ஆந்தை
விடாலி பையாங்கி
தமிழில் - உதயசங்கர்
ஒரு வயதான விவசாயி தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். கடும்தேநீர்
அல்ல. தாராளமாக பால் சேர்க்கப்பட்டு வெள்ளை நிறத்தில் இருந்தது. அப்படி அவர் உட்கார்ந்திருக்கும்போது
ஒரு ஆந்தை அவரைக் கடந்து பறந்து சென்றது.
“ நண்பரே.. இந்த நாள் இனிதாகுக! “ என்று சொன்னது ஆந்தை. ஆனால்
அந்தப் பெரியவர் கடுமையான குரலில்,
“ பைத்தியக்கார ஆந்தையே..விடைத்த காதுகள்..வளைந்த அலகு, சூரியனையும்
மனிதர்களையும் பார்த்துப் பயந்து ஒளிகிற நான் எப்படி உனக்கு நண்பனாக முடியும்? “
என்று சொன்னார். அதைக் கேட்ட ஆந்தைக்குக் கோபம் வந்தது.
“ அப்படியா? வயதான முட்டாளே! நான் இனிமேல் உன்னுடைய வயல்களுக்க்கு
இரவில் எலிகளைப் பிடிக்க வரமாட்டேன்... நீயே அவற்றைப் பிடித்துக் கொள்..”
“ ஆ ஐய்யோ.. ஹா ஹா ஹா நான் பயந்துட்டேன்..ஆமாம் நான் பயந்துட்டேன்..
முதலில் இந்த இடத்தை விட்டு கிளம்பு.. உன் இறகுகள் கீழே விழுந்துரப்போகுது,..”
என்று வயதான விவசாயி கேலி செய்தார். ஆந்தை அங்கிருந்து பறந்து
தன்னுடைய மரப்பொந்துக்குப் போய் விட்டது.
இரவு வந்தது. வயதான விவசாயியின் வயலில் தங்களுடைய வளைகளில் இருந்த
எலிகள் கீச்சிட்டின,
“ வெளியே எட்டிப் பார்.. அந்தப் பைத்தியக்கார ஆந்தை பக்கத்தில்
எங்காவது இருக்கிறதா என்று பார்..”
பதில் வந்தது.
“ ஆந்தை இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.. ஆந்தையின் சத்தமும்
இல்லை.. இன்று இரவு புல்வெளியில் எந்த நடமாட்டமும் இல்லை.. நாம் பயப்படத் தேவையில்லை..”
உடனே எல்லா எலிகளும்,தங்களுடைய வளைகளிலிருந்து வெளியே குதித்தன.
ஆனந்தமாக புல்வெளிக்குள் சென்றன.
ஆந்தை தன்னுடைய மரப்பொந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது.
“ ஹோ ஹோ ஹோ பெரியவரே! எலிகள் வேட்டைக்குக் கிளம்பி விட்டன..
உனக்குப் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்..”
என்று சொல்லியது.
“ அதனால் என்ன? அவை வேட்டையாடட்டும்.. எலிகள் ஒன்றும் ஓநாய்கள்
இல்லை.. அவை கன்றுக்குட்டிகளைக் கொல்லாது..”
எலிகள் புல்வெளியில் அலைந்து வண்டுத்தேனீக்களின் கூடுகளைத் தேடியது.
நிலத்தைத் தோண்டி வண்டுத்தேனீக்களைப் பிடித்தது.
தன்னுடைய மரப்பொந்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தது
ஆந்தை.
“ ஹோ ஹோ ஹோ பாருங்கள் பெரியவரே! அதோ.. பிரச்னை வரப்போகிறது..
புல்வெளியில் இருந்த எல்லா வண்டுத்தேனீக்களும் பறந்து விட்டன..”
“ போனால் போகட்டும்.. அவற்றால் என்ன பயன்? தேன் கிடைக்காது..
மெழுகும் கிடைக்காது.. கூடுகள் மட்டும் தானே..”
கால்நடைத்தீவனமான மணப்புற்கள் வளர்ந்தன. பூக்கள் பூத்துத் தொங்கின.
ஆனால் வண்டுகள் அவற்றைப் பார்க்காமல் பறந்து சென்றன. அங்கே பூக்களுக்கு இடையில் ஒரு
மகரந்தச் சேர்க்கை நடத்த யாரும் இல்லை.
ஆந்தை தன்னுடைய மரப்பொந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது.
“ ஹோ ஹோ ஹோ பெரியவரே! பாருங்கள்.. பிரச்னை வரப்போகிறது. உங்கள்
புற்களுக்கு நீங்கள் தான் மகரந்தச் சேர்க்கை நடத்த வேண்டும்..”
