Monday, 8 February 2021

கோணலூர் நாட்டின் கோணல்ராஜா

 

கோணலூர் நாட்டின் கோணல்ராஜா

உதயசங்கர்


முன்னாடி ரொம்ப காலத்துக்கு முன்னாடி கோணலூர் கோணலூர்னு ஒரு நாடு இருந்தது. அந்தப் பேர் கூட அப்புறம் வந்தது தான். முதலில் அந்த ஊருக்கு அதுக்கு முன்னாடி கேணியூர் என்று பெயர் இருந்தது. நாடெங்கும் கிணறுகளும் வீடெங்கும் கேணிகளும் ( (சிறுகிணறு) இருந்தன. அப்போது அந்த நாட்டுக்கு ராஜாவே கிடையாது. ராஜா இல்லைன்னா எப்படி? மக்களே ஆட்சி செய்தார்கள். நாடு செழிப்பாக இருந்தது. விவசாயம் நன்றாக நடந்தது. வாணிபம் கொழித்தது. மற்ற நாடுகளில் உள்ள மக்களை விட கேணியூர் நாட்டு மக்கள் நாகரிகமானவர்களாக இருந்தார்கள். ஆனால் எல்லாம் சில வருடங்களில் மாறி விட்டது. எப்படி தெரியுமா?

 கோணல்ராஜாவின் கூட்டத்தினர் அந்த நாட்டுக்கு வந்தனர். அவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அந்த நாட்டுக்கு வந்தனர். கேணியூர் மக்கள் ரொம்ப நல்லவர்களாகவும் வெள்ளந்திகளாகவும் இருப்பதைப் பார்த்து அவர்களை ஏமாற்றி நாட்டைப் பிடித்துக்கொண்டனர். அப்போதிருந்து கோணல்ராஜாக்கள் தான் ஆண்டு கொண்டிருந்தனர்.

எந்த ராஜா வந்தாலும் அந்த ராஜாவின் பெயர் கோணலாகத்தான் இருக்கும். முதல் கோணல்ராஜா, முற்றும் கோணல் ராஜா, அரைக்கோணல் ராஜா, முக்கால் கோணல் ராஜா, என்று பெயர்களை மாற்றிக்கொண்டே அவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். இப்போதிருக்கிற எட்டுக்கோணல் ராஜா அவருக்கு முன்னால் ஆண்ட அத்தனை கோணல்ராஜாக்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுவதைப்போல சட்டங்களை இயற்றினார். அதனால் மக்கள் பட்ட துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

காலையில் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவிப்பணம் வழங்குவதாக முழங்குவார். மாலையில் விவசாயிகள்அவர்களுடைய நிலங்களையெல்லாம் பிரபுக்களிடம் விற்று விடவேண்டும் என்று பேசுவார். மத்தியானம் ஆண்களும் பெண்களும் சமம் என்று சொல்லுவார். சாயந்திரம் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கத்துவார். நள்ளிரவில் இளைஞர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் எல்லோரும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார். எல்லாமதங்களும் என் மதமே என்று முரசறையச் சொல்லி ஆணையிடுவார். அந்த நேரத்திலேயே அவருடைய மதத்தைத் தவிர மற்ற மதங்களின் கோவில்களை இடித்துத் தள்ளுவார்.

இப்படி நாட்டுமக்களை நிம்மதியாக இருக்கவிடாமல் மாறி மாறிச் சட்டங்கள் போட்டுக்கொண்டேயிருந்தார் எட்டுக்கோணல்ராஜா.  அதுமட்டுமில்லாமல் தினசரி வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியில் தோன்றி தான் மக்கள் நனமைக்காகத்தான் சட்டங்கள் போட்டதாக விளக்கம் கொடுப்பார்.

