Wednesday 9 October 2013

கடவுளின் மனிதன்

 

சாதத் ஹசன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

Saadat_hasan_manto

சௌத்ரிமௌஜூ அவனுடைய ஹூக்காவைப் புகைத்துக் கொண்டு இலைகள் அடர்ந்த ஒரு அரசமரத்தின் கீழ் ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தான். உச்சிப்பொழுது வெப்பமாயிருந்தது. ஆனால் வயல்களிலிருந்து வீசிய மெல்லிய தென்றல் ஹூக்காவின் ஊதா நிறப்புகையைக் கலைத்து விசிறியடித்தது.

அவன் அதிகாலையிலிருந்தே அவனுடைய வயலை உழுது கொண்டிருந்தான். ஆனால் இப்போது சோர்ந்து போய்விட்டான். சூரியன் சுட்டெரித்தான். ஆனால் அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. அவன் கிடைத்த அந்த ஓய்வை அநுபவித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய ஒரே மகளான ஜீனா அவனுடைய மதிய உணவான சுட்டரொட்டியும் மோரும் கொண்டு வருவதை எதிர்பார்த்து அவன் அங்கே உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான். வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லையென்றாலும் அவள் எப்போதும் நேரத்திற்கு வந்து விடுவாள். அவன் ஒரு கோபாவேசத்தில் அவளுடைய அம்மாவை இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டான்.

ஜீனா அப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்கிற கீழ்ப்படிதலுள்ள மகளாக இருந்தாள். அவள் ஒருபோதும் சும்மா இருந்ததில்லை. அவளுடைய வீட்டு வேலைகள் முடிந்து விட்டால் அவள் கை ராட்டினத்தில் நூல் நூற்கும் வேலையைச் செய்வாள். எப்போதாவது தான் அவளுடைய தோழிகளிடம் கதை பேசப்போவாள்.

சௌத்ரிமௌஜூக்கு அதிக நிலம் இல்லை. ஆனால் அவனுடைய எளிய தேவைகளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அந்தக் கிராமம் சிறியது. பல மைல் தூரத்தில் ரயில்நிலையம் இருந்தது. அந்த கிராமத்தை ஒரு மண்சாலை தான் இன்னொரு கிராமத்தோடு இணைத்தது. அதில் தான் சௌத்ரிமௌஜூ மாதம் இரண்டு முறை பலசரக்கு வாங்கப் போவான்.

அவன் மகிழ்ச்சியானவனாகவே எப்போதும் இருந்தான். ஆனால் அவனுடைய விவாகரத்திலிருந்து அவனுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்கிற விஷயம் அவனைத் தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. இருந்தாலும் அவன் சிறந்த மதப்பற்றாளனாக இருந்ததால் இதெல்லாம் கடவுளின் சித்தம் என்று தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு சமாளித்தான்.

அவனுடைய நம்பிக்கை ஆழமானது. ஆனால் அவனுக்கு மதத்தைப் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் இருக்கிறார், அவரை வணங்க வேண்டும். முகமது அவருடைய தீர்க்கதரிசி. குரான் முகமதுக்குக் கடவுள் வெளிப்படுத்திய செய்தி. அவ்வளவு தான் அவனுக்குத் தெரியும்.

அவன் ஒருபோதும் நோன்பு இருந்ததில்லை. தொழுகை நடத்தியதில்லை. உண்மையில் அந்த கிராமம் மிகச் சிறியது என்பதால் அதில் ஒரு மசூதி கூட இல்லை. மக்கள் தங்கள் வீடுகளில் தொழுதனர். பொதுவாகவே கடவுளுக்குப் பயந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குரான் ஒரு பிரதி இருந்தது. ஆனால் யாருக்கும் அதை எப்படி வாசிப்பது என்று தெரியாது. அது வீட்டிலுள்ள மேலடுக்கில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எப்போதாவது யாராவது உறுதிமொழி எடுக்க வேண்டி வரும்போது பயன்படுத்தப்படும்.

திருமணங்களில் சடங்குகளை நடத்துவதற்காக ஒரு மௌல்வியை அந்தக் கிராமத்துக்கு வரவழைப்பார்கள். இறுதிச் சடங்குப் பிரார்த்தனைகளை கிராமத்துக்காரர்களே செய்து விடுவார்கள். அரபியில் இல்லை. அவர்களுடைய சொந்த மொழியான பஞ்சாபியில் பிரார்த்தனை செய்வார்கள். சௌத்ரிமௌஜூக்கு அந்த மாதிரியான நேரங்களில் கிராக்கி அதிகமாக இருக்கும். அவன் அவனுக்கென்று சுயமாக அஞ்சலி உரையை உருவாக்கிக் கொள்வான்.

உதாரணத்திற்கு,ஒரு வருடத்துக்கு முன்னால் அவனுடைய நண்பன் டினூ தன் மகனை இழந்து விட்டான். சௌத்ரிமௌஜூ கல்லறைக்குள் பிரேதத்தை இறக்கிய பிறகு கிராமத்தார்களிடம் இரங்கல் உரையை நிகழ்த்தினான்.

எப்பேர்ப்பட்ட அழகான, பலசாலியான இளைஞன் அவன்! அவன் எச்சிலைத் துப்பினால் அது இருபது அடி தூரம் தள்ளி விழும். அதேபோல அவனுடைய அடிவயிற்றில் அவ்வளவு சக்தி இருந்தது. அதனால் அவனால் இந்தக் கிராமத்திலிருக்கிற எந்த இளைஞனை விடவும் மிகத் தூரமாக மூத்திரம் பெய்ய முடியும். மல்யுத்தப்போட்டியில் அவன் ஒருபோதும் தோற்றதில்லை. நீங்கள் சட்டை பொத்தானைக் கழட்டுகிற மாதிரி அவன் எதிரியின் பிடியிலிருந்து மிகச் சுலபமாகத் தன்னை விடுவித்துக் கொள்வான்.

டினூ என் நண்பனே! உனக்கான தீர்ப்பு நாள் ஏற்கனவே இங்கே எழுதப்பட்டு விட்டது. நீ அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் சந்தேகப்படுகிறேன். நீ கட்டாயம் இறந்து விடுவாய் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு நீ எப்படி வாழப்போகிறாய்? ஓ….எத்தனை அழகிய வாலிபன் உன்னுடைய மகன்! எனக்கு உண்மையில் தெரியும் தங்க ஆசாரியின் மகள் நெட்டி அவனுடைய காதலைப் பெறுவதற்காகப் பலமுறை வசிய மந்திரத்தை ஏவினாள். ஆனால் அவன் அவளை நிராகரித்து விட்டான். அவளுடைய அழகும் இளமையும் அவனை மயக்கவில்லை. கடவுள் சொர்க்கத்தில் அவனுக்கு ஒரு எழில் அணங்கை வழங்கட்டும். அங்கும் அவன் தங்க ஆசாரியின் மகள் நெட்டியிடம் இருந்ததைப் போலவே அந்த எழில் அணங்கிடம் மயங்காமல் இருக்கட்டும். கடவுள் அவன் ஆத்மாவை ஆசீர்வதிக்கட்டும்.

