Friday, 30 January 2026

கேட்காத அசரீரி

 

கேட்காத அசரீரி

உதயசங்கர்





"ஹே... ராம்..." என்ற கூவலுடன் மகாத்மா நடைபாதையிலிருந்து பின்புறமாக புல்தரையில் மடங்கி விழுந்தார். நெஞ்சில் தாங்க முடியாத வலி.சூடான இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. சுதந்திர அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து முடித்து சில நாட்களே ஆகியிருந்தன. உடல் பலமிழந்து காற்றாகி விட்டிருந்தது. சுற்றிலும் கலவரமான குரல்கள் கேட்டன. மெல்ல நினைவு தப்பிக் கொண்டிருந்தது. அவர் வெகுகாலமாகவே எதிர்பார்த்திருந்தது போலவும், இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேன்டும் என்பதை ஏற்கனவே ஒத்திகை பார்த்திருந்தது போலவும் அமைதியாகக் கிடந்தார். வேதனைக் கூக்குரலோ, உடல் அலட்டலோ இல்லை. மிகுந்த மனநிறைவுடன் உறங்கச் செல்லும் ஒருவரைப் போலவே படுத்திருந்தார். உதடுகளில் கூட இனிய கனவினைக் காணும் ஒரு குழந்தையினைப் போல ஒரு சிரிப்பு நெளிந்து நின்றது.சுடப்பட்டு கீழே விழும்போது தன்னைச் சுட்டவனை, தன்னையறியாமலேயே கையை உயர்த்தி ஆசிர்வதித்தது. அவருக்கே திருப்தியளித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

வாழ்க்கையும், கடவுள் மீதான தீவிர நம்பிக்கையும் அவருக்களித்த அந்த ஆசிர்வாதம் உண்மையில், பிடிவாதமான அவருடைய துறவு ஆன்மீகபலம் தானா அல்லது நோயினால் படுக்கையில் படுத்து, அவஸ்தைக்குள்ளாக்கி, எப்போது இந்தக் கிழவர் போய்ச்சேருவார் என்று படுக்கைப் புண் வந்து உயிரின் வேதனையில் கூக்குரலிட்டு, எல்லோரையும் எல்லோரும் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டு அலைகிற சூழ்நிலையை மாற்றியமைத்தற்காகவா? என்று அவருக்கே தெரியவில்லை. அது தன்னிச்சையாகவே நடந்து விட்டது. ஒரு வேளை குனிந்து கால்களைத் தொடவிரும்பிய அவனை ஆசிர்வாதம் செய்வதற்காக ஏற்கனவே உயர்த்த நினைத்த கை இப்போது இதுவரை கம்பீரமாக வெளியுலகிற்கு காட்டியிருந்த ஆன்மீக பலத்தையும் வெளிக்காட்டி விட்டது.



