Sunday, 16 February 2025

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம்.

 

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் பெண்ணியம்.

உதயசங்கர்



கலை  தானே அறியாத சில ரகசியங்களை தன் இதயத்தின் ஆழத்தில் பொதிந்து வைத்திருக்கிறது. அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளவே கலைஞன் மீண்டும் மீண்டும் கலையைப் படைக்கிறான். அந்த ரகசியங்கள் அவனுக்குக் கிளர்ச்சியூட்டுகின்றன. அவனுடைய ஆசையைத் தூண்டுகின்றன. அவனை மேலும் மேலும் முன்னேறச்சொல்கின்றன. இருளும் ஒளியும் முயங்கி விசித்திரமான விலங்குகளும் தேவதைகளும் வாழும் காட்டுக்குள் அவன் முன்னேறுகிறான். விட்டு விலகமுடியாத வசீகரமும், அதற்குள்ளேயே வெளியேற வழியில்லாத புதிர்க்குகைகளும் அவனை அங்கேயே சுற்றிச் சுற்றி அலைக்கழிக்கின்றன. அந்த ரகசியங்கள் முதல் காதலின் பரிசுத்தமான ஏக்கத்தைப் போல மனதின் அடியில்போய்த் தங்கி விடுகின்றன. களங்கமற்ற குழந்தையின் சிரிப்பொலி காற்றில் என்றும் நிலைத்திருப்பதைப் போல ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

ஒவ்வொரு முறை எழுதும்போதும் அந்த ஏக்கம் காற்றில் அலைக்கழியும் சுடரொளி அணையும் முன் ஒருகணம் பளீரெனத் தெரிகிற காட்சியைப் போல தெரிகிறது. கண்ணை மறைத்த இருளில் காட்சியின் தடயங்கள் அப்படியே தங்கி விடுகிறது. அந்தத் தடயங்கள் இன்னும் ஆவேசமூட்டுகின்றன. இன்னும் ஆர்வமூட்டுகின்றன. அந்த இருளின் ஒளியில் அவன் மேலும் மேலும் முன்னேறுகிறான். எப்படியாவது அந்த ரகசியத்தைக் கண்டு பிடிக்கவேண்டும் என்பதே அவனுடைய அவா. அது என்னவாக இருக்கும்? அது எப்படி இருக்கும்? அது ஏன் அப்படி ரகசியமாக இருக்கிறது? அவற்றை தெரிந்து கொள்ளாவிட்டால் தன்னுடைய தலையே வெடித்து விடும்போல அவன் நினைக்கிறான். அதற்காகவே உன்மத்தம் பிடித்தவன் போல எழுதி எழுதிப் பார்க்கிறான்.

எழுத எழுத அவன் தேடிய அந்த ரகசியங்கள் அவனுடைய மனதுக்குள்ளேயே இருப்பதைக் காணமுடிகிறது. அவை இந்த யதார்த்த வாழ்க்கையிலிருந்து தான் உருவானவை என்பதை உணரமுடிகிறது. மானுட உண்மைகளின் ஒளிக்கீற்றுகளே அந்த ரகசியங்களென்று புரிந்து கொள்ளமுடிகிறது. ஆதிக்குகை ஓவியத்திலிருந்து இன்றுவரை கலை அதையே தன் லட்சியமாகக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கலையின் ஆதாரம் மனித வாழ்க்கையெனும்போது கலைஞன் அந்த வாழ்வை எழுதிப்பார்க்கிறான். அவன் எழுத எழுத வாழ்க்கை அவனுக்குக் கண்ணாமூச்சி காட்டுகிறது. வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களின் மனப்போக்குகளை, மனம் செயல்படும் விதங்களை, மனதின் தந்திரங்களை, மனதின் குரூரங்களை, மனதின் பேரன்பை, ஆசாபாசங்களை, மனதின் இயக்கவியலை, மீண்டும் மீண்டும் வேதாளத்தைச் சுமந்த விக்கிரமாதித்தன் போல தன் படைப்புகளில் எழுதிப்பார்க்கிறான் கலைஞன். மனிதர்களைப் பற்றிய அனைத்தும் புரிந்து விட்டது போலத் தெரிகிறது. ஆனால் ஒரு கணத்தில் எல்லாம் மாறிவிடுகிறது. மனித வாழ்க்கை விசித்திரமானதாகத் தெரிகிறது. மனிதர்கள் விந்தையாகி நிற்கிறார்கள். மனிதமனம் புதிர் நிறைந்த தோட்டமாகத் தெரிகிறது. அங்கே பல அபூர்வமான, அதிசயமான உணர்வுகள் பூக்கின்றன. காரணமின்றியே பல முட்களும் பூக்கின்றன. ஏனென்று தெரியவில்லை. யதார்த்தவாழ்க்கை மனிதர்களை ஆழிப்பேரலை போலச் சுற்றிச் சுற்றி சுழட்டியடிக்கிறது. அந்தப் பேரலையில் சிக்கிய மனிதர்கள் அதன் வீச்சுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுகிறார்கள். கலைஞனும் அந்தப் பேரலையில் சிக்கியவன் தான். அதனால் தான் மானுடவாழ்வின் தீராத பக்கங்களை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்க்கிறான்.

