Monday, 28 May 2018

கனிதல்


கனிதல்

உதயசங்கர்

அறிவியல் ஆசிரியர் தவசிக்குக் கோபம் கொப்பளித்தது. சிவ்வென்று முகத்தில் ரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. அறையிலிருந்த பெரிய சன்னல் வழியே அந்த அதிகாலையில் வீசிய குளிர்ந்த காற்று கூட அவருடைய கோபத்தின் தணலைக் குறைக்க முடியவில்லை. மறுபடியும் அந்த ரிகார்டு நோட்டின் முதல்பக்கத்தைத் தன்னிச்சையாகவே திருப்பினார். அதில் பெயரோ, வரிசை எண்ணோ எழுதப்படவில்லை. வெள்ளைத்தாள் அவரைப் பார்த்துச் சிரித்தது. முன்னும் பின்னும் ரிகார்டு நோட்டின் பக்கங்களை விரித்துப் பார்த்தார். எந்த அடையாளமும் இல்லை. என்ன தைரியம்? பேர், வரிசை எண், எழுதாமல் வைத்து விட்டால் கண்டுபிக்க முடியாதா? யாருன்னு சிக்கட்டும். அப்புறம் இருக்கு மண்டகப்படி! அவர் அந்த ரிகார்டு நோட்டைமட்டும் தனியாக எடுத்து வைத்தார்.
புத்தம்புது நோட்டு. அழகாக காக்கி நிற அட்டை போட்டு பார்க்க நேர்த்தியாக இருந்தது. மறுபடியும் உள்ளே திருப்பி அந்தப்படத்தைப்பார்த்தார். செம்பருத்திப்பூவின் படமும் அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் படமும் அவ்வளவு நேர்த்தியாக இல்லாவிட்டாலும் பார்க்கும்படியாக இருந்தது. வலதுபுறம் சாய்ந்த கையழுத்தில் பாகங்கள் குறிக்கப்பட்டிருந்தன. சுமாரான விலை குறைந்த பென்சிலாக இருக்க வேண்டும். பென்சிலும் சரியாகப் பதியவில்லை. கூர் தீட்டப்படவில்லை. யாராக இருக்கும்? எங்கே கண்டுபிடி? பார்க்கலாம். என்கிற மாதிரி அந்தப்படத்திற்குக் கீழே கையெழுத்து. அவருடைய கையழுத்து. அவர் போடாத அவருடைய கையெழுத்து அவரைப்பார்த்து கேலியாகச் சிரித்தது. அவருடைய கையெழுத்தைப் போட்டே ரிகார்டு நோட்டை அவரிடமே கொடுக்க வேண்டும் என்றால் என்ன நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்.
ஆசிரியர் தவசியின் மனதில் அவருடைய வகுப்பில் உள்ள பையன்களின் முகம்  நழுவுப்படக்காட்சி போல ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரின் முகத்திலும் ஒரு கள்ளப்புன்னகை இருந்ததாக இப்போது தெரிந்தது. யாரையும் நம்பமுடியவில்லை.  ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே தான் ஒரு முன்மாதிரியான ஆசிரியராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டங்களைத் தாண்டி கற்பித்தல் சம்பந்தமாக பல நல்ல நூல்களைத் தேடித்தேடி வாசித்தார். கிஜூபாய் பகேகேயின் பகல் கனவு, டோட்டோசான் ஜன்னலில் ஒரு சின்னஞ்சிறுமி, ஜான் கோல்ட்டின் குழந்தைகள் எப்படி கற்கிறார்கள்? எளிய அறிவியல் நூல்கள் குழந்தை இலக்கிய நூல்கள், என்று பல நூல்களைத் தேடித்தேடிப் படித்தார். கல்லூரிக்காலத்தில் கவிதை எழுதுகிற பழக்கம் இருந்தது. சிலகவிதைகள் பிரசுரம் ஆகியிருந்தது. அந்த வாசனையினால் இலக்கியப்பரிச்சயமும் இருந்தது. பொது நூலகங்களில் இலக்கிய நூல்களைத் தேடித்தேடி வாசித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து முடித்ததுமே ஒரு லட்சிய ஆசிரியராக தன்னை மாற்றுகிற முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய பள்ளிக்காலத்தில் அவருக்கு ஒரு லட்சிய ஆசிரியர் இருந்தார். அவர் கனகசுந்தரம் ஐயா.
