Sunday 22 February 2015

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்!

 

உதயசங்கர்

gandhi

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி மகாத்மா காந்தி மீது மதன்லால் பாவா என்ற மதவெறியன் குண்டு வீசிக் கொல்ல முயன்றான். அதிலிருந்து மயிரிழையில் தப்பிய காந்தி கொஞ்சமும் பதட்டமடையாமல் தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார். ஆனால் அது தான் அவருடைய கடைசி பிரார்த்தனை கூட்டம் என்று அவருக்குத் தெரியாது. அதைப்பற்றி காந்தியுடன் இருந்த ஒரு அரசியல் தலைவர், “ பொறுப்பற்ற இளைஞன் ஒருவனின் பைத்தியக்காரத்தனமான செயல் “ என்று கூறினார். அதைக் கேட்டு சிரித்த காந்தி, “ முட்டாள்.. இதற்குப் பின்னால் விரிந்து பரந்த சதி இருப்பது உனக்குத் தெரியவில்லையா? “ என்று கூறினார். அவர் கூறிய படியே அதற்கடுத்த பத்தாவது நாளில் நாதுராம் கோட்சே என்ற இந்து மதவெறியன் அண்ணலை சுட்டுக் கொன்றான். ஒன்றிரண்டு தடவையல்ல. மகாத்மாவைக் கொல்ல கிட்டத்தட்ட பத்து முறை முயற்சித்திருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டிலிருந்தே கொலை முயற்சிகள் தொடங்கி விட்டன. காந்தியும் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் “ இதுவரை கொலை முயற்சியிலிருந்து ஏழுமுறை எனது உயிர் காப்பாற்றப்பட்டது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விடப்போவதில்லை. நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிரோடு வாழ்வேன்..” என்று கூறினார். கோட்சே இதற்கு, ” ”அதுவரை உங்களை யார் உயிருடன் விட்டு வைக்கப்போகிறார்கள். என்று பார்த்து விடுவோம்.” என்று தான் நடத்தி வந்த அக்ரானி பத்திரிகையில் பதிலளித்திருந்தான்.

அது உண்மையில் நடந்தேவிட்டது. ஜனவரி 30 ஆம் தேதி மாலை அரசியல் விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த படேலிடம் காந்தி பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டது என்று கூறி விடை கொடுத்தனுப்பி விட்டு புறப்பட்டார். பேத்தி ஆவாகாந்தியும், மருமகள் மனுகாந்தியும் இரண்டு பக்கங்களிலும் தோள் கொடுக்க தேசத்திற்காக தன்னையே உடல் பொருள் ஆவி அனைத்தையுமே ஈந்து தன்னையே சத்திய சோதனைக்களமாக மாற்றிய நைந்து போன உடலுடன் கூடிய அந்த வயதான முதியவர் பிரார்த்தனை மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. நேரம் மாலை 5.10 மணி. அப்போது காந்திக்கு முன்னால் முப்பத்தைந்து வயது இளைஞன் நின்று தன் உடலை வளைத்து வணங்குகிறான். மகாத்மாவும் பதில் வணக்கம் சொல்கிறார். அந்த இளைஞன், “ இன்று பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டதல்லவா? “ என்று கேட்கிறான். காந்தி பதில் சொல்வதற்கு முன்னால் அவனுடைய உள்ளங்கைகளில் முளைத்த துப்பாக்கியிலிருந்து மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக பாய்கின்றன. காந்தியின் இதயத்துக்குக் கீழேயும் வயிற்றுக்குக் கீழேயும் குண்டுகள் பாய்ந்தன. ஹே ராம்.. என்ற சப்தத்துடன் காந்தி விழுந்தார். அந்தக் கணமே அவருடைய உயிர் பிரிந்தது.

காந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்?

தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் போது இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் நாட்டு விடுதலை கிடைத்த போது இருந்த மகாத்மா காந்திக்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவரே, “ உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துகளை கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றிருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார். அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் இந்து மதப்பற்றாளர். ஆனால் மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” என்று முழங்கினார். காந்தி முன்மொழிந்தது புவியியல் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ( inclusive nationalism ) தேசியம்.

காந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேருவும் நாத்திகர்கள். அது மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ’ கடவுள் தான் உண்மை ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ‘ உண்மையே கடவுள் ‘ என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர். இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கச் செய்தது.

மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறிவன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.

காந்தி ராமராஜ்யம் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை அவரே விளக்கினார். “ ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. கடவுளின் அரசு என்ற பொருளிலேயே கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை. ராமராஜ்யம் என்பதற்கு இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அரசியல்ரீதியாகப் பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து போன நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும். அதில் நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும். ஆகவே வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார். இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குரானாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனவே தான் “ என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.

தன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்த மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர். காந்தியின் மரணத்தில் கூட கலவரம் விளைந்திடத் திட்டமிட்ட நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் வெறியர்கள். பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பத்திரமாக இருந்த மகாத்மா சுதந்திரஇந்தியாவில் ஐந்து மாதங்களுக்குள் கொலையுண்டார் என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் இறந்து 67 ஆண்டுகளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.

புத்தர், ஏசு, காந்தி, என்று புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்த மகாத்மா, உலகம் முழுவதும் தன்னுடைய அகிம்சைக் கொள்கைக்காகவும் சத்யாக்கிரகப்போராட்டத்திற்காகவும், இன்றும் நினைக்கப்படுகிற மகாத்மா தன் பொக்கைவாய்ச்சிரிப்போடு நம்மைப் பார்த்து அவருடைய வழக்கமான பஜனைப் பாடலைப் பாடுகிறார்.

ரகுபதி ராகவ ராஜாராம்

பதீத பாவன சீதாராம்

ஈசுவர அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்.

இந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்கிறதா உங்களுக்கு.

ஈசுவரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே

எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே!

அவரால்

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்?

நன்றி – வண்ணக்கதிர் 22-02-15

Monday 16 February 2015

ஆண்டிபயாட்டிக் அவசியமா?

antibiotics உதயசங்கர்

ஒரு வேடிக்கையான கதை ஒன்று இப்போது மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000 ஆம் ஆண்டில் ஒருவன் எனக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் அவனை இந்தப்பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர் கி.மு.1000 ஆம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து, என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள். கி.பி. 1850 களில் மாந்திரீகம் மூடபழக்கம் இதோ இந்தக் கஷாயத்தைக் குடி என்றார்கள். கி.பி.1950 களில் கஷாயம் விஷம். இதோ சோதனைச்சாலைகளில் நிருபிக்கப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிடச் சொன்னார்கள். கி.பி. 1980- களில் மாத்திரைகள் போதுமானவையில்லை. இதோ நுண்ணுயிரிக்கொல்லி ( Antibiotics ) சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது கி.பி. 2000 ஆம் ஆண்டில் மறுபடியும் பச்சிலையையோ வேரையோ சாப்பிடச் சொல்கிறார்கள்!?. இந்தக் கதையிலுள்ள முக்கியமான விஷயம் மாற்றம் அல்ல. இயற்கைக்குத் திரும்புதலே மனித குலத்துக்கு இறுதியான வழி என்பது தான்.

