Showing posts with label துளிர். Show all posts
Showing posts with label துளிர். Show all posts

Friday, 14 March 2025

உளுந்து வடையின் ஓட்டம்

 

1         உளுந்து வடையின் ஓட்டம்

  உதயசங்கர்



மங்கலம் என்ற ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் வாழ்ந்து வந்தார்கள். தினம் தினம் வேலை செய்தால் தான் சாப்பிடமுடியும். ஒருநாள் தாத்தாவுக்கு உளுந்துவடை சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. உடனே தாத்தா பாட்டியிடம் சொன்னார். பாட்டிக்கும் ஆசை வந்து விட்டது. உளுந்து இருக்கிறதா? தெரியவில்லையே. இருக்கும் டப்பாக்களில் தேடினார். ஒரு டப்பாவில் ஒரு கைப்பிடி அளவு உளுந்து கிடந்தது. இரண்டு வடை சுடலாம். உளுந்தை தண்ணீரில் ஊற வைத்தார் பாட்டி. தாத்தா அதை ஆட்டுரலில் ஆட்டிக் கொடுத்தார்.

ஆட்டுரலிலிருந்து உளுந்து மாவை வழித்து எடுத்து ஒரு சட்டியில் போட்டார் தாத்தா.

“ . இரண்டு வடை தான் வரும்.. ஒரு வடை உமக்கு ஒரு வடை எனக்கு.. என்ன தெரிஞ்சுதா..” என்று கத்தினாள் பாட்டி. ஏன்னா தாத்தாவுக்கு காது கொஞ்சம் மந்தம்.

பிறகு பாட்டி வெங்காயம் பச்சைமிளாகாய் கறிவேப்பிலை எல்லாம் பொடிப்பொடித் துண்டுகளாய் நறுக்கி மாவில் போட்டுப் பிசைந்தார். அடுப்பில் வாணலியை வைத்தார். கொஞ்சூண்டு இருந்த கடலை எண்ணெயை ஊற்றினார்.

மாவை எடுத்து உள்ளங்கையில் தட்டி நடுவில் அழகாக ஒரு ஓட்டையைப் போட்டார். அதை எண்ணெய்ச்சட்டியில் போட்டு வேக வைத்தார். அவர் நினைத்த மாதிரி இரண்டு வடைக்குத்தான் மாவு இருந்தது. முதல் வடையை எடுத்து தட்டில் வைத்து விட்டு இரண்டாவது வடையைப் போட்டார். போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது தட்டிலிருந்த வடையைக் காணோம். சுற்றிச் சுற்றிப்பார்த்தார்.

” .. இங்கன இருந்த வடையைப் பார்த்தீரா? “ என்று கேட்டார்.

தாத்தா பதில் சொல்லவில்லை.

வாயைத் திறந்தால் வாயில் வடை இருப்பது தெரிந்துவிடுமே. அப்படியே அமுக்கரான் மாதிரி உட்கார்ந்து மெல்ல வடையை அசை போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாட்டிக்குத் தெரிந்து விட்டது.

“ கேட்டீரா.. இந்த வடை எனக்கு.உம்மரு கணக்கு முடிஞ்சுது .”

என்று பாட்டி கத்தினாள். தாத்தாவுக்குக் கேட்டதோ கேட்கவில்லையோ. அவர் மேலே கூரையைப் பார்த்தபடி அசை போட்டார். பாட்டிக்கு ஒரு சந்தேகம். ’ இந்த வடையையும் தாத்தா எடுத்துட்டார்னா.. என்ன செய்றது. வடையை எடுத்து தட்டில போடாம முந்தியில் முடிஞ்சுக்குவோம்னு’ நினைத்தாள்.

வடை வெந்ததும் அப்படியே கரண்டியில் எடுத்து முந்தியில் போட்டாள். அட, போடும்போது வடை தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த வடை அப்படியே சக்கரம் மாதிரி ஓடியது. பாட்டி எழுந்து வடையின் பின்னால் ஓடினாள். பாட்டி ஓடுவதைப் பார்த்த தாத்தாவும் வடையைப் பிடிக்க ஓடினார்.

