அந்தர்பல்டி ராஜாவும் சம்மர்சால்ட் மந்திரியும்
உதயசங்கர்
அறிவூர் நாட்டுக்கு அந்தர்பல்டி சர்க்கஸ் வந்தது. புதிதாக உருவான அந்தர்பல்டி சர்க்கஸ் கம்பெனி ஒவ்வொரு ஊராய் போவார்கள். கொட்டகை போடுவார்கள். சர்க்கஸ் நிகழ்ச்சியை மக்களிடம் விளம்பரம் செய்வார்கள். தெருக்களில் ஒரு கோமாளி அந்தர்பல்டி அடிப்பார். ஒரு கோமாளி குட்டிக்கரணம் அடிப்பார். ஒரு கோமாளி சம்மர்சால்ட் அடிப்பார். சிறிய கூண்டு ஒன்றில் பேசும் பஞ்சவண்ணக்கிளி ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும். ஆடும் மயில், ஆடாத யானை, ஓடாத குதிரை எல்லாம் சில வண்டிகளில் வரும்.
“ அந்தர்பல்டி பாருங்கள்!
சம்மர்சால்ட்டும் பாருங்கள்!
கோமாளிகளைப் பாருங்கள்!
குடும்பத்துடன் பாருங்கள்! “
என்று போஸ்டர் அடித்து விளம்பரம் செய்தார்கள். குழந்தைகளிடம் துண்டுப்பிரசுரம் கொடுத்தார்கள். அந்த நாட்டுக்கு அப்போது தான் முதல்முறையாக சர்க்கஸ் கம்பெனி வந்திருக்கிறது. எனவே மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று சர்க்கஸ் பார்த்தார்கள். கோமாளிகளின் கூத்துகளைப் பார்த்து குழந்தைகள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதிலும் அந்தர்பல்டி ஆறுமுகத்தை அவர்களுக்கு ரொம்பப் பிடித்து விட்டது. வீட்டுக்கு வந்து அந்தர்பல்டி ஆறுமுகம் மாதிரியே அந்தர்பல்டி அடித்தார்கள். பெரியவர்களும் அதை ரசித்தார்கள். சிறிது நாட்களிலேயே அந்தர்பல்டி ஆறுமுகம் புகழ் பெற்றார்.
அறிவூரில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னருக்கான தேர்தல் வரும். மக்கள் ஓட்டுப்போட்டு மன்னரைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்போதும் தேர்தல் வந்தது. அந்தர்பல்டி ஆறுமுகத்துடன் இருந்த சம்மர்சால்ட் சாத்தப்பன் ஒரு திட்டம் போட்டார். அந்தர்பல்டி ஆறுமுகத்திடம்,
“ ஆறுமுகண்ணே! நீங்க இந்தத் தேர்தல்ல நில்லுங்கண்ணே..நிச்சயம் செயிச்சிரலாம்..”
“ சாத்தப்பா.. எனக்கு அரசாங்கம்னா என்னன்னு தெரியாதே..”
“ அதெல்லாம் நாம் பாத்துக்கிறேண்ணே..”
அந்தர்பல்டி ஆறுமுகத்துக்கும் ஆசை முளைத்தது. உடனே அந்த நாட்டுத் தேர்தலில் நின்றார். நான் வெற்றி பெற்றால் வானத்தில் உங்களுக்கு வீடு கட்டித் தருவேன். அங்கே இலவசமாக நிலம் கொடுப்பேன். அதில் நீங்கள் மேகங்களை விதைத்துப் பயிர் செய்து மழையை அறுவடை செய்யலாம். அந்த மழையை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்து கோடீஸ்வரனாகலாம்...
குழந்தைகளுக்கு புதிய புதிய சர்க்கஸ் செய்து காட்டுவேன். அந்தர்பல்டி, ஆகாசபல்டி அடிப்பேன். வீட்டுக்கொரு சாக்லேட் மரம் கொடுப்பேன்.. காட்பரீஸ், எக்ளேர்ஸ், பாரிஸ், என்று விதவிதமான சாக்லேட்டுகளை அந்த மரத்திலிருந்து பறித்துச் சாப்பிடலாம் என்று விளம்பரம் செய்தார்கள்.
குழந்தைகள் எல்லாரும் அவர்களுடைய அப்பா அம்மா தாத்தா பாட்டி மாமா மாமி சித்தப்பா சித்தி எல்லாரிடமும் அந்தர்பல்டி ஆறுமுகத்துக்குத் தான் ஓட்டு போடவேண்டும் என்று அழுது அடம் பிடித்தனர்.
அவர்களும் குழந்தைகளைச் சமாதானப்படுத்த அந்தர்பல்டி ஆறுமுகத்துக்கே ஓட்டுப் போட்டனர்.
அந்தர்பல்டி ஆறுமுகத்தின் அந்தர்பல்டி சர்க்கஸ் கம்பெனி ஆட்சியைப் பிடித்து விட்டது. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. முடிசூட்டு விழாவில் அந்தர்பல்டி ஆறுமுகம் பல்டி அடித்துக் கொண்டே பதவி ஏற்றார். சம்மர்சால்ட் மந்திரியும் சம்மர்சால்ட் அடித்துக் கொண்டேயிருந்தார். அந்த நிகழ்ச்சியை அத்தனை தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பினார்கள். மக்கள் அனைவரும் கை தட்டி ரசித்தார்கள்.
