Tuesday 21 August 2012

தீட்டு, தீண்டாமை, விலக்குதல்…….

 

உதயசங்கர்

Mohan Das (99)

இந்திய சமூகத்தின் நடைமுறை வாழ்வில், தீட்டு, தீண்டாமை, விலக்குதல், இந்த மூன்று செயல்களும் மிக முக்கியமானவையாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கேள்வியுமின்றி, எந்த விமர்சனப்பார்வையுமின்றி இவற்றை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இதை பண்பாட்டு விழுமியங்களாக, பாரம்பரிய உன்னதங்களாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான் சாதாரண மக்களே,

“ அதுக்காக நம்ம பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சம்பிரதாயத்தை விட்டுர முடியுமா? “

“ தீட்டுக் கழியாம எங்கேயும் போகக் கூடாது..”

“ அதைத் தொடாதே.. தீட்டாயிரும்..”

என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அது மட்டுமல்ல. ஜனநாயகஎண்ணம் கொண்டவர்களுக்குக் கூட இந்த கொடிய நடைமுறைகள் கண்ணை உறுத்துவதில்லை. அநுதாபமும், பரிதாபமும், உதவியும் செய்தால் போதுமானது என்ற சிந்தனை வருகிறது. ஒட்டு மொத்தமாக இந்த நடைமுறைகளை ஒழிப்பதற்கான செயல் திட்டம் பண்பாட்டுத் தளத்தில் துவங்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிராமணியமும், மனுதர்மமும் எப்படி தீட்டை, தீண்டாமையை, விலக்குதலை, மக்கள் மனதில் தந்திரமாகப் புகுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இவற்றின் உள்ளார்ந்த தத்துவம் என்ன? என்பதையும் அந்தத் தத்துவத்தின் நடைமுறைகள் என்ன? என்பதைக் குறித்தும் புரிந்து கொண்டால் தான் பண்பாட்டுத் தளத்தில் அதை எதிர் கொள்வதற்கான புதிய பண்பாட்டு ஆயுதங்களை உருவாக்கமுடியும்.

விலக்குதல், தீட்டு, தீண்டாமை, என்ற வார்த்தைகள் மேலோட்டமாகப் பார்க்க ஒரே அர்த்தமுள்ளவை போலத் தோன்றினாலும் அடிப்படையில் மிக ஆழமான வேறுபாடுகளைக் கொண்டவை. பெரும்பாலும் தங்களுடைய தொடர்பெல்லைக்கு வெளியே நிறுத்துதல் என்ற அளவில் இந்த மூன்று செயல்களும் ஒரே மாதிரியான அர்த்தம் தருவதாகக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்வாதாரமான உடல், உணவு, உடை, உறைவிடம், தான். ஆனால் விலக்குதலும், தீட்டும், தற்காலிகமானவை. நடைமுறையில் எல்லோர் வாழ்விலும் இந்தத் தீட்டும், விலக்குதலும், அவர்களுடைய வாழ்வனுபங்களூடாக நடக்கின்றன. தலித்துகள் உட்பட எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.

