Sunday 21 June 2015

கேள்விகளில்லா பொதுவெளி

கேள்விகளில்லா பொதுவெளி
உதயசங்கர்

உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்திய சமூகம் தன்னுடைய உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வெகுவாக மாறி விட்டது. தாராளவாத பொருளாதாரக்கொள்கைகளின் விளைவாக சமூகம் முழுவதும் ஒருவித பாதுகாப்பின்மை உணர்வு எல்லோரையும் பீடித்துள்ளது. சமூக உணர்வுநிலை குறைந்து தனிமனித நலன் முன்னெப்போதையும் விட இப்போது முன்னுக்கு வந்துள்ளது. எல்லையில்லா நுகர்வியம் ஒவ்வொருவரையும் சுயநலமிக்கதனித்தீவுகளாக மாற்றியுள்ளது. முன்பு இருந்த சமூக மனிதன் காணாமல் போய்விட்டான். அந்த சமூக மனிதனுக்கு இந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமயமாக்கல் அவனை நுகர்வுமனிதனாக மாற்றிவிட்டது. இந்த நுகர்வு மனிதனுக்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் பற்றிய அக்கறையில்லை. யாரையும் எதற்கும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய நுகர்வுவெறி எப்படி உருக்கொண்டது?
  இன்றுசமூகப்பொதுவெளி சர்வதேச மற்றும் தேசிய முதலாளிகளால் கட்டமைக்கப்படுகிறது. இருதுருவ உலகம் சோசலிச நாடுகளின் தகர்வோடு முடிவுக்கு வந்தபிறகு உலக முதலாளித்துவம் தன்னை மாறிய சூழலுக்கு ஏற்ப உருமாற்றிக் கொண்டுள்ளது. முன்பு இருந்த தேசிய அரசு சார்ந்த நிதி மூலதனத்தினால் ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உட்பகை விளைந்தது. சந்தைக்காக உலகத்தை தங்களுக்குள் கூறு போடுவதில் சண்டையிட்டன. ஆனால் உலகமயமாக்கலின் விளைவாக இதுவரை தேசிய அரசு சார்ந்திருந்த தேசிய நிதி மூலதனம் சர்வதேச நிதிமூலதனமாக உருமாறியது. இந்த உருமாற்றத்தினால் தேசிய அரசைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. உலகம் முழுவதும் சென்று கொள்ளை லாபம் ஈட்டிட எல்லைகளை அழித்து நீர்மையாக உலகம் முழுவதும் பாய்ந்து செல்கின்றன. அப்படிப் பாய்ந்து சென்று ஊகவாணிபம் மூலம் உடனடி லாபத்தை அடைவது என்பது அதன் இலக்காக மாறுகிறது.அதனால் தான் உலக நாடுகளில் உற்பத்தியாகும் அனைத்து நுகர்பொருட்களும் நம்மை வந்தடைகின்றன. இப்போது தேசிய அரசு இந்த அந்நிய முதலீட்டை வரைமுறையற்று அநுமதிக்க வேண்டியது மட்டும். அதற்கு சாதகமான அரசைத் தேர்ந்தெடுக்க தேசிய,மற்றும் சர்வதேசிய முதலாளித்துவம் செயல்படும். இப்படி உலகம் முழுவதும் சுதந்திரமாக லாபமீட்ட ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய உட்பகையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். ஏகாதிபத்திய உட்பகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளரை ஏகாதிபத்தியங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றன. அந்த சர்வதேச கண்காணிப்பாளர் அல்லது சர்வதேச சண்டியர் தான் அமெரிக்கா.
அமெரிக்கா உலகநாடுகள் அனைத்தையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி, ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொருளாதார அடியாட்களை உருவாக்கி அனுப்புவதும், ஏகாதிபத்தியங்கள் வாணிபம் செய்யத் தடையாக இருக்கும் நாடுகளின் அரசுகளை எப்படியாவது தூக்கி எறிவதையும் தன்னுடைய நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுள்ளது. அந்த நாடுகளில் முற்போக்கான இடதுசாரி அமைப்புகளை பலவீனப்படுத்துவது, பிற்போக்கான வலதுசாரி அமைப்புகளை முன்னுக்குக் கொண்டு வருவது, மதஅடிப்படைவாதத்தை வளர்ப்பது, சின்ன நாடாக இருந்தால் அந்த நாட்டின் ஜனாதிபதியையே கஞ்சா கேசில் உள்ளே தள்ளுவது, ( உதாரணம் பனாமா.,) எதிர்ப்புகளை தனிநபர் கொலைகள் மூலம் அடக்குவது,, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொருளாதாரத் தடைகள் விதிப்பது, ஊடகங்களை விலைக்கு வாங்கி உலகமுதலாளித்துவத்துக்குச் சாதகமான கருத்துக்களை உற்பத்தி செய்து பிரசாரம் செய்வது போன்ற எண்ணிக்கையிலடங்கா காரியங்களின் மூலம் உலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திருப்பணியைச் செய்து கொண்டிருக்கிறது. உலகமயச்சுரண்டலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்கும்போது நிதி மூலதனம் முரட்டுத்தனமாக மாறும். கொடிய கோரைப்பற்களோடு அது பாசிசப்பேயாக மாறும். அதற்கு வசதியாக மக்களிடம் ஏற்கனவே இருக்கும் சநாதன பழமைவாதமான பண்பாடு, கலாச்சாரம் புனிதம், ஆகியவற்றை தீ மூட்டி வளர்க்கும்.
உலகமயமாக்கலின் விளைவாக மக்களிடையே அதிகரித்து வரும் மேடுபள்ளங்கள். மேட்டில் மிகச்சிலரும் பள்ளங்களில் ஏராளமான சாமானிய மக்களும் வீழ்ந்து தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும் நிலை.  மக்களின் வாழ்க்கை நெருக்கடிகள், அவர்களை முதலாளித்துவத்துக்கு எதிராக போராடத்தூண்டும். அப்போதே வலது சாரி பிற்போக்குத்தனம் மதவாத, சாதிவெறிச் சக்திகள் காலம் காலமாக தங்களுடைய கையில் வைத்திருக்கும் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்கும். அவர்களுக்குள்ளேயே கற்பிதமான வில்லன்களை உருவாக்கும். மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதன் வழியாக தன்னுடைய சுரண்டல் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்து கொள்ளும்.
இத்தாலியில் பாசிசம் தோற்றம் கொள்ள இடது சாரி ஜனநாயக சக்திகள் செய்யத்தவறியதாக இரண்டு விஷயங்களைச் சொல்கிறார் கிராம்ஷி. கத்தோலிக்கத்திருச்சபையின் மேலாண்மையைத் தகர்க்கத் தவறியதும் மதசார்பற்ற ஜனநாயக அறிவியல் கலாச்சாரத்தை உருவாக்கத் தவறியதும் தான் என்று சொல்கிறார்.
