Wednesday, 15 August 2012

நமது வீட்டில் புராதனச் சடங்குகள்

karpoor

உதயசங்கர்

 

கலையும், அறிவியலும், மருத்துவமும், மந்திரமும், சடங்குகளும், ஆதியில் ஒன்றாகவே இருந்தன. ஆதிமனிதன் தன் வாழ்வில் எதிர்கொண்ட எதிர்பாராத புயல், மழை, மின்னல், நெருப்பு, வெள்ளம், வறட்சி, உற்பத்திக்குறைவு, போன்ற இயற்கை உற்பாதங்களுக்கான காரணங்களை அறியாததினால் தன்னை மீறிய சக்தியினைக் கட்டுப்படுத்த மந்திரங்களை சடங்குகளைக் கண்டுபிடித்தான். சடங்குகள், மந்திரங்கள் மூலமாக தனக்கு இழப்புகள் நேராதிருக்கும் வளம் பெருகும் என்று நம்பினான். ஒரு கற்பனையான செயல் மூலமோ, போலச்செய்தல் மூலமோ, யதார்த்த வாழ்வினை மாற்றிவிடலாம் என்று நினைத்தான். இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இயற்கையின் எல்லாப் பொருட்களிலும் ஆவி உள்ளுறைந்து இருப்பதாகவும் அவற்றின் ஆசாபாசங்களினால் தான் இயற்கையில் எல்லா உற்பாதங்களும் நிகழ்வதாகவும் முடிவு செய்தான். அவற்றிலும் நல்ல ஆவிகள் என்றும், கெட்ட ஆவிகள் என்றும் பிரிவினை இருப்பதாக நம்பினான். எனவே கெட்ட ஆவிகளைச் சடங்குகளின் மூலம், மந்திரங்களின் மூலம் சாந்தப்படுத்தினால் தனக்கு எந்த உபத்திரவமும் நேராது என்றும் அதே போல நல்ல ஆவிகளை வழிபடுவதின் மூலம் வளம் கொழிக்கும் என்றும் நம்பினான். இயற்கை சக்திகளின் இயக்கம் குறித்த அறிவின்மையினால் தனக்குப் புரியாத, தன்னை விடச்சக்தி வாய்ந்த இயற்கை நிகழ்வுகளைக் கற்பனையான செயல் மூலம் கட்டுப்படுத்திவிடலாம் என்ற அறிவியலறிவின் தொட்டில் பருவத்திலிருந்த ஆதிமனிதனின் நம்பிக்கையே ஆதியில் மந்திரங்களையும் சடங்குகளையும் தோற்றுவித்தது எனலாம்.

ஏனெனில் ஆதிமனிதன் இயற்கைப் பொருட்களையே வழிபட்டான். தனக்குத் துன்பம் தருகிற இயற்கைப்பொருட்களையும், தனக்கு அழிவை ஏற்படுத்துகிற இயற்கைப் பொருட்களையும் மட்டுமல்ல தனக்கு வளம் சேர்க்கிற இயற்கைப் பொருட்களையும் மந்திரங்கள் சடங்குகளின் வழியாக வணங்கினான். இதில் மந்திரங்கள் தான் முதலில் தோன்றியிருக்கிறது. அதன் பின்னரே சடங்குகள் தோன்றியிருக்கின்றன. ஆதியில் மனிதர்களுக்கு கடவுள் இல்லை. இயற்கையையே அவன் மந்திரங்கள் வழி வழிபட்டுக் கொண்டிருந்தான். அதனால் இயற்கையில் அவன் உற்றுக் கவனித்த நிகழ்வுகளை போலச் செய்யும் பாவனை நிகழ்வுகளையே அவன் மந்திரங்களாக உருவாக்கினான். உருளைக்கிழங்குச் செடி வளர்வதைப் பாவனையான செயல் மூலம் அவன் நிகழ்த்தினானெண்று ஜார்ஜ் தாம்சன் விளக்குவார். அதே போல மழை வேண்டுமென்றால் இடி, மின்னல், மழை போல பாவனை நடனங்கள் செய்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற கட்டளையிடுவதும் நடக்கும் என்று தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கூறுகிறார்.

ஆதியில் மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தியினை வழிபாடு, பலி, போன்ற செயல்களின் மூலம் வேண்டித் தாங்கள் விரும்புவதைப் பெற்று விடலாம் என்ற கருதுகோள் சில திட்டமிடப்பட்ட செயல்கள் மூலம் உருவாவதைச் சமயம் என்று சொல்லலாம்.அடிப்படையில் ஒரு விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுதலையும், வழிபாட்டையும் கொண்டது சமயமென்றால் பாவனைச் செயல்களையும் கட்டளையிடுதலையும் கொண்டது மந்திரமென்று சுருக்கமாகச் சொல்லலாம். சமயங்கள் தோன்றிய பிறகு மந்திரமும் சடங்கும் சேர்ந்து மந்திரச்சடங்குகளாகி விட்டன என்று ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் சொல்கிறார்.