இப்போது மழைக்காலம் ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல், என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ இரண்டோ நுண்ணுயிரிக்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச்சீட்டில் எழுதித் தருகிறார். நாமும் அதை வாங்கிச் சாப்பிடுகிறோம். எல்லாம் சரியாகிவிட்டது. உண்மையில் எல்லாம் சரியாகி விட்டதா? முதலில் நமது உடல் தனக்குள் ஏற்படுகிற பாதிப்புகளை நம்முடைய பாதுகாப்பு அமைப்புக்கும், நமக்கும் தெரியப்படுத்துகிற அறிகுறிகளே இந்தக் காய்ச்சல், சளி, தும்மல், இருமல், என்று புரிந்து கொள்வோம். இன்னொரு வகையில் உடலின் உயிராற்றலைப் பாதிக்கும் நுண்ணுயிரிகள் ( வைரஸ்கள் பாக்டீரியாக்கள் ) உடலுக்குள் நுழைந்திருப்பதைச் சொல்லும் ரெட் அலர்ட் அலாரம். இந்த அலாரம் நம்முடைய பாதுகாப்பு படையணிகள் யுத்தத்துக்கு தயாராகச் சொல்வதற்கும் யுத்தம் நடத்துவதற்குமான முழக்கம். நம்முடைய உடலின் பாதுகாப்பு அமைப்பின் இன்னொரு விஷேசமான காரியம். ஒரு முறை நமது உடலில் நுழைந்து உயிராற்றலுக்கும் உடலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் பையோடேட்டாவை தன்னுடைய ஞாபகத்தொகுப்புகளில் பத்திரப்படுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல எதிரி நுண்ணுயிரியின் யுத்த முறைகளையும், யுத்த தந்திரங்களையும் அதற்கு எதிராக தான் எடுத்த எதிர் நடவடிக்கைகளையும்கூட தன்னுடைய மெமெரியில் பதிவு செய்து கொள்ளும். ஒரு முறை கொன்றொழித்த நுண்ணுயிரிகள் மீண்டும் உடலுக்குள் நுழைந்தால் போதும் உடனே ஒரு பொத்தானைத் தட்டி தன்னுடைய ஞாபகத்தொகுப்பிலிருந்து அந்த நுண்ணுயிரியை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவிடும் கணப்பொழுதில். ஆனால் உடலினுள்ளே நுழைந்திருக்கும் நுண்ணுயிரியின் தன்மைகளைப்பற்றி நமது பாதுகாப்பு அமைப்புக்குத் தெரியுமுன்னே நாம் சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகள் அதை அழித்து விடும். அதனால் நம்முடைய பாதுகாப்பு அமைப்பில் அந்த நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்தப்பதிவுகளும் இருக்காது. அது மட்டுமல்லாமல் பிறகெப்போதும் அந்த நுண்ணுயிரிகள் தாக்குதல் தொடுக்கும் போது வெளியிலிருந்து நுண்ணுயிரிக்கொல்லியின் ஆதரவு தேவைப்படும் அளவுக்குப் பலகீனமாகி விடும். தூண்டத்தூண்ட துலங்கும் விளக்கு போல தான் நம்முடைய பாதுகாப்பு அமைப்பும் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களைத் தானே சமாளிக்கும்போது மேலும் மேலும் பலம் பெறும்.

நமது உடல் ஆரோக்கியமாக, முழுபலத்துடன், உற்சாகமாக இயங்குவதற்கு நமது உடலுக்குள்ளேயே சுமார் மூன்று பவுண்ட் அளவுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை நமது உடலின் நண்பர்கள். இந்த நண்பர்களைப் பற்றிக் கவலைப்படவில்லையென்றால் நமது உடல் மெல்ல மெல்ல நலிவடையும். இவர்களுடைய இருத்தல் மிக மிக அவசியம். நாம் நோய்களுக்கு வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிக்கு என்ன தெரியும்? செக்குன்னு தெரியுமா? சிவலிங்கம்னு தெரியுமா? அதன் வேலை நுண்ணுயிரிகளை அழிப்பது. அந்த நுண்ணுயிரிகள் நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. அழிக்கப்போகிற நுண்ணுயிரிகளின் வேலைகளைப் பற்றி அதற்குத் தெரியாது. ஆக அது உடலுக்குள் புகுந்து நுண்ணுயிரிகள் அனைத்தையும் நல்லது கெட்டது அனைத்தையும் அழிக்கிறது. நமது உடலில் உள்ள நன்மை நுண்ணுயிரிகள் உடலில் நுழையும் தீய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை தொற்று, போன்றவற்றை எதிர்க்கும் முதல் படையணி. அது மட்டுமல்லாமல் அவை உடலுக்குத் தேவையான வைட்டமின் பி யையும், நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தவும், தொற்று நோய்க்கு எதிராகவும், செயல்படுகிறது. அதோடு அவை பாக்டீரிசியான் ( bactericions ) என்ற பொருளையும் உற்பத்தி செய்கிறது. இந்த பாக்டீரிசியான்கள் இயற்கையான நுண்ணுயிரிக்கொல்லியாகச் செயல்படுகிறது.

