Tuesday 28 May 2019

குழந்தையின் கிறுக்கல்கள்


குழந்தையின் கிறுக்கல்கள்
உதயசங்கர்

1.   ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள் மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத்தொடங்குகின்றன.
2.   குழந்தைகள் கிறுக்குவதில் ஒரு சுதந்திர உணர்வை அடைகின்றனர். படைப்பூக்கத்தின் ஆரம்பவெளிப்பாடு தான் அந்தக்கிறுக்கலகள்.
3.   கிறுக்கல்களில் கிடைக்கும் சுதந்திரம் குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னால் ஒரு காரியத்தைச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தருகிறது.
4.   கிறுக்கல்கள் குழந்தையின் மூளையில் முளைவிடும் சிந்தனாசக்தியின் துவக்கம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
5.   கிறுக்கல்கள் குழந்தைகளின் மனஎழுச்சியின் வெளிப்பாடு. ஒழுங்கற்ற அந்தக்கோடுகள், கட்டங்கள், முக்கோணங்கள், வட்டங்கள், அரைவட்டங்கள் எல்லாம் குழந்தைகளுக்குப் பரவச உணர்வைத் தருபவை.
6.   குழந்தைகள் கிறுக்கும்போது அதன் முகத்தைக் கவனியுங்கள். அப்படி ஒரு தீவிரத்தன்மை தெரியும். அந்தத் தீவிரம் அந்தக்குழந்தையிடம் ஒருமையுணர்வை ஏற்படுத்தும்.
7.   குழந்தைகளைக் கிறுக்கவிடுங்கள். அந்தக் குழந்தை ஆளுமைத்திறன் கொண்டதாக மாறிவிடும்.
8.   சுவற்றிலோ, புத்தகத்திலோ, நோட்டிலோ, கிறுக்கியதற்காக ஒருபோதும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். குழந்தைகளிடம் முளைவிடும் படைப்பூக்கம் கருகிவிடும்.
9.   குழந்தைகள் கிறுக்குவதற்கென்று கரும்பலகை, நோட்டு, வெள்ளைத்தாள்களைக் கொடுங்கள். கிறுக்கும்போது தலையிடாதீர்கள். இப்படி எழுதவேண்டும், இப்படி வரைய வேண்டும் என்று திருத்தாதீர்கள்.
10.  குழந்தைகள் இயல்பிலேயே கற்றுக்கொள்வதில் தீராத பற்றுக் கொண்டவர்கள்.  பிறந்தநாளிலிருந்து ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களை ஒழுங்குபடுத்துவதாக நினைத்து அவர்களுடைய படைப்புத்திறனைத் தடைசெய்யக்கூடாது.
11.  கிறுக்குகிற எல்லாக்குழந்தைகளும் ஓவியத்தைத் தங்கள் தொழிலாகக் ( பொதுவாக நமது சமூகம் கலை இலக்கியம் மீது கொண்டுள்ள அசூயை தான் காரணம் ) கொண்டுவிடுவார்களோ என்று பெற்றோர்கள் பயப்படவேண்டாம். அது தன்னை வெளிப்படுத்தும் ஒரு துவக்கநிலை. பல குழந்தைகள் வேறு வேறு ஆர்வத்தைக் கைக்கொண்டுவிடுவார்கள்.
12.  குழந்தைகள் கிறுக்குவதற்கு ஏற்ற வகையில் ஆபத்தில்லாத சுலபமாக அழிக்கக்கூடிய வண்ணப்பென்சில்களையோ, கிரேயான்களையோ கொடுங்கள்.
13.  தான் கிறுக்கியதைக் காட்டும் குழந்தையைக் கவனியுங்கள். அந்தக்கிறுக்கலை அங்கீகரியுங்கள். ஆமோதியுங்கள். பாராட்டுங்கள். குழந்தைகள் அங்கீகரித்தலை ( பெரியவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? ) மிகவும் விரும்புவார்கள்.
14.  குழந்தைகளை பழக்கப்படுத்தப்படாத விலங்குகளாக நினைக்காதீர்கள். அவர்களைப் பழக்கப்படுத்துவது, ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம், சொல்லித்தரவேண்டியது பெற்றோர், ஆசிரியர் கடமை என்று கற்பிதம் செய்யாதீர்கள். நீங்கள் அந்த ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம் இவற்றில் சரியாக இருங்கள். குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
15.  குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். ஆர்வத்தைத் தூண்டுகிற புறச்சூழலை உருவாக்குங்கள். அழுத்தம் தரவோ, கண்டிக்கவோ, திட்டவோ, அடிக்கவோ செய்யாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர்ச்செயல் உண்டு.
16.  குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்று எப்போதும் கவனம் வையுங்கள்.

Sunday 19 May 2019

பெண்களும் மதங்களும்

பெண்களும் மதங்களும்..

பெரும்பாலான வீடுகளில் குடும்பத்தாரின் ஆன்மீக நடவடிக்கைகளை வீட்டுப்பெண்களே தீர்மானிக்கிறார்கள்.

அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எமகண்டம், சூலம், பரிகாரம், ஜாதகம், ஜோசியம் ராசி, லக்கினம், நட்சத்திரம், நாள், கிழமை, நட்சத்திரம், பூஜை, புனஸ்காரங்கள், நைவேத்தியங்கள், நேர்த்திக்கடன்கள், மற்றும் விரதங்கள், அமாவாசை, பௌணர்மி, ஏகாதசி, துவாதசி, சஷ்டி சதுர்த்தி, கார்த்திகை, சிவராத்திரி, மஹாசிவராத்திரி, என்று நாள் தவறாமல் விரதங்களையும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தாரை முழுமையாகவோ, பகுதியாகவோ கடைப்பிடிக்கச் செய்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், தினசரி வீட்டு வாசலில் கோலம் போடுவது, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வீட்டை மொழுகிச் சுத்தம் செய்வது, மாலையில் குத்துவிளக்கை ஏற்றி மாலை சூடி, பூஜை செய்வது, என்று பக்தி மணம் கமழ வீட்டை மாற்றி விடுகிறார்கள். இதோடு பெயர்ச்சிகள் வேறு. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி, கிரகணங்கள், என்று பெயர்ச்சிகளின் போது குடும்பத்தாரின் யோகங்களைப் பற்றிய கவலைகள். அதற்குப்பரிகாரங்கள் என்று அனுகணமும் மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள் பெண்கள்.

ஏற்கனவே வீட்டு நிர்வாகத்தை இருபத்திநாலு மணி நேரமும் செய்துகொண்டேயிருக்கும் பெண்களின் தலையில் குடும்பநலன்களின் மொத்தக்குத்தகையையும் ஏற்றி, சாஸ்திர சம்பிரதாய சடங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.. கணவர், குழந்தைகள், வீடு, என்று எப்போதும் சிலந்தி வலையில் மாட்டிய ஈயைப் போல உழன்று கொண்டேயிருக்கிறார்கள்.

பெரும்பாலான ஆண்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை அல்லது கவலைப்படாத மாதிரி நடந்து கொள்கிறார்கள். “ அதெல்லாம் அவுக டிபார்ட்மெண்ட்..” என்று மேம்போக்காய் சொல்லி விட்டு ஒரு சடங்கு விடாமல் எல்லாவற்றையும் கிரமமாய் செய்வார்கள்

ஆண்கள். இதில் மதங்களுக்கேற்றவாறு சாதிகளுக்கேற்றவாறு சடங்குகள் சாஸ்திரங்கள் மாறலாம். அவ்வளவு தான்.

சரி. மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களை இவ்வளவு கர்மசிரத்தையோடு, செய்கிற பெண்களைப் பற்றி இந்த சடங்கு, சாஸ்திரங்களைச் செய்யச்சொல்கிற மனு தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?

“ வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை அத னால் அவர்களின் சடங்குகள் வேதமந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படவேண்டும். மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த ஞானமும் கிடையாது. ஏனெனில் வேதங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேதமந்திரங்களை உச்சரிக்க முடியாததாகையால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள். “
( 18. ஒன்பதாம் அத்தியாயம் மனுதர்ம சாஸ்திரம் அம்பேத்கார் நூல்தொகுப்பு 36 )

அறிவு பெறும் உரிமையை மறுத்துவிட்டு அவர்களுக்கு எந்த ஞானமும் கிடையாது என்றும்  அவர்கள் பொய்யைப் போன்றவர்கள் என்றும் இழிவு படுத்துகிறது மனுதர்ம சாஸ்திரம்.

இப்படி பெண்களின் ஆன்மீகஅறிவுரிமையை புறந்தள்ளுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய இருத்தலையே இழிவானதாகச் சித்தரிக்கின்றன கீழ்க்கண்ட விதிகள்.

“ இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்லத்தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்த காரணத்திற்காகவே விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்போது உஷாராயில்லாமல் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். “ ( 213, அத்தியாயம் 2 மனுதர்மசாஸ்திரம் )

“ ஏனெனில் இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி ஒரு கல்விமானையும் பாதை தவறிச் செல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உடையவர்கள். “ ( 214. அத்தியாயம் 2. மனுதர்மசாஸ்திரம் )

“ அவர்களை உருவாக்கும்போது கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள், ஆகியவற்றின் மீது பிரேமையையும், மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள் ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை, ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார். “
( 17. அத்தியாயம் 9 மனுதர்மசாஸ்திரம்)

பெண்களை இழிவு படுத்தும் மனு,  புத்தருக்குப் பின் வந்தவர்.
புத்த மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தை பறிக்கவும், இழிவுபடுத்தவும் கல்வியுரிமையை அழிக்கவும் இத்தகைய விதிகளை எழுதியுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

அதோடு அவர்களின் அறிவுச்சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி கல்வியை மறுத்தார்கள். வீட்டிலும் கூட பெண் சுதந்திரமானவளாக இருக்க அநுமதிக்கப்படவில்லை.

“ ஒரு சிறு பெண்ணோ, ஓரு இளம் பெண்ணோ, அல்லது வயதான பெண்ணும் கூட - தனது சொந்த வீட்டிலும் கூட - எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. “ ( 147. அத்தியாயம் 5 மனுதர்மசாஸ்திரம் )

“ குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தனது தகப்பனாருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இளமைப்பருவத்தில் தனது கணவருக்கும், கணவர் இறந்ததற்குப் பின்னர் தனது மகன்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது.”
( 148. அத்தியாயம் 5. மனுதர்மசாஸ்திரம் )

ஏன் பெண் சுதந்திரமாக இருக்கக்கூடாது?