இந்தச் சுருக்கமான உரையை மிக உணர்ச்சிகரமாக நிகழ்த்துவான். சௌத்ரிமௌஜூ உட்பட எல்லோருக்கும் அழுது விடுவார்கள்.

மௌஜூ அவனுடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்த போது அவன் மௌல்விக்கு ஆளனுப்பவில்லை. அவனுக்கு மூத்தவர்களிடமிருந்து அவன் கேள்விப்பட்டிருந்தான். அதற்குத் தேவையானதெல்லாம் அவன் மூன்று முறை ‘ தலாக்…தலாக்…தலாக்..’ என்று சொல்ல வேண்டியது தான். உண்மையில் அதைத் தான் அவன் செய்தான். மறுநாள் அவன் வருத்தப்பட்டான். அதோடு அவனை நினைத்தே அவன் வெட்கப்பட்டான். கணவன், மனைவிக்குள் வருகிற தினசரிச் சச்சரவுக்கு மேல் பெரிய தீவிரமான எதுவும் அதில் கிடையாது. அது விவாகரத்தில் முடிய வேண்டிய அவசியமும் இல்லை.

அவனுடைய மனைவி பதானை அவன் விரும்பவில்லை என்று சொல்லமுடியாது. அவன் அவளை விரும்பினான். அவள் இளமையாக இல்லையென்றாலும் அவள் உடம்பு கட்டுக்கோப்பாக இருந்தது. அதோடு அவனுடைய மகளுக்குத் தாய் அவள். இதற்கு மேல் என்ன வேண்டும். ஆனால் அவன் அவளைத் திரும்பி அழைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

ஜீனா அவளுடைய அம்மா இளமையில் இருந்ததைப் போலவே அழகாக இருந்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் இரண்டு வருடங்களில் இளமையான, கவர்ச்சியான, பெண்ணாக, வளர்ந்திருந்தாள். அவன் அடிக்கடி அவளுடைய திருமணத்தைப் பற்றிக் கவலைப்பட்டான். குறிப்பாக அந்த நேரங்களில் அவனுடைய மனைவியைத் தேடுவான்.

அவன் இப்போது அவனுடைய கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து கொண்டு இன்பமாகப் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது

“ கடவுளின் ஆசீர்வாதங்களும், சாந்தியும் உன் மீது இறங்கட்டும்…”

என்ற குரல் கேட்டது.

அவன் திரும்பினான். அங்கே ஒரு வயதான மனிதர் தூய வெள்ளாடை உடுத்தி காற்றில் அலைபாயும் தாடியுடன், தோள்வரை வளர்ந்த நீண்ட தலைமுடியுடன், நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். எங்கேயிருந்து அவர் முளைத்து வந்தார் என்று ஆச்சரியத்துடன் மௌஜூ அவரை வணங்கினான்.

அந்த மனிதர் உயரமாக இருந்தார். அவருடைய முகத்தில் பெரிய கருப்பிந்திய கண்கள் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தன.அவர் தலையில் ஒரு பெரிய வெள்ளைத் தலைப்பாகையும் அவருடைய ஒரு தோளில் மஞ்சள் துண்டும் அணிந்திருந்தார்.அவருடைய கையில் வெள்ளிப்பிடி போட்ட கைத்தடி வைத்திருந்தார். அவருடைய பூட்ஸ் மென்மையான தோலால் செய்யப்பட்டிருந்தது.

சௌத்ரிமௌஜூ உடனே அவரால் கவரப்பட்டான். இன்னும் சொல்லப்போனால் அவருடைய அழுத்தமான பெரியமனிதத் தோற்றத்தினால் அவனுக்கு வியப்பு விளிம்பிட்ட ஒரு ஆழ்ந்த மரியாதை அவர் மீது தோன்றியது. அவன் கட்டிலிலிருந்து எழுந்து,

“ நீங்கள் எங்கிருந்து எப்போது வந்தீர்கள்?”

என்று கேட்டான்.

அந்த மனிதர் புன்முறுவலோடு,

“ நாங்கள் கடவுளின் மனிதர்கள் சூன்யத்திலிருந்து வருவோம்.. எங்களுக்கு போவதற்கு வீடு கிடையாது. எந்தக் கணத்தில் வருவோம்.. எப்போது போவோம் என்று யாருக்கும் தெரியாது.. அந்தக் கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற எங்களுக்கு வழி காட்டுவார்.. அதேபோல அந்தக் கடவுள் தான் எங்களுடைய பிரயாணத்தை எங்கே நிறுத்தவேண்டும் என்றும் கட்டளையிடுவார்..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூவை இந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. அவன் அந்தப் புனிதரின் கையைப் பிடித்து மிகுந்த மரியாதையுடன் முத்தமிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்பு,

“ என்னுடைய எளிய வீடு உங்களுடையது..”

என்று சொன்னான்.

அந்தப் புனிதர் புன்னகையுடன் கட்டிலில் உட்கார்ந்தார். அவருடைய இரண்டு கைகளாலும் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு அதில் தலை சாய்த்துக் கொண்டு,

“ உன்னுடைய எந்தக் காரியம் கடவுளின் கண்களுக்குப் பிடித்து அவர் இந்தப் பாவியை உன்னிடம் அனுப்பியிருக்கிறார் என்று யார் சொல்ல முடியும்? “

என்று சொன்னார். உடனே சௌத்ரிமௌஜூ,

“ மௌல்வி சாகிப்.. நீங்கள் கடவுளின் ஆணைப்படியா என்னைத் தேடி வந்தீர்கள்?”

என்று கேட்டான். அந்தப் புனிதர் தலையை உயர்த்தி கோபமான குரலில்,

“ அப்படின்னா உன்னுடைய கட்டளையின் பேரில் இங்கே வந்தேன் என்று நினைக்கிறீயா.. உனக்குக் கீழ்ப்படிவோமா இல்லை நாப்பது வருடங்களாக பணிவுடன் அந்தக் கடவுளைத் தொழுது வந்ததிருக்கிறோம். கடைசியில் அவர் அவருடைய அருளைப் பெற எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அவருக்குக் கீழ்ப்படிவோமா?..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூ பயந்து விட்டான். அவனுடைய எளிய கிராமத்துப் பாணியில் அவன் தேம்பிக் கொண்டே,

“ மௌல்வி சாகிப் நாங்கள் படிப்பறிவில்லாத மக்கள் இதைப்பற்றியெல்லாம் எதையும் அறியாதவர்கள்.. எங்களுக்கு எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாது..உங்களைப் போன்ற கடவுளின் மனிதர்கள் கிடையாது.. அதனால் கடவுளின் கண்களில் பாவமன்னிபை நாங்கள் பார்த்ததேயில்லை..”

என்று சொன்னான்.

“ அதற்காகத் தான் நாம் இங்கிருக்கிறோம்..”

என்று அந்தப் புனிதர் பாதிக்கண்களை மூடிக் கொண்டே சொன்னார்.

சௌத்ரிமௌஜூ கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு விருந்தினரின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஜீனா அவனுடைய சாப்பாட்டுடன் அங்கு வந்தாள். அவள் அந்த அந்நியரைப் பார்த்தவுடன் அவளுடைய முகத்தை மூடிக் கொண்டாள்.

