Showing posts with label எலி. Show all posts
Showing posts with label எலி. Show all posts

Wednesday, 8 January 2025

எதையும் நம்பாதே

 

எதையும் நம்பாதே

உதயசங்கர்



வளைக்குள் மூன்று குட்டி எலிகள் இருந்தன. அம்மா எலி வெளியே இரை தேடிப் போய் இருந்தது. போவதற்கு முன்னால் ,

“ நான் வரும்வரை எங்கும் போகக்கூடாது.. “

என்று சொல்லிவிட்டுப் போனது. மூன்று குட்டி எலிகளும் நல்லபிள்ளைகளாகத் தலையாட்டின. அம்மா போனபிறகு மூன்று எலிகளும் ஒன்றின் மீது ஒன்று ஏறி விளையாடின. செல்லக்கடி கடித்து விளையாடின. அம்மா இன்னும் வரவில்லை. போரடித்தது. அண்ணன் எலி,

“ வெளியே போய் எட்டிப் பார்த்துவிட்டு வந்து விடலாம்.. “ என்று சொன்னது. அதைக்கேட்ட தம்பி எலியும் தங்கை எலியும்,

“ வேண்டாம் அண்ணா அம்மா சொன்னதை மறக்கக்கூடாது..”

என்று கூறின. அப்போது வளைக்கு வெளியே ஒரு சத்தம் கேட்டது.

கிலுகிலுகிலு என்று கிலுக்குச்சத்தம் கேட்டது. விடாமல் தொடர்ந்து கேட்டது. அழகாக இருந்தது. விட்டு விட்டு ஒரு இசையைப் போலக் கேட்டது.

“ எவ்வளவு நல்லாருக்கு.. இந்தச் சத்தம்..வாங்க என்னன்னு போய்ப் பார்க்கலாம்..”

 அண்ணன் எலி மெல்ல வளையின் வாசலை நோக்கி ஓடியது.

“ போகாதே.. போகாதே.. “ என்று தம்பி குரல் கொடுத்தது. வெளியே ஓடிய அண்ணன் எலி திரும்பி வரவில்லை. கிலுக்கு சத்தமும் கேட்கவில்லை.

மறுபடியும் கிலுகிலுகிலு என்று கிலுக்குச்சத்தம் கேட்டது.

இப்போது தங்கை எலி,

“ வா அண்ணா.. போய் அண்ணனுக்கு என்ன ஆச்சுன்னு பாப்போம்..” என்றது.

“ இல்லைம்மா.. வேண்டாம்.. அம்மா வரும் வரை காத்திருப்போம்..”

ஆனால் தங்கை எலி கேட்கவில்லை. வளையின் வாசலுக்குச் சென்றது. பிறகு திரும்பவில்லை. கிலுக்குச் சத்தமும் கேட்கவில்லை.

தம்பி எலிக்குக் கவலையாகி விட்டது.

சிறிது நேரத்துக்குப் பிறகு மறுபடியும் கிலுக்குச்சத்தம் கேட்டது.

தம்பி எலிக்குக் குழப்பம். போவதா வேண்டாமா. என்ன வந்தாலும் சரி அம்மா சொன்னபடியே இங்கேயே இருப்போம் என்று முடிவு செய்தது.  அப்போது பின்னாலிருந்து அம்மா எலியின் குரல் கேட்டது

“ தம்பி போகாதே..”

“ ஏம்மா..”

“ வாசலில் ஒரு கிலுக்குப்பாம்பு உட்கார்ந்திருக்கிறது. அவசரப்பட்டு யோசிக்காமல் செய்த வேலையினால் உன் அண்ணனும் தங்கையும் கிலுக்குப் பாம்பின் வயிற்றுக்குள் போய் விட்டன...”

என்றது அம்மா எலி. தம்பி எலி வாயடைத்துப் போய் அப்படியே இருந்தது.

இப்போதும் கிலுக்குச்சத்தம் கேட்டது.

ஆனால் தம்பி எலி அதைக் கவனிக்க வில்லை.


 நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

Monday, 30 December 2024

குண்டான் தவளையும் சுண்டான் எலியும்

 

குண்டான் தவளையும் சுண்டான் எலியும்

உதயசங்கர்



ஒரு குளக்கரையில் சுண்டான் எலியும் குண்டான் தவளையும் நண்பர்களாக இருந்தனர். பகலில் சுண்டான் எலி தன்னுடைய வளைக்குள் தூங்கும். குண்டான் தவளை குளத்தின் ஆழத்தில் மூழ்கி பாசிகளைச் சாப்பிடும். , சிறு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடும்.

 இரவானதும்    சுண்டான் எலி வளையிலிருந்து வெளியில் வந்து அருகிலிருக்கும் வயலின் கதிர்களை பற்களால் வெட்டும். அதை வளைக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

நள்ளிரவுக்குப் பிறகு இரண்டு பேரும் ஓய்வாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருந்த புளிய மரத்தில் ஒரு ஆந்தை உட்கார்ந்திருக்கும்.. எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும்.

அன்று இரண்டும் உட்கார்ந்து குசுகுசுன்னு ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மழைத்தூறல் விழுந்தது. உடனே சுண்டான் எலி,

“ என்னடா திடீரென்று மழை பெய்யுது..” என்று சொன்னது. 

உடனே குண்டான் தவளை “ நான் சத்தம் கொடுக்காமல் மழை வரக்கூடாதே.. எப்படி வந்தது..கொர்ர் கொர்ர் கொர்ர்ர் ” என்று கத்தியது. அது கத்தியதைக் கேட்ட மற்ற தவளைகளும் கொர் கொர் கொர் கொர் என்று கத்தின.

சுண்டான் எலி சிரித்தது.

“ இயற்கையை நீ எப்படி கட்டுப்படுத்தமுடியும்?.. மழைக்காலத்தில் குளம் குட்டை கிணறு ஆகியவற்றில் நீர் நிரம்பும்.. அது தான் உங்கள் இனம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலம் என்று உனக்குத் தெரியும்.. அப்போது ஆணும் பெண்ணும் மாறி மாறிக் கூப்பிடுவீர்கள்.. மற்றபடி நீ கத்தினால் மழை வரவேண்டும் என்பது கொஞ்சம் ஓவர்..”

என்றது சுண்டான் எலி. அதைக் கேட்ட குண்டான் தவளைக்குக் கோபம் வந்தது. சுண்டான் எலி மீது பாய்ந்தது. சுண்டான் எலியோ வளைக்குள் ஓடப் பாய்ந்தது. அப்போது விர்ரென்று பறந்து வந்த புளிய மரத்து ஆந்தை இரண்டு கால்களால் இரண்டு பேரையும் தூக்கிக் கொண்டு பறந்தது.

அப்போதும் குண்டான் தவளை சுண்டான் எலியைப் பார்த்து,

“ பாரு நான் உன்னை என்ன பண்றேன்னு..” என்று கத்தியது. 

சுண்டான் எலியும், “ போடா உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது..வெவ்வே வெவ்வே..” என்று வக்கணை காட்டியது.

ஆந்தை பசியுடன் காத்திருக்கும் தன் குஞ்சுகளை நினைத்து வேகமாகப் பறந்தது.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

Tuesday, 17 December 2024

யார் அந்தப் பயங்கர விலங்கு?

 

யார் அந்தப் பயங்கர விலங்கு?

உதயசங்கர்

வீட்டுப்பரணில் ஒரு எலிக்குடும்பம் வசித்தது. அந்தக் குடும்பத்தில் லிசா, முசா, குசா, புசா என்று நான்கு குட்டி எலிகள் இருந்தன. அந்தக் குட்டி எலிகள் பிறக்கும்போது வெள்ளை வெளேரென்று பால் நிறத்தில் இருந்தன. இப்போது கருஞ்சாம்பல் நிறத்தில் முடி முளைக்க ஆரம்பித்தது. அம்மா எலி கொண்டுவந்து கொடுக்கும் தீனியைச் சாப்பிட்டு பரணிலேயே சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன குட்டி எலிகள்.

ஒருநாள் அம்மா எலி நான்கு எலிக்குட்டிகளையும் அழைத்தது.