கு. அழகிரிசாமியெனும் மகத்தான கலைஞனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவருடைய இளமைக்காலத்தில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியதும், வாழ்க்கை குறித்த பொருள்முதல்வாதக்கண்ணோட்டம் கொண்டிருந்ததும் மிக முக்கியமான காரணம். அதனால் தான் வாழ்வின் அத்தனை சிடுக்குகளுக்கும் காரணம் புறவயமான யதார்த்தச் சிக்கல்களும் அதன் விளைவான உளவியல் பாதிப்புகளும் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார் கு.அழகிரிசாமி.

மானுட உண்மைகளில் விலங்குணர்ச்சிகளான பசியும், தாகமும், காதலும், காமமும் மட்டுமல்ல மானுடம் தன்னுடைய நீண்ட பயணத்தில் உருவாக்கிய தார்மீகநெறிகளான அன்பும், பாசமும், நேசமும், சமத்துவமும், சகோதரத்துவமும், சுதந்திரமும் மிக முக்கியமான பங்கைச் செலுத்துகின்றன. அடிப்படை விலங்குணர்வுகளும் தார்மீக நெறிகளும் ஒன்றுக்கொன்று முரண்படும் மையங்களிலெல்லாம் அதைப் புரிந்து கொள்ள கலைஞன் முயற்சிக்கிறான். அப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்யாத எழுத்தாளர்களே கிடையாது.

ஆனால் அந்த முரண்கள் ஒரு கட்டத்தில் தெளிந்த நீரோடும் ஆற்றின் ஆழத்தை அறிய முடியாததைப் போல மயக்குகிறது. மர்மமாக இருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும் போது எளிமையானதாகத் தெரியும். சுலபமாய் அவிழ்த்துவிடும் சிடுக்கைப் போலத் தெரியும். கறாரான நாகரீக சமூகத்தின் மாறிக் கொண்டேயிருக்கும் விதிமுறைகளைக் கொண்டு தீர்க்கமுடியாத ஆழ்ந்த பிரச்னை என்று புரியும்.

கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிற பெண்கள் அத்தனை எளிமையானவர்கள். அத்தனை ஆழமானவர்கள். அவர்களுடைய வாழ்க்கையிலிருந்தே அவர்கள் மீளமுடியாமல் தத்தளிக்கிறார்கள். அதற்கெல்லாம் காரணங்களாக ஆண்களே இருக்கிறார்களென்பதை அறிந்தவர்கள். இதுவரையிலும் கூட யாரும் சொல்லாத வாழ்க்கையை கு.அழகிரிசாமியின் கதைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவருடைய கதைகளை வாசிக்கும்போது கலைடாஸ்கோப்பை எத்தனை முறை திருப்பிப் பார்த்தாலும் அத்தனை முறையும் பன்முக வண்ணச்சித்திரங்களைக் காட்டுவதைப் போல பெண் கதாபாத்திரங்கள் மிளிர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பல கதைகளில் ஆண்களின் உலகத்தில் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் வியப்பூட்டுபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் அதிர்ச்சியூட்டுபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் இந்த சமூகத்தின் முகத்திலறைபவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் ஏதும் செய்யவியலாதவர்களாக இருக்கிறார்கள். பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது, அவர்கள் மர்மமானவர்கள் என்ற தேய்வழக்குகளுக்கு மாறாக அவர்களுடைய குணாதிசயங்கள் யதார்த்தச்சூழலிலிருந்து உருவாகின்றன என்பதை கு.அழகிரிசாமி அற்புதமாகத் தன்னுடைய கதைகளில் படைத்திருக்கிறார்.

 

பொருள்வயின் துயருரும் பெண்கள்

1942 – ல் எழுதப்பட்ட வள்ளியின் வாழ்க்கை கதையில் வரும் துப்புரவுத்தொழிலாளியான வள்ளி அதிகாலையிலேயே வந்து இருபது வீடுகளுக்கும் மேலாக வாசல் தொளித்து விட்டு கல்லுடைக்கப் போக வேண்டும். தாமதமாகப் போனால் மேஸ்திரி பூணிட்ட கம்பால் அடிக்கவும் செய்வார். கையில் காயத்துடன் தன்னுடைய வேலையைச் செய்யும் வள்ளியைப் பார்த்து அனுதாபப்படும் இளைஞன் யோசிக்கிறான்.

