Sunday 18 January 2015

இரண்டு நூல்கள் வெளியீடு

பச்சை நிழல் ( குழந்தைக்கதைகள் )

உதயசங்கர்

முன்காலத்தைப் போல குழந்தைகளுக்கு சொல்லக் கதைகள் இல்லை எனும் மேம்போக்குக் கருத்துகளை மறுக்கும் விதமாக குழந்தைகளுக்கான நல்ல பல கதைகளை இப்புத்தகம் தாங்கி வந்துள்ளது. இந்தக் கதைகளை வாசிக்கும் குழந்தைகளின் கற்பனை உலகத்தைத் தாங்களாகவே மென்மேலும் விரித்துச் செல்லும் சாத்தியங்களை இக்கதைகள் உருவாக்கித் தருகின்றன. வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே குழந்தைகளை வளர்த்தெடுத்துவிடும் என்ற மூடத்தனத்திலிருந்து விடுவித்து குழந்தைகளின் நிஜ உலகத்தை குழந்தைகளுக்குத் தெளிவாக உணர்த்துவதோடு பெற்றோருக்கும் சமூகத்துக்கும் அக்கறையோடு தெளிவுறுத்தத் தலைப்படுகிறது இப்புத்தகம்.

வெளியீடு – என்.சி.பி.ஹெச்

விலை- ரூ.60/

 

லால் சலாம் காம்ரேட் இ.எம்.எஸ். ( இ.எம்.எஸ். நினைவுக்கட்டுரைகள் )

தொகுப்பும் மொழிபெயர்ப்பும் – உதயசங்கர்/உத்ரகுமாரன்

இ.எம்.எஸ். என்ற ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு மனித ஆயுட்காலம் முழுவதும் போதாது என்று கூடச் சொல்லலாம். அரசியலில் இ.எம்.எஸ்ஸினுடைய மிகப்பெரிய வெற்றி என்பது அவர் முதல் மந்திரியானதிலோ, கட்சியினுடைய பொதுச்செயலாளரானதிலோ இல்லை. தன்னுடைய ஆதரவாளர்களையும் எதிராளிகளையும் ஒரு நிமிடம் கூட உறங்க அநுமதிக்காமல் என்றென்றும் அவர்களைக் கேள்விகளிலும் விசாரணைகளிலும் ஈடுபடச்செய்து இந்திய அரசியலை பெரிதும் அறிவுப்பூர்வமாக மாற்றியது தான் என்று நான் நம்புகிறேன்.

மலையாள எழுத்தாளர்- சுகுமார் அழிக்கோடு

வெளியீடு- என்.சி.பி.ஹெச்.

விலை – ரூ60/

Thursday 15 January 2015

குறும்புக்கார எறும்பு

மலையாளத்தில்- வைசாகன்ant_2_2278439g

தமிழில் – உதயசங்கர்

 

எறும்புகள் குறும்புக்காரர்களா? இல்லை. இல்லவே இல்லை. அவர்கள் நல்ல ஒற்றுமையுடன் வாழும் ஒழுக்க சீலர்கள் ஆவார்கள். ஆனால் அவர்களிடையே குறும்பன் என்ற பெயர் கொண்ட ஒரு எறும்பும் இருந்தது. அவனுடைய கதையைச் சொல்கிறேன்.

இயற்கை ஒவ்வொரு உயிரினங்களுக்கும் அவர் அவர்களுக்கே உரிய வாழ்க்கை முறையும், வசிப்பிடமும் பிரித்துக் கொடுத்திருக்கிறதல்லவா? ஆமாம். எறும்புகள் எத்தனை சிறிய உயிரினங்கள்? அவர்களுக்கு புற்றுகள் தான் இருப்பிடங்கள். அவர்கள் சேர்ந்து தங்களை விட பெரியதான இரையைப் பிடித்து புற்றுக்குள் கொண்டுவந்து சேர்க்கும். சிறியவர்களானதால் அவர்களுடைய சக்தி என்பது அவர்களுடைய ஒற்றுமையில் தான் இருக்கிறது. பரிபூரணமான ஒத்துழைப்பு.