” குழந்தைகளே! இன்று நீங்கள் வெளியே போய் சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் வாருங்கள்.. உலகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்..”

என்று சொன்னது. லிசா, முசா, குசா, புசா நான்கு குட்டி எலிகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. உடனே புறப்பட்டன.

குட்டி எலிகளை அனுப்பி விட்டு அம்மா எலி கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தது.

போன ஒரு மணிநேரத்தில் லிசா குட்டி எலி ஓடி வந்தது.

அம்மா எலி, “ சொல்லு லிசா.. என்ன பார்த்தாய்? “ என்று கேட்டது.

“ ஒரு பயங்கரமான பறவையைப் பார்த்தேன்… அது வானத்தில் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.. திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து என்னைக் கால்களால் கவ்வப் பார்த்தது.. நான் அருகிலிருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்து தப்பித்து விட்டேன்..”

என்று லிசா குட்டி எலி சொன்னது.

“ எப்போதும் நாலாபுறமும் மேலும் கீழும் கூட எச்சரிக்கையாக பார்த்துப் போக வேண்டும்..அந்தப் பறவை பருந்து நல்லவேளை நீ தப்பித்து விட்டாய் ”

என்று அம்மா எலி சொன்னது.

மத்தியானம் முசா வந்தது.

“ என்ன நடந்தது முசா? “ என்று கேட்டது அம்மா எலி.

“ நான் ஒரு பயங்கரமான விலங்கைப் பார்த்தேன்… அதிலிருந்து கருவாட்டு மணம் வந்தது.. அது ஒரே இடத்தில் அசையாமல் இருந்தது. அதன் வயிறோ வாயோ திறந்திருந்தது. வயிற்றுக்குள்ளே ஒரு சிறு துண்டுக்கருவாட்டை ஒரு இரும்புக்கம்பியில் வைத்திருந்தது… அந்த மணம் என்னை அப்படியே இழுத்தது.. அப்போது இன்னொரு எலி அதில் நுழைந்து கருவாட்டைக் கடித்தது.. அவ்வளவு தான்.. டமாரென்று திறந்திருந்த அதன் வாய் மூடிக் கொண்டது. அந்த எலி அதன் வயிற்றுக்குள் மாட்டிக் கொண்டது..”

என்றது முசா எலி.

“ எதற்கும் அவசரப்படக்கூடாது.. நமக்குப் பிடித்ததாக இருந்தாலும் அதனால் ஏதாச்சும் ஆபத்து இருக்கிறதா என்று யோசித்து முடிவெடுக்கவேண்டும்.. நீ பார்த்தது விலங்கு இல்லை.. எலிகளைப் பிடிக்கிற எலிப்பொறி..”

என்றது அம்மா எலி.

பின் மதிய நேரத்தில் புசா ஓடி வந்தது.

“ என்ன நடந்தது புசா? “ என்று அம்மா கேட்டது.

“ நான் ஒரு அழகான விலங்கைப் பார்த்தேன்.. அது வெள்ளையும் கருப்பும் கலந்த நிறத்தில் புஸு புஸுன்னு முடியுடன் படுத்துக்கிடந்தது. சோம்பேறி மாதிரி பச்சை நிறக்கண்களுடன் குழந்தை மாதிரி மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டிருந்தது. நான் அதனுடன் விளையாடலாம் என்று நினைத்து அருகில் போனேன்.. அதற்குள் அதை ஒரு குழந்தை தூக்கிக் கொண்டு போய் விட்டது.. இருந்திருந்தால் இன்று ஒரு புதிய நண்பன் கிடைத்திருப்பான்..”

என்றது புசா.

“ நல்லவேளை நீ தப்பித்தாய்.. அந்த அழகான விலங்கு தான் நம்முடைய பரம்பரை எதிரி.. ஒரு போதும் அதன் கண்ணில் பட்டு விடக்கூடாது.. சிக்கினால் நார் நாராய்க் கிழித்து சாப்பிட்டு விடும்.. நம்மைப் போன்ற எலிகளைப் பிடிப்பதற்காகவே மனிதர்கள் அதை வளர்க்கிறார்கள்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. அழகைக் கண்டு மயங்கி விடக்கூடாது..”