நீண்டகாலத்திட்டங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வலதுசாரி சக்திகள் தன்னுடைய பாசிச செயல்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் மதவெறியர்களையும் மதப்பற்றாளர்களையும் பிரித்தறிய முடியாதபடி எல்லோருடைய ஆன்மீக நிகழ்ச்சிநிரல்களையும் தங்களுடைய கையில் எடுத்தது. பெண்களை விளக்குபூஜை, காமாட்சிபூஜை, மாங்கலியபூஜை, சர்ஸ்வதி பூஜை, லட்சுமி பூஜை, என்று ஒன்று திரட்டியது. அதற்கு வீடுகளில் உள்ள ஆண்களும் மன இசைவைத் தருகிற நெருக்கடியைத் தருவது, குழந்தைகளை திரட்டி ஆன்மீக பஜனைகள் செய்வது, யோகாசனம், மருத்துவ முகாம்கள் மூலம் பொது மக்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் ஆன்மீகத்தின் பெயரால் மதவெறி விதைகளைத் தூவி வளர்ப்பது, இளைஞர்களுக்கு உடற்பயிற்சி என்ற பெயரில் காகாவில் சேர்த்து அவர்களிடம் வன்முறை வெறியைத் தூண்டுவது, இது போதாதென்று பிரதோஷம், அஷ்டமி, நவமி, என்று காலாவதியான மூடநம்பிக்கைகளுக்கு புத்துயிரளித்து தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் கோவில் மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை இன்றியமையாதாதாக மாற்றுவது என்று செயல்படுகின்றன. தொடர்ந்து அவர்கள் செய்த இந்த நடவடிக்கைகளின் பலனை அதிகாரத்தைக் கைப்பற்றியதன் வழியாக இன்று அநுபவிக்கிறார்கள்.
தங்களுடைய மேலாதிக்கத்துக்கு எதிராக கிளம்பும் எதிர்க்குரல்கள், மாற்றுக்கருத்துக்கள், பொதுவெளி விவாதங்கள் அடக்கப்படுகின்றன. அதிகாரம் தன் கொடுங்கரங்களால் பொதுவெளிஜனநாயகத்தின் குரல்வளையை இறுக்கிக் கொண்டிருக்கிறது. முதலில் சமூகத்தின் மனசாட்சிகளாக மாற்றத்திற்கான காரணிகளாக, விரிந்து பரந்த விவாதங்களை உருவாக்குபவர்களாக விமரிசனங்களை தங்கள் நுண்மான்நுழைபுலம் கொண்டு முன்வைப்பவர்களாக, இருக்கிற அறிவுஜீவிகளையும், எழுத்தாளர்களையும் வன்முறை மூலமாகவும் சட்டபூர்வமாகவும் கூட முடக்குகிறது. டோனி வெண்டிகர், பெருமாள் முருகன், முதலியவர்களின் நூல்களை முடக்குவதில் தொடங்கி நரேந்திர தபோல்கர், பன்சாரே, அபிஜித், போன்றோரைக் கொலை செய்வதன் வழியாக ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது. தன் வழியில் குறுக்கிடுபவர்களை எவ்வகையிலும் அகற்றத் தயாராக இருக்கிற செய்தி தான் அது.
ஐ.ஐடியில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டிருப்பது மற்றுமொரு எச்சரிக்கை. கல்விக்கூடங்களிலும் தங்களுடைய கண்காணிப்பை உறுதிப்படுத்துகிறது. ஒட்டு மொத்த சமூக வெளியையும் தன்னுடைய கண்காணிப்பின் கொடும்பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறது. எல்லாம் சட்டப்படியே நடக்கிறது.
இந்தியாவின் விடுதலைப் போராட்டகாலத்தில் முன்னுக்கு வந்த காலனியாதிக்க எதிர்ப்பு, மதச்சார்பின்மை, இந்திய தேசிய வாதம், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி, தேசிய முதலாளித்துவம் தன்னுடைய வளர்ச்சிக்காக நிலை நிறுத்திய தாராள ஜனநாயக உணர்வு, சுதந்திரமான ஊடகங்களின் எழுச்சி, லட்சியவாதத்தின் எழுச்சி, இடதுசாரிகளின் எழுச்சிமிக்க தலையீடு, எல்லாம் சேர்ந்து இந்திய சமூகத்தின் பொதுவெளியில் மிகக் காத்திரமான ஜனநாயக எழுச்சியையும், சமூகத்தின் உள்ளடக்கத்தில் முற்போக்கான வளர்ச்சியையும் ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இந்துத்துவாவும் செய்த சூழ்ச்சிகளின் விளைவாக உலகவரலாறு காணாத மதக்கலவரம் நடந்த போதும் அதிலிருந்து மீளும் வல்லமை பொதுவெளி சமூகத்துக்கு இருந்தது. இந்திய அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் முன்வைத்த மாற்றுக்கருத்துகளையும், விமரிசனங்களையும் விவாதங்களையும் ஏற்றுக் கொண்டு முன்னேறியது. மதச்சார்பற்ற சக்திகளின் கை ஓங்கியிருந்த சமயம் அது. எனவே மதவெறிச்சக்திகள் பதுங்கியிருந்தன பாய்வதற்கான தருணம் நோக்கி. எப்படி சோவியத்தில் கத்தோலிக்க திருச்சபை சோசலிசத்துக்கு எதிராக தன் பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்ததோ அப்படியே தங்களுடைய இந்துத்வா நிகழ்ச்சி நிரலைக் கைவிடாமல் தொடர்ந்து பண்பாட்டு தளத்தில் நடத்திக் கொண்டிருந்தது. யாருக்கும் சந்தேகம் வராதபடிக்கு விதவிதமான அமைப்புகள் உருவாகி கோவில்களை ஆக்கிரமித்தன. இந்து மதத்தின் எந்தவகைமைக்குள்ளும் வராத பெரும்பான்மை மக்களை பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்துத்வா சக்திகளும் கோவில்களில் ஒன்றிணைத்தன .மதசார்பற்ற சக்திகளின் நிகழ்ச்சிநிரலில் ஏற்பட்ட பண்பாட்டு வெற்றிடத்தை மிகச் சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன
இன்றைக்கு இந்திய சமுகத்தின் பொதுவெளி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய கையில் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களூம் அறிவுஜீவிகளும், அறிவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டு அமைதியாக்கப் பட்டுவிட்டால் பின் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். கேள்விகளில்லா அந்தப் பொதுவெளியில் உலகமுதலாளித்துவமும் மதவெறியும் தங்களுடைய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கி விடும். முன்னெப்போதையும் விட இப்போது தான் இந்திய அறிவுஜீவிகள், மதசார்பற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகள் சமூகநீதி விழைவோர், சமத்துவச்சிந்தனையாளர்கள், ஆகியோரின் ஒன்றிணைந்த ஒரே குரல் மிக மிக அவசியமாயிருக்கிறது. வரலாற்றில் மனித மாண்புகளை உயர்த்திப்பிடிக்க வேண்டிய தருணம் இது.!
நன்றி - வண்ணக்கதிர்


