Friday, 27 August 2021

கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும்

 

கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும் –

இரண்டு சிறுகதைகளை முன்வைத்து


உதயசங்கர்.

உலக இலக்கியத்தில் ரயில் நிலையம் போல வேறு ஒரு இடம் அதிகமாகப் பதிவாகியிருக்குமா என்பது சந்தேகமே. உலகப்புகழ்பெற்ற டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவில் ரயில்வே ஸ்டேஷன் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. அன்னா ரயிலில் பாய்ந்தே தற்கொலை செய்து கொள்கிறாள். அஸ்தபோ ஸ்டேஷனில் டால்ஸ்டாய் தன்னந்தனியராக தன் இறுதிக்கணங்களைக் கழிக்கிறார். நதானியல் ஹாதர்னின் சுவர்க்க சாலை என்ற சிறுகதை இரும்புக்குதிரையை அதாவது ரயில் எஞ்சினை முன்வைத்து ஜான் பனியனின் பயணியின் முன்னேற்றம் என்ற நாவலை கேலி செய்து எழுதப்பட்டது.  இந்திய இலக்கியத்திலும் மிக முக்கியமான பங்கை ரயில்களும், ரயில்வே ஸ்டேஷன்களும் வகிக்கின்றன. ரஸ்கின் பாண்டின் கதைகளில் குழந்தைகளின் அன்புக்குரியதாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷனும் வருவதைப் பார்க்கலாம். அப்படி தமிழிலக்கியத்திலும் கு.ப.ரா.வின் விடியுமா என்ற சிறுகதை முழுவதும் ஓரிரவு ரயில்பயணத்தில் நடக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமமாக, உணர்ச்சிகளின் குவிமையமாக, வாழ்க்கை பற்றிய அடிப்படையான பார்வையை உருவாக்குகிற இடமாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இலக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.

தமிழ்ச்சிறுகதை மேதைகளில் ஒருவரான கு.அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளில் தகப்பனும் மகளும் , குமாரபுரம் ஸ்டேஷன், ஆகியவற்றில் ரயிலையும் ரயில்வே ஸ்டேஷனையும் முக்கியமான களமாகவும் கதாபாத்திரமாகவும் சித்தரித்திருக்கிறார். அதில் தகப்பன் மகளும் கதையில் ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் இரண்டு இளைஞர்களிடமிருந்து தன்னுடைய சிறுமியான மகளைப் பாதுகாப்பதற்காக அந்தச் சிறுமியின் தந்தை செய்கிற கோணங்கித்தனங்களே அவரை ஒரு அற்பனாகக் காட்டுகிற கதை. பொதுவாக கு.அழகிரிசாமி வாழ்க்கையின் யதார்த்தமான காட்சிகளையே சித்தரிக்கிறார். அந்தக் காட்சிச் சித்தரிப்பில் மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்துகிற மனவிகாரங்கள், விசித்திரங்கள், மானுடத்தருணத்தின் ஒளிக்கீற்றுகள், ஆகியவற்றையே அவர் நமக்குத் தரிசனங்களாகத் தருகிறார். எளிமையான வாழ்க்கையை எளிமையான சொற்களால், எளிமையான வடிவத்தில், எளிமையான கலையாக செதுக்குகிறார் கு.அழகிரிசாமி. அவருடைய தனித்துவமென்பது சாமானியர்களின் வாழ்வை சாதாரணமாகச் சொல்வது தான். அந்த சாதாரணத்துவத்துக்குள்  தார்மீகமான அறவிழுமியங்களைத் தேடுகிறார்.

தான் கண்டடைந்த மானுடத்தார்மீக அறவிழுமியங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வாசகர்கள் முன் காட்டுகிறார் கு.அழகிரிசாமி. குழந்தையின் களங்கமின்மையும், தான் கண்டுபிடித்ததை உடனே காட்டிவிடும் வெள்ளந்தித்தனமும், கபடின்மையும் தான் கு.அழகிரிசாமியின் கலைத்துவம். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் கண்டெடுக்கும் உடைந்த பொம்மையோ, அறுந்து விழுந்த பொத்தானோ, துருப்பிடித்த ஆணியோ, பழைய பாசிமணியோ, உண்மையான முத்துகளோ, பவளங்களோ, எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றையும் சமமான மதிப்புடனே அவர்கள் வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் கு.அழகிரிசாமியும் தான் கண்ட அனைத்திலும் உள்ளுறைந்திருந்த மானுடநாடகத்தைத் தன்னுடைய கதைகளில் நிகழ்த்தினார்.

