Wednesday 20 November 2013

புதிய அரசியலமைப்புச்சட்டம்..

சாதத் ஹசன் மண்ட்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்manto2

குதிரைவண்டிக்காரனான மங்கு தான் அவனுடைய நண்பர்களிலேயே மிகச்சிறந்த அறிவாளி என்று கருதப்பட்டான். அவன் பள்ளிக்கூடத்துக்கு உள்ளே சென்று எப்படியிருக்கும் என்று இதுவரை பார்த்ததில்லை. கறாரான கல்வித்தகுதி என்று பார்த்தோமானால் அவன் பூஜ்யம் தான். ஆனால் சூரியனுக்குக் கீழே அவனுக்குத் தெரியாத எந்த விஷயமும் இல்லை.லௌகீகஉலகத்தைப் பற்றிய அவனுடைய இந்தப்பன்முகஅறிவைப் பற்றி குதிரைவண்டி நிலையத்திலுள்ள, அவனுடைய எல்லாநண்பர்களுக்கும் தெரியும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய அவர்களுடைய ஆர்வத்தை அவன் எப்போதும் திருப்திப்படுத்திவிடுவான்.

ஒரு நாள் அவன் அவனுடைய இரண்டு சவாரிகள் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து இந்து முஸ்லீம்களுக்கிடையில் இன்னொரு மதக்கலவரம் வெடித்துவிட்டது என்று தெரிந்து கொண்டான்.

அன்று மாலையில் அவன் நிலையத்துக்கு வந்தபோது குழம்பிப்போயிருந்தான். அவனுடைய நண்பர்களுடன் உட்கார்ந்து, ஹூக்காவில் நீண்ட ஒரு இழுப்பு புகையை இழுத்துவிட்டான். அவனுடைய காக்கிநிறத் தலைப்பாகையை எடுத்துவிட்டு கவலைதோய்ந்த குரலில், “ இது அந்தப் புனிதரின் சாபம் தான். அன்றாடம் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள். ஒருமுறை அக்பர் பாதுஷா ஒரு முனிவரை அவமரியாதை செய்துவிட்டார். அந்த முனிவர் ,” என் கண்முன்னே நிற்காதே.. உன் ஹிந்துஸ்தான் எப்போதும் கலவரங்களாலும், ஒழுங்கின்மையாலும் பீடித்திருக்கும்…” என்று சாபம் கொடுத்துவிட்டதாக பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்களே பாக்கறீங்கள்ல அக்பரோட ஆட்சி முடிந்ததிலிருந்து என்ன நடக்கிறது இந்தியாவில் கலவரங்களைத்தவிர..” என்று சொன்னான்.

தன்னிச்சையாக அவன் ஹூக்காவை இழுத்து பெரிய மூச்சு விட்டு, “ இந்த காங்கிரஸ்காரங்க… இந்தியா சுதந்திரம் அடையணும்னு விரும்பறாங்க..இன்னிக்கி நான் சொல்றேன் கேட்டுக்கோ.. ஆயிரம் வருஷம் ஆனாலும் அவங்களால அது முடியாது..வேணும்னா ஆங்கிலேயர்கள் போகலாம்.. ஆனா அதுக்கப்புறம் இத்தாலிக்காரனையோ, ருஷ்யாக்காரனையோ நீ பார்ப்பே… எனக்குத் தெரிஞ்சவரை ருஷ்யாக்காரன் ரெம்ப முரட்டுத்தனமானவங்க.. நான் சத்தியம் செய்றேன் ஹிந்துஸ்தான் எப்போதும் அடிமையாத்தான் இருக்கும்…ஆமாம் அந்த முனிவர் அக்பருக்குக் கொடுத்த சாபத்தின் இன்னொரு விஷயத்தைச் சொல்ல நான் மறந்துட்டேன்… இந்தியா எப்போதும் அந்நியர்களாலேயே ஆளப்படும்….” என்று சொன்னான்.

