அந்நியமாதலின்
கலை – காஃப்காவின் நுண்மொழிகளை முன்வைத்து…..
உதயசங்கர்
“ மெய்மையின் மிகு ஒளியால் மின்னுவது
நம் கலை: வெகு விரைவாக விலகிச்செல்லும் முகச்சுழிப்பின் மேல் பட்டுத் தெறிக்கும் அந்த
ஒளி உண்மையானது, வேறெதுவும் உண்மை அல்ல. “ ----- காஃப்கா
காலையில் நீங்கள் எழுந்திரிக்கும்
போது ஒரு கரப்பான் பூச்சியாக மாறியிருந்தால் என்ன நடக்கும்? ஒரு மனிதனை எதிர்கொள்வதற்கும்
ஒரு கரப்பான் பூச்சியை எதிர்கொள்வதற்குமிடையிலான இருத்தலியல் பதட்டத்தையே ஃப்ரான்ஸ்
காஃப்கா தன்னுடைய உருமாற்றம் சிறுகதையில் எழுதியிருந்தார். அந்தக்கதை 1915 –ல் வெளியான
சமயத்தில் இருத்தலியல் என்ற கோட்பாடே உருப்பெறவில்லை நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த
ஒரு எழுத்தாளர் இன்றுவரை உலக இலக்கியத்தில் தன்னுடைய தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்
என்பது இன்னமும் அவர் காலத்தின் சமூக யதார்த்தம் மாறிவிடவில்லை என்பதையே குறிக்கிறது. இப்போது அவர் எழுதிய நுண்மொழிகள் தமிழில் கே.கணேஷ்ராம்
மொழிபெயர்ப்பில் காஃப்காவின் நுண்மொழிகள் என்ற தலைப்பில் அற்புதமான வடிவமைப்பில் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே காஃப்காவின் உருமாற்றமும், விசாரணையும், சில சிறுகதைகளும் தமிழில் வெளியாகியிருந்தாலும்
காஃப்காவின் வாழ்க்கை தரிசனங்களையும் தத்துவப்பார்வையையும் வெளிப்படுத்துகிற விதமாக
காஃப்காவின் நுண்மொழிகள் நூல் இருக்கிறது என்று சொல்லலாம்.
காஃப்கா என்ற எழுத்தாளர் எப்படி
உருவானார்? ஒருவருடைய அகவாழ்க்கை எப்படி ஒருவரின் புற வாழ்க்கையையும் அவருடைய பார்வையையும்
உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதைப் பற்றியும் காஃப்காவை முன் வைத்து
உரையாடிப்பார்க்கலாம்.
ஒருவர் ஏன் எழுதவேண்டும்? எழுதியே
தீர வேண்டும் என்ற வெறியோ, எழுதாமலிருக்க முடியாது என்ற நெருக்கடியோ எப்போது ஏற்படுகிறது?
ஏன் ஒருவன் எழுத்தாளனாகிறான்? கவிஞனாகிறான்? கலைஞனாகிறான்? மலையாளமொழியின் மகாகவியான
கி.சச்சிதானந்திடம் நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டபோது பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காக
எழுதுகிறேன் என்று பதில் சொன்னார். அவருடைய குடும்பத்தில் பரம்பரை நோயாக மனநோய் இருந்து
வருவதால் அப்படிப்பட்ட மனநோய் தன்னைத்தாக்கி விடக்கூடாதேயென்று தான் கவிதை எழுதத்தொடங்கியதாகச்
சொன்னார். இன்னொரு எழுத்தாளர் தான் நேசித்த பெண்ணுக்காக எழுதத்துணிந்ததாகச் சொன்னார்.
மற்றொருவர் தன்னை நிருபிப்பதற்காக எழுதவதாகச் சொல்கிறார். சகிக்க முடியாத இந்த வாழ்க்கையிலிருந்து
ஆசுவாசம் கொள்வதற்காக எழுதுகிறேன் என்கிறார் ஒருவர். ஒருவர் சமூகத்துக்காக, சமூகத்தை
மாற்றுவதற்காக எழுதுவதாகச் சொல்லும் போது எனக்காக மட்டுமே எழுதுகிறேன் என்று ஒருவர்
முணுமுணுப்பதைக் கேட்க முடிகிறது. தாழ்வு மனப்பான்மையினால் எழுதுகிறேன் என்று சொல்லும்
போது புறவுலக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எழுதுவதாக மற்றொருவர் சொல்கிறார். பணத்துக்காக,
புகழுக்காக, காதலுக்காக, விருதுகளுக்காக, சில குறிப்பிட்ட காரியங்களுக்காக, எழுதுவதாக,
ஆயிரக்கணக்கான காரணங்களைச் சொல்லமுடியும். மனிதமனதின் கோடிக்கணக்கான பின்னங்களை ஒருவரால்
புரிந்து கொள்ள முடிந்தால் இந்தக் காரணங்களையும் ஒருவேளை புரிந்து கொள்ள முடியலாம்.