ஒரு சம்பவம், ஒரு தருணம், ஒரு நிகழ்ச்சி, ஒரு உணர்ச்சியைச் சுற்றி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு எழுதப்படும் நவீனச்சிறுகதைகளுக்கு மாறாக கு.அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் பல சம்பவங்கள், பல தருணங்கள், ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பல கதாபாத்திரங்கள், பல உணர்ச்சிச்சுழல்கள், எல்லாம் இயல்பாக ஒன்று கூடி ஒரு மானுடத்தரிசனத்தை உருவாக்குகிறது. அந்தத் தரிசனம் இந்த வாழ்வைக் கனிவுடன் சாந்தமாக உற்று நோக்குகிறது. கு.அழகிரிசாமி அந்தக்கனிவின் சிகரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

கோவில்பட்டி என்ற சிறுநகரத்துக்கு அருகில் பத்து கி.மீ. தூரத்திலுள்ள இடைசெவல் என்ற கிராமத்தில் தமிழிலக்கியத்தின் இரண்டு மேதைகள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், உருவானார்கள். அவர்கள் அண்டைவீட்டுக்காரர்கள் என்பதும் சமவயதினர் என்பதும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இரண்டு பேரும் கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் இரண்டு பேரும் இசைமீது பெரும்பித்து கொண்டவர்கள் என்பதும், பழந்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதும் தமிழிலக்கியத்தில் பாரதூரமான தாக்கங்களை உருவாக்கியவர்கள் என்பதும் சாதாரணமான விஷயங்களில்லை.

23-9-1923 அன்று கு.அழகிரிசாமி பிறந்தார். ஆரம்பக்கல்வியை கோவில்பட்டியிலுள்ள ஆயிரவைசிய ஆரம்பப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை வ.உ.சி. அரசுப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வி கற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவனாகவே இருந்தார் கு.அழகிரிசாமி. உடல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் போன கி.ரா. பக்கத்து வீட்டுக்காரனான கு.அழகிரிசாமியுன் அத்யந்த நட்பு கொண்டிருந்தார். இருவரின் பாலிய காலத்தைப் பற்றி விரிவாக கி.ரா. நிறைய எழுதியிருக்கிறார்.

இடைசெவலுக்கு அருகிலிருந்த குமாரபுரம் ஊரில் அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஆங்கிலம் தெரிந்த  எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற கரிசல்க்காட்டு சம்சாரியிடமிருந்து ஆண்டன் செகாவின் சிறுகதை நூலை வாங்கிக் கொண்டு வாசித்தார். அவரையே தன் இலக்கியகுருவாக கு.அழகிரிசாமி வரித்துக் கொண்டார். அவரிடமிருந்த இலக்கியநூல்களை அழகிரிசாமியும் அவர் மூலமாக கி.ரா.வும் கற்கத் தொடங்குகிறார்கள். பிறகு இருவரும் அப்போது இளைஞர்களை ஈர்த்துவந்த கம்யூனிச இயக்கத்தில் இணைந்தார்கள். கு.அழகிரிசாமி சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைசெவல் கிளையின் செயலாளராக இருந்தார். கி.ரா. இந்திய விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கோவில்பட்டி கவிஞர் கந்தசாமிச்செட்டியார் மூலம் கவிதையில் ஈடுபாடு கொண்டு கவிதைகளை எழுதினார். பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததும் அரசு வேலைக்கு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்.  பத்திரப்பதிவுத்துறையில் வேலை கிடைத்து ஆரம்பத்தில் சுரண்டையிலும் பின்னர் தென்காசியிலும், நாங்குநேரியிலும் சில மாதங்கள் வேலை பார்த்தார்.. தென்காசியில் வேலைபார்த்தபோது ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்தார். அவருடைய நன்மதிப்பைப் பெற்று ரேடியோவில் கவியரங்க நிகழ்ச்சியில் ரசிகமணியுடன் இணைந்து பங்கேற்றார்.

