ஜுஜு ஒரு பறக்கும் யானை. அடர்ந்த காட்டுக்குள் இருந்தாலும் அவ்வப்போது நினைத்தவுடன் சிறகுகள் முளைக்கும். உடனே மேலே எழும்பிப் பறக்கும். யானையாவது பறப்பதாவது? அதுவும் அவ்வளவு குண்டான உடம்பைத் தூக்கிக்கொண்டு யானையால் குதிக்கக்கூட முடியாதே.
காட்டிலிருந்த புலி, கரடி, குள்ளநரி, ஓநாய், மயில், அணில், முயல், ஏன் வால் குருவி, நாகணவாய், பருந்து, புறா, கிளி, எல்லாமும் முதலில் இப்படித்தான் கேலி செய்தன. அப்புறம் அப்படியும் இருக்குமோ? என்று சந்தேகப்பட்டன.
பகல் முழுவதும் தூங்கி இரவில் எலிகளை வேட்டையாடும் ஆந்தையார், ஓர் எலியைப் பிடித்தார். அந்த எலி உடனே “அங்கே பாரு, யானை பறக்குது.. கீச்... கீச்... ஜுஜு பறக்குது. “கீச்...கீச்” என்று காது கிழியக் கத்தியது. அதைக் கேட்ட ஆந்தையார் உடனே, ‘ஆ’ என்று வாயைப் பிளந்தபடி நின்றது. அதுதான் சமயம் என்று எலி ஆந்தையின் பிடியில் இருந்து தப்பித்துவிட்டது. உண்மையில் ஆந்தையார் வானத்தைப் பார்த்தபோது ஜுஜு யானை வானத்தில் பறந்துகொண்டிருந்தது. அதன் பெரிய சிறகுகள் அசையும் வேகத்தில் கீழே இருந்த செடி, கொடிகள் எல்லாம் ஆடின.
ஆந்தையாருக்கு ஒரு பெரிய சந்தேகம். ஆந்தையாருக்கு மட்டுமல்ல காட்டிலுள்ள எல்லா விலங்குகளுக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். ஜுஜு யானைக்குட்டி எப்படிப் பறக்கிறது? எப்போது சிறகுகள் முளைத்தன? இனி பிறக்கும் எல்லா யானைகளும் பறக்குமா? அதைவிட ஜுஜுவை இப்போது எந்த அணியில் சேர்ப்பது? ஜுஜு பறவையா? விலங்கா? குட்டிபோடுமா? முட்டை போடுமா? காடு முழுவதும் இதுதான் பேச்சு.
இந்தச் சங்கதியால் வௌவாலார்தான் அதிகம் கவலைப்பட்டார். பறவை போலவும் பாலூட்டியாகவும் ‘நானே ராஜா நானே மந்திரி’ என்று இருக்கிற தன்னுடைய ராஜ்ஜியத்துக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாதே என்ற கவலை வௌவாலுக்கு. ஜுஜு யானைக்குட்டி, வௌவால் இனத்தில் சேர்ந்துவிட்டால் அப்புறம் ஜுஜுதான் ராஜா. தான் மந்திரியாக வேணும்னா இருக்கலாம்.
வௌவாலார் இந்தக் கவலையோடு ஒரு நாள் இரவில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எதிரே பறந்து வந்துகொண்டிருந்த ஜுஜு யானைக்குட்டியின் மீது மோதப் பார்த்தது. நல்லவேளை ஜுஜு தன் வாலை அசைத்துத் திசை திரும்பிவிட்டது. அப்படிப் போகும்போது தலையைத் திருப்பி “பார்த்துப்போ, தம்பி” என்று சொல்லிவிட்டது.
வௌவாலார் சோகமாகிவிட்டார். மறுநாள் காலை இந்த நிகழ்ச்சியைக் கொஞ்சம் உப்பு, உறைப்பு சேர்த்து எல்லோரிடமும் சொல்லிவிட்டார். எல்லோரும் எப்போதும் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே போய் வந்தனர். எந்தத் திசையிலிருந்து ஜுஜு பறந்து வரும் என்று யாருக்குத் தெரியும்?
ஜுஜுவுக்கு எப்படிச் சிறகுகள் முளைத்தன?
அது ஒரு பெரிய கதை என்று ஜுஜுவின் அம்மா சொல்லிக்கொண்டிருந்தது. ஜுஜுவின் அம்மாவைச் சுற்றி அணில், முயல், மயில் வெட்டுக்கிளி, நாகணவாய், புறா, கிளி, வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் என்று பெரிய கூட்டமே இருந்தது.
அது ஒரு கோடைக்காலம். காடு முழுவதும் வெளிச்சம் அள்ளித்தெளித்திருந்தது. ஜுஜுவின் அம்மாவும் அப்பாவும் அந்த மருத மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தன. ஜுஜுவின் அம்மாவுக்குப் பிரசவ வலி. ஜுஜுவின் அப்பா அருகிலிருந்து தன்னுடைய தும்பிக்கையினால் ஜுஜுவின் அம்மாவின் உடம்பைத் தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தது. ஜுஜு மெல்ல அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்தது. கீழே விழுந்து தட்டுத்தடுமாறி எழுந்து நின்றதும், அம்மாவைப் பார்த்துத் தலையைத் தூக்கியது.