எட்டுக்கோணல் ராஜாவின் கோணல்த்தனங்களைப் பார்த்து மக்கள் கொந்தளித்து போராட்டங்கள் நடத்தினர். குழந்தைகள் போராடினர். ஆண்கள் போராடினர். இளைஞர்கள் போராடினர். பெண்கள் போராடினர். வயதானவர்கள் போராடினர். விவசாயிகள் போராடினர். தொழிலாளிகள் போராடினர். அலுவலர்கள் போராடினர். வியாபாரிகள் போராடினர்.  எல்லோரும் போராட்டம் நடத்தவே எட்டுக்கோணல் ராஜா மந்திரிசபையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

“ மகா மந்திரிகளே! மக்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? யாராவது சரியான காரணத்தைச் சொல்ல முடியுமா?..என்று கத்தினார். எல்லோரும் யோசித்தார்கள். யோசித்தார்கள். அப்படி யோசித்தார்கள்.

 கடைசியில் கல்வித்துறை மந்திரி தான் காரணத்தைச் சொன்னார்,

“ ராஜாவே! எல்லோரும் கல்வி கற்றதினால் தான் அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிந்து விட்டது.. முன்பெல்லாம் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பிரபுக்களும் மட்டும் தான் கல்வி கற்றனர்.. ஆனால் இப்போது எல்லோரும் படிக்கிறார்கள்.. அதனால் தான் அவர்கள் நாம் சொல்வதை நம்பாமல் கேள்விகள் கேட்கிறார்கள்.. எனவே அவர்களைப் படிக்கவிடாமல் செய்து விட்டால் போராடமாட்டார்கள்.. “

என்று விளக்கமாகச் சொன்னார். எட்டுக்கோணல் ராஜா தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே,

“ திடீரென்று எப்படி அவர்களைப் படிக்கவிடாமல் தடுக்க முடியும்? “ என்று கேட்டார்.

“ ரொம்ப சிம்பிள்..ராஜா “

“ எப்படி? “

“ பரீட்சை.. தேர்வு.. எக்ஸாம்.. ரேங்க்.. கிரேடு… எவாலுவேஷன்…. தகுதி.. திறமை.. இப்படி நிறைய வார்த்தைகள் இருக்கிறது ராஜா.. அதன்படி திட்டங்கள் தீட்டினால் எல்லோரும் படிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.. “

“ ஆகா.. கேட்கவே இனிக்கிறது.. உடனே திட்டம் போடுங்கள்.. “

என்று எட்டுக்கோணல் ராஜா உத்தரவிட்டார். அவ்வளவு தான். எல்லாமந்திரிகளும் கூடி திட்டங்களைத் தீட்டினர்.

மறுநாள் அறிவிப்பு வெளியானது.

குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு தேசிய அளவிலான ஒரு பரீட்சை வைக்கப்படும் அதில் வெற்றிபெறும் குழந்தைகளே கிண்டர்கார்டனில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்… கிண்டர்கார்டனில் சேர்ந்த குழந்தைகளுக்கு தேசிய அளவில் ஒரு தேர்வு வைக்கப்படும் அதில் வெற்றிபெறும் குழந்தைகளே எல்கேஜியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.. இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் தேசிய அளவிலான டெஸ்ட் வைத்து மேலே கல்லூரி வரையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்… கல்லூரி சேரும்போது அதுவரை வெற்றிபெற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தேசிய அளவிலான தேர்வு வைக்கப்படும்.. பெற்றோர்களும் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே குழந்தைகள் கல்லூரிக்குப் போகமுடியும்.

அறிவிப்பை பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி. எல்லோருக்கும் கல்வியே இன்னும் முறையாகச் சென்று சேராத நிலைமையில் இப்படி யாரையும் கல்வி கற்கவிடாமல் விரட்டியடிக்கிற வேலையைச் செய்கிறாரே இந்த எட்டுக்கோணல் ராஜா.