“ யார் அது சௌத்ரிமௌஜூ? “

“ என்னுடைய மகள்..மௌல்வி சாகிப்..”

மௌல்வி சாகிப் ஓரக்கண்ணால் ஜீனாவைப் பார்த்துக் கொண்டே,

“ எங்களைப் போன்ற பிச்சைக்காரங்க முன்னால ஏன் அவள் முகத்தை மூடணும்னு கேளு..”

என்று சொன்னார்.

“ ஜீனா.. மௌல்வி சாகிப் கடவுளோட விஷேசத் தூதுவர்.. முக்காட்ட எடுத்துரு..”

என்று அவன் சொன்னான். ஜீனா அவளிடம் சொல்லப்பட்டதைச் செய்தாள். மௌல்வி சாகிப் அப்படியே அவளை மேலும் கீழும் அளவெடுத்துக் கொண்டே,

“ உன்னோட மகள் அழகாக இருக்கிறாள்..சௌத்ரிமௌஜூ..”

என்று சொன்னார். ஜீனா வெட்கப்பட்டாள். மௌஜு,

“ அவள் அவளோட அம்மா மாதிரி..”

என்று சொன்னான். ஜீனாவின் இளமை பொங்கும் கன்னியுடலை நோட்டமிட்டுக் கொண்டே,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். அதற்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியாமல் சௌத்ரிமௌஜூ தயங்கினான். திரும்பவும் மௌல்வி சாகிப்,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். மௌஜூ வேகவேகமாக,

“ அவ இறந்துட்டா..”

என்று சொன்னான். அதைக்கேட்டு திடுக்கிட்ட ஜீனாவைக் கவனமாகப் பார்த்தார். பிறகு அவர்,

“ நீ பொய் சொல்றே..”

என்று முழங்கினார். மௌஜூ அவர் காலில் விழுந்தான். குற்றவுணர்ச்சியுடன்,

“ ஆமாம். நான் உங்க கிட்ட பொய் சொன்னேன்..தயவு செய்ஞ்சு என்ன மன்னிச்சிருங்க.. நான் ஒரு பொய்யன்.. உண்மை என்னன்னா.. நான் அவளை விவாகரத்து பண்ணிட்டேன்..மௌல்வி சாகிப்..”

என்று சொன்னான்.

“ நீ ஒரு பெரிய பாவி.. அந்தப் பெண் செய்த தவறு தான் என்ன? “

“ எனக்குத் தெரியல..மௌல்வி சாகிப்.. அது வந்து உண்மையிலே ஒண்ணுமில்லை..ஆனா கடைசியில அவளை விவாகரத்து செய்யும்படியாயிருச்சி.. உண்மையில நான் ஒரு பாவி.. நான் மறுநாளே என்னோட தப்ப உணர்ந்துட்டேன்.. ஆனால் ரெம்பத் தாமதமாகியிருச்சி..அதுக்குள்ளே அவ அவளோட அப்பாஅம்மாகிட்ட போயிட்டா..”

மௌல்வி சாகிப் தன்னுடைய வெள்ளிக் கைப்பிடி போட்ட கைத்தடியினால் மௌஜூவின் தோள்களைத் தொட்டு,

“ கடவுள் பெரியவர்.. அவர் கருணையும் அன்பும் கொண்டவர்.. அவர் விரும்பினால் எல்லாத் தவறுகளையும் சரி செய்து விடலாம்.. அது தான் அவருடைய கட்டளையாக இருந்தால் அவருடைய இந்த வேலைக்காரன் உன்னை உன்னுடைய மீட்சியை நோக்கி வழி நடத்தவும் உனக்கு மன்னிப்பு வழங்கவும் சக்தி படைத்தவனாகிறான்..”

என்று சொன்னார். முழுமையான பணிவுடனும் நன்றியுடனும் சௌத்ரி மௌஜூ அவருடைய கால்களில் விழுந்து அழுதான். மௌல்வி சாகிப் ஜீனாவைப் பார்த்தார். அவளுடைய கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

“ இங்கே.. வா..பெண்ணே..” என்று கட்டளையிட்டார் அவர்.

அவருடைய குரலில் அப்படியோரு அதிகாரம் இருந்தது. அவளால் அதற்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியவில்லை.அவள் சாப்பாட்டை ஓரமாக வைத்து விட்டு அவரை நோக்கி நடந்தாள். மௌல்வி சாகிப் அவளுடைய கைகளைப் பற்றி இழுத்து,

“ உட்கார்..”

என்று சொன்னார்.

அவள் கீழே தரையில் உட்காரப்போனாள். ஆனால் மௌல்வி சாகிப் அவளை அவர் பக்கமாக இழுத்து,

“ என் பக்கத்தில இங்கே உட்கார்..”

என்று உத்தரவிட்டார். ஜீனா உட்கார்ந்தாள். மௌல்வி சாகிப் அவருடைய கைகளால் அவளுடைய இடுப்பைச் சுற்றி வளைத்து அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டே,

“ சரி.. எங்களுக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்..? ”

என்று கேட்டார். ஜீனா விலக நினைத்தாள். ஆனால் மௌல்வி சாகிப்ப்பின் பிடி கிடுக்கிப் பிடியாக இருந்தது.

“ சுட்ட ரொட்டியும் மோரும் கொஞ்சம் கீரையும் கொண்டு வந்திருக்கேன்..”

என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். மௌல்வி அவளுடைய மெல்லிய இடையை மறுபடியும் ஒரு தடவை பிசைந்தார். பின்பு,

“ அப்படியா..போ.. போய் அதைக் கொண்டு வந்து எங்களுக்குச் சாப்பாடு போடு..”

ஜீனா எழுந்தவுடன் மௌல்வி சாகிப் தன்னுடைய கைத்தடியினால் மௌஜூவின் தோள்களில் மெல்லத் தட்டி,

“ மௌஜூ.. என்னுடைய கைகளைக் கழுவ உதவி செய்..”

மௌஜூ அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்றான். ஒரு வாளியில் நல்ல தண்ணீரைக் கொண்டு வந்தான். ஒரு உண்மையான சிஷ்யனைப் போல அவன் மௌல்வி சாகிப் அவருடைய கைகளைக் கழுவ உதவினான். ஜீனா உணவை அவருக்கு முன்னால் வைத்தாள்.

மௌல்வி சாகிப் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார். பின்பு அவர் அவருடைய கைகளைக் கழுவத் தண்ணீர் ஊற்றும்படி ஜீனாவுக்கு ஆணையிட்டார். அவள் கீழ்ப்படிந்தாள். அவருடைய செய்கையில் அப்படி ஒரு அதிகாரம் இருந்தது.

