மின்னுவின் ஆசை
உதயசங்கர்
மின்னு சுண்டெலி
தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை
லபக் என்று விழுங்கியிருக்கும். பகலில் வெளியே வர முடியவில்லை. பெரியவர்கள், சிறுவர்கள், பூனைகள், நாய்கள், வண்டிகள், வாகனங்கள், என்று ஆபத்துகள்.
இரவில் எல்லாரும் உறங்கிய பிறகு இரை தேடலாம் என்றால் பூனை, நாய்கள், தொந்திரவு. ச்சே!
என்ன வாழ்க்கை! என்று யோசித்துக்கொண்டு அதன் வீட்டிலேயே படுத்துக் கிடந்தது.
மின்னுவின் நண்பனான
பன்னு வந்து கூப்பிட்டது.
“ மின்னு வரலையா?
வீட்டுச்சமையலயில் பலகாரம் வாசனை தூக்குது..வா வா சீக்கிரம்..”
மின்னு பன்னுவைப்
பார்த்து,
“ இல்ல.. நான்
வரலை.. நீ போ..”
ஒரு விநாடி நின்று
மின்னுவைப்பார்த்த பன்னு விருட்டென்று பாய்ந்து சென்றது. மின்னு யோசித்தது. இனி இரவில்
போய் இரை தேடக்கூடாது. பகலில் எல்லாரையும் போல கம்பீரமாக அலைய வேண்டும். யாரைக்கண்டும்
பயப்படக்கூடாது. பூனை மாதிரி.. வாலை ஆட்டிக்கொண்டு ஒய்யாரமாக நடக்கவேண்டும்.
மின்னு நினைத்தது
எப்படி தெரிந்ததோ பூனை தேவதை மின்னுவின் முன்னால் வந்து நின்றது. மின்னுவுக்கு ஆச்சரியம்.
“ மின்னு.. நீ
பகலில் அலைய வேண்டுமா? “
மின்னு உற்சாகமாகத் தலையாட்டியது. உடனே பகல்பொழுதாகி
விட்டது. மின்னு தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் காதில்
“ இப்போது நீ மியாவ்
என்று கத்த வேண்டும்..” என்ற குரல் கேட்டது. மின்னு வாயைத் திறந்து
மியாவ் என்றது. அது கீச் என்ற சத்தமாகக் கேட்டது. தெருவின் அந்தப் பக்கத்தில் ஒரு பெரிய
நாய் திரும்பிப்பார்த்தது. உடனே அங்கேயிருந்து பாய்ந்து வந்தது. அம்மாடி.. ஓடறா மின்னு..
என்று ஓடி ஒரு சாக்கடைப்பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.
ரொம்ப நேரம் கழித்து
மின்னு வெளியே வந்தது. மறுபடியும் அந்தக்குரல் கேட்டது.
“ வாலை உயரே தூக்கி
வைத்துக் கொள்ளவேண்டும். அப்படியே உடலை ஒயிலாக அசைத்து முதலில் முன்னங்கால்களை வைக்க
வேண்டும். பின்பு பின்னங்கால்களைக் குறுக்கே வைக்க வேண்டும். அப்படியே மெல்ல நடந்து
போகவேண்டும்..அது தான் பூனை நடை. மனிதர்கள் மிகவும் விரும்புவார்கள்..”
மின்னு வாலை உயரே
தூக்கியது. நுனி வால் மட்டும் தான் ஆடியது. ஆனால் உயரே வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.
சரி என்று உடலைத் தூக்கியது கால்கள் குட்டையாக இருந்ததினால் தூக்க முடியவில்லை. சரி
விடு. நடக்கலாம் என்று நடந்து பார்த்தது. பின்னங்கால் முன்னங்காலில் முட்டி கீழே விழுந்து
சட்டி பானை மாதிரி உருண்டு கொண்டே இருந்தது.
எப்படியோ எழுந்து
விட்டது.
“ இனிமேல் தான்
முக்கியமான வேலை இருக்கிறது.. பதுங்கியிருந்து
ஒரு எலியைப் பிடிக்கவேண்டும்..”
என்று மறுபடியும்
பூனை தேவதையின் குரல் கேட்டது. மின்னுவுக்கு அதிர்ச்சி. என்னது நான் என் உறவினரையேக்
கொல்லவேண்டுமா? அது முடியாது. என்று கத்தியது.
“ இப்போது புரிந்ததா
மின்னு? இயற்கையில் ஒவ்வொரு உயிரும் தான் எப்படி வாழவேண்டும்? எதைச் சாப்பிடவேண்டும்?
எப்போது இரை தேடவேண்டும்? பகலிலா? இரவிலா? என்று பரிணாமவளர்ச்சியின் போது த்தில் கற்றுக்
கொள்கிறார்கள்.. யாரும் யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ள வேண்டாம்..”
என்றது. மின்னுவுக்குப்
புரிந்தது போல தலையாட்டியது.
“ உனக்குப்பின்னால்
ஒரு பூனை உன்னைப்பிடிக்க பாயப்போகிறது மின்னு..” என்ற
குரல் கேட்டது. அவ்வளவு தான் மின்னு ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வீட்டுக்குள் வந்து விட்டது.
வயிறு பசித்தது.
அங்கே பன்னு வாயில் வடையுடன் மின்னுவுக்காக காத்துக்கொண்டிருந்தது.
ஐய்! சக்கா ஐய்!
நன்றி - துளிர்
இப்போது புரிந்ததா மின்னு? இயற்கையில் ஒவ்வொரு உயிரும் தான் எப்படி வாழவேண்டும்? எதைச் சாப்பிடவேண்டும்? எப்போது இரை தேடவேண்டும்? பகலிலா? இரவிலா? என்று பரிணாமவளர்ச்சியின் போது த்தில் கற்றுக் கொள்கிறார்கள்.. யாரும் யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ள வேண்டாம்..”
ReplyDeleteஅருமைங்க சார்
குட்டிக்கதையில் நல்ல மெசேஜ்!பாராட்டுகள் சார்!
ReplyDelete