தன்னிச்சையாக நடந்த அந்த நிகழ்வு, அவர் எதிர்பார்த்தத்திற்கும் மேலாக ஒரு பரிபூரணமான நிகழ்வாக நடந்து முடிந்து விட்டது என்று நினைத்தார். பிரிவினைக்குப் பிறகு இப்படியான ஒரு விபத்தை எப்போதும் எதிர்நோக்கியிருந்தார் என்பது உண்மைதான். இதை தன் பேத்தி மனுவிடம் அடிக்கடி சொல்லவும் செய்திருக்கிறார்.அதனால் தான் காவல்துறைத் தலைவர் காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காவலர்களை அனுப்புவதாகச் சொன்னபோது அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். பிரார்த்தனையின்போது இறந்து போவதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்றார். எந்த விநாடியிலும் தான் இறந்து போக நேரிடலாம் என்பதை அவரே தெரிந்து வைத்திருந்தார். ஆனால் அவரைச் சுட்டவனின் கண்கள். அதில் தெரிந்த வெறுப்பின் தீர்க்கம். எந்த சஞ்சலமுமில்லாத கசப்பின் வன்மம். தான் செய்கிற காரியத்தைப் பற்றி, அதன் பின் விளைவுகளைப் பற்றி முற்றிலும் தெரிந்த ஒருவனின் உறுதியான அந்த முகம். அதைக்கண்டு தான் அவர் உண்மையில் பயந்தார். உணர்ச்சிமயத்தினால் உந்தப்பட்டு, நிறையப் பேர் அவருடைய அமைதி யாத்திரையின் போது இடையூறு செய்திருக்கிறார்கள். பிரிவினையின்போது, கல்கத்தாவில் அவர் இருந்த ஹைதாரி இல்லத்தில் கூட அவர்மீது தாக்குதல் நடத்திய வன்முறைக் கும்பல், கற்களையும், செருப்புகளையும் எறிவதை அவர் எதிர்கொண்டிருக்கிறார். அப்போது உடனிருப்பவர்களின் எந்த எச்சரிக்கை வார்த்தையையும் அவர் கேட்டதில்லை. ஏனென்றால் எந்த கும்பலின் உணர்ச்சி வெள்ளத்தையும் வடிய வைக்கிற மந்திரசக்தி அவரிடம் இருந்தது. அங்கமாலியை எதிர்கொண்ட புத்தரைப் போல அவர் அவர்களுக்கு நடுவே போனார். அவர்களை தன் கண்களால் நேருக்கு நேர் பார்த்தார். அந்தக் கண்களில் இருந்த வெறுப்பை, கசப்பை, விரக்தியை, கோபத்தை தன் அன்பென்னும் மாய ஒளியினால் மாற்றி விடுவார்.

ت நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அவர் பேசும் வார்த்தைகளின் வலிமை அவர்களுடைய காயங்களுக்கு மருந்து தடவும் சில விநாடிகளிலேயே அவர்களைத் தன் வசப்படுத்தி விடுவார்.


அவர்கள் எத்தகைய கொலைவெறியோடு வந்திருந்தாலும் சரி மாயம் போல அவர்களை மாற்றி ஆயுதங்களைக் கீழே போடவைத்து, அவருடன் சேர்ந்து ராட்டையைச் சுற்ற வைத்து விடுவார். சுற்றும் ராட்டையின் கிளிக்கிளிக் சத்தத்தில் அன்பின், சகிப்புத்தன்மையின் பெருந்தியைப் பிரவகிக்கச் செய்து விடுவார்.



ஆனால் இப்போது அவரைச் சுட்டவனின் கண்களை அவர் கண்கள் சந்தித்தபோது, அது உணர்ச்சியற்று பளிங்கினைப் போலத் தெளிவாக இருந்தது. இத்தனை ஆண்டு கால பிரார்த்தனையில் அவர் ஈட்டியிருந்த தவவலிமை, அருகில் யார் வந்தாலும் வசீகரித்து தன்வசப்படுத்தும் மந்திர சக்தி, அவருடைய ஒளிவீசும் மனஉறுதி, உடலின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் வெளிக்கிளம்பும் மகத்துவமான அன்பு எல்லாம் அவன் கண்களில் முட்டி மோதி வீழ்ந்தன. கருங்கற் சுவர் போல உணர்ச்சியின் எந்த பாவமுமில்லாமலிருந்தன அந்தக் கண்கள்.



காலம் காலமாக விஷத்தை ஊற்றி வளர்த்த விரோதத்தின் கூர்மையான வாளை அவர் அந்தக் கண்களில் பார்த்தார். அந்த விரோதம் அவர் மீதான விரோதம் என்று அவர் நினைக்கவில்லை. அது மனிதகுலத்தின் மீதான விரோதமாக இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இன்று நேற்றல்ல, காலம் காலமாக மனித இனத்தின் விரோதிகள் வளர்த்து வந்த துவேஷம். அது நேற்று கூட இட்லர் என்ற உருவத்தில் உலகில் உலா வந்தது. அன்பு, தியாகம், ஒற்றுமை, சகிப்புத்தன்மை எல்லாவற்றுக்கும் எதிராகத் தனது அதிகாரக் கொடுவாளினை வீசுகிற துவேஷம். அதுதான் அவரை மிகவும் பயமுறுத்தியது.