மௌல்வி சாகிப் சத்தமாக ஏப்பமிட்டார். அதை விட சத்தமாக கடவுளுக்கு நன்றி சொன்னார். ஈரக்கைகளால் அவருடைய தாடியைக் கோதி விட்டுக் கொண்டே கட்டிலில் சாய்ந்தார். ஒரு கண்ணால் ஜீனாவையும், இன்னொரு கண்ணால் அவளுடைய அப்பாவையும் கவனித்தார். அவள் சாப்பாட்டுப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போனாள். மௌல்வி சாகிப் மௌஜூவிடம்,

“ சௌத்ரி.. நாம் சற்று ஓய்வெடுக்கப் போகிறோம்..”

என்று சொன்னார்.

சௌத்ரி அவருடைய கால்களையும் பாதங்களையும் கொஞ்சநேரம் அமுக்கி விட்டான். அவர் உறங்கிவிட்டார் என்பதை உறுதிசெய்த பிறகு அங்கிருந்து நகர்ந்து அவனுடைய ஹூக்காவை பற்ற வைத்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். அவனுடைய நெஞ்சிலிருந்து மிகப்பெரிய பாரத்தை அகற்றியது போல அவன் உணர்ந்தான். அவனுக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளால் கருணையின் தேவர்களில் ஒருவரை மௌல்வி சாகிப்பின் வடிவில் கடவுள் அவனிடம் அனுப்பி வைத்தற்காக இதயபூர்வமாக நன்றி சொன்னான்.

மௌல்வி சாகிப் ஓய்வெடுப்பதையே சற்று நேரம் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவனுடைய வயலுக்கு வேலை செய்யப் போனான். அவனுடைய பசி கூட அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் மௌல்வி சாகிப்புக்கு உணவளிக்கும் கௌரவமே அவனுக்குப் பெரிய விஷயமாக இருந்தது.

மாலையில் அவன் வேலை முடிந்து திரும்பியபோது மௌல்வி சாகிப் அங்கில்லாதது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவன் அவனையே சபித்துக் கொண்டான். அந்த இடத்தை விட்டு போய் அவன் கடவுளின் மனிதரை அவமானப்படுத்தி விட்டான். ஒருவேளை போவதற்கு முன்னால் அவர் அவனைச் சபித்து விட்டும் போயிருக்கலாம். அவன் பயத்தில் நடுங்கினான். கண்ணீர் அவனுடைய கண்களில் குளமாய் கட்டியது.

அவன் கிராமத்தில் மௌல்வி சாகிப்பைத் தேடிப்பார்த்தான். ஆனால் அவரைக் காணவில்லை. மாலை இரவினுள் மூழ்கிக் கொண்டிருந்தது. ஆனால் மௌல்வி சாகிப்பைப் பற்றி ஒரு துப்பும் தெரியவில்லை. அவனுடைய வீட்டை நோக்கி ஏதோ இந்த உலகத்தையே அவனுடைய தோள்களில் சுமப்பதைப் போல அவன் தலையைக் குனிந்து கொ்ண்டே நடந்தான். கிராமத்திலிருந்து இரண்டு இளைஞர்களை அவன் எதிர்கொண்டான். அவர்கள் பயந்து போயிருந்தார்கள். முதலில் அவர்கள் என்ன நடந்ததென்று சொல்லவில்லை. அவன் வற்புறுத்திக் கேட்டபிறகே அவர்களுடைய கதையைச் சொன்னார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் அவர்கள் கடுமையான நாட்டுச்சாரயத்தைக் காய்ச்சி வடித்து மண்பானையில் ஊற்றி ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தார்கள். அன்று மாலை அவர்கள் அந்த இடத்துக்குப் போனார்கள். அவர்களுடைய விலக்கப்பட்ட செல்வத்தைத் தோண்டியெடுத்தார்கள். அதைக் குடிக்கப்போகும் சமயம் ஒரு வயதான மனிதர் ஒரு விசித்திரமான ஓளி முகத்தில் வீச திடீரென அந்த இடத்தில் பிரசன்னமாகி அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்.

அவர்கள் செய்யவிருந்த பாவச்செயலுக்காக அவர்களைக் கடுமையாக ஏசினார். கடவுளே மனிதர்கள் தொடவேக்கூடாது என்று விலக்கிவைத்திருந்ததைக் எப்படி அவர்கள் குடிக்க நினைக்கலாம் என்று கேட்டார். அவர்கள் திகிலடைந்துபோய் அந்த இடத்தை விட்டு மண்பானையை அங்கேயே விட்டு விட்டு ஓடிப்போய் விட்டார்கள்.

சௌத்ரி மௌஜூ அவர்களிடம் சொன்னார், அந்த விசித்திரமான ஒளி வீசும் வயதான மனிதர் யார் தெரியுமா அவர் கடவுளின் புனிதர். அவர் அவமானப்படுத்தப் பட்டதால் அநேகமாக அந்த முழுக்கிராமத்தின் மீதும் சாபம் விட்டுப் போயிருக்கலாம்.

கடவுள் நம்மை காப்பாற்றட்டும் என் மக்களே...கடவுள் நம்மை காப்பாற்றட்டும்…..என் மக்களே.. என்று அவன் முணுமுணுத்தவாறே அவனுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஜீனா வீட்டிலிருந்தாள். ஆனால் அவன் அவளிடம் பேசவில்லை. மௌல்வி சாகிப்பின் சாபத்திலிருந்து தப்பமுடியாது என்று அவன் மனதார நம்பினான்.

ஜீனா மௌல்வி சாகிப்பிற்கும் சேர்த்துக் கூடுதல் உணவு தயாரித்திருந்தாள்.

அவள் “ அப்பா மௌல்வி சாகிப் எங்கே? ” என்று கேட்டாள்.

“ போய்ட்டாரு.. அவர் போய்ட்டாரு.. எப்படி கடவுளின் மனிதரால் நம்மைப் போன்ற பாவிகளோடு சேர்ந்து இருக்க முடியும்? “ என்று வருத்தந்தோய்ந்த குரலில் அவன் சொன்னான்.

ஜீனாவும் வருத்தப்பட்டாள். ஏனென்றால் மௌல்வி சாகிப் அவளுடைய அம்மாவை திரும்பி வரவழைக்க ஒரு வழி கண்டுபிடிப்பதாக வாக்களித்திருந்தார். இப்போதென்றால் அவர் போய் விட்டார் அவளை அவளுடைய அம்மாவுடன் சேர்த்து வைப்பதற்கு. இனி யாரிருக்கிறார்கள்? ஜீனா கீழே மணைப்பலகையில் உட்கார்ந்தாள். உணவு குளிர்ந்து கொண்டிருந்தது.

கதவை நோக்கி நெருங்கி வரும் காலடி ஓசையை அவர்கள் கேட்டார்கள். அப்பாவும் மகளும் துள்ளியெழுந்தார்கள். திடீரென மௌல்வி சாகிப் உள்ளே நுழைந்தார். கிளியாஞ்சட்டி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவர் தடுமாறிக் கொண்டே வருவதைப் பார்த்துவிட்டாள். அவருடைய கையில் ஒரு சிறிய மண்கலயத்தை வைத்திருந்தார்.