வடை ஓடி வீட்டு வாசலைத் தாண்டி விட்டது. அப்போது பாட்டி,

“ ஒழுங்கா நில்லு இல்லைனா..அவ்வளதான்..” என்று மிரட்டினாள். வடை ஓடியபடியே,

“ ஓட்டைவடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்..

குட்டிக்கரணம் போட்டாலும்

குதித்து குதித்து வந்தாலும்  

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்க முடியாது..”

என்று பாடியது. பாட்டி ஓடினாள். பின்னால் தாத்தா ஓடினார். ஆனால் ரொம்பதூரம் ஓட முடியவில்லை. அப்படியே நின்று விட்டார்கள்.

காடுமேடு எல்லாம் ஏறி ஓடியது உளுந்துவடை.

கல் மண் பார்க்காமல் உருண்டோடியது. எதிரே ஒரு காகம் பறந்து வந்தது. உளுந்துவடையைப் பார்த்ததும் ஆவலுடன் கொத்தி எடுக்க பாய்ந்து வந்தது. காகம் அருகில் வரும்வரை காத்திருந்து டக்கென்று ஒரு புதருக்குள் ஓடி விட்டது உளுந்து வடை. புதருக்குள்ளேயிருந்து,

“ ஓட்டைவடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்

பறந்து பறந்து வந்தாலும்

பாடிப் பாடி வந்தாலும்

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்கமுடியாது “

என்று உளுந்துவடை பாடியது. காகம் ஏமாந்து திரும்பிச்சென்றது. புதருக்குள்ளிருந்து பாய்ந்து சென்றது உளுந்து வடை. புதரில் படுத்திருந்த குள்ள நரி பின்னாலேயே பிடிக்க வந்தது. குள்ளநரிக்குப் பழைய பஞ்சதந்திரக்கதை ஞாபகம் வந்தது.

அப்போதே வாயில் எச்சில் ஊறியது.

உளுந்து வடை உருண்டு மரத்தின் மீது ஏறிக்  கொண்டது.

“ ஓட்டை வடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்

பாய்ந்து பாய்ந்து வந்தாலும்

பாட்டுப்பாடச் சொன்னாலும்

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்கமுடியாது “

என்று பாடியது.

கீழே இருந்த குள்ளநரி என்னென்னவோ நல்ல வார்த்தைகள் சொல்லிப்பார்த்தது. வடை அசையவில்லை.

அப்போது பெரிய காற்று அடித்தது. காற்றில் கிளைகள் வேகமாக ஆடின. வடை அப்படியே பறந்து போய் ஒரு ஓலைக்குடிசைக்கு முன்னால் விழுந்தது. அங்கே படுத்திருந்த நாய் எழுந்து மோப்பம் பிடித்து கவ்விக்கொள்ள ஓடி வந்தது.

உடனே உளுந்துவடை எழுந்து மறுபடியும் ஓடியது. பின்னாலேயே நாய் துரத்தியது.

” ஓட்டைவடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்

துரத்தித் துரத்தி வந்தாலும்

நாலுகாலில் வந்தாலும்

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்கமுடியாது ”

என்று பாடியபடியே ஓடியது.

ஓட்டம்னா ஓட்டம். அப்படி ஒரு ஓட்டம். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஓடுவோம் என்று நினைத்தது உளுந்துவடை. அப்படியே எதிரில் தெரிந்த வீட்டுக்குள் போய் தட்டில் படுத்து உறங்கியது.

உறக்கத்திலேயே,

“ . ஓட்டைவடை நான்

உளுந்து வடை நான்

உலகம் சுத்திப் பார்க்கப்போகும்

ஓட்டைவடை நான்

ஓடி ஓடி விரட்டினாலும்

பறந்து பறந்து வந்தாலும்

குதித்து குதித்து வந்தாலும்

துரத்தித் துரத்தி வந்தாலும்

பிடிக்கமுடியாது

என்னைப் பிடிக்கமுடியாது ”

பாடியது.

எங்கே போச்சு? எப்படி வந்தது? என்று ஆச்சரியப்பட்ட பாட்டி  வடையை பிய்த்து வாயில் போட்டார் பாட்டி.

