Tuesday 23 April 2019

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விடயங்கள் நமக்குத் தெரியவரும்.
2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.
3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.
4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.
5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம்  அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.
6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.
7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்
8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல்பார்வை உருவாகும்.
9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.
10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.
12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காக்கை குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.
13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப்பிரவகிக்கும்.
14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.
15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.
16.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும்.
17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.
18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.
19. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகினை மாற்றப் புரட்சி செய்யவும் அதற்காக ஆயுதம் ஏந்தவும் தோன்றும்.
20. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்! வாசியுங்கள்! வாசியுங்கள்!
உலக புத்தகதின வாழ்த்துக்கள்!

Monday 22 April 2019

குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?
1. விலங்குகள், பறவைகள், பூச்சிகள் முதல் மானுட சமூகம் வரை கூடி வாழ்தல் என்பது இயற்கையின் உள்ளுணர்வினால் விளைந்த செயல்பாடு.
2.  கூடி வாழ்தலில் தான் ஒரு சமூகம் உயிர்த்திருக்கிறது. கூடி வாழ்வதற்கான,  உளவியல் பயிற்சிகளை, குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாட்டின் மூலம் மானுட இனம் சமூகத்துக்குப் பயிற்றுவிக்கிறது.
3. விளையாட்டு குழந்தைகளின் மனதுக்கும், உடலுக்கும் உரமூட்டுவதாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாக சமூகத்தின் அங்கத்தினராக குழந்தைகள் உருவாக ஒவ்வொருவரையும் பண்படுத்துகிறது.
4. கூடி விளையாடும் விளையாட்டுகளில் குழந்தைகளின் மனம் களிப்புறுகிறது. எந்த கட்டுப்பாடுமின்றி தன்னைத் தானாகவே உணர்ந்து, தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்துகிறார்கள்.
5. புறஉலகின் எல்லா நெருக்கடிகளிலிருந்தும், பெற்றோர்களின், ஆசிரியர்களின், வீட்டுப்பாடச்சுமையின், மதிப்பெண் பூதங்களிலிருந்து விடுபட்டு தங்களுடைய இயல்பான படைப்பூக்க உணர்வை (CREATIVE) மீட்டெடுக்கவே குழந்தைகள் விளையாடுவதற்கு பேராவல் கொள்கின்றனர்.
6. படைப்பூக்க உணர்வை மீண்டும் மீண்டும் மீட்டெடுப்பதின் மூலம் கிடைக்கும் பரவசத்தை அனுபவிக்கவே விளையாடத் துடிக்கின்றனர்.
7. அத்துடன் சமூகத்தில் அவர்கள் இயைந்து வாழ விளையாட்டுகள் அவர்களை பண்படுத்துகிறது. தன் வயதொத்த குழந்தைகளோடு கூடி விளையாடும்போது கூட்டுச்செயல்பாட்டுக்கான விவேகமும், கூட்டுணர்வும் ஏற்படுகிறது.
8. கூடிச்சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்யும்போது  ஒரு தார்மீக நெருக்கமும், செய்யும் செயலில் அழகியலும் தோன்றுகிறது.
9. விளையாடும் கூட்டுச்செயல்பாட்டிலேயே தனித்துவம் காணும் தனிப்பாணியும் உருவாகிறது.
10. கூட்டுச் செயல்பாட்டை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பண்பும் குழந்தைகளிடம் இயல்பாகவே தோன்றுகிறது.
11. இந்தத் தலைமைப்பண்பின் தனித்தகுதியாக எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்கிற திறன் வளர்கிறது.
12. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பொறுமை, ஒருவரையொருவர் மதிக்கும் பண்பு, வளர்கிறது.
13. குழந்தைகளிடம் அன்பும், நட்பும் பெருகித் தழைக்கிறது. விளையாட்டுச் சண்டை என்பது விளையாட்டுச் சண்டையாகவே முடிந்து விடுகிறது.