1943 –ல் கு.அழகிரிசாமியின் முதல்கதையான உறக்கம் கொள்ளுமா? என்ற கதை ஆனந்த போதினியில் வெளியானது. 1944 – ஆம் ஆண்டு பிரசண்டவிகடனில் உதவி ஆசிரியர் வேலையில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார். அதன்பிறகு தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வேலை பார்த்தார். பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்மணி, தமிழ்நேசன், நவசக்தி, தமிழ்வட்டம், சோவியத் நாடு போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தார். 1952 –ல் அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு சிரிக்கவில்லை வெளியானது. அதன்பிறகு 13 சிறுகதைத்தொகுப்புகள், 3 நாவல்கள், 8 கட்டுரை நூல்கள், 3 சிறுவர் நூல்கள், 2 நாடகங்கள், 11 மொழிபெயர்ப்புகள், 4 பதிப்பு நூல்கள் என்று இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.

கம்யூனிச இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை அவர் கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்களில் காணமுடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாங்கி அனுப்பும்படியும், ஜீவாவின் சிங்கக்கர்ஜனையைப் பொதுக்கூட்டத்தில் கேட்டதாகவும், அந்தக்கூட்டத்தில் இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களான ராமநாதன், ராமகிருஷ்ணன், சிண்டன், எம்.ஆர்.வி, போன்றோர் கலந்து கொண்டு பேசியதாகவும் எழுதியிருந்தார். பி.ராமமூர்த்தியின் பேச்சைக் கேட்க ஆவலாக இருந்ததாகவும் அவர் வராத குறையை ஜீவா தீர்த்துவைத்ததாகவும், மறுநாள் பாமினிதத்தின் பேச்சைக் கேட்க போகப்போவதாகவும், ஜனசக்தி, பீப்பிள்ஸ் ஏஜ், தவறாமல் வாசிப்பதாகவும், முடிந்தவரை இயக்கம் சார்ந்த செய்திகளை அவர் வேலை பார்க்கும் பத்திரிகையில் முடிந்தவரை பிரசுரிக்க முயற்சிப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

1962 –ல் எழுத்து பத்திரிகை எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்வியை முன்வைத்து சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து பதிலை வாங்கி கட்டுரைத் தொடராகப் பிரசுரித்தது. அதில் கு.அழகிரிசாமி எழுதும்போது,

“ நான் மனிதனாக வாழவிரும்புகிறேன்.. நான் மனிதனாக சுதந்திர புருஷனாக இருப்பதற்கு வழி என்ன? நான் எழுதுவது ஒன்றே வழி. நான் முழுச்சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் துணை செய்யாத சமயத்திலும் மன உலகில் சுதந்திரத்தை இழக்கத்தயாராக இல்லை. ஆகவே எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன்…..

பிரசாரத்துக்காக எழுதவில்லையா, நிர்ப்பந்துக்காக எழுதவில்லையா, பணத்துக்காக எழுதவில்லையா, வாழ்க்கைச் செலவுக்காக எழுதவில்லையா என்றெல்லாம் கேட்கலாம். இத்தனைக்காகவும் நான் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அடிப்படை என்னவோ ஒன்று தான். புறக்காரணங்கள் எவையாக இருந்தாலும் என் குறிக்கோள் மாறிவிடவில்லை. ஒருவேளை உள்ளே மறைந்து நிற்கலாம். ஆனால் மாறவில்லை. மாறாது. எனவே சந்தர்ப்பத்தேவைகளையோ, புறக்காரணங்களையோ பெரிதுபடுத்தி முழுக்காரணங்கள் ஆக்கவேண்டியதில்லை. லட்சியம் தவறும்போது தன் ஆத்மாவுக்கும் மனித குலத்துக்கும் துரோகம் இழைக்கும்போதும்தான் அவற்றை முழுக்காரணங்கள் ஆக்க முடியும்… இப்படிப்பட்ட காரியத்தைக் கலைகளினாலேயே சாதிக்கமுடியும். நான் பயின்ற கலை எழுத்து. அதனால் எழுதுகிறேன்.. ( எழுத்து மே, 1962 )

தான் ஏன் எழுதுகிறேன் என்பதைப் பற்றிய ஒரு எழுத்தாளனின் சுயவாக்குமூலம் இது. கு.அழகிரிசாமியே சொல்லியிருக்கிறபடி மனிதன் என்ற அந்த மகத்தான சொல்லின் முழு அர்த்தத்திலேயே தன்னுடைய கலைக்கொள்கையை வகுத்து அதைப் பின்பற்றினார். எல்லாவித நிர்ப்பந்தங்களுக்கேற்றபடியும் சந்தர்ப்பங்களுக்கேற்றபடியும் அவர் எழுதியிருந்தாலும் அவருடைய தார்மீகமான மானுட அறவிழுமியங்களின் பாதையிலேயே தன்னுடைய பயணத்தை அமைத்துக் கொண்டார். அவர் எழுதியுள்ள 105 கதைகளில் ஏராளமான கதைகள் உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. சிரிக்கவில்லை, தவப்பயன், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், வெறும்நாய், அன்பளிப்பு, பாலம்மாள் கதை, அழகம்மாள், பெரியமனுஷி, திரிவேணி, காலகண்டி, தம்பி ராமையா, சுயரூபம், குமாரபுரம் ஸ்டேஷன், இருவர் கண்ட ஒரே கனவு, பேதமை, போன்ற கதைகளை மிகச்சிறந்த கதைகளாகக் கொள்ளலாம்.