” என்னைப் பிடிக்க முடியாது..”  பாடிய படியே பாட்டியின் வயிற்றுக்குள் பத்திரமாகப் போனது உளுந்துவடை.

நன்றி - விஞ்ஞானத்துளிர் அறிவியல் மாத இதழ்

 

.


Sunday, 8 August 2021

மின்னுவின் ஆசை

 

மின்னுவின் ஆசை


உதயசங்கர்

மின்னு சுண்டெலி தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை லபக் என்று விழுங்கியிருக்கும். பகலில் வெளியே வர முடியவில்லை. பெரியவர்கள், சிறுவர்கள்,  பூனைகள், நாய்கள், வண்டிகள், வாகனங்கள், என்று ஆபத்துகள். இரவில் எல்லாரும் உறங்கிய பிறகு இரை தேடலாம் என்றால் பூனை, நாய்கள், தொந்திரவு. ச்சே! என்ன வாழ்க்கை! என்று யோசித்துக்கொண்டு அதன் வீட்டிலேயே படுத்துக் கிடந்தது.

மின்னுவின் நண்பனான பன்னு வந்து கூப்பிட்டது.

“ மின்னு வரலையா? வீட்டுச்சமையலயில் பலகாரம் வாசனை தூக்குது..வா வா சீக்கிரம்..”

மின்னு பன்னுவைப் பார்த்து,

“ இல்ல.. நான் வரலை.. நீ போ..”

ஒரு விநாடி நின்று மின்னுவைப்பார்த்த பன்னு விருட்டென்று பாய்ந்து சென்றது. மின்னு யோசித்தது. இனி இரவில் போய் இரை தேடக்கூடாது. பகலில் எல்லாரையும் போல கம்பீரமாக அலைய வேண்டும். யாரைக்கண்டும் பயப்படக்கூடாது. பூனை மாதிரி.. வாலை ஆட்டிக்கொண்டு ஒய்யாரமாக நடக்கவேண்டும்.

மின்னு நினைத்தது எப்படி தெரிந்ததோ பூனை தேவதை மின்னுவின் முன்னால் வந்து நின்றது. மின்னுவுக்கு ஆச்சரியம்.

“ மின்னு.. நீ பகலில் அலைய வேண்டுமா? “

 மின்னு உற்சாகமாகத் தலையாட்டியது. உடனே பகல்பொழுதாகி விட்டது. மின்னு தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் காதில்

“ இப்போது நீ மியாவ் என்று கத்த வேண்டும்..” என்ற குரல் கேட்டது. மின்னு வாயைத் திறந்து மியாவ் என்றது. அது கீச் என்ற சத்தமாகக் கேட்டது. தெருவின் அந்தப் பக்கத்தில் ஒரு பெரிய நாய் திரும்பிப்பார்த்தது. உடனே அங்கேயிருந்து பாய்ந்து வந்தது. அம்மாடி.. ஓடறா மின்னு.. என்று ஓடி ஒரு சாக்கடைப்பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

ரொம்ப நேரம் கழித்து மின்னு வெளியே வந்தது. மறுபடியும் அந்தக்குரல் கேட்டது.

“ வாலை உயரே தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும். அப்படியே உடலை ஒயிலாக அசைத்து முதலில் முன்னங்கால்களை வைக்க வேண்டும். பின்பு பின்னங்கால்களைக் குறுக்கே வைக்க வேண்டும். அப்படியே மெல்ல நடந்து போகவேண்டும்..அது தான் பூனை நடை. மனிதர்கள் மிகவும் விரும்புவார்கள்..”

மின்னு வாலை உயரே தூக்கியது. நுனி வால் மட்டும் தான் ஆடியது. ஆனால் உயரே வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. சரி என்று உடலைத் தூக்கியது கால்கள் குட்டையாக இருந்ததினால் தூக்க முடியவில்லை. சரி விடு. நடக்கலாம் என்று நடந்து பார்த்தது. பின்னங்கால் முன்னங்காலில் முட்டி கீழே விழுந்து சட்டி பானை மாதிரி உருண்டு கொண்டே இருந்தது.