இத்தகைய நன்மை நுண்ணுயிரிகளையும் சேர்த்து வெளியிலிருந்து நாம் சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகள் கொன்று விடுகின்றன. ஒரு முறை நீங்கள் எடுக்கும் நுண்ணுயிரிக்கொல்லி மருந்துகளினால் அழிந்துவிடும் நன்மை நுண்ணுயிரிகள் திரும்பவும் உருவாக குறைந்தது ஆறு மாதங்களாகும். அது மட்டுமல்ல தொடர்ந்து வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிரிக்கொல்லிகளினால் தீமை பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் அவற்றினுடைய வலிமை அதாவது தற்காப்புத்திறன் கூடிக்கொண்டே போகிறது. எனவே வெளியிலிருந்து எடுக்கும் நுண்ணுயிரிக்கொல்லிகளின் அளவும் கூடிக்கொண்டே போகிறது. தேவைக்கு அதிகமான நுண்ணுயிரிக்கொல்லிகளை வெளியேற்றும் பணியைச் செய்யும் சிறுநீரகங்களும் சிரமப்படும். அளவுக்கு அதிகமான வேளைப்பளுவால் சில சமயம் சிறுநீரகங்கள் வேலைநிறுத்தம் செய்யவும் கூடும். உடல் பலகீனமாகும்.

எனவே அனாவசியமாக நுண்ணுயிரிக்கொல்லிகளைச் சாப்பிடக்கூடாது. மருத்துவர்களும் எல்லா வைரல் தொற்றுகளுக்கும் நுண்ணுயிரிக்கொல்லிகளைச் சாப்பிட பரிந்துரைக்கக்கூடாது. அவசியமோ, கட்டாயமோ இருந்தால் மட்டுமே நுண்ணுயிரிக்கொல்லிகளை நோயாளர்களுக்குக் கொடுக்க வேண்டும்.. நோயாளரைப் பார்க்கும்போது சகமனித நேசத்தோடு அவரைக் குணப்படுத்த எந்த வகையான எளிய உடலுக்குத் தீங்கிழைக்காத மருந்துகளினால் குணப்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டும். பதிலாக நோயாளரை பணங்காய்ச்சி மரமாக நினைக்கக்கூடாது. ஏனெனில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவி செய்வதே மருத்துவர்களின் தலையாயக் கடமை

இயற்கையான எதிர்ப்புசக்தியை எப்படி அதிகரிப்பது? எதற்கெடுத்தாலும் மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். உடல் தன்னுடைய பாதுகாப்பு படையைப் பயன்படுத்த அவகாசம் தரவேண்டும். தீமை நுண்ணுயிரிகளும் நன்மை நுண்ணுயிரிகளும் நம் உடலில் அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கம் முக்கியமான காரணம். எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு, சரிவிகித சம உணவு அவசியம். இந்த உணவே நம்முடைய எதிர்ப்புசக்தியைத் தூண்டி பாதுகாப்புப்படைக்கு பலத்தைத் தரும். அந்த பலத்தினால் எந்த தீயநுண்ணுயிரிகளையும் உயிராற்றல் அழித்து ஆரோக்கியத்தை நிலைநாட்டும்.