மங்கு வாத்தியாருக்கு பிரிட்டிஷ்காரர்களைப் பிடிக்காது. அவன் அவர்களை வெறுப்பதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் இந்தியர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல அட்டுழியம் செய்வதற்கான எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் விட்டுவைப்பதில்லையென்று அவனுடைய நண்பர்களிடம் சொல்வது வழக்கம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் அவனுக்கு பிரிட்டிஷ்காரர்களைப் பற்றிய தாழ்வான அபிப்பிராயம் தோன்றுவதற்கு அங்கு படைமுகாமிலிருந்த கோரா படைவீரர்கள் தான் காரணம். அவர்கள் அவனை நாயை விடக் கேவலமான பிறவி போல நடத்துவார்கள். அதுவுமல்லாமல் அவன் அவர்களுடைய வெள்ளை நிறத்தை வெறுத்தான். அவன் யாராவது ஒரு பிரிட்டிஷ்காரனை அல்லது செம்பவளநிற கோரா படைவீரனை எதிர்கொள்ள நேர்ந்து விட்டால் குமட்டிக்கொண்டு வரும். ’ அவங்க சிவப்பு முகங்க எனக்கு அழுகிக் கொண்டிருக்கும் பிரேதங்களை ஞாபகப்படுத்தும் ’ என்று விருப்பத்துடன் சொல்லிக்கொண்டிருப்பான்.

ஒரு குடிகாரகோரா படைவீரனோடு ஏற்பட்ட அடிதடிச்சண்டைக்குப் பிறகு பலநாட்களுக்கு அவன் மனவருத்ததோடு இருந்தான்.அவன் நிலையத்துக்குத் திரும்பிய பிறகு வைது கொண்டே ஹூக்காவைப் பிடிப்பான். அல்லது அவனுக்குப் பிடித்த ஏர் படம் போட்ட பிராண்ட் சிகரெட்டுகளைப் புகைக்கும் போது திட்டுவான்.

அப்போது அவன் தலையாட்டிக் கொண்டே சொல்வான்,” பாரு அவங்களை…. வீட்டுக்கு ஒரு மெழுகுவர்த்தி எடுக்க வருவாங்க.. உனக்குத் தெரியாம எடுத்துகிட்டு போயிருவாங்க.. அந்த மனுசக்குரங்குகளுக்கு முன்னால நிற்கவே என்னால முடியாது.. அவங்க உனக்கு ஆணையிடுறதப் பார்த்தீன்னா ஏதோ நாம அவங்கப்பனோட அடிமை மாதிரி…!”

சிலசமயங்களில், மணிக்கணக்காக அவர்களைத் திட்டியபிறகும், அவனுடைய கோபம் தீராது. அவனுக்கு அருகில் உட்கார்ந்திருப்பவரிடம் “ பாரு அவங்களை…குஷ்டம் பிடிச்சவங்களை மாதிரி.. .செத்து அழுகிக் கொண்டிருக்கிற மாதிரி… நான் அவங்கள ஒரே அடியிலே சாய்ச்சிருவேன்…ஆனா அவங்களோட திமிர்த்தனத்தை எப்படி எதிர்கொள்ள…? நேற்று ஒருத்தனோட தகராறு..அவனோட அதிகாரத்தைப் பார்த்து எனக்கு வந்ததே கோபம்…நான் அவன் மண்டையை உடைச்சிருப்பேன்..ஆனா நான் என்னைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன்…அந்தக் கழிசடையோட சண்டை போடறது என்னோட தகுதிக்குக் குறைவானதில்லையா..” என்று சொல்வான்.

அவனுடைய சட்டைக்கையினால் மூக்கைத் துடைத்துக் கொள்வான். மறுபடியும் அவனுடைய வசவைத் தொடர்வான். “ கடவுள் சத்தியமாகச் சொல்றேன்… இந்த இங்கிலீஷ் கனவான்களைக் கேலி செய்றதே எனக்குப் பிடிக்கல… ஒவ்வொரு தடவையும் அவங்களோட சனியன்பிடிச்ச மூஞ்சிகளைபார்த்தவுடனேயே என்னோட ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சிரும்… உம்மேல சத்தியமா சொல்றேன்..இவங்கள ஒழிக்கணும்னா ஒரு புதிய சட்டம் தான் கொண்டு வரணும்…”

ஒருநாள் வாத்தியார் மங்கு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து இரண்டு சவாரிகளை ஏற்றிக்கொண்டு போனான். அவர்களுடைய உரையாடலிலிருந்து இந்தியாவில் ஒரு புதிய சட்டம் வரப்போகிறதென்று தெரிந்து கொண்டான்.அவர்கள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப் போகிற இந்திய அரசுச்சட்டம் 1935 ஐப் பற்றிப் விவாதித்துக் கொண்டு வந்தார்கள்.

“ ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வரப்போவதாகச் சொல்கிறார்கள்… இது எல்லாவற்றையும