எப்படியோ எழுந்து விட்டது.

“ இனிமேல் தான் முக்கியமான வேலை இருக்கிறது.. பதுங்கியிருந்து  ஒரு எலியைப் பிடிக்கவேண்டும்..”

என்று மறுபடியும் பூனை தேவதையின் குரல் கேட்டது. மின்னுவுக்கு அதிர்ச்சி. என்னது நான் என் உறவினரையேக் கொல்லவேண்டுமா? அது முடியாது. என்று கத்தியது.

“ இப்போது புரிந்ததா மின்னு? இயற்கையில் ஒவ்வொரு உயிரும் தான் எப்படி வாழவேண்டும்? எதைச் சாப்பிடவேண்டும்? எப்போது இரை தேடவேண்டும்? பகலிலா? இரவிலா? என்று பரிணாமவளர்ச்சியின் போது த்தில் கற்றுக் கொள்கிறார்கள்.. யாரும் யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ள வேண்டாம்..”

என்றது. மின்னுவுக்குப் புரிந்தது போல தலையாட்டியது.

“ உனக்குப்பின்னால் ஒரு பூனை உன்னைப்பிடிக்க பாயப்போகிறது மின்னு..” என்ற குரல் கேட்டது. அவ்வளவு தான் மின்னு ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வீட்டுக்குள் வந்து விட்டது.

வயிறு பசித்தது. அங்கே பன்னு வாயில் வடையுடன் மின்னுவுக்காக காத்துக்கொண்டிருந்தது. 

ஐய்! சக்கா ஐய்!

நன்றி - துளிர்

 

Sunday, 7 February 2021

யார் நீ? - சிறார் கதை

 

யார் நீ?


உதயசங்கர்


” யார் நீ? கீச் கீச்ச் “

“ நீ யார்? கீச் கீச் கீச் “

“ நீ எப்படி எங்கூட்டுக்குள்ளே வந்தே? கீச்கீச்ச்ச் “

“ சொல்லு. கீச்.”

” சொல்லு கீச் ”

“ இப்படி கேட்டா சொல்லமாட்டான்.. எல்லாரும் போடுங்க ஒரு கொத்து..கீச் கீச் கீச்..”

அங்கேயிருந்த தவிட்டுக்குருவிகள் எல்லாம் கோபத்துடன் நெருங்கின.

“ ச்சேச்சே.. அதெல்லாம் வேண்டாம்பா.. பாவம் சின்னப்பிள்ள “

என்று ஒரு மூத்த தவிட்டுக்குருவி சொன்னது. அதைக்கேட்ட பிறகு மற்ற குருவிகள் லேசாய் தத்தி பின்வாங்கின. இத்தனைக்கும் பின்னால் ஒரு மெலிதான சத்தம் கெஞ்சலாய் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த சத்தங்கள் எங்கிருந்து வருகின்றன? குட்டித்தம்பி பாரி தேடிப் பார்த்தான். அவனுடைய வீட்டுக்குப் பின்னாலிருந்த புதரிலிருந்து தான் இந்தச் சத்தங்கள் வந்தன. அங்கே ஐந்தாறு தவிட்டுக்குருவிகள் கூட்டமாய் நின்று கத்திக் கொண்டிருந்தன. ஏற்கனவே சிவப்பாய் இருக்கும் கண்களில் இப்போது கோபம் தெரிந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னால் தவிட்டுக்குருவியை விட அளவில் பெரியதாய் பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் ஒரு குட்டிப்பறவை பாவமாய் நின்று கொண்டிருந்தது. அது தலை குனிந்து ஏதோ முனகியது. ஆனால் அது என்ன சொல்லியது என்று யாருக்கும் கேட்கவில்லை.