“ பனி, வெயில், பசி, தாகம் இவற்றை உணரும் ஒரு மனித உடலை சமூகத்தின் எந்தக் கட்டளையையும் நிறைவேற்றும்படியான யந்திரம் ஆக்கிவிட்டது மனித நாகரீகம்! “ கணவன் திருட்டுப்பழியினால் சிறையிலிருக்கிறான். அவளுடைய மகன் ஒரு ஹோட்டலிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கிறானென்பதை அவள் மகிழ்ச்சியுடன் சொல்கிறாள். ஏழைகள் வாழ்வதற்கு ஏதாவதொரு பற்றுக் கோடு தேவைப் படுகிறது. வள்ளி தன்னுடைய மகனைப் பற்றுக்கோடாக்கிக் கொண்டு பனியிலும் வெயிலிலும் கருமமே கண்ணாக வேலை செய்கிறாள். வள்ளியின் ஒரு நாள்க்காலைப் பொழுதை நம் கண்முன்னால் காட்சிப் படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த வள்ளிகளின் வாழ்வையே உணரச்செய்கிறார் கு.அழகிரிசாமி.

1943 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட பித்தளை வளையல் கதையில் வரும் கோமதியின் ஏழ்மை பொன் முலாம் பூசப்பட்ட பித்தளைவளையல்களை வாங்குவதறகு மட்டுமே அனுமதிக்கிறது. அந்தப் பித்தளை வளையலை அணிந்து கொண்டு அவள் செல்லும்  விசேஷ வீட்டில் மற்ற பணக்காரப் பெண்களால் அவமானப்படுத்தப்படுகிறாள். வறுமையின் மீதான கோபத்துடன் இருப்பவளை கணவன் சமாதானம் செய்கிறான். இந்தபொன்மேனிக்கு நிகராக எந்தப் பொன்னும் நிற்க முடியுமோ என்று காதல்வசனம் பேசிச் சமாதானம் செய்கிறான்.

யதார்த்தத்தில் இந்த வார்த்தைகளால் அவளுடைய வளையல்கள் பொன்னாக மாறப்போவதில்லையென்றாலும், வறுமையின் விளைவாக உருவான வெறுமையை இட்டு நிரப்புகின்றன அந்தச் சொற்கள். அந்த நேரத்தில் அவர்களிருவருக்கும் தேவைப்படும் சொற்களாக இருக்கின்றன. கோமதி அந்தச் சொற்களைக் கொண்டு அவளுடைய மனப்புண்ணை ஆற்றுகிறாள்.

1943 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட குழந்தையின் தியாகம் கதை தொடங்கும் போது முக அமைப்பினால் எப்போதும் சிரிப்பதைப் போலவே தோற்றமளிக்கும் சின்னி கணவனை இழந்து கைக்குழந்தையுடன் குமாரபுரம் பண்ணையாரின் வயலில் வேலை செய்கிறாள். காட்டு வேலைக்குப் பழக்கமில்லாத அவளுடைய உடல் நோவுகளால் குழந்தையும் நோய்வாய்ப்படுகிறான். பணம் கொடுத்த அதிகாரத்தினால் எதையும் எள்ளலும் ஏகடியுமாகப் பார்க்கும் பண்ணையார் ராமசாமிக்கு சின்னியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டாலும் அவளாக கனிந்து வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறான். ஆனால் அவனுடைய லட்சியத்தினால் சின்னியின் குழந்தை இறந்துவிட ராமசாமி செயலற்று சின்னியைப் பயபக்தியுடன் பார்ப்பதாக்க் கதை முடிகிறது. வறுமையின் கோரத்தினால் சின்னியின் குழந்தைத் தன்னைத் தியாகம செய்து தாயின் கௌரவத்தைக் காப்பாற்றுகிறது.

1949 – ஆம் ஆண்டு எழுதிய திரிபுரம் கதை, கு.அழகிரிசாமியின் கலைச்சிகரங்களில் ஒன்றெனச் சொல்லலாம். கி.ராஜநாராயணனும், கு.அழகிரிசாமியும் அவர்களுடைய கதைகளில் பஞ்சகாலத்தைப் பற்றியும் அந்தக்காலத்தில் மனிதர்கர்கள் வாழ்ந்த அவலமான வாழ்க்கையைக் குறித்தும் எழுதிச் சென்றிருக்கிறார்கள். அழகிரிசாமியின் திரிபுரம் கதையில் பஞ்சத்தினால் புலம்பெயர்ந்து செல்லும் தாயும் மகளும் படும் துயரத்தைக் கொதிக்கும் மனதுடன் சொல்கிறது. பஞ்சமும் பசியும் பட்டினியும்  மனிதர்களை எத்தகைய இழிநிலைக்குத் தள்ளி விடுகிறதென்பதையும், மண்ணில் கிடந்த வெள்ளரிக்காய்க்காகத் தாயும் மகளும் இடும் கௌரவச்சண்டையும், பசியைப் போக்க  தன் மகளையே சோரம் போகவைக்கும் நிலையையும் மனம் பதைபதைக்கச் சொல்கிறார் கு.அழகிரிசாமி. கதை முடிவில் உரத்த குரலில் தன் கண்டனத்தையும் பதிவு செய்கிறார்.