மௌஜூ அவர் கட்டிலில் உட்காருவதற்கு உதவி செய்தான். அவனிடம் அந்த மண்கலயத்தைக் கொடுத்துக்கொண்டே மௌல்வி சாகிப்,

” இன்று கடவுள் நம்மை பெருஞ்சோதனைக்கு ஆட்படுத்திவிட்டான். எதிர்பாராதவிதமாக உன் கிராமத்திலிருந்து கொடிய பாவமான சாரயம் குடிக்கவிருந்த இரண்டு இளைஞர்களைச் சந்தித்தேன். நாம் அவர்களை நிந்தித்த போது அவர்கள் ஓடி விட்டார்கள். நாம் மிகுந்த துக்கத்திலிலாழ்ந்து விட்டோம். அவ்வளவு இளம்வயதில் இவ்வளவு கொடிய பாவமா? ஆனால் அவர்களுடைய இளமைதான் அவர்களை இந்தப்பாவத்தைச் செய்யத் தூண்டியது என்று நாம் உணர்ந்தோம். கடவுளின் மேலோக நீதிமன்றத்தில் அவர்களை மன்னித்தருளுமாறு நாம் பிரார்த்தனை செய்தோம். நமக்கு என்ன பதில் கிடைத்ததென்று உனக்குத் தெரியுமா? “ என்று கேட்டார்.

” தெரியாது..” என்று உணர்ச்சிவயப்பட்டு சௌத்ரி மௌஜூ கூறினான்.

“ அந்த பதில் என்னவென்றால் நீ அவர்களுடைய பாவத்தின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறாயா? அதற்கு நாம் சொன்னோம் சரி எல்லாம்வல்ல இறைவனே. அதன் பிறகு நாம் குரலைக் கேட்டோம்.. இந்த மண்கலயத்திலுள்ள அத்தனை சாராயத்தையும் குடிக்கும்படி ஆணையிடுகிறேன். நாம் அந்தப் பையன்களை மன்னித்தருளுவோம்..”

மௌஜூக்கு மயிர்க்கூச்செரிந்தது. “ பிறகு நீங்கள் அதைக் குடித்தீர்களா?”

மௌல்வியின் நாக்கு இன்னும் குழறியது, “ ஆமாம் நாம் குடித்தோம்.. அந்த இளம்பாவிகளின் ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக..இந்த உலகத்தில் வணங்கவேண்டிய ஒரே ஆளான கடவுளின் கண்களுக்கு முன்னால் மதிப்பைச் சம்பாதிப்பதற்காக.. இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது அதையும் நாம் தான் குடிக்கவேண்டுமென ஆணையிடப்பட்டிருக்கிறோம்.. இப்பொழுது அதைக் கவனமாகப் பத்திரப்படுத்து.. ஒரு சொட்டுகூட வீணாகிவிடக்கூடாது..பாத்துக்கோ..”

மௌஜூ அந்த மண்கலயத்தை எடுத்தான். அதனுடைய வாயை ஒரு சுத்தமான துணியினால் மூடிக்கட்டினான். பின்னர் அதை அவனுடைய எளிய வீட்டிலுள்ள ஒரு இருட்டறையில் வைத்தான். அவன் திரும்பிய போது மௌல்வி சாகிப் கட்டிலில் கைகால்களைப் பரப்பிக் கொண்டு கிடந்தார். ஜீனா அவருடைய தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.அவர் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “ யார் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்களோ அவர்களே கடவுளின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.. அவர் இந்தக் கணத்தில் உன்மீது பிரீதியோடு இருக்கிறார்.. நாமும் உன்மீது பிரீதியோடு இருக்கிறோம்..”

பிறகு மௌல்வி சாகிப் அவருக்கு பக்கத்தில் அவளை உட்காரவைத்து அவளுடைய நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தார். அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்தாள் ஆனால் அவளால் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை. மௌல்வி சாகிப் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு மௌஜூவிடம் சொன்னார், ” சௌத்ரி நான் உன் மகளுடைய உறங்கிக் கொண்டிருக்கும் விதியை எழுப்புகிறேன்..”

மௌஜூ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டான். அவனால் நன்றியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை. அவனால் சொல்ல முடிந்ததெல்லாம்,

“ எல்லாம் உங்களுடைய பிரார்த்தனைகளாலும் அன்பினாலும் வந்தது…”

அவ்வளவு தான். மௌல்வி சாகிப் ஜீனாவை அவருடைய நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு சொன்னார், “ உண்மையில் கடவுள் தன்னுடைய அனுக்கிரகத்தை உனக்கு அளித்துவிட்டார். ஜீனா நாளை நாம் உனக்கு புனித பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுப்போம்.. நீ அதை எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் கடவுளின் கண்களுக்கு எப்போதும் நீ ஏற்றவளாக இருப்பாய்..”

மறுநாள் மௌல்வி சாகிப் தாமதமாக எழுந்தார். மௌஜூ ஒருவேளை அவன் அவருக்குத் தேவைப்படலாமோ என்று பயந்து வயலுக்குப் போகவில்லை. கடமையுணர்வோடு அவன் காத்திருந்தான். மௌல்வி கண் விழித்தபோது அவர் தன்னுடைய முகத்தைக் கழுவவும், கைகளைக் கழுவவும் அவன் உதவினான். அவருடைய விருப்பத்திற்கிணங்க அந்த மண்கலயத்தை எடுத்துக் கொண்டு வந்தான்.

மௌல்வி சாகிப் முணுமுணுத்தபடியே ஒரு தொழுகை நடத்தினார். பிறகு மண்கலயத்தின் வாயை மூடியிருந்த துணியை அகற்றி விட்டு மூன்று முறை பானைக்குள் ஊதினார். மூன்று பெரிய கோப்பைகள் நிறைய மதுவைக் குடித்தார். பிறகு இன்னொரு பிரார்த்தனையை முணுமுணுத்தார். வானத்தை அண்ணாந்து பார்த்து முழக்கமிட்டார்.

“ கடவுளே நீ எங்களைச் சோதிக்கும் சோதனையை நாங்கள் விரும்புவதாக நீ நினைத்து விடக்கூடாது..”

பிறகு அவர் மௌஜூவைப் பார்த்து, “ சௌத்ரி, நீ உடனே உன்னுடைய மனைவியின் கிராமத்துக்குப் போய் அவளை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்று இப்போதுதான் புனிதகட்டளையை நாம் பெற்றோம்… நாம் எதிர்பார்த்திருந்த சமிக்ஞை கிடைத்துவிட்டது…” என்று சொன்னார்.

மௌஜூவுக்குப் புல்லரித்தது. அவன் குதிரையின் மீது ஏறினான். மறுநாள் அவளை அழைத்து வருவதாக சத்தியம் செய்தான். ஜீனாவிடம் மௌல்வி சந்தோஷமாகவும் வசதியாகவும் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினான்.

ஜீனாவின் தந்தை போனபிறகு அவள் வீட்டுவேலைகளில் மூழ்கி விட்டாள். மௌல்வி சாகிப் நிதானமாகக் குடித்துக் கொண்டேயிருந்தார். பிறகு அவர் சட்டைப்பையிலிருந்து ஜெபமாலையை எடுத்து அவருடைய விரல்களில் உருட்ட ஆரம்பித்தார். ஜீனா வேலைகளையெல்லாம் முடித்தவுடன் அவர் அவளைச் மேனியலம்பும் சடங்குகளைச் செய்யச் சொன்னார்.