அவர் இறந்து போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் ஆன இந்த விரோதத்தையும் இதற்குப் பின்னாலிருக்கக் கூடிய விரோதம் வளர்க்கக் கூடிய அமைப்பைப் குறித்தும், அவருக்கு முதன்முதலாகப் பயம் வந்தது. சுட்டவன் யார்? எதற்காகச் சுட்டான் என்பதை சுடுகின்ற அந்தக் கணத்திலேயே அவர் உணர்ந்துகொண்டார்.



சாதாரணமாக, பிரிவினையின் கொடுஞ்செயல்களால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு அப்பாவி இந்தியன் அல்லது பாகிஸ்தானி உணர்ச்சிக் கொந்தளிப்பில் இந்தக் காரியத்தைச் செய்திருந்தால் அவர் பயந்திருக்கமாட்டார். ஆனால் அவன் அப்படிப்பட்டவன் இல்லையே.



ஏற்கனவே அவனும் அவனது அமைப்பும் விதைத்திருந்த விஷ விதைகள் இந்த மண்ணை மரணபூமியாக்கியிருந்தன. அப்பாவி ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் தாங்கள் எதற்காகக் கொல்லப்படுகிறோம் என்பது தெரியாமலேயே செத்துப்போனார்கள். அவர்களுடைய உயிரைப் படுபாதகங்களைச் செய்யச் சொல்லி எந்தக் கடவுள் ஆசிர்வதித்தார். பறிக்கும் உரிமையை யார் யாருக்குக் கொடுத்தார்கள்? இப்படிப்பட்ட இந்தக் கேள்விகளின் தார்மீகத்தையெல்லாம் தன் அதிகார ஆசையினால் வெட்டித் தள்ளிய அமைப்பின் பிரதிநிதி என்பதை புரிந்து கொண்டதனால் ஒரு சிறு நடுக்கம் மகாத்மாவின் உடலில் ஏற்பட்டது.



அவருடைய அரசியல் வாரிசுகளிடம் இப்போது அதிகாரத்தை ருசிக்கின்ற ஆசை வந்து விட்டது. வழி நடத்தவேண்டிய தலைவர்களே கருத்து வேறுபாட்டில் வழி பிரிந்து நடக்கிறார்கள். விடுதலை பெற்ற சில மாதங்களிலேயே நிலைமை இப்படியென்றால் எதிர்காலத்தில்? விடுதலையடைந்ததும் காங்கிரசைக் கலைத்துவிடவேண்டும் என்று தான் எழுதியது எவ்வளவு சரியான விஷயம். பதவிகள் தரும் சுகத்திற்காக எந்த சமரசத்துக்கும் தயாராக இவர்களே இருக்கிறபோது, இவர்களுடைய வாரிசுகள் எத்தகைய அரசியல் ஊசலாட்டத்தில் இருப்பார்கள். அதன் விளைவுகள் என்னவாகும்? என்று யோசித்தபோது முதல்முறையாக மகாத்மாவுக்கு இறந்து போவதில் விருப்பமில்லாமல் போனது. அதுவும் இப்போது.உயிர்வாழவேண்டும் என்று விரும்பினார். கை விரல்களை அசைத்து மனுவைக் கூப்பிட நினைத்தார்.



உன்ணா விரதங்களின் போது ஆபத்தான நிலைமையில் அவர் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோதெல்லாம், அவர் அமைதியாக,



என்னை எப்போது அழைக்க வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும்.... அவர் முடிவு செய்துவிட்டால் யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது... அப்படியில்லையென்றால் யாராலும் என்னைக் கொல்லவும் முடியாது..."