       குட்டித்தம்பி பாரி தூரமாய் நின்று அதைக் கவனித்தான். அவனுடைய அப்பா பறவைக்கவனிப்பாளர். அதனால் எப்படி பறவைகளைத் தள்ளியிருந்து கவனிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தார். எல்லாத்தவிட்டுக்குருவிகளும் அங்கே புதருக்கருகில் கூடி கய்யா முய்யா என்று சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தன. அவைகளுக்கு முன்னால் பழுப்பும் கருப்பும் கலந்த குட்டிப்பறவை தலையைத் தரையோடு குனிந்தபடி அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன்

“ எனக்குப் பயமாருக்கு.. எனக்கு ஒண்ணுமே புரியல,,, க்ளவ்..கூகூகூ ..” என்று சொல்லிக் கொண்டிருந்தது.

அப்போது தான் குட்டித்தம்பி பாரி கவனித்தான். அந்தக்குருவிகள் கூட்டமாய் இருந்த இடத்துக்கு புதருக்கருகில் ஒரு தவிட்டுக்குருவியின் கூடு இருந்தது. அந்தக்கூட்டில் இன்னும் இரண்டு தவிட்டுக்குருவிக் குஞ்சுகள் இருந்தன. அந்தக்குருவிகள் சின்னதாக இருந்தன. ஆனால் பழுப்பும் கருப்பும் கலந்த பறவைக்குஞ்சோ அந்தக்குஞ்சுகளை விட மட்டுமல்ல சுற்றியிருந்த தவிட்டுக்குருவிகளை விடவும் பெரியதாக இருந்தது.

தாய்த்தவிட்டுக்குருவியின் அருகில் தத்தித்தத்தி வந்த இன்னொரு தவிட்டுக்குருவி,

“ எப்படி உன் கூட்டுக்குள்ளே இவன் வந்தான்? “

“ அதானே எனக்குத் தெரியல..என் முட்டைகளோட தான் இவனும் பொறிந்து வளர்ந்தான்.. மற்ற குஞ்சுகளை விட முண்டி முண்டி இரையைச் சாப்பிட்டான்.. இப்ப வளர வளரப் பார்த்தா அவன் நெறமும் குரலும் வேறயா இருக்கு….”

” இவன் நம்ம இனத்தான் இல்லையே.. ”.

“ அதான் எனக்கும் புரியல… ஆமா.. . பேச்சைப் பாரு சகிக்கல.. கூகூகூன்னு கூவுறான்..”

குட்டித்தம்பி பாரிக்கு அங்கே நடந்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இருந்த இடத்திலேயே மூச்சு விடாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். எல்லாக்குருவிகளும் ஒரு தடவையாவது அந்தப்புதிய பறவைக்குஞ்சின் அருகில் வந்து ” கீச் கீச்ச் கீச் முட்டாள்.. ஏமாற்றுக்காரா..” என்று வைதுவிட்டு பறந்து சென்றன.

அந்தப் புதிய பழுப்பும் கருப்பும் கலந்த பறவை சோகத்துடன் மெல்ல அந்த இடத்தை விட்டு தத்தித் தத்தி போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை குதிக்கும்போதும்,

“ கூ கூ  நான் யாரு..? இங்கே எப்படி வந்தேன்..? “ என்று புலம்பிக்கொண்டே சென்றது. அப்போது எங்கிருந்தோ கூ கூ கூ கூ என்று ஒரு சத்தம் கேட்டது. அதைக்கேட்டதும் குஞ்சுப்பறவையின் காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. உடனே அதுவும் கூகூகூகூ என்று கூவியது. உடனே அருகிலிருந்த கருவேலமரத்திலிருந்து ஒரு அக்காக்குயில் பறந்து வந்து அந்தக் குஞ்சின் அருகில் உட்கார்ந்தது.

“ அட நான் அக்காக்குயிலா? “ என்று உற்சாகமாய் கூவியது குஞ்சுப்பறவை. இரண்டும் மகிழ்ச்சியோடு கூவிக்கொண்டிருந்தன. அப்படியே பறந்து கருவேலமரக்கிளைக்கும் பறந்து போய் ஒளிந்து கொண்டன.