அவள் அப்பாவியாக “ மௌல்விசாகிப், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியாது..” என்று சொன்னாள்.

அவசியமான மதச்சடங்குகளைப் பற்றிய அறிவு கூட இல்லாமைக்காக அவளை மென்மையாக மௌல்விசாகிப் கடிந்து கொண்டார். பின்பு அவர் அவளுக்கு மேனியலம்பும் சடங்கை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். இந்த சிக்கலான பயிற்சி உடல்களின் நெருக்கம் மூலம் நிகழ்ந்தேறியது.

மேனியலம்பும் சடங்குக்குப் பின்னால் மௌல்விசாகிப் பிரார்த்தனைபாயைக் கேட்டார்.

அந்த வீட்டில் அப்படியொன்று இல்லை. மௌல்விசாகிப் அதிருப்தியடைந்தார். அவர் அவளிடம் ஒரு படுக்கைவிரிப்பைக் கொண்டுவரும்படி சொன்னார். உள்ளறையில் அதைத் தரையில் விரித்து ஜீனாவை உள்ளே வரும்படி ஆணையிட்டார். அதோடு வரும்போது அந்தப்பானையையும், கோப்பையையும் கொண்டு வரச் அறிவுறுத்தினார்.

மௌல்விசாகிப் கோப்பையில் நிறைய ஊற்றி, அதில் பாதியைக் குடித்தார். பிறகு தன் விரல்களில் ஜெபமாலையை உருட்ட ஆரம்பித்தார். ஜீனா அதை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வெகுநேரத்துக்கு மௌல்விசாகிப் ஜெபமாலையை சுறுசுறுப்பாக உருட்டிக்கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. பிறகு அவர் கோப்பைக்குள் மூன்றுமுறை ஊதி விட்டு ஜீனாவைக் குடிக்குக்கும்படிச் சொன்னார்.

ஜீனா நடுங்கும்கரங்களால் அதைக் கையில் எடுத்தாள். மௌல்விசாகிப் இடிக்குரலில் சொன்னார்,” நீ இதைக் குடிக்கும்படி நாம் கட்டளையிடுகிறோம். உன்னுடைய எல்லாவேதனைகளும், துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.”

ஜீனா அந்தக்கோப்பையை அவளுடைய உதடுகளுக்குக்கருகில் கொண்டு போனாள். ஒரே மூச்சில் அதைக் குடித்துவிட்டாள். மௌல்விசாகிப் புன்னகைத்தார்.

“ நாம் நம்முடைய சிறப்புப்பிரார்த்தனையைத் தொடரப்போகிறோம்…ஆனால் எப்பொழுதெல்லாம் நாம் சுட்டுவிரலை உயர்த்துகிறோமோ அப்பொழுதெல்லாம் பானையிலிருந்து அரைக்கோப்பை ஊற்றிக் குடிக்கவேண்டும்..தெரிந்ததா?”

அவர் அவளை பதில்சொல்ல அநுமதிக்கவில்லை. அவள் ஆழ்ந்த மயக்கத்துக்குள் போய்க்கொண்டிருந்தாள். ஜீனாவின் வாயில் ஒரு மோசமான ருசி. நெஞ்சில் தீ எரிவதைப்போன்ற எரிச்சல். அவள் எழுந்து சென்று வாளிவாளியாய் குளிர்ந்த நீரைக் குடிக்க விரும்பினாள். ஆனால் அதற்கு அவளுக்குத் தைரியமில்லை. திடீரென்று மௌல்விசாகிப்பின் சுட்டுவிரல் உயர்ந்தது. அவள் மனோவசியம் செய்யப்பட்டவளைப் போல ஏற்கனவே மௌல்விசாகிப் சொல்லியமாதிரி அரைக்கோப்பை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தாள்.

மௌல்விசாகிப் தொடர்ந்து பிரார்த்திக் கொண்டிருந்தார்.அவளால் ஜெபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று உரசும் சத்தத்ததைக் கேட்க முடிந்தது. அவளுடைய தலை சுற்றியது. அவள் உறக்கம் வருவதைப்போல உணர்ந்தாள். ஒரு முகம் மழிக்கப்பட்ட இளைஞனின் மடியில் இருப்பதாகவும், அவன் அவளிடம் அவளைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல அவளுக்கு ஒரு தெளிவில்லாத, கிட்டத்தட்ட தன்னுணர்வில்லாத உணர்வு தோன்றியது.

அவள் உணர்வுக்கு வந்தபோது அவள் உள்ளே தரையில் படுத்திருந்தாள். மங்கலான கண்களால் சுற்றிலும் பார்த்தாள். ஏன் அவள் அங்கே படுத்துக்கிடக்கிறாள்? எப்போதிருந்து? எல்லாமே பனிமூட்டமாக இருந்தது. மறுபடியும் தூங்க விரும்பினாள். ஆனால் அவள் எழுந்துவிட்டாள். மௌல்விசாகிப் எங்கே? அப்புறம் அந்த சொர்க்கம் எங்கே மறைந்து போனது?

அவள் திறந்தவெளி முற்றத்திற்குப் போனாள். கிட்டத்தட்ட சாயங்காலமாகி விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மௌல்விசாகிப் மேனியலம்பும் சடங்கைச் செய்து கொண்டிருந்தார். அவள் வருகிற சத்தம் கேட்டு புன்னகைமுகத்துடன் திரும்பினார் மௌல்விசாகிப். அவள் அறைக்குத் திரும்பி தரையில் அமர்ந்து அவளுடைய அம்மா வீட்டுக்குத் திரும்பி வரப்போவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு இரவு இருக்கிறது.அவளுக்கு ரெம்பப் பசித்தது. ஆனால் அவள் சமையல் செய்ய விரும்பவில்லை. அவளுடைய மனம் முழுவதும் விளங்காத, பதிலில்லாத கேள்விகள் நிறைந்திருந்தன.

திடீரென மௌல்விசாகிப் கதவருகில் தோன்றினார். “ நாம் உன்னுடைய அப்பாவுக்காக விசேசபிரார்த்தனைகள் செய்ய வேண்டும். நாம் இரவு முழுவதும் கபர்ஸ்தானில் இருந்து பிரார்த்தனை செய்துவிட்டு காலையில் திரும்பி வருவோம். உனக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்..” என்று சொன்னார்.

அவர் மறுநாள் காலையில் தோன்றினார். அவருடைய கண்கள் சிவந்திருந்தன. பேசும்போது லேசாக வாய் குழறியது. அவரால் நிலையாக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார். அவர் வெளிமுற்றத்துக்கு நடந்துபோய் ஜீனாவை உணர்ச்சியுடன் இறுக்கிக் கட்டிப் பிடித்து முத்தமிட்டார். ஜீனா மனைப்பலகையில் உடகார்ந்துகொண்டு கடந்த இருபத்திநாலு மணி நேரத்தில் நடந்த புதிரான, அரைகுறைஞாபகங்களோடு உள்ள நிகழ்வுகளை புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அப்பா திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். இரண்டுவருடங்களாக வீட்டை விட்டு போயிருந்த அம்மாவும் திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். அப்புறம் அங்கே அந்த சொர்க்கம்… அவளை அழைத்துக் கொண்டு போயிருந்தது என்ன வகையான சொர்க்கம்? அப்புறம் மௌல்விசாகிப்…. அவரா..அவளை சொர்க்கத்துக்கு கூட்டிப் போனது…அப்படியிருக்காது.. ஏன்னா ஒரு இளைஞன் அதுவும் தாடியில்லாதவனாக அவள் ஞாபகத்தில் வந்தான்.

