Wednesday 1 August 2012

அந்த அளவுக்கு நேசித்ததால்..

 

இ.எம். ராதா

தமிழில் – உதயசங்கர்

ems

என்னுடைய அப்பாவை முதன்முதலாக என்று பார்த்தேன்? இரண்டோ, மூணோ வயதிருக்கலாம். அன்றிலிருந்து என் ஞாபகத்திலுள்ள விஷயங்களை எழுதுகிறேன். நான் கொஞ்சம் கூச்ச சுபாவமுடையவள் அப்பாவைப் பார்க்கும் போதும் இந்தச் சுபாவம் கொஞ்ச நேரத்துக்கு இருக்கும். பக்கத்தில் சென்று விட்டாலோ பிரிந்து வருவது அத்தனை கஷ்டம். அரசியல் விவகாரங்களில் ஏற்பட்ட மாற்றம் குடும்பத்திலும் ஏற்பட்டது. அன்று வரை அங்கேயும் இங்கேயுமாக அலைந்து கொண்டிருந்த அப்பாவும் அம்மாவும் நான் பிறந்த பிறகு தான் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு தான் சசி பிறந்தான்.

நானும் சசியும் குழந்தைகளாக இருந்த போது அப்பாவின் நெருக்கமும், அன்பும், அரவணைப்பும் வேண்டும் என்கிற அளவுக்குக் கிடைத்தது. ஆனால் மூத்தவர்கள் இரண்டு பேருக்கும் அக்காவுக்கும் அண்ணனுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. ஐந்து வயதாகும் போது தான் அண்ணன் அப்பாவையே முதன்முதலில் பார்த்தான் – அதுவும் வெகுதூரத்திலிருந்து.

அப்பா என்ற நிலையிலிருந்து தன் குழந்தைகளுக்கு அவர்களுடைய இளம்பிராயத்தில் அன்பும் அரவணைப்பும் தராமல் போனதில் அவருக்கு வருத்தம் இருந்தது. அதனால் எங்களுடைய குழந்தைகளிடம் அவர்களுடைய தாத்தா போதும் போதுமென்கிற அளவுக்குப் பிரியத்தையும் அன்பையும் செலுத்தினார்.

நாங்கள் வளர்ந்து வரும்போது அப்பாவைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள முடிந்தது. கட்சிக் கூட்டங்கள் பலசமயம் எங்கள் வீட்டிலேயே நடந்ததால் பல முக்கியத் தலைவர்களோடு நெருங்கிப் பழகுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. முதல் மந்திரியாக இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி பொதுநிகழ்ச்சிகளுக்குப் போகும் போது எங்களையும் கூட்டிக் கொண்டு போவார்.

வாழ்க்கையில் எப்போதும் அன்பு மலரச் செய்ய வேண்டும் என்று அப்பா எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். சாப்பாடு சாப்பிட்ட தட்டை தானே கழுவுதல், தன்னுடைய துணிகளைத் தானே துவைத்தல் ஆகிய வேலைகளை நாங்களே செய்ய வேண்டும் என்று சொல்லுவார். நாங்கள் எந்தச் சிறிய தவறும் செய்ய அநுமதித்ததில்லை.

முதல் மந்திரியாக இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைத் தான் கடைப்பிடித்தார். ஸ்கூலுக்குப் போவதற்கோ, வேறு காரியங்களுக்கோ அப்பா இல்லாமல் அரசாங்கக் காரை எடுத்துச் செல்ல அநுமதிப்பதில்லை. அப்பாவின் சுபாவம் தெரியுமென்பதால் நாங்களும் அதே மாதிரி உருவாகி வளர முடிந்தது. சாதாரணக் குழந்தைகளின் அப்பாவைப் போல அல்ல எங்களுடைய அப்பா என்ற உணர்வு எங்களை இன்னும் பொறுப்புள்ளவர்களாக்கியது.

மேலே குறிப்பிட்டதெல்லாம் அப்பாவிடம் உள்ள கண்டிப்பைக் காட்டுகிறது. இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒரு அப்பாவினுடைய எல்லாக்கவலைகளும் அவரிடம் இருந்தது. தவறைக் கண்டால் சுட்டிக் காண்பிக்கவும் அதைத் திருத்தவும் முயற்சி செய்தார். சாதாரண நம்பூதிரிச் சமூகத்தில் இருப்பதைப் போல ஆண் பெண் வித்தியாசம் எங்கள் குடும்பத்தில் இல்லை. சாந்தி நகரில் வீடு விற்ற போது கிடைத்த பணத்தைச் சமமாக எங்கள் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.

எங்களுக்கெல்லாம் திருமணம் முடிந்த பிறகு எங்களோடு சேர்ந்து சினிமா, நாடகம், பார்க்க கூட வருவதற்கு உற்சாகம் காட்டியிருக்கிறார். சாலையில் எங்களோடு சேர்ந்து நடந்து வரும்போது சாலையின் இரு பக்கத்திலும் போகிறவர்கள் ஆச்சரியத்துடன் நின்று விடுவார்கள். ஏனென்றால் ஏதாவது ஊர்வலத்தின் முன்னால் மட்டுமே போகிறவர், சினிமாவுக்குப் போகும்போதும் அதே மாதிரி சாலையின் நடுவே நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

அப்பா தன் அரசியலை அம்மாவிடம் ஒரு போதும் நிர்ப்பந்தித்து திணித்ததில்லை. எல்லோருக்குமே அவரவர் சொந்த விருப்பு வெறுப்புகளையொட்டி நடந்து கொள்ளும் சுதந்திரம் இருந்ததென்றாலும் யாரும் அதைத் துர்ப்பிரயோகம் செய்யவில்லை.

அரசியல்வாதிகளுக்கு தலைவராகவும், வரலாற்றாசிரியராகவும், தோழராகவும், குருவாகவும் இருந்தார். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அப்பா நல்ல நண்பராக இருந்து எந்தப் பிரச்னையைப் பற்றியும் பேச, அதற்கு என்ன வழி என்று பார்க்கவும் எங்களுக்கு உதவி செய்தார்.

அப்பாவின் மரணம் எதிர்பாராத பேரிடியை எங்களுக்குத் தந்து விட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம் என்று சொன்னால் அது சரியாக இருக்காது. மறதி மனிதனுக்குப் பெரிய வரப்பிரசாதம் என்றல்லவா சொல்கிறார்கள். மறக்க நினைக்கும் போதெல்லாம் அப்பாவைப் பற்றிய நினைவுகள் பொங்கி வருகின்றன. ஏனென்றால் நாங்கள் கூட அறிந்திராத ஆழமுள்ளது அந்த உறவு. அப்பாவின் மரணம் உண்மையாயிருக்க, அதை ஏற்றுக் கொள்ள எங்கள் மனது இன்னமும் பழகவில்லை.

எங்களுடைய செயல்களைக் கண்காணிக்கவும், எந்தப் பிழையும் எங்களை நெருங்காதிருக்கவும் அப்பா ஒரு அரூபமாக, ஒரு நினைவாக, எங்கேயோ இருந்து கொண்டிருப்பார் என்ற எண்ணம் எங்களை இன்னும் வலிமையுள்ளவர்களாக்குகிறது.

நன்றி – மாத்ரூபூமி

இ.எம்.எஸ் நினைவு மலர் 1998

1 comment:

  1. திரு இ.எம்.எஸ். பற்றிய திரு உதயசங்கர் அவர்களின் பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு உதயசங்கர்.

    ReplyDelete