கனகசுந்தரம் ஐயா பள்ளிக்கூடத்தில் நுழைந்து விட்டால் போதும் மாணவர்கள் அவரை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள். அவருடைய சுத்தமான கைத்தறி ஆடை, கம்பீரமான நடை, இசை போன்ற பேச்சு, எப்போதும் புன்னகை சிந்தும் முகம், அகன்று விரிந்த நெற்றி என்று பார்த்தவுடன் ஒரு வார்த்தையாவது பேசவேண்டும் என்று தோன்றும். அவர் கோபப்பட்டு மாணவர்கள் பார்த்ததில்லை என்பார்கள். ஆனால் கோபம் வரும்படி யார் நடந்தாலும் அவர் அந்தப்பையனைத் தனியாகக் கூப்பிட்டுப் பேசுவார். ஒரு வார்த்தை கூட அவன் செய்த தவறைப் பற்றிப் பேசாமல் அவனுடைய நேர்மறையான நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசுவார். அவருடைய மென்மையான பேச்சும் மாணவனின் தோளில் அரவணைக்கிற மாதிரியான தொடுதலும் எந்தப்பையனையும் அசைத்து விடும். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் கண்களில் கண்ணீர் கோர்க்கும். கடைசிவரை அவனுடைய தவறைப் பற்றிப் பேசாத பெருந்தன்மையின் வெம்மையில் அவன் புடம் போட்டவனாகி விடுவான். அவர் அவனைப் போகச்சொல்லும் போது அவனாகவே நாத்தழுதழுக்க,
“ இனிமே அப்படிச் செய்ய மாட்டேன் ஐயா..” என்று சொல்லுவான்.
அவர் அப்போதும் முகம் நிறைந்த சிரிப்போடு அவன் தோளில் தட்டுவார். அவ்வளவு தான். மாணவர்களை எதற்கெடுத்தாலும் மிரட்டவோ, உருட்டவோ, செய்ய மாட்டார். அந்த வயதுக்குரிய குறும்புகளை அவரும் ரசித்துச் சிரிப்பார். மற்றவர்களை எந்த வகையிலும் புண்படுத்தாத நகைச்சுவைகளைக் கைதட்டி ரசிப்பார். அவருடைய கையில் பிரம்பை மாணவர்கள் பார்த்ததேயில்லை. அவர் மீது மாணவர்கள் அவ்வளவு அன்பு செலுத்தினார்கள். அந்த அன்பை எப்படியாவது காண்பித்து விடவேண்டும் என்று ஆலாய்ப் பறப்பார்கள். கிராமத்துப்பையன்கள் அவருக்கு நிறைய தானியங்கள், காய்கறிகள், கொண்டுவருவார்கள். நகரத்துப்பையன்கள் வீட்டிலிருந்து பண்டம்பலகாரங்கள் என்று கொண்டுவருவார்கள். அவருக்குத்தெரியும். அந்த எளிய பள்ளியில் யார் யார் ஒருவேளை மதிய உணவுக்காகவே பள்ளிக்கூடத்துக்கு வருபவர்கள் என்று. அவர் அந்தப்பையன்களை அழைத்து அவருக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுவந்த மாணவன் கையால் கொடுக்கச் சொல்வார். சிலசமயம் அவரே எல்லோருக்கும் சமமாய் பிரித்துக் கொடுத்து விடுவார். அதேபோல பண்டம் பலகாரங்களை எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடுவார். எப்போதும் மாணவர்களின் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருக்கும். மாதம் ஒரு நாள் விடுப்பு அன்று மாணவர்கள், ஆசிரியர்கள், எல்லோரும் சேர்ந்து பள்ளியைச் சுத்தம் செய்வார்கள். அன்று ஒரே பாட்டும் கூத்துமாய் இருக்கும். பொழுது கழிவதே தெரியாது. எல்லோரும் சேர்ந்து அவரவர் வீட்டிலிருந்து கொண்டுவந்த சாப்பாட்டை ஆளுக்கொருவாய் சாப்பிடுவதில் என்ன இன்பம்! கனக சுந்தரம் ஐயா சின்னப்பிள்ளைகள் மாதிரி ஓடி ஓடி வேலை செய்வார். இவ்வளவு சீக்கிரம் பொழுது போய் விட்டதே என்று வருத்தமாக இருக்கும். தவசி வீட்டில் ஒரு துரும்பை எடுத்துப் போடமாட்டான். ஆனால் பள்ளியில் அவ்வளவு வேலைகளைச் செய்வான். அதன் பிறகு வீட்டிலும் வேலைசெய்ய ஆரம்பித்தான்.