ஏற்கனவே பரீட்சை, தேர்வு, எக்ஸாம், என்று நொந்து போயிருந்த குழந்தைகளும், மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அழுது குமுறினர். இந்த நிலைமையில் போனால் மக்கள் எல்லோரும் முட்டாள்களாகி விடுவார்களே. மீண்டும் மூடநம்பிக்கை, சர்வாதிகாரம், வளர்ந்து விடுமே என்று பயந்தனர். இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று கூட யோசித்தனர். பின்னர் எல்லோரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

எட்டுக்கோணல்ராஜாவுக்கும் அவருடைய மந்திரிகளுக்கும் ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வைக்கும் பரீட்சையில் தேர்ச்சியடைந்து விட்டால் அவர்கள் சொன்னபடி செய்கிறோம் என்று எட்டுக்கோணல் ராஜாவுக்குத் தூது அனுப்பினார்கள். எட்டுக்கோணல்ராஜாவும் அவரது மந்திரிகளும்

“ ப்ப்பூ! இவ்வளவுதானா? சரி.. வைத்துக்கொள்ளலாம்..என்று சொல்லியனுப்பினார்கள். பரீட்சை அரண்மனைக்கு முன்னாலிருந்த பெரிய மைதானத்தில் நடந்தது. கேள்விகளையும் பதில்களையும் சரியா தவறா என்று சொல்ல ஒரு வெளிநாட்டிலிருந்து ஐந்து அறிவியலறிஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தவறான விடைகளுக்கு சிவப்பு விளக்கை எரிய விடுவார்கள்.

ஐந்தாம் வகுப்பு மாணவன் நெடுஞ்செழியன் மேடையில் வந்து நின்றான்.

அவன் முதல் கேள்வியைக் கேட்டான்.

“ பூமி எப்படி உருவானது? “

“ ஹா.. இது தெரியாதா? பூமியைக் கடவுள் தான் படைத்தார்..

சிவப்பு விளக்கு எரிந்தது.

அடுத்த கேள்வி.

“ பூமி சூரியனைச் சுற்றுகிறதா? சூரியன் பூயைச் சுற்றுகிறதா? “

உடனே எட்டுக்கோணல்ராஜா நல்லநாள் கிழமை பார்த்துச் சொல்லும் பஞ்சாங்கமந்திரியைப் பார்த்தார். பஞ்சாங்கமந்திரி,

“ சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது… நம்ம பஞ்சாங்கத்திலேயே போட்டிருக்கே..

என்றார். சிவப்பு விளக்கு எரிந்தது. அடுத்த கேள்வி.

“ நம்முடைய பால்வெளியில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன? “

ஜோசிய மந்திரி உடனே சொன்னார்.

“ இருபத்தியேழு.. அதைத்தானே நாம் குழந்தைகள் பிறந்த நாள் நட்சத்திரம் என்று சொல்றோம்.. “

சிவப்பு விளக்கு எரிந்தது. எட்டுக்கோணல் ராஜாவின் பரிவாரம் பயந்து போனார்கள். அடுத்தகேள்வி.

“ மனிதன் எப்படித் தோன்றினான்? “

புளுகு மந்திரி சொன்னார்.

“ கடவுள் களிமண்ணை உருட்டி ஊதி மனிதனைப் படைத்தார்..

இப்போதும் சிவப்பு விளக்கு எரிந்தது.

சாதாரணமான அறிவியல் கேள்விகளுக்கும் தவறான பதிலைச் சொன்ன எட்டுக்கோணல்ராஜாவும் அவரது மந்திரிகளும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து அறிவியலைப் படிக்க அனுப்பப் பட்டனர்.

கோணலூர் நாட்டில் மீண்டும் மக்கள் ஆட்சி செய்தனர். எல்லோருக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

நன்றி - வண்ணக்கதிர்

3 comments:

  1. ஹாஹாஹா...மிகமிக மிக அருமையான கதை அய்யா.இதைத்தான் செய்யவேண்டும் அய்யா கோணல்ராக்களை!.வாழ்த்து, வணக்கம்!

    -தங்கத்துரையரசி
    கோவில்பட்டி

    ReplyDelete
  2. முகம்மதுபின் துக்ளக்கின் ஆட்சி காலத்தை நினைவு படுத்துகிறது கோணல் ராஜாவின் ஆட்சி காலம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நகைசுவையாக சொல்லப்பட்ட கதை அதே சமயம் சிந்திக்க வைக்கும் கதை. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ரசிக்கக் கூடிய கதை. வாழ்த்துகள் தோழர்.

    ReplyDelete