என்று அம்மா எலி சொன்னது.

இரவாகி விட்டது. இன்னும் குசாவைக் காணவில்லை. அம்மா எலிக்குக் கவலை. குசாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லையே. போய்ப் பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டது.

அப்போது குசா மெல்ல சோர்வாய் ஓடி வந்தது.

“ என்ன ஆச்சு குசா?..ஏன் இவ்வளவு தாமதம்.? “ என்று அம்மா எலி கேட்டது.

“ நான் ஒரு இரண்டு கால் விலங்கைப் பார்த்தேன்.. அதனிடமிருந்து தப்பித்து வரத் தாமதமாகி விட்டது.. அந்த விலங்கு உயரமாய் சட்டை பேண்ட் போட்டிருந்தது.. தலைமுடியை வாரி, பவுடர், செண்ட் போட்டு டீசென்டாக இருந்தது.. நான் அந்த விலங்கின் நாகரீகமான தோற்றத்தைப் பார்த்து அருகில் போய் விட்டேன்.. அவ்வளவு தான்.. கொலைவெறியுடன் கையில் கிடைத்த பொருட்களை எல்லம் எடுத்து என் மீது எறிந்தது.. அந்த விலங்கிடமிருந்து தப்பித்து வர இவ்வளவு நேரமாகிவிட்டது… “

“ உங்கள் நான்கு பேரில் நீ பார்த்தது தான் கொடிய விலங்கு.. அந்த விலங்கின்பெயர் மனிதன்.. தான் மட்டும் தான் வாழவேண்டும் என்று நினைக்கிற விலங்கு.. தான் வாழும் இந்த பூமியைப் பற்றியோ, இயறகையைப் பற்றியோ, மற்ற உயிரினங்களைப் பற்றியோ கவலைப் படாமல் அனைத்தையும் அழிக்கிற விலங்கு…. அந்த விலங்கிடம் தான் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… மற்ற விலங்குகள் பசித்தால் மட்டும் தான் சாப்பிடும்.. ஆனல் மனிதன் என்ற இந்த விலங்கு சும்மா விளையாட்டாய் மற்ற விலங்குகளைக் கொன்று மகிழ்ச்சியடையும்.. என்ன தெரிந்ததா? ” என்றது அம்மா எலி.

“ அம்மா அம்மா நாங்கள் எங்கேயும் போகவில்லை.. இங்கேயே இருந்துக்கிறோம்.. நீயே தீனி கொண்டு வந்து கொடு.. எங்களுக்குப் பயமாயிருக்கு…”

என்று லிசா, முசா, குசா, புசா சேர்ந்து கத்தின.

அம்மா எலி சொன்னது,

“ அட அசடுகளா? வாழ்க்கை என்றால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும்.. ஆபத்து, விபத்து எல்லாவற்றையும் கடந்து தான் வாழ வேண்டும்.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. எதற்கும் பயப்படக்கூடாது..”

என்று அன்புடன் சொன்னது அம்மா எலி. 

லிசா, முசா, குசா, புசா, நான்கு குட்டி எலிகளும் உற்சாகமாகத் தலையாட்டின.



நன்றி - நான் யார்?

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Sunday, 8 August 2021

மின்னுவின் ஆசை

 

மின்னுவின் ஆசை


உதயசங்கர்

மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்று விழுங்கியிருக்கும். பகலில் வெளியே வர முடியவில்லை. பெரியவர்கள், சிறுவர்கள்,  பூனைகள், நாய்கள், வண்டிகள், வாகனங்கள், என்று ஆபத்துகள். இரவில் எல்லாரும் உறங்கிய பிறகு இரை தேடலாம் என்றால் பூனை, நாய்கள், தொந்திரவு. ச்சே! என்ன வாழ்க்கை! என்று யோசித்துக்கொண்டு அதன் வீட்டிலேயே படுத்துக் கிடந்தது.

மின்னுவின் நண்பனான பன்னு வந்து கூப்பிட்டது.

“ மின்னு வரலையா? வீட்டுச்சமையலயில் பலகாரம் வாசனை தூக்குது..வா வா சீக்கிரம்..”