என்று சொல்லியிருக்கிறார். கடவுள் இப்போது முடிவு செய்து விட்டாரா. இப்போது அவருக்கே குழப்பமாய் இருந்தது. நினைவு சிறிது சிறிதாக மங்கிக்கொண்டே வந்தது. கடவுள் அவசரப்பட்டு விட்டாரோ. அவர் வாழ்வின் இக்கட்டான தருணங்களில் எல்லாம் அவருடைய அந்தராத்மாவில் கேட்கும் குரலுக்காகக் காத்திருப்பார். அது ஒரு அசரீரி போல ஒலிக்கும். இதுவரை அந்தக் குரலின் அசரீரி அவரைக் கை விட்டதேயில்லை. சரியான திசையிலேயே வழிநடத்திச் சென்றிருக்கிறது. இப்போது அவர் வேண்டினார். அந்த அசரீரியின் குரலைக் கேட்க விரும்பினார்.



இன்னும் கொஞ்ச நாள் இருந்தால், இந்த விரோத உணர்வை அன்பின் மூலம் சகிப்புத்தன்மையின் மூலம் மாற்றுவதற்கு முயற்சி செய்யலாம். இல்லையென்றால், வேரோடு வெட்டி வீழ்த்தும் ஆன்மீகபலத்தையும் அரசியல் உறுதியையும் இந்தியா பெறுகின்றவரை கொஞ்சநாள் உயிரோடிருக்க வேண்டும். ஏன் இன்னும் என் அந்தராத்மாவின் ரகசியக்குரல் கேட்கவில்லை.

 

என் நினைவு கீழேயே போய்க் கொண்டேயிருக்கிறதே. மூடிக்கொண்டே வருவது? என் வேண்டுகோள் உன் காதுகளில் ஐயோ கடவுளே... யார் அது மாயப்போர்வையால் கால்களிலிருந்து விழவில்லையா... எங்கே போனது என் அந்தராத்மா? யார் என் தலையை வருடிக்கொண்டிருப்பது மனுவா... மனு... என் பிரியத்துக்குரிய மனு.. உன்னிடமாவது சில வார்த்தைகளைச் சொல்ல ஆசைப்படுகிறேன் மனு. என்னைச் சுட்டவனின் கண்களைப் பற்றி, அந்தக் கண்களின் வெறுப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும். அந்த வெறுப்பு இந்தியா முழுவதும் தீயை பரப்புகிற வெறுப்பு. ஆனால் மனு என் வாயைத் திறக்க முடியவில்லையே. என் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டேயிருந்த அந்த அசரீரி இப்போது என்னைக் கைவிட்டுவிட்டது மனு. கடவுள் என்னை அழைத்துக் கொள்ள முடிவுசெய்து விட்டார் போல. மனு இன்னுங் கொஞ்சநாள் இருந்தால் நான் ஏதாவது அறியாமல் தவறுகள் செய்திருந்தால் அதைக்கூட மாற்றிவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்தக் கண்களின் வெறுப்பை பார்க்கும் போது நான் ஏதோ தவறு செய்துவிட்டேனோ என்று தோன்றுகிறது மனு... உனக்காவது என் அந்தராத்மாவின் அசரீரி கேட்கிறதா... மனு... என் நிழலாக இருந்தாயே... உனக்குக் கூட கேட்கவில்லையா. ஐயோ... எதிர்காலத்தில் என்னவாகும் என் அருமை இந்தியா... கடவுளே... இன்னும் கொஞ்சநாள்... மகாத்மா கண்களைத் திறக்க முயற்சி செய்தார்.



'ஓர் முக்கிய அறிவிப்பு. டெல்லியிலுள்ள பிர்லா மாளிகையின் தோட்டத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாலை 5.17 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவன் ஒரு இந்து

செய்தி வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது.

( உதயசங்கர் சிறுகதைகள் )





 

No comments:

Post a Comment