“ காற்று மகரந்தச் சேர்க்கை நடத்தும்..” என்று சொன்னார் பெரியவர்.
ஆனால் அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தலையைச் சொறிந்தார்.
காற்று வீசியது. ஆனால் மகரந்தங்கள் கீழே நிலத்தில் சிதறி விழுந்தன.
ஒரு மகரந்தத்துகள் கூட மலருடன் சேரவில்லை. அப்படி என்றால் சீக்கிரத்திலேயே புற்கள்
அங்கே இல்லாமல் போய் விடும்.
ஆந்தை மரப்பொந்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தது.
“ ஹோ ஹோ ஹோ.. பெரியவரே.. உங்களுடைய பசு மெலிந்து போய் விட்டது.
அது நிறைய மணப்புல் கேட்கிறது.. மணப்புல் இல்லாத வெறும் புல் வெண்ணெய் இல்லாத கஞ்சி
போலத்தான்..”
என்று சொன்னது.
மணப்புல்லைச் சாப்பிடும்போது பசு ஆரோக்கியமாக இருந்தது. இப்போது எலும்பும் தோலுமாகி விட்டது. பால் வற்றி விட்டது.
கழுநீர்த்தொட்டியை நக்கிக் கொண்டிருந்தது. அதனுடைய பால் தண்ணீராகி விட்டது.
ஆந்தை மரப்பொந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது.
“ ஹோ ஹோ ஹோ பெரியவரே! நான் சொன்னேன் இல்லையா? நீ என்னிடம் உதவி
கேட்டு வருவாய்..”
அந்தப் பெரியவர் திட்டினார். ஆனால் காரியங்கள் மோசமாகிக் கொண்டேயிருந்தன.
மரத்தில் உட்கார்ந்திருந்த ஆந்தை எலிகளைப் பிடிக்கவில்லை. எலிகள் வண்டுத்தேனீக்களின்
கூடுகளை அழித்தன. வண்டுத்தேனிக்கள் வேறு புல்வெளிக்குப் பறந்து போய் விட்டன. அதனால்
பெரியவரின் புல்வெளி பாழாகி விட்டது. ஏனெனில் மணப்புல் வளரவில்லை. பசு மெலிந்து விட்டது.
பால் கொடுக்கவில்லை.
அதனால் பெரியவர் தன்னுடைய தேநீரில் சுவை கூட்ட பால் சேர்க்கமுடியவில்லை.
வேறு வழியில்லை. ஆந்தையின் உதவியைக் கேட்டார்.
“ அன்பான ஆந்தையே.. எனக்கு உதவி செய்.. என்னுடைய பிரச்னையிலிருந்து
காப்பாற்று.... என்னுடைய பசு பால் கொடுக்கவில்லை.. தேநீரில் பால் சேர்க்கமுடியவில்லை..”
மேலே மரப்பொந்திலிருந்த ஆந்தை தன்னுடைய பெரிய கண்களை உருட்டி
முழித்தது. தன்னுடைய கால் நகங்களால் தலையைச் சொறிந்தது.
“ அப்படித்தான்.. பெரியவரே.. நல்ல நண்பர்கள் சிறந்தவர்கள்..
மோசமான நண்பர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்கள்... எனக்கு என்ன எலிகளைப் பிடிக்காது என்றா
நினைக்கிறாய்? “
என்று சொன்னது. அந்த வயதான பெரியவரை மன்னித்து விட்டது. ஓக்
மரப்பொந்திலிருந்து தாவி புல்வெளி மீது பறந்தது. எலிகளைப் பிடித்தது.
பயந்து போன எலிகள் வேகமாக ஓடி வளைகளில் பதுங்கின.
வண்டுத்தேனீக்கள் மீண்டும் புல்வெளிக்கு வந்தன. மலருக்கு மலர்
தாவிப் பறந்தன. சிவப்பு மணப்புல் பூக்கத் தொடங்கியது. அதில் தேன் நிறைந்திருந்தது.
பசு புல்வெளியில் மணப்புல்லை விருந்தாக்கியது. இப்போது பால்
நிறையச் சுரந்தது.
இப்போது அந்தப் பெரியவரின் தேநீரில் பால் கலந்து சுவை கூடியது.
அவர் ஆந்தையைப் புகழ்ந்தார். தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ஆந்தைக்கு
மிகச் சிறந்த வரவேற்பையும் அளித்தார்.
நன்றி - புக் டே
No comments:
Post a Comment