நன்றி- நலம்வாழ, தமிழ் இந்து

Thursday 12 February 2015

மீன் காய்க்கும் மரம்

 

மலையாளத்தில்- வைசாகன்

தமிழில்- உதயசங்கர்inthu__2307007g

இந்து பயந்து போனாள். வழியில் ஒரு பிள்ளையைக்கூட காணலியே. ரெம்ப நேரம் ஆயிருச்சோ?. பள்ளிக்கூடத்தில் மணி அடிச்சிருப்பாங்களோ? புதிதாக வந்திருக்கிற வாத்தியார் சும்மா விடமாட்டாரே!

நேற்றே தாமதமாய் வருபவர்களுக்கு என்ன தண்டனை என்று சொல்லியிருந்தார். “ புத்தகங்களைத் தலையில் வைத்துக் கொண்டு ரெம்ப நேரம் நிக்கணும்..”

அதை நினைத்தபோது இந்துவுக்கு வெட்கமாயிருந்தது. இன்று அப்படி நிற்க வேண்டியது வருமோ? வேகமாக நடந்தால் மட்டும் போதாது. ஓடணும். இந்து ஓடத் தொடங்கினாள். ஓட்டத்தில் என்ன வேகம்? ஓடுகிற வண்டியில் போகும்போது பின்னால் பாய்ந்து போகிற மரங்களைப் பற்றி யோசித்தாள். அதை மாதிரி இப்போது சாலையின் அருகில் உள்ள மரங்கள் எல்லாம் பின்னால் பாய்ந்து சென்றன. திடிரென ஒரு மரத்திலிருந்து ஏதோ ஒரு கிளியின் சத்தம்.

“ இந்துக்குட்டி…நிலாக்குட்டி…”

இந்துவுக்கு ஆச்சரியம். அந்தக் கிளியின் குரல் அம்மாவின் குரலைப் போலவே இருந்ததே! இதென்ன ஒரு மாயாஜாலம்! பறவைகளால் பேச முடியுமா?

தார்ச்சாலையில் குழந்தைகள் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. ஒரு ஜீவராசியையும் பார்க்க முடியவில்லை. ஒரு வாகனமும் சாலையிலில்லை. ஆட்களுக்கும் வாகனங்களுக்கும் என்ன ஆச்சு? திடிரென ஞாபகம் வந்தது. இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிற நேரமா இது? சீக்கிரமாக பள்ளிக்கூடம் போய்ச் சேரணும்.

ஓட்டத்தின் வேகம் கூடியது. இன்னிக்கு என்ன இப்படி? ஓடுவது கஷ்டமாகத் தெரியவில்லை. காற்றில் பறக்கிற தாத்தாப்பூச்சியைப் போல அப்படியே பறந்து போனாள். இந்து திடுக்கிட்டுப் போனாள். திடீரென கருத்த தார்ச்சாலை மறைந்து போய்விட்டது. இப்போது அவளுக்கு முன்னால் ரெம்ப தூரத்துக்கு மணல் மட்டுமே விரிந்து கிடந்தது

சீனியைப் போல வெள்ளைமணல். தார்ச்சாலை மணலுக்குள் தலையை நுழைத்து கலந்து சேர்ந்து மறைந்திருக்கிறது. இந்து திகைத்து சுற்றிலும் பார்த்தாள். சுற்றிலும் மணல் மட்டும் தான்.இன்னொரு சமயமாய் இருந்தால் இந்த வெள்ளைமணலில் உருண்டு புரண்டு விளையாடியிருப்பாள். இப்போது விளையாட்டைப் பற்றி நினைக்கக் கூட முடியவில்லை. உள்ளுக்குள் துக்கம் அதிகரித்தது.

யாராவது மனிதர்களை பார்த்தால் நல்லது! மனிதர்களைப் பார்க்காவிட்டால் கூடப் பரவாயில்லை. ஒரு ஆட்டுக்குட்டியையாவது பார்த்தால் என்ன? இந்து யாராவது ஒரு சேக்காளிக்காக சுற்றும் முற்றும் பார்த்தாள்.

