ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் – 5
படைப்பின் இயக்கம்
உதயசங்கர்
கலைஞனித்திலிருந்து வெளிப்படும்
படைப்பு தன் வெளிப்பாட்டுச் செயல் முடிந்ததும் தாயிடமிருந்து தொப்புள்க்கொடி அறுந்த
குழந்தையைப் போல சுயம்புவாகி விடுகிறது. அதன்பிறகு
அந்தப் படைப்பின் மீது படைப்பாளிக்கு தன் படைப்பு என்ற உரிமையைத் தவிர வேறு ஒன்றும்
இல்லை. ஏனெனில் படைப்பாளியிடமிருந்து வெளிப்பட்ட
பிறகு தனித்துவமான உயிரியாக மாறி விடுகிறது. ஆனால்
அந்த உயிரியை உயிர்த்தெழ வைப்பது வாசகனே. வாசகன் வாசிக்கும்
வரை படைப்பு உறைநிலையிலேயே இருக்கிறது. வாசகன் அதை
வாசிக்கும் போதே அது உயிர்பெறுகிறது. படைப்பு
முழுமையடைகிற இடமாக வாசகனே இருக்கிறான். வாசகன் கண்களால்
தொடும் வரை படைப்பு மண்ணில் புதைந்த விதையே போல் படைப்பு தற்காலிக உறக்கம் கொள்கிறது.
அந்தப்
விதையை மண்ணைக் கீறி மலரச் செய்வது வாசகனே.
ஆக,
எழுத்தாளரிடம்
பிறந்த படைப்பு வாசகனிடமே நிறைவடையுமென்பதைப் படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம்
படைப்பாளி ஒரு படைப்பைப் படைக்கும்போது அவருக்கிருந்த நோக்கத்தை.
அப்படியே
வாசகர் புரிந்து கொள்கிறாரா என்ற சந்தேகம் வரும். இதில்
தான் படைப்பாளிக்கும் படைப்புக்கும் வாசகருக்குமிடையிலான இயக்கவியல் செயல்படுகிறது.
அதுவே
அந்தப் படைப்பினைப் பரவலாக்குவதும், படைப்பைப்
போற்றப்படுவதுமாக மாற்றும். இதற்கு முன்நிபந்தனையாக
வாசகர் படைப்பை எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அமையும்.
சில வாசகர்கள் ஒரு படைப்பினைப்
புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்கள். கலை
இலக்கியத்தைப் புரிந்துகொள்ளுதலென்பது ஒரு குறிப்பிட்ட வாசிப்புக்குழுவின் பிரச்னையல்ல.
அது
ஒரு சமூகப்பிரச்னை. ஏனெனில் வாசகனின் வாசிப்புத்தளம்,
வாசிப்பனுபவம்,
வாழ்க்கையனுபவம்,
சமூகப்பார்வை,
வர்க்கம்,
அழகியல்பார்வை
ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.
இவையெல்லாம் படைப்பின் அர்த்தம், அழகு,
நோக்கம்
ஆகியவற்றை வாசகரிடம் உணரவைக்கும் குணாம்சங்களென்று சொல்லலாம்.
படைப்பு
வாசகனால் வாசிக்கப்படும்போது ஒரே தளத்தில் அர்த்தத்தையும் தரலாம்.
பல
தளங்களில் பல அர்த்தங்களையும் தரலாம். பலருக்கு
பலவிதமாகவும் அர்த்தம் தரலாம். காலமாற்றத்தைப்
பொறுத்து படைப்பும் தன்னை உருமாற்றிக் கொண்டேயிருக்கலாம். உதாரணத்துக்கு
எல்லாருக்கும் தெரிந்த திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டதோ,
அதே
நோக்கத்தை இப்போதும் பிரதிபலிக்கிறதா? அல்லது அதே
அர்த்த த்தில் இன்றைய வாசகர் வாசிக்கிறாரா என்பதெல்லாம் ஆய்வுக்குரிய விஷயம்.
அந்தந்தக்
காலத்தில் மட்டுமே உயிர்வாழ்ந்து அந்தக் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்து விட்டு
மறைந்து விடும் படைப்புகளும் உண்டு. எனவே ஒரே
படைப்பு காலந்தோறும் வெவ்வேறு மாதிரியாக வாசிக்கப்படுவதும் நிகழும்.