14. குழந்தைகளால் நீண்ட நேரத்திற்குக் கோபத்தையும், வெறுப்பையும், கசப்பையும் வளர்க்க முடியாது. சிறிது நேரத்திலேயே பழம்விட்டு சேர்ந்து கொள்வார்கள். யார் பக்கம் நியாயம் என்று தர்க்கரீதியாக யோசிக்காமல் யார் அதிகமாகப் புண்பட்டிருக்கிறார்களோ, யார் அதிகம் வருத்தமடைந்திருக்கிறார்களோ அவர்களுக்காக விட்டுக்கொடுப்பார்கள்.
15. குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்து இயைந்து வாழ்கிற பண்பு விளையாட்டின் மூலமே கிடைக்கிறது. இதற்கேற்ப இருவர் விளையாடும் விளையாட்டுகளிலிருந்து பத்துபேர் விளையாடும் விளையாட்டுகள் வரை அந்தந்தக் கால தட்பவெப்ப நிலைமைகளுக்கேற்பவும், அந்தந்தப் பகுதி மண், வளம், வாய்ப்புகளுக்கேற்பவும் இருக்கின்றன.
16.  கிட்டிப்புள், கோலி, பம்பரம், கண்ணாமூச்சி, கிளியாந்தட்டு, தாச்சி, ஓடு அடுக்குதல், எறி பந்து, கல்லாமண்ணா, பாண்டி, கள்ளன்போலீசு, கபடி, மரம் ஏறுதல், பச்சைக் குதிரை, செதுக்குமுத்து, குலைகுலையா முந்திரிக்கா, போன்ற ஓடி ஆடும் விளையாட்டுகளும், தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், ஆடுபுலி, ஒத்தையா ரெட்டையா, போன்ற உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளுமாய் எத்தனை எத்தனை விளையாட்டுகள்! காலத்திற்கும், பருவத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ற மாதிரியான உள்விளையாட்டுகள் என்று விளையாட்டுகளை வகை வகையாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இப்போது காணவில்லை.
17. மேலே குறிப்பிடப்பட்ட விளையாட்டுகள் எதுவும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில்லை. ஆனால் பெரிய அளவில் பொருளாதார வசதி தேவைப்படாத விளையாடுபவர்களின் நோக்கத்திற்கு ஏற்றபடியெல்லாம் வளைந்து கொடுக்கக்கூடிய விளையாட்டுகள்.
18. விளையாட்டுகளில் ( உள்விளையாட்டாக இருந்தாலும் சரி, வெளிவிளையாட்டாக இருந்தாலும் சரி) ஏற்படும் வெற்றி, தோல்விகள், குழந்தைகள் மனதில் நீண்டகாலம் நிற்பதில்லை. அவை குழந்தைகளின் மனதை பிற்கால சமூகவாழ்க்கைக்குத் தயார்படுத்துகின்றன.
19. விளையாட்டுகள் லட்சியவெறியையும், விடாப்பிடியான மனநிலையையும் கூட உருவாக்குகின்றன.
20. விளையாட்டின் வெற்றி, தோல்விகளை ருசித்துப்பழக்கப்பட்ட குழந்தைகள் சமூகவாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனைப் பெறுகின்றனர்.
21. தற்கொலை, வன்முறைச்சிந்தனை, தலைதூக்காமல் தடுக்க விளையாட்டு உதவுகிறது.
22. மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற வீடியோ கேம்ஸிலும், கம்யூட்டர் கேம்ஸிலும் உள்ள பிரத்யேகமான தன்மை குழந்தை தன்னைப்போன்ற இன்னொரு குழந்தையோடு விளையாடுவதைத் தடுக்கிறது. அது பிரதிமையோடு விளையாடத் தூண்டுகிறது.
23. அந்தக் காட்சிப் பிரதிமைகள் எப்படி இருக்கின்றன? கார்பந்தயம், வேட்டையாடுதல், பைக் ஓட்டுதல் போன்ற குழந்தையின் மனநிலைக்கும், யதார்த்தத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லாத விளையாட்டுகளே குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.
24. அந்த விளையாட்டுகளில் எந்தக் கூட்டுச் செயல்பாடும் இல்லை. விட்டுக்கொடுத்தல் இல்லை. தலைமைப்பண்பு தேவையில்லை. அன்போ, நட்போ, பாசமோ, தேவையில்லை. அதில் ஒரே குறிக்கோள் தான். வெற்றிபெறவேண்டும் நிறைய்ய பாயிண்டுகள் எடுக்கவேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். தனிமையில் விளையாடும் இந்த விளையாட்டு குழந்தையிடம் பிடிவாதத்தை வளர்க்கிறது. சுயநலவெறியை கிளப்புகிறது. வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை வளர்க்கிறது.
25. கார் பந்தயம் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை எதிர்ப்படும் தடைகளை முறியடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறான். சாலையோரத் தடுப்பைத் தகர்க்கிறான். விளக்குக் கம்பங்களை வீழ்த்துகிறான். எந்த சிக்னலையும் மதிக்காமல் விரைகிறான். குறுக்கே எதிர்ப்படும் எவரையும் காரை ஏற்றிக் கொல்கிறான். சில நேரம் பிளாட் பாரத்தில் நடந்து போய் கொண்டிருப்பவர்கள் மீதும் காரை ஏற்றுகிறான். அது பிரதிமையே என்றபோதிலும் குழந்தையின் முகத்தில் ஒரு ஆபத்தான தீவிரமும், வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியையும்.ஏற்படுத்துகிறது.
26. பெற்றோர்கள் தலையிடாமல் இருந்தால் விளையாட்டின் மூலம் குழந்தைகளிடம் நம்நாட்டின் விஷவிருட்சமான சாதியின் சல்லிவேர் இற்றுவிழும்.