ஆனால் கலையின் வித்துக்குள் மனப்பிறழ்வின்
கூறு இருப்பதைச் சாதாரணமாக எல்லோராலும் கண்டுபிடித்துச் சொல்லி விடமுடியும். மார்க்சீய
அறிஞர். ஜார்ஜ் தாம்சனின் தனது மனிதசாரம் என்ற நூலில் கலைஞர்கள் தனித்துவமான குழுவாகத்
தங்களுக்கென்றே தனித்துவமான பழக்கவழக்கங்களோடு, வாழ்க்கைமுறையை மேற்கொள்வதாக எழுதுகிறார்.
திரும்ப திரும்பச் சொல்லப்படும் மந்திரமொழியினால் புறவுலக யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தமுடியுமென்று
அவர்கள் நம்பினார்கள். அதனால் மந்திரக்கவிதைகளை அவர்கள் படைத்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக
வாழ்ந்த அவர்களே கவிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பூசாரிகளாகவும் மாறினார்கள் என்று
சொல்கிறார்.
கலையின் வரலாறும் உளவியல் ஆய்வுகளும்
இதை நிரூபித்திருக்கின்றன. ஏனெனில் கலைஞர்கள் மட்டுமே இந்த உலகை வேறுமாதிரியாகப் பார்க்கிறார்கள்.
அந்தப் கற்பனையின் வழியே அவர்கள் ஒரு புதியதொரு உலகைப் படைக்கிறார்கள். கற்பனையாகக்
கண்ட உலகத்தை வார்த்தைகளின் வழியே புனைவாக மாற்றி உயிர் கொடுத்து வாசகர்களை நம்பவைக்கிறார்கள்.
இந்தக் கற்பனைக்கும், பாவனைக்கும், புனைவுக்கும், அவர்கள் உலகியல் தர்க்க அறிவை உதறி
கலையியல் தர்க்கத்தைக் கைக்கொள்கிறார்கள். கலையின் தர்க்கம் எந்த கட்டுப்பாடுகளுமற்றது.
தன்னை வெளிப்படுத்தும் ஆவேசம் மட்டுமே அதற்கு இருக்கும். எனவே தான் பல சமயங்களில் பல
எழுத்தாளர்களின் படைப்புகளைச் சமகாலத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை.
இன்று உலகம் முழுவதும் புகழடைந்திருக்கிற
ஃபிரான்ஸ் காஃப்காவின் படைப்புகளும் அவருடைய காலத்தில் போற்றப்படவோ, புரிந்து கொள்ளப்படவோ
இல்லை. காஃப்காவை ஜெர்மன் மொழியில் எழுதிய பொகிமியாவைச் சேர்ந்த யூத எழுத்தாளர் என்றே
அழைக்கிறார்கள். பொகிமியா என்ற நாடு ஆஸ்திரியா ஹங்கேரி, பேரரசு, வியன்னா ஆகியவற்றின்
சில பகுதிகளையும் இன்றைய செக்கோஸ்லோவிய நாட்டின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியது.
பொகிமியாவில் இருந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் இசைஞர்களும் வழக்கத்துக்கு மாறான
வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். யாரும் யாருடனும் நிரந்தரமான உறவு வைத்திருப்பதில்லை.
சாகசவிரும்பிகளாகவும், நாடோடிகளாகவும், சுற்றியலைபவர்களாகவும் தங்களுடைய வாழ்க்கையை
வாழ்ந்தனர். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகே செக்கோஸ்லோவேக்கியக் குடியரசு தோன்றியது.
. காஃப்கா அப்போது பொகிமியாவின்
தலைநகர் என்றழைக்கப்பட்ட ப்ரேக் நகரில் 1883 –ல் ஜூலை மாதம் 3 –ஆம் தேதி ஒரு மத்திய
தரவர்க்க யூதக்குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஹெர்மன் காஃப்கா ப்ரேக் நகரத்தில் ஆண்களுக்கும்
பெண்களுக்குமான பெரிய ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். அவருடைய கடையில் பதினைந்துபேர்
வேலை பார்த்தனர். அவர் வீட்டிலும் வெளியிலும் சர்வாதிகாரியாக, கொடுங்கோலராக இருந்தார்.
தந்தையின் ஆதிக்கவுணர்வு ஃபிரான்ஸ் காஃப்காவின் வாழ்நாள் முழுவதிலும் கருநிழலாய் அவர்
மீது கவிந்திருந்தது. காஃப்கா அவருடைய தந்தைக்கு 100 பக்கங்களுக்கு மேலாக ஒரு கடிதம்
எழுதியிருக்கிறார். அதில் அவருடைய தந்தையின் ஆதிக்கமும், கண்டிப்பும் அவரை எப்படியெல்லாம்
பாதிக்கிறது என்று விரிவாகச் சொல்லியிருக்கிறார். தனது தந்தையைப் பற்றி காஃப்கா கீழ்க்கண்டவாறு
குறிப்பிடுகிறார்,
“ சக்தியிலும், ஆரோக்கியத்திலும்,
பசியுணர்விலும், உரக்கப்பேசுவதிலும், சகிப்புத்தன்மையிலும், பேச்சுக்கலையிலும், சுய
திருப்தியிலும், ஆதிக்கத்திலும், சமயோசித அறிவிலும் மனித இயல்பை அறிந்து கொள்வதிலும்
ஒரு உண்மையான காஃப்காவியனாக ” இருந்தாரென்று குறிப்பிடுகிறார்.
அப்பாவுக்கு மட்டுமல்ல தன் உறவினர்களுக்கு
நண்பர்களுக்கு சகோதரிகளுக்கு என்று எல்லோருக்கும் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதினார்
காஃப்கா. தன்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து விலகியிருப்பவராகவும், அதிகம் பேசாதவராகவும்,
கூச்ச சுபாவியாகவும் பார்ப்பவர்களுக்குத் தோற்றமளித்த காஃப்காவுக்கு தன்னுடைய எண்ணங்களை
வெளிப்படுத்த கடிதங்கள் ஒரு வடிகாலாக இருந்தன. ஆனால் அவரிடம் பழகுபவர்களிடம் மிகவும்
சகஜமாக, இனிமையாக, நட்பார்ந்த முறையிலும் உறவு கொண்டிருந்தார் காஃப்கா.
அப்பாவின் ஆதிக்கத்திலிருந்து
காஃப்கா விடுபட எடுத்த முயற்சிகளெல்லாம் மேலும் இருளையே கொண்டு வந்து சேர்த்தன. காஃப்காவின்
படைப்புகளிலெல்லாம் அந்த இருளை நாம் தரிசிக்கமுடியும்.
காஃப்காவின் தாயார் ஜூலி தந்தைக்கு
நேர்மாறாக அமைதியான பெண்மணி. மது உற்பத்தி செய்து சில்லறை விற்பனை செய்யும் ஒரு பணக்காரருடைய
மகள். ஜூலி தினமும் 12 மணிநேரம் கணவர் நடத்திய ஃபேன்சி ஸ்டோரிலேயே அதை நிர்வாகம் செய்யும்
வேலையைச் செய்து கொண்டிருந்தார். இந்தத் தம்பதினருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் காஃப்காவுக்கு
முன்னால் பிறந்த இரண்டு ஆண்குழந்தைகள் ஜார்ஜும், ஹெய்ன்றிச்சும், குழந்தைப்பருவத்திலேயே
இறந்து விட்டார்கள். அதன் பிறகு பிறந்த காஃப்கா குடும்பத்தின் மூத்த சகோதரரானார். அவருக்குப்
பிறகு மூன்று பெண்குழந்தைகள் எல்லி, வல்லி,
ஒட்டிலி, ஆகியோரும் பிறந்தார்கள். வீட்டிலிருந்த ஒரே ஆண்குழந்தையாக காஃப்கா இருந்ததினால்
அப்பா என்ற கொடுங்கோலரின் கவனம் முழுவதும் காஃப்கா மீதே இருந்தது. எப்போதும் கண்டிப்பின்
சவுக்குநுனி அவரைப் பதம் பார்த்துக் கொண்டேயிருந்தது. தாயும் தந்தையும் வியாபாரநிறுவனத்தில்
அக்கறையுடன் இருந்ததினால் குழந்தைகள் எல்லாருமே தாதிகளாலும் வேலைக்காரர்களாலுமே வளர்க்கப்பட்டார்கள்.
எப்போதும் அப்பாவின் இரண்டு கண்கள்
அவரைக் கண்காணித்துக் கொண்டேயிருப்பதாக பிரமை தோன்றி அவரை மனதளவிலும் உடலளவிலும் மிகப்பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியது. நம்பிக்கையின்மையும், தாழ்வு மனப்பான்மையும், விரக்தியும்,
பதட்டவுணர்வும், அவரை வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டேயிருந்தன. தன்னை எப்போதும்
புகார் சொல்லிக்கொண்டேயிருக்கும் தன்னுடைய அப்பாவை எப்படியாவது திருப்தியடையச் செய்யவேண்டுமென
வாழ்நாள் முழுவதும் ஆசைப்பட்டார். அதற்காகவே கல்லூரிப்படிப்பில் அவருக்கு விருப்பமான
இராசயனப்பாடத்தை விட்டு விட்டு சட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.
அங்கே 1901 – ஆம் ஆண்டு சட்டப்படிப்பின்
முதலாம் ஆண்டு முடிவில் மேக்ஸ் ப்ராடைச் சந்தித்தார். அன்றிலிருந்து இறுதிக்காலம் வரை
மேக்ஸ் ப்ராட் காஃப்காவின் உற்ற நண்பராக இருந்தார். ப்ராடின் மூலம் ஜெர்மனியில் வெளியாகியிருந்த தாஸ்தயேவ்ஸ்கி,
ஃப்ளாபர்ட், கோகோல், கிரில்லிபார்ஜர், ஹென்ரிச் வோன் க்ளெஸ்ட் போன்ற எழுத்தாளர்களின்
புத்தகங்களையெல்லாம் வாசித்தார் காஃப்கா. அதில் கிரில்லி பார்ஜரையும், ஹென்ரிச்சையும்
தன்னுடைய உடன்பிறந்த சகோதரர்கள் என்று சொல்லிப் பெருமையடைந்தார். 1906 – ஆம் ஆண்டு
சட்டப்படிப்பை முடித்து விட்டு 1907 – ஆம் ஆண்டு ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்குச்
சேர்ந்து அந்த வேலை பிடிக்காமல் 1908- ல் அதிலிருந்து விலகி வேறு ஒரு கம்பெனியில் சேருகிறார்.
1911 –ல் தங்கை எல்லிஸின் கணவரோடு சேர்ந்து ஆஸ்பெஸ்டாஸ் கம்பெனி ஒன்றைத் தொடங்கி அதில்
வேலை பார்க்கிறார். அவருடைய பலவீனமான உடல்நிலையை இன்னும் மோசமாக்கி விடுகிறது. அதிலிருந்தும்
வெளியேறி தீவிரமான எழுத்துப்பணியில் ஈடுபடுகிறார்.
1912 – ஆம் ஆகஸ்டு மாதம் 13 ஆம்
தேதி, மேக்ஸ் ப்ராடின் உறவினரான ஃபெலிஸ் பாயர் என்ற பெண்ணைச் சந்தித்து அவருடன் காதலில்
விழுந்தார். பெலிஸ் பாயரைப் பற்றி காஃப்காவே,
ஒட்டிய கன்னம், துருத்திய கன்ன எலும்புகள், நீண்ட நாடி, ஈரப்பசையில்லாத உலர்ந்த
கண்கள், உடைந்த வெள்ளை முடி, மொத்தத்தில் யாரையும் அருகில் நெருங்க விடாத கடுமையான
முகத்தைக் கொண்டவர் என்று சித்தரிக்கிறார். ஆனால் காஃப்கா அவருக்கு ஏராளமான கடிதங்கள்
எழுதுகிறார். அந்தக் கடிதங்களும் காஃப்காவின் மறைவுக்குப் பின் புத்தகமாக வெளிந்திருக்கிறது.
ஃபெல்ஸ் பாயருடன் உறவிலிருந்த
காலகட்டத்தில் அவர் படைப்பாக்கரீதியில் காத்திரமான படைப்புகளைப் படைத்திருக்கிறார்.
உருமாற்றம், விசாரணை, தீர்ப்பு, கோட்டை போன்ற படைப்புகள் இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை.
ஃபெலிஸுடன் இரண்டுமுறை நிச்சயதார்த்தம் நடந்து முறிந்து விடுகிறது. அதற்கு மிகமுக்கியமான
காரணம் காஃப்கா ஒரே நேரத்தில் அதீத பாலியல் விருப்புள்ளவராகவும் அதே நேரம் அதில் தோல்வியடைந்து
விடுவோமோ என்ற அச்சவுணர்வும் கொண்டிருந்தார். அதே போல குடும்பம் மாதிரியான நிரந்தரமான
அமைப்பில் தன்னால் பொருந்திப்போக முடியாது என்று ஆழமாக நம்பினார். அதனால் தொடர்ந்து
பெண்களுடன் உறவு கொள்பவராகவும் அதே நேரம் அந்த உறவை நீடிக்க விரும்பாதவராகவும் இருந்தார்
காஃப்கா.
ஃபெலிஸ் பாயருடன் காதலுறவிலிருக்கும்போதே ஃபெலிஸின் தோழியான மார்க்ரெட் பிளாச்சோடும் உறவு
வைத்துக்கொள்கிறார். மார்க்கரெட்டுக்கு காஃப்காவின் மூலமாக ஒரு குழந்தையும் பிறந்தது
ஆனால் அது காஃப்காவுக்கே தெரியாது என்று காஃப்காவின் வரலாற்றாசிரியர்கள் சிலரும் அதை
மறுத்தும் கருத்துகள் இருக்கின்றன. ஆனாலும் பெலிஸுடன் இரண்டுமுறை திருமணத்துக்காக நிச்சயம்
செய்கிறார். ஒவ்வொரு முறையும் காஃப்கா நிச்சயதார்த்துக்குப் பிறகு உறவை முறித்து விடுகிறார்.
இறுதிவரை திருமணம் முடிக்காமலேயே
வாழ்ந்து முடித்த காஃப்காவுக்கு இருந்த பிளவுண்ட ஆளுமைச் சிதைவு நோய் அவரை உறுதியாக
எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் சதாநேரமும் அவரை வேட்டையாடிய
காமத்தை எதிர்கொள்ளவும் அவரால் முடியவில்லை. பாலியல் தொழிலாளர் விடுதிகளுக்குப் போயிருக்கிறார்.
போர்னோகிராபி பார்ப்பதில் விருப்புடையவராக இருந்திருக்கிறார். மூன்றாவதாகவும் அவருடைய விருப்பத்தின் படியே படிப்பறிவில்லாத, ஏழ்மையான, தங்கும்விடுதியில் அறை
உதவியாளராக இருந்த ஜூலி என்ற பெண்ணுடன் நிச்சய்தார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்தேதிக்கு
முன்பே அவர் இன்னொரு பெண்ணுடன் ஓடிபோனார்.
1912 – 1915 க்குமிடையில் அவருடைய
இரண்டு சிறுகதை நூல்கள் 1. Contemplation, 2. A Country Doctor, வெளியாகின. இலக்கிய
இதழ்களில் பல சிறுகதைகளும் வெளியாகியிருந்தன என்றாலும் அவருடைய படைப்புகள் யாராலும்
கவனிக்கப்படவேயில்லை. அதனால் விரக்தியடைந்த
காஃப்கா தன்னுடைய ஏராளமான கையெழுத்துப்பிரதிகளை
எரித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நண்பரான மேக்ஸ் பிராடிடமும் அவரிமுள்ள
பிரதிகளை அழித்து விடச்சொல்லியிருக்கிறார். காஃப்காவின் படைப்புகளின் மீது மேக்ஸுக்கு
இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர் அழிக்கவில்லை.
1915 – ஆம் ஆண்டு முதல் உலகப்போர்
தொடங்கிய போது காஃப்கா ராணுவச்சேவை செய்யத் தேர்வுக்காகச் சென்றிருந்தார். காஃப்காவின்
பலவீனமான உடல்நிலை காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காஃப்கா பள்ளிப்பருவத்திலேயே
அனார்க்கிஸ்ட் இளைஞர் கழகத்துடனும், சோசலிச இளைஞர் கழகத்துடனும் தொடர்பிலிருந்தார்.
அவர்களுடைய பல கூட்டங்களில் கலந்து கொண்டார். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது தன்னை
ஒரு சோசலிஸ்ட் என்று தெரிந்து கொள்ளும்படியாக சிவப்புநிற அடையாளச்சின்னத்தை அணிந்து
கொண்டு போனார். காஃப்காவின் அரசியல் பார்வையென்பது அனார்க்கிசமாகவும் சோசலிசமாகவும்
இருந்திருக்கிறது. இறுகிய, கெட்டிதட்டிப்போன சமூகத்தை தகர்த்துவிட்டு புதிய சமூகத்தை
உருவாக்க வேண்டுமென்ற கொள்கையுடைய அனார்க்கிச இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார்.
1917 – ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு
காசநோய் இருப்பதைக் கண்டறிந்தார்கள். உடனே அவர் தன்னுடைய இளையசகோதரியான ஒட்டிலியாவின்
ஊரான ஜூராவுக்குச் செல்கிறார். ஜுராவ் ஒரு பொகிமியக் கிராமம். அங்கே ஒட்டிலியா ஒரு
பண்ணைத்தோட்டத்தில் வேலை பார்க்கிறார். அங்கே இருந்த எட்டு மாதங்களும் காஃப்காவின்
வாழ்வில் மிக அமைதியான காலமாக இருந்தது. அங்கே தான் காஃப்கா தன்னுடைய நுண்மொழிகளை எழுதுகிறார்.