ஆனால் குறும்பன் மாத்திரம் ஒத்துழைப்பதில்லை. எறும்புகள் வரிசை வரிசையாக செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு போகும்போது குறும்பன் ஏதாவது ஒரு கல்லின் மீது ஏறி சும்மா உட்கார்ந்திருக்கும். அவருக்கு எப்போதும் யோசனை தான். மற்றவர்கள் புற்றுக்குள் ஏதாவது நல்ல தீனியைக் கொண்டு வந்தால் குறும்பன் கொஞ்சம் உதவி செய்யும். எதற்கு? அதைத் தின்பதற்கு. தின்று முடித்ததும் மறுபடியும் யோசனையில் ஆழ்ந்து விடும். நாட்கள் இப்படிப் போய்க் கொண்டிருந்தன.

குறும்பனை மற்றவர்கள் கண்டுகொள்வதில்லை. மற்றவர்களின் உழைப்பினால் தன் வயிறு வளர்க்கிற ஒரு அற்பஜீவி என்று மற்றவர்கள் நினைத்தார்கள். குறும்பன் ஒருபோதும் வரிசையில் நடப்பதில்லை. மற்ற எறும்புகள் ஒருவருக்கொருவர் அவர்களுடைய சங்கேதமொழியில் சொல்லிக் கொண்டார்கள்,

“ வெட்கம் கெட்டவன்..”

தெரியுமல்லவா? எறும்புகளின் மொழி ஒருவகையான சங்கேதமொழி. ஒவ்வொரு விசயத்துக்கும் தனித்தனியான சங்கேதவார்த்தைகளைஅவர்களுக்குள் பரிமாறிக் கொள்வது வழக்கம். குறும்பனால் அவதிக்குள்ளான மற்றவர்கள் அவனை புற்றிலிருந்து வெளியே தள்ளி விட்டார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வந்து புற்றின் வாசலை அடைத்து விட்டார்கள். தனியாக வெளியே நின்று கொண்டிருந்த குறும்பன் ஒரு கர்ச்சனையைக் கேட்டு நடுங்கினான்.

ஒற்றை யானை. அவன் காட்டினை மிதித்துக் கொண்டு போகிறான். குறும்பனின் மனசில் ஒரு ஆசை. தான் ஒரு யானையாக இருந்தால் எப்படி இருக்கும்? தன்னுடைய சக்தியை இந்த கர்வம்பிடித்த உயிர்களிடம் காண்பிக்கணும்.எறும்புக்கூட்டம் எப்பவாச்சும் புற்றை விட்டு வெளியில் வருமில்லையா? அப்போது ஒரே மிதி. ஒரு தேய்ப்பு. ஆயிரம் எறும்புகளாவது சட்னியாக வேண்டும்.

குறும்பனின் மனசு பொங்கியது. யானையாக வேண்டுமே! அவனுடைய வாழ்க்கையில் ஒரு உறுதியான தீர்மானம் எடுத்தான். தீனி கிடைக்காதல்லவா? அதனால் பட்டினியுடன் கடும் தவம் செய்ய வேண்டும். அப்படி இயற்கையன்னையை சந்தோசப்படுத்தி வரம் கேட்க வேண்டும்.

குறும்பன் தவமிருந்தான். இரவும் பகலும் இருந்தான். மழையிலும் வெயிலிலும் பனியிலும் இருந்தான். தவமான தவம். குறும்பன் மெலிந்து துரும்பாகி விட்டான். அவனுடைய பக்தியைக் கண்டு மனமிரங்கிய இயற்கையன்னை அங்கே தோன்றினாள்.

குறும்பன் ஒரே ஒரு வரம் தான் கேட்டான். ஒரு யானையாக மாற வேண்டும். இயற்கையன்னை சிரித்தாள். பௌர்ணமி நிலவைப் போல பனியைப்போல அருளும் வழங்கினாள். குறும்பன் யானையாகி விட்டான். அவன் பிளிறினான். காடு சிலிர்த்தது. தன்னுடைய கூட்டாளிகள் குடியிருக்கிற பாறைகளுக்கு அருகில் சென்று கர்ச்சனை செய்தான். பாறையினைப் போல அவனுடைய மொழி இறுகிப் போயிருந்தது. ஒரே ஒரு எறும்பு மட்டுமே வெளியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அதை மிதித்துத் தேய்த்துக் கொல்ல முயற்சித்தது.உற்றுக் கவனித்த அந்த எறும்பு புற்றுக்குள் இறங்கி மறைந்தது.