கொஞ்ச தூரத்தில் ஒரு மரம் நின்று கொண்டிருந்தது. அதற்குப் பின்னால் இன்னும் தூரத்தில் இலைகளில்லாத இன்னொரு மரத்தையும் பார்க்க முடிந்தது. கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. எந்த வழியில் போனால் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியும்? வழியை யாரிடம் கேட்பது? அவள் கொஞ்ச தூரத்திலிருந்த மரத்தை நிராதரவாய்ப் பார்த்தாள். மரம் வழி சொல்லாது என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும்…

இந்து மரத்தை நோக்கி நடந்தாள். புது மணலில் கால் புதைந்தது. சூடு தாங்க முடியவில்லை. இனி ஓரு அடி வைக்க முடியாது என்று தோன்றியது. அவள் மரத்திற்கடியில் போய் நின்றாள். அப்பாடா… நிழல் கொஞ்சம் ஆசுவாசமளித்தது. நிழலில் நின்று கொண்டு இந்து தூரமாய்ப் பார்த்தாள். அங்கே ஆகாயம் பூமியைத் தொடுகிற இடத்தில் உயரமாய் தெரிவது என்னவாக இருக்கும்?

மணலிலிருந்து தீப்பொறிகள் போல புழுதி பறந்து மேலே வந்தது. வானத்தில் சூரியன் ஒளிப்பிழம்பாய் ஜொலித்தது. இந்து தூரமாய் பார்த்த அந்த பொருளை உற்றுப் பார்த்தாள். அதிசயம்! அது பள்ளிக்கூடமல்லவா? மின்னுகின்ற மணலில் ஒத்தையாய் நிற்கிற ஒரேஒரு கட்டிடம். இப்படியில்லையே பள்ளிக்கூடம்? பள்ளிக்கூடத்துக்குப் போகிற வழியும் இப்படியில்லையே?

சாலைக்கருகில் படர்ந்து நின்ற மாமரங்கள் எங்கே போச்சு? ஏதோ ஒரு பிரச்னை. வழி தவறி வேறு எங்கேயோ வந்து விட்டோமா? இந்து மிகவும் பயந்து போனாள். அழுகை வந்தது. வீட்டுக்குத் திரும்பிப் போகும் ஆசை கூடிக் கொண்டே வந்தது. அப்படி நடக்கத் தொடங்கும்போது……

தலைக்கு மேலேயிருந்து விசித்திரமான சிரிப்பொலிகள் கேட்டன. இந்து மரத்தின் கிளைகளைப் பார்த்தாள். அதில் இலைகளாகத் தொங்கிக் கொண்டிருந்தது இலைகளில்லை. மீன்கள்! இலைகளைப் போல மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் மீன்கள்! மீன் காய்க்கிற மரமோ இது? இந்து திகைத்து அதைப் பார்த்துக் கொண்டு நிற்கும்போது மீன்கள் கூட்டமாய் சிரித்தன. சிரிப்பு நின்ற போது ஒரு மீன் பேசத் தொடங்கியது.

“ உனக்கு ஆச்சரியமாயிருக்கும். நாங்கள் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த மரத்தில் ஏறித் தொங்குகிறோம். உன்னுடைய பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் ஒரு ஆறு ஓடுதுல்ல..அந்த ஆத்திலுள்ள மீன்கள் தான் நாங்க…ஆத்தில வெள்ளம் இப்போ கரைபுரண்டு ஓடுது…யாருக்கும் பாதுகாப்பில்ல…அந்தா பாரு தூரத்தில உன்னோட பள்ளிக்கூடம். அதுவும் இடிஞ்சி விழுந்துகிட்டிருக்கு…”

இடி முழங்குவதைப்போல ஒரு சத்தம் தூரத்தில் கேட்டது. பள்ளிக்கூடக்கட்டிடம் இடிந்து விழுவதை இந்து பார்த்தாள். எதையும் யோசிக்க முடியவில்லை. தோளில் தொங்கிக் கொண்டிருந்த புத்தகப்பையை விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டு அவள் ஓடத்தொடங்கினாள். எப்படியாவது வீட்டிற்குப் போய்ச் சேர வேண்டும்.