மின்னு பன்னுவைப் பார்த்து,

“ இல்ல.. நான் வரலை.. நீ போ..”

ஒரு விநாடி நின்று மின்னுவைப்பார்த்த பன்னு விருட்டென்று பாய்ந்து சென்றது. மின்னு யோசித்தது. இனி இரவில் போய் இரை தேடக்கூடாது. பகலில் எல்லாரையும் போல கம்பீரமாக அலைய வேண்டும். யாரைக்கண்டும் பயப்படக்கூடாது. பூனை மாதிரி.. வாலை ஆட்டிக்கொண்டு ஒய்யாரமாக நடக்கவேண்டும்.

மின்னு நினைத்தது எப்படி தெரிந்ததோ பூனை தேவதை மின்னுவின் முன்னால் வந்து நின்றது. மின்னுவுக்கு ஆச்சரியம்.

“ மின்னு.. நீ பகலில் அலைய வேண்டுமா? “

 மின்னு உற்சாகமாகத் தலையாட்டியது. உடனே பகல்பொழுதாகி விட்டது. மின்னு தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் காதில்

“ இப்போது நீ மியாவ் என்று கத்த வேண்டும்..” என்ற குரல் கேட்டது. மின்னு வாயைத் திறந்து மியாவ் என்றது. அது கீச் என்ற சத்தமாகக் கேட்டது. தெருவின் அந்தப் பக்கத்தில் ஒரு பெரிய நாய் திரும்பிப்பார்த்தது. உடனே அங்கேயிருந்து பாய்ந்து வந்தது. அம்மாடி.. ஓடறா மின்னு.. என்று ஓடி ஒரு சாக்கடைப்பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

ரொம்ப நேரம் கழித்து மின்னு வெளியே வந்தது. மறுபடியும் அந்தக்குரல் கேட்டது.

“ வாலை உயரே தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும். அப்படியே உடலை ஒயிலாக அசைத்து முதலில் முன்னங்கால்களை வைக்க வேண்டும். பின்பு பின்னங்கால்களைக் குறுக்கே வைக்க வேண்டும். அப்படியே மெல்ல நடந்து போகவேண்டும்..அது தான் பூனை நடை. மனிதர்கள் மிகவும் விரும்புவார்கள்..”

மின்னு வாலை உயரே தூக்கியது. நுனி வால் மட்டும் தான் ஆடியது. ஆனால் உயரே வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. சரி என்று உடலைத் தூக்கியது கால்கள் குட்டையாக இருந்ததினால் தூக்க முடியவில்லை. சரி விடு. நடக்கலாம் என்று நடந்து பார்த்தது. பின்னங்கால் முன்னங்காலில் முட்டி கீழே விழுந்து சட்டி பானை மாதிரி உருண்டு கொண்டே இருந்தது.

எப்படியோ எழுந்து விட்டது.

“ இனிமேல் தான் முக்கியமான வேலை இருக்கிறது.. பதுங்கியிருந்து  ஒரு எலியைப் பிடிக்கவேண்டும்..”

என்று மறுபடியும் பூனை தேவதையின் குரல் கேட்டது. மின்னுவுக்கு அதிர்ச்சி. என்னது நான் என் உறவினரையேக் கொல்லவேண்டுமா? அது முடியாது. என்று கத்தியது.

“ இப்போது புரிந்ததா மின்னு? இயற்கையில் ஒவ்வொரு உயிரும் தான் எப்படி வாழவேண்டும்? எதைச் சாப்பிடவேண்டும்? எப்போது இரை தேடவேண்டும்? பகலிலா? இரவிலா? என்று பரிணாமவளர்ச்சியின் போது த்தில் கற்றுக் கொள்கிறார்கள்.. யாரும் யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ள வேண்டாம்..”

என்றது. மின்னுவுக்குப் புரிந்தது போல தலையாட்டியது.

“ உனக்குப்பின்னால் ஒரு பூனை உன்னைப்பிடிக்க பாயப்போகிறது மின்னு..” என்ற குரல் கேட்டது. அவ்வளவு தான் மின்னு ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வீட்டுக்குள் வந்து விட்டது.