இந்தக்கட்டுரையில் 1960-ல் அவர் எழுதி கல்கியில் வெளியான குமாரபுரம் ஸ்டேஷன் என்ற கதையைப் பற்றியும் 2002 – ல் நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதையைப் பற்றியும் பேசிப்பார்க்கலாம்.

குமாரபுரம் ஸ்டேஷன் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன் என்ற முதல்வரியுடன் தொடங்குகிறது கதை. சுற்றிலும் ஊரோ, ஆள் நடமாட்டமோ இல்லாத ஸ்டேஷன். அந்த ஸ்டேஷனின் வரலாற்றிலேயே முதன்முதலாக வந்திறங்குகிறார் முக்கியஸ்தர் சுப்பராம ஐயர். கோவில்பட்டியில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியரான அவர் தன்னுடைய பாலியகால நண்பரான குமாரபுரம் ஸ்டேஷன் மாஸ்டரோடு மூன்று நாள் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரின் மகனின் ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாட வந்திருந்த ஒரே விருந்தினர். குமாரபுரம் ஸ்டேஷனின் அலாதியான தனிமை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது வந்துபோகும் ரயில்வண்டிகள், பயணிகள் யாரும் வராமல் தண்ணீர்ப்பந்தலாக நின்று கொண்டிருக்கும் ஸ்டேஷன் என்று சுப்பராம ஐயர் அலட்சியமாக நினைக்கிறார். ஆனால் தவநிலையில் அந்தக் கரிசக்காட்டில் அமைதியாக நின்று கொண்டிருக்கும் குமாரபுரம் ஸ்டேஷனின் வழியே உலகத்தைப் பார்க்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர்.

இரண்டு நாட்கள் அங்கே தங்கிய பிறகு, மூன்றாவது நாளில் குமாரபுரம் ஸ்டேஷன் அவருக்கு வேறொன்றாகத் தெரிகிறது. அடுத்து பத்து கி.மீ. தூரத்திலிருந்த கோவில்பட்டி ஸ்டேஷனுக்கு வருகிற இருபது நிமிடப்பயணத்திலும் சுப்பராம ஐயருக்கு ஞானம் கிடைக்கிறது. தான் இருக்குமிடத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும் ஞானம் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர். சூதுவாதில்லாமல் உரக்கப்பேசிக்கொண்டிருக்கும் கிராமத்துவாசிகள், ஊர்க்குழந்தைகளையும் தன்னுடைய குழந்தையோடு மேல் படிப்புக்காக பள்ளிக்கூடத்தில் சேர்க்க அழைத்து வந்த பெரியவர், மேல்படிப்புக்காக அந்தக்குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பும் ஆசிரியர், ரயிலில் வருகிற திருநெல்வேலி பங்கஜ விலாஸ் ஹோட்டல் முதலாளியான பூதாகாரமானவர் தனக்குக் குழந்தையில்லையென்றால் என்ன? தன்னுடைய ஹோட்டலில் சாப்பிடுகிற அத்தனை குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்று சொல்லும் உரிமை. இடைசெவல் குழந்தைகளையும் கல்லூரிக்கு வரும்போது தன்னுடைய ஹோட்டலில் தான் வந்து சாப்பிடவேண்டும் என்ற வேண்டுகோளோடு வழியனுப்புகிற அன்பு, கோவில்பட்டியில் அந்தப்பையன்களுடைய ஊர்க்காரரான போர்ட்டரின் விருந்தோம்பல், எல்லாக்காட்சிகளையும் கண்ணுற்ற சுப்பராம ஐயர் பரவசமடைகிறார். குமாரபுரம் ஸ்டேஷனை மிகப்பெரிய பள்ளிக்கூடமென்று நினைக்கிறார்.

