யார் நீ?
உதயசங்கர்
” யார் நீ? கீச் கீச்ச் “
“ நீ யார்? கீச் கீச் கீச் “
“ நீ எப்படி எங்கூட்டுக்குள்ளே வந்தே? கீச்கீச்ச்ச் “
“ சொல்லு. கீச்.”
” சொல்லு கீச் ”
“ இப்படி கேட்டா சொல்லமாட்டான்.. எல்லாரும் போடுங்க ஒரு கொத்து..கீச்
கீச் கீச்..”
அங்கேயிருந்த தவிட்டுக்குருவிகள் எல்லாம் கோபத்துடன் நெருங்கின.
“ ச்சேச்சே.. அதெல்லாம் வேண்டாம்பா.. பாவம் சின்னப்பிள்ள “
என்று ஒரு மூத்த தவிட்டுக்குருவி சொன்னது. அதைக்கேட்ட பிறகு
மற்ற குருவிகள் லேசாய் தத்தி பின்வாங்கின. இத்தனைக்கும் பின்னால் ஒரு மெலிதான சத்தம்
கெஞ்சலாய் கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த சத்தங்கள் எங்கிருந்து வருகின்றன?
குட்டித்தம்பி பாரி தேடிப் பார்த்தான். அவனுடைய வீட்டுக்குப் பின்னாலிருந்த புதரிலிருந்து
தான் இந்தச் சத்தங்கள் வந்தன. அங்கே ஐந்தாறு தவிட்டுக்குருவிகள் கூட்டமாய் நின்று கத்திக்
கொண்டிருந்தன. ஏற்கனவே சிவப்பாய் இருக்கும் கண்களில் இப்போது கோபம் தெரிந்தது. அந்தக்
கூட்டத்துக்குப் பின்னால் தவிட்டுக்குருவியை விட அளவில் பெரியதாய் பழுப்பும் கருப்பும்
கலந்த நிறத்தில் ஒரு குட்டிப்பறவை பாவமாய் நின்று கொண்டிருந்தது. அது தலை குனிந்து
ஏதோ முனகியது. ஆனால் அது என்ன சொல்லியது என்று யாருக்கும் கேட்கவில்லை.
குட்டித்தம்பி பாரி தூரமாய் நின்று அதைக் கவனித்தான்.
அவனுடைய அப்பா பறவைக்கவனிப்பாளர். அதனால் எப்படி பறவைகளைத் தள்ளியிருந்து கவனிக்கவேண்டும்
என்று சொல்லிக் கொடுத்திருந்தார். எல்லாத்தவிட்டுக்குருவிகளும் அங்கே புதருக்கருகில்
கூடி கய்யா முய்யா என்று சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தன. அவைகளுக்கு முன்னால் பழுப்பும்
கருப்பும் கலந்த குட்டிப்பறவை தலையைத் தரையோடு குனிந்தபடி அடுத்து என்ன நடக்குமோ என்ற
பயத்துடன்
“ எனக்குப் பயமாருக்கு.. எனக்கு
ஒண்ணுமே புரியல,,, க்ளவ்..கூகூகூ ..” என்று
சொல்லிக் கொண்டிருந்தது.
அப்போது தான் குட்டித்தம்பி பாரி
கவனித்தான். அந்தக்குருவிகள் கூட்டமாய் இருந்த இடத்துக்கு புதருக்கருகில் ஒரு தவிட்டுக்குருவியின்
கூடு இருந்தது. அந்தக்கூட்டில் இன்னும் இரண்டு தவிட்டுக்குருவிக் குஞ்சுகள் இருந்தன.
அந்தக்குருவிகள் சின்னதாக இருந்தன. ஆனால் பழுப்பும் கருப்பும் கலந்த பறவைக்குஞ்சோ அந்தக்குஞ்சுகளை
விட மட்டுமல்ல சுற்றியிருந்த தவிட்டுக்குருவிகளை விடவும் பெரியதாக இருந்தது.
தாய்த்தவிட்டுக்குருவியின் அருகில்
தத்தித்தத்தி வந்த இன்னொரு தவிட்டுக்குருவி,
“ எப்படி உன் கூட்டுக்குள்ளே இவன்
வந்தான்? “
“ அதானே எனக்குத் தெரியல..என்
முட்டைகளோட தான் இவனும் பொறிந்து வளர்ந்தான்.. மற்ற குஞ்சுகளை விட முண்டி முண்டி இரையைச்
சாப்பிட்டான்.. இப்ப வளர வளரப் பார்த்தா அவன் நெறமும் குரலும் வேறயா இருக்கு….”
” இவன்
நம்ம இனத்தான் இல்லையே.. ”.
“ அதான் எனக்கும் புரியல… ஆமா..
. பேச்சைப் பாரு சகிக்கல.. கூகூகூன்னு கூவுறான்..”
குட்டித்தம்பி பாரிக்கு அங்கே
நடந்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இருந்த இடத்திலேயே மூச்சு
விடாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். எல்லாக்குருவிகளும் ஒரு தடவையாவது அந்தப்புதிய
பறவைக்குஞ்சின் அருகில் வந்து ” கீச் கீச்ச் கீச் முட்டாள்.. ஏமாற்றுக்காரா..” என்று
வைதுவிட்டு பறந்து சென்றன.
அந்தப் புதிய பழுப்பும் கருப்பும்
கலந்த பறவை சோகத்துடன் மெல்ல அந்த இடத்தை விட்டு தத்தித் தத்தி போய்க் கொண்டிருந்தது.