இதில்
கவனிக்க வேண்டிய விஷயம் காலந்தோறும் அந்தப் படைப்பு மறுபடியும் மறுபடியும் எழுதப்படுவதில்லை.
அது
வெளிவந்தபோது இருந்த தைப் போலத்தான் இப்போதுமிருக்கிறது. ஆனால்
சமூகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. சமூக விழுமியங்கள்
மாறிக் கொண்டேயிருக்கின்றன. அதற்கேற்ப
வாசகர் வாசிக்கும்போது படைப்பின் நோக்கமும் மாறிக் கொண்டேயிருக்கிறது. எனவே ஒரு படைப்பு காலாவதியாவதும்,
காலம்
கடந்து நிற்பதும் வாசகரின் வாசிப்பிலிருக்கிறது. காலம்
கடந்து நிற்கும் படைப்புகளில் காலம் கடந்து நிற்பதற்கான அடிப்படைக் கூறுகள் இருக்கவேண்டுமென்பதும்
முக்கியம்.
சில படைப்புகளை எத்தனை முறை
வாசித்தாலும் புரிவதில்லை. வாசகருக்கு
எந்தப் பாதையையும் திறக்காத மர்மப்பிரதேசம் போல கதவுகளே இல்லாத கட்டிடம்போல கும்மிருட்டாய்
படைப்புகளை எழுதும் படைப்பாளிகளும் இருப்பார்கள். அவற்றில்
பல்வேறு அர்த்தங்கள் இருப்பதாகப் பாவனைகளும் செய்வார்கள். அதை
அடுத்த தலைமுறையால் மட்டுமே புரிந்து கொள்ள முடியுமென்று பில்டப்பும் செய்வார்கள்.
அவற்றையே
மேன்மையான படைப்புகளென்று பரப்புரை செய்வதுமுண்டு.
எந்த ஒரு படைப்புச்செயல்பாட்டின்
அடிப்படையும் சமூகத்துடன் உறவாடுவதற்காகத் தான். அதாவது
மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகத்தான். யாரிடமும்
பகிர்ந்து கொள்ள முடியாத, பகிர்ந்து
கொள்ள விரும்பாத படைப்புகள் படைப்புச் செயல்பாட்டின் அடிப்படையையே மறுதலிப்பவை.
அவை
காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போய்விடும்.
நேர்மையான
அணுகுமுறையில் ஒரு படைப்பு தன்னைத் திறந்து காட்டவில்லையென்றால் வாசகர்கள் கவலைப்படவேண்டியதில்லை.
அதற்காக
படைப்பின் அடிப்படை கலை அழகியல் முறைமையிலிருந்து பிறழ்ந்து வெறும் சொற்கோர்வையாகவோ,
நேரடியானசெய்தியாகவோ,
பிரச்சாரமாகவோ,
மலினமான
கூறியது கூறலாகவோ, தேய்வழக்காகவோ ஒரு படைப்பு
விளங்குமானால் அது அந்தக் காலத்திலேயே நிராகரிக்கப்படும்.
எனவே எந்த ஒரு படைப்பாக இருந்தாலும்
அது வாசகரின் தோள் மீது கைபோட்டு அவர் தன்னையும் சமூகத்தையும் உணரவைக்க வேண்டும்.
மனித
மனதின் அகத்தையும் புறத்தையும் ஆராய்ந்து புதிய அனுபவங்களைத் தரவேண்டும்.
அப்படிப்பட்ட
படைப்பனுபவத்தை வாசகர் பெறுவதற்காக படைப்பாளிகள் உழைக்க வேண்டும்.
அப்போது
ஒரு படைப்பு கார்க்கியின் தாய் போல சு.வெங்கடேசனின்
வேள்பாரி போல வாசகர்களின் உணர்ச்சித் தளத்திலும், சிந்தனைத்தளத்திலும்,
செயல்பட்டு
பௌதீகசக்தியாக மாறுகின்ற வல்லமை கொண்டதாக மாறும்.
நன்றி - புக் டே