விலக்குதலை மிகச் சாதாரணமாக, சுய காரணங்களாக, எனக்குக் கத்தரிக்காய் பிடிக்காது, எனக்கு முட்டை பிடிக்காது, சாப்பிட்டால் ஒவ்வாமை வந்து விடும். உடல் நலம் கெட்டுவிடும் அவரைப் பிடிக்காது, இவரைப்பிடிக்காது பச்சை நிறம் பிடிக்காது இன்ன பிற விஷயங்களைச் சொல்லலாமென்றால் சமூகக் காரணங்களாக ஊர் விலக்கம், சாதி விலக்கம், வீட்டு விலக்கம் என்று சொல்லலாம். சுயகாரணங்கள் ஒவ்வொரு தனிநபரைப் பொறுத்தும் மாறிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தும் வேறு வேறு பொருட்கள், வேறு வேறு நபர்கள், வேறு வேறு விஷயங்கள் என்று மாறிக் கொண்டேயிருக்கும். அதே போல சாதி விலக்கம், ஊர் விலக்கம், வீட்டு விலக்கமும் ஒரு இனக்குழு அல்லது சாதியின் எழுதப்படாத விதிமுறைகளைப் பின்பற்றாததற்கான தண்டனையாக அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகம் எடுக்கிற முடிவுப்படி ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் அந்த இனக்குழு அல்லது சாதியிலிருந்து விலக்கப்படும். ஆனால் இதில் மிக முக்கியமான விஷயம் விலக்கப்பட்ட அந்தத் தனிநபர் அல்லது குடும்பம் மீண்டும் அந்த இனக்குழு அல்லது சாதியில் மீண்டும் சேருவதற்குப் பரிகாரம் உண்டு. அதை அந்த இனக்குழு அல்லது சாதியின் கூட்டுச் சமூகமே பரிகாரத்தைச் சொல்லிவிடும். பரிகாரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதே மாதிரி தான் ஊர் விலக்கமும், வீட்டு விலக்கமும். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் விலக்குதலுக்கு பரிகாரம் இருக்கிறது என்பதும் அதைச் செய்தால் மீண்டும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான். விலக்குதல் சேர்த்தலையும் இணைத்தபடியே தான் வருகிறது. இதையும் தீண்டாமை என்று சொல்லலாமென்றால் அது தற்காலிகமானது என்பது மட்டுமல்ல அதில் தீண்டுதலுக்கான நடைமுறையும் இருக்கிறது.

மனிதனின் பிறப்பு, இறப்பு, பூப்படைதல், பெண்களின் மாதவிடாய் நாட்கள், போன்றவற்றை தீட்டாக கற்பித்து வந்திருக்கிறார்கள். இதெல்லாவற்றுக்கும் அசுத்தம் எதிர்வு தூய்மை என்ற கருதுகோளை முன்வைத்தும், அசுத்தமான இடங்களில் தான் ஆவிகள் நடமாடும் என்ற கற்பிதத்தின் அடிப்படையிலும் தீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தை பிறந்த வீடென்றால் பதினாறு நாட்கள் கழித்து தாயையும், குழந்தையும் வீட்டோடு சேர்க்க ‘ வீடு சேர்த்தல் ‘ என்ற சடங்கை நிகழ்த்துகிறார்கள். அன்றிலிருந்து வீட்டுக்குள் தாயும் குழந்தையும் சேர்க்கப்பட்டு அன்றாட நடைமுறை வாழ்வில் இணைகிறார்கள். அவர்கள் இப்போது வெளியே வரலாம். எல்லோருடனும் கலந்து பழகலாம். அது வரை அவர்கள் தீட்டானவர்கள். தீண்டத்தகாதவர்கள். ஆக பிள்ளை பிறந்தவீட்டுத் தீட்டு ஒரு சடங்கின் ( பரிகாரம் ) மூலம் கழிக்கப்படுகிறது.

பெண் பூப்படைதலும் தீட்டு. அவளைத் தனியே வீட்டு முற்றத்திலோ, தனிக்குடிலிலோ, தனிமைப்படுத்தி வெளியுலகிலிருந்து விலக்கி வைத்து, தலைக்குத் தண்ணீர் ஊற்றினாலும், புண்ணியார்த்தனம் என்ற சடங்கை ( பரிகாரம் ) ஒரு பிராமணர் வந்து செய்த பிறகே அந்தத் தீட்டு கழிகிறது. தீட்டுக் கழிந்த பின்னே அந்தப்பெண் வெளியுலகோடு கலந்து பழகலாம். அது வரை இருந்த தற்காலிகத் தீண்டாமை மாறி தீண்டுதலுக்கான நடைமுறை வந்து விடுகிறது. அதன் பிறகும் அது தொடர்கிறது என்பது பெரிய கொடுமை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் பெண் தனிமைப்படுத்தப் படுவதும், மூன்று நாட்களோ ஐந்து நாட்களோ கழிந்து அவள் குளித்தபிறகு தான் வீட்டுக்குள் மற்ற பொருட்களைத் தீண்ட அநுமதிக்கப்படுவாள். அது வரை அவளுக்குத் தனித் தட்டு, தம்ளர், படுக்கை, உடை, உறைவிடம். வயதாகி மாதவிடாய் நிற்கும்வரை அந்தப் பெண் இந்தத் தற்காலிகத் தீண்டாமையிலிருந்து தப்பமுடியாது. ( இப்போது நகரங்களில் நவீன வாழ்வின் பல காரணிகளால் இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது ) இங்கேயும் தீண்டாமை தற்காலிகமானது. தீண்டப்படுவதற்கான பரிகாரத்தையும் கொண்டிருக்கிறது.