குட்டித்தம்பி பாரி மெல்ல யோசித்துக் கொண்டே வீட்டுக்குள் போனான். அங்கே அப்பா கணிணியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். குட்டித்தம்பி பாரி அப்பாவைப் பார்த்து,

“ ஏன் நான் தவிட்டுக்குருவியோட கூட்டில பொறந்து வளர்ந்தேன்....? “ என்று கேட்டான். அதைக்கேட்ட அப்பா ஒரு நொடி யோசித்துவிட்டு,

“ அதுவாக்கண்ணு.. எல்லாம் இயற்கையன்னையின் தந்திரம் தான்.. “

“ தந்திரமா? “

“ காக்கா.. தவிட்டுக்குருவிகளோட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயற்கையன்னை குயில்களைத் தான் நியமிச்சிருக்காங்க.. “

“ ஓ.. அப்படியா? ஆனா புரியலயே..”

“ அட படுக்காளிப்பயலே அப்பாவைக் கலாய்க்கிறீயா..? குயில்களுக்குக் கூடு கட்டத்தெரியாது.. அதனால புள்ளிக்குயில் மரத்தில கூடு கட்டுற காகத்தை ஏமாத்தி அந்தக் கூட்டுல முட்டை போட்டுரும்.. அதே மாதிரி அக்காக்குயிலும் தரையில கூடு கட்டுற தவிட்டுக்குருவியோட கூட்டுல முட்டை போட்டுரும்.. இது அந்தப் பறவைகளுக்கே தெரியாது.. அதுக நம்ம முட்டை தான்.. நம்ம குஞ்சு தான்னு நெனைச்சு வளர்த்து வரும்.. பெரிசான பிறகு இரண்டு பேருக்கும் தெரிஞ்சுபோகும்.. அப்புறம் என்ன கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டு அவுக அவுக கூட்டத்துக்குப் போயிருவாக.. அம்புட்டுதான்.. “

“ இதுல எப்படி தவிட்டுக்குருவிக் கூட்டம் கொறையும்.. “

“ அது கொஞ்சம் சோகமான கதை தான்.. ஆனால் இயற்கையில் எதுவும் சோகம், பயங்கரம், கொடூரம்னு எதுவும் கிடையாது.. அதனதன் இயல்புப்படி.. எல்லாம் நடக்கும்.. முதல்ல குயில் முட்டைபோடும்போதே தவிட்டுக்குருவியோட முட்டைகளைக் கூட்டிலேர்ந்து தள்ளி விட்டுரும்.. அந்த முட்டைகள் பொரிக்காது.. இல்லையா? அப்புறம் குயில் குஞ்சு வளரும் போது மற்ற குஞ்சுகளை விட அதிகமான தீனியைச் சாப்பிடும்.. மற்ற குஞ்சுகளைக் காலால தள்ளியும் விட்டுரும்.. அதுல அந்தக் குஞ்சுகள் பலவீனத்தாலோ, தாக்குதலாலோ செத்தும் போயிரும்..”

குட்டித்தம்பி பாரியின் முகத்தில் வருத்தம் வந்தது. உடனே அப்பா,

“ பார்த்தியா.. நான் சொன்னேன்ல.. இதுல வருத்தப்பட எதுவுமில்ல.. எல்லாம் வாழ்க்கைக்கான போராட்டம்.. அந்தப் போராட்டத்துல.. இயற்கையன்னை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான இயல்புகளைக் கொடுத்திருக்காங்க..”

என்று சொன்னார். அப்போது பாரிக்கு ஒரு சத்தம் கேட்டது.

ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக்

அந்தச் சத்தத்தை அவன் இதுவரை கேட்டதில்லை. உடனே பாய்ந்து தோட்டத்துக்குச் சென்றான். குட்டித்தம்பி பாரி தான் இப்போது குட்டிப்பறவைக் கவனிப்பாளராகி விட்டானே!