ஆதி மனிதன் தன் அறிவுவளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் செய்த புராதன மந்திரச் சடங்குகள் இன்றும் நமது வீடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அறிவியலின் அற்புதங்கள் எதுவும் சமயத்தின் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல: மக்களின் பொதுப்புத்தியில் பரம்பரை பரம்பரையாக இந்த மந்திரச்சடங்குகள் சொல்லப்பட்டு கல்வெட்டு போல பதிந்திருப்பதும் ஒரு காரணம். மக்களின் பொதுப்புத்தியில் தலையிடாத வரை இந்த விதமான மந்திரச் சடங்குகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். நான்கு வகையான மந்திரச்சடங்குகள் இருக்கின்றன என்றும் தூய மந்திரம், தீய மந்திரம், உற்பத்தி மந்திரம், பாதுகாப்பு-அழிப்பு மந்திரம், என்றும் மானிடவியலாளர் பிரேசர் பிரிக்கிறார்.

வீடுகளில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையென்றால் உடனே நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வது இப்போதும் நடைபெறுகிற நிகழ்வு. மாரி நோய் வந்தவர்கள் மாரியம்மனுக்கு கண் உரு செய்து போடுவதாகவும், காலிலோ, மற்ற உடல் பகுதிகளில் வரும் நோய்கள் குணமாக அந்தந்த உடல் உறுப்புகளை செய்து காணிக்கையாகப் போடுகிற வழக்கத்தை நாம் பார்த்திருக்கலாம். அதே போல குழந்தை இல்லாதவர்கள் குறிப்பிட்ட கோவில்களில் உள்ள மரங்களில் தொட்டில் செய்து போடுவதும், இவையெல்லாம் ஒத்தது ஒத்த விளைவை உருவாக்கும் என்ற மந்திரச் சடங்கின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அதாவது உண்மையான உடலுறுப்பை ஒத்த செயற்கையான உடலுறுப்பை செய்து கோவிலுக்குக் கொடுப்பதாக நேர்ந்து கொள்வதின் மூலம் பாவனையான செயலைச் செய்து ( பொருளைக் கொடுத்து ) சாந்தப் படுத்துகிற வேலையை இந்த மந்திரச் சடங்கு செய்கிறது. தொட்டிலில் தன்னுடைய குழந்தையைப் போட்டு ஆட்ட வேண்டுமென்பது எல்லாப் பெண்களின் ஆசை. அந்த ஆசையை கோவில் மரத்தில் பாவனையான பொம்மைத் தொட்டிலை குழந்தைப் பொம்மையை இட்டுக் கட்டி விடுவதும் இந்த ஒத்த மந்திரத்தின் எச்சம் தான்.

சாதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் எல்லோர் வீடுகளிலும் வாசலில் சூடம் எரிவதைக் காணலாம். இது வியாபார ஸ்தலங்களிலும் நடக்கிறது. வீடுகளில் பெண்கள் நாலு சூடன்கட்டிகளை கைகளுக்குள் வைத்துக் கொண்டு வீட்டிலுள்ள எல்லோர் தலை, கை கால், உடல், முழுவதும் மூன்று முறை சுற்றி தூ தூ தூ வென மூன்று முறை துப்பச் சொல்லி வாசலில் கொண்டு போய் கொளுத்துவதை இப்போதும் பார்க்கலாம். அதே மாதிரி குழந்தைகளை அலங்காரம் செய்து கன்னத்தில் கருப்பாகத் திருஷ்டிப் பொட்டு வைத்து விடுவது, ஒரு கையில் உப்பையும், ஒரு கையில் மிளகாயையும் வைத்து உடல் முழுவதும் தடவி எரிகின்ற அடுப்பில் போடுவது, அப்படிப் போடும்போது “ ஊர்க்கண்ணு, உறவுக்கண்ணு, பாவிக்கண்ணு, பரப்பாக்கண்ணு, நாய்க்கண்ணு, நரிக்கண்ணு, எல்லாக்கண்ணும்….” என்று சொல்வதென்பதும், அடுப்பில் போடுகிற உப்பும்,மிளகாயும் வெடித்துச் சிதறுகிற போது “ பார்த்தியா எவ்வளவு கண்ணேறு பட்டிருக்கு..” என்று சொல்வதும் நடக்கிறது.

அதே போல முச்சந்தியில் பிடிமண்ணை எடுத்து தலை சுற்றி அடுப்பில் எரிவதும், கோழிமுட்டையை தலை சுற்றி வீதியில் எரிவதும், பூசணிக்காயைச் சுற்றி நடுச்சாலையில் போட்டு உடைப்பதும், கன்றை ஈன்ற பசுவின் நஞ்சுக்கொடியை பால் வடியும் மரங்களில் கட்டித் தொங்க விடுவதும், தொத்து மந்திரம் என்ற சடங்கின் எச்சம் தான்.

இயற்கையின் உற்பாதங்கள், எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, புதுக்கட்டிடங்கள் கட்டும் போது பூசணிக்காயைக் கட்டுவது, அகோரமாய் வைக்கோல் பொம்மை செய்து கட்டுவது, சீனிக்காரம், மிளகாய், எலுமிச்சம்பழம் இவற்றைக் கோர்த்து வண்டிகளில் கட்டுவது, காத்துக்கருப்பு அண்டாமலிருக்க கறுப்புக்கயிறு கையிலோ, காலிலோ கட்டுவது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லும் போது வேப்பிலை, அடுப்புக்கரி, இரும்புத் துண்டு போன்றவற்றை கொடுத்தனுப்புவது, எல்லாம் பாதுகாப்பு மந்திரமாகும்.