ஒரு மகத்தான மானுட தரிசனத்தை குமாரபுரம் ஸ்டேஷனில் மிக லகுவாக நிகழ்த்துகிறார் கு.அழகிரிசாமி. கலையமைதியின் உச்சத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது குமாரபுரம் ஸ்டேஷன். அடுத்தடுத்த காட்சிகளில் சுப்பராம ஐயருக்கு மட்டுமல்ல நமக்கும் மானுடமேன்மையின் உன்னதம் தெரிகிறது. எளிய மனிதர்களின் எளிய உரையாடல்கள், எளிய வாழ்க்கைச் சித்திரங்களின் மூலம் கதையினை பல அர்த்தத்தளங்களுக்குக் கொண்டுபோகிறார் கு.அழகிரிசாமி.

முதலில் ஸ்டேஷன் பற்றிய வர்ணனை. ஸ்டேஷன் மாஸ்டருடனான உரையாடல். ஸ்டேஷனின் தனிமை ஏற்படுத்தும் உணர்வு. ரயில் வரும் முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் உயிர் பெற்று எழுந்து நாடகக்காட்சிகளைத் தொடங்குகிறது. அந்த மானுட நாடகம் ரயிலிலும் தொடர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்துகிறார் கு.அழகிரிசாமி. அதனால் ஏற்கனவே குமாரபுரம் ஸ்டேஷன் தங்கலில் மனம் மாறத்தொடங்கியிருந்த சுப்பராம ஐயர், ரயில் பயணத்தில் முற்றிலும் மாறிவிடுகிறார். சுப்பராம ஐயரின் மன ஆழத்திலிருந்து பேரூணர்வு எழுந்து அவரைப் பரவசப்படுத்துகிறது. அதே பரவசத்தை கிராம்த்துப்பெரியவரும் குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில் அடைகிறார்கள். சுப்பராம ஐயர் குமாரபுரம் ஸ்டேஷனை ஞானம் தந்த போதிமரமாக நினைக்கிறார்.

கு.அழகிரிசாமியின் கலை செகாவியன் பாணியிலானது. யதார்த்தக்காட்சிகளின் வழியே சாமானியர் மக்களின் குணவிசித்திரங்களின் வழியே எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டு எழுப்பப்படுவது, கொஞ்சம் அசந்தாலும் அவருடைய கலையின் சூட்சுமம் பிடிபடாமல் போய் விடும் வாய்ப்பு உணடு. அதனால் கதைகள் சாதாரணமானதாகத் தோற்றமளிக்கும் ஆபத்தும் நேரிடும். கு. அழகிரிசாமியிடம் திருகுமுருகலான வலிந்தெழுதும் மொழி இல்லை. வாசகர்களை மயக்கும் உத்திகளில்லை. எதிர்பாராத திருப்பங்களில்லை. விநோதமான கருப்பொருளில்லை. ஆனால் கரைபுரண்டோடும் வாழ்க்கைச்சித்திரங்கள் இருக்கின்றன. அவர் காட்டுகிற காட்சிகள் சாதாரணமானவை தான். அவர் சித்தரிக்கிற மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். ஆனால் அவற்றின் மூலம் ஒரு மானுடத்தருணத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அந்த மானுடத் தருணங்களின் வழியாக மனிதர்களின் மீது கனிவு கொள்கிறார். பரிவையும் அன்பையும் காட்டுகிறார். வாசகர்களிடம் இதோ பாருங்கள். இந்த மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்கள் சாதாரணமாக இருப்பதின் வழியே தான் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறார்கள். அன்பைப் பரிமளிக்கச்செய்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறார். பொதுவாக அவர் உரக்கப்பேசுவதில்லை. ஆனால் அவருடைய முணுமுணுப்பை உற்றுக் கேட்காவிடில் கு.அழகிரிசாமியின் மேதைமை நமக்குப் புரியாது.