மௌல்விசாகிப் அவளைப்பார்த்து, “ ஜீனா உன்னோட அப்பா இன்னும் வரல்ல..” என்று சொன்னார். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் திரும்பவும், “ இரவு முழுவதும் உன்னோட அப்பா என்னுடன் பிரார்த்தனையில் இருந்தான்..இப்பொழுது உன்னுடைய அம்மாவுடன் வந்திருக்கவேண்டுமே…”. என்று சொன்னார்.

ஜீனாவால் சொல்லமுடிந்ததெல்லாம் இதுதான்,” எனக்குத் தெரியல.. அவர் வந்துக்கிட்டிருப்பாரு..அம்மாவைக் கூட்டிக்கிட்டு..ஆனா உண்மையில் எனக்கு ஒண்ணும் தெரியாது…”

முன்கதவு திறந்தது. ஜீனா எழுந்தாள். அங்கே அவளுடைய அம்மா. இருவரும் ஒருவர் கைகளில் ஒருவர் விழுந்தனர். இருவருக்கும் கண்ணீர் பெருகியது. மனைவியின் பின்னால் மௌஜூவும் வந்தான். மிகுந்த மரியாதையுடன் மௌல்வி சாகிப்பை வணங்கினான். பின்னர் தன்னுடைய மனைவியிடம், “ பதான் நீ மௌல்விசாகிப்பை வணங்கவில்லையே….” என்று சொன்னான்.

பதான் மகளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கண்களைத் துடைத்தாள். பின்னர் மௌல்விசாகிப்பை வணங்கினாள். அதுவரை தன்னுடைய ரத்தச்சிவப்பான கண்களால் பதானையே முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்த மௌல்விசாகிப், “ நாம் உனக்காக இரவு முழுவதும் பிரார்த்தனையில் இருந்தோம்; இதோ நீ வந்து விட்டாய்.. கடவுள் நம்முடைய பிரார்த்தனைகளைச் செவிமடுத்துவிட்டார்.. இனி எல்லாம் நல்லபடியாய் நடக்கும்..” என்று சொன்னார்.

சௌத்ரிமௌஜூ தரையில் உட்கார்ந்து மௌல்விசாகிப்பின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். தொண்டை தழுதழுக்க, அவன் தன் மனைவியிடம், “ பதான், இங்கே வா… மௌல்விசாகிப்புக்கு உன் நன்றியைத் தெரிவி…. எனக்கு எப்படிச் சொல்லணும்னு தெரியல..” என்று சொன்னான்.

பதான் முன்னால் வந்து,” நாங்கள் ஏழை எளிய கிராமத்து ஆட்கள்…எங்களிடம் செய்வதற்கு எதுவுமில்லை…..புனித கடவுள்மனிதரே!..” என்று சொன்னாள்.

மௌல்விசாகிப் பதானை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே,” மௌஜூ சௌத்ரி நீ சொன்னது சரிதான்.. உன் மனைவி அழகாக இருக்கிறாள்.. இந்த வயதிலும் அவள் இளமையாகத் தெரிகிறாள்.. அவள் இன்னொரு ஜீனா… அவளை விட மேல்… நாம் எல்லாவற்றையும் சரி செய்வோம்.. பதான், கடவுள் உன்மீது அன்பும் கருணையும் கொள்ள தீர்மானித்துவிட்டார்…..” என்று சொன்னார்.

சௌத்ரி மௌஜூ மௌல்விசாகிப்பின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டேயிருந்தான். ஜீனா சமையலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து மௌல்விசாகிப் எழுந்தார். பதானின் தலையை ஆதூரத்துடன் தட்டிக் கொடுத்துக் கொண்டே மௌஜூவிடம்,” எல்லாம் வல்ல கடவுளின் விதிப்படி எப்போது ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டபிறகு மீண்டும் அவளை கூட்டிக் கொண்டு வரவேண்டுமானால் அவள் இன்னொரு மனிதனைத் திருமணம் செய்து விவாகரத்து செய்தபிறகே தன்னுடைய முதல் கணவனுடன் சேர முடியும்….” என்று சொன்னார்.

மௌஜு மெல்லிய குரலில், “ நானும் கேள்விப்பட்டிருக்கேன்.. மௌல்விசாகிப்..” என்று சொன்னார்.

மௌல்விசாகிப் அவனை எழுந்து நிற்கச் சொன்னார். அவனுடைய தோளில் அவருடைய கையைப் போட்டுக் கொண்டு, “ நேற்று ராத்திரி நீ செய்த தவறுக்காக உன்னை தண்டிக்காமலிருக்குமாறு எல்லாம் வல்ல கடவுளிடம் மன்றாடினோம்..அசரீரி சொல்லியது என்னவென்றால்,எவ்வளவு நாள் தான் மற்றவர்களுக்காக உன்னுடைய பரிந்துரைகளை நான் ஏற்றுக் கொள்வது? உனக்காக எதையாவது கேள். அதை நாம் வழங்குகிறோம்… நாம் மீண்டும் மன்றாடினோம்.. பிரபஞ்சத்தின் அரசரே..எல்லாநிலங்களின் கடல்களின் இறைவனே, நாம் எதையும் நமக்காகக் கேட்பதில்லை.. நீங்கள் எமக்கு போதுமானதைக் கொடுத்திருக்கிறீர்கள்..மௌஜூ சௌத்ரி அவனுடைய மனைவிமீது அன்பாக இருக்கிறான். அதற்கு அந்தக்குரல், நாம் அவனுடைய அன்பையும் உன்னுடைய விசுவாசத்தையும் சோதிக்கப்போகிறோம்… நீ தான் அவளை ஒருநாள் திருமணம் செய்து மறுநாள் அவளை விவாகரத்து செய்து மௌஜூவிடம் ஒப்படைக்கவேண்டும்..இதைத்தான் நாம் உனக்கு வழங்கமுடியும்.. ஏனெனில் நீ நாப்பது வருடங்களாக என்னை விசுவாசமாக வணங்கிவருகிறாய்…என்றது.” என்று சொன்னார்.

மௌஜூ உணர்ச்சிவசப்பட்டு,” நான் ஏற்றுக் கொள்கிறேன் மௌல்விசாகிப்.. நான் ஏற்றுக்கொள்கிறேன்..” என்று சொன்னான். பிறகு அவன் பதானைப்பார்த்தான். அவனுடைய கண்கள் உள்ளே பொங்கிய மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது. “ சரியா பதான்..? ” என்று கேட்டவன் அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் “ நாங்கள் இருவரும் ஏற்றுக்கொள்கிறோம்..” என்று சொன்னான்.