அப்போதே அவனுக்குள் அவன் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று தீர்மானமாகி விட்டது. எப்போதும் ஆசிரியராவதைப் பற்றிய கனவிலேயே இருந்தான். பள்ளியில் தானே எதிர்காலச் சமூகம் உருவாகிறது. அந்தச் சமூகத்தின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு எத்துணை மகத்தானது! ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரிந்ததுமே அவனுடைய கனவுகள் நனவாகும் சந்தர்ப்பம் கைகூடி வந்ததை நினைத்து மகிழ்ந்தான். அவன் நினைத்தமாதிரியே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியே கிடைத்தது. பள்ளியில் சேர்ந்து ஆறுமாதத்திலேயே ஆசிரியர் தவசி மாணவர்களிடம் பெயர் பெற்று விட்டார். எல்லாமாணவர்களையும் ஐயா என்றே அழைத்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தார். வகுப்பில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பாடங்களை நடத்தினார். பலவீனமான மாணவர்களுக்கு என்று தனியாக வகுப்புகள் நடத்தினார். ஏன் மாணவர்களின் குடும்பப்பிரச்னைகளைக் கேட்டு அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேசினார். அவருடைய சக்திக்கு உட்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு சொன்னார். அதனால் ஊர்மக்களிடமும் மதிப்பு உயர்ந்தது. எப்போதும் மாணவர்கள் ஆசிரியர் தவசி பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தனர். இந்த வகுப்பு தான் என்றில்லை எல்லாவகுப்பு மாணவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். உடன் வேலை பார்த்த பல ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. சிலர் பின்னால் பேசினார்கள். சிலர் ஆசிரியர் தவசியிடம் வந்து
“ சார் உண்டானதைச் சொல்லிக்கொடுங்க.. போதும் அதுக்குத்தான் சம்பளம் தர்ராங்க… நீங்க கூடுதலா வேலைபாக்கறீங்கன்னு எக்ஸ்டிராவா அலவன்ஸு எதுவும் கொடுக்கமாட்டாங்க.. சார்.. இதுகளை எல்லாம் படிக்க வைச்சிரமுடியும்னு நெனைக்கிறீங்க..”
என்று சொல்லிச் சிரித்தனர். அவர்களிடம் தவசி அமைதியாக,
“ சார் கற்பித்தலை நான் ஒரு வரமா நினைக்கிறேன்.. அது என் லட்சியமும் கூட.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லோரும் நினைச்சிருந்தா அப்துல்கலாமோ, அண்ணாதுரையோ, நம்முடைய பெயர் சொல்லியிருக்க முடியாது.. இது கொஞ்சம் நாடகத்தனமாக்கூட இருக்கலாம்.. ஆனால் யதார்த்தமான உண்மை..”
என்று சொன்னார். அதைக்கேட்டு சில ஆசிரியர்கள் தவசியைப்போலவே இன்னும் கூடுதலாக சிரத்தை எடுத்தனர். பழனிச்சாமி தவசியுடன் சேர்ந்து தவசியைப்போலவே மாறிவிட்டார். இப்படி வந்த ஆறுமாதத்தில் அந்தப்பள்ளியின் பெயர் கல்விமாவட்டத்தில் பேசுபொருளாக மாறும்படி செய்து விட்டார். ஆனால் இந்தச்சூழ்நிலை அவருடைய சுயமரியாதையைக் கேள்வி கேட்டது.