குறும்பன் யோசித்தது. ஒரு பிரச்னை இருக்கிறதே. யானைக்கு எறும்பின் புற்றுக்குள் இறங்க முடியாது. இறங்கினால் தானே எறும்புக்கூட்டத்துக்கு தன்னுடைய சக்தியைப் பற்றித் தெரியும். அதற்கு என்ன செய்ய? ம். அதற்கும் வழி உண்டு. என்ன வழி? தவம் தான்.

மறுபடியும் கடுமையான தவம். இயற்கையன்னையின் நிம்மதி போச்சு. மறுபடியும் தோன்றினாள். குறும்பன் சொன்னான்.

“ அன்னையே.. யானையாக இருக்கும்போதே எனக்கு எறும்புப்புற்றுக்குள் நுழையவும் வேணும்..”

இயற்கையன்னையின் கண்கள் சிவந்தன. சேட்டைக்கார இந்தச் சிறிய எறும்பின் தன்னுடைய தவறை உணர்ந்து கொள்ள என்ன வழி? அன்னை சிரித்தாள். மழைக்கால இடி மின்னலைப்போல. பின்பு அன்னை சொன்னாள்.

“ குறும்பா..ஒவ்வொரு உயிருக்கும் அதற்குரித்தான தகுதியும் வாழ்க்கை முறைகளும் இருக்கிறது. ஆனால் உனக்கு அது புரியவில்லை. உனக்கு ஒரே சமயத்தில் யானையாகவும் எறும்பாகவும் ஆனால் தான் திருப்தி. இல்லையா? அது பேராசை. பேராசைக்காரனுக்கு ஒருபோதும் திருப்தி வராது…நீ இன்று முதல் மணலில் குழி பறித்து குடியிருக்கிற குழிநரியாகக் கடவது!..”

அன்னை ஒரு சாரல் மழையின் துல்லியமான சத்தத்தில் மறுபடியும் சிரித்தாள், பின்பு மறைந்து விட்டாள். குறும்பன் மணலில் வட்டம் சுற்றிச் சுற்றிக் கீழே இறங்கினான். மணலுக்குள் குடியிருந்தான். பாவம் எறும்புகளையே இரையாகப் பிடிப்பதற்கு சபிக்கப்பட்ட ஒரு குழிநரியாக வாழ்ந்தான்.

குறும்பன் என்ற எறும்பு தான் இப்போது நாம் காண்கிற குழிநரி.

 

நன்றி- மாயாபஜார் தமிழ் இந்து 

Friday 2 January 2015

அடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி

 

நேர்காணல்ND1A5574

உதயசங்கர்

( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயிறுகள் “ துவங்கி ஐம்பத்தியிரண்டு சிறுகதைகள், ” ”பிறகி “ லிருந்துஆறு நாவல்கள், மொழிபெயர்ப்பு, கருவேலம்பூக்கள் என்ற திரைப்படம், என்று தன் இலக்கிய ஆளுமையால் தமிழிலக்கியத்தில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர். எழுத்தாளர் பூமணி. அதிர்ந்து பேசாத இயல்பும், எழுத்தின்பால் ஆழ்ந்த நேசமும் கொண்ட அவருடைய சமீபத்திய படைப்பான “ அஞ்ஞாடி “ என்ற நாவலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. எப்போதும் ஒதுங்கியிருக்கும் சுபாவம் கொண்ட அவருடைய வீட்டில் இப்போது எப்போதும் ஊடக வெளிச்சம். இந்தியா டூடேவுக்காக அவருடைய மனம் திறந்த நேர்காணல் )

கேள்வி: உங்களுடைய அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தமைக்கு இந்தியா டூடே சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த விருதின் தருணம் எப்படியிருக்கிறது?