Thursday 18 June 2015

எறும்புகள் கட்டிய போட்டி வீடு

எறும்புகள் கட்டிய போட்டி வீடு
உதயசங்கர்
மழை பெய்து ஓய்ந்து விட்டது. மண்ணுக்குள்ளே பாதுகாப்பாய் ஆழத்தில் குடியிருந்த சிவத்தான் எறும்பு மெல்ல வெளியே வந்தது. தன்னுடய உணர்கொம்புகளினால் காற்றைத் துழாவியது. இப்போது மேல்மண் காயத்தொடங்கி விட்டது. மறுபடியும் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான். என்று நினைத்தது. இந்த மழை வருவதற்கு முன் மிகப்பெரிய புற்று கட்டியிருந்தார்கள் சிவத்தானின் கூட்டத்தார். வேலையாள் எறும்புகளின் அயராத உழைப்பை ராணியார் எறும்பான சிவப்புத்தலை சிங்காரியே பாராட்டியிருந்தார்கள். இந்த இடத்தைக் கண்டுபிடித்து சொன்னது சிவத்தான் தான். இதற்கு முன் அவர்கள் இருந்த புற்றில் அடிக்கடி ஒரு பாம்பு வந்து குடியிருந்து கொண்டது. என்ன கடித்தாலும் அதற்கு சுரணையே இல்லை. அது மட்டுமல்ல அருகில் இருந்த கருவை மரக்காட்டில் நிறைய ஓணான்களும் இருந்தன. அவை ஒன்று மாற்றி ஒன்று புற்று வாசலில் உட்கார்ந்து கொள்ளும். உணவு தேடிக் கொண்டு வரும் எறும்புகளை தன்னுடைய நீண்ட பசை நாக்கை நீட்டி வாய்க்குள் போட்டுக் கொள்ளும். அதனுடைய தோலும் ரப்பர் மாதிரி இருக்கும். என்ன கடித்தாலும் வலிக்காது.
ஒரு நாள் மாலை நான்கு ஓணான்கள் புற்று வாசலில் உட்கார்ந்து கொண்டு வேலையாட்களில் பாதியை விழுங்கி விட்டது. அன்றிரவு சிவத்தான் ராணி சிவப்புத்தலை சிங்காரியுடன் ஆலோசனை செய்து புதிய இடம் தேடுவதற்கான ஆணையை வாங்கியது. அப்படி அலைந்து திரிந்து கண்டு பிடித்த இடம் தான் இந்த கரிசல் மண். அருகில் மரங்களோ, ஓணான்களோ, இல்லை. சிவத்தானுக்கு ரெம்ப சந்தோஷம். ஒரு நாள் இரவில் சிவப்புத்தலை சிங்காரியின் தலைமையில் அனைவரும் இந்த இடத்திற்கு வந்து புற்று மாளிகை கட்டினர். அந்த மாளிகையின் அமைப்பைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தது ராணி சிவப்புத்தலை சிங்காரி. வேலையாட்களுக்கும் அவைகளின் தலைவனான சிவத்தானுக்கும் ஒரு பெரிய வெட்டுக்கிளியைப் பரிசாகக் கொடுத்தாள். அதிலிருந்து சிவத்தானுக்கு ரெம்பப் பெருமை.  தலையைத் தூக்கிக் கொண்டே திரிந்தது. தன்னுடைய முன்காலைத்தூக்கி தலையைச் சொறிந்தது. போன தடவை கட்டியதை விட பெரிதாகக் கட்ட வேண்டும். உள்ளே போய் வேலையாட்களை அழைத்து மாளிகை கட்டுவதற்கான திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தது சிவத்தான்.
அப்போது ஏதோ ஒரு வாசனை காற்றில் வந்ததை உணர்கொம்புகள் சொல்லியது. சிவத்தான் சுற்றும் முற்றும் பார்த்தது. சற்று தூரத்தில் ஒரு எறும்பு வந்து கொண்டிருந்ததைப் பார்த்தது. உடனே சிவத்தானுக்குக் கோபம் வந்து விட்டது. நம்முடைய இடத்தில் இன்னொருத்தனா? நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தைக் கண்டு பிடித்திருக்கிறோம். இந்த இடத்திற்கு வந்த பிறகு தான் ராணி சிவப்புத்தலை சிங்காரி நிம்மதியாக முட்டைகளை இட்டுக் கொண்டேயிருக்கிறாள். அதனால் கூட்டத்தில் வேலையாட்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இந்த இடத்தில் இன்னொருத்தனா விடக்கூடாது என்று நினைத்தது சிவத்தான். உடனே அதை நோக்கி வேகமாக குடுகுடுவென ஓடியது.
” ஏய்…நில்லு..நில்லு… எங்க போறே…”
“ எம்பேரு கருப்பன்.. இங்க எங்கேயாவது தங்கறத்துக்கு இடம் கிடைக்குமான்னு பார்க்க வந்தேன்..”
“ இந்த ஏரியாவுக்குள்ள வராதே… இது எங்க ஏரியா…”
“ நண்பா.. நாங்க ஏற்கனவே இருந்த இடத்தில இப்ப சாக்கடை ஓடுது.. அந்த வெள்ளத்தில  என்னோட கூட்டத்தைச் சேர்ந்தவுங்க நிறைய பேரு போய்ட்டாங்க.. இப்ப நாங்க கொஞ்ச பேரு தான் இருக்கோம்.. அதான் புதுசா இடம் பாத்துட்டு வரச்சொல்லி எங்க ராணி கருப்புத்தலை சிங்காரி அனுப்பிச்சாங்க…” என்று அந்த கருப்பு எறும்பான கருப்பன் சொன்னது. அது மிகவும் பலகீனமாக இருந்தது. சரியாக நிற்க முடியாமல் அடிக்கடி ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டேயிருந்தது. ஆனால் சிவத்தான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவனுடைய கவலையெல்லாம் இந்த இடத்தில் வேறு யாரும் குடி வந்து விடக்கூடாது. கருப்பனை மிரட்டுவதற்காக தன்னுடைய உணர்கொம்புகளினால் லேசாகத் தள்ளி விட்டது. கருப்பன் ஒரு பக்கமாக விழுந்து விட்டது. அதனால் எழுந்திரிக்க முடியவில்லை. அதைப் பார்த்து சிவத்தானுக்குப் பாவமாகி விட்டது. அருகில் சென்று அதற்குக் கை கொடுத்து தூக்கி விட்டது.
“ கருப்பா உன்னைப் பாத்தா பாவமாத்தான் இருக்கு.. ஆனா இங்க தான் நாங்க சுதந்திரமா இருக்கோம்.. வேற யாருடைய தொந்திரவும் இருக்கக்கூடாது்ன்னு எங்க ராணி சிவப்புத்தலை சிங்காரி உத்தரவிட்டிருக்கிறார்கள்……”
“ நண்பா.. இந்த உலகத்தில நமக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கிறது… ஒருத்தரை ஒருத்தர் சாராமல் வாழ முடியாது.. சமாதானம்.. சகோதரத்துவம் சகவாழ்வு.. இது தான் நாம் வாழும் இந்த பூமி நமக்குச் சொல்வது… இயற்கை உன்னைச் சிவப்பாகவும் என்னைக் கருப்பாகவும் படைத்திருப்பதற்கும் காரணம் இருக்கிறது… நண்பா…”
என்று சொல்லி விட்டு மூச்சு வாங்கியது கருப்பன். சிவத்தான் அலட்சியமாக,
“ இந்தக் கதை எல்லாம் வேண்டாம்.. இந்த இடத்துக்கு வராதே… அவ்வளவு தான்..”
என்று சொன்னது. மறுபடியும் தன்னுடைய உணர்கொம்புகளை முன் கால்களினால் தடவி விட்டுக் கொண்டு கருப்பன் எறும்பு,
“ நண்பா… நீ இங்கே வருவதற்கு முன்னால் இங்கே யார் இருந்தா தெரியுமா? அதுக்கு முன்னால யார் இருந்தான்னு தெரியுமா? நம்மோட வாழ்க்கை ஒரு வாரமோ பத்து நாளோ…. அதுக்கப்புறம் யார் இந்த இடத்துக்கு வரப்போறாங்கன்னு உனக்குத் தெரியுமா? .. நீ ஒரு பக்கம் இருந்தா நான் ஒரு பக்கம் இருந்துக்கிறேன்… எங்க கூட்டமே அழியிற நிலைமையில இருக்கு… என்னன்னவோ வித்தியாசம் இருந்தாலும் நாம் எல்லோரும் எறும்புக் கூட்டம் தானே…”
இதைக் கேட்ட சிவத்தானுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. கருப்பனைக் கனிவோடு பார்த்தது. கருப்பன் தள்ளாடிக் கொண்டிருந்தது. பிறகு சிவத்தான் கருப்பனிடம்,
“ இவ்வளவு அறிவு எனக்கில்லை கருப்பா.. ஆனால் எங்களைத் தொந்திரவு செய்ய மாட்டீர்கள் என்றால் நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் இங்க வந்து வீடு கட்டிக்கோங்க… தயவு செய்ஞ்சி என்னோட முரட்டுத்தனத்தை மன்னிச்சிரு…”
இதைக் கேட்டதுமே கருப்பனுக்கு புதுத்தெம்பு வந்த மாதிரி இருந்தது. “ மிக்க நன்றி நண்பா..” என்று தன்னுடைய உணர்கொம்புகளால் சிவத்தானின் உணர்கொம்புகளைத் தட்டிக் கொடுத்தது. சிவத்தானும் தன்னுடைய முன் காலால் கருப்பனைத் தடவிக் கொடுத்தது.

