Wednesday 21 February 2018

யானையும் பூனையும்

யானையும் பூனையும்

உதயசங்கர்



காட்டில் இருந்த யானையாருக்குத் திடீர் என்று பெரிய கவலை வந்து விட்டது. யானையார் மிகவும் குண்டாக இருந்ததால் சந்து பொந்துகளில் நுழைய முடியவில்லை. பெரிய வயிறு இருப்பதால் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சட்டென ஒரு இடத்தில் உட்காரவோ எழுந்திரிக்கவோ முடியவில்லை. நின்று கொண்டே தூங்க வேண்டும். ச்சே..என்ன வாழ்க்கை! என்று யோசித்தது.
அப்போது யானையாருக்கு முன்னால் ஒரு பூனையார் ஒய்யாரமாக நடந்து போனார். அப்படி நடந்து போகும்போது ஓரக்கண்ணால் யானையாரைப் பார்த்துக் கொண்டே போனார். ஒல்லியாக இருந்த பூனையாரைப் பார்த்த யானையார் பெருமூச்சு விட்டார்.
இந்தப் பூனையாரை மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
அங்கே பூனையாரும் பெருமூச்சு விட்டார். யானையாரைப் பாரு. ஒரு கவலை இல்லை. அவர் நடந்து வந்தாலே காடே அதிரும்ல. எல்லோரும் அவரைப் பார்த்து பயந்தார்கள். அவருக்கு உணவு எளிதாகக் கிடைக்கிறது. எங்கும் இலை தழைகள் தானே. நம்ம நிலைமை பதுங்கிப் பதுங்கி இரை தேடணும். பெரிய மிருகங்களைப் பார்த்தால் ஓடி ஒளியணும். ச்சே.. என்ன வாழ்க்கை! என்று யோசித்தது.
இரண்டு பேரும் இரவு உறங்கினார்கள். விடிந்தது. கண்விழித்துப் பார்த்தால்……………
யானையார் பூனையாரைப்போல ஒல்லியாக, சின்னதாக, மாறி விட்டார்.
பூனையார் யானையாரைப் போல பெரிதாக, குண்டாக மாறிவிட்டார்.
ஆகா! என்ன அற்புதம்! நினைத்த மாதிரி நடந்து விட்டதே என்று யானையாரும் பூனையாரும் ஆச்சரியப்பட்டனர்.
பூனையாக மாறிய யானையார் காட்டுக்குள் சந்து பொந்துகளுக்குள் பாய்ந்து ஓடினார். தன்னுடைய சிறிய தும்பிக்கையினால் தரையில் வளர்ந்திருந்த புற்களையும், சிறிய செடிகளையும் இழுத்தார். முடியவில்லை. பலம் இல்லாமல் பொதுக்கடீர் என்று மட்டமல்லாக்க விழுந்தார். அவருக்கு எதிரே வந்த சிங்கம், புலி, மான், மிளா, ஓநாய், நரி, ஏன் எலி கூட பயப்படவில்லை. எல்லோரும் யானையாரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். புலியார் உறுமிக்கொண்டே பூனையாக மாறிய யானையாரைப்பார்த்து ஓடிவந்தார். அதைப்பார்த்த பூனையாக மாறிய யானையார் உயிரைக்காப்பாற்ற தலை குப்புற விழுந்து எழுந்து ஓடினார். எப்படி கம்பீரமாக இருந்தோம். இப்படி பயந்து ஓடும்படி ஆகி விட்டதே! ச்சே.. என்ன வாழ்க்கை என்று நினைத்தது.
யானையாக மாறிய பூனையாரைப் பார்த்த சிங்கம், புலி, மான், மிளா, ஓநாய், நரி, ஏன் எலி கூட அலட்சியமாக எதிரே வந்தன. அதைப் பார்த்த யானையாக மாறிய பூனையாருக்குக் கோபம் வந்தது.
நான் யானையாக மாறிய பூனையார். ஜாக்கிரதை!
என்று அவர்களை எச்சரிக்க வேண்டும் என்று நினைத்தார்.
 தன்னுடைய மீசை முடி சிலிர்க்க தன்னுடைய பெரிய வாயைத்திறந்து ” மியாவ்.. மியாவ்.. மியாவ்..” என்று கத்தியது. அதைக் கேட்ட எல்லா விலங்குகளும் சிரித்தன.
யானையாக மாறிய பூனையாருக்கு அவமானமாகி விட்டது. ஓடி ஒளிந்து கொள்ள நினைத்தது. அவ்வளவு பெரிய உடம்பைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓட முடியவில்லை. ஒரு புதருக்குள் ஒளிந்து கொள்ள முடியவில்லை. எங்கே நின்றாலும் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. குனிந்து இரையைப் பிடிக்க முடியவில்லை. எல்லாம் அந்த ஓட்டம் ஓடுகின்றன. ச்சே. என்ன வாழ்க்கை! என்று நினைத்தது.
பூனையாக மாறிய யானை
யானையாக மாறி விட்டது.
யானையாக மாறிய பூனை
பூனையாக மாறி விட்டது.
     யானை யானையானது.

     பூனை பூனையானது.
நன்றி- மாயாபஜார்