வெங்கட்டாமாவினால் நிலை கொள்ளமுடியவில்லை. அம்மா கடையை விட்டு அப்பால் நகர்ந்ததும் அம்மாவிடமிருந்து அவ்வளவு பணத்தையும் வாங்கினாள். வலது கையிலிருந்து இடது கையில் பணத்தைப் போட்டாள்.  இடது கையிலிருந்து வலது கையில் போட்டாள். வியந்து வியந்து பார்த்தவண்ணம் பணத்தைக் கையில் போட்டுக் குலுக்கினாள். எவ்வளவு எளிதாக இவ்வளவு பெரிய தொகை கிடைத்து விட்டது என்பதை நினைக்கும்போது அவளால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. உரக்கச் சிரித்தாள். விட்டு விட்டுப் பலமுறை சிரித்து விட்டாள். அந்தச் சிரிப்பு எதற்கு என்று அவளுக்கே புரியவில்லை. பாண்டியனிடம் சிவபிரான் வாங்கிய பொற்பிரம்படியைப் போல அவள் சிரித்த சிரிப்பு எங்கெல்லாம் பிரதிபலிக்க இருந்ததோ அவளுக்குத் தெரியாது. அவள் மனிதன் கட்டிய ஒழுக்கத்தை நோக்கிச் சிரித்தாள். ஒழுக்கக் கேட்டை நோக்கிச் சிரித்தாள். நாகரிகத்தையும் அநாகரித்தையும் பார்த்துச் சிரித்தாள். பணக்காரர்களை, ஏழைகளை, ஆண்களை, பெண்களை, பஞ்சத்தை – இப்படி எத்தனையோ அடங்கிய உலகத்தையே நோக்கிச் சிரித்தாள். இது வெங்கட்டம்மாவுக்குத் தெரியுமோ என்னவோ?

சிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான். இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ? அதை இப்போது யார்தான் அறிவார்கள்? அந்தக் காலத்துப் புத்தி மான்களும் கூட ஏழை அழுத கண்ணீருக்குத்தான் வாளை உபமானமாகச் சொன்னார்களே ஒழிய ஏழை சிரித்த சிரிப்பைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவில்லையே! “

கு.அழகிரிசாமியின் கலைச்சிகரங்களில் ஒன்றான ராஜா வந்திருக்கிறார் (1950) கதையில் வரும் தாயம்மாளும் மங்கம்மாவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் திகழ்கிறார்கள். மேலெல்லாம் சொறிசிரங்குடன் வரும் அனாதைச் சிறுவனைக் குளிப்பாட்டும் தாயம்மா எல்லாம் சரியாகி விடும்.. இனி எல்லாம் சரியாகி விடும்.. என்று சொல்லும் போது தாய்மையின் அன்பில் ஒளிவீசுகிறாள். அவளே அந்தச் சிறுவனுக்கு உடுத்திக் கொள்ள துணியேதுமில்லையே என்று தவிக்கும்போது மங்கம்மா

“ பாவம் அந்தத் துண்டைக் கொடு அம்மா “ என்று சொல்லும்போது உன்னதமான மானுடத்தருணத்தை கு.அழகிரிசாமி நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறார். அந்த ஏழ்மையிலும் அன்பை வரமென நமக்களித்து பாடம் போதிக்கிறார்கள் அந்த இரண்டு பெண்கள்.

1952 – ல் எழுதிய பாலம்மாள் கதையில் தாங்கை ஆசையாய் வாங்கிக் கொடுத்த புஷ்பராகக் கம்மலை குடும்பத்தின் தேவைக்காக மீண்டும் மீண்டும் அடகு வைத்து மீண்டும் மீண்டும் மீட்டு கடைசியில் அவளுக்கு வயதான பிறகு அவற்றைக் காதில் போடுகிற வாய்ப்பு கிடைக்கிறது. பாலம்மாள் போட்டுக் கொண்டாலும் ஊர் அவள் காதுபடவே,

“ கிழவிக்கு ஆசையைப் பார்த்தாயா? பாட்டி. நல்ல வாலிப மாப்பிள்ளை ஒருவன் இருக்கிறான். கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? “

என்று பேசுகிறார்கள். காலங்கடந்த அவளுடைய ஆசை நிராசையாகவே போய் விட்டது. வறுமையினால் கையில் கிடைத்த கம்மல்களும் கூட அவளைக் கேலி பேசுகின்றன. அந்தக் கம்மல்கள் வாழ்வில் அவள் பலவற்றையும் குறியீடாகச் சொல்வதாகவும் வாசிக்கமுடியும்.

இப்படி யதார்த்த வாழ்வெனும் தீராத கடலலைகளில் சிக்கித் தவித்து அல்லலுறும் பெண்களின் சித்திரங்களை அற்புதமாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

 

பெண்மனக்கடலில் ஒயாது வீசும் அலைச்சித்திரங்கள்

மிகுந்த கூருணர்வு மிக்கவர்கள் பெண்கள். அவர்களுடைய தியாகம், அன்பு, கருணை, இரக்கம், வலி, வேதனை, துன்பம், துயரம் ஆகியவற்றாலேயே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்களின் சட்டங்களுக்கும், தர்மநியாயங்களுக்கும் இன்றுவரை தங்களைப் பலி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பெண்களின் உணர்வுகளையும், வாழ்க்கையையும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆண்களே தீர்மானிக்கிறார்கள். அவற்றின்படி நடக்க பெண்களை நிர்ப்பந்திக்கிறார்கள். பெண்ணை பத்தினியாகவும், பரத்தையாகவும் ஆணே மாற்றுகிறான். பெண்களுக்கென்று தனியே உணர்வுகள், ஆசைகள், காதல், காமம், இல்லையா என்று கேட்டால் பெண்கள் பதில் சொல்வதில்லை. அந்தக் கேள்வியை மர்மமான புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள்.

