Friday, 18 April 2025

மெகர்பா கோழியும் நீலகண்டன் குள்ளநரியும்.

 

மெகர்பா கோழியும் நீலகண்டன் குள்ளநரியும்.

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்



 

ஒரு நாள் நல்ல நிலா வெளிச்சம். நீலகண்டன் குள்ளநரி சுவரேறிக் குதித்தது. மெகர்பா கோழி இருக்கும் கூட்டுக்கு அருகில் போனது. மெகர்பா கண்களை மூடித் தூங்குவதை கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தது. எந்த சத்தமுமில்லை. நாய்க்குட்டி எங்கே உறங்குகிறது என்று தெரியவில்லை. கர்வம் பிடித்த நாய்க்குட்டி தோணுகிற இடத்தில் உறங்கும். அது முழித்து விட்டால் கடித்துக் கொன்றுவிடுவான்.

கண்ணை மூடித் தூங்குகிற மெகர்பா கோழியைப் பார்த்துப் பார்த்து குள்ளநரிக்கு வாயில் எச்சில் ஊறியது. என்ன அழகான கால்கள்! பொரித்த கோழிக்காலைக் கடித்துத் தின்பதில் என்ன ஒரு சுகம்!

நீலகண்டன் குள்ளநரி மெல்லப்பாடியது,

உன்னை யார் பார்த்தாலும் ஆசைவருமே கோழிப்பெண்ணே!

பிறகு ஏன் இன்றுவரை உன்னைக் கலியாணம் முடிக்க யாரும் வரவில்லை?”

மெகர்பா விழித்து விட்டது. தன்னுடைய கலியாணத்தைப் பற்றி நினைத்தபோது சோகம் வந்தது. நீலகண்டன் அண்ணன் சொல்வது சரிதான். அந்தப்பக்கத்தில் இருக்கும் சேவலுக்கு நான்கு மனைவிகள் இருக்கின்றன.

நீலகண்டன் குள்ளநரி இன்னும் கவனமாகப் பாடியது,

என்னுடன் நீ காடு சுற்றிப் பார்க்க வருகிறாயா கோழிப்பெண்ணே.. தோடு வாங்கலாம், மாலை வாங்கலாம்,, என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன்..”

நாய்க்குட்டி அருகில் இருந்த வைக்கோல் குவியலில் படுத்திருக்கிறது என்று இரண்டு பேருக்கும் தெரியாது. நாய்க்குட்டி விழித்தது. காது கொடுத்துக் கேட்டது. ஆகா! நீலகண்டன் குள்ள நரி தானே பாடுது...

மெகர்பா கோழி யோசித்துப் பார்த்தது. நீலகண்டன் குள்ளநரி பாடுவதிலும் அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது. தோடு ஒன்று வாங்கவேண்டுமென்று வெகுநாட்களாக ஆசை இருந்தது. கதைப்பாட்டியின் காதுகளில் அழகாகத் தொங்குகிற மாதிரி வேண்டும்.

மெகர்பா நீலகண்டனைப் பார்த்துப் பாடியது,

ஆலப்புழக்காரன் நீலகண்டன் மாமாவே நாளை எனக்கு ஒரு தோடு வேண்டும். தோடு வேண்டும். பிறகு தோடு வேண்டும் தோளில் தட்டுகிற மாதிரி தோடு வேண்டும். ஆச்சியும் நானும் கோவித்துக் கொள்ளும்போது கூடவே கோவித்து ஆடுகிற தோடு வேண்டும்..”

சரி.. வாங்கித் தருகிறேன்..” குள்ளநரிக்குத் தன்னுடைய தந்திரம் பலித்த மகிழ்ச்சியில் சொன்னது,

நீ வெளியே வா மெகர்பா.. நாம் காட்டைச் சுற்றிப் பார்க்கலாம்..”

நாய்க்குட்டி எழுந்தது. பாய்ந்து குள்ளநரியின் கழுத்தில் கடித்தது. குள்ளநரி ஊளையிட்டு அழுதது. கோழி, க்க்கோ க்க்கோ க்க்கோ..” என்று சத்தம் போட்டது. வீட்டுக்காரர்கள் விழித்து விளக்கைப் போட்டார்கள். பூனைக்குட்டி சீறிப் பாய்ந்து குள்ளநரியின் முதுகில் நகங்களால் கீறி விட்டது.

நீலகண்டன் குள்ளநரி ஓரே ஓட்டம் ஓடியது. ஆலமரத்துக்கு அருகில் கூடி ஓடும்போது கதைப்பாட்டியும் ஒரு அடி கொடுத்தாள்.

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

 


 


No comments:

Post a Comment