நடந்தார்கள்
உதயசங்கர்
ஞாயிற்றுக்கிழமை
மாலை மதியழகனும், இளமுருகும் சிறுமலை
மீது ஏறிக்கொண்டிருந்தார்கள். மாலைச் சூரியன் அதன் வண்ணக்கோலங்களை வானில் வரைந்து கொண்டிருந்தது. கொஞ்ச தூரம் ஏறியதும் மூச்சு வாங்க நின்றான் மதியழகன். திரும்பிப்பார்த்தான். இளமுருகு கைகளையும் ஊன்றி ஏறிக்கொண்டிருந்தான். அவர்கள் அங்கிருந்த ஒரு பாறையில் உட்கார்ந்தார்கள். அவர்கள் ஏறி உட்கார்ந்ததும் அந்தப்பாறை லேசாக நடுங்கியது போலத் தெரிந்தது.
பகல்
வெயிலில் வெப்பம் ஏறியிருந்த பாறை அப்போது தான் குளிரத்தொடங்கியிருந்தது. லேசான காற்று கீழே சமவெளியிலிருந்து புறப்பட்டு வந்தது. அவர்களுக்கு அந்தக்காற்று ஆசுவாசமாக இருந்தது. முகத்தைத் துடைத்துக் கொண்டே கீழே பார்த்தார்கள்.
சமவெளியில்
மனிதர்கள் சிறிய பூச்சிகளைப் போல வரிசையாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த மதியழகன்,
“ இப்படித்தான் நம்முடைய முன்னோர்களும் இந்த உலகத்தின் அத்தனை மூலை முடுக்குகளுக்கும் நடந்திருக்கிறார்கள்.. முருகு..”
என்றான்.
உடனே இளமுருகு உதட்டைப் பிதுக்கிக் கொண்டே,
“ எனக்கு நம்பிக்கையில்லை.. மதி.. இப்போதே நாம் நடக்கிற தூரத்துக்குக் கூட வண்டிகளில் தான் பயணம் செய்கிறோம்.. அப்படியிருக்கும் போது அந்தக் காலத்தில் அவ்வளவு தூரத்துக்கு நடந்திருப்பார்களா என்பது சந்தேகமே..”
என்று
சொன்னான். மதியழகன் ஏதோ சொல்ல முயற்சிக்கும்போது அவர்களுக்குப் பின்புறமிருந்து ஒரு மனிதன் தோன்றினான். பார்ப்பதற்குக் காட்டுமிராண்டியைப் போல விசித்திரமாக இருந்தான். உடலெங்கும் முடி அடர்ந்திருந்தது. முகத்தில்
மூக்கு அகன்று விரிந்திருந்தது. பருத்த உதடுகளுடன், முகவாய் சற்று முன்னால் நீண்டு பளபளக்கும் கண்கள் ஆழ்ந்த குழிக்குள் மின்னிக் கொண்டிருந்தன.
அவன்
அவர்களைப் பார்த்து உதடுகளைக் கோணிக்கொண்டு சிரித்தான்.
திடீரென
அவனைப்பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஒரு கணம் பேச்சு மூச்சில்லாமல் பயத்தினால் உறைந்துபோய் அப்படியே இருந்தார்கள். மதியழகன்,
“ யா….யா….ரு நீ…?
“ என்று கேட்ட போது அவன்,
“ சேப்பியன்ஸ்..” என்று சொன்னான். மதியழகனும் இளமுருகும் எதுவும் புரியாமல் முழித்தார்கள். அப்போது யாரும் எதிர்பாராமல் அந்த மனிதன் தன்னுடைய சுட்டுவிரலால் இளமுருகைத் தொட்டான்.
ஆப்பிரிக்காவின்
சவானா புல்வெளிப்புதர்க்காடுகள் கண்முன்னே விரிந்தன. அங்கே சில மனிதர்கள் கூட்டமாய் இடுப்பில் கட்டிய தோல் ஆடையுடனும் கையில் ஒரு கம்புடனும் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக இன்னொரு கூட்டம் நடந்தது. இரண்டாவது கூட்டத்திலிருந்த மதியழகன் திரும்பிப்பார்த்தான். பின்னால் வந்து கொண்டிருந்த மூன்றாவது கூட்டத்தில் இளமுருகு வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் சற்றுமுன் பார்த்த மனிதனும் வந்து கொண்டிருந்தான்.
சடைமுடியுடன்,
இடுப்பில் ஒரு துண்டு தோலாடையுடன் இருந்த இளமுருகுவின் கோலத்தைப் பார்த்து மதியழகன் சிரிக்க இளமுருகுவும் மதியழகனைப் பார்த்துச் சிரித்தான். அங்கே கடந்த சில ஆண்டுகளாக வறட்சி. உணவுப்பஞ்சம். விலங்குகளோ, பறவைகளோ, காய்கனிகளோ அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அந்த இடத்தை விட்டு புறப்பட முடிவு செய்தார்கள்.
ஒரு
கூட்டம் வடதிசையில் பயணம் செய்தது.