நோய்கள் குணமாக, நினைத்த காரியம் பலிதமாக, தெய்வங்களுக்கு மிருகங்களை, பறவைகளைப் பலி கொடுக்க நேர்ந்து கொள்வது, தீமையை மாற்றித் தருகிற மந்திரமாகும். மழைக்காக கொடும்பாவி எரித்தலும் இத்தகைய மந்திரசடங்கே.தீமைகளை எரித்து நன்மைகளைப் பெறவே இத்தகைய பலிகள் தரப்படுகின்றன. இன்று அரசியல் தலைவர்கள், கொடுங்கோலர்கள், மக்கள் விரோதிகள், ஆகியோரின் கொடும்பாவி எரிப்பையும் இந்த மந்திரச்சடங்கின் எச்சமாகவே கொள்ளலாம்.

ஆவிகள் உறைந்திருக்கும் காடுகளிலிருந்து மரங்களை வெட்டியெடுத்துக் கொண்டு வந்து கட்டிடங்கள் கட்டும் போது அந்த மரங்களுடன் அந்த ஆவிகளும் சேர்ந்து வந்து கட்டிடங்களில் குடியேறிவிடும் என்பது பழைய நம்பிக்கை. அந்த ஆவிகளை வெளியேற்றவே தச்சுக்கழித்தல் என்ற சடங்கு. கட்டிடங்களில் வேலை செய்த தச்சாசாரியே அந்தச் சடங்கைச் செய்கிறார். கோழியின் தலையை அறுத்து அதன் ரத்தத்தை நிலை,கதவு, ஜன்னல், மற்ற மரவேலைகள் உள்ள இடங்களில் தடவுவதின் மூலம் மரங்களின் வழியாக வந்த ஆவிகளை ரத்தவாடை காண்பித்து ஈர்த்துக் கொண்டு போய் வெளியேற்றுகிற சடங்கு தான் தச்சுக்கழித்தல்.

இந்தச் சடங்குகள் எல்லாம் ஆதியிலிருந்தே சிற்சில மாற்றங்களுடன் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும் புராதனச் சடங்குகள். இவற்றில் பிராமணமதத்தின் சடங்குகளும் கலந்து குழம்பியிருக்கின்றன. இன்றளவும் இந்தச் சடங்குகளில் பெரும்பாலானவை வெகுமக்களால் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. அர்த்தமற்ற இந்தச் சடங்குகளின் தாத்பரியம் பற்றித் தெரியாமலேயே நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாமும் மௌன சாட்சிகளாக மக்களின் பொதுப்புத்தியில் தலையிடும் திட்டங்களின்றி அமைதியாக இருக்கிறோம். அறிவியலின் மகத்தான சாதனைகள் எதுவும் மக்களுடைய பொதுப்புத்தியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மக்களின் பொதுப்புத்தி என்பது தர்க்கசாஸ்திரத்தையோ, நிரூபணங்களையோ, எதிர்பார்ப்பதில்லை. அதற்கு நம்பிக்கை மட்டுமே போதுமானது. மக்களின் பண்பாட்டை ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்திக் கொண்டு போவது இந்தப் பொதுப்புத்தி தான் என்பதை நாம் உணர்ந்தோமானால் இதன் முக்கியத்துவம் புரியும். பழைய நம்பிக்கைகளில் நாம் தலையிடுவதென்பது பழைய பிற்போக்கான பண்பாட்டு விழுமியங்களில் தலையிடுவதென நாம் உணரவேண்டும். அப்போது இத்தகைய சடங்குகளின் காலப்பொருத்தமின்மை குறித்து நாம் மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். அதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியில் புதிய அறிவியல்பூர்வமான தர்க்கஞானத்தை உருவாக்க முடியும். இல்லையென்றால் அரசியலில் முற்போக்காகவும், பொதுப்புத்தியில் பிற்போக்கான மக்கள் திரளோடு நாம் எதிர் நோக்கும் உன்னத லட்சியத்தை அடைவதற்கு மிகுந்த காலதாமதமாகும்.

புதிய பண்பாட்டு மேலாண்மைக்கான பயணத்திசையில் பயணம் துவங்க வேண்டிய தருணம் இது. அதற்கான வேலைத் திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்.

2 comments:

  1. அருமையான பதிவு. ஆம். நமது ஒவ்வொரு கொண்ட்டாட்டங்களிலும் விஞ்ஞானம் இருக்கிறது; அதை ஆன்மீகமாக மாற்றி விட்டோம். அதை தோழர் உதயசங்கர் அருமையாக விளக்கியிருக்கிறார். இனிமேல் ஒவ்வொரு சடங்குகள் செய்யும்போதும் யோசித்துப் பாருங்கள். இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு உதய சங்கர்

    ReplyDelete