 பெண்ணின் புழங்குவெளியைச் சுருக்குவதன் மூலம் அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவே இந்த இழிமொழிகள். எனவே வீடு, வீட்டின் மூலையில் சமையலறை, இரவானால் படுக்கையறை, தன் கணவன், மக்கள் நலனைத் தவிர சமூகத்தில் எதைப்பற்றியும் கவலைப்படமுடியாத அளவுக்கு சாஸ்திரங்கள், சடங்குகள், என்று தன்னை இழிவு படுத்துகிற மதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் இருக்கிறாள்.

வரலாற்றின் மிகப்பெரிய முரண், யாரெல்லாம் சுத்தம் செய்யும் வேலையைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் தீண்டத்தகாதவர்களாக ஆகியிருக்கிறார்கள்.

சில நாட்களாவது, சிலமணி நேரங்களாவது எல்லோரும் தீட்டுப்பட்டு விலக்கி வைக்கப் படுகிறார்கள். வீட்டிலும் பௌதீகரீதியாக சுத்தம் செய்யும் வேலை பெண்களுக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் பாத்திரம் துலக்குவது, அழுக்குத்துணிகளைத் துவைப்பது, வீடு கழுவி விடுவது, ஒட்டடை அடிப்பது, கக்கூஸ் கழுவுவது என்று எல்லாவிதமான சுத்தம் செய்யும் வேலைகளையும் பெண்கள் தலையிலேயே சுமத்தி விட்டதுமல்லாமல் அவர்களை வீட்டிலும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது மனுவும் ஆணாதிக்கமும்.

அவர்கள் அனைத்துச் சடங்குகளிலும் கலந்து கொள்ள முடியாது. சில சடங்குகளில் விதவைகள் கலந்து கொள்ள முடியாது. சில சடங்குகளில் கன்னிப்பெண்கள் கலந்து கொள்ள முடியாது. அனைத்துக் கோவில்களிலும் தீட்டான பெண்கள் நுழைந்து விட முடியாது. மரணத்தில் கூட தெரு முக்கு வரை தான் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி எல்லாவித விலக்குகளுக்கும் தீட்டுக்கும் தீண்டாமைக்கும் ஆட்படுகிறார்கள் பெண்கள்.

கொடுமை என்னவென்றால் எந்த அநீதியான இழிவான கற்பிதமான நெறிகளைச் சொல்லி பெண்ணின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினார்களோ அந்த நெறிகளை பெண்களே மனமுவந்து ஏற்றுக் கொள்ள வைத்திருப்பதில் தான் சநாதனத்தின் சாமர்த்தியம்.

எந்த சாஸ்திர சம்பிரதாய சடங்குகளிலும் பெண்களை முன்னிறுத்துவதில்லை. ஆனால் பெண்கள் அதைப்பற்றி எந்த எதிர்ப்புமின்றி அந்த சடங்குகளையும் சாஸ்திரங்களையும் கறாராகக் கடைப்பிடிக்க நினைக்கின்றனர். அப்படி கடைப்பிடிக்கவில்லையென்றால் தன்னுடைய குடும்பநலன் பாதிக்கப்படும் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்ணுக்குச் சொத்தில்லை என்று மனுதர்மசாஸ்திரம் அத்தியாயம் 9-ல் 416 ஆம் விதி கூறுகிறது. பெண்களை அடிக்கலாம் என்று அத்தியாயம் 8-ல் 299 ஆம் விதி கூறுகிறது.

இதெல்லாவற்றையும் விட கொடிய விதி அத்தியாயம் 11-ல் 67-ஆம் விதி கூறுகிறது.
“ குடிகாரர்கள், ஸ்திரிகள், சூத்திரர்கள், வைசியர்கள், அல்லது ஷத்திரியர்கள், மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய யாவும் சிறிய குற்றங்களேயாகும். “

பிராமணர்களைக் கொல்வது மட்டுமே பெரும்பாதகம். மற்றவர்களையெல்லாம் கொல்வது சிறிய பாவம் என்று மனுதர்மத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்து மதம்மட்டுமல்ல. கிறித்துவம், இஸ்லாம் போன்ற நிறுவனமயமாக்கப்பட்ட அனைத்து மதங்களிலும் இதுதான் நிலைமை.

. எப்படி பிறப்பின் வழியாக உடல்களின் மீது சாதி என்னும் ஏற்றதாழ்வுமிக்க அமைப்பு மனிதர்களைப் பிரித்தாள்கிறதோ தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறதோ, அதே போல பெண் உடல் என்ற ஒரே காரணத்துக்காக அந்த உடலின் மீது தீண்டாமையையும், வன்முறையையும், சுரண்டலையும் நிகழ்த்துகிறது ஆணாதிக்கம்.

சாதிகள் ஒழிய வேண்டுமென்றால்( மனிதகுலத்தில் சரிபாதியாக இருக்கிற பெண்களின் )
பெண்சமத்துவம் பெண்விடுதலை ஆகியவை ஒரு முக்கிய முன்நிபந்தனைகளாக இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்..

Friday 17 May 2019

யார் இந்து?

யார் இந்து?