பூமணி:, விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. அதனால் பெரிய ஆரவாரமோ, மகிழ்ச்சியோ இல்லை. அஞ்ஞாடி எழுதுவதற்காக இரண்டு வருட காலம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதிருந்தது. அதைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் அஞ்ஞாடி நாவலை எழுதினேன். கிட்டத்தட்ட ஒன்பது வருட உழைப்பு. அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை நினைக்கிறேன். அதே மாதிரி அடுத்த கட்ட நகர்வுக்கான ஊக்கமாக சாகித்ய அகாடமி விருது கிடைத்தாக நினைக்கிறேன்..

கேள்வி: கரிசல் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணனை முன்னத்தி ஏர் என்று முன்பு சொல்லியிருக்கிறீர்கள். அவருடைய எழுத்துக்கும் உங்களுடைய எழுத்துக்குமான ஊடாடலைப் பற்றிச் சொல்ல முடியுமா?

பூமணி: கரிசல் வட்டார இலக்கியம் என்று சொல்வதில் இப்போது எனக்கு உடன்பாடில்லை. சாதிய இலக்கியம் என்று இப்போது சொல்லுவதைப்போல குறுகிய பார்வை கொண்டதாக இருக்கிறது. கரிசல் இலக்கியம் கரிசல் இலக்கியம் என்று ஆரவாரித்ததில் கு.அழகிரிசாமி மாதிரியான எழுத்தாளர்களை நாம் தவறவிட்டு விட்டோம். கு.அழகிரிசாமி முன்பே நாம் அங்கீகரித்திருந்தால் கரிசல் இலக்கியத்தின் வேகம் குறைந்திருக்கும். இப்போது எனக்கு குற்றவுணர்ச்சியே இருக்கிறது. அருமையான கதைகளை எழுதியுள்ள கு.அழகிரிசாமியின் எழுத்து கிராமங்களில் காலையில் ஆலங்குச்சியால் நிதானமாக ஒவ்வொரு பல்லாக விளக்குவதைப் போன்ற எழுத்து. புறவயமான சூழ்நிலைச் சித்திரத்தை அகவயப்படுத்தி அந்தக்கதையின் ஓட்டத்துக்கு இசைவாகவோ, கூடுதல் வெளிச்சம் தருகிற மாதிரியோ இருக்கிறது அவருடைய கதைகள். அவரையெல்லாம் விட்டு விட்டு காடு கரை என்று எதை எதையோ எழுதியாச்சு..

கேள்வி: அஞ்ஞாடி நாவலில் ஒரு இருநூறு ஆண்டு கால தென் தமிழக வரலாறு பேசப்படுகிறது. அஞ்ஞாடி என்ற பெயரே இனவரைவியல் தன்மையோடு சூட்டப்பட்டிருக்கிறது. பள்ளர், நாடார், வண்ணார், மறவர், என்ற சாதிகளின் வரலாறாகவும், சிவகாசிக்கலவரம், கழுகுமலைக்கலவரம்,, கிறித்துவ மதமாற்றம் போன்ற நிகழ்வுகளையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். பின் நவீனத்துவ கோட்பாடுகளில் ஒன்றான அடையாள அரசியலை அஞ்ஞாடி முன்வைக்கிறதா?

பூமணி: அடையாள அரசியலில் பூமணி இல்லை. எனக்கு அதில் உடன்பாடுமில்லை. ஒரு சாதியை அடையாளப்படுத்தி அதைச் சார்ந்து எழுதினாலே அது அடையாள அரசியல். ஆனால் நான் அப்படி எழுத வில்லை. இன்று தமிழகத்தின் வரலாற்றை எழுத வேண்டுமானால் சாதிகளைப் பற்றி எழுதாமலிருக்க முடியாது. அஞ்ஞாடி மார்க்சீயநோக்கில் எழுதப்பட்ட நாவல். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று அர்த்தம். குடும்பர்கள் மட்டுமே வாழும் கலிங்கல் கிராமத்தை என்னுடைய லட்சியக்கிராமமாக நான் எழுதியுள்ளேன். அதில் அவர்களுக்கு சலவை செய்யும் ஒரே ஒரு வண்ணார் குடும்பத்தையும் எழுதியுள்ளேன். இனக்குழு வரலாறும் இருக்கிறது. தொன்மங்களின் வரலாறும் இருக்கிறது. நாவலுக்காக ஆய்வு செய்கையில் நம்முடைய வரலாறே வன்முறைகளின் வரலாறாக இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

கேள்வி: அஞ்ஞாடி நாவலின் முதல் மின்னல் எப்படித் தோன்றியது?