அந்த ஆண்டு மழை பெய்யவில்லை. மக்கள், மன்னரிடம் சென்று ,
“ மன்னா.. மழையில்லை.. விவசாயம் இல்லை.. பக்கத்து நாட்டில் பேசித் தண்ணீர் பெற்றுத்தாருங்கள்..” என்று முறையிட்டார்கள். ஆறுமுகம் சாத்தப்பனைப் பார்த்தார். சாத்தப்பன் கண்ணைக் காட்டினார்.
“ இதோ எல்லாம் மாறப் போகிறது..”
என்று அங்கேயே அவர்கள் முன்னால் ஒரு அந்தர்பல்டி அடித்தார் ஆறுமுகம். மக்கள் கைதட்டினார்கள்.
” ஆகா ஆகா “ என்றார்கள்.
அடுத்ததாக இளைஞர்கள் வந்தார்கள்.
“ மன்னா.. நாங்கள் தான் உங்கள் அந்தர்பல்டி போஸ்டருக்கு பால் ஊற்றினோம்.. தேன் ஊற்றினோம்… எங்களுக்கு வேலையில்லை.. வேலைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..”
என்றார்கள். உடனே அந்தர்பல்டி ராஜா சம்மர்சால்ட் சாத்தப்பனைப் பார்த்தார்..
“ எல்லாம் மாறப்போகிறது “ என்று சொல்லியபடி சாத்தப்பன் சம்மர்சால்ட் அடித்தார் இளைஞர்கள் கை தட்டினார்கள்.
“ அடடா அடடா “ என்றார்கள்.
அடுத்துப் பெண்கள் வந்தார்கள்.
“ அரசே நாங்கள் உங்களுக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.. ஆனால் இப்போது நாட்டில் எங்களுக்குப் பாதுகாப்பில்லை.. எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்..”
என்றார்கள். உடனே அந்தர்பல்டி ஆறுமுகமும் சம்மர்சால்ட் சாத்தப்பனும் சேர்ந்து,
“ எல்லாம் மாறப்போகிறது..” என்று சொல்லியபடியே அந்தர்பல்டியும் சம்மர்சால்ட்டும் அடித்தார்கள்.
பெண்கள் சிரித்தார்கள். ஆனந்தத்தில் அழுதார்கள்.
“ போதும் போதும் அரசே.. நீங்கள் பாதுகாப்பாய் இருந்து கொள்ளுங்கள்.. “
என்று சொல்லிக் கைதட்டி விட்டுப் போனார்கள்.
பிறகு குழந்தைகள் வந்தார்கள்.
“ மன்னரே நாங்கள் தான் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லி உங்களுக்கு வாக்களிக்கச் சொன்னோம்.. ஆனால் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.. “ என்றார்கள்.
உடனே அந்தர்பல்டி சர்க்கஸ் கம்பெனி குழந்தைகள் முன்னால் அந்தர்பல்டி, சம்மர்சால்ட், குட்டிக்கரணம், பேசும்கிளி, பேசாத குதிரை, ஆடும் மயில், ஆடாத யானை எல்லாத்தையும் அழைத்து சர்க்கஸ் காட்டினார்கள். குழந்தைகள் சிரித்தார்கள். கைதட்டினார்கள். எதற்காக வந்தோம் என்பதையே மறந்து விட்டார்கள்.
ஆனால் அந்த நாட்டில் எதுவும் மாறவில்லை. யார் போய் என்ன கேட்டாலும் அந்தர்பல்டியும் சம்மர்சால்ட்டும் தான் கிடைத்தன.
பெரியவர்கள் யோசித்தார்கள்.
இளைஞர்கள் யோசித்தார்கள்.
பெண்கள் யோசித்தார்கள்.
குழந்தைகள் யோசித்தார்கள்.
அந்தர்பல்டியும் சம்மர்சால்ட்டும் பார்ப்பதற்குத்
தான் நன்றாக இருக்கிறது. நமக்கு உணவு வேண்டும்,
வேலை வேண்டும். கல்வி வேண்டும்.
அப்போது மதியரசன் என்ற சிறுவன் சொன்னான்.
“ இந்தச் சர்க்கஸ் கம்பெனியை விரட்டுவதற்கு
என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது.. நாம் எல்லாருமே சம்மர்சால்ட்டும்
அந்தர்பல்டியும் கற்றுக் கொண்டால் என்ன? “
எல்லாரும் அந்தர்பல்டி அடித்தார்கள்.
சம்மர்சால்ட் அடித்தார்கள்.
குட்டிக்கரணம் அடித்தார்கள்.
அதனால் அந்தர்பல்டி ராஜாவும் சம்மர்சால்ட் ராஜாவுக்கும் வேறுவழியில்லை. மக்களுடைய பிரச்னைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஆனால் இடையிடையே அந்தர்பல்டி அடிக்கத் தான் செய்தார் ராஜா. சம்மர்சால்ட் அடிக்கத்தான் செய்தார் மந்திரி.
ஆனால் மக்கள் இப்போது சிரிப்பதில்லை.
கை தட்டுவதில்லை..
உங்கள் நாடு எப்படி இருக்கிறது குழந்தைகளே!
நன்றி - வண்ணக்கதிர்
.jpeg)