மறுநாள் அங்கே இரண்டு எறும்புப்புற்றுகள் எழும்பிக் கொண்டிருந்தன. 
நன்றி- மாயாபஜார் தமிழ் இந்து

Tuesday 9 June 2015

எங்கிருந்து தொடங்குவது?

எங்கிருந்து தொடங்குவது?

உதயசங்கர்

இந்திய நாகரீகத்தை வேதகாலத்திலிருந்து தொடங்குகிறார்கள் பழமைவாதிகள். அதற்கு வேதங்களை ஆதாரமாகக் கொள்கிறார்கள். ஒரு சமூகத்தின் வரலாற்றை நாகரீகத்தை பண்பாட்டை, வாழ்க்கை முறையை, அதன் வழிபாட்டு முறையை, அறிந்து கொள்ள இலக்கியப் பிரதிகள் மட்டும் போதுமானவைதானா? அதற்கு துல்லியமான பொருள்சார் பண்பாட்டு சான்றுகள், அகழ்வாராய்ச்சிகள், தொல்லியல் சான்றுகள், மானிடவியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் என்று ஏராளமான தரவுகளை ஒருங்கிணைத்தே நாம் கடந்த கால வரலாற்றை, சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். பெரும்பாலும் இலக்கியத்தில் அந்தந்தக் கால வரலாறு எழுதப்படுவதில்லை. இலக்கியச்சான்றுகளில் அந்தந்தக் கால சமூகத்தின் அறவிழுமியங்கள், ஆசை, விருப்பம், வெற்றிகள், ( பெரும்பாலும் தோல்விகள் இருப்பதில்லை ) இல்லாமைகள், காதல், என்று உணர்வு சார்ந்த விழுமியங்களே மிகுந்திருக்கும். இந்த உணர்வுச்சித்தரிப்பிற்கு இடையில் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் சில பௌதீகச்சான்றுகளை துணையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதையே முழுவதுமாக வரலாற்றுத் தரவாக எடுக்கும் போது தவறான முடிவுகளுக்கே கொண்டு சேர்க்கும்.
சமகால அரசியல் பலன்களுக்காக பெரும்பாலான அரசியல் சக்திகள் தங்கள் பெருமைகளை வரலாற்றுக் காலத்துக்கும் முன்னால் கொண்டு செல்ல முயற்சிப்பதும், வரலாற்றின் பொன்னொளியில் தங்களுடைய முன்னோர்களை முழுக்காட்டி தற்காலப்பலன்களுக்கு அவர்களை முதலீடாக்குவதும் நிகழ்கிறது. இதனால் வரலாற்றை திரித்து அல்லது மறைத்து அல்லது உருமாற்றி எழுதுவது நடக்கிறது.
 ஒரே மொழியைப் பேசுபவர்கள் அல்லது அந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இனமாக இருக்க வேண்டியதில்லை. இனம் என்பது ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல. அப்படி எடுத்துக் கொண்டால் இந்தியாவைப் பிற்காலத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள் இங்கே இந்தியா முழுவதும் இருக்கும் ஆங்கிலத்தின் செல்வாக்கைக் கண்டு இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேய இனமே வாழ்ந்ததாகப் பிழையாக நினைக்கக்கூடும். எனவே ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் திரள்  இந்தியாவுக்குள் அவ்வப்போது வந்திருக்கின்றனர். மேய்ச்சல் நிலங்களைத் தேடி வந்த இடையர்கள் கூட்டம் இந்தியாவில் குடியேறியவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே இனக்குழுவினர் அல்ல. குடியேறிய ஆரிய மொழி பேசும் அந்த இனங்களுக்கிடையிலும் பகைமையும் சண்டைகளும் நடந்திருக்கின்றன பகைக்கும் சண்டைகளுக்கும் அப்போதிருந்த காரணம் சமயக்கோட்பாட்டிலிருந்த வேறுபாடுகளே என்பதுவும் ரிக் வேதப்பாடல்களில் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. அந்தவேதகாலத்தில் சப்த சிந்து பிரதேசத்தில் புரு, யது, துர்வஷ், அணு, திருஹ்ய, என்ற ஐந்து ஆரிய இனக்குழுக்கள் இருந்ததாக ரிக் வேதம் ( 1-108-8 ) கூறுகிறது. பின்னர் இந்த ஐந்து இனக்குழுக்கள் 12 இனக்குழுக்களாகப் பிரிந்திருக்கிறார்கள்..  இந்தியாவுக்குள் ஆரியர்களின் வருகை கி.மு.1500 வாக்கில் .நிகழ்ந்திருக்கிறது. அதற்கு 1500 வருடங்களுக்கு முன்பு அதாவது கி.மு. 3000 மாவது ஆண்டுகளிலே மொகஞ்சோதரா, ஹரப்பா நாகரிகம் மிக முன்னேறியதாக இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் நிருபிக்கின்றன.
சிந்து சமவெளி மக்கள் தாமிரத்தையும் வெண்கலத்தையும் பயன்படுத்தினார்கள். தாமிரத்தினால் ஆன மோதிரங்கள், கோடாரிகள், ஈட்டிகள், கத்திகள், வேல்கம்புகள், மற்றும் காவி நிற மட்பாண்டங்களும் கிடைத்திருக்கின்றன. மிகச் சிறந்த கைவினைஞர்களும் அங்கிருந்திருக்கின்றனர். கல் வேலைப்பாட்டில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்., பருத்தி ஆடை தயாரித்திருக்கிறார்கள். கண்ணாடி மணிகள், பாசி மணிகள், இவற்றைக் கோர்த்து மாலைகள் செய்திருக்கிறார்கள். தந்த வேலை, சுண்ணாம்பு உற்பத்தி, செய்பவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆடுகள், மாடுகள், பன்றிகள் ஆகியவற்றை வீட்டுப்பிராணிகளாக பழக்கியிருக்கிறார்கள். மாட்டிறைச்சி, சாப்பிட்டிருக்கிறார்கள். அரிசி, கோதுமை, ,கம்பு, அவரை, உளுந்து, பட்டாணி, போன்ற தானியங்களைப் பயிர் செய்திருக்கிறார்கள். கட்டிடக்கலையில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். கோட்டைகள் கட்டப்படிருக்கின்றன. மதிற்சுவர்களின் மீது வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. வீடுகள் சுட்ட மற்றும் சுடப்படாத களிமண்ணால் கட்டப்பட்டிருக்கின்றன. அனைத்து வீடுகளிலும் தனித்தனி அறைகள் குளியலறைகள், குப்பைத்தொட்டிகள், இருந்திருக்கின்றன. பெரும்பாலான வீடுகள் இரண்டு மூன்று தளங்களைக் கொண்டதாக இருந்திருக்கின்றன. மாடமாளிகைகளும் சிறு வீடுகளும் அருகருகே இருந்திருப்பதைப் பார்க்கும்போது வர்க்க வேறுபாடு அங்கே நிலைகொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு நகர நிர்மாணம் மிகவும் திட்டமிடப்பட்டு கட்டியதற்கான அனைத்துச் சான்றுகளும் இருக்கின்றன. நீர் வடிகால் வாய்க்கால்கள், சாக்கடை நீர் வடிகால் வாய்க்கால்கள், கட்டப்பட்டிருக்கின்றன. கழிவு நீர் வெளியேற்றம் ஹரப்பா நாகரிக மக்களின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
விவசாயத்திற்காக நீரைக்கட்டுப்படுத்தும் பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். மரக்கலப்பையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தாய்த்தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது என்பது அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் நிர்வாணச்சிலையிலிருந்து தெரிகிறது.அதே போல லிங்கவழிபாடும் இருந்திருக்கிறது. ஹரப்பா மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கமிருந்திருக்கிறது. 2000 –க்கும் மேற்பட்ட ஹரப்பா முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா மக்களின் எழுத்துக்களை இன்னும் வாசித்தறிய முடியவில்லை. அந்த எழுத்துக்களை வாசித்தறியும் போது மேலும் பல விஷயங்கள் தெரியும்.
