Tuesday, 4 February 2025

கோபக்கார வான்கோழிச் சேவல்

 

கோபக்கார வான்கோழிச் சேவல்

ஈனோ ரௌட்

தமிழில் - உதயசங்கர்


பண்ணையில் இருந்த எல்லாருக்கும் தெரியும் 

வான்கோழிச்சேவலுக்குக் கோபம் அதிகம் என்று.

காலையிலும் மாலையிலும் அது கோபமாக இருக்கும்.

பகலிலும் அப்படித்தான்.

முழுநாளும் அப்படித்தான்.

ஒவ்வொரு நாளும். அப்படித்தான் இருக்கும்.

இரவிலும் கூட அப்படித்தான் இருக்கும்.

ஒவ்வொரு இரவும் அப்படித் தான் இருக்கும்.

அதன் தூக்கத்திலும் சிடுசிடுப்பாகவே இருக்கும். மோசமான கனவுகளினால் இருக்கலாம்.

“ ஏன் இப்படி சிடுசிடுத்துக் கொண்டே இருக்கிறது? “ என்று வான்கோழிகள் ஒன்றுக்கொன்று கேட்டுக்கொள்ளும்.

“ அதுவா? அதனுடைய ஈரல் மோசமாக இருக்கிறது.. யாருடைய ஈரல் கெட்டுப்போயிருக்கிறதோ அவர்கள் கோபமாகத் தான் இருப்பார்கள் “ என்று வாத்துகள் விளக்கமளித்தன தாராக்கள். ( குள்ளவாத்து )

“ அப்படி எல்லாம் இல்லை..அதுக்குத் தற்பெருமை.. அதைத்தான் காட்டுகிறது.. கோபமாக இருப்பதற்கு பயிற்சி எடுக்கிறது.. அப்போது தான் அழகாக இருக்கமுடியுமாம்.. அதுக்குக் கோபம் வரும்போது அதன் நாடியிலிருந்து தொங்குகிற அந்தச் சதைப்பை சிவப்பாக மாறிவிடும்.. பார்ப்பதற்கு அழகாக இருக்கும்..” என்று வாத்துகள் சொல்லின.

குறுகுறுப்புள்ள ஒரு சேவலால் அதை அப்படியே விடமுடியவில்லை. என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள அது நேரே வான்கோழிச்சேவலிடம் சென்றது.

“ இங்கே பாரு.. வான்கோழிச்சேவல்.. நீ ஏன் எப்போதும் கோபமாகவே இருக்கிறாய் என்று நேர்மையாகச் சொல்ல முடியுமா? “

என்று கேட்டது சேவல்.

வான்கோழிச்சேவல் யோசித்தது. யோசித்தது. பிறகு கர்வத்துடன் பதில் சொன்னது.

“ எனக்குள் கொதிக்கும் கோபம் குவிந்து என் இதயத்தில் சுமையாகத் தங்கி விடுகிறது.. சில சமயம் அது என்னை மூச்சுத் திணற வைக்கிறது..”

“ ஏன் உடனே உன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது? அது உன்னைச் சாந்தப்படுத்துமே..”

என்று சேவல் ஆலோசனை சொன்னது. அதற்கு எப்போதும் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது மிகவும் பிடிக்கும்.

வான்கோழிச்சேவல் மறுபடியும் யோசித்தது. அதன் முகவாய் சிவந்தது. அப்படியே ஊதிப்பெருத்தது.

 

“ அப்படியே செய்யலாமே..” என்று கடுமையான கோபத்துடன் சொன்னது. அதை அந்தச் சேவலிடம் காட்டியும் விட்டது. அந்தச் சேவலின் வாலில் இருந்த அழகான இறகுகள் அங்குமிங்கும் பறந்தன.

அதன்பிறகு அந்தப் பறவைப்பண்ணையிலிருந்த யாரும் ஒருபோதும் வான்கோழிச்சேவலிடம்,

“ ஏன் நீ கோபமாக இருக்கிறாய்? ” என்று கேட்டதே இல்லை.

 

நன்றி - புக் டே



No comments:

Post a Comment