இறப்பு வீட்டிலும் பதினாறாவது நாள் விஷேசம் முடியும் வரை அந்த வீடும் அந்த வீட்டிலுள்ள உறுப்பினர்களும் தீட்டாகவேக் கருதப்படுகிறார்கள். கருமாதி விஷேசம் ( பரிகாரம்) முடிந்ததும் அந்த வீடும், வீட்டிலுள்ளவர்களும் தீட்டுக் கழிந்தவர்களாகி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் மற்றவர்களைத் தீண்டுவதோ மற்றவர்கள் அவர்களைத் தீண்டுவதோ தீட்டாகாது. இதுவும் தற்காலிகமான தீண்டாமை தான்.

மேலே குறிப்பிட்ட தீட்டு குறித்த முக்கியமான நிகழ்வுகளில் தற்காலிக தீட்டினால் விலக்கப்பட்ட மனிதர்களை, பொருட்களை, தீட்டு கழியுமுன்பே தீண்டிவிட்டால் தீண்டியவர் தன்னுடைய உடலைக் கழுவிச்( குளித்து) சுத்தம் செய்வதன் மூலம் உடனே அந்தத் தீட்டைக் கழித்து விடலாம். தீட்டினால் விலக்கப்பட்டவர்கள் தான் தீட்டு கழிவதற்காகக் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சடங்கு நடத்திய பின்பே மற்றவர்களைத் தீண்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு அது தேவையில்லை. தீட்டுக்காரரைத் தொட்ட தீட்டை குளித்தால் போக்கி விடலாம். தீட்டு நிகழ்வுகள் நடைபெற்ற வீட்டுக்காரர்கள் சில நாட்கள் தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் சிறிது நேரத்துக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்து உடனே குளித்து தன் தீண்டாமையைப் போக்கிக் கொள்ளலாம்.

இப்படிச் சில நாட்கள், சிறிது நேரம் தீண்டத் தகாதவர்களாக, மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்ட பொருட்கள், விலக்கப்பட்ட இடம், சில சடங்குகளைச் செய்வதன் மூலம் மீண்டும் தீண்டத்தக்கவர்களாக மாறுகிறார்கள். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பிறப்பு, சாவு, பூப்படைதல், மாதவிடாய் காலம், என்று மாறி மாறி தற்காலிகமாகத் தீண்டத்தகாதவர்களாகவும், பரிகாரங்களுக்குப்பின் தீண்டத்தக்கவர்களாகவும் நிலை மாறிக் கொண்டேயிருக்க வைப்பதன் மூலம் பிராமணியம் தீண்டாமை என்ற வருணாசிரமத்தின் இழிவான நடைமுறையை எல்லோரையும் பின்பற்ற வைத்துள்ளது. இது தான் பிராமணியத்தின் இழிவான தந்திரம்.

நடைமுறையில் எல்லாசாதியினரும் தங்கள் வாழ்நாளில் சில காலம் தீட்டினால் தீண்டத் தகாதவர்களாக இருப்பதனால் தீண்டாமைக்கு அவர்களுடைய மனம் வசமாகிவிட்டது. அதை இயல்பாகப் பார்க்கும் மனநிலை உருவாகிறது. சாதியப்படிநிலையை ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் வருணாசிரமப்படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளை தீண்டத்தகாதவர்களாக வைத்திருப்பதை எந்தக் கேள்வியும் இன்றி உறுதிப்படுத்தும் நடைமுறை உருவாகிறது. தலித் மக்களின் எழுச்சியை, விழிப்புணர்வைச் சகிக்க முடியாத மனநிலை பிராமணியத்தால் சமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம், தீட்டு எல்லாம் பயன்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் குறிப்பாக இடது சாரிகள் இந்தச் சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயங்களுக்கு எதிராக சமரசமில்லாத யுத்தம் தொடுக்க வேண்டிய காலம் இது.

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

1 comment: