Monday 2 August 2021

குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம்

 

குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம்


உதயசங்கர்

குழந்தைகளின் கனவுகள் எல்லையற்றவை. அந்தககனவுகளில் குழந்தைகள் தங்கள் இதயத்தையே அர்ப்பணிக்கிறார்கள். அந்தக் கனவுகளில் எண்கள் இல்லை. மதிப்பீடுகள் இல்லை. வறட்டுத்தனமான அறநெறிகள், நன்னெறிகள், நீதிநெறிகள் இல்லை. ஆனால் அன்பும் நேசமும் பொங்கித்ததும்புகின்றன. குழந்தைகளின் உலகத்தை கண்களால் அல்ல.. இதயத்தால் பார்க்க முடிந்தால் மட்டுமே நீங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியும். கண்களால் பார்க்கமுடியாதவற்றையும் கூட இதயம் பார்த்து விடும். இதைத்தான் குட்டி இளவரசன் சொல்கிறான். குட்டி இளவரசனின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும். அகாதமான சகாரா பாலைவனத்தில் குட்டி இளவரசனைக் கண்டெடுத்த, அவனை மீண்டும் தேடிச்சென்று காணாமல் போன அந்துவான் எக்சுபரியைப் புரிந்து கொள்ள முடியும். அந்துவான் ஏன் சின்னஞ்சிறிய கோளான பி.612 லிருந்து குட்டி இளவரசனை இங்கே அழைத்து வந்து, அவனுக்கு உலக இலக்கியத்தில் நிரந்தரமான இடத்தை அளிக்க அவரால் எப்படி முடிந்தது என்று அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் பெரியவர்கள் கண்களால் அல்ல. எண்களால் பார்க்கிறார்கள். எண்கள் கேள்விகளாகப் பெருஞ்சுமையை குழந்தைகளின் மீது இறக்குகிறது. அந்தச் சுமை தரும் மன அழுத்தம் காரணமாக குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியை இழக்கிறார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால் தாங்களும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தோம். இப்போது குழந்தைகள் காணும் கனவுகளையெல்லாம் தாங்களும் கண்டிருக்கிறோம் என்பதையே பெரியவர்கள் மறந்து விட்டது தான். அதனால் தான் சகாரா பாலைவனம் போல அவர்களுடைய இதயம் ஈரமில்லாமல் காய்ந்து போயிருக்கிறது.

ஒரு கோடியே நாற்பது லட்சம் பிரதிகளைத் தாண்டி இன்னமும் விற்றுக்கொண்டேயிருக்கிற, 301 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிற குட்டி இளவரசனை எப்படிப் புரிந்து கொள்வது? ஏன் அந்தப் புத்தகம் செவ்வியலாகக் போற்றப்படுகிறது? குட்டி இளவரசன் கதையை மீண்டும் மீண்டும் திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், எடுத்து வருகிறார்களே. குட்டி இளவரசனின் கதையில் வரக்கூடிய உடை, பொருள், விமானம், கிணறு, குட்டிக்கோள்கள் எல்லாவற்றையும் செயற்கையாக உருவாக்கி அருங்காட்சியகங்களாக நிறுவி உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. குட்டி இளவரசனின் நூல் வயது வாரியாக மீளுருவாக்கம் செய்யப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

1900 – ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பிறந்த அந்துவான் எக்சுபரி உயர்குடியைச் சேர்ந்தவர். எழுத்தாளர். ராணுவச்சேவைக்காக பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து விமானம் ஓட்டுவதற்கும் கற்றுக்கொண்டார். விமானம் ஓட்டுவது அவருக்கு சாகசமாகவும், பெருவிருப்பமாகவும் மாறிவிட்டது. அதுதான் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. 1925 – ஆம் ஆண்டு  தன்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பான ( AVIATOR ) விமான ஓட்டி என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1929 – ஆம் ஆண்டு தென்னக அஞ்சல் (  SOUTHERN MAIL ) என்ற நூலை வெளியிட்டார். பிறகு 1931 – ஆம் ஆண்டு அவர் எழுதிய இரவு விமானம் ( NIGHT FLIGHT ) என்ற நூல அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. 1935 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பிராங்குகளுக்காக நடந்த விமானப்பந்தயத்தில் அவரும் அவருடைய நண்பரான ஆந்த்ரே பிரிவொட்டும் கலந்து கொண்டனர். அந்த விமானம் கிட்டத்தட்ட இருபது மணிநேரப் பயணத்துக்குப்பிறகு எரிபொருள் தீர்ந்து போய் சகாரா பாலைவனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  குடிக்கத்தண்ணீரில்லை. ஒருநேரத்துக்கு மட்டுமேயான உணவு இருந்தது. உயிர் வாழ்வோமா? இல்லை ஆள் அரவமற்ற அந்தப் பாலைவன மணலில் புதைந்து போவோமா என்ற நிலையற்ற கணங்களில் மனம் மயங்கி கானல் காட்சிகளாய் பிரமைகளாய், தோற்றப்பிழைகளாய், கண்டவையே குட்டி இளவரசனை எழுதத்தூண்டுகோலாக இருந்தன. காணாமல் போன அவரைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் அந்துவான் தோற்றப்பிழையாகக் கண்ட குட்டி இளவரசனை உடனே எழுதிவிடவில்லை. 

1939 –ல் அவர் காற்று, மணல், விண்மீன்கள் என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இதற்கிடையில் 1940 -களில் பிரான்ஸின் மீது ஜெர்மனியின் படையெடுப்பு நடந்தது. பிரான்ஸ் வீழ்ந்தது. அந்துவான் உடனே அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்றார். அங்கிருக்கும்போது தான் 1942 – ஆம் ஆண்டு கோடைகாலத்தில் குட்டி இளவரசனின் முதல் பிரதியை எழுதத்தொடங்கினார். அமெரிக்கா ஜெர்மனியின் நாஜிகளுக்கு எதிராக போரில் இறங்கத் தயங்கிக்கொண்டிருந்த சமயம் அது. 1941 முதல் 1943 வரை நியூயார்க் நகரத்தில் தங்கியிருந்த அந்துவான் இடையில் ஒரு ஐந்து மாதங்கள் வசந்தகாலத்தில் கனடாவிலுள்ள கியூபெக் நகரில் தங்கியிருந்தார்.

அங்கே குட்டி இளவரசனை எழுதத் தொடங்கினார். அவருக்குத் திருப்தி ஏற்படும்வரை மீண்டும் மீண்டும் எழுதினார். முப்பதாயிரம் வார்த்தைகளில் எழுதப்பட்ட முதல் பிரதியை பதினைந்தாயிரம் வார்த்தைகளாகக் குறைத்தார். 1943-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குட்டி இளவரசன் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் அமெரிக்காவில் வெளியானது. அப்போது ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்த பிரான்சில் அந்த நூல் தடைசெய்யப்பட்டது.  ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுதலையடைந்த பிறகே பிரான்சில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

1943-ல் குட்டி இளவரசன் வெளியான சில வாரங்களில் பிரஞ்சு விடுதலைப் படையில் சேர்ந்து ஜெர்மானியப்படைகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள உதவுகிற உளவு விமானத்தை ஓட்டிச்சென்றார். இரண்டு முறைகளுக்கு மேல் நாஜிகளின் நடமாட்டம் பற்றி வெற்றிகரமாக உளவறிந்து வந்தார். தன்னுடைய நாற்பத்திநான்கு வயதில் 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒற்றறியச்சென்ற அந்துவான் மத்தியத்தரைக்கடல் பகுதியின் மீது பறக்கும்போது காணாமல் போனார்.  அவர் எப்படி மறைந்தார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. சமீபத்தில் தான் அவர் சென்ற விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்துவான் என்ன ஆனார் என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர் எழுதிய குட்டி இளவரசனைத் தேடியே அவர் பி612 கோளுக்குச் சென்று விட்டார் என்று எல்லாரும் நம்புகிறார்கள்.

குட்டி இளவரசன் நூலை அவர் லியோன் வெர்த் என்ற பெரியவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். லியோன் வெர்த் அந்துவானை விட இருபத்தியிரண்டு வயது மூத்தவர். எழுத்தாளராகவும் கலை விமரிசகராகவும் இருந்த லியோன் இடதுசாரி போல்ஸ்விக்காக இருந்தார். அவர் தான் அந்துவானின் மிகச்சிறந்த நண்பராக இருந்தார். அதனால் தான் அவருக்குச் சமர்ப்பணம் செய்யும்போது,

“ இந்தப்புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்தற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முக்கியக்காரணம் ஒன்று உண்டு. இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக்கிடைத்த சிறந்த நண்பர். மற்றொரு காரணமும் உண்டு. இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார். குழந்தைகளின் புத்தகங்களைக்கூட. மூன்றாவது காரணம் இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை. இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப்புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தாம். ( ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும் ) ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்;

லியோன் வெர்த்துக்கு

அவர் சிறுபையனாக இருந்தபோது “

இரண்டாம் உலகயுத்தம் முடிவடைந்தபிறகு அந்துவான் குட்டி இளவரசனை லியோனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் என்பது அந்துவானின் மறைவுக்குப் பிறகே லியோனுக்குத் தெரியும். அப்போது லியோன்,

“ அந்துவான் இல்லாத அமைதி முழுமையான அமைதியில்லை “ என்று சொல்லியிருந்தார்.

குட்டி இளவரசன் நூலின் கதையை மேலோட்டமாகப்பார்த்தால் மிக எளிமையானது. குட்டி இளவரசன் என்ற வேற்றுக்கோள் குழந்தை ஆறு கோள்களுக்குப் பயணம் சென்று விட்டு ஏழாவதாக பூமிக்கு வருகிறான். அங்கேயும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற பிறகு சகாரா பாலைவனத்தில் கதையாசிரியரான அந்துவானைச் சந்தித்து அவனுடைய பயண அனுபவங்களைச் சொல்கிறான். சொல்லி முடித்தபிறகுதன்னுடைய கோளுக்குத் திரும்பிச் செல்கிறான். ஆனால் இந்தக் கதைக்குள் குட்டி இளவரசனுக்குக் கிடைக்கும் அனுபவங்களும் அந்த அனுபவங்களைச் சித்தரிக்கும் விதமும் நமக்கு வாழ்க்கை குறித்த நிறைய சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது.  செய்கிறான்.

கதையாசிரியரான அந்துவான் ஆறுவயதில் படம் வரைவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் வரைந்த படத்தைப் பார்த்த பெரியவர்களுக்குப் புரியவில்லை. ஒரு மலைப்பாம்பு வயிற்றுக்குள் இருக்கும் யானையை அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஒரு தொப்பியையே பார்த்தார்கள். அன்றிலிருந்து அந்துவான் பெரியவர்களிடம் படத்தைக் காட்டுவதில்லை என்பதோடு படம் வரைவதை விட்டு விட்டார். அதன்பிறகு வளர்ந்து ஒரு விமானியாகி சகாரா பாலைவனத்தில் விமானம் பழுதாகி விழுந்த விமானத்தை தன்னந்தனியாகப் பழுது பார்த்துக்கொண்டிருக்கும்போது அங்கு திடீரென்று குட்டி இளவரசன் வருகிறான். தனக்கு ஒரு ஆடு படத்தை வரைந்து கொடுக்கும்படி கேட்கிறான். முதலில் அவன் யார்? எங்கிருந்து வந்தான்? என்று புரியாமல் திகைத்த அந்துவானிடம் அவன் மீண்டும் ஒரு ஆட்டை வரைந்து கொடுக்கச்சொல்கிறான். அதிலிருந்து தொடங்குகிறது கதை.  அந்துவான் வரைந்து கொடுக்கும் ஆடுகளின் சித்திரங்கள் குட்டி இளவரசனுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை வரைந்து அதற்குள் ஆடு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறான் குட்டி இளவரசன். ஆட்டைக்கட்டிப்போட ஒரு கயிறும் முளைக்குச்சியும் வரைந்து தருவதாகச் சொல்லும் அந்துவானிடம் ஆட்டைக் கட்டுவதா? என்ன விந்தையான எண்ணம்? என்று கேட்கிறான். அதன் வழியே குழந்தைமையின் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறார் அந்துவான்.

ஆடு செடிகளை மேய வேண்டும் என்று அறிந்து கொண்டதில் குட்டி இளவரசனுக்கு மகிழ்ச்சி. ஏனெனில் பவோபாப் மரங்களை மேய வேண்டும் என்று ஆசைப்படுகிறான். பத்து யானைகள் வந்து மேய்ந்தாலும் தின்று தீர்க்க முடியாத பிரம்மாண்டமான மரமான பவோபாப் மரத்தை ஒரு ஆடு எப்படி மேயமுடியும் என்று அந்துவான் கேட்கும்போது குட்டி இளவரசன் விவேகத்துடன் பதில் சொல்கிறான். ஒரு காலத்தில் பவோபாப் மரங்களும் செடிகளாக இருக்கும் தானே. அப்போது ஆடு மேய்ந்து விடும் அல்லவா. பவோபாப் மரங்கள் பெருகினால் கோள் வெடித்துச் சிதறி விடும் என்கிறான். மிக முக்கியமான விஷயம் அந்துவான் நாஜிக்களையே பவோபாப் மரங்களாகச் சித்தரிக்கிறார். அந்த விஷச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று குட்டி இளவரசனின் மூலமாகச் சொல்கிறார்.

உலகையே தன் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவருவதற்காகவும் ஒரே இனம் தான் இந்த உலகை ஆளவேண்டுமென்ற முட்டாள்த்தனமான கருத்தியலுக்காகவும்  இனவெறியையும், ஆதிக்கவெறியையும், பரப்பிவிட்ட ஜெர்மனியின் ஹிட்லர் உலகையே அடிமைகொள்ள நாஜிப்படையை உருவாக்கினான். அந்த நாஜிக்களுக்கு எதிரான ஒரு நூல் குட்டி இளவரசன். அதுமட்டுமல்ல அப்போதைய உலகப்போர் காரணமாக விரக்தியடைந்த மக்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு பிரதியாகவும் குட்டி இளவரசன் விளங்குகிறது.

குட்டி இளவரசனின் கோள்கூட பி612 என்ற எண்ணாக இருப்பதற்குப் பெரியவர்கள் தான் காரணம். ஏனெனில் பெரியவர்களுக்கு எண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்கள் வாழ்க்கையை எண்களாலேயே அளக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் எண்களை ஏளனமாகக் கருதுகிறார்கள்.

குட்டி இளவரசன் ஒரு வீட்டைவிட சற்று பெரிதாக இருக்கும் தன்னுடைய கோளில் இருக்கும் ஒரே ஒரு மலர் கொண்ட கர்வத்தையும் அலட்சியத்தையும் தாங்கமுடியாமலேயே கோளை விட்டு புறப்படுகிறான். அப்படி அவன் ஆறு சின்னஞ்சிறு கோள்களுக்கும் பூமியெனும் பெருங்கோளுக்கும் போய் வரும்போது சந்தித்த அனுபவங்களின் மூலம் அவன் வாழ்க்கையின் அர்த்தம், அன்பு, கருணை, பேராசை, அதிகாரம், அறியாமை, அபத்தம், எல்லாவற்றையும் உணர்கிறான். மரணம் என்பது உண்மையில் மரணமல்ல என்ற இருத்தலியல் கோட்பாட்டைப் பேசுகிறான். குட்டி இளவரசனை வாசிக்கும் போது ஒரே நேரத்தில் அது காலத்தின் படைப்பாகவும், காலத்தைத் தாண்டிய படைப்பாகவும் விளங்குவது தெரியும்.

 முதல் கோளில் குடிமகன்களே இல்லாத ராஜாவைச் சந்திக்கும் குட்டி இளவரசன் அவருடைய வெற்று அதிகாரத்தின் கோமாளித்தனத்தை உணர்கிறான். தன் மேலங்கியால் கோள் முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொண்டு தானே சட்டமியற்றவும் அந்த சட்டத்தைத் தானே மீறவுமான அதிகாரவிளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிற ராஜா குட்டி இளவரசனையும் அங்கே தங்கச்சொல்கிறார். தனக்குத்தானே நீதி வழங்குவது தான் இருப்பதிலேயே மிகவும் கடினமானது என்கிறார் ராஜா. அதிகாரத்தின்  கோமாளித்தனமான விளையாட்டைக் கண்டு விரக்தியடைந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறான் குட்டி இளவரசன். அப்படிப்புறப்படும் போது பெரியவர்கள் விசித்திரமானவர்கள் என்று சொல்கிறான்.

 அடுத்த கோளில் ரசிகனைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு தற்பெருமைக்காரனைச் சந்திக்கிறான். அந்தத் தற்பெருமைக்காரன் தன்னை யாராவது பாராட்டிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான். குட்டி இளவரசன் அந்தத் தற்பெருமைக்காரனிடமும் சலிப்படைந்து அடுத்த் அகோளுக்குச் செல்லும்போது பெரியவர்கள் நிச்சயம் விசித்திரமானவர்கள் தான் என்று சொல்கிறான்.

அடுத்த கோளில் ஒரு குடிகாரனைச் சந்திக்கிறான். குடிப்பதற்கானக் காரணத்தை அந்தக் குடிகாரன் சொல்வதைக் கேட்டு குட்டி இளவரசன் குழம்புகிறான். அங்கிருந்து கிளம்பும் போது பெரியவர்கள் மிகமிக விசித்திரமானவர்கள் என்று நினைக்கிறான்.

அடுத்த கோளில் அவன் சந்திக்கும் வியாபாரி தனக்கு ஐம்பது கோடியே பதினாறு லட்சத்து இருபத்தியிரண்டாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று விண்மீன்களுக்குச் சொந்தக்காரன் என்று சொல்கிறான். அந்த விண்மீன்களின் எண்ணிக்கையை காகிதத்தில் எழுதி பத்திரமாகப் எட்டகத்தில் பூட்டி வைத்துக் கொள்வதால் அவை எனக்குச் சொந்தமென்கிறான்.  விசித்திரமான அந்த வியாபாரியை விட்டுப் புறப்படும்போதும் குட்டி இளவரசன் பெரியவர்கள் அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்கிறான்.

அடுத்த கோளில் ஒரு நிமிடத்தில் பகலும் ஒரு நிமிடத்தில் இரவும் வந்து விடுகிறது. அந்தக் கோளில் விளக்கேற்றுபவர் ஒரு நிமிடத்தில் விளக்கை ஏற்றவும் ஒரு நிமிடத்தில் விளக்கை அணைக்கவுமான பணியை விடாது செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே நாற்பத்திநாலு முறை சூரிய அஸ்தமனமாகும் கோளிலிருந்து தான் குட்டி இளவரசன் வந்திருப்பான். அவனுக்கு சூரிய அஸ்தமனம் எப்போதும் பிடித்த விஷயம். இந்தக் கோளில் இருபத்தி நாலு மணிநேரத்தில் ஆயிரத்து நானூற்று நாற்பது சூரிய அஸ்தமனங்கள் நிகழும் இந்தக் கோளை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும் குட்டி இளவரசன் அந்த விளக்கேற்றும் மனிதரை மற்றெல்லோரையும் விட உயர்வாக நினைப்பான். அவனை நண்பனாக்கிக் கொள்ள விரும்புவான்.

அடுத்த கோளில் வெறும் புத்தகத்தில் வாழும் புவியியல் ஆய்வாளரைச் சந்திக்கிறான். குட்டி இளவரசனின் கேள்விகளுக்கு அந்த ஆய்வாளர் தரும் பதில்கள் அவனுக்கு ஏமாற்றமளிக்கின்றன. மலர்களைப் பற்றிக்கவலைப்படாத அந்த புவியியலாளரின் கோளை விட்டு பூமிக்கோளுக்குப் பயணப்படுகிறான்.

ஏழாவது கோளான பூமியில் மனிதர்களைத் தேடி அலைகிறான். ஆப்பிரிக்க பாலைவனத்தில் வந்து விழும் அவன் முதலில் ஒரு பாம்பைச் சந்தித்து மனிதர்களைப் பற்றிக் கேட்கிறான். பாலைவனத்தில் தனிமையாக இருக்கிறது என்று சொல்கிற குட்டி இளவரசனிடம் மனிதர்கள் எங்கேயும் தனியாகத்தான் வசிக்கிறார்கள் என்று பாம்பு சொல்கிறது. மரணம் பற்றிப் புதிராகப் பேசும் அந்தப் பாம்பை விட்டு அகன்று ஒரு மலரைச் சந்திக்கிறான். மலரிடம் மனிதர்களைப் பற்றிக் கேட்கும்போது வேரில்லாமல் காற்றில் மிதந்து செல்லும் அவர்களை வெகுகாலத்துக்கு முன்னால் பார்த்திருக்கிறேன் என்று மலர் சொல்கிறது. அடுத்து மலையின் மீது ஏறி நின்று மனிதர்களைத் தேடுகிறான். அது அவன் குரலையே எதிரொலிக்கிறது. மனிதர்களுக்குக் கற்பனைவளம் குறைவு என்றும் அதனால் தான் சொன்னதையே திரும்பச்சொல்கிறார்களென்றும் நினைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறான்.

மணல் பாறை பனி என்று பயணிக்கிற குட்டி இளவரசன் பாதைகளைக் காண்கிறான். பாதைகள் ஒரு ரோஜாத்தோட்டத்துக்கு அவனைக் கொண்டு செல்கிறது. தனியாக இருக்கும்போது ரோஜாவின் தனித்துவமான மதிப்பு தோட்டமாக இருக்கும்போது சாதாரணமாகிவிடுவதைக் கண்டு மனம் வெதும்புகிறான் குட்டி இளவரசன். அவனைச் சந்திக்கும் நரி அன்பு என்பதே பழக்கம் என்று சொல்கிறது. நரியிடம் பழக்கப்படுத்திக்கொண்ட குட்டி இளவரசனுக்கு தன்னுடன் பழகிய தன்னுடைய கோளில் இருக்கும் ரோஜாமலரைத் தேட ஆரம்பிக்கிறது.

அங்குமிங்கும் எதற்கென்றே தெரியாமல் ரயில்களில் போய் வந்து கொண்டிருக்கும் மனிதர்களை வழியனுப்பும் பாயிண்ட்ஸ்மேனைச் சந்திக்கிறான். அவன் குழந்தைகளுக்கு மட்டுமே தாங்கள் எதைத்தேடுகிறோம் என்று தெரியும் என்று சொல்கிறான். தண்ணீர் தாகத்தைத் தணிக்க மாத்திரையைச் சாப்பிடச் சொல்லும் ஒரு வியாபாரியைச் சந்திக்கிறான். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறான் வியாபாரி. அந்த நேரத்தில் என்னால் ஒரு ஊற்றைத் தேட முடியும் என்கிறான் குட்டி இளவரசன்.

அங்கிருந்து தான் விபத்தில் சிக்கிய அந்துவானைப் பாலைவனத்தில் சந்திக்கிறான். பாலைவனத்தில் ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சொல்கிறான். மனிதர்கள் தேடுவது என்ன வென்று தெரியாமலே சுழலில் சிக்கிக்கொள்வார்கள் என்று சொல்கிறான். அந்த இடத்தில் தான் எட்டு நாட்களுக்கு முன்னால் தான் விழுந்ததாகச் சொல்கிறான் குட்டி இளவரசன். இப்போது அவனுடைய கோளில் இருக்கும் மலருக்கு அவன் தான் பொறுப்பாளி. உடனே அங்கே செல்லவேண்டும். பாம்பினால் கடிபட்டு இறந்து போகிறான். ஆனால் தான் இறப்பதாகத் தெரிவது உண்மையல்ல. அந்தக்கோளுக்கு இத்தனை எடையுள்ள உடலுடன் போகமுடியாது அதனால் நீ நம்பாதே. என்று சொல்லி சுருண்டு விழுகிறான். அந்துவானிடம் விண்மீன்களைப் பார்க்கும்போது அங்கிருந்து உண்னைப்பார்த்துச் சிரிப்பேன் என்று அந்துவானிடம் சொல்கிறான்.

காவியத்துயரமான அந்தக் காட்சியில் அந்துவானுடன் சேர்ந்து நமக்கும் கண்கலங்குகிறது. நாவல் முழுவதும் குட்டி இளவரசனின் எண்ணங்களும் உரையாடல்களும் நம்முடைய துருப்பிடித்த உணர்வுகளைக் கூர் தீட்டுகின்றன. புதிய பார்வைகளும் தரிசனங்களும் கிடைக்கின்றன. அந்துவான் குட்டி இளவரசனின் மூலம் வாழ்க்கையை விசாரணை செய்கிறார். அதில் பெரியவர்களும் அவர்களின் உலகப்பார்வையும் குட்டி இளவரசனால் எள்ளி நகையாடப்படுகிறது. பெரியவர்கள் விசித்திரமானவர்கள் தானே.

அதோ! குட்டி இளவரசன் தன்னுடைய சிறிய கோளான பி612 – ல் தன்னுடைய கர்வமிக்க மலரோடும் பெட்டியில் அடைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் எரிமலைகளைச் சுத்தம் செய்கிறான். எங்காவது தெரியாத்தனமாக பவோபாப் செடிகள் முளைப்பதாகத் தெரிந்தால் தன்னுடைய ஆட்டுக்குட்டியிடம் மேய்ந்து விடச்சொல்கிறான்.

அதோ வானத்தைப் பாருங்கள். குட்டி இளவரசன் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறான். இரவில் வானத்தைப் பாருங்கள். அப்போது தெளிவாகத்தெரியும்.  

அதற்கு நீங்கள் ஒரு குழந்தையாக மாறவேண்டும்.

நன்றி - Bookday.in 

No comments:

Post a Comment