27. எதிர்கால சமூகத்தின் பிரதிநிதிகளான இன்றையக்குழந்தைகளை விளையாட விடுங்கள். அப்போது தான் நலமான சமூகம் உருவாகும்.

Saturday 20 April 2019

குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும்?

குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும்?
1. கதைகள் குழந்தைகளின் படைப்பூக்கத்தை தூண்டுகிறது.
2. கதையின் புனைவு குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்கிறது.
3. குழந்தைகள் அறிந்திராத ஒரு புதிய உலகம் கதைகளில் விரியும்போது குழந்தைகள் அதைப் பற்றி புரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
4. கதைகளில் வருகிற கதாபாத்திரங்கள் படுகிற துன்பமோ, இன்பமோ, கஷ்டமோ, நஷ்டமோ, மகிழ்ச்சியோ, குழந்தைகளையும் கற்பனையாகப் பாதிக்கிறது. அப்போது குழந்தைகள் உளவியல் ரீதியாக இன்பதுன்பங்களைப் பற்றிய உணர்வுபோதம் அடைகிறார்கள்.
5. குழந்தைகள் கதை கேட்கும்போதோ வாசிக்கும்போதோ கதைகளில் வருகிற கதாபாத்திரங்களாக தங்களை சில நிமிடங்களுக்கேனும் வாழ்கிறார்கள். கதை சொல்லும்போதோ, வாசிக்கும்போதோ குழந்தைகளின் முகத்தைப் பாருங்கள். உணர்ச்சி வெள்ளத்தில் இருக்கும்.
6. கதைகளில் கதாபாத்திரங்கள் அநுபவிக்கும் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, நகைச்சுவை, கேலி, கிண்டல், எல்லாவற்றையும் கற்பனையில் குழந்தைகள் அநுபவித்து விடுவதால் குழந்தைகள் உள்வியல்ரீதியாக பலம் பெறுகிறார்கள்.
7. யதார்த்த உலகில் அவர்கள் உணர்ச்சிப்பாதிப்புகளுக்கு ஆளானாலும் அவர்களது இந்தக் கற்பனைஅநுபவம் அவர்களை ஆற்றுப்படுத்தும்.
8. கதைகள் யதார்த்த உலகின் ஏற்றத்தாழ்வுகள், அழுத்தங்களுக்கு எதிராக ஒரு உளவியல் சமநிலையைத் தருகின்றன.
என்ன இருந்தாலும் இது பெரியவர்களின் உலகம். அவர்களது அனைத்து விருப்பங்களுக்கும் அநுசரித்துப்போக வேண்டிய அழுத்தத்தில் குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த அழுத்தத்தை ரிலீஸ் செய்யும் சாதனங்களாக கதைகள் இருக்கின்றன.
9. புதிய வீட்டில் என் அருகில் வராமலேயே இருந்த ஒரு குழந்தை நான் கதை சொல்லச்சொல்ல மெல்ல மெல்ல அருகில் வந்து என் மீது சாய்ந்து, அப்படியே மடியில் படுத்து உறங்கிவிட்டது. கதைகளுக்கு அத்தனை வலிமை இருக்கிறது.
10. 1930 களில் பள்ளிக்கல்விமுறையில் புதியமாற்றங்களைக் கொண்டுவரத் திட்டங்கள் தீட்டியிருந்த கிஜூபாய் பகேகே எழுதிய பகல் கனவு அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அதில் வரும் ஆசிரியர் லட்சுமிசங்கர் அடங்காத அவரது வகுப்பு மாணவர்களை தினம் கதை சொல்லியே வசப்படுத்துவார்
11. குழந்தைகளின் உலகம் உற்சாகமானது. உணர்ச்சிமிக்கது. எல்லாவற்றையும் நம்பத்துடிப்பது. அதனால் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளில் கவனம் தேவைப்படுகிறது.
12. மூடநம்பிக்கைகள் நிறைந்த கதைகள், சகுனம், ராசி, சடங்குகள், முனிவர்கள், யாகங்கள், சாபங்கள், வரங்கள், பேய், பிசாசு, ரத்தக்காட்டேரிகள், முனி, போன்ற அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும், புறம்பான கதைகளைச் சொல்லக்கூடாது. ஏன் சொல்லக்கூடாதென்றால், குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும் அபாயமும், எல்லோருக்கும் பணிந்துபோகும் அடிமைமனமும், எதைக்கண்டும் பயப்படும் குணமும் குழைந்தகளின் ஆழ்மனதில் படிந்துவிடும் ஆபத்து இருக்கிறது.
13. குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளில் மகிழ்ச்சியான முடிவுகள் இருக்கும் கதைகளையே அதிகமாகச் சொல்லவேண்டும். அது அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும்.
14. 3 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு வண்ணப்படங்களும் மிகக்குறைந்த பெரிய எழுத்துகளும் கொண்ட புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கவேண்டும். கதைகள் சொல்லவும், பாடல்களைப்பாடவும் வேண்டும்.
15. 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு படங்கள் நிறைந்த எழுத்துகளும் நிறைந்த கதைப்புத்தகங்களை வாங்கிக்கொடுக்க வேண்டும். கதைகளைச் சொல்லவேண்டும்.
16. 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாகசக்கதைகள், லட்சியக்கதைகள், அறிவியல் கதைகள், பகுத்தறிவுக்கதைகள், துப்பறியும் கதைகள், கட்டுரைப்புத்தகங்கள், வாங்கிக்கொடுக்கவேண்டும். வாசிப்பில் சிரமம் இருந்தால் வாசித்துக்காட்ட வேண்டும்.
17. மாதம் ஒரு புத்தகமாவது குறைந்தது 100 ரூபாய்க்காவது வாங்கிக் கொடுக்கவேண்டும்.
பள்ளிக்கூடத்தில் என்னகேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் மிகச்சரியாகக் கொடுத்து விடும் பெற்றோர்கள் கதைப்புத்தகங்கள் வாங்கித் தருவதற்கு அப்படி யோசிக்கிறார்கள். சென்னைப் புத்தகக்கண்காட்சியில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
18. பள்ளியிலிருந்து வெளிவரும் குழந்தைகள் ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ, பல்துறை அறிஞர்களாகவோ வெளிவரலாம். அவர்களை இந்த சமூகத்தின் மனிதர்களாக மாற்றுகிற வல்லமை கதைகளுக்கு உண்டு

