈரம் இல்லாமல் இருப்பதைக் கண்டதும் திகைத்து விட்டது. ஏற்கனவே மிகவும் தாகத்துடன் பறந்து வந்த குருவிக்குச் சோர்வாக இருந்தது. ஒவ்வொரு பள்ளமாய் தத்தித் தத்திச் சென்று பார்த்தது. குரல் எழுப்பக் கூட அதற்குச் சக்தியில்லை.

அப்போது தான் பறந்து வந்தாள் உமா. வேக வேகமாக உள்ளே சென்று தண்ணீருக்காகப் பானைகளை உருட்டினாள். எதிலும் தண்ணீர் இல்லை. உடனே குடங்களை எடுத்துக் கொண்டு போய் தண்ணீர் கொண்டு வந்தாள். முதல் வேலையாய் முற்றத்தில் தண்ணீர் தெளித்தாள். அதற்குள் இருட்டி விட்டது. எந்த சத்தமும் இல்லை. இனி குருவி வரவே வராதா? இருட்டுக்குள் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அழுகை வரும்போல இருந்தது. திடீரென கீச்சென்ற ஒரு சத்தம் கேட்டது. குனிந்து பார்த்தாள். அவளுக்கு மிக அருகில் குருவி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு சந்தோசமுன்னா சந்தோசம். குதி குதியென்று குதித்தாள். குருவிக்கும் சந்தோசம். கீச் கீச் கீச் கீச்சென்று கத்தி அவளை வாழ்த்திப் பறந்து போனது.

Mohan Das (77)புகைப்படங்கள் – மோகன் தாஸ் வடகரா

Friday, 27 July 2012

ஒரு கை நீரள்ளி…

உதயசங்கர்

 

எப்போதும் கனவுகள் காண்பவன் நான். கனவுகளைச் சுவாசித்து, கனவுகளைத் தின்று, கனவுகளால் வளர்க்கப்படுபவன். கனவுகளின்றி ஒரு நாளும் நான் இருந்ததிலை. உறங்கியதில்லை. ஒரு ஐந்து நிமிடமே உறக்கம் என்றாலும் கனவுப்பூச்சி என்னைச் சுற்றி வலை பின்னத் தொடங்கி விடும். விழித்திருக்கும் போதும் கனவுகள் என்னை மொய்த்து விடும். என்ன உறங்கும்போது காணும் கனவுகளில் படைப்பூக்கத்தின் சக்தி நிரம்பி வழியும் என்றால் விழித்திருக்கும்போது அந்தப் படைப்பூக்கத்தின் செயல்பாடுகளாக முண்டியடிக்கும். நான் கனவுகள் காண்பதை விரும்புகிறேன். கனவுகளிலிருந்து என்னை யாரும் பிரித்து விடக் கூடாது என்று என்னைச் சுற்றி நானே அமைத்துக் கொண்ட ஒரு பிரத்யேகமான கூட்டில் இருப்பதையே பெரும்பாலும் விரும்புகிறவன். வாழ்க்கையே ஒரு கனவு தானோ என்று அவ்வப்போது வியந்து போகிறேன். பல சமயங்களில் நடந்து கொண்டிருப்பதெல்லாம் ஏற்கனவே கனவுகளில் நடந்து முடிந்ததான பிரமையும் வரும்.

நான் சந்தித்த மனிதர்களை ஏற்கனவே கனவுகளில் சந்தித்திருக்கிறேன். இனி சந்திக்கப் போகிறவர்கள் என் கனவுகளில் இப்போது உலவிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு அற்புதம். எத்தனை வண்ணங்கள்! எத்தனை பேதங்கள்! எத்தனை உருவங்கள்! எத்தனை குணங்கள்! வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ருசிக்கப் பேராவல் பொங்குகிறது. இத்தனை மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இருப்பதால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது. இயற்கை இனியது. மானுட வாழ்க்கை மகத்தானது. எத்தனை தத்துவங்கள்! எத்தனை படைப்புகள்! எத்தனை முரண்பாடுகள்! எத்தனை அதிசயங்கள்! எத்தனை அற்புதங்கள்! எத்தனை மர்மங்கள்! முடிவிலியான காலத்தின் எத்தனையோ ஜாலங்கள்! அந்த ஜாலத்தின் ஒரு கோலம் தானே இந்த பூமி, ஜீவராசிகள்,எல்லாம். நினைத்துப் பார்த்தால் காலப்பெருவெள்ளத்தின் ஒரு துளியின் துளியாக மனிதன். ஆனால் அவன் தான் காலத்தை அளக்கிறான். படைப்பே படைப்பாளியை விஞ்சும் முயற்சியை என்ன சொல்வது?