இந்தியச் சமூக அமைப்பைப் புரிந்து கொள்ளவும், நிர்வாக நலனுக்காகவும், இந்திய மக்களை வகைப்படுத்தி, தொகுக்கும் வேலையைத் தொடங்கியது. 1871 – ஆம் ஆண்டு டபிள்யூ.ஹெச்.எல்லீஸ் என்ற ஆங்கிலேய அதிகாரியின் தலைமையில் சென்சஸ் எடுக்கப்பட்டது. அத்துடன் அவர் “ THE CODE OF HINDU LAW “ என்னும் கட்டுரையையும் எழுதினார். அதோடு இந்திய சமூகத்தை ஆங்கிலேயக்கிறித்துவக்கண்  (அதாவது ஒற்றைமதக்கோட்பாடு ) கொண்டு பார்த்ததின் விளைவாக அனைத்து சமயக்குழுக்களும் ஒற்றை மதத்தின் குடைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டனர்.

ஸ்மார்த்தம், சைவம், வைணவம், காளி வழிபாடு, முருகவழிபாடு, தாந்திரீக வழிபாட்டு, தாய்த்தெய்வ வழிபாடு, சாக்தம், சாங்கியம், என்று எண்ணற்ற மாறுபட்ட முரண்பட்ட சமயங்களைக் கொண்டவர்களை இந்து என்ற ஒற்றை வார்த்தையில் அடைத்து வைத்தனர்.

கெடுவாய்ப்பாக அந்த இந்து என்ற அந்த ஒற்றை வார்த்தையின் சிம்மாசனத்தில் வேத பிராமணர்களான ஸ்மார்த்த மரபினர் உட்கார வைக்கப்பட்டனர். அதே ஆங்கிலேயர்கள் இந்து மதத்தை உருவாக்கிய மாதிரி இந்து மதக்கோட்பாட்டையும் உருவாக்கினர். புனித நூலாக வேதங்களையும் பகவத்கீதையையும் இந்து மதச்சட்ட நூலாக மனு தர்மசாஸ்திரத்தையும் முன் வைத்தனர்.

சைவ ஆகமத்தையும் வைணவ ஆகமத்தையும் புறந்தள்ளினர். அந்த கோஷ்டிச் சண்டை இன்னும் நடக்கிறது என்பது வேறு விஷயம். அதுமட்டுமல்லாமல் மனுதர்ம சாஸ்திரத்தை அங்கீகரித்ததின் மூலம் கொடிய சாதியப்படிநிலைகள் நிலைத்திருக்க வழி செய்து விட்டனர்.. இப்படித்தான் வரலாற்றில் நவீன இந்து மதம் கற்பிதமாக உருவாக்கப்பட்டது.

மறைந்த சந்திரசேகர சங்கராச்சாரியார் அவருடைய தெய்வத்தின் குரல் என்ற நூலில் சென்சஸ் எடுத்து எல்லாசமயக்குழுக்களையும் இந்து என்ற ஒரே குடையின்கீழ் தன்னுடைய அதிகாரத்தின் வழியாக ஒன்று திரட்டியதைப் பாராட்டுகிறார் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

“ நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்! “

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்து மத அடையாளமே அவர்களுக்கு எதிரான அரசியல் அணி திரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டது. வேதகாலப்பழமையைப் போற்றவும் வர்ணாசிரமத்தை உறுதிப்படுத்தவும், புராண இதிகாசங்களை விடுதலைப்போராட்டத்துக்கான பிரசாரக்கருவிகளாக மாற்றிய புதிய நடுத்தரவர்க்கம் தோன்றியது. இந்த நடுத்தர வர்க்கம் ஒரே நேரத்தில் பழமையான சாநானதனத்தைப் போற்றவும், நவீன மாற்றங்களை வரவேற்கவுமான இரட்டை முகத்தை காட்டியது. பழமையைப் போற்றிய பிராமணிய நடுத்தர வர்க்கம் மாறி வரும் புதிய அரசியல் சூழலில் தன்னை மேலாதிக்க சக்தியாக மாற்றிக் கொள்ள, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்து கலாச்சார தேசிய வாதத்தை உருவாக்கியது. அதுவே இன்று ஆர்.எஸ்.எஸ்ஸாக, பாரதிய ஜனதாவாக உருமாறி பாசிச வழியில் செல்ல முயற்சிக்கிறது. இந்தியாவின் பன்முக சமய வழிபாட்டு முறைகளையும், நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் ஒற்றைக் கலாச்சாரக் கொடுங்கரத்தால் அடக்க நினைக்கிறது. அதற்காக வரலாற்றைத் திருத்தவும் மாற்றவும் புரட்டி எழுதவும் முனைகிறது.

அபௌருஷ்யமான ( காற்றில் தானாக வந்த) வேதங்களை மட்டுமே பின்பற்றுகிற ஸ்மார்த்த பிராமணர்களைத் தவிர

இந்தியாவில் யாரும் இந்து கிடையாது.

மீள்பதிவு

Thursday 16 May 2019

காந்தியைக் கொன்றது ஏன்?