மர்மமான அந்தப் புன்னகைதான் எழுத்தாளனை வசீகரிக்கிறது. அவன் அந்தப் புன்னகையில் இருக்கும் மர்மத்தைக் கண்டு பயப்படுகிறான். மகிழ்ச்சியடைகிறான். உவகை கொள்கிறான். அந்த மர்மத்தைக் கட்டுடைக்க அவரகளிடமே இறைஞ்சுகிறான். அதனால் தான் மகத்தான படைப்பாளிகளான டால்ஸ்டாய் கிரெய்ஸர் சோனட்டாவை  எழுதுகிறார். தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகளை எழுதுகிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவ் ஜமீலாவை எழுதுகிறார். செகாவ் டார்லிங்கை எழுதுகிறார். அலெக்சாந்தர் குப்ரின் மாணிக்கக்கங்கணத்தை எழுதுகிறார். துர்கனேவ் ஆஸ்யாவை எழுதுகிறார். மாணிக் பந்தோபாதயாயா நீலகண்டபறவையை எழுதுகிறார். கு.ப.ரா, சிறிது வெளிச்சத்தையும், ஆற்றாமையையும் எழுதுகிறார். தி.ஜானகிராமனும் மோகமுள்ளையும் மரப்பசுவையும், அம்மா வந்தாளையும், செம்பருத்தியையும் எழுதுகிறார். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போல எண்ணற்ற எழுத்தாளர்கள் இன்றும் பெண்களின் அந்த மர்மமான புன்னகைக்குப் பின்னால் ஊர்வலமாகப் போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.

கு.அழகிரிசாமியும் காலத்தால் அழியாத பெண்களைப் படைத்திருக்கிறார். அழகிரிசாமியின் பெண்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஏழ்மையின் காரணமாகத் தியாகம் என்னும் இருள்பள்ளத்துக்குள் தள்ளிவிடப்பட்டவர்கள், தன்னுடைய அறியாமையினால் தன் வாழ்க்கையை இழந்தவர்கள், ஆண்களின் செயல்களுக்குப் பார்வையாளர்களாக இருப்பவர்கள், அன்பும் கருணையும் உருவானவர்கள் என்று சொல்லலாம்.

1942 – ல் எழுதப்பட்ட இரவு கதையில் நண்பனின் அழகற்ற மனைவியுடன் த்ற்செயலாகத் தனியே இருக்கும் கதைநாயகனுக்கு இரவில் மட்டுமே மனவிகாரம் தோன்றுவதும் அது குறித்த விசாரமும் தான்.  கதை எதைப் பற்றிப் பேசப்போகிறதென்பதை கதையின் முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறார் ஆசிரியர்.

சாயங்கால நேரம். பனிரெண்டு மணி நேரம் காத்திருந்த பகல்செல்வன் இரவுப் பெண்ணைத் தழுவி ஐக்கியமாகும் வேளை. என்ன வேண்டியிருக்கிறது. காதலாம் தழுவலாம். பகல் செல்வனுக்கு வெறி பிடித்ததும் சரி. இரவுப்பெண் இருட்டில் வந்ததும் சரி. இல்லாவிட்டால் தன்னுடைய அழகுக்கு அவன் அந்த இரவுப்பெண்னின் அவலஷ்ணத்தைப் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் பார்த்திருந்தால் அவளைத் தழுவ இசைந்திருப்பானா? 

கதையில் இரவும் ஒரு கதாபாத்திரமாக வருகிறஹு. இந்தக் கதை முழுவதும் பெண்ணைச் சுற்றியே நடந்தாலும் அவள் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவருடைய உணர்வுகளைப் பற்றியோ, கணவனின் செயல் மீதான எதிர்வினையோ எங்கும் பதிவாகவில்லை. கதை முடிந்த பின்னும் அந்தப் பெண் கதாபாத்திரம் இன்னொரு கதையை நமக்குச் சொல்கிறார்.