ரெம்ப தூரம் ஓடியிருக்க மாட்டாள். அப்போதே அவள் வந்த பாதையில் மணல் மூடியிருப்பதைப் பார்த்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் அவள் ஸ்தம்பித்து நின்றாள். ஆகாயத்திலிருந்து ஒரு முழக்கம். ஆயிரம் ரயில்கள் ஒன்று போல ஓடி வருவதைப் போல… ஒரு பெரிய சப்தம்.. கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது…. பார்ப்பது என்ன.. கண்ணுக்கெட்டாத உயரத்தில் பொங்கிப் பாய்ந்து வரும் கடலலைகள்! கடல் பொங்கி பூமியை விழுங்குகிறதோ? இனி எங்கே ஓடுவது? இதோ….முழங்கும் கடலலை அருகில் வந்து விட்டது…!

இந்து தன்னால் முடிகிற உச்சத்தில் கூப்பாடு போட்டாள். சத்தம் வெளியே வரவில்லை.

“ இந்துக்குட்டி…கண்ணு இந்துக்குட்டி..”

கண்களைத் திறந்தபோது அப்பாவின் முகம் தெரிந்தது. கடலலைகள் மறைந்த இடத்தில் அப்பாவின் சிரித்த முகம். இந்து வியர்வையில் குளித்திருந்தாள். அவளுடைய அப்பா மடித்த செய்தித்தாளினால் அவளுக்கு விசிறிக்கொண்டிருந்தார். இந்துவுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் அவள் சிரிக்க முயற்சித்தாள். உதடுகள் காய்ந்து வறண்டிருந்தன.

இப்படியும் ஒரு கனவு வருமோ? மத்தியானம் சாப்பிட்டு விட்டுத் தூங்காதேன்னு அப்பா சொல்லியிருந்தார். இந்துவுக்குக் குற்ற உணர்ச்சி தோன்றியது. அவள் கண்ட பயங்கரக்கனவை அப்பாவிடம் விவரமாகச் சொல்லி முடித்த போது வெட்கம் தோன்றியது. அப்பா சிரித்தார்.

“ சமர்த்து… வெட்கப்படறதுக்கு ஒண்ணுமில்ல..கனவு காணாதவர்கள் யார்? சொல்லு..அதுவும் குழந்தைகள் விசேசமாய் கனவு காண்பார்கள். பெரியவர்களை விட கற்பனைத்திறன் குழந்தைகளுக்கு அதிகமல்லவா? “

திரும்பத்திரும்ப இந்து கேட்டாள், “ கனவில பாம்பு வந்தா சர்ப்பதோஷம்னு பாட்டி சொல்லுவாங்க….யானை கனவுல வந்தா கணபதிக்குக் கோபம்னு சொல்லுவாங்க… நான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்க அப்பா! “

“ அதெல்லாம் சும்மா சொல்றது இந்து..மூட நம்பிக்கைகள்…அது பாட்டியோட தப்பில்லை..புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பாட்டிக்குத் தெரியாதில்லையா?...”

அப்பா இந்துவை எழுப்பி விட்டார். சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவளைத் தனக்கருகில் பிடித்து நிறுத்தினார். அப்போது தான் இந்துவின் மனதில் கனவு விதைத்த பயத்தின் முட்கள் மறையத் தொடங்கியது. அறைக்குள் அம்மா வந்தாள்.