அப்போது அதன் கண்களில் தங்க நிறத்தில் ஒரு பெரும் பறவை பறந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. அவ்வளவுதான். அன்றிலிருந்து எப்போதும் அம்மாவிடம் பறப்பதைப் பற்றிய பேச்சுதான்.
“அம்மா எனக்குச் சிறகுகள் முளைக்குமா?”
“பறவைங்க மட்டும் எப்படிப் பறக்குது?”
“பறந்தா சீக்கிரம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போயிரலாம் இல்லையா?”
“வானத்திலேர்ந்து காட்டைப் பார்த்தா எப்படி இருக்கும்?”
அம்மாவால் ஜுஜுவின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியலை. சிலநேரம் அதட்டும். சிலநேரம் கெஞ்சும். ஆனால், ஜுஜு மற்ற யானைக்குட்டிகளைப் போல நடப்பதே இல்லை. குதித்துக்கொண்டே வரும். ஒரு தடவை நானும் பறக்கிறேன் என்று ஒரு மேட்டிலிருந்து குதித்துவிட்டது. நல்லவேளை. சிறிய காயங்களோடு தப்பித்தது. ஜுஜுவின் அம்மா கோபத்தில் ஜுஜுவை நன்றாகத் திட்டி விட்டது. கோபித்துக்கொண்டு ஜுஜு காட்டின் வேறு ஒரு திசையில் போய்விட்டது.
காட்டின் அந்தப் பகுதியில் பெரிய மரங்களே இல்லை. எல்லாம் சின்னச் சின்ன மரங்கள். ஜுஜுவின் குட்டித் தும்பிக்கையைத் தூக்கினால் அவ்வளவு உயரம்தான். நிறைய விதவிதமான பறவைகள்! வானவில்லின் அத்தனை நிறங்களிலும் அவை பறந்து திரிந்தன. ஒரே கீ சத்தம்தான். ஜுஜு அப்படியே சொக்கிப்போய் அவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றது.
அப்போதுதான் அந்த அழுகைக்குரல் கேட்டது. ஜுஜு சுற்றிச் சுற்றிப்பார்த்தது. ஒரு தூதுவளைச் செடி முள்ளில் ஒரு சின்னஞ்சிறு பறவைக் குஞ்சு சிக்கியிருந்தது. சிறுசுன்னா சிறுசு அவ்வளவு சிறுசு. குட்டியூண்டு அந்தப் பறவைக் குஞ்சினால் அசையக்கூட முடியவில்லை. ஜுஜுவுக்கு அதைப் பார்த்ததும் பாவமாக இருந்தது. மெல்லத் தன்னுடைய தும்பிக்கையினால் பக்குவமாக அந்தப் பறவைக் குஞ்சை முள்ளிலிருந்து விடுவித்தது.
அப்படியே மெல்லத் தூக்கி தூதுவளைச் செடிக்கு மேலே இருந்த மஞ்சணத்தி மரக்கிளையில் இருந்த கூட்டில் வைத்தது. இப்போது பறவைக் குஞ்சு அழுகையை நிறுத்தியது. அது மறுபடியும் கூட்டிலிருந்து தலையை வெளியே நீட்டியது. ஜுஜு அதைப்பார்த்து வரக் கூடாது என்று தலையாட்டியது. பறவைக்குஞ்சு ஜுஜுவுக்கு, ‘நன்றி.. நன்றி..’ என்று கீச்சிட்டது.
அப்போது வானில் இருந்து தங்க நிறத்தில் ஒரு பெரும் பறவை அந்த மஞ்சணத்தி மரக்கிளையில் வந்து அமர்ந்தது.
ஜுஜு பிறந்தபோது பார்த்த அதே பறவை. அந்தப் பறவையின் அழகில் அப்படியே அசந்து போனது ஜுஜு. பறவைக் குஞ்சு அந்தப் பொன் வண்ணப் பறவையிடம் நடந்ததைச் சொன்னது. அந்தப் பறவை ஜுஜுவை நன்றியோடு பார்த்தது. பின்னர் அதன் சிறகிலிருந்து ஒரு தங்க இறகைத் தன் அலகுகளால் எடுத்து ஜுஜுவிடம் கொடுத்தது. அந்தத் தங்க இறகை ஜுஜு தன்னுடைய தும்பிக்கையினால் வாங்கியதுதான் தாமதம். ஜுஜுவுக்கு சிறகுகள் முளைத்துவிட்டன.
இதோ, ஜுஜு தன்னுடைய தங்க நிறச் சிறகுகளை விரித்துப் பறந்துகொண்டிருக்கிறது. பறந்துபறந்து காட்டில் உள்ள எல்லோருக்கும் உதவிகள் செய்துகொண்டிருக்கிறது.
நன்றி- தமிழ் இந்து மாயாபஜார்