1942 –ல் எழுதிய வனஜம் கதையில் வயதுக்கு வராத பதினான்கு வயது சிறுமியிடம் காதல்வயப்பட்ட ஆணைப் பற்றிய கதையாக இருந்தாலும் கதை நெடுக வனஜமே ஆக்கிரமிக்கிறாள். வனஜத்தின்  வெகுளித்தனமும், பாலீர்ப்பற்ற உரையாடல்களும் ஆணைக் குழப்புகினறன. சிறுமியாக இருந்த வனஜம் ஒரு கணத்தில் பெரிய பெண்ணாக மாறுகிற தருணத்தை அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் கு.அழகிரிசாமி. அதுவரை இருந்த கள்ளங்கபடற்ற அந்தக் குழந்தை மனதில் கல் விழுந்து விட்டது. பதட்டத்துடன் போங்கள் போங்கள் என்று விரட்டுகிறாள். இனி என் பக்கத்தில் நீங்கள் வரக்கூடாது என்று பெரிய மனுஷியாகப் பேசுகிறாள். நுட்பமான உணர்வு மாற்றத்தைச் சித்தரிக்கும் இந்தக் கதையைப் போல வேறொரு கதை தமிழில் வந்திருக்கிறதாவென்று தெரியவில்லை.

1948 – ல் எழுதிய சிரிக்கவில்லை கதை கு.அழகிரிசாமியின் கலையின் மிக முக்கியமான கல்வெட்டு என்றுச் சொல்லலாம். ராஜாராமன் மீதான ஆர்வத்தாலும் பாலீர்ப்பு என்று அறியாமலும் வருகிற வெகுளியான பாப்பம்மாள் ராஜாராமனைப் பார்ப்பதற்காகவே சுற்றிச் சுற்றி வருகிறாள். ஒருமுறை ராஜாராமனிடம் முத்தமும் பெறுகிறாள். ஆனால் அதை அவள் விகல்பமில்லாமல் ஏற்றுக் கொள்கிறாள்.

“ ராஜாரமனுக்கு முத்தத்தில் சுகானுபவம் பொதிந்திருந்தது. பாப்பம்மாளுக்கோ முத்தம் குஷியாகத் தான் இருந்தது. அவளைப் பொறுத்த மட்டிலும் முத்தத்திற்காகத்தான் முத்தம். வேறு எதற்காகவும் அல்ல! “

ராஜாராமன் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடித்து வரும்போதும் அதே வெகுளித்தனத்துடன் வளைய வளைய வருகிறாள். ஆனால் ராஜாராமனுக்குக் குழனந்தை பிறந்ததும் தான் அவளுக்கு யதார்த்தம் புரிகிறது. ராஜாராமனைப் போலவே இருந்த குழந்தை அவளுடைய ஏதோ ஒரு நம்பிக்கையை அடியோடு சாய்த்து விட்டது. இனி ராஜாராமன் அவனுடைய மனைவிக்கு மட்டுமே சொந்தம் என்பதைக் குழந்தை ஒவ்வொரு கணமும் சிரித்துச் சிரித்து நிரூபித்தது.

அவள் யாருடனும் பேசாமல் அழத் தொடங்குகிறாள். கு.அழகிரிசாமி கதையை இப்படி முடிக்கிறார்,

“ அவளுடைய மானசீகப்பற்றுவரவுக் கணக்கி. ஒரு பெரிய தப்பு விழுந்து விட்டது. பற்று வரவுக் கலங்களில் வரவு வைக்கவேண்டியதைப் பற்று என்றோ, பற்று எழுத வேண்டியதை வரவு என்றோ பதிவு செய்து விட்டாள். கணக்குப் பார்த்தால் மாறி மாறித் தப்பு விழுந்து கொண்டிருந்தது. “

பாப்பம்மாளின் உளவியல் மாற்றம் குறித்தோ, மனதில் என்ன நிகழ்ந்ததென்றோ வாசகர் அறியமுடியாத புதிராக முடித்து பெண் மனம் மர்மமானது. கடலை விட ஆழமானது. என்றெல்லாம் கதை விடவில்லை கு.அழகிரிசாமி.

பாப்பம்மாளின் உளவியல் மாற்றத்தை  நடைமுறை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிறார். வாசகருக்குத் தெளிவாகத் தெரிவிக்கவிரும்புகிறார். எனவே தான் பற்றுவரவுக்கணக்காகத் தருகிறார். கு.அழகிரிசாமியின் வாழ்க்கைப்பார்வையை இதிலிருந்து அறிந்து கொள்ள முடியுமென்பது சிறப்பு. 

1949 – ஆம் ஆண்டு எழுதிய திரிபுரம் கதையில் வரும் தாயும் மகளும் அதுவரை தமிழ்ச்சிறுகதைகளில் சித்தரிக்கபடாத கதாபாத்திரங்கள். பசியும் வறுமையும் மனிதர்களின் மாண்புகளையும் மனித உறவுகளையும் கீழ்மையானதாக மாற்றிவிடுவதைப் நம் மனம் பதைபதைக்கச் சொல்கிறார் கு.அழகிரிசாமி. கீழே மண்ணில் கிடந்த வெள்ளரிக்காயை எடுத்து அது என்ன காய் என்று கேட்பதிலுள்ள பாசாங்கைக் கண்டு மகள் தாயுடன் சண்டையிட்டு இருவரும் ரத்தம் வர பிறாண்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் மனம் ஆறாத தாய் பின்னர் வந்து காலில் மிதிபட்டு மேலும் நசுங்கியிருந்த அந்த வெள்ளரிக்காயைத் தின்கிறாள்.