காந்தியைக் கொன்றது ஏன்?
காந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்?
தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் போது இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் நாட்டு விடுதலை கிடைத்த போது இருந்த மகாத்மா காந்திக்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவரே, “ உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துகளை கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றிருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார். அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் இந்து மதப்பற்றாளர். ஆனால் மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” என்று முழங்கினார். காந்தி முன்மொழிந்தது புவியியல் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ( inclusive nationalism ) தேசியம்.
காந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேருவும் நாத்திகர்கள். அது மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ’ கடவுள் தான் உண்மை ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ‘ உண்மையே கடவுள் ‘ என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர். இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கச் செய்தது.
மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறிவன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.
காந்தி ராமராஜ்யம் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை அவரே விளக்கினார். “ ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. கடவுளின் அரசு என்ற பொருளிலேயே கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை.
ராமராஜ்யம் என்பதற்கு இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அரசியல்ரீதியாகப் பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து போன நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும். அதில் நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும். ஆகவே வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார்.
இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குரானாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனவே தான் “ என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.
தன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்த மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர். காந்தியின் மரணத்தில் கூட கலவரம் விளைந்திடத் திட்டமிட்ட நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் வெறியர்கள். பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பத்திரமாக இருந்த மகாத்மா சுதந்திரஇந்தியாவில் ஐந்து மாதங்களுக்குள் கொலையுண்டார் என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் இறந்து 70 ஆண்டுகளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.
புத்தர், ஏசு, காந்தி, என்று புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்த மகாத்மா, உலகம் முழுவதும் தன்னுடைய அகிம்சைக் கொள்கைக்காகவும் சத்யாக்கிரகப்போராட்டத்திற்காகவும், இன்றும் நினைக்கப்படுகிற மகாத்மா தன் பொக்கைவாய்ச்சிரிப்போடு நம்மைப் பார்த்து அவருடைய வழக்கமான பஜனைப் பாடலைப் பாடுகிறார்.
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ஈசுவர அல்லா தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்.
இந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்கிறதா உங்களுக்கு.
ஈசுவரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே
எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே!