வயிறு பசித்தது. அங்கே பன்னு வாயில் வடையுடன் மின்னுவுக்காக காத்துக்கொண்டிருந்தது. 

ஐய்! சக்கா ஐய்!

நன்றி - துளிர்

 

Monday, 10 June 2019

எலி ராஜ்ஜியம்


எலி ராஜ்ஜியம்

உதயசங்கர்

கோவூர் நாட்டு மக்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ மறுபடியும் தேர்தல் வந்து விட்டது. இதுவரை கோவூர் நாட்டை திம்மன் ஆண்டு கொண்டிருந்தான். திம்மனின் ஆட்சியில் மக்கள் ஒரு நாளும் நிம்மதியாகத் தூங்கியதே இல்லை. திடீர் திடீரென்று நள்ளிரவில் தொலைக்காட்சியில் தோன்றி முழங்குவான். மக்கள் தொலைக்காட்சியை அணைத்து வைத்திருந்தாலும் எல்லாத்தொலைக்காட்சிகளின் மெயின் ஸ்விட்ச் திம்மனின் அரண்மனையில் இருந்தது. அதனால் திம்மனால் எப்போது வேண்டுமானாலும் தொலைக்காட்சியில் தோன்ற முடியும். திம்மன் பகல் முழுவதும் தூங்குவான். இல்லை என்றால் ஊர் ஊராகச் சுற்றுவான். இரவில் தான் அவனுடைய மந்திரிசபையைக் கூட்டுவான். உடனே மந்திரிகள் மக்களிடம் எப்படி எல்லாம் வரி வசூல் செய்யலாம். மக்கள் மத்தியில் எப்படி எல்லாம் சண்டை மூட்டி விடலாம் என்று ஆலோசனை சொல்லுவார்கள். அடுத்த நிமிடம் திம்மன் தொலைக்காட்சியில் தோன்றி,
“ கோவூர் நாட்டின் குலதெய்வமான நம்முடைய எலிக்கடவுள் நேற்று என் கனவில் வந்தார். எல்லோரும் எலிகளை விரட்டுகிறார்கள். சிலர் எலிகளைக் கொன்று விடுகிறார்கள். அதனால் நாட்டுக்கு மிகப்பெரும் கேடு வரப்போகிறது. அதனால் இனிமேல் எலிகளைப் பராமரிக்க, காப்பற்ற, உங்களுடைய ஒருவேளை உணவைத் தியாகம் செய்யுங்கள். அந்த ஒரு வேளை உணவுக்கான பணத்தை என்னுடைய கஜானாவில் தினமும் கொண்டு வந்து கொடுங்கள். இல்லையில்லை நமது நிதித்துறை ஊழியர்களே உங்கள் வீட்டிற்கு வந்து வாங்கிக்கொள்வார்கள். எலிக்கடவுளுக்காக இதை நீங்கள் செய்ய வேண்டும். எலிகளை விரட்டினாலோ, எலிகளைக் கொண்றாலோ அவர்கள் தேசத்துரோகிகள் என்று கருதப்படுவார்கள். நம்முடைய நாட்டுக்காக உங்களுடைய தாய் நாட்டுக்காக இதைக்கூடச்செய்யக்கூடாதா? நமக்கு எலிப்பற்று வேண்டாமா? இனி எலிகளை வளர்க்க பாதுகாக்க பராமரிக்க, ஒரு தனியாக எலித்துறையும் அதற்கு எலிமந்திரியும்.நியமிக்கப்படுவார்கள்.”
என்று பேசுவான். ஏற்கனவே இரண்டுவேளை உணவை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிற மக்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். திம்மனின் ஆட்சியில் படித்தவர்களுக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு விளைபொருளுக்கு விலையில்லை. குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை. இப்படி ஏகப்பட்ட இல்லைகளினால் மக்கள் கோபத்தில் இருந்தார்கள். இதில் இப்படி ஒரு அறிவிப்பு.