எந்த வரிசையும் இல்லாமல் அவர் எழுதிய நூற்றியொன்பது நுண்மொழிகள் தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளரான
கே.கணேஷ்ராமினால் மொழிபெயர்க்கப்பட்டு நூல்வனம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது.
நுண்மொழிகள் அல்லது அபாரிசம்
( APHORISM
) என்று
சொல்லப்படுகிற செவ்வியல் வடிவம் பொதுவாக ஐரோப்பிய அறிவுஜீவிகளின் தத்துவ தரிசனங்களையும்,
வாழ்க்கை பற்றிய ஆழமான அவதானிப்புகளையும், இறுதியான விதிமுறைகளையும் பற்றிச் சொல்வதாக
இருக்கிறது. சாக்ரடீஸுக்கு முன்னாலேயே இருந்திருக்கிறது என்றும் அவற்றில் அறம், புதிர்,
தரிசனம், தத்துவக்குறிப்பு, பிரபஞ்சம் மற்றும் இயற்கை பற்றிய அவதானிப்புகள், மறைஞான
சூட்சுமப்புதிர்கள், மானுட மீட்சிக்கான சிந்தனைகள், தனிமனித வாழ்வின் மீதான விசாரணையாகவும்
இருக்கின்றன என்றும் காஃப்காவின் நுண்மொழிகள் இவை அனைத்தின் தொகுப்பாகவு இருக்கின்றன
என்றும் தன்னுடைய பின்னுரையில் எழுதுகிறார் கே.கணேஷ்ராம்.
இந்த மாதிரியான வடிவம் இலக்கியம்
என்றில்லை மருத்துவத்துறையிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஹோமியோபதி மருத்துவமுறையைக்
கண்டுபிடித்த மேதையான சாமுவேல் ஃபிரெடெரிக் ஹானிமன் தன்னுடைய மருத்துவமுறையின் விதிமுறைகளை
291 அபாரிசம்களாக எழுதி 1810 – ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். ஆக நுண்மொழிகள் என்ற இலக்கியவடிவம்
அனைத்துத்துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. செறிவான குறைந்த வார்த்தைகளில் தான்
கண்டடைந்த தரிசனங்களை, சிந்தனைகளை, அநுபவங்களை எழுதுதல் என்று பொதுவாக நுண்மொழிகளைப்
பற்றி சொல்லலாம்.
ஜூராவ் கிராமத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புறமும்,
அப்பா, வேலை, பெண்கள், அலுவலகம், என்ற பிடுங்கல்களுமில்லாத அந்தக் காலத்தில் காஃப்காவின்
மனம் முன்னெப்போதுமில்லாத அமைதியை அடைந்திருக்கிறது. வெங்காயச்சருகுத்தாளை எட்டாக மடித்து
எழுதியிருக்கிறார் காஃப்கா. அதையுமே மேக்ஸ் பிராடிடம் அழித்து விடவே சொல்லியிருக்கிறார்.
ஆனால் நல்லவேளையாக மேக்ஸ் அதைச் செய்யவில்லை. 1918 –ல் ஜூராவிலிருந்து வெளியேறி ப்ரேக்
நகருக்குச் செல்கிறார். அங்கே 1920- ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் அனுபவம் பத்திரிகையாளரான
மெலினா ஜெசன்காவுடன் ஏற்படுகிறது. நீண்டகாலம் இருந்த உறவென்றால் அது மெலினாவுடனாக உறவு
தான். 1923 – ஆம் ஆண்டு விடுமுறைக்காலத்தில் கடற்கரை நகரத்துக்குச் சென்ற காஃப்கா கிண்டர்
கார்டன் டீச்சரான டோரா டையமொண்ட்டுடன் காதல் கொள்கிறார். காஃப்காவின் இறுதிக்காலம்
வரை டோரா அவருடன் இருந்தார். தொண்டையில் ஏற்பட்ட காசநோயினால் சாப்பிடமுடியாமல் பட்டினியால்
காஃப்கா 1924- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய நாற்பதாவது வயதில் வியன்னாவுக்கு
அருகிலுள்ள கியர்லிங் என்ற நகரத்தில் காலமானார்.
மேக்ஸ் பிராடு தான் காப்பாற்றி
வைத்திருந்த காஃப்காவின் படைப்புகளனைத்தையும் காஃப்காவின் மறைவுக்குப் பிறகு ஒவ்வொன்றாக
வெளியிட்டார்.
காஃப்கா தன்னுடைய நுண்மொழிகளில்
தன்னுடைய புனைவுகளில் பயன்படுத்திய பூடகமான மொழியை விட இன்னும் மறைஞான மொழியைப் பயன்படுத்துகிறார்.