அவருடைய கை தன்னையறியாமலேயே முன்னால் கொத்தாகக் கிடந்த தலைமுடியை சுருட்ட ஆரம்பித்தது. அவருடைய சிந்தனையில் என்னென்னெவோ தாறுமாறாய் ஓடியது. இன்று வகுப்பு தேர்வு இருக்கிறது. அதற்கு கேள்விகளை எழுதவில்லை. துணைத்தலைமையாசிரியர் டி.இ.ஓ. ஆபீசுக்கு கடந்த ஐந்து வருடங்களின் பத்தாவது வகுப்பு தேர்ச்சி விகிதாச்சாரத்தை அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவருக்கு மிகவும் பிடித்த அறிவியலறிஞர் டார்வினின் பரிணாமக்கோட்பாடு பற்றிய பாடத்தை அனுபவித்து நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடத்தைத் தாண்டிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். என்றெல்லாம் நேற்றிரவு யோசித்து வைத்திருந்தார்.
கடிகாரத்தின் மணி ஏழு அடித்தது. எப்போதும் முதல் ஆளாய் பள்ளிக்குள் நுழைந்து விடுவார். ரிகார்டு நோட்டுகளில் வரிசையாகக் கையெழுத்து போட்டு விட்டு அந்தக் குறிப்பிட்ட நோட்டை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துக் கொண்டார். இந்தப் பிரச்னையைச் சாதாரணமாக விடவும் முடியவில்லை. பெரிய பிரச்னையாக்கவும் முடியவில்லை. பேசாமல் தலைமையாசிரியரிடம் ரிப்போர்ட் செய்து விட்டு ஒதுங்கி விடலாம் என்று நினைத்தார். தலைமையாசிரியர் சந்திரமோகன் தவசி மீது அபரிமிதமான மரியாதையும் அன்பும் கொண்டவர். அதனால் அளவுக்கு அதிகமாக விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடுவாரோ என்று பயமாக இருந்தது. தானும் என்ன செய்ய முடியும்? யாரோ ஒரு பையனின் குறும்பு என்று விட்டு விடவும் முடியவில்லை. கண்டுகொள்ள வில்லையென்றால் எல்லோரிடமும் ஒரு அலட்சியமும் இளக்காரமும் தோன்றிவிடும் அபாயம் இருக்கிறது. அளவான தண்டனை கொடுக்க வேண்டும். தவசிக்கு இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொள்வோம் என்று நினைக்கவேயில்லை. ஒருவேளை தன்னுடைய ஆசிரியர் கனகசுந்தரம் ஐயாவுக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பார்? தவசிக்குக் குழப்பமாக இருந்தது. தலை வலித்தது. எழுந்து பள்ளிக்குக் கிளம்பினார்.
பள்ளிக்கூடத்தில் எல்லாம் வழக்கம் போலவே நடந்தன. அவருடைய வகுப்பில் நுழையும்போது பிள்ளைகளின் முகம் மலர்ந்த சிரிப்புடன் கூடிய முகமனைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார். ஒவ்வொருவர் முகமாய் ஆராய்ந்தார். இவனாக இருக்குமோ? அவனாக இருக்குமோ? சரி. ரிகார்டு கொடுத்து விடலாம். யார் என்று தான் பார்க்கலாம் என்று மனதில் முடிவு செய்து கொண்டு ஒவ்வொரு மாணவரின் பெயரையும் அழைத்து ரிகார்டு நோட்டுகளைக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது அந்த ரிகார்டு நோட்டைப் பற்றி சில வார்த்தைகள் நல்ல விதமாகக்கூறி இன்னும் நன்றாகச் செய்ய ஊக்குவித்தார். எல்லோருடைய நோட்டுகளையும் கொடுத்து முடிந்தபிறகு, தனியாக எடுத்து வைத்திருந்த அந்த ரிகார்டு நோட்டை எடுத்தார்.
“ யாருக்கு ரிகார்டு நோட்டு வரலை… எழுந்து வாங்கையா..”
