Wednesday, 15 June 2022

மண்டு ராஜா போட்ட சாலை

 

மண்டு ராஜா போட்ட சாலை

உதயசங்கர்


மாமண்டுர் நாட்டு ராஜாவான மண்டு ராஜா திடீரென்று ஒருநாள் ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், உலகத்தைக் காப்பாற்ற வந்த உத்தமர் என்று அவனுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. அவனுடைய பட்டுச்சட்டையில் பதக்கம் குத்தி அவனை யானை மீது உட்காரவைத்து ஊர்வலமாய் அழைத்துச் சென்றார்கள். மக்கள் எல்லாரும் பூமழை தூவினார்கள். காலையில் கண்விழித்தவுடன் அவனுடைய மந்திரியை அழைத்து,

“ மகா மந்திரியாரே நான் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே! உடனே செய்ய வேண்டும்.. நான் கனவில் கண்ட விருது வழங்கும் விழாவை நடத்த வேண்டும்.. “

என்று சொன்னான். உடனே மந்திரி,

“ அதுக்கென்ன அரசே! உடனே செய்து விடலாம்.. நமது நாட்டிலேயே மிகவும் ஏழையின் குடிசைக்கு சாலை வசதி செய்து கொடுக்கலாம்.. அதற்கு உலகவங்கியிடம் கடன் வாங்கலாம்.. அந்தச் சாலை போடும் திட்டத்தை உங்கள் மகனுக்கேக் கொடுத்து விடலாம்..”

என்று சொன்னான். மண்டு ராஜா முகத்தில் மகிழ்ச்சி.

“ ஆகா! நல்ல திட்டமாக இருக்கிறதே! உடனே செய்யுங்கள். நமது நாட்டில் வாழும் பரமஏழையை நாளையே அழைத்து வாருங்கள்..”

என்று சொல்லி விட்டு அடுத்த கனவைக் காணத் தூங்கி விட்டான். மறுநாள் காலை மண்டுராஜா கண் விழித்தபோது, எதிரே கந்தல் உடையில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். முகத்தைச் சுளித்த மண்டு ராஜா,

“ யாரையா நீர்? ..” என்று கேட்டான். அந்தப்பெரியவர்,

“ அரசே! என்னைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் அழைத்ததாகச் சொன்னார்கள்..”

என்று சொன்னார்.

“ ஓ நீர் தான் நாட்டிலேயே ஏழையாக இருப்பவரா? உமக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது.. உங்கள் வீட்டுக்குச் சாலை வசதி வரப்போகிறது.. அதுவும் உமது பெயரையே அந்தச் சாலைக்கு வைத்து விடலாம்..… நானே வந்து சாலையைத் திறந்து வைக்கிறேன்..என்ன மகிழ்ச்சி தானே..”

 ” அரசே! ஏற்கனவே மண்சாலை இருக்கிறது.. எனக்கு வேண்டியது எல்லாம் என்னுடைய நிலத்துக்குத் தண்ணீர் வேண்டும்.. பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன.. தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் வெட்டிக் கொடுத்தீர்கள் என்றால் நான் என் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வேன்.. “

என்று வேண்டினார். அதைக்கேட்ட மண்டு ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது.

“ உமக்கு எவ்வளவு பெரிய நன்மை செய்கிறேன்.. சாலை வந்தால் கார், பஸ், எல்லாம் உங்கள் வீடு வரை வரும்.. எவ்வளவு பெரிய முன்னேற்றத்தை உங்களுக்கு அரசாங்கம் கொடுக்கிறது.. புரியவில்லையா? “

என்று கத்தினார்.

“ இல்லை ராஜா.. அதனால் என்னுடைய நிலத்துக்குத் தண்ணீர் கிடைக்குமா? “

“ முட்டாளே! நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. நீ என்ன புலம்பிக் கொண்டிருக்கிறாய்.. போ.. உன்னுடைய சாலையைப் பார்த்துப் பெருமைப்படு..

என்று கத்தினான் ராஜா. அந்தக் கூச்சலைக் கேட்ட அந்தப் பெரியவர் பயந்து போய் விட்டார். அந்தப் பெரியவரின் பெயரான மண்ணாங்கட்டி சாலை அரண்மனையிலிருந்து போடப்பட்டது. ராஜா கொஞ்சம் சாலையைத் தின்றார்.  மந்திரி கொஞ்சம் சாலையைத் தின்றார். பெரிய அதிகாரி கொஞ்சூண்டு சாலையைத் தின்றார். குட்டி அதிகாரி இத்தினியூண்டு சாலையைத் தின்றார். மேஸ்திரி துளியூண்டு சாலையைத் தின்றார். கடைசியில் சாலையின் நீளம் குறைந்தது. அப்படியே குறைந்து குறைந்து மண்ணாங்கட்டியின் குடிசைக்கு இரண்டு கிலோ மீட்டர் முன்னாலேயே  நின்று விட்டது.

மண்ணாங்கட்டி குடிசை வரை இருந்த மண்சாலையையும் தோண்டி பள்ளமாக்கி விட்டார்கள். இப்போது மண்ணாங்கட்டிக்கும் ஊருக்கும் நடுவில் பெரிய பள்ளம் இருந்தது. மண்டு ராஜா ஒருநாள் அந்தச் சாலையில் வந்தார். இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கையசைத்தார். அந்தச் சாலை முடியும் இடத்தில் மண்ணாங்கட்டி சாலை என்று பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார். கையை அசைத்து டாட்டா காட்டிவிட்டுப் போய் விட்டார்.

மண்ணாங்கட்டி இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்ணீரைப் பார்த்த தேவதைகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு சொடக்கு போட்டார்கள்.

அவ்வளவு தான்.

மண்ணாங்கட்டியின் குடிசையைச் சுற்றி தண்ணீர் ஓடியது. காய்ந்து கொண்டிருந்த பயிர்களில் பாய்ந்தது. பயிர்கள் மகிழ்ச்சியுடன் தலையாட்டின. அரைகுறையாகப் போடப்பட்டிருந்த சாலை மண்ணாங்கட்டியின் வீடு வரை நீண்டு வந்தது.  ஆனால் அதே நேரம் மண்டு ராஜா, மந்திரி, பெரிய அதிகாரி, சின்ன அதிகாரி, மேஸ்திரி எல்லோருடைய வீடுகளைச் சுற்றி இருந்த சாலைகள் மறைந்தன. பெரிய பெரிய பள்ளங்கள் தோன்றி விட்டன.

காலையில் கண்விழித்து வெளியில் வந்த மண்டு ராஜாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

உங்களுக்குத் தெரியும் தானே. அவர்களிடம் சொல்லி விடாதீர்கள். சரியா?

நன்றி - வண்ணக்கதிர்

No comments:

Post a Comment