யூத இறையியல் சிந்தனைகளும், கிறித்துவத்தத்துவமும், அவருடைய நுண்மொழிகளில் விரவிக்
கிடக்கின்றன. அத்துடன் அவருக்கு தத்துவவாதிகளான கீர்க்கேகாடு, பாஸ்கல், ஹெப்பெல் ஆகியோரின்
சிந்தனைகளின் தாக்கமும் இருந்தது.
காஃப்கா வாழ்வினை எப்படி எதிர்கொள்வது
என்பதைப் பற்றி அவருடைய நுண்மொழியொன்றில்,
“ மனிதன் இழைக்கும் தவறுகள் அனைத்தும்
பொறுமையின்மையிலிருந்தே கிளை விடுகின்றன. முறையான அணுகுநெறியிலிருந்து உரிய காலத்துக்கு
முன்பே முறிந்து விடுகிறது. உண்மையெனத் தோன்றுவதை உண்மையெனத் தோன்றுமாறு விவரிப்பதே
அந்த அணுகுநெறி..”
என்று சொல்லும்போது நம்மிடம் புதிய
சிந்தனை பிறக்கிறது. மனிதன் பொறுமையற்றவன். பொறுமையின்மையின் விளைவாகவே அவன் சென்று
சேர இடத்துக்குச் செல்லமுடியாமல் போகிறது என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். நுண்மொழிகளில்,
“ கூண்டு ஒன்று பறவையைத் தேடித்திரிந்தது..”
என்ற கவித்துவமான வரிகளை வாசிக்கும்போது
அமைப்புகள் சுதந்திரத்தைச் சிறைப்பிடிக்கத் தீட்டுகிற திட்டங்களை யோசிக்க முடிகிறது.
தனிமனித விசாரணைகளாக அவர் எழுதியுள்ள,
“ ஒருவர் ஒரே பொருளை வெவ்வேறு
விதமாக அவதானிப்பதால் அந்த ஒருவருள் பல்வேறு அகநிலைகள் அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது..”
புறவயத்தின் பாதிப்பு மனிதர்களில்
எப்படி வெவ்வேறு விதமான அகவயமான பிரதிமைகளை உருவாக்குகின்றது என்பதை செறிவாகச் சொல்லும்
நுண்மொழி அது. அநேகமாக நிறைய நுண்மொழிகள் இந்த விதமான பார்வையையே கொண்டிருக்கின்றன.
“ மனிதகுலத்திற்கு முன் உன்னை
சோதித்து அறிவாய், அது சந்தேகப்படுபவனைச் சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும்
கற்றுக்கொடுக்கும்..”
காஃப்காவின் அகவாழ்க்கையே அவருடைய
புறவாழ்க்கை பற்றிய சிந்தனைகளைத் தீர்மானித்தது என்று சொல்லலாம்.
“ மிகக்குறைவான பொய்களைச் சொல்லுவதற்கு
வழி மிகக்குறைவான பொய்களைச் சொல்லுவதுதான். ஒருவருக்கு பொய்களைச் சொல்வதற்கு மிகக்குறைவான
வாய்ப்புகளை வழங்குவது அல்ல..”
எளிமையான வார்த்தைகளில் எளிமையான
உண்மைகளை எழுதியிருக்கும் காஃப்கா படைப்பூக்கமும் சுதந்திரமுமே பிரபஞ்சத்தின் பூரணத்துவத்துக்குக்
காரணமென்று ஒரு நுண்மொழியில் சொல்கிறார்.
” எல்லையற்ற
பூரணமும் பிரபஞ்சத்தின் பரப்பும் தீவிரப்படைப்பூக்கம் மற்றும் சுதந்திரமான சிந்தனையின்
உச்சபட்ச சேர்க்கையின் விளைவே….”
“ அவனது
அயற்சியோ பெரும்போரில் ஈடுபட்ட வீரனுக்குரியது. அவனது தொழிலோ அலுவலகத்தின் ஒரு மூலையை
வெள்ளை அடிப்பது..”
என்று வாழ்வின் அபத்தம் பற்றி
எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நுண்மொழியையும் சிந்திக்க சிந்திக்க வெவ்வேறு தளங்களில்
வெவ்வேறு அர்த்தங்களைத் தரும் அழகைக் கொண்டிருக்கிறது.