ஒவ்வொரு முறை குதிக்கும்போதும்,
“ கூ கூ நான் யாரு..? இங்கே எப்படி வந்தேன்..? “ என்று புலம்பிக்கொண்டே
சென்றது. அப்போது எங்கிருந்தோ கூ கூ கூ கூ என்று ஒரு சத்தம் கேட்டது. அதைக்கேட்டதும்
குஞ்சுப்பறவையின் காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. உடனே அதுவும் கூகூகூகூ
என்று கூவியது. உடனே அருகிலிருந்த கருவேலமரத்திலிருந்து ஒரு அக்காக்குயில் பறந்து வந்து
அந்தக் குஞ்சின் அருகில் உட்கார்ந்தது.
“ அட நான் அக்காக்குயிலா? “ என்று
உற்சாகமாய் கூவியது குஞ்சுப்பறவை. இரண்டும் மகிழ்ச்சியோடு கூவிக்கொண்டிருந்தன. அப்படியே
பறந்து கருவேலமரக்கிளைக்கும் பறந்து போய் ஒளிந்து கொண்டன.
குட்டித்தம்பி பாரி மெல்ல யோசித்துக்
கொண்டே வீட்டுக்குள் போனான். அங்கே அப்பா கணிணியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.
குட்டித்தம்பி பாரி அப்பாவைப் பார்த்து,
“ ஏன் நான் தவிட்டுக்குருவியோட
கூட்டில பொறந்து வளர்ந்தேன்....? “ என்று கேட்டான். அதைக்கேட்ட அப்பா ஒரு நொடி யோசித்துவிட்டு,
“ அதுவாக்கண்ணு.. எல்லாம் இயற்கையன்னையின்
தந்திரம் தான்.. “
“ தந்திரமா? “
“ காக்கா.. தவிட்டுக்குருவிகளோட
எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயற்கையன்னை குயில்களைத் தான் நியமிச்சிருக்காங்க.. “
“ ஓ.. அப்படியா? ஆனா புரியலயே..”
“ அட படுக்காளிப்பயலே
அப்பாவைக் கலாய்க்கிறீயா..? குயில்களுக்குக் கூடு கட்டத்தெரியாது.. அதனால புள்ளிக்குயில்
மரத்தில கூடு கட்டுற காகத்தை ஏமாத்தி அந்தக் கூட்டுல முட்டை போட்டுரும்.. அதே மாதிரி
அக்காக்குயிலும் தரையில கூடு கட்டுற தவிட்டுக்குருவியோட கூட்டுல முட்டை போட்டுரும்..
இது அந்தப் பறவைகளுக்கே தெரியாது.. அதுக நம்ம முட்டை தான்.. நம்ம குஞ்சு தான்னு நெனைச்சு
வளர்த்து வரும்.. பெரிசான பிறகு இரண்டு பேருக்கும் தெரிஞ்சுபோகும்.. அப்புறம் என்ன
கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டு அவுக அவுக கூட்டத்துக்குப் போயிருவாக.. அம்புட்டுதான்..
“
“ இதுல எப்படி தவிட்டுக்குருவிக்
கூட்டம் கொறையும்.. “
“ அது கொஞ்சம் சோகமான கதை தான்..
ஆனால் இயற்கையில் எதுவும் சோகம், பயங்கரம், கொடூரம்னு எதுவும் கிடையாது.. அதனதன் இயல்புப்படி..
எல்லாம் நடக்கும்.. முதல்ல குயில் முட்டைபோடும்போதே தவிட்டுக்குருவியோட முட்டைகளைக்
கூட்டிலேர்ந்து தள்ளி விட்டுரும்.. அந்த முட்டைகள் பொரிக்காது.. இல்லையா? அப்புறம்
குயில் குஞ்சு வளரும் போது மற்ற குஞ்சுகளை விட அதிகமான தீனியைச் சாப்பிடும்.. மற்ற
குஞ்சுகளைக் காலால தள்ளியும் விட்டுரும்.. அதுல அந்தக் குஞ்சுகள் பலவீனத்தாலோ, தாக்குதலாலோ
செத்தும் போயிரும்..”
குட்டித்தம்பி பாரியின் முகத்தில்
வருத்தம் வந்தது. உடனே அப்பா,
“ பார்த்தியா..
நான் சொன்னேன்ல.. இதுல வருத்தப்பட எதுவுமில்ல.. எல்லாம் வாழ்க்கைக்கான போராட்டம்..
அந்தப் போராட்டத்துல.. இயற்கையன்னை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான இயல்புகளைக்
கொடுத்திருக்காங்க..”
என்று சொன்னார். அப்போது பாரிக்கு
ஒரு சத்தம் கேட்டது.
ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக்
ட்வீக்
அந்தச் சத்தத்தை அவன் இதுவரை கேட்டதில்லை.
உடனே பாய்ந்து தோட்டத்துக்குச் சென்றான். குட்டித்தம்பி பாரி தான் இப்போது குட்டிப்பறவைக்
கவனிப்பாளராகி விட்டானே!
இயற்கை அன்னை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான இயல்புகளைக் கொடுத்திருக்காங்க.... அருமை கதை மிகச் சிறப்பாக இருக்கிறது...
ReplyDeleteஅருமையான கதை.இந்த கதையால் குயில் வாழ்க்கைக்கு அர்த்தம் பிறந்தது போல இருக்கிறது. சிறப்பு
ReplyDeleteஇயற்கை உண்மையை நேர்த்தியாக குழந்தைகளுக்குள் கடத்தும் மொழி நடை. சிறப்பு.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை.!அருமை!
ReplyDeleteசூப்பராயிருக்கு
ReplyDelete