கி.மு.1800 வாக்கில் ஹரப்பா நகரங்கள் காலியாகி விட்டன. நகரில் வாழ்ந்த மக்கள் அழிந்திருக்க வேண்டும் அல்லது வேறு பகுதிகளை நோக்கி புலம் பெயர்ந்திருக்க வேண்டும். ஹரப்பா நாகரிகம் சிதைந்து அழிந்ததற்கு இரண்டு முக்கியக் காரணிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்து மற்றும் ராவி நதிகளின் பாதைகள் மாறியதால் ஒருபுறம் வறட்சியும் மறுபுறம் வெள்ளமும் ஏற்பட்டு சிந்து சமவெளி நகரங்களும் மக்களும் அழிந்திருக்கலாம். அடுத்தது கி.மு.1500 வாக்கில் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள் தொடுத்த யுத்தங்களினால் அழிந்தன. அதற்கு சாட்சியாக குடியிருப்புகள் எரிந்த சாம்பலின் மொத்த அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொகஞ்சோதராவில் மனித எலும்புக்கூடுகளின் குவியல், ஒரு வீட்டில் கிடந்த எலும்புக்கூடுகளின் குவியல், கிணற்றடியில் கிடந்த பெண்ணின் எலும்புக்கூடு ஆகியவை இந்தப் படையெடுப்பு குறித்த ஆதாரங்களாக கிடைத்திருக்கின்றன. அதே போல ரிக் வேதத்தில் ஆரியர்கள் அல்லாதவர்களின் நகரங்கள் அழிக்கப்பட்டதைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
பொதுவாகவே ஆரியர்களை ஆரிய மொழி அதாவது சமஸ்கிருதம் பேசும் ஒரே பண்பாட்டு முறையைக் கொண்ட மக்கள் கூட்டத்தினர் என்றே பார்க்கப்பட்டனர். இந்திய மரபில் இனம் என்ற வரையறை முற்றிலும் அந்நியமானது. அது ஐரோப்பாவின் கருத்தாக்கம். இந்தியாவைப் பொறுத்தவரை மொழி வேறுபாடு, வர்ணாசிரம தர்மத்தின் படிநிலை வேறுபாடு, சமய வேறுபாடு இவையே மாறுபட்ட மக்கள் திரளைப் பிரிப்பதற்கான வரையறை. ஒரு முறை கூட இந்தியாவுக்கு வந்திராத இந்திய வரலாற்றியலாளர் மாக்ஸ்முல்லர்,தான் முதன்முதலில் ஆரிய இனக்கோட்பாட்டை உருவாக்கியவர். ஆரிய மொழிக்குடும்பமான, சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், ஜெர்மானிக், ரோமான்ஸ்,ஆகிய மொழிகளிடையே இருந்த ஒப்புமையின் காரணமாக மாக்ஸ்முல்லர் இந்திய மற்றும் ஐரோப்பியப் பண்பாட்டின் வழியாக உலகமுழுவதும் விரிந்து பரந்த ஆரிய இனம் என்ற பார்வையை உருவாக்கினார்.
“ நமது மிக நெருங்கிய அறிவுலக உறவினர்களான இந்தியாவின் ஆரியர், சமஸ்கிருதம் என்ற அற்புத மொழியை உருவாக்கியவர்கள், நமது அடிப்படையான கருத்தாக்கங்களின் உருவாக்கத்தில் உடனுழைத்தவர்கள் இயற்கை மதங்களிலேயே மிக இயற்கையான மதத்தின் தந்தையர், மிக வெளிப்படையாகப் பொருள் உணர்த்தும் புராணங்களை இயற்றியவர்கள். மிக நுட்பமான மெய்யியலை உருவாக்கியவர்கள், மிக விரிவான சட்ட இயலைத் தந்தவர்கள்,  ”
என்ற லட்சியச்சித்திரத்தின் மூலம் வேதகாலத்திலிருந்தே இந்தியப்பண்பாடும் நாகரிகமும் தொடங்குவதாக கற்பிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் மொழியையும் இனத்தையும் ஒன்றாக்கிய அபத்தம் நிகழ்ந்தது.  வர்ணாசிரமத்தர்மத்தினை நடைமுறைப்படுத்தியதின்  மூலம் ஆரியர்களின் இனத்தூய்மை பாதுகாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இத்தைகைய கருத்தாக்கத்தின் விளைவே ஜெர்மனியின் ஹிட்லர் தூய ஆரிய இனக்கோட்பாட்டை முன் வைத்து யூதர்களை இன அழிப்பு செயதான். அதையே இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். வழிமொழிந்தது..ஆர்.எஸ்.எஸ்ஸின் முகமூடிகளில் ஒன்றான பி.ஜே.பி. இன்று ஆட்சி அதிகாரத்தில் ஏறியதும் வேதகாலத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று முழங்குகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் வேதகாலத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி கலப்பில்லாத தூய ஆரிய இனம் என்று ஒன்று கிடையாது ஆரிய இனம் மட்டுமல்ல உலகின் எந்தவொரு இனமும் கலப்பின்றி பல்கிப் பெருகவில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் இந்த ஆரிய இனக்கோட்பாடு இந்தியாவின் மேல்சாதியினருக்கு வேதகாலத்தைப் பொற்காலமாகப் பார்க்கும் பார்வையைக் கொடுத்தது. இதுவே வேத காலத்தை கி.மு. 4000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் தள்ளவும் ஆரியர்களும் இந்தியாவிலிருந்த பூர்வகுடிகளே என்றும் நிறுவவும், இல்லாத சரஸ்வதி நதியைத் தேடிப்பார்க்கவும், மொகஞ்சோதரா முத்திரையில் உள்ள மாட்டை குதிரையாக மாற்றி வரலாற்றைத் திருத்தவும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால் உண்மையில் இந்தியாவின் பண்பாடு ஹரப்பா, மொகஞ்சோதராவிலிருந்து ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும்.  நாகரிகத்தில் மிக முன்னேறிய ஒரு சமூக அமைப்பு வேதகாலத்திற்கு முன்னால் இருந்திருக்கிறது என்பது நிருபணமாகியிருக்கிறது. இந்தியப் பண்பாட்டின் மூலம் ஹரப்பா அல்லவா? அதாவது கி.மு.3000 ஆண்டுகளிலிருந்தே தொடங்க வேண்டும் இல்லையா? அப்படியானால் ஏன் இந்தியப்பண்பாட்டின் துவக்ககாலம் வேதகாலம் என்றும் ஆரியர்களே அதன் மூலகர்த்தாக்கள் என்றும் நிறுவ முயற்சிப்பது ஏன்? சிவில் சொசைட்டியின் பொதுப்புத்தியில் வேதங்களை புனிதமானதாக, கேள்விக்கப்பாற்பட்ட தெய்வீக நிலைக்கு ஏற்றிவிட்டால் பிராமணியம் மீண்டும் அரியணையில் ஏறவும், சமூக,பொருளாதார, பண்பாட்டு, ஆன்மீக, அதிகாரத்தைக் கைப்பற்றவும் அதை நிரந்தரமாக்கவும் முடியும். இந்தத் திட்டங்களை முறியடிக்க வேதங்களின் உண்மையான உள்ளடக்கம் பற்றி, மநுதர்ம தந்திரங்களைப் பற்றி, இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றி, பொய்யான மேல்நிலையாக்கம் குறித்த மாயைகள் குறித்து மக்களின் பொதுப்புத்தியில் இருக்கும் சித்திரங்களை தகர்க்க மீண்டும் மீண்டும் தலையீடு செய்து கொண்டிருக்க வேண்டும்.
அப்போது தான் அறிவியல்பூர்வமற்ற பொய்யும் புனைசுருட்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்திய வலது சாரிகளின் குரூரமுகம் சாமனிய மக்களுக்குப் புரியும். இந்திய நாகரீகத்தின் உண்மையான மதசார்பற்ற முகம் வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளிரும்.
துணை நூல்கள்- 1. பண்டைக்கால இந்தியா-டி.என்.ஜா
                 2.வரலாறும் கருத்தியலும் – ரொமிலா தாப்பர்