செறிவான மொழியில் எழுதப்பட்டிருக்கிற
காஃப்காவின் நுண்மொழிகளை அதேமாதிரியான செறிவான மொழியில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்
கே.கணேஷ்ராம். காஃப்கா எந்த வடிவத்தில் காகிதத்தில் எழுதினாரோ அதே மாதிரியான வடிவத்தில்
நேர்த்தியான தயாரிப்பில் பார்த்தவுடன் கையிலெடுக்கும் விதமாக புத்தகத்தைத் தயாரித்திருக்கிறார்
நூல்வனம் மணிகண்டன். காஃப்காவை மீண்டும் கண்டெடுக்கவும் அவருடைய படைப்புகளை வாசிப்பதற்குமான
தூண்டுதலாக இந்த நூல் அமைத்திருக்கிறது.
காஃப்காவின் எழுத்துகள், அவர்
மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவருடைய நாட்குறிப்புகளின் வழியாக காஃப்கா ஆட்டிசம்,
தூக்கமின்மை, பிளவுண்ட ஆளுமைச்சிதைவு, ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவற்றின்
விளைவாக அவரிடம் அந்நியமாதல், இருத்தலியல் பதட்டம், குற்றவுணர்ச்சி, அபத்தவுணர்வு,
ஆகியவை இருந்தனவென்று அதுதான் அவருடைய குணாதிசயத்தையும் எழுத்தையும் உருவாக்கியது என்று
ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தந்தையின் ஆதிக்கத்தால் பீடிக்கப்பட்ட காஃப்காவுக்கு எல்லாவிதமான
ஆதிக்க, அதிகார, உணர்வுகளுக்கும் எதிரான மனநிலையைக் கொண்டிருந்தார். அதை அபத்தமான வடிவத்தில்
வெளிப்படுத்தினார். உருமாற்றத்தில் வரும் திடீரென கரப்பான் பூச்சியாக மாறிய கிரிகோரை
அவரது குடும்பம், அலுவலகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதையே அபத்த நாடகமாகச் சித்தரித்திருப்பார்
காஃப்கா. எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்க்கும் கலையை எழுதியவர் காஃப்கா. அதனாலேயே
1945- ஆம் ஆண்டுக்குப் பிறகு காஃப்கா ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மீண்டும் கண்டெடுக்கப்படுகிறார்.
கம்யூனிச நாடான புதிய செக் குடியரசில் காஃப்காவின்
படைப்புகள் மார்க்சியத்தின் அந்நியமாதலைப் பிரதிபலிக்கும் படைப்புகள் என்று போற்றப்பட்டன.
காஃப்கா நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து
நவீன முதலாளித்துவ சமூக மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அதிகாரவர்க்க அழுத்தத்தினால் அந்நியமாதலுணர்வுக்கும்
இருத்தலியல் பதட்டத்துக்கும் ஆளானார். மாறிவரும், சமூக ஒழுங்கை, தகர்ந்து வரும் அதிகாரவர்க்க
பிரபுத்துவ சமூகத்தை தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் காஃப்கா என்ற
மதிப்பீடுகளும் முன்னெழுந்து வந்தன. காஃப்கா தன்னுடைய கதைகளில் ஏற்படுத்திய இக்கட்டான
சூழ்நிலையை காஃப்கேஸ்க்யூ என்றழைத்தார்கள். ஆங்கில அகராதியிலும் அந்த வார்த்தை இடம்
பெற்றது. ஒருவகையில் காஃப்கா காரல் மார்க்சின் அந்நியமாதலையே எழுதினாரென்று போற்றப்பட்டது.
அதனால் ஜெர்மானிய இலக்கியத்தில் காஃப்காவின் யதார்த்தமும் ஃபேண்டசியும் கலந்த இலக்கியபாணி
மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது..
இதற்கு எதிராக காஃப்காவின் படைப்புகளில்
அத்தகைய பார்வை ஏதுமில்லை. அவர் காலத்தில் அப்படிப்பட்ட புறவய சமூக யதார்த்த நிலை இல்லை
என்ற கருத்தும் அந்தக் காலத்தில் மேலோங்கியிருந்தது. 1960-களுக்குப் பிறகு காஃப்கா
உலகெங்குமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டார். உலகமுழுவதுமுள்ள எழுத்தாளர்கள்,
அறிவுஜீவிகள், தத்துவசிந்தனையாளர்கள் இன்னமும் காஃப்காவின் படைப்புகளின் மீது வெவ்வேறுவிதமான
வாசிப்பையும் கருத்துகளையும் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காஃப்காவை வாசிக்கும் வாசகர்களும்
அவருடைய படைப்புகளின் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு தரிசனங்களை கண்டடையலாம். அதற்கு
காஃப்காவின் நுண்மொழிகள் மிகச்சிறந்த உதாரணம்.
நன்றி - புக் டே
No comments:
Post a Comment