ஒரு
கூட்டம் தென்திசையில் பயணம் செய்தது.
ஒரு
கூட்டம் கிழக்குத் திசையில் பயணம் செய்தது.
ஒரு
கூட்டம் மேற்கு திசையில் பயணம் செய்தது.
எல்லாரும்
உயிர் வாழ்வதற்காகப் பயணம் செய்தார்கள்.
உணவுக்காகப்
பயணம் செய்தார்கள்
65000 ஆண்டுகளுக்கு முன்னால் புறப்பட்ட சேப்பியன்ஸ் அவர்களுக்கு முன்னால் தோன்றி ஆங்காங்கே பரவியிருந்த ஹோமோ எரக்டஸ், நியாண்டர்தால், ஹோமோ ஹாபிலஸ், ஆஸ்டிரோபிதிகஸ், போன்ற இனங்களை எதிர்கொண்டார்கள்.
சில
இனங்களுடன் கலந்து ஒன்றானார்கள்.
சில
இனங்களுடன் போரிட்டார்கள்.
வடதிசையில்
போனவர்களில் சிலர் திரும்பி தென்திசையை நோக்கி வந்தார்கள்.
தென்
திசையில் போனவர்களில் சிலர் வடதிசையை நோக்கி வந்தார்கள்.
மேற்கு
திசையில் போனவர்கள் கிழக்கு திசை நோக்கி வந்தார்கள்
கிழக்கு
திசை நோக்கிப் போனவர்கள் மேற்கு திசை நோக்கி வந்தார்கள்.
அனைத்துக்
கண்டங்களையும் கால்களாலேயே கடந்தார்கள்.
ஆப்பிரிக்காவில்
இருந்த அவர்களுடைய உருவம் அந்தந்தச் சூழ்நிலைகளுக்கேற்ப மாறத்தொடங்கியிருந்தது.
தோலின்
நிறம், உயரம், முகம், உருவம், முடி, என எல்லாவிதமான
மாற்றங்களுக்கும் உள்ளானார்கள்.
சிவப்பு
நிறத்தில் சிலர், பழுப்பு நிறத்தில் சிலர், சிலரோ மஞ்சள் நிறத்தில், சிலர் கருப்பு நிறத்தில், சிலர் வெள்ளை நிறத்தில், சிலர் உயரமாக, சிலர் குள்ளமாக, சிலர் ஒல்லியாக, சிலர் குண்டாக, என்று விதவிதமான மனிதர்களும் பூமியில் தோன்றினார்கள்.
அனைத்து
மலைகளிலும் ஏறினார்கள்.
அனைத்துக்
கடல்களையும் கடந்தார்கள்.
புயலை
எதிர்கொண்டார்கள்.
மழையைத்
தாங்கினார்கள்.
நெருப்பை
வெற்றி கொண்டார்கள்
விலங்குகளை
வசப்படுத்தினார்கள்
பறவைகளைப்
பழக்கினார்கள்
குகைகளிலும்
மரப்பொந்துகளிலும் குடியிருந்தார்கள்
எல்லாவித
வனங்களுக்குள் நுழைந்தார்கள்.
எல்லாவிதமான
பழங்களையும் சாப்பிட்டார்கள்
எல்லாவிதமான
மலர்களையும் நுகர்ந்தார்கள்
நதிகளில்
நீந்தினார்கள்
அருவிகளில்
குளித்தார்கள்
நதிக்கரையில்
குடியிருந்தார்கள்.
விவசாயத்தைக்
கண்டுபிடித்தார்கள்.
கடவுளரை
உருவாக்கினார்கள்.
கிராமங்களை
ஏற்படுத்தினார்கள்.
பிரபுக்கள்
உருவானார்கள்
நகரங்கள்
நிர்மாணிக்கப்பட்டன.
நாடுகள்
உருவாயின.
பிரபுக்கள்
அரசர்களானார்கள்.
எல்லைக்கோடுகள்
கிழிக்கப்பட்டன.
மதகுருக்கள்
வந்தார்கள்.
மதங்கள்
உருவாயின.
வழிபாடுகள்
மாறுபட்டன.
இனங்கள்
தோன்றின
சாதிகள்
உருவாயின
சொந்தச்
சகோதரர்களையே எதிரிகளாக நினைத்தனர்.
யுத்தங்கள்
நடந்தன.
யுத்தங்கள்
நடக்கின்றன.
யுத்தத்தில்
யாரும் வெற்றிபெறவில்லை.
யுத்தத்தில்
யாரும் தோற்கவுமில்லை.
மனிதர்கள்
யாவரும் ஒன்றெனும் காலமும் வெகு தூரத்திலில்லை.
ஆப்பிரிக்காவிலிருந்து
தொடங்கிய பயணம் இன்னும் முடியமில்லை.
மானுடப்பயணம்
தொடர்கிறது நம்பிக்கையோடு.
நன்றி - இளம்தளிர் இலக்கியத்திட்டம்
மூ.அப்பணசாமி

No comments:
Post a Comment