Saturday, 1 February 2025

பேராசைக்காரக் கரடிக்குட்டிகள்

 

ருஷ்ய நாடோடிக்கதை

பேராசைக்காரக் கரடிக்குட்டிகள்

விக்டர் வாழ்டாயேவ்

தமிழில் - உதயசங்கர்




யாரும் இதுவரை நுழையாத அடர்ந்த காடு இருந்தது. அது கண்ணாடி போலப் பளபளக்கும் மலைகளுக்குப் பின்னால் இருந்தது. பட்டுப் போன்ற புல்வெளிகளுக்கு அப்பால்  இருந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு தாய்க்கரடி தன் இரண்டு குட்டிகளுடன் வாழ்ந்து வந்தது. அப்போது குட்டிகள் வளர்ந்து பெரிதாகி விட்டன. வெளியில் சென்று தங்களுடைய இரையைத் தேடி செல்லும் காலம் வந்து விட்டது.

அம்மாவிடம் சொல்லி விட்டுச் சென்றன.

அந்த வயதான அம்மாக்கரடி தன்னுடைய மகன்களைத் தழுவியது.. ஒருபோதும் அவர்கள் பிரியக்கூடாது என்று சொன்னது. சேர்ந்தே இருப்போம் என்று இரண்டு குட்டிகளும் அம்மாவிடம் உறுதி அளித்தன. பிறகு அவை புறப்பட்டன.

அவை நடந்தன. நடந்தன. ஒருநாள் முழுவதும் நடந்தன. அடுத்த நாளும் நடந்தன.

கடைசியில்  கையில் கொண்டு வந்த எல்லாப்பொருட்களும் தீர்ந்து விட்டன. கரடிக்குட்டிகளுக்குப் பசித்தது.

சோர்வுடன் அங்கும் இங்கும் உணவு தேடி அலைந்தன.

“ ஆ.. எனக்கு எவ்வளவு பசி தெரியுமா சகோதரா? “

என்று இளைய கரடிக்குட்டி புகார் சொன்னது.

“ எனக்கும் தான்..” என்றது மூத்த கரடிக்குட்டி.

அவை நடந்தன.

நடந்தன.

நடந்து கொண்டேயிருந்தன.

திடீரென்று அவை ஒரு பெரிய பாலாடைக்கட்டியைப் பார்த்தன.

அதைச் சரிபாதியாகப் பிரிக்க விரும்பின. சரி பாதியாகப் பங்கிட்டன. ஆனாலும் ஒரு நல்ல முடிவுக்கு வரமுடியவில்லை.

பேராசை எழுந்தது.

ஒவ்வொன்றும் தன்னுடைய சகோதரனுக்கு அதிகப்பங்குப் போய் விடுமோ என்று பயந்தன. அவை பற்களைக் கடித்துக் கொண்டு உறுமிக் கொண்டிருந்தன.

அப்போது அங்கே ஒரு நரி அமைதியாக வந்து நின்றது.

“ எதற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்..இளைஞர்களே! “

என்று நரி கேட்டது.

அவற்றின் பிரச்னையை விளக்கமாகச் சொல்லின.

  மிகவும் சுலபமாகத் தீர்த்து விடலாமே..” என்று சொன்னது நரி.

“ நீங்கள் இருவருமே எனக்கு வேண்டியவர்கள் தான்.. உங்களுக்காக நான் பங்கு போட்டுத் தருகிறேன்..”

என்றது நரி.

“ அது நல்ல யோசனை.. சரி.. பங்கிட்டுக் கொடுங்கள்..”

என்று கரடிக்குட்டிகள் சொல்லின.

நரி அந்தப் பாலாடைக்கட்டியை எடுத்து இரண்டு துண்டுகளாக உடைத்தது. ஆனால் ஒன்று இன்னொன்றை விடப் பெரிதாக இருப்பது தெரிந்தது.

கரடிக்குட்டிகள் கத்தின,

“ அது பெரிசு..”

“ அமைதி..அது பெரிய காரியமில்லை.. நான் ஒரு நொடியில் சரி செய்றேன்..”

அது பெரிய பாலாடைக்கட்டித்துண்டில் ஒரு பெரிய கடி.கடித்துத் தின்றது. இப்போது பெரியது சிறியதாகி விட்டது.

“ இப்போதும் அவை ஒன்றுபோல இல்லை..” கரடிக்குட்டிகள் குறை சொல்லின. இப்போது நரி அவற்றை கோபமாகப் பார்த்தது.

“ என்னிடம் விட்டு விடுங்கள்.. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்..” என்று சொல்லி விட்டு, இப்போது பெரியதாக இருந்த துண்டிலிருந்து ஒரு கடி கடித்தது. இதுவரை பெரிதாக இருந்தது சிறியதாகி விட்டது.

“ இப்போதும் அவை ஒன்று போல இல்லை..” என்று கரடிக்குட்டிகள் கத்தின.

“ சரி சரி கவலைப்படாதீர்கள்..” என்று .பெரும் முயற்சியோடு சொன்னது நரி. ஏனெனில் வாய் நிறையப் பாலாடைக்கட்டி இருந்தது.

“ இன்னும் கொஞ்சம் தான்.. சரி பாதியாகிவிடும்..” என்று சொல்லிய நரி தொடர்ந்து அந்தப் பாலாடைக்கட்டியைக் கடித்துத் தின்று கொண்டே இருந்தது. இரண்டு கரடிக்குட்டிகளும் தங்களுடைய கருப்பு மூக்குகளை அங்கும் இங்கும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தன. பெரியது. சிறியது. பெரியது சிறியது என்று மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தன.

 நரியும் பெரியதைச் சின்னதாகவும் சிறியதைப் பெரியதாகவும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் தின்று முடித்தது.

இறுதியில் இரண்டு சின்னஞ்சிறிய துண்டுகள் ஒன்று போல இருந்தன.

“ கவலைப்படாதீர்கள்.. அவை சிறிய துண்டுகள் தான்.. ஆனால் சரிபாதியாக இருக்கின்றன.. உங்கள் விருந்தை அனுபவித்துச்ச் சாப்பிடுங்கள்..குட்டிகளே..” என்று வாலை ஆட்டிக் கொண்டே போய் விட்டது.


நன்றி - சோவியத் லிட்டேரச்சர் - 1979

         புக் டே

 

No comments:

Post a Comment