“ வெள்ளரிக்காயை ஊதினாள். கடைசியில் தின்றே விட்டாள். ஒரு மட்டும் அவளுக்கு நிம்மதி பிறந்தது. ஏதோ இனி யுகக்கணக்கில் பசியில்லாமல் இருக்கலாம் போல அவளுக்குத் தோன்றியது.. சந்தோஷத்துடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டாள். “

யுகக்கணக்கில் பசியில்லாமல் இருக்கலாம் என்ற வரிகளில் அந்தக் கதாபாத்திரத்தித்தின் மனதை அப்படியே தருகிற கு.அழகிரிசாமி அதற்கடுத்த பத்தியிலேயே யதார்த்த நிலைமையை அவளுக்குப் புரிய வைக்கிறார்.  அவர்களிருவரும் சண்டையிடுவதும் பின்னர் குரூரமான யதார்த்தத்துக்கு முன்னால் மண்டியிட நேர்வதையும் கலையழகுடன் காட்சிப்படுத்துவதில் கு.அழகிரிசாமி மிளிர்கிறார்.

1952 – க்கு முன் எழுதிய் கதையில் வரும் ராஜம் சின்னஞ்சிறு பெண். அவளைக் குழந்தைப் பேற்றை நோக்கித் தள்ளிவிட்ட குற்றவுணர்ச்சியில் தவிக்கும் கணவனைத் தன் ஒற்றைச் செய்கையால் தான் இன்னும் குழந்தையல்ல என்பதை உணர்த்துகிற பெண்ணைக் காட்டுகிறார். பெண்கள் எந்தக் கணத்தில் பெரிய மனுஷிகளாக மாறுகிறார்களென்பதை எழுதிப்பார்க்கிறார் கு.அழகிரிசாமி.

1952 – க்கு முன் எழுதிய காதல்போட்டி கதையில் பூனை எலியாகவும் எலி பூனையாகவும் மாறி மாறி ஒருவரையொருவர் வெறுத்தும் விரும்பியும் நெருங்கியும் விலகியும் நாடகத்தை அழகாக எழுதியுள்ள கு.அழகிரிசாமி. இருவரின் அன்புக்குமிடையில் நிலவுகிற ஈகோ போட்டியையும் அதன் விளைவாக ஏற்படுகிற அனர்த்தத்தையும் விரிவாகச் சொல்லிச் செல்கிறார். கடைசியில் இருவருமே அந்தப் போட்டியில் தோற்றுப் போகிறார்கள். இறுதி வரிகளில்

“ பாமா திரும்பிப் பார்த்தாள்.

ராகவனுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

பாமாவுக்கோ உடம்பு முழுவதுமே நடுங்கியது. “

என்று கவித்துவத்துடன் முடித்திருப்பார் கு.அழகிரிசாமி. இப்படி பெண்ணின் எண்ணவோட்டங்களை அழகின் விலை கதையிலும் சித்தரித்திருப்பார் கு.அழகிரிசாமி. காலகண்டி கதையில் வருகிற கிழவி நாடகத்தில் காலகண்டியாக நடிக்கிற தன் மகனைப் பற்றி சுற்றிலுமிருக்கிற பெண்கள் சாபமிடும் போதெல்லாம் கோபமும் ஆங்காரமும் கொள்கிறாள். ஆனால் எதுவும் பேசாமல் ஒவ்வொரு பெண் பேசும்போதும் அந்தத் திசை நோக்கி ஆக்ரோஷத்துடன் வெறித்துப் பார்த்து வாயை மென்று கொண்டேயிருக்கிறாள். உச்சகட்டத்திம் தாளமுடியாத கிழவி அந்தப் பெண்களுடன் சண்டையிட்டு புழுதியில் புரள்கிறாள். மகன் மீதுள்ள பாசம் அவளை ஆங்காரம் கொள்ள வைத்ததென்றாலும், காலகண்டியாக நடித்த நடிகரின் தத்ரூபமான கலைத்திறனே அப்படி பேச வைத்ததென்பதையும் சொல்லிச்செல்கிறார். தாயின் பாசம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாறுவதைச் சொல்லும்போது அழகிரிசாமியின் கலை உச்சத்துக்குப் போகிறது. கலைக்கும் யதார்த்தக்குமான போராட்டமென குறியீட்டு வடிவமும் கொள்கிறது.