“ அப்பாவோட செல்லக்குட்டி ஏன் கூப்பாடு போட்டா? “

என்று கேட்டாள். இந்து அம்மாவைப் பார்த்து விழித்தாள். அதற்குள் அப்பா,

“ அவள் சமர்த்தில்லையோ அதான்..” என்று துணைக்கு வந்தார். அதற்கு அம்மா,

“ ஆமா இப்படிக் கொஞ்சிகிட்டிருங்க…மத்தியானத்துக்கு மீன்குழம்பு வைக்கலன்னு கோவிச்சிகிட்டு படுத்தவ.. அது தெரியுமா உங்களுக்கு…?

இந்து தலை குனிந்தாள். ஏதோ ரகசியத்தைக் கண்டுபிடித்தவர் போல அப்பா,

“ அப்படிச் சொல்லு… இப்ப தெரிஞ்சிபோச்சி…அவ்வளவு விலை குறைச்சி மீன்களை அவர்கள் விக்கிறதுக்கான காரணத்தை அப்பா இந்துவுக்குச் சொன்னேனில்லையா? தொழிற்சாலையிலிருந்து வருகிற விஷம் கலந்ததினால் செத்து மிதந்த மீன்கள் தான் அது. அதைச் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேனில்லையா…அது தான் இந்துவின் கனவோட ஆணிவேர்.. அதாவது மீன்கோபம்…”

என்று சொல்லிவிட்டு அப்பா வாய்விட்டுச் சிரித்தார். சிரித்து முடித்தபிறகு அவளுடைய தலையைத் தடவிக்கொடுத்துக் கொண்டே சொன்னார்.

“ இந்து.. அப்பாவுக்கு அவ்வளவு பெரிசா ஒண்ணும் தெரியாது... நாலு விஷயங்களையும் சொல்வேன்..அறிந்தும் அறியாமலும் எவ்வளவோ விஷயங்கள் நம்முடைய மனசுக்குள் வந்து சேரும். நாம் தூங்கும்போது தூங்காமலிருக்கும் ஒரு பகுதிமனம் உண்டு. அது செய்கிற வேலை தான் கனவு… இந்து பெரியவளாகும்போது இன்னும் விபரமாய் படித்துத் தெரிந்து கொள்ளலாம்…..”

என்று சொன்ன அப்பா மீண்டும் தொடர்ந்து,

“ இன்னிக்கு மீன்குழம்பு கிடைக்கலங்கிற வருத்தம் உன் மனசில வந்திச்சில்ல அப்படி பல விஷயங்களும் தான். செத்து மிதந்த மீன்கள், அதற்கான காரணங்களைப் பற்றி அப்பா சொன்னது, நேற்று தாமதமாக வகுப்புக்குப் போனபோது வாத்தியார் சொன்ன தண்டனை..இதெல்லாம் சேர்ந்து உருவானது தான் அந்தக் கனவு…வனங்கள் அழிந்தால் மழை பொய்த்து எல்லா இடமும் சுடுகாடாகும்..என்று அப்பா சொன்னேனில்லையா…ஒரு வேளை உன்னோட கனவில வந்த சீனி மணலுக்கு அதுதான் காரணமாயிருக்கும்…”

இந்துவும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். அப்பா அவளுடைய முதுகில் மெல்லத் தட்டிக் கொடுத்துக் கொண்டே,

“ கனவு வருவதற்குக் காரணம் பாம்பும் கணபதியும், பூதமும் இல்லை…ஆனால் பூதத்தின் வேலை கொஞ்சம் இருக்கு... அதாவது கடந்த காலத்தில் நடந்தது..எதுவாக இருந்தாலும் அது பூதத்தோட காரியமில்லாம வேறு என்ன ? ஆனால் என்னோடச் செல்லக்குட்டி இந்து இப்படியொரு கனவு கண்டதுக்கு அவளுடைய கற்பனை சக்தி தான் காரணம் தெரியுமா? “

அம்மா சிரித்துக் கொண்டே,

“ இந்து இனிமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுற மாதிரி கனவு காண்பாள்..”

என்று சொன்னாள்.

நன்றி- மாயாபஜார், தமிழ் இந்து

inthu_2307008g