மறுநாள் காலையில் தெருவுக்குத் தெரு எலிக்கோவில்கள் கட்டப்பட்டன. எலிகள் தெருக்கள், வீடுகள், கடைகள், அலுவலகங்கள், என்று எல்லா இடங்களிலும் சுதந்திரமாக அலைய ஆரம்பித்தன. வீடுகளில் கடைகளில், ஒரு பொருளை வைக்க முடியவில்லை. யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியம் வந்ததும் அந்த எலிகள் வீட்டில் ரோட்டில் எல்லா இடங்களிலும் வந்து குடியேறின. எல்லோருடைய மடியிலும் ஏறு உட்கார்ந்து அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அவர்களுடைய கையிலிருந்தோ வாயிலிருந்தோ பிடுங்கித் தின்றன. அவர்களால் கையை ஓங்கி விரட்ட முடிய வில்லை. திம்மன் காவனித்துக்கொண்டிருப்பாரே. அது மட்டுமல்ல எலிகளை யாரும் துன்புறுத்துகிறார்களா என்று கவனிக்க  எலிக்குண்டர் படையையும் ஊர் ஊராக அனுப்பியிருந்தான் திம்மன்.
மக்கள் வேறுவழியில்லாமல் எலியைக் கும்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிடுவதற்கு முன்னர் எலிக்குப் படைத்து விட்டு சாப்பிட்டார்கள். ஒருத்தர் எலியின் குண்டியைத் தொட்டுக் கும்பிட்டதால் அன்று அவர் வீட்டு முன்னறை அலமாரியில் வைத்திருந்த மசால்வடை முற்றத்தில் கிடைத்து விட்டது. இதை அவர் நண்பரிடம் சொல்ல அவர் இதை அவருடைய நண்பரிடம் சொல்ல, இப்படியே சொல்லிச் சொல்லி…. மறுநாள் காலையில் ஊரே எலிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்தது. இன்னொருவர் அவருடைய வீட்டில் எலி மூத்திரத்தை கலந்து தெளித்ததால் எறும்பு ஈ கொசுத்தொல்லை இல்லை என்று சொல்லிவிட்டார். உடனே எலி மூத்திரம் சிறந்த கிருமிநாசினி என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
கோவூர் நாட்டு மந்திரிகள் உடனே மவுஸூரின் என்ற பெயரில் எலிமூத்திரதீர்த்தத்தை விற்க ஆரம்பித்தனர். எலிக்கோவில்களில் திரிஎலியா என்ற தீர்த்தத்தையும் விறக ஆரம்பித்தனர். திரிஎலியா என்றால் என்ன என்ற கேள்விக்கு எலிக்கோவில்களின் தலைமை பூசாரி தொலைக்காட்சியில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நம்முடைய திரிஎலியா தீர்த்தம் அனைத்து வியாதிகளையும் தீர்க்கக்கூடிய அருமருந்து. பேய்பிசாசுகளை விரட்டக்கூடியது. அதில் ஒரு சொட்டை எடுத்து வீட்டில் எருக்கிலையில் இட்டு வீட்டில் தெளித்தால் வீடு சுத்தமாகிப் பளபளக்கும். எலிமூத்திரம், எலிப்பால், எலித்தயிர்,, மூன்றையும் கலந்து தயாரிக்கப்படும் திரிஎலியா உங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் கொழிக்கும்…. “ என்று மந்திரம் சொல்வதைப்போலச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மக்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் போட்டிபோட்டுக்கொண்டு திரிஎலியாவை வாங்க அலை மோதினார்கள். பல இடங்களில் கூட்டநெரிசல். உள்ளூர் கம்பெனிகளும் உலகக்கம்பெனிகளும் போட்டி போட்டுக்கொண்டு திரிஎலியாவைத் தயாரித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் தான் உண்மையான திரிஎலியாவை தயாரிப்பவன் அதுவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய எலிவேதங்களில் உள்ள ஃபோர்முலாப்படி தயாரிக்கிற கம்பெனி என்று விளம்பரங்கள் வந்தன.