Monday 13 May 2019

புலியும் எலியும்


புலியும் எலியும்

உதயசங்கர்

புல்லூர் காட்டில் உலகத்திலுள்ள எல்லாவித விலங்குகளும், எல்லாவித பறவைகளும், எல்லாவித புழுபூச்சிகளும் வாழ்ந்து வந்தனர். அதாவது,, சிங்கம், புலி, காண்டாமிருகம், கழுதைப்புலி, சிறுத்தை, சிவிங்கிப்புலி, ஓநாய், செந்நாய், நரி, குள்ளநரி, காட்டெருமை, ஒட்டகச்சிவிங்கி, புள்ளிமான், கடமான், வரையாடு, கேழை மான், வரிக்குதிரை, மிளா, கீரி, காட்டு அணில், காட்டு எலி, வெள்ளெலி, முள்ளெலி, மூஞ்சுறு, முள்ளம்பன்றி, சுண்டெலி, பெருச்சாளி, மலைப்பாம்பு, ராஜநாகம், நாகப்பாம்பு, சாரைப்பாம்பு, கொம்பேறிமூக்கன், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மஞ்சள் விரியன், காட்டுக்கோழி, மயில், புள்ளிக்குயில், கருங்குயில், மைனா, அண்டங்காக்கா, சாம்பல் காக்கா, சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, கரிச்சான்குருவி, தூக்கணாங்குருவி, ஆந்தை, கூகை, பனங்காடை, மரங்கொத்தி, சிவப்புக்கொண்டைக்குருவி, காடை, கௌதாரி, அன்றில், தேன்சிட்டு, தையல்சிட்டு, ஊதாச்சிட்டு, பூரான், சேடான், செந்தேள், கருந்தேள், நட்டுவாக்காலி, மண்புழு, மரவட்டை, நத்தை, அட்டைப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, பட்டாம்பூச்சி, தட்டான், தங்கத்தட்டான், பச்சைத்தட்டான், மரப்பல்லி, ஓணான், சில்லான், பச்சோந்தி, பொரிவண்டு, பீஉருட்டிவண்டு, சில்வண்டு, பொன்வண்டு, பழந்தின்னிவௌவால், என்று எல்லா உயிரினங்களும் வாழ்ந்தனர்.
அங்கே ஒரே ஒரு வயதான சிங்கம் இருந்தது. அதுதான் புல்லூர் காட்டுக்கு ராஜா. ஏதோ கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டு சிங்கம் நோயில் விழுந்தது. சில நாட்களில் அது இறந்து விட்டது. உடனே அந்தக் காட்டிலுள்ள எல்லா விலங்குகளும் சேர்ந்து தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கக் காட்டில் இருந்த பெரிய ஆலமரத்தடியில் கூடினர். புல்லூர் காட்டு மந்திரிசபையின் மூத்த அமைச்சர் கொம்பன் ஆந்தையார் தூங்கி வழிந்து கொண்டிருந்தார். அவர் தான் பகல் தூக்கக்காரர் ஆயிற்றே. உடனே அண்டங்காகம் ஆந்தையாரின் இடுப்பில் ஒரு கொத்து கொத்தினார். உடனே திடுக்கிட்டு விழித்த ஆந்தையார்,
“ அதாவது நமது காட்டில் இப்போது சிங்கம் இல்லாதாதால் யாரை வேண்டுமானாலும் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை போட்டி நடக்கும். யார் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறீர்களோ அவர்கள் எழுந்து தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்…”
என்று கரகரத்த குரலில் கத்தியது. அவ்வளவு தான் எல்லோரும் ஒரே நேரத்தில் நான் தலைவருக்குப் போட்டியிடுகிறேன். நான் தலைவருக்குப் போட்டியிடுகிறேன்.. நான் தலைவருக்குப் போட்டியிடுகிறேன் என்று முண்டியடித்தன. பறவைகளில் வல்லூறு முதல் சிட்டுக்குருவி வரை பூச்சிகளில் சேடான் முதல் பீயுருட்டி வண்டு வரை, ஊர்வனவற்றில் ராஜநாகம் முதல் மண்ணுளிப்பாம்பு வரை, விலங்குகளில் மான் முதல் சுண்டெலி வரை போட்டிக்குத் தயார் என்று பெயர் கொடுத்தார்கள். அப்போது புலி எழுந்து தன்னுடைய உரத்த குரலில்
“ நான் போட்டியிடப் போகிறேன்…” என்று உறுமியது. அவ்வளவு தான். எல்லோரும் கப்சிப்பென்று ஆகிவிட்டார்கள். அப்படியே பத்தடி தூரம் பின்னால்போய் நின்று விட்டார்கள். புலிக்கு வழி எளிதாகக் கிடைத்துவிட்டது. அது ஆந்தையாருக்கு முன்னால் போய் நின்றது. என்ன இது? எல்லோரும் பின்னால் போய்விட்டாலும் ஒரு சுண்டெலி மட்டும் ஆந்தையாருக்கு அருகில் நின்று கொண்டிருந்தது. புலிக்குக்கோபம். என்ன தைரியம்! ஆந்தையாருக்கு சுண்டெலி அதன் அருகில் நின்று கொண்டிருந்தது தெரியவில்லை. ஆந்தையாரே பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.
“ புலியாருடன் போட்டி போட யாரும் இல்லையா? “ என்று கேட்டது. அருகில் இருந்த சுண்டெலி,
” நான் நிக்கறது உன் முட்டைக்கண்ணுக்குத் தெரியலையா ஆந்தைத்தடியா? “
என்று கீச்சிட்டது. ஆந்தையாருக்குக் கோபம் பொங்கி வந்தது. மற்ற நேரமாக இருந்தால் ஒரே விழுங்கில் சுண்டெலி போன இடம் தெரியாது. இப்போது தேர்தல் நேரம். எதுவும் செய்ய முடியாது. உடனே,
“ நல்லா யோசிச்சிச் சொல்லு.. நீயா போட்டி போடப்போறே..”
என்று சிரித்தது. ஆந்தையார் சிரித்ததும் அங்கே கூடியிருந்த அத்தனை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எல்லாம் கெக்க்கேக்க்கே என்று சிரித்தன. புலியும் சிரித்தது. சுண்டெலிக்குக் கோபம் வந்தது. உடனே ஆந்தையாரின் தலைமீது ஏறி நின்று கொண்டு,
“ நண்பர்களே! புலியோ, நரியோ, பூங்குருவியோ, கழுகோ, பாம்போ, பல்லியோ, போட்டி என்றால் போட்டி தான். எளியோரை ஏளனம் செய்யாதீர்கள்..” என்று முழங்கியது. எல்லோரும் அமைதியானார்கள். புலி அலட்சியமாகப் பார்த்தது.
“ சரி சரி நமது முன்னோர்கள் சொன்ன போட்டி இது. இதோ இந்த அல்லிக்குளத்திலிருந்து புறப்பட்டு நமது புல்லூர் காட்டு எல்லையிலுள்ள அல்லிக்குளத்தை யார் முதலில் சென்று தொட்டு விட்டு வருகிறார்களோ அவர்களே நமது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்…”
உடனே போட்டியின் நடுவர் ஒரு சீம்புல் கற்றையை எடுத்து தரையில் கோடு போட்டார். அந்தக் கோட்டில் புலியும் சுண்டெலியும் நின்றன. குயில் புங்கைமரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு,
“ குக்க்கூகுக்க்க்கூகூ.. “ என்று விசில் ஊதியது. உடனே புலியும் சுண்டெலியும் பாய்ந்து ஓடின. நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து சென்றது புலி. கொஞ்சதூரம் போனதும் ஓடிக்கொண்டே திரும்பிப்பார்த்தது. சுண்டெலியைக் காணவில்லை. இத்துணூண்டு சுண்டெலி எப்படி ஓட முடியும்? வெற்றி எனக்கே. என்று நினைத்தபடி வேகமாக ஓடியது.