எனக்கு மனிதர்கள் மீது நம்பிக்கையிருக்கிறது. இந்தப் பூமியின் புத்திரர்கள் மானுடஅறத்தை பூமிப்பரப்பெங்கும் நிலைநிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. மீண்டும் மீண்டும் இந்த அறவுணர்வை வலியுறுத்தவே எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கிறார்கள். தங்களைப் பலி கொடுத்தேனும் மானுடத்தின் மகத்துவத்தை பிரேரணை செய்கிறார்கள். விகசிக்கும் வாழ்வின் கணங்களை, அந்தக் கணங்களில் வாழும் மனிதர்களைத் தங்கள் எழுத்தில் படைக்கிறார்கள். முரண்களையும், துயரத்தையும், அழுக்கையும், அவமானத்தையும், அவலத்தையும், படைக்கும் கலைஞன் தன் சக மனிதர்களின் மனதில் வாழ்க்கை குறித்த விசாரணையைத் துவக்கி வைக்கிறான். அதன் மூலம் அறவுணர்வைத் தூண்டி விடுகிறான். இதைச் செய்கிற படைப்புகள் உன்னதமான படைப்புகளாகின்றன.Mohan Das (102)

என் கனவுகளில் உலவிய மனிதர்கள் எல்லாம் எங்கோ நினைவுகளின் ஆழத்தில் புதைமணலில் புதைந்து கிடந்தார்கள். என் வாழ்வின் கணங்கள் தோறும் என்னைச் செதுக்கிய அந்தச் சாதாரண மனிதர்கள் இன்னமும் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் செய்ததைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது. மற்றவர்கள் அவர்களுக்குச் செய்ததைக் குறித்தும் தெரியாது. அதனால் அவர்கள் தன்முனைப்பின்றி, சுளித்தோடும் நதியின் சுழல்கள் எப்படியெல்லாம் சுழற்றுகிறதோ அப்படியெல்லாம் சுழன்று கொண்டே வாழ்கிறார்கள். அவர்களுக்குப் பலசமயங்களில் பெயரே கிடையாது. தங்கள் வாழ்வில் இப்படி எதிர்கொண்ட சாதாரணர்களைப் பற்றி பலரும் கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவர்கள் முக்கியப் பிரமுகர்கள் இல்லையே. ஆனால் அந்தச் சாதாரணர்கள் இல்லாமல் தாங்கள் உருவாகவில்லை என்று உணர்வதில்லை.

மகத்தான தியாகங்களால் ஆனது சாதாரணர்களின் வாழ்க்கை. அனுதினமும் தியாகம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தாங்கள் ஒரு தியாகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணராமலே. ஒரு புறம் சிலரிடம் குவியும் செல்வமும், மறு புறம் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அவலமும் கொண்ட இந்த அசமத்துவ சமூகத்தை இந்தச் சாதாரணமக்களே இயக்குகிறார்கள். சமூகத்தின் சமத்துவத்துக்காகவும் அவர்களே போராடுகிறார்கள். அவர்கள் புகழுக்காக அல்ல. அவர்களுடைய வாழ்வின் நெருக்கடி அவர்களைப் போராடத் தூண்டுகிறது. அந்தப் போராட்டம் என்பது அவர்களுக்காக மட்டுமில்லாமல் மானுடம் முழுமைக்குமாக விடிவுக்கானப் போராட்டமாக உருமாறுகிறது. அவர்கள் தான் இந்த பூமியின் கதாநாயகர்கள். வரலாற்றை இயக்குபவர்கள். வரலாற்றை உருவாக்குபவர்கள். நான் அவர்களின் பக்கம் நிற்பதையே என்றும் விரும்புகிறேன்.

இரவின் அமைதியில் களக் களக் என்ற மெல்லிய சத்தத்துடன் இருளுக்குள் மினுக்கும் நீர்ப்பரப்பு, அவ்வப்போது நீருக்கு மேல் துள்ளிவிழும் மீன்கள், நீரின் உயிர்வாசனை, எல்லாம் என் நினைவு நதியில் பெரும் சலனங்களை ஏற்படுத்தின. மறதியின் புதைசேற்றில் ஆழ்ந்து கிடந்த அந்தச் சாதாரண மனிதர்கள் எழுந்து நதியின் நீர்ப்பரப்பில் வெள்ளிமீன்களென மின்னினார்கள். .என்றென்றும் பெருமைப்படும் என்னுடைய பிறந்த ஊரான கோவில்பட்டி என்னுடன் பேசியது. என்னுடைய பால்யகால நண்பர்கள் குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்த காட்சிகள் தெரிந்தன. என்னுடைய தோழர்கள் கையில் செங்கொடியுடன் கோஷமிட்டார்கள். புரட்சிக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். நான் கொண்டாடுகிற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளோடு பிரமாண்டமாய் விசுவரூபம் எடுத்து நின்றார்கள். இவர்கள் என்னோடு பேசியதை நான் புரிந்து கொண்ட விதத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் விளைவே நினைவு என்னும் நீள்நதி தொடர்.