                  3. ரிக் வேதகால ஆரியர்கள்- ராகுல் சாங்கிருத்தியாயன்.

Friday 5 June 2015

இந்து மதம் ஒரு கற்பிதமா?

இந்து மதம் ஒரு கற்பிதமா?

உதயசங்கர்

முதலில் இந்து என்ற பெயர் மதம் சார்ந்ததோ, இனம் சார்ந்ததோ, சாதி சார்ந்ததோ இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்து என்ற வார்த்தை பூகோளரீதியாகவே தோன்றியிருக்கிறது.  சிந்து அல்லது இண்டஸ் நதியைச் சுற்றியிருந்த நிலப்பகுதியில் வாழ்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகவே அது குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தில் வசித்த அனைவரும் பூகோளரீதியாக இந்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது புதிய குடியேறிகளின் பார்வையில் ” மற்றவர்கள் “ ( OTHERS ) என்ற அர்த்ததிலேயே இருந்தது. அதே போல ஆரம்ப கால வெளிநாட்டுத் தொடர்புகளின் மூலமாக இந்தியாவுக்குள் வந்தவர்களை இனரீதியாக துருக்கியர் என்றோ, பூகோளரீதியாக யவனர் என்றோ, கலாச்சார ரீதியாக மிலேச்சர் என்றோ ( அதாவது சமஸ்கிருதம் பேசாதவர்கள், சாதியமைப்புக்கு வெளியில் இருந்தவர்கள், தூய்மையற்றவர்கள், கீழ்ச்சாதியினர், பழங்குடியினர், மற்றும் அந்நியர்கள் ( அவர்கள் உயர்செல்வாக்குடையவர்களாக இருந்த போதிலும் அனைவரும் மிலேச்சர் தான் ) அழைக்கப்பட்டனர். எனவே ஆரம்பகாலங்களில் மக்களுக்கு மத அடையாளம் இல்லை.
மதம் என்ற கருத்தாக்கமே பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. வெள்ளைக்காரர்களுக்கு இங்குள்ள பல சமயப்பிரிவுகளைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. அவர்கள் தங்களுடைய மதமான கிறித்துவ மதத்தைப் போல ஒற்றை நிறுவன மதத்தை கற்பனையாக உருவாக்கினர். மதம் என்ற கருத்தாக்கத்துக்கு சகல அதிகாரம் கொண்ட ஒற்றை நிறுவனம், திருச்சபை, ஒற்றைக்கடவுள், கடவுளின் தூதர், ஒற்றைப்புனித நூல், என்ற அக உறுப்புகள் கொண்டது. உதாரணத்திற்கு கிறித்துவமாக இருந்தால் கத்தோலிக்க திருச்சபை, கடவுளாக பிதா, கடவுளின் தூதராக ஏசு, புனித நூலாக பைபிள், என்று பார்க்கலாம். ஆனால் அப்படி ஒரு ஏற்பாடே இந்து மதத்தில் கிடையாது. ஏன்?
..சமயம் என்பது நிறுவனமயமாகாத சிறு குழுக்கள் தனித்தனியாகவோ, சேர்ந்தோ, இனரீதியாகவோ, சாதி ரீதியாகவோ, ஏராளமான தெய்வங்களை வழிபடும் முறை என்று கூறலாம். இந்தச் சமயக்குழுக்கள் தங்கள் வழிபாட்டுச் சடங்கியல் முறைகளில் மிகுந்த வேறுபாடுகளும் மாறுபாடுகள் கொண்டவர்கள். ஆதியிலிருந்தே ஏராளமான சமயக்குழுக்களே இங்கிருந்தன ஆரியர்கள் வேதமரபான ஸ்ருதி ( வேதங்கள் ), ஸ்மிருதி ( வேதங்களின் துணை நூல்கள், தர்ம சாத்திர நூல்கள் ), இவைகளை அடிப்படையாகக் கொண்டே தங்களுடைய சமய மரபைக் கடைப்பிடித்தனர். அவர்களுக்கு முன்பு இங்கே இருந்த பழங்குடியினரை தஷ்யூக்கள் என்று அழைத்ததும் அவர்களோடு போரிட்டதும் சமய வழிபாட்டு சடங்கியல் வேறுபாடுகளுக்காகவே. எனவே ஆரியர்களின் தர்மசாத்திரக்கோட்பாட்டின் படி இரு பிறப்பாளர்களான ( துவிஜர் ) பிராமணர், சத்திரியர்,களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் வேதங்களை ஓதவும், கேட்கவும் உரிமையுண்டு. எனவே வேதங்கள் எல்லோருக்குமான புனித நூலாக எப்போதும் இருந்ததில்லை.
ஆதியில் வேதமதமான பிராமண மதமும், பௌத்த, சமண, ஆசீவகம் இணைந்த சிராவண மதமுமே இரு பெரும் சமயக்குழுக்களாக இருந்திருக்கின்றன. பிராமண மதத்திற்கும், சிராவண மதத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இருந்தன. பிராமணியத்துக்கும் சிராவணத்துக்கும் இடையிலான பகை கடுமையாக இருந்தது. வேத மதமான பிராமணிய மதத்தில் யாகச்சடங்குகளே முக்கியப்பங்கு வகித்தன. அஸ்வதமேத, புருஷ, ராஜ சூய, என்று யாகங்களும் பலிகளும் மட்டுமே கொண்டது யாகச்சடங்குகளை மட்டுமே வலியுறுத்திய வேத மரபிலிருந்து விக்கிரக வழிபாட்டை மேற்கொண்ட புராண மதம் தோன்றியது. வேதங்கள் காற்றில் சுயமாக உருவானது அதாவது அபௌருஷயம் என்று வைதீக மரபும், வேதங்கள் சிவனால் அருளப்பட்டது என்று சைவர்களும் வேதங்கள் விஷ்ணுவால் அருளப்பட்டது என்று வைணவர்களும் நம்புகின்றனர்.
