Monday, 10 February 2025

காக்கா கொண்டு போச்சு!

 

காக்கா கொண்டு போச்சு!

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



ஓரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாள். கதை சொல்கிற பாட்டி. கதை கேட்கிற குழந்தைகள் அவரை கதைப்பாட்டி என்று அழைத்தார்கள். கதைப்பாட்டியின் கையில் ஒரு மூட்டை உண்டு. அதற்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. கதைப்பாட்டியிடம் குழந்தைகள் கேட்கும்போது அந்த மூட்டையில் நிறைய கதைகள் இருக்கின்றன என்று சொல்வாள். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூட்டையில் ஒரு ஆரஞ்சுப்பழத்தைப் போட்டால் உடனே ஆரஞ்சுப்பழத்தைப் பற்றி ஒரு கதை வரும். ஒரு வாழைப்பழத்தைப் போட்டால் உடனே வாழை மரத்தைப் பற்றி ஒரு கதை வரும்.

ஒரு நாள் கதைப்பாட்டி ஒரு ஆலமரத்தடியில் மூட்டையைத் தலைகாணியாக வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது சின்னு என்ற இரண்டு வயதுக்குழந்தை அம்மாவைத் தேடி வீட்டை விட்டு வெளியில் வந்தாள். அவள் கதைப்பாட்டியின் அருகில் வந்தாள்.

யார் அது படுத்து உறங்குவது? கதைப்பாட்டியா! வெள்ளை வெளேரென்று வெளுத்த தலைமுடி. பளபளன்னு மினுங்கும் மூக்குத்தி.

ஹாய்! சின்னு அவளே வரைந்த அவளுடைய படத்தை மூட்டைக்குள் போட்டாள். கதைப்பாட்டி விழித்து எழுந்து சின்னுவை மடியில் உட்கார வைத்துக் கொண்டாள். சின்னுவைப் பற்றி ஒரு கதை சொன்னாள்.

ஒரு ஊரில் சின்னு என்ற ஒரு குறும்புக்காரக்குழந்தை இருந்தாள். சின்னுவின் அம்மா சோம்பேறி. சின்னு எந்த விளையாட்டு விளையாடவேண்டும் என்று கேட்டாலும் அதை எடுத்துக் கொடுப்பதற்குச் சோம்பல் படுவாள். சின்னுவின் அம்மா சொல்வாள்,

“ ஐய்யோ! அதை காக்கா கொண்டு போச்சு சின்னு.. காக்கா கொண்டு போச்சு..”

எல்லாவிளையாட்டுச் சாமான்களையும் காக்கா கொண்டு போய் விட்டால் சின்னு எதை வைத்து விளையாடுவாள்? சின்னுவுக்குக் கோபம் வந்தது. மூக்குக்கு மேல் கோபம். அம்மா உறங்கும்போது வீட்டை விட்டு வெளியேறினாள். காக்காவைத் தேடினாள். காக்காவிடம் கேள்வி கேட்டே ஆகணும். போகிற வழியில் காக்கா வாழைமரத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். சின்னு விளையாட்டுச்சாமான்களைப் பற்றிக் கேட்டபோது, காக்கா சொன்னது,

“ ஐய்யோ! அதை பூனை கொண்டு போச்சு.. பூனை கொண்டு போச்சு..”

சின்னு பூனையைத் தேடி நடந்தாள். பூனையைப் பார்த்தாள். சின்னு பூனையைப் பயமுறுத்தினாள். பயந்து போன பூனை என்ன சொன்னது தெரியுமா?

“ ஐய்யோ! நாய்க்குட்டி கொண்டு போச்சு! சின்னு நாய்க்குட்டி கொண்டு போச்சு! “

சின்னுவுக்கு குழப்பமாக இருந்தது. என்ன உலகம்! ஒரு சின்னப்பிள்ளையை விளையாட விடவில்லையே. வீட்டுக்குப் போகும் வழியும் மறந்து விட்டது. அப்படியே நடந்து வரும்போது கதைப்பாட்டி உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அப்போது என்ன நடந்தது தெரியுமா?

தலைமுடியெல்லாம் காற்றில் பறக்க சின்னுவின் அம்மா அழுது கொண்டே ஓடி வந்தாள். சின்னு ஒரு குதி குதித்து கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். சின்னுவின் அம்மா கதைப்பாட்டியின் முன்னால் வந்து நின்று அழத்தொடங்கினாள்.

“ சின்னுவைக் காணவில்லை.. கதைப்பாட்டி.. சின்னுவை எங்காவது பார்த்தீர்களா? கடவுளே நான் இனிமே எப்படி உயிருடன் இருப்பேன்..”

அதை எல்லாம் கேட்டபிறகு கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்திருந்த சின்னு முன்னால் வந்தாள்,

“ காக்கா கொண்டு போச்சு.. சின்னுவைக் காக்கா கொண்டு போச்சு..”

என்றாள். கதைப்பாட்டி விழுந்து விழுந்து சிரித்தாள். சின்னுவின் அம்மா சின்னுவை அப்படியே அள்ளி எடுத்து நிறைய முத்தங்கள் கொடுத்தாள்.

அதன்பிறகு எப்போதும் சின்னுவுக்கு விளையாட்டுச்சாமான்கள் கிடைத்துக் கொண்டிருந்தன.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

No comments:

Post a Comment