மௌல்விசாகிப் அவருடைய கண்களை மூடி ஒரு பிரார்த்தனையைப் பாடினார்.பின்பு அவர்களுடைய முகத்தில் ஊதிவிட்டார். அவருடைய கண்களை மேலுலகத்தை நோக்கி உயர்த்தியபடியே, “ எல்லாவானங்களீன் கடவுளே! நீங்கள் வைத்துள்ள இந்த சோதனையில் நாங்கள் தோற்றுவிடாமலிருக்க எங்களுக்கு வலிமையைத் தாரும்..” என்றார்.

பிறகு அவர் மௌஜூவிடம், “ இப்போழுது நாம் போகிறோம்.. ஆனால் நீயும் ஜீனாவும் இன்று இரவு மட்டும் எங்காவது சென்றுவிடவேண்டும் என்று விரும்புகிறோம்.. நாம் பிறகு வருகிறோம்..” என்றார்.

மாலையில் அவர் திரும்பி வரும்போது, ஜீனாவும், மௌஜூவும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தார்கள். மௌல்விசாகிப் வாய்க்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம் பேசவில்லை. அவர்களைப் போகச்சொல்லி சைகை செய்தார். அவர்கள் போய்விட்டார்கள்.

மௌல்விசாகிப் கதவைத் தாழ்ப்பாள் போட்டார். பிறகு பதானிடம்,” இந்த ஒரு இரவு நீ என்னுடைய மனைவி… உள்ளே போ.. படுக்கையைக் கொண்டுவந்து இந்த கட்டிலில் விரித்து வை. நாம் ஒரு சிறு தூக்கம்போட விரும்புகிறோம்…” என்று சொன்னார்.

பதான் உள்ளே சென்று படுக்கையை கொண்டுவந்து கயிற்றுக்கட்டிலில் அழகாக விரித்தாள்.மௌல்விசாகிப் அவளிடம் அவருக்காகக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே போனார்.

ஒரு அகல்விளக்கின் நிழலான ஒளி அந்தச் சிறிய அறையை அலங்கரித்தது. அந்த மண்பானை மூலையில் இருந்தது. மௌல்விசாகிப் அதில் ஏதாவது மீந்திருக்கிறதா? என்று அதைக் குலுக்கிப்பார்த்தார். அதில் இருந்தது. அவர் அந்தப்பானையை உதடுகளுக்குக் கொண்டுபோய் அவசரமாக சில மிடறுகள் குடித்தார். அவருடைய மஞ்சள்நிற பட்டுத்துணியினால் வாயைத் துடைத்துவிட்டு வெளியே வந்தார்.

பதான் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். மௌல்விசாகிப்பின் கைகளில் ஒரு கோப்பையை வைத்திருந்தார். அவர் அதில் சில புனிதமந்திரங்களை மூன்றுமுறை ஓதி அதை பதானிடம் கொடுத்து,” இதைக் குடி….” என்று சொன்னார்.

அவள் குடித்த உடனேயே புரையேறிச் சிரமப்பட்டாள். ஆனால் மௌல்விசாகிப் அவளுடைய முதுகில் பலமாகத் தட்டிக் கொடுத்துக்கொண்டே,” உனக்குச் சரியாயிரும்..” என்று சொல்லிவிட்டி படுத்துக்கொண்டார்.

அடுத்தநாள் காலையில் ஜீனாவும், மௌஜூவும் திரும்பிவந்த போது பதான் முற்றத்தில் கிடந்த கட்டிலில் படுத்துறங்கிக் கொண்டாள். மௌல்விசாகிப் அருகில் எங்கும் இல்லை. ஒருவேளை அவர் வயல்கரைகளில் நடைப்பயிற்சிக்குப் போயிருக்கலாம் என்று மௌஜூ நினைத்தான். அவன் மனைவியை எழுப்பினான். அவள் கண்களைத் திறந்ததும் “ சொர்க்கம்…சொர்க்கம்..” என்று பிதற்றினாள். அவள் மௌஜூவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தாள்.

அவன்,” மௌல்விசாகிப் எங்கே? “ என்று கேட்டான்.

பதான் இன்னும் தள்ளாட்டத்தில் தான் இருந்தாள். “ மௌல்விசாகிப்பா… எந்த மௌல்விசாகிப்? அவர் எங்கே என்று எனக்குத் தெரியாது…அவர் இங்கே இல்லை…” என்று சொன்னாள்.

“ வேண்டாம் …நான் போய் அவரைத் தேடிப்பார்த்துட்டு வாரேன்..” என்று மௌஜூ கூவினான்.

அவன் கதவருகில் போய்க்கொண்டிருக்கும்போது பதானின் அலறலைக் கேட்டான். அவள் தலையணைக்கடியிலிருந்து ஏதையோ எடுத்தபடியே நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவள், “ இது என்னது?..” என்று கேட்டாள்.

மௌஜூ, ‘ முடி மாதிரி தெரியுது..” என்று சொன்னான்.

பதான் அந்தக் கறுப்புக்குவியலைத் தரையில் வீசினான். மௌஜூ அதை எடுத்து சோதித்துப் பார்த்துவிட்டு, “ மனிதமுடி மாதிரி இருக்கு..” என்று சொன்னான்.

” மௌல்விசாகிப்பின் தாடியும் தோள்வரை தொங்கிய தலைமுடியும்…தான் இது .” என்று ஜீனா கூக்குரலிட்டாள். மௌஜூ குழப்பமடைந்தான்.

“ அப்படின்னா மௌல்விசாகிப்பை எங்கே? “ என்று அவன் கேட்டான். பிறகு அவனுடைய எளிய எதையும் நம்பும் மனசில் உடனே ஒரு பதில் தோன்றியது.

“ ஜீனா…பதான்… உங்களுக்குப் புரியலையா.. அவர் கடவுளின் மனிதரில்லையா? அவர் அற்புதங்கள் செய்வார்... நம்முடைய இதயங்கள் என்ன விரும்பியதோ அதைக் கொடுத்துவிட்டு அவரை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள நமக்கு இதை விட்டு விட்டுப் போயிருக்கிறார்…” என்று சொன்னான்.

அவன் அந்த பொய்த்தாடியையும் தலைமுடியையும் முத்தமிட்டான். பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்னர் அவற்றை ஜீனாவிடம் கொடுத்தான்.

“ போ… போய் இவற்றை சுத்தமான துணியில் சுற்றி அந்தப் பெரிய மர அலமாரியின் மேல் வை… கடவுளின் அருள் நமது வீட்டை விட்டு அகலாதிருக்கட்டும்..” என்று சொன்னான். ஜீனா உள்ளே போனாள். மௌஜூ பதானின் அருகில் உட்கார்ந்து அவளிடம்,” நான் பிரார்த்தனை செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளப்போகிறேன்… ஒவ்வொரு நாளும் என்னுடைய பிரார்த்தனைகளில் அந்தச் சாமியாரை ஞாபகப்படுத்துவேன்….”

பதான் மௌனமாக இருந்தாள்.