மக்களில் சிலர் எலிகளைக் கண்டுகொள்ளவில்லை. சாதாரணமாக எப்போதும் போல இருந்தனர். அவர்கள் இந்த எலிக்கூச்சல்களுக்குப் பயப்படவில்லை. அவர்களைப் பயமுறுத்துவதற்காக எலிக்குண்டர்படை அவர்களுடைய வீட்டில் எலிக்கறி இருப்பதாக அரசனிடம் அறிக்கை கொடுத்தனர். புனிதமான எலியைச் சாப்பிட்டதற்காக அவர்களுக்கு ஐம்பது கசையடி கொடுக்கப்பட்டது. ஆனால் எலித்துறை மந்திரி தன்னுடைய தம்பி பெயரில் வெளிநாடுகளுக்கு எலிக்கறி ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தை நடத்தி வந்தார். அது கோவூர் நாட்டில் பிறந்த குழந்தை முதல் திம்மன் வரை தெரிந்த பரமரகசியம்.  
இப்படியே கோவூர் நாட்டில் எலிகள் பெருகிப்பெருகி மக்களுக்குச் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பஞ்சம் வந்து விட்டது. எலிகளுக்கும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதராகக் காணாமல் போனார்கள். திம்மனிடம் சென்று மக்கள் முறையிட்டனர். திம்மன் அவர்களை அடித்து விரட்டினான்
“ புனிதஎலியைக் குற்றம் சொல்பவர்களுக்குச் சிறைத்தண்டனை ” என்று அறிவித்தான். ஒவ்வொருவராக நாட்டை விட்டு அழுதுகொண்டே வெளியேறத் தொடங்கினர்.
கோவூர் நாட்டின் தென்மூலையில் இருந்த பகுத்தறிவு மலையில் பதினைந்து பதினாறு வயது இளைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். அங்கே இருந்த தாடிக்கிழவரிடம் கோவூர் நாட்டில் நடக்கின்ற அநியாயங்களைச் சொன்னார்கள். அதைக்கேட்ட தாடிக்கிழவர்,
“ வெங்காயம்.. வெங்காயம்.. வெங்காயம்.. “
என்று திட்டினார். அவர் இளைஞர்களிடம் ஓர் யோசனை சொன்னார். இளைஞர்கள் அவருடைய யோசனையைக் கேட்டு அப்படியே செய்வதாகச் சொல்லிச்சென்றனர்.
மறுநாள் காலை திம்மன் கண்விழிக்கும்போது அவன் மீது நூறு எலிகள் உட்கார்ந்திருந்தன. கூச்சலிட்டுக் கொண்டே எழுந்தான். கட்டிலுக்குக் கீழே கால் வைக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் எலிகள். எலிகள். எலிகள். அரண்மனையில் மந்திரிகள் இல்லை. தளபதிகள் இல்லை. படைவீரர்கள் இல்லை. சேவகர்கள் இல்லை. வேலைக்காரர்கள் இல்லை. சமையற்காரர்கள் இல்லை. நேரத்துக்கு ஒரு சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரர்கள் இல்லை. ஒப்பனைக்காரர்கள் இல்லை. திம்மனின் ஒவ்வொரு அசைவையும் பெரிய சாதனையாகக்காட்டும் தொலைக்காட்சி, பத்திரிகைக்காரர்கள் இல்லை. ஒருவரும் இல்லை. எல்லோரையும் எலிகள் தின்றுவிட்டன. திம்மன் அலறிக்கொண்டே ஓடினான். ஆனால் எலிகள் அவனைவிட வேகமாக ஓடி அவனைக் கடித்தன. பசி தாங்காமல் இருந்த எலிகள் திம்மனையும் தின்று தீர்த்தன.
கோவூர் நாட்டிலிருந்த அத்தனை எலிகளையும் அரண்மனைக்குள் பிடித்துக் கொண்டு வந்து விட்ட இளைஞர்கள்  வெளியில் காத்துக்கொண்டிருந்தார்கள். பின்னர் எலிகளோடு சேர்த்து அரண்மனையைக் கொளுத்தினர். இப்போது கோவூர் நாட்டில் எலிகள் இல்லை. மக்கள் எல்லோரும் சேர்ந்து ஆட்சி நடத்தினர்.
பகுத்தறிவு மலையில் இருந்த தாடிக்கிழவரின் ஆலோசனைகளை அவ்வப்போது கேட்டு அதன் படி கோவூர் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
நன்றி - வண்ணக்கதிர்
15+