அதன் பிறகு புராண மதக்கடவுள்களாக சிவனும் விஷ்ணுவும் பிரதானப்பாத்திரங்களை ஏற்றார்கள்.  சைவர்கள் வைணவர்களுக்கு எதிராகவும், வைணவர்கள் சைவர்களுக்கெதிராகவும், இருவரும் வேத மதத்தினருக்கெதிராகவும் சண்டையிட்டனர். இவர்கள் மூவரும் சேர்ந்து சிராவணப்பிரிவுகளைச் சேர்ந்து எதிர்த்தனர்.. இவையெல்லாவற்றையும் எதிர்த்தன சிராவணப்பிரிவுகளான பௌத்தம், சமணம், ஆசீவகம், சாக்தம். இந்தப் பிரிவுகளின்றி, தாந்தரீக வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு, நாட்டார் சமய மரபுகள் என்று நூற்றுக்கணக்கான பிரிவுகளும் வேறுபட்ட சடங்கியல் வழிபாட்டு முறைகளோடு முரண்பட்டு நின்றார்கள். வெகு மக்களைப் பொறுத்தவரை சாதி இருந்தது சாமி இருந்தது. சடங்கு இருந்தது. இதை மட்டுமே தங்களுடைய அடையாளங்களாகக் கொண்டிருந்தனர். இத்துடன் வேதகாலத்திலேயே தோன்றிய நாத்திக மரபான சாருவாகம்,இருந்தது.
இந்தியச் சமூக அமைப்பைப் புரிந்து கொள்ளவும், நிர்வாக நலனுக்காகவும், இந்திய மக்களை வகைப்படுத்தி, தொகுக்கும் வேலையைத் தொடங்கியது. 1871 – ஆம் ஆண்டு டபிள்யூ.ஹெச்.எல்லீஸ் என்ற ஆங்கிலேய அதிகாரியின் தலைமையில் சென்சஸ் எடுக்கப்பட்டது. அத்துடன் அவர் “ THE CODE OF HINDU LAW “ என்னும் கட்டுரையையும் எழுதினார். அதோடு இந்திய சமூகத்தை ஆங்கிலேயக்கிறித்துவக்கண்  (அதாவது ஒற்றைமதக்கோட்பாடு ) கொண்டு பார்த்ததின் விளைவாக அனைத்து சமயக்குழுக்களும் ஒற்றை மதத்தின் குடைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டனர். ஸ்மார்த்தம், சைவம், வைணவம், காளி வழிபாடு, முருகவழிபாடு, தாந்திரீக வழிபாட்டு, தாய்த்தெய்வ வழிபாடு, சாக்தம், சாங்கியம், என்று எண்ணற்ற மாறுபட்ட முரண்பட்ட சமயங்களைக் கொண்டவர்களை இந்து என்ற ஒற்றை வார்த்தையில் அடைத்து வைத்தனர். கெடுவாய்ப்பாக அந்த இந்து என்ற அந்த ஒற்றை வார்த்தையின் சிம்மாசனத்தில் வேத பிராமணர்களான ஸ்மார்த்த மரபினர் உட்கார வைக்கப்பட்டனர். அதே ஆங்கிலேயர்கள் இந்து மதத்தை உருவாக்கிய மாதிரி இந்து மதக்கோட்பாட்டையும் உருவாக்கினர். புனித நூலாக வேதங்களையும் பகவத்கீதையையும் இந்து மதச்சட்ட நூலாக மனு தர்மசாஸ்திரத்தையும் முன் வைத்தனர். சைவ ஆகமத்தையும் வைணவ ஆகமத்தையும் புறந்தள்ளினர். அதுமட்டுமல்லாமல் மனுதர்ம சாஸ்திரத்தை அங்கீகரித்ததின் மூலம் கொடிய சாதியப்படிநிலைகள் நிலைத்திருக்க வழி செய்து விட்டனர்.. இப்படித்தான் வரலாற்றில் நவீன இந்து மதம் கற்பிதமாக உருவாக்கப்பட்டது. மறைந்த சந்திரசேகர சங்கராச்சாரியார் அவருடைய தெய்வத்தின் குரல் என்ற நூலில் சென்சஸ் எடுத்து எல்லாசமயக்குழுக்களையும் இந்து என்ற ஒரே குடையின்கீழ் தன்னுடைய அதிகாரத்தின் வழியாக ஒன்று திரட்டியதைப் பாராட்டுகிறார் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்! “
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்து மத அடையாளமே அவர்களுக்கு எதிரான அரசியல் அணி திரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டது. வேதகாலப்பழமையைப் போற்றவும் வர்ணாசிரமத்தை உறுதிப்படுத்தவும், புராண இதிகாசங்களை விடுதலைப்போராட்டத்துக்கான பிரசாரக்கருவிகளாக மாற்றிய புதிய நடுத்தரவர்க்கம் தோன்றியது. இந்த நடுத்தர வர்க்கம் ஒரே நேரத்தில் பழமையான சாநானதனத்தைப் போற்றவும், நவீன மாற்றங்களை வரவேற்கவுமான இரட்டை முகத்தை காட்டியது. பழமையைப் போற்றிய பிராமணிய நடுத்தர வர்க்கம் மாறி வரும் புதிய அரசியல் சூழலில் தன்னை மேலாதிக்க சக்தியாக மாற்றிக் கொள்ள, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்து கலாச்சார தேசிய வாதத்தை உருவாக்கியது. அதுவே இன்று ஆர்.எஸ்.எஸ்ஸாக, பாரதிய ஜனதாவாக உருமாறி பாசிச வழியில் செல்ல முயற்சிக்கிறது. இந்தியாவின் பன்முக சமய வழிபாட்டு முறைகளையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் ஒற்றைக் கலாச்சாரக் கொடுங்கரத்தால் அடக்க நினைக்கிறது. அதற்காக வரலாற்றைத் திருத்தவும் மாற்றவும் புரட்டி எழுதவும் முனைகிறது. கற்பனையான இந்து மதத்தின் ஒற்றைக்கலாச்சாரத்திற்கெதிராக இந்தியாவின் பாரம்பரியமான பன்முகக்கலாச்சாரத்தை முன்னெடுக்க வேண்டியது இப்போதைய அவசர அவசியக்கடமை.
நன்றி- தீக்கதிர் 4-6-15


