Wednesday, 10 December 2025

குழந்தைமையின் அழகைத் தரிசிக்க வைக்கும் குட்டி சார்


 

குழந்தைமையின் அழகைத் தரிசிக்க வைக்கும் குட்டி சார்

உதயசங்கர்



    சிறார் இலக்கியம் இப்போது எண்திசைகளிலும் தன் சிறகுகளை விரித்துப் பறந்து கொண்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்புவரை தரிசாகக்கிடந்த பூமியில் ஏராளமான பயிர் பச்சைகள் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கின்றன. விதவிதமான வண்ணவண்ணப்பூக்கள் நிறைந்த மலர்க்காடாக சிறார் இலக்கியம் மாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுடன் அதிகநேரம் செலவிடும் பேறுபெற்றவர்கள் ஆசிரியர்கள். ஏனெனில் பள்ளிக்கூடமென்பது குழந்தைகளின் இரண்டாவது வீடு. பள்ளியில் தான் அவர்களது அறிவு விரிவடைகிறது. அனைவருடனும் கலந்து பழகும் சமூகமனம் உருவாவதும் பள்ளியில் தான். வீட்டில் தன்னை மட்டுமே மையமாகக் கொண்ட சூழலில் வளரும் குழந்தைகள் முதன்முதலாக தன்னைப் போல ஒத்தவயதுடைய மற்ற குழந்தைகளுடன் மகிழ்ந்து, விளையாடி, கோபப்பட்டு, பொறாமைப்பட்டு, மன்னித்து, அன்புகொண்டு, அரவணைத்து, அனுசரித்து வளர்கிறார்கள். உண்மையில் சமூகத்தில் வாழ்வதற்கான மிகச்சிறந்த பயிற்சிக்கூடமும் சோதனைக்கூடமும் ஆரம்பப்பள்ளி தான்.

    என்னுடைய ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தான் எனக்கு நல்லதும் பொல்லதுமான மனப்பதிவுகளைக் கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய குணாதிசயங்களில் பலவற்றைத் தீர்மானித்த பல அனுபவங்கள் ஆரம்பப்பள்ளியில் நடந்தன. எனவே தான் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் ஆளுமை துளிர் விடும்போது அவர்கள் மீது அன்பும் அக்கறையும் நேசமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஒரு பூ மலர்வதை அருகிருந்து பார்க்கும் நற்பேறு பெற்றவர்கள் ஆரம்ப்பள்ளி ஆசிரியர்கள். அதனால் தான் எல்லாஇடங்களிலும் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன், இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த நற்பேறு பெற்றவர்கள் யாரென்றால் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தான். ஆனால் நிறைய ஆசிரியர்கள் அந்த நற்பேறை உணரவில்லை. அப்படி உணரத்தொடங்கி விட்டால் அவர்களிடமும் தேவதைச்சிறகுகள் முளைக்கத் தொடங்கிவிடும்.

    அப்படிப்பட்ட தேவதைச்சிறகுகள் முளைத்த ஆசிரியராக வகுப்பறை அனுபவங்களில் மூழ்கி முத்துகளை எடுத்திருக்கும் குட்டிசார் காளிதாஸ் இருக்கிறார். முப்பத்தியொன்பது அத்தியாயங்களில் குழந்தைகளின் மனதை அப்படியே சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொண்டு வந்து நமக்கு முன்னால் பூப்போல வைக்கிறார். எத்தனை விதமான அனுபவங்கள்! எத்தனை விதமான குணங்கள்! எந்த ஒளிவு மறைவுமில்லாமல் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுடைய களங்கமற்ற அன்பை, கோபத்தை, பெருமையை, வருத்தத்தை, அறிவை, அறியாமையைக் காட்டுகிறார்கள். இங்கே தான் ஆசிரியர்களின் பணி தொடங்குகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக ஆசிரியர் தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அவர்களுடைய ஆழ்மனதில் அன்பையும் நல்லுணர்வையும் நட்புணர்வையும் சமத்துவத்தையும் அறிவியல் மனப்பாங்கையும் விட்டுக்கொடுத்தலின் இன்பத்தையும் வளர்க்க வேண்டும்.

    இவை பள்ளிப்பாடத்திட்டத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ஆசிரியரும் இதைச் செய்யும்போது குழந்தைகளின் உலகம் மட்டுமல்ல நம்முடைய உலகமும் மகிழ்ச்சியுடையதாக மாறும்.