புல்லூர் காட்டின் எல்லையில் இருந்த அல்லிக்குளத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பிய புலி அதிர்ச்சி அடைந்தது. பார்த்தால் ஆந்தையார் சுண்டெலிக்கு வெற்றிமாலையைச் சூடிக்கொண்டிருந்தது. ஓடிப்போய் தலைகுப்புற விழுந்த புலி “ எப்படி? இது எப்படி ? எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறீர்களா? “
ஆந்தையார், “ புலியாரே அமைதி! அமைதி! நீங்கள் தரைக்கு மேல் ஓடினீர்கள். சுண்டெலியார்  தரைக்குக்கீழ் ஓடிச் சென்று வெற்றி பெற்று விட்டார்… இனி அவர் தான் இந்தப்புல்லூர் காட்டின் தலைவர்…இது நம்முடைய குலதெய்வமான இயற்கையன்னையின் ஆணை..”
விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எல்லோரும் சுண்டெலியின் வெற்றியைக் கொண்டாடினார்கள். சுண்டெலியை ஆளாளுக்குத் தலையில் வைத்துக்கொண்டு ஆடினார்கள்.
மறுநாள் சுண்டெலி காட்டில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழைத்தது.
“ நண்பர்களே! எனக்கு அலுவல்கள் அதிகமாக இருப்பதால் உணவு தேடிச் செல்ல முடியவில்லை. எனவே தினம் மூன்று வேளையும் உணவை நீங்கள் வரிசையாகக் கொண்டுவந்து தரவேண்டும்…”
அப்புறம் என்ன? எல்லா விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் சுண்டெலியின் வளைக்கு முன்னால் வரிசையில் நின்று புல், பூண்டு, அரிசி, கம்பு, கேப்பை, குதிரைவாலி, சோளம், பழங்கள், காய்கறிகள், என்று ஏராளமாய் கொண்டு வந்து கொடுத்தன. உழைக்காமல் ஓசியில் கிடைத்த சாப்பாட்டை வயிறு முட்டத்தின்ற சுண்டெலி என்ன ஆனது தெரியுமா?
பெருச்சாளி ஆகிவிட்டது. அதனால் அசையக்கூட முடியவில்லை. காட்டில் உள்ள எல்லோருக்கும் அலுத்து விட்டது. அவர்களுக்கு உணவு தேடுவதே பெரும்பாடு. இதில் சுண்டெலிக்கும் சேர்த்து உணவு தேடவேண்டும் என்றால் எரிச்சல் வரத்தானே செய்யும்! எப்போது ஐந்து வருடம் முடியும் என்று காத்திருந்தார்கள்.
அந்த நாளும் வந்தது. போட்டி நடக்கும் நாளில் மறுபடியும் புலி போட்டி போட்டது. சுண்டெலியால் நடக்கக்கூட முடியவில்லை. ஆனாலும் கவுரவத்துக்காகப் போட்டியில் நின்றது. குயில் கூவியதும் புலி பாய்ந்து சென்றது. ஆனால் சுண்டெலியால் பத்தடி தூரம் கூட நடக்கமுடியவில்லை. அந்தப் போட்டியில் புலி தான் வெற்றி பெற்றது என்று சொல்லணுமா என்ன?
மறுநாள் புல்லூர் காட்டின் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எல்லோரையும் தன்னுடைய குகைக்கு முன்னால் வரும்படி ஆணை இட்டது.
“ எனக்கு அரசு அலுவல்கள் அதிகம் இருப்பதால் இன்று முதல் மூன்று வேளையும் உங்களில் யாராவது ஒருவர் எனக்கு உணவாக வந்து சேர வேண்டும். இல்லை என்றால் அவர்களுடைய குடும்பத்தையே அழித்து விடுவேன்….”
என்று உறுமியது. அத்தனை விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் நடுங்கி விட்டன. புலிக்கு எலியே பரவாயில்லை என்று நினைத்தன. தினம் ஒவ்வொரு இனத்திலிருந்தும் ஒரு விலங்கு, ஒரு பறவை, ஒரு பூச்சி, என்று புலியின் குகைக்குள் போயின. யாரும் திரும்பி வரவில்லை. எல்லாவிலங்குகளின் எண்ணிக்கையும் காட்டில் குறைந்து கொண்டே வந்தது.
ஒரு நாள் ஒரு புள்ளிமானின் முறை. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் ஒரு குட்டி பிறந்திருந்தது. அது புலிக்கு இரையாகி விட்டால் குட்டிக்கு யார் பால் கொடுப்பது? அது பசியில் அழுதே இறந்து விடுமே என்று நினைத்தது. அதனால் குட்டியையும் சேர்த்தே கூட்டிக்கொண்டு போய் விடலாம் என்று முடிவு செய்தது. அதனுடைய நிலைமையைக் கண்டு மற்ற மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், எல்லோரும் பரிதாபப்பட்டனர். உச்சுக் கொட்டினர். எதுவும் அறியாத மான்குட்டி விளையாடிக்கொண்டிருந்தது.
செவலைக்கருப்பு நிறமுள்ள ஒரு முயல் யோசித்தது. அது செங்கரடியின் காதில் ரகசியம் பேசியது. செங்கரடி ஓநாயிடம் சொன்னது. ஓநாய் வல்லூறுவிடம் சொன்னது. வல்லூறு பொரிவண்டிடம் சொன்னது. பொரிவண்டு சில்வண்டிடம் சொன்னது. சில்வண்டு காட்டிலுள்ள அத்தனை மிருகங்கள், பறவைகள், பூச்சிகளிடம் சொன்னது. உடனே எல்லோரும் புள்ளிமானை முன்னால் விட்டு, பின் தொடர்ந்து போனார்கள்.
புலிக்குகை வாசலில் நின்று மான்,
“ நான் வந்திருக்கேன்..தலைவரே.” என்று கத்தியது. உறங்கிக் கொண்டிருந்த புலி மெல்ல எழுந்து வாசலுக்கு வந்தது. பார்த்தால் வாசலில் சிங்கம் நின்று கொண்டிருந்தது.
“ இயற்கையன்னையின் சட்டத்தை மதிக்காமல் எல்லோரையும் அநியாயமாய் தின்று தீர்க்கும் உன்னை இதோ இப்போதே விழுங்கப்போகிறேன்… ” என்று கர்ச்சித்தது. பின்னாலிருந்து அனைத்து விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும் ஓ வென கத்தின.
“ கொல்லுங்க..புலியைக் கொல்லுங்க..”
அந்தக் குரலைக் கேட்டதும் புலி குகையை விட்டு தலைதெறிக்க ஓடியது. புலி ஓடியதும் சிங்கம் அந்தக் காடே அதிரும்படி கர்ச்சித்தது. ஆனால் அது செங்கரடியின் குரலாக இருந்தது. முயலும், புள்ளிமானும், புள்ளிமான்குட்டியும் கூட்டத்திலிருந்து வந்தன. அப்போது குயில்,
“ செங்கரடியாரே நீங்களே தலைவராக இருந்துருங்க..” என்று கூவியது. அதைக்கேட்ட செங்கரடி,
“ இல்லை..இல்லை.. நாம் யாருமே தலைவர்கள் இல்லை. இயற்கையன்னை தான் நமக்கு எல்லாம் தலைவி.. அவளுடைய சட்டங்களின்படி வாழ்ந்தால் போதும்.. யாருக்கும் எந்தத் துன்பமும் வராது..”
என்றது. உடனே எல்லோரும்,
“ இயற்கையன்னை வாழ்க! இயற்கையன்னை வாழ்க! ” என்று முழங்கினர்.
நன்றி - வண்ணக்கதிர்
10 +