ஒரு கணம் வகுப்பறை அமைதியாக இருந்தது. வகுப்பில் நான்காவது பெஞ்சில் மூன்றாவதாக இருந்த வேலுமணி எழுந்தான். அவனைப்பார்த்ததும் ஆசிரியர் தவசிக்கு அதிர்ச்சி. அவர் அவனாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வகுப்பில் ரொம்ப அமைதியான பையன். படிப்பதில் முன்னேறிக்கொண்டிருக்கிற பையன். அவனுடைய வீட்டுச்சூழ்நிலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிற பையன். அவருடைய கண்கள் அவனையே நம்ப முடியாமல் பார்த்தன. அவருடைய கைகள் அவனை அழைத்தன.
வேலுமணி எழுந்தவுடனேயே ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று உணர்ந்து கொண்டான். தவசி ஐயாவின் கண்களில் இருந்த கடுமையைக் கண்டதும் அவனுடைய கண்கள் கலங்க ஆரம்பித்தன. அவன் பெஞ்சில் இருந்து விலகி ஆசிரியரின் மேஜைக்கு அருகில் சென்றான். வகுப்பறை அமைதியாக இருந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. அவன் அருகில் வந்ததும்,
“ இது உங்க ரிகார்டு நோட்டுதானாய்யா..” என்று கேட்டார் ஆசிரியர் தவசி.
உலர்ந்த அந்த வார்த்தைகளில் இருந்த உணர்ச்சியின்மை வேலுமணியை ஏதோ செய்தது. அவன் கண்களில் திரையிட்டிருந்த கண்ணீரின் வழியே தன்னிச்சையாக மேஜை மீது தனியாக வைக்கப்பட்டிருந்த அந்த ரிகார்டு நோட்டினைப் பார்த்தான். ஆம் என்று தலையை அசைத்தான்.
தவசி அந்த ரிகார்டு நோட்டினைத் திருப்பி படம் வரைந்திருந்த பக்கத்தை அவன் பக்கமாகத் திருப்பினார். விரலால் அந்தக் கையெழுத்தைச் சுட்டிக்காட்டியபடியே,
“ என்னய்யா இது ? “
என்று கேட்டார். அதைப்பார்த்தானோ இல்லையோ வேலுமணி சத்தமாய் அழ ஆரம்பித்தான். ஆசிரியர் தவசி எதுவும் சொல்லவில்லை. அவருடைய முகம் இளகியது. மனதில் கனகசுந்தரத்தின் சிரித்த முகம் ஒருகணம் தோன்றி மறைந்தது. அப்போது தான் கவனித்தார் வேலுமணி அவரை மாதிரியே தலைமுடியைச் சீவியிருந்தான். எப்போதும் அவர் பின்னால் சுற்றும் பலபேரில் அவனும் ஒருத்தனாய் இருந்தான் என்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் எழுந்து வேலுமணியின் அருகில் சென்றான். அவர் அப்படி எழுந்திரிப்பதறகாகவே காத்திருந்தது போல வேலுமணி அவருக்கு அருகில் வந்து அணைந்து கொண்டான். அவனைச் சேர்த்தணைத்துக் கொண்ட தவசி குனிந்து அவனுடைய கண்ணீரைத் துடைத்து விட்டார். அவனுடைய கண்களில் இருந்த பயத்தைத் தன்னுடைய சிரிப்பினால் துடைத்தார். அவனுடைய முதுகில் மெல்லத் தட்டிக்கொடுத்த படி
“ போய் அழிரப்பரை எடுத்துட்டு வா..”
என்று மென்மையாகச் சொன்னார். வேலுமணிக்கு நடந்து கொண்டிருப்பதை நம்ப முடியாதவன் போல நின்று கொண்டிருந்தான். அவர் இன்னமும் அவனுடைய தலைமுடியைக் கோதி விட்டார். அவருடைய மனம் நிறைந்திருந்தது. கண்களில் அன்பின் ஒளி வீசியது. என்ன நடந்தது என்று தெரியாத அந்த வகுப்பில் அன்பின் மணம் வீசியது. மாணவர்களின் முகத்தில் அபூர்வமான நிறைவு பூத்திருந்தது.
நன்றி - காணிநிலம் .


No comments:

Post a Comment