Thursday, 6 February 2025

மூன்று கரடிகள்

 


மூன்று கரடிகள்

லியோ டால்ஸ்டாய்

தமிழில் - உதயசங்கர்



ஒரு நாள் ஒரு சிறுமி காட்டுக்குள் ஒரு நடை நடந்து போனாள். அவள் பாதையைத் தொலைத்துவிட்டாள். வீட்டுக்குப் போகும் பாதையைத் தேடி அலைந்தாள். ஆனால் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. காட்டுக்குள் இருந்த ஒரு சிறிய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள்.

கதவு திறந்திருந்தது. அவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். வீட்டுக்குள் யாருமில்லை. உள்ளே போனாள்.

அந்த வீட்டில் மூன்று கரடிகள் வசித்து வந்தன. ஒரு அப்பாக்கரடி. அதன் பெயர் மிகைலோ இவானிச். அது பெரியதாகவும் அடர்ந்த முடியுடனும் இருந்தது. இரண்டாவது அம்மாக்கரடி. அது சிறியதாக இருந்தது. அதன் பெயர் நாஸ்டாசியா பெட்ரோவ்னா.மூன்றாவது குட்டிக்கரடி. அதன் பெயர் மிஷா. அப்போது கரடிகள் வீட்டில் இல்லை. காட்டுக்குள் ஒரு நடை போய் இருந்தன.

அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்தன. ஒன்று சாப்பாட்டு அறை. இன்னொன்று படுக்கையறை.

அந்தச் சிறுமி சாப்பாட்டு அறைக்குப் போனாள். அங்கே மேசையின் மீது மூன்று கிண்ணங்களில் கஞ்சி இருந்தது. முதல் கிண்ணம் மிகப்பெரியது. அது மிகைலோ இவானிச்சுக்கு,  இரண்டாவது கிண்ணம் அதைவிட சிறியது. அது நாஸ்டாசியா பெட்ரோவ்னாவுக்கு. மூன்றாவது நீலநிறக்கிண்ணம். அது மிஷாவுக்கு. ஒவ்வொரு கிண்ணத்துக்கு அருகிலும் ஒரு கரண்டி இருந்தது.

ஒரு பெரிய கரண்டி. அதைவிடச் சிறிய கரண்டி, மிகச்சிறிய கரண்டி.

அந்தச் சிறுமி பெரிய கரண்டியை எடுத்து பெரிய கிண்ணத்தில் இருந்த கஞ்சியை ருசி பார்த்தாள். பிறகு அதைவிட சிறிய கரண்டியை எடுத்து சிறிய கிண்ணத்தில் இருந்த கஞ்சியை ருசி பார்த்தாள். பிறகு அவள் குட்டிக்கரண்டியை எடுத்து நீலக்கிண்ணத்தில் இருந்த கஞ்சியை ருசி பார்த்தாள். அவளுக்கு மிஷாவின் கஞ்சி தான் சிறப்பாக இருந்தது.

அந்தச் சிறுமி உட்காரவேண்டும் என்று விரும்பினாள். அவள் மூன்று நாற்காலிகளைப் பார்த்தாள். பெரியது, மிகைலோ இவானிச்சின் நாற்காலி. அதைவிடச் சிறியது நாஸ்டாசியா பெட்ரோவ்னாவுடையது, நீலநிற மெத்தை போட்ட குட்டி நாற்காலி மிஷாவினுடையது.

பெரிய நாற்காலியில் ஏறி உட்கார முயற்சி செய்தாள். கீழே விழுந்து விட்டாள். அதற்கு அடுத்து இருந்த சிறிய நாற்காலியில் உட்கார்ந்தாள். அது அவளுக்கு வசதியாக இல்லை. அவள் சிறிய நாற்காலியில் உட்கார்ந்தாள். அது நன்றாக இருந்தது. அவள் ஆனந்தமாகச் சிரித்தாள். அவள் நீலநிரக்கிண்ணத்தை மடியில் வைத்துக் கொண்டு சாப்பிடத்தொடங்கினாள். அவள் கஞ்சி முழுவதையும் குடித்து விட்டாள். அந்த நாற்காலியில் முன்னும் பின்னும் ஆடினாள்.

நாற்காலி உடைந்து விட்டது. அவள் கீழே விழுந்து விட்டாள். அவள் எழுந்தாள். எப்படியோ நாற்காலியை நிமிர்த்தி வைத்தாள்.

பிறகு படுக்கையறைக்குச் சென்றாள். அங்கே மூன்று படுக்கைகளைப் பார்த்தாள். அங்கேயும் மூன்று படுக்கைகள் இருந்தன. பெரிய படுக்கை மிகைலோ இவானிச்சுக்கு, அதைவிடச் சிறியது நாஸ்டாசியா பெட்ரொவ்னாவுக்கு, மிகச்சிறியது மிஷாவுக்கு என்று இருந்தன.

அந்தச் சிறுமி பெரிய படுக்கையில் படுத்தாள். அது அவளுக்கு மிகவும் அகலமாக இருந்தது. அதைவிடச் சிறிய படுக்கையில் படுத்தாள். அது மிகவும் உயரமாக இருந்தது. மிகச்சிறிய படுக்கையில் படுத்தாள். அது தான் அவளுக்குச் சரியாக இருந்தது.

அவள் அதில் படுத்து உறங்கிவிட்டாள்.

மூன்று கரடிகளும் மிகுந்த பசியுடன் வீடு திரும்பின. இரவு உணவைச் சாப்பிட விரும்பின.

பெரிய கரடி கிண்ணத்தை எடுத்துப் பார்த்தது. உடனே பயங்கரமாய் கர்ச்சித்தது,

“ என்னுடைய கஞ்சியை யார் குடித்தது? “

நாஸ்டாசியா பெட்ரோவ்னாவும் தன்னுடைய கிண்ணத்தைப் பார்த்தது. அதுவும் கர்ச்சித்தது. ஆனால் கொஞ்சம் சத்தம் குறைவாக கர்ச்சித்தது.

” யார் என்னுடைய கஞ்சியைக் குடித்தது? “

மிஷா காலியான அதன் கிண்ணத்தைப் பார்த்தது. குட்டிக்குரலில் கீச்சிட்டது.

“ யார் என்னுடைய கஞ்சி முழுவதையும் குடித்தது? “

மிகைலோ இவானிச் நாற்காலியைப் பார்த்தது பயங்கரக்குரலில் கர்ச்சித்தது.

“ யார் என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து அதை இடம் மாற்றியது? “

நாஸ்டாசியா பெட்ரோவ்னா நாற்காலியைப் பார்த்தது. கொஞ்சம் சத்தம் குறைவாகக் கர்ச்சித்தது.

“ யார் என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து இடம் மாற்றியது? “

மிஷா உடைந்த நாற்காலியைப் பார்த்தது. சிறிய குரலில் கீச்சிட்டது.

“ யார் என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து அதை துண்டு துண்டாக உடைத்தது? “

மூன்று கரடிகளும் அடுத்த அறைக்குப் போயின.

“ யார் என்னுடைய படுக்கையில் படுத்து கலைத்துப் போட்டது? “ என்று மிகைலோ இவானிச் பயங்கரக்குரலில் கர்ச்சித்தது.

“ யார் என்னுடைய படுக்கையில் படுத்துக் கலைத்துப் போட்டது? “

என்று நாஸ்டாசியா பெட்ரோவ்னா கொஞ்சம் சத்தம் குறைவாகக் கர்ச்சித்தது.

முக்காலி மீது ஏறிப் பார்த்த மிஷா சிறிய குரலில் கீச்சிட்டது.

“ யார் என்னுடைய படுக்கையில் படுத்துக் கிடப்பது? “

திடீரென்று ஒரு சிறுமி படுக்கையில் படுத்திருப்பதைப் பார்த்து அடித்ததைப் போல வீறிட்டது மிஷா.

“ இதோ இங்கே இருக்கிறாள்.. பிடியுங்கள்.. இதோ இங்கே இருக்கிறாள்.. பிடியுங்கள்..”

அந்தச் சிறுமியைக் கடிக்கப் போனபோது அவள் கண்களைத் திறந்தாள். மூன்று கரடிகளையும் பார்த்தாள். உடனே சன்னலை நோக்கி ஒடினாள். சன்னல் திறந்து இருந்தது. அவள் வெளியே குதித்து ஓடிப்போனாள்..

கரடிகளால் அவளைப் பிடிக்க முடியவில்லை.

நன்றி - சோவியத் லிட்ரேச்சர் - 1979

புக் டே

No comments:

Post a Comment