இந்தத் தொடரைச் சாத்தியமாக்கிய இரண்டு பேரை என்றென்றும் மறவேன். என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட என் அருமைத் தோழன் எழுத்தாளர் பவா செல்லத்துரை நான் இந்தத் தொடர் எழுத முதல் காரணம். அடுத்தது மீடியா வாய்ஸ் பத்திரிகையின் சிறப்பாசிரியர் திரு. ராவ் அவர்கள். அலைபேசிப் பேச்சிலேயே நீண்ட நாள் பழகிய நெருக்கமான நண்பராக மாறியவர். தொடரின் ஒவ்வொருபகுதியையும் படித்தவுடன் என்னைத் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர். சென்னையில் அவரை நேரில் சந்தித்த போது கண்ட அவருடைய எளிமை என்னை வியப்பிலாழ்த்தியது. அவரின்றி இந்தத் தொடர் சாத்தியமாயிருக்காது. என்னுடைய ஒவ்வொரு கட்டுரைக்கும் உயிர்த்துடிப்புடன் அற்புதமான ஓவியங்கள் வரைந்த ஓவியர் மனோகர் அவர்கள், அவ்வப்போது என்னிடம் தொடர் குறித்து உரையாடியதை மறக்க முடியாது. அவருடைய ஓவியங்கள் என்னுடைய கட்டுரைகளுக்கு மிகப் பெரிய பலம். அவருக்கு என் அன்பும் நன்றியும். ஒவ்வொரு வாரமும் தொடர் குறித்து நினைவுபடுத்தி அதை அனுப்பியவுடன் படித்து சந்தேகங்களைத் தெளிவுபடுத்திய நண்பர் பாலாவுக்கு நன்றி. இந்தத் தொடர் முழுவதும் அதன் வடிவமைப்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது. அழகாக வடிவமைத்த மீடியா வாய்ஸ் பத்திரிகை இதழ் வடிவமைப்புக் குழு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

மீடியா வாய்ஸ் இதழ் வந்ததும் வாங்கிப் படித்து விட்டு உடனே தங்களுடைய கருத்துகளைச் சொன்ன என் இனிய நண்பர் மீடியா வாய்ஸ் பத்திரிகையின் தலைமை நிருபர் திரு. பி.என்.எஸ்.பாண்டியன், சென்னையைச் சேர்ந்த நண்பர் சீனிவாசன், என்னுடைய எழுத்தாள நண்பர்கள் கமலாலயன், அப்பணசாமி, மாரீஸ், கவிஞர் லட்சுமிகாந்தன், நாறும்பூநாதன், கிருஷி, சு.வெங்கடேசன், பால்வண்ணம், எனது துணைவியார் திருமதி. மல்லிகா, மற்றும் மீடியா வாய்ஸ் வாசகர்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.

எழுதித் தீராதது வாழ்க்கை வாழ்வெனும் பேராற்றில் ஒரு கை நீரையே அள்ளியிருக்கிறேன். இன்னும் மீதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அன்பின் ஊற்றாய் அருஞ்சுனையாய் எங்கும் மானுடம் நிறைந்திருக்கிறது.. வாழ்க மானுடம்!

நன்றி – மீடியா வாய்ஸ் 

புகைப்படம் – மோகன் தாஸ் வடகரா

Thursday, 26 July 2012

சுயநலத்துக்கு ஒரு கடிதம்

Mohan Das (98)

உதயசங்கர்

 

அன்பே

சின்னஞ்சிறு வயதில்

ஒரு துளி ஒளியைப்போல

ஒரு கண இருளைப்போல

கவர்ச்சியான தின்பண்டம் போல

காணாத காட்சி போல

கன்னியின் முயங்கல் போல

கதிரொளியின் வெப்பம் போல

பசித்த வயிற்றுக்கு உணவைப்போல

பாழும் கிணற்றுப் புதையல் போல

கனிவின் சாரம் போல

கனவின் குழப்பம் போல

கவித்துவ ஒளியைப் போல

காதல் கருக்கொண்ட முதல் முத்தம் போல

இல்லாத ஒன்றின் நிழலே போல

பிள்ளைபிடிப்பவன் போல

பிடித்துக் கொண்டாய் என்னை

பிச்சை எடுக்க வைக்கிறாய்

பெருமை பேச வைக்கிறாய்

உன் பலிபீடத்துக்கு பூசாரியாக்குகிறாய்

எப்போதும் உன்புகழ் பாடச் சொல்கிறாய்

உன்னைக் காப்பாற்ற யாரையும்

பலிபீடத்தில் பலியிடச் செய்கிறாய்

வாழ்நாள் முழுவதும் சுரண்டச்சொல்கிறாய்

முரண்டு செய்தால் பட்டினி போடுகிறாய்

சாட்டையை வீசி வசப்படுத்துகிறாய்

துளித் துளியாய் மதுவைக் கொடுத்து

மயங்கச் செய்கிறாய்

செய்ய நினைப்பதொன்றாய்

செய்வதொன்றாய் என்னை

நிலைபிறள வைக்கிறாய்

காமத்தின் பேய்க்காற்றாய் என்னைச் சுழட்டி

ஒரே வாயில் விழுங்கிறாய்

அன்பே போதும்

என்னை விட்டு விடு

உன் போதைக்கு நான்

உணவோ, ஊறுகாயோ இல்லை

எல்லோருடனும் இணைந்து வாழ

என் உணவு உடை காற்று

எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள

எத்தனிக்கும் எளிய மானிடன் நான்Mohan Das (43)

விட்டு விடு என்னை.

 

 

புகைப்படங்கள்- மோகன்தாஸ் வடகரா