 நன்றி - துளிர் பிப்ரவரி 2021

 

Sunday, 5 April 2020

தவிட்டுக்குருவியின் ஆசை


தவிட்டுக்குருவியின் ஆசை

உதயசங்கர்

விடிந்தும் விடியாமல் சண்டை ஆரம்பித்து விட்டது. கூட்டமாய் தவிட்டுக்குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. அந்த இடமே ஒரே சத்தக்காடாக இருந்தது. ஒன்றை ஒன்று கொத்தவும் விரட்டவும், பறந்து சிறுவட்டம் அடித்துத் திரும்பி வந்து உட்காரவும் செய்தன. சில குருவிகள் தத்தித் தத்தி குதித்து வேடிக்கை பார்த்தன. இத்தனைக்கும் காரணம் காலையில் எழுந்ததும் ஒரு தவிட்டுக்குருவி பறந்து வந்த ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்தது. அருகிலிருந்த இன்னொரு தவிட்டுக்குருவி அதன் வாயிலிருந்து அந்த வெட்டுக்கிளியைப் பிடுங்கியது.
“ கீச் கீச் கீச் நான் தான் பிடிச்சேன்.. கீச் கீச் “
என்று வெட்டுக்கிளியை பிடித்த குருவி கத்தியது.
“ கீக்கீச் கிக்கீச் நான் தான் பார்த்தேன் கிக்கீச் “
என்று வெட்டுக்கிளியைப் பிடுங்கிய குருவி கத்தியது. இதற்குள் கீழே கிடந்த வெட்டுக்கிளி குதித்து புற்களுக்குள் மறைந்து விட்டது. இரண்டு தவிட்டுக்குருவிகளும் இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு ஒன்றை ஒன்று கொத்தின.
“ கீச்ச் கீச்ச் அப்படித்தான் விடாதே போடு சண்டையை.. கீச்ச் “
என்று அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தவிட்டுக்குருவி தூண்டி விட்டது. அதற்கு காலையில் நல்லபொழுதுபோக்கு கிடைத்து விட்டது என்று குஷி.
“ க்க்கீச் க்க்கீச் டேய் சண்டை போடாதீங்கடா இந்த சின்னப்பூச்சிக்காக அடிச்சிக்காதீங்கடா..”
என்று வயதில் மூத்த தவிட்டுக்குருவி சொல்லிக்கொண்டிருந்தது. அந்தக்குருவியின் பேச்சை யார் கேட்பார்கள்? எப்போதும் சண்டையும் சச்சரவும் கூப்பாடுமாக இருப்பார்கள் தவிட்டுக்குருவிகள். யாருக்காவது புழு, பூச்சி, பழம், கொட்டை, எது கிடைத்தாலும் சண்டை போடாமல் சாப்பிடமாட்டார்கள். இவ்வளவு சண்டை நடக்கிறதே என்று தனித்தனியே போகவும் மாட்டார்கள். எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். சேர்ந்தே இரை தேடுவார்கள்.
அந்தக்கூட்டத்தில் இருந்த மஞ்சள் கண்ணனுக்கு இப்படிச் சண்டைபோட்டு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடுவது பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்? என்று யோசித்தது. அப்போது அதனுடைய நண்பனான தேன்சிட்டின் ஞாபகம் வந்தது. பூக்களின் மீது பறந்து கொண்டே எவ்வளவு லாவகமாக பூக்களில் உள்ள தேனைக் குடிக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது. அதைப்போல தேன்குடிக்கத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இனிப்பான தேன். நினைத்தவுடன் நாக்கு சப்புக்கொட்டியது.
“ கீச் கீச் கீச் ஆகா! ஆகா! தேன்.. வண்ண வண்ணப்பூக்களிலிருந்து ருசியான தேன்.. “
என்று நினைத்தது. அன்று மாலை தேன்சிட்டைப் பார்த்தவுடன் மஞ்சள் கண்ணன் தன்னுடைய ஆசையைச் சொன்னது. தேன்சிட்டு சிறகுகளை அடித்துப் பறந்து கொண்டே,