Saturday 11 May 2019

ஒரு எழுத்தாளரை நினைவு கூறுவது என்பது....

ஒரு எழுத்தாளரை நினைவு கூறுவது என்பது.....
1. எழுத்தாளரின் படைப்புகள் குறித்துப் பேசுவது
2. எழுத்தாளரின் படைப்புகள் இலக்கியத்தில் வகிக்கும் பங்குபாகம் பற்றிப் பேசுவது
3. எழுத்தாளரின் படைப்புகளுக்கு கிடைத்த அங்கீரகாரங்களைப் பற்றிப் பேசுவது
4. எழுத்தாளருக்குக் கிடைத்திருக்கவேண்டிய அங்கீகாரத்தைப் பற்றிப் பேசுவது
5. எழுத்தாளரின் படைப்புகள்வழியே சமூகத்துக்குக் கொடுத்துள்ள கொடை ( அழகியல், அரசியல், தத்துவம், பண்பாடு ) பற்றிப் பேசுவது
6. எழுத்தாளரின் வாழ்க்கைக்கும் அவருடைய படைப்புகளுக்குமான உறவையும் முரணையும் பற்றிப் பேசுவது
7. எழுத்தாளரின் வாழ்க்கை அநுபவங்களைக் குறித்து பேசுவது
8. எழுத்தாளரின் வாழ்வில் அவர் பெற்றதையும் இழந்ததையும் பற்றிப் பேசுவது
9. எழுத்தாளரின் குடும்பம் செய்த தியாகங்களைப் பற்றிப் பேசுவது
10. எழுத்தாளரின் படைப்புகளை பரவலாகக் கொண்டு செல்வதற்கான வழிவகைகளைக் கண்டறிவது
11. எழுத்தாளரின் படைப்புகள் குறித்து ஆண்டு தோறும் நினைவுச்சொற்பொழிவு நடத்துவது. அதன்மூலம் புதிய தலைமுறைக்கு அவருடைய படைப்புகளை அறிமுகம் செய்வது..
12. எழுத்தாளரின் பெயரில விருது ஒன்றை அறிவிப்பது..
13. எழுத்தாளரின் படைப்புகள் வாசிப்புக்குக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்வது
14. எழுத்தாளர் வாழும்போதே அவரைப் பற்றி எழுத்துவடிவிலோ, ஆவணப்படமாகவோ, எடுத்துப் பதிவு செய்வது..
15. ஒரே நாளில் அனைத்து ஊர்களிலும் அவருடைய படைப்புகள் குறித்து உரையாடல் நடத்துவது..
தோப்பில் முகமது மீரான் நினைவாக...

Saturday 4 May 2019

உழைப்பு என்பது...

உழைப்பு என்பது...
1. குரங்கிலிருந்து மனிதன் தோன்றுவதற்கு முக்கியமான காரணி.
2. சேர்ந்திருந்த ஐந்து விரல்கள் பிரிந்து ஆறாவது அறிவை உருவாக்கிய வித்து.
3. இயற்கையின் மீது வினையாற்றி அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று நிரூபித்த யதார்த்தம்.
4. தன்னிலிருந்து தன்னைத் தனியாகப்பார்த்து தன்னைப் பற்றி சிந்திக்க உதவிய உபகரணம்.
5. காதலை, அன்பை, நேசத்தை, மனிதனுக்குப் புரியவைத்த ஆயுதம்
6. மனிதனை மனிதன் சுரண்டுவதை எதிர்த்துக் கிளம்பிய கூரம்பு.
7. மானுடவாழ்வின் அர்த்தத்திற்கு அடிப்படையான அகராதி.
8. உலகைப் புரிந்து கொள்ள உதவும் உருப்பெருக்கிக்கண்ணாடி
9. சநாதனத்தத்துவங்களை வீழ்த்தும் அறிவியல் வேர்.
10. உலகை விளக்குவதற்கல்ல மாற்றுவதற்குப் பிறந்த பேரன்புக்கனவு.
உழைப்பைப் போற்றுவோம்
உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்.
உலக உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்