குமாரபுரம் ஸ்டேஷன் கதையை தான் எழுதியதைப் பற்றி கு.அழகிரிசாமி கதைக்கு ஒரு கரு என்ற தலைப்பில் 1963 – ல் தாமரையில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“ குமாரபுரம் ஸ்டேஷனுக்கு குமாரபுரம் ஸ்டேஷன் தான் கரு. என் சொந்த கிராமமாகிய இடைசெவலுக்கு அருகில் உள்ள இந்த ஸ்டேஷன் தான் நான் முதன்முதலில் பார்த்த ரயில்வே ஸ்டேஷன். நடுக்காட்டில் ஒரு கட்டடம். கிராமத்தில் காணும் எந்த வீட்டையும் விட அழகும் வசதியும் வாய்ந்தது. அதை ஒட்டி சில வீடுகள். சுகமான மனோரம்யமான வாழ்க்கை! நடுக்காட்டில் உள்ள வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது, தினந்தோறும் வனபோஜனம் சாப்பிடும் இன்பானுபவமாகத் தோன்றியது. ஸ்டேஷன் மாஸ்டரின் வாழ்க்கை கிராமத்து ஜனங்களின் வாழ்க்கையை விட கவர்ச்சிகரமாக அந்தச் சிறு வயதில் எனக்குத் தோன்றியது. அப்பொழுது மனசைக் கவர்ந்த ஒரு இன்ப உலகமாகக் காட்சியளித்த அந்த குமாரபுரம் ஸ்டேஷன் அந்த “ முதற்காதல் “ – எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகுகூட உள்ளத்தைக் கவர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஸ்டேஷனை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். பல வருஷங்களுக்குப் பிறகு எழுதினேன். காதல் நிறைவேறியது போல் இருந்தது. எனக்குப் பிடித்த என் சிறுகதைகளில் குமாரபுரம் ஸ்டேஷனும் ஒன்று “

இந்தக் கதையை கு.அழகிரிசாமி எழுதிய காலம் நாடு விடுதலையடைந்து வாழ்வில் தேனும் பாலும் தெருக்களில் ஓடும் என்று அரசியல் கட்சிகள் சொல்லிக் கொண்டிருந்த காலம். நிலவுடமைச் சமூக மதிப்பீடுகள் மெல்ல மெல்ல மறைந்து நவீன காலத்தின் புதிய மதிப்பீடுகள் உருவான காலம். கல்வியினால் கடைத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கை பெருகிய காலம். நம் கண்ணெதிரே ஒரு புதிய உலகம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்ற நம்பியிருந்த காலம். அந்தக் காலத்தில் கிராமத்து வெகுளித்தனமும், அன்பும், பரிவும் எப்படி நவீன சமூகத்தின் அடையாளமாக அங்கே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த குமாரபுரம் ஸ்டேஷனையும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், அங்கே அலட்சியமாக வந்து தங்கியிருந்த பள்ளியின் தலைமையாசிரியரான சுப்பராம ஐயரையும் மாற்றுகிறது. நவீன சமூகம் எந்தப் பாதையில் போகவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இடதுசாரித்தத்துவத்திலும் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த கு.அழகிரிசாமியின் கலைக்கொள்கையை மையப்படுத்திய கதை என்று குமாரபுரம் ஸ்டேஷன் கதையைச் சொல்லலாம். கு.அழகிரியிசத்தைப் புரிந்து கொள்வதற்கு குமாரபுரம் ஸ்டேஷன் கதையை வாசிக்காமல் கடந்து செல்லமுடியாது.

 குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் 1876 – ஆம் ஆண்டு கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் மார்க்கத்தில்  அமைந்திருக்கிறது. அருகில் எந்த ஊரும் கிடையாது. கு.அழகிரிசாமி எழுதியிருப்பதைப் போல அது ஒரு காட்டு ஸ்டேஷன் தான். எப்போதாவது பகலில் ஆடு, மாடு, மேய்க்கும் பையன்களோ, கரிசல்க்காடுகளில் வேலை செய்பவர்களோ வந்து தாகம் தீர்க்கவும் அங்கிருக்கும் வேப்பமரம், புளிய மரம், பன்னீர் மரம், பிள்ளைவளத்தி மரம், விளாமரம், கருவை, மரங்களின் நிழலில் ஓய்வெடுப்பதும் உண்டு. நான் குமாரபுரம் ஸ்டேஷனில் 1999 – லிருந்து 2018 – வரையிலான காலத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வேலை பார்த்தேன். எங்கு மாறுதல் தந்தாலும் மீண்டும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வந்து விடுவேன். குமாரபுரம் ஸ்டேஷன் அப்படி என்னை ஈர்த்திருந்தது. அது மட்டுமல்ல அதன் ஏகாந்த அமைதியும் அவ்வப்போது வீசும் ஊ ஊ ஊ என்று கூப்பிடும் குருமலைக்கணவாய் காற்றும் எதிரே விரிந்திருக்கும் குறும் புதர்களும், காடை, கௌதாரி, காட்டுப்புறா, மணிப்புறா, மயில், காகம், கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, தவிட்டுக்குருவி, செம்போத்து, போன்ற பறவைகளின் சுதந்திரமான நடமாட்டமும், இரவில் கூகை, ஆந்தை, குள்ளநரி, கருநாகம் தொடங்கி அத்தனை விதமான பாம்புகள், நட்டுவாக்காலி, தேள், பொரிவண்டு, உள்ளங்கையகலம் இருக்கும் மரவண்டுகள், தீப்பூச்சி, நாற்றமெடுக்கும் பச்சைப்பூச்சி, என்று எல்லாவிதமான உயிரினங்களையும் தரிசிக்கலாம். காலையில் கௌதாரி தன் குஞ்சுகளுடன் காலாற இரைதேடிப் போவதைப் பார்க்கலாம். இணையைச் சேருவதற்காக மயில் தோகைவிரித்து சிலிர்த்தாடுவதைக் காணலாம்.