“ நல்லது நண்பா! பூக்களிலிருந்து தேனை எடுக்கும்போதே நாங்கள் அந்தப்பூக்களின் மகரந்தச்சேர்க்கைக்கும் உதவுகிறோம்.. அதனால அது காயாகி கனியாகிறது… உன்னால் அந்தப்பூக்களைக் காயப்படுத்தாமல் தேனை எடுக்க முடியுமா? “
“ ஓ இது பெரிய விசயமா? எனக்கு ஒரு முறை சொல்லிக்கொடு..அப்புறம் பாரேன்.”
தேன்சிட்டுக்கு வேறு வழி தெரியவில்லை. அது மஞ்சள் கண்ணனிடம்,
“ சரி என் பின்னாலேயே வா..”
தேன்சிட்டு செம்பருத்திச்செடியில் பூத்திருந்த செக்கச்சிவந்த செம்பருத்திப்பூவுக்குள் தன் கூர்மையான அலகை நீட்டி அசங்காமல் தேனைக் குடித்தது. நான்கைந்து பூக்களில் குடித்து விட்டு,
“ நல்லா பாத்துக்கிட்டியா.. இப்ப நீ குடிச்சிப்பாரு..நண்பா..” என்று மஞ்சள் கண்ணனிடம் கூறியது. உடனே மஞ்சள் கண்ணன் செம்பருத்திப்பூவுக்கருகில் போய் அலகை நீட்டியது. குட்டையாகவும் பருமனாகவும் இருந்த அலகு பூவுக்குள்ளே போகவில்லை. வேகமாக தலையை நுழைக்க முயற்சி செய்தது மஞ்சள் கண்ணன். செம்பருத்திப்பூ கிழிந்து தொங்கியது. இன்னும் இரண்டு பூக்களையும் கிழித்து விட்டது அந்தத் தவிட்டுக்குருவி. தேன்சிட்டுக்கு வருத்தமாகி விட்டது.
“ பார்த்தியா.. நான் சந்தேகப்பட்டது சரியாப்போச்சு.. உனக்கு அதுக்கு வாகான அலகு இல்லை நண்பா..”
என்று சொன்னது. ஆனால் மஞ்சள் கண்ணனுக்கு ஆசை விடவில்லை.
“ இல்லையில்லை.. இது பெரிய பூ… அதான் இப்படி ஆயிருச்சி.. சின்னப்பூவைக் காட்டு..”
என்று சொன்னது. தேன்சிட்டு மறுபடியும் பறந்து அருகில் இருந்த மல்லிகைப்பூந்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கேயும் முதலில் தேன்சிட்டு தேனைக் குடித்துக் காட்டியது. பின்னர் மஞ்சள் கண்ணன் பறந்து போய் அலகை நீட்டியது. அலகு உள்ளேயே போகவில்லை. பூவை விட அலகு பெரியதாக இருந்தது. வாயைத் திறந்து மூடியபோது பூவை முழுதும் கொத்தி எடுத்து விட்டது. பலமுறை முயற்சி செய்தும் ஏராளமான மல்லிகைப்பூக்களைக் கொத்தி எடுக்கத்தான் முடிந்தது. மஞ்சள் கண்ணன் பரிதாபமாக தேன்சிட்டைப் பார்த்தது.
அப்போது கீழே ஈரமான தரையில் ஒரு மண்புழு ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டது தவிட்டுக்குருவி. அவ்வளவு தான். பாய்ந்து சென்று அந்த மண்புழுவை தன்னுடைய உறுதியான அலகினால் கொத்தி எடுத்துக்கொண்டு பறந்து சென்றது.
தேன்சிட்டு ” ட்வீக் ட்வீக் ட்வீக் இயற்கையன்னை அவங்கவங்களுக்குன்னு தனித்தனித் திறமைகளைக் கொடுத்திருக்காங்க உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. நண்பா..” என்று கத்தியது.
தவிட்டுக்குருவியும், “ கிக்கீச் கிகீச்ச்.. எனக்குப் புரிஞ்சிரிச்சு.. “ என்று சொல்லி முடிக்கும் முன்னால் அதன் வாயிலிருந்த மண்புழுவை இன்னொரு தவிட்டுக்குருவி பிடுங்கியது.
“ கிக்கீக்கீ நான் தான் பார்த்தேன்..கிக்கீ “
“ நான் தான் பிடிச்சேன்.. கிக்கீ ..”
என்று கத்திச்சண்டை போட்டன. எல்லாத்தவிட்டுக்குருவிகளும் அங்கே கூடி சலம்பிக்கொண்டிருந்தன.
நன்றி - துளிர் ஏப்ரல் 20