1952 – முன் எழுதிய அழகம்மாள் கதை கு.அழகிரிசாமியின் கதைகளின் உச்சம் என்று சொல்லலாம். மூன்று கதாபாத்திரங்களின் மனப்போராட்டங்களே கதை. அத்தனை மனப்போராட்டங்களும் அழகம்மாளைச் சுற்றியே நடக்கின்றன. கிருஷ்ணக்கோனாரின் மீதான பரிவுடன் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிற அழகம்மாள் மகன் கோபால் வந்ததும் முற்றிலும் வேறொரு பெண்ணாக மாறிவிடுகிறாள். தியாகம் என்ற பெயரில் தான் இழந்தை வாழ்க்கையை எப்படியாவது மீட்டெடுக்க அலைபாய்கிறாள். விதவிதமான சேலைகள், அலங்கராம் என்று மற்றவர்களின் சிரிப்பதையும் பொருட்படுத்தாமல் அலைந்து திரிகிறாள். கோபாலுக்கு சங்கடமாக இருக்கிறது. நாசூக்காகச் சொல்லியும் காட்டுகிறான். தன் சொந்த மகனாக இருந்தாலும் கோபால் வந்து விட்டால் கிருஷ்ணக்கோனார் புழுவாய்த்துடிக்கிறார். அழகம்மாள் அத்தனை வன்மத்துடன் அவரிடம் நடந்து கொள்கிறாள். நகரத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகனைத் தேடி வருகிற பெரியவர்கள், பண்ணையார்களைப் பார்த்து அவளுக்குத் தன்னை மகனின் கௌரவத்துக்கு ஈடாக மாற்றும் எண்ணமோ, கழிந்த வாழ்க்கையின் கசப்புத்துளிகளின் சுவையை இனிப்பாக மாற்றுகிற முயற்சிகளையோ செய்து பார்க்கிறாள். அதன் உச்சமாகத்தான் ஒரு சேலை விவகாரத்தில் அவள் வெடித்துச் சிதறுகிறாள்.

சேனைத்தனத்தோட – உன்னை

சேர்ந்திருக்கக் கிட்டலையே

என்று ஒப்பாரி வைக்கிறாள் அழகம்மாள். பயந்து போன கோபால் கதவைத்தட்டி அழைக்கிறான். அம்மா கதவைத் திறந்ததும் அம்மா அம்மா என்னம்மா? என்று கேட்கும்போது பத்து வருடங்களுக்கு முன்னால் இறந்து போன அப்பாவை நினைத்து அழுவதாகச் சொல்கிறாள். அவள் உண்ஐயைச் சொல்லவில்லை என்று கோபாலுக்கும் தெரியும். வெளியே அப்பாவும் கேவிக் கேவி அழுது கொண்டிருக்கிறார்.

மூன்று பேரும் சேர்ந்து மூன்று பேருக்கும் தெரிந்த ஒன்றை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் மறைத்தார்கள். மறைந்து நிற்கும் ரகசியம் மூன்று பேரின் பேச்சுக்கு நடுவிலே வந்து முள்ளைப் போலக் குத்திக் கொண்டிருந்தது.

தமிழ்ச்சிறுகதைகளில் அழகம்மாளுக்கு இணையாக இன்னொரு கதை இன்னமும் எழுதப்படவில்லை. கு.அழகிரிசாமியின் கலை மேதைமை ஒளிரும் சிகரம் என்று அழகம்மாள் கதையைச் சொல்லலாம்.

முடிவுரை

கு.அழகிரிசாமியின் கதைகளில் வரும் கிராமத்துப் பெண்கள் துயர் மிக்க தங்களுடைய வாழ்க்கையினால் அல்லலுற்றாலும் தங்கள் அடையாளத்தை இழக்காதவர்கள். வறுமையால் வாடினாலும் கருணை மிக்கவர்கள். கணவனால் கைவிடப்பட்டாலும் தொடர்ந்து போராடுபவர்கள். ஆண்களின் அசட்டுத்தனத்தைப் பார்த்துச் சிரித்தபடியே பெரிய மனுஷி போல பெருந்தன்மையுடன் ஆண்களை அரவணைத்துக் கொள்பவர்கள். காலங்கடந்த தங்கள் ஆசையைக் குழி தோண்டி புதைத்துவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்பவர்கள். வாழ்க்கையில் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரணப்பெண்கள் தான். ஆனால் குழகிரிசாமியின் கலைமேதைமையொளியால் அவர்கள் அசாதாரணமான பெண்களாக மாறுகிறார்கள்.

மனிதவாழ்வை மேன்மைப் படுத்துவதே கலையின் லட்சியம் என்று கொண்டோமானால் கு.அழகிரிசாமியின் கதைகளில் வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நம்முடைய வாழ்க்கையின் அர்த்தங்களை மேலும் ஒளி கூட்டுகிறார்கள்.

கு.அழகிரிசாமியின் கதைகள் தோற்றத்துக்கு எளிமையாகத் தோன்றினாலும் அந்த எளிமைக்குப் பின்னாலிருக்கும் ஆழம் நமக்குள் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் உள்ளேயிழுத்துக் கொண்டேயிருக்கும். தமிழ்ச்சிறுகதைகளில் தனக்கென தனித்துவமான பாணியைக் கைக்கொண்ட கு.அழகிரிசாமியின் கதைகள் என்றென்றும் வாசிக்க வாசிக்கப் புதுமையாகத் திகழ்பவை. காலங்களைக் கடந்தும் நம்முடன் அவை உரையாடிக் கொண்டேயிருக்கும்.

நன்றி - புக் டே

 

 

 

No comments:

Post a Comment