19. சுருக்கமாகச்சொல்லப்போனால் கதைகள் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என்று சொல்கிற உளவியல் பயிற்சிகள்.

Thursday 18 April 2019

குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்.


குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்.


1.
வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் கிடக்க வேண்டும்.
2.
அம்மா அல்லது அப்பா தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.
3.
குழந்தைகளிடம் உரையாடிக்கொண்டே வாசிப்பது நல்லது.
4.
புத்தகங்களை வாசித்துக்கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.
5. கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டு கதை சொல்லவேண்டும்.
6. அப்படிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டு விட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப்புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.
7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்டவோ மிரட்டவோ கூடாது.
8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.
9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ தாங்கள் சின்னவயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்துக்கொண்டு சொல்லவேண்டும்.
10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது. குழந்தைகளை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருக்கக்கூடாது.
11. குழந்தைகள் தமிழ் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.
12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின்ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப்பத்திரிகைகளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக்கொண்டேன்.
13. பள்ளியில் இருந்த நூலகவகுப்பு, நீதிபோதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக்கதைகள் என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கியது.
14. என்னுடைய நண்பர்கள் புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்கவும், பதுக்கவும், திருடவும்கூட செய்யவைத்தது.
15. விளையாட்டு சாமான்களை தயக்கமில்லாமல் வாங்கிக்கொடுப்பதைப் போல புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும் அந்தப்புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அல்மாரியில் சிறு இடம் ஒதுக்கிக்கொடுக்கவும் வேண்டும்.
16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன்வைத்து குழந்தைகளிடம் சிறு முகம் சுளிப்பைக்கூட காட்டக்கூடாது.
17. தினமும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு அப்படியொரு டார்லிங் ஆகிவிடுவீர்கள்.
18. கதைகள் அத்தனை வலிமையானவை. மனிதமனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.