    அப்படி மாறுவதற்காகத்தான் குட்டி சார் காளிதாஸ் இப்படியொரு நூலை எழுதியிருக்கிறார். அவருடைய ஒரு வகுப்பறையின் அனுபவங்கள் மாநிலத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பாடமாக இருக்க்கின்றன. ஏன் குட்டி சார் என்பதற்கு குழந்தைகளின் எளிய விளக்கமென்னவென்றால் ஒண்ணாவது வகுப்பு எடுக்கும் சார் குட்டி சார் அப்படியென்றால் பத்தாவது வகுப்பு எடுக்கும் சார் பெரிய்ய்ய சார். இவ்வளவு தான். குழந்தைகள் இந்த உலகை இப்படித்தான் எளிமையாகப் புரிந்து கொள்ளவே முயற்சிக்கிறார்கள். வீடாக இருந்தாலும் சரி, பள்ளியாக இருந்தாலும் சரி சமூகமாக இருந்தாலும் குழந்தைகளிடம் தோற்கக்கற்றுக் கொள்ள வேண்டும். அப்படித் தோற்கும் சமூகமே வெற்றிபெறும். அப்படி குட்டிசார் பெருமிதத்துடன் தோற்கிறார்.

    குழந்தைகள் விரும்புவதெல்லாம் அன்பு ஒன்று தான். அவர்கள் அதைத்தவிர வேறெதையும் பெரியவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. அதற்காக ஏங்குகிறார்கள். பெரியவர்கள் அதற்குத்தான் முன்னுரிமை தரவேண்டும். ஒரு ஆசிரியரிடம் தன்னுடைய உடல்நலன் குறித்துப் பகிர்ந்து கொண்டாலே சரியாகிவிடுமென்ற அன்புக்கும் நம்பிக்கைக்கும் ஈடாக என்ன இருக்கிறது இந்த உலகில்? குட்டிசாரிடம் அதைச் சொல்லும் குழந்தைஉங்ககிட்டே சொன்னா சரியாயிரும்னு சொன்னேன் சார்என்ற வார்த்தைகளுக்கு ஈடுண்டா?

    எப்போதும் சில பெரியவர்களுக்கு அவர்கள் சிறியவர்களாக இருப்பதினாலேயே அடிப்பது கிள்ளுவது என்றிருப்பார்கள். அப்படி அடிக்கிற மாமா கீழே விழுந்து காயம் பட்டதும் கொஞ்சமும் ஒளிவுமறைவின்றி சிரிக்கிறாள் ஒரு குழந்தை. ஆனால் அதே நேரம் எப்போது ஊருக்கு வந்தாலும் தன்னைப் பார்க்காமல் போகமாட்டார் தன்னுடைய மாமா என்று பள்ளிக்கே வந்து பார்த்துவிட்டுச் செல்லும் மாமாவுக்காக அன்பைச் சொரிகிறாள் ஒரு குழந்தை. நாம் குழந்தைகளிடம் எதைக் கொடுக்கிறோமோ அதையே திரும்பப் பெறுகிறோம்.

    குழந்தைகள் ஆசிரியர்களை அதிகாரிகளாகப் பார்க்க விரும்புவதில்லை. அவர்களைத் தங்களுடைய நண்பர்களாகப் பார்ப்பதையே விரும்புகிறார்கள். அதனால் தங்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்கிறார்கள். சாருக்காக ஒரு தேன் மிட்டாயைத் தருகிறார்கள். அவரிடம் காசு கொடுத்துப் பாதுகாப்பாய் வைத்திருக்கச் சொல்கிறார்கள்.

    ஆட்டுக்குட்டி வீட்டில் தனியாக இருக்குமென்று ஒரு குழந்தை பள்ளிக்கு வரவில்லை. அப்பாவைப் பற்றிய குழந்தைகளின் சித்திரங்களை அப்பாக்கள் அறியவில்லை. அப்படி அறிந்தால் இன்னும் தங்களுடைய குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் மனது வாய்க்கும். குழந்தைகளின் இயற்கை அறிவு பாடப்புத்தக அறிவைவிட ஆழமானது. ஆர்வமூட்டுவது. எளிமையானதும் கூட.

    இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் குழந்தைகளின் இயல்பை, மனதை, பளிங்குக்கண்ணாடி போல நமக்கு முன்னால் காட்டுகிறார் குட்டிசார் காளிதாஸ். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் குழந்தைகளை மையப்படுத்தியெழுதிய கவிதைகளையும் இணைத்திருப்பது இன்னும் கூடுதல் அர்த்தத்தை வாசிப்பவர்களுக்குக் கொடுக்கிறது. குழந்தைமையெனும் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்துக் கொட்டியிருக்கிறார் காளிதாள். ஒவ்வொரு முத்தும் நாம் நம்முடைய குழந்தைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்கள் மீது பேரன்பு கொள்ளவும் உதவுமென்ற நம்பிக்கை பிறக்கிறது.

    குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்படும் சிறார் இலக்கிய வகையில் இந்தக் குட்டிசார் முக்கியமான நூலாகத் திகழும்.

No comments:

Post a Comment