பூமணி: 1800 – களின் துவக்கத்தில் தமிழகத்தின் தென்கோடியில் வாழ்ந்த நாடார் இன மக்கள் திருவிதாங்கூர் மன்னரின் அடக்குமுறைகளை எதிர்த்து தோள்சீலைப் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் நிறையப்பேர் அடக்குமுறைகளுக்கு அஞ்சி திருநெல்வேலி, மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், என்று குடிபெயருகிறார்கள். சிவகாசிக்கொள்ளை என்று பெரும்பான்மை மக்கள் பேசுகிற நாடார் இன மக்களுக்கு எதிராக மறவர் இன மக்களின் தலைமையில் எல்லா சாதியினரும் சேர்ந்து நடத்திய கலவரத்தைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய கிராமத்திலிருந்த ஒரு தாத்தாவின் கட்டை விரல் வளைந்திருந்தது. அதைப் பற்றிக் கேட்டபோது அவர் சிவகாசிக்கொள்ளையில் அவரைக் குத்த வந்த வேல்கம்பைப் பிடித்து மல்லுக்கட்டும் போது கவண்கல் வந்து விரலில் தாக்கியதினால் எலும்பு வளைந்து விட்டது என்றார். . சாதாரண மக்களும் கலந்து கொண்ட அந்தச் செய்தி எனக்கு சிவகாசிக்கலவரம் பற்றி ஆய்வு செய்யும் ஆர்வத்தைத் தூண்டியது. அங்கே அஞ்ஞாடி கருக்கொண்டது.

கேள்வி: உங்களுடைய நாற்பதாண்டுகளுக்கு மேலான இலக்கியப்பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பூமணி: 1966 – ஆம் ஆண்டு நா.பா. நடத்திய தீபம் பத்திரிகையில் மரபுக்கவிதை வெளிவந்தது. அது தான் என்னுடைய முதல் படைப்பு. அதன் பிறகு 1969 – ஆம் ஆண்டு எழுத்து பத்திரிகையில் அறுப்பு என்ற என் முதல் சிறுகதை வெளியானது… இப்போது யோசிக்கும்போது இன்னும் கொஞ்சம் சிறுகதைகள் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 1979- ஆம் ஆண்டில் என்னுடைய முதல் நாவல் பிறகு வெளியானதிற்குப் பிறகு சிறுகதைகள் எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது நாவலின் விரிந்த களத்தில் எழுதிய பிறகு சிக்கனமான மொழியில் சிறுகதை எழுத முடியவில்லை. இப்போது கதைக்கட்டுரை என்று ஒரு புதிய வடிவத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அறிவுப்பூர்வமான கருத்துக்களும் உணர்வுமயமான நிகழ்வுகளும் இணைந்த வடிவம்.

கேள்வி: உங்களுடைய அடுத்த நாவலைப் பற்றிச் சொல்ல முடியுமா?

பூமணி: கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக முதல் ஆயிரமாவது ஆண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் வரையிலும் வெளியில் மறைந்து போய் பூமிக்கடியில் ஓடிக் கொண்டேயிருக்கும் சரஸ்வதி நதி மாதிரி பெண்களின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு சாதாரண இனக்குழுத்தலைவனான கிருஷ்ணன் எப்படி கடவுளாக மாறுகிறான். பெண்கள் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறார்கள்? வெறும் உற்பத்திக் கருவிகளாக பெண்களை எப்படி மாற்றுகிறார்கள்? என்றெல்லாம் விவாதிக்கிற நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறேன்.

 

அஞ்ஞாடி நாவல் இதுவரை பெற்ற விருதுகள்

1. கீதாஞ்சலி விருது

2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வழங்கிய கே.பி.பாலச்சந்தர் நினைவு நாவல் விருது

3. ஆனந்த விகடன் விருது

4. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய தமிழ்ப்பேராய விருது

5. கலைஞர் பொற்கிழி விருது

6. உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது கோயம்புத்தூர்

சாகித்ய அகாடமி

நன்றி- இந்தியா டுடே ஜனவரி,7