இப்படிப்பட்ட ஸ்டேஷனை விட்டுப்போக யாருக்கு மனம் வரும்? அதுவும் கு.அழகிரிசாமியைப் போன்ற ஆளுமையின் கதை பெற்ற ஸ்தலமான குமாரபுரம் ஸ்டேஷன் என்னை வசீகரித்துக் கொண்டேயிருந்தது. 1960-ஐப் போலவே அந்த ஸ்டேஷன் கிராசிங்குக்காகவே உருவாக்கப்பட்டிருந்ததென்பதால் வேறு எந்தத் தொந்திரவும் கிடையாது. ரயில்கள் போய் விட்டால் நம்மருகில் தனிமை வந்து தானாக நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்ளும். அப்படியொரு அமைதி.

1992 –ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்தியாவே ரணகளமாகி மக்களின் மனதில் மதவெறி விஷவிதையெனத் தூவப்பட்டு விருட்சமாக வளர்ந்து கொண்டிருந்த காலம். அன்றாடம் மக்களைப் பதட்டத்தில் வைத்திருந்த காலம். அமைதியென்பதே இனி வராதோ என்றிருந்த காலம். தங்களுடைய பொருளாதாரக்கஷ்டங்களுக்கு விடிவு காலம் கிடையாதோ என்று பரிதவித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் திடீர் திடீரென்று தண்டவாளங்களின் வழியே ஆட்கள் நடந்து வருவார்கள். அவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அழுக்கான உடையுடன். தாடி, முடியெல்லாம் சடைபிடித்து, அழுக்குப்பையுடன், அழுக்கான தேகத்துடன் எதையோ வெறித்த கண்களுடன் எங்கேயாவது தப்பித்துப் போய் விடவேண்டுமென்ற வேகத்துடன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கியும் போய் வருவார்கள்.

லாரி கேலின்ஸ் – டொமினிக் லேப்பியர் இணைந்து எழுதிய FREEDOM AT MIDNIGHT என்ற நூல் மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலுவின் மொழிபெயர்ப்பில் நள்ளிரவில் சுதந்திரம் என்று அலைகள் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலை வாசித்த நாட்களில் என் மனம் நிலை கொள்ளவில்லை. எப்போதும் வன்முறைக்காட்சிகள் கண்முன்னால் தோன்றிக் கொண்டேயிருந்தன. உடலில் ஒரு விறைப்புத்தன்மை கூடிக் கொண்டிருந்தது. தனியே இருக்கும்போது பயம் கிளை கிளையாய் விட்டது. காதுகளில் ஓலம். பெண்களின், குழந்தைகளின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருந்தது. மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.

அந்த நேரத்தில் தான் நான் திடீரென்று ஒருநாளிரவு குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே வெறி பிடித்ததைப் போல எழுதத்தொடங்கினேன். இரவு முழ்வதும் எழுதினேன். எப்படி ரயிலகள் வந்தன: போயின என்று எனக்குத் தெரியவில்லை. இரவு பனிரெண்டு மணிக்குத் தொடங்கிய எழுத்து காலை ஆறு மணிக்குத் தான் முடிந்தது. ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல, ஏதோ ஒரு ஆசுவாசம் என்னிடம் தோன்றியது.  மனம் இளகியிருந்தது.  அதன்பிறகு ஒரு வாரகாலத்திற்குப் பிறகு மீண்டும் வாசித்துபார்த்து செம்மை செய்தேன்.

குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு கதையில் ஸ்டேஷன் மாஸ்டர் நாராயணன் இரவுப்பணி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் விரிந்து கிடக்கிறது. எதிரே காட்டின் உயிர்த்துடிப்பு, மின்மினிப்பூச்சிகள், இராப்பூச்சிகளின் சங்கீதமென கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார். குமாரபுரம் ஸ்டேஷனின் வெளிச்சத்தை நோக்கி அத்தனை உயிரினங்களும் கலங்கரை விளக்காக நினைத்துக் கொண்டு பாய்ந்து வருகின்றன. மின்சாரம் தடைபட்டு அந்தக் குறுக்காட்டில் இன்னொரு புதராக குமாரபுரம் ஸ்டேஷன் இருக்கிறது. அப்போது இருளிலிருந்து முளைத்து வந்தவனைப் போல ஒருவன் அவர் முன்னல் நிற்கிறான். அவன் கையேந்தியபடி நிற்கிறான். அவனுக்கு டீ கொடுக்கச்சொன்ன நாராயணன் உள்ளே ரயில் வருவதற்கான அனுமதியைக் கொடுக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த மர்ம மனிதனைக் காணவில்லை.

மீண்டும் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகத்தை வாசிக்கும் போது புத்தகத்திலிருந்த எழுத்துகள் அவரைச் சரித்திரத்தின் சுழலுக்குள் இழுத்துச் செல்கிறது. அங்கே அமிர்தசரஸ் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் சானிசிங்காக நின்று கொண்டிருக்கிறார். பிரிவினைக் கலகங்களும் வன்முறைகளும் வெடித்து விட்டன. லாகூரிலிருந்து வருகிற ரயில் முழுவதும் பிணங்கள் வருகின்றன. அதைப் பார்த்த சீக்கியர்கள் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அன்வரை ஸ்டேஷன் மாஸ்டரின் வேண்டுகோளையும் மீறி இழுத்துச் சென்று கொலை செய்கின்றனர். நடந்து கொண்டிருந்த சம்பவங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த சானிசிங் மயங்கிச் சரிகிறார்.

குமாரபுரம் ஸ்டேஷனின் நாராயணனை அவருடைய உதவியாளர் எழுப்பி என்ன சார் அழுறீங்க? என்கிறார். நாராயணன் எழுந்து வெளியே பார்க்கிறார். பொழுது விடிந்து விட்டது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காடு சலம்பிக் கொண்டிருக்கிறது. டீ குடிக்கும் போது முந்தின நாளிரவு பார்த்த அதே மர்மமனிதன் திடீரென வந்து டீ கேட்கிறான். அவர் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனுடைய பெயரைக் கேட்கிறார். அவன் சானிசிங், அமிர்தரஸ் ஸ்டேஷன் மாஸ்டர் என்று சொல்கிறான்.

இந்தக் கதை வரலாற்றின் பக்கங்களுக்குள் சென்று இன்றைய நிலைமையின் பயங்கரத்தை அன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு சூசகமாக வாசகனுக்குக் கடத்தி விடுகிறது.

ஒரே இடம் வெவ்வேறு காலகட்டத்தின் இரண்டு எழுத்தாளர்களின் கருப்பொருளாக மாறி வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருப்பதென்பது தமிழிலக்கியத்தில் முன்னெப்போதுமில்லாததொரு விஷயம்.

இரண்டு கதைகளிலும் குமாரபுரம் ஸ்டேஷன் மாறவில்லை. அதன் ஏகாந்தம் மாறவில்லை. அதன் அழகு மாறவில்லை. ஆனால் நாற்பதாண்டு கால இடைவெளியில் சமூகத்தின் சூழல் மாறிவிட்டது. 1960-களில் சமூகம் இருந்த நிலைமையை வைத்து கு.அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ஸ்டேஷன் கனிவின் ஒளியில் மனிதர்களைக் காட்டியது என்றால் 2002 –ல் இருந்த சமூகநிலைமையை வைத்து நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதை ஒரு நம்பிக்கைக்காக, ஒரு கருத்துக்காக மனிதர்கள் பைத்தியம் பிடித்ததைப் போல மாறி ஒருவரையொருவர் கொலை செய்வதை, குரூரத்தின் கொடிய இருளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது.  நம்முடைய இருண்டகாலத்தின் கடந்த காலப்பயணத்தை ஞாபகப்படுத்துகிறது.

குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் கு.அழகிரிசாமி காட்டுகிற மானுட கரிசனத்தின், மகத்தான அன்பின் தரிசனத்துக்காக ஏங்கித் தவிக்க வைக்கிறது.

கு.அழகிரிசாமியே! என் மூதாதையே!

நன்றி - புக் டே


No comments:

Post a Comment