Tuesday 2 June 2015

கேட்கப்படாத இரங்கற்பா

கேட்கப்படாத இரங்கற்பா

 உதயசங்கர்

இரவென்றும் பாராமல்
பகலென்றும் பாராமல்
பூமியின் விரல்களாய்
காற்றை வருடும் மரங்கள்
அரசியலோ தத்துவமோ
தந்திரங்களோ தெரியாது.
பறவைகளையும் பூச்சிகளையும்
மனிதர்களையும்
இலைக்கண்களால்
பார்க்கின்றன ஒன்றுபோலவே
குழந்தைகள் ஏறும்போதும்
முணுமுணுப்பதில்லை.
எறும்புகள் ஊரும்போதும்
கசந்ததில்லை
பறவைகளின் கூடுகளை
வெறுத்ததில்லை
காற்றோ மழையோ பனியோ புயலோ
கவலை கொள்வதில்லை
ஒருபோதும் சலிப்பதில்லை
வாழும்கணந்தோறும்
அருந்துகின்றன அமுதத்தை
தன்நிழலில் கண்ணயர்ந்து
தன்னை வெட்ட வந்த மனிதர்களின் மீதும்
நிழலையே பொழிகின்றன மரங்கள்
மரணத்தையும் மௌனமாகவே
எதிர்கொள்ளும் மரங்கள்
இறந்தும் வருந்துவதில்லை
வாழ்வைச் சபிப்பதில்லை
Monday 1 June 2015

மழைத்துளிக்குள் ஆனி

 மழைத்துளிக்குள் ஆனி

உதயசங்கர்

வெளியே துளித்துளியாக மழை பெய்து கொண்டிருந்தது. ஆனி வாசல் அளிக்கதவு வழியாக மழை வானத்திலிருந்து சொய்ங்னு இறங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனிக்கு மழை என்றால் ரெம்பப் பிடிக்கும். ஆனால் அம்மா மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று பயமுறுத்துவாள். ஆனி இரும்புக் கதவு வழியாக மழையைப் பிடிக்க கையை நீட்டினாள். மழையைத் தொட முடியவில்லை. மழைக்காத்து வீசியது. அவள் உடம்பு அந்தக் குளிர் காற்றில் லேசாக நடுங்கியது. வெளியே சரம் சரமாய் விழுந்து கொண்டிருந்த மழை அவளை வா..வா.. என்று அழைத்தது. ஆனி சத்தமில்லாமல் மெல்ல கதவின் தாழ்ப்பாளைத் திறந்தாள்.
வாசலில் நின்று கொண்டு மழையைக் கையில் பிடித்தாள் ஆனி. என்ன ஆச்சரியம்! அவள் பிடித்த மழைத்துளியின் வழியாக அவள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மழைத்துளியாகப் பிடித்துக் கொண்டு அவள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள். அப்படியே ஏறி ஏறி மழை பொழிந்து கொண்டிருக்கும் மேகத்துக்கே போய் விட்டாள். பெரிய பஞ்சு மூட்டையை அவிழ்த்து பறக்க விட்ட மாதிரி மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மேகத்திலிருந்தும், பூ வாளியிலிருந்து தண்ணீர் ஊற்றுவதைப் போல மழைத்துளிகள் அடுக்கடுக்காய் விழுந்து கொண்டிருந்தன.
அவளுக்கு அங்கே குளிர் எடுத்தது. அவள் அந்த பஞ்சுப்பொதி நடுவே உட்கார்ந்து கொண்டு மேகத்திடம் கேட்டாள். “ எப்படி மாமா உங்க கிட்ட இவ்வளோ தண்ணீ வந்துச்சு ” என்று கேட்டாள்.
 அதற்கு  “ எல்லாம் கடலம்மாவின் கருணை தான். கடலம்மா கடல் பரப்பில் வெப்பத்தினால் கடல் நீர் ஆவியாக காற்றில் ஏறி வந்து இங்கே குளிர்ந்து விடும். அப்படிக் குளிர்ந்த அந்த நீரைத் தான் நான் மழையாக அனுப்புகிறேன். அந்த மழைநீர் ஆறாக, ஓடும். ஓடையாக மாறும். அப்படியே எல்லாம் மறுபடியும் கடலில் போய்ச் சேரும். கடலிலிருந்து ஆவியாகி மேலே வரும். குளம், குட்டை நீரும் ஆவியாகி மேலே வரும். நாங்கள் அதை திரும்ப அனுப்புவோம். மழையால் மண்ணும் மக்களும் செழிப்பார்கள். எப்படி ஆனி! “   என்றது மேகம்.
“ ஆகா பிரமாதம்! “ என்றாள் ஆனி. மழை குறைய ஆரம்பித்தது. ஆனியைத் திரும்ப அனுப்ப வேண்டுமே. மேகம் உடனே ஆனியை ஒரு பெரிய மழைத்துளிக்குள் வைத்து பத்திரமாகக் கீழே இறக்கியது. ஆனியும் மேகத்திடம் அடுத்த  மழைக்கு மறுபடியும் வருவதாகச் சொன்னாள். மேகம் சரி என்றது. ஆனி டாட்டா சொல்லிக் கொண்டே கீழே இறங்கினாள். அவளுடைய வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு புல்லின் நுனியில் பொதுக்குன்னு விழுந்தாள். அப்படியே புல்லின் நுனியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டே தரையில் குதித்தாள். தரையில் கால் பட்டதும் ஆனி தன் சொந்த உருவத்தை அடைந்தாள். உடனே அம்மாவின் ஞாபகம் வந்து விட்டது. ஓடிப்போய் கதவைத்திறந்து வராந்தாவில் நின்றாள். தூங்கி எழுந்து வந்த அம்மாவும் வெளியே மழை பெய்திருப்பதைப் பார்த்து,  “ ஆனி மழையில நனைஞ்சியா..? “ என்று கேட்டாள். ஆனியும் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு “ இல்லம்மா..” என்றாள். சொன்னால் திட்டு விழும். அதோடு ஆனி சொல்வதை நம்பவா போகிறார்கள்! ஆனால் ஆனியின் உதடுகளில் இருக்கும் நமுட்டுச் சிரிப்பைப் பார்த்த அம்மா ஆனி ஏதோ சேட்டை பண்ணியிருக்கிறாள் என்று தோன்றியது. ஒருவேளை குளிர்பதனப்பெட்டியிலிருந்து சாக்லேட்டை எடுத்துத் தின்றிருப்பாளோ? அம்மா ஆனியை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே அடுக்களைக்குச் சென்றாள்.
நல்லவேளை ஆனியின் கால்கள்  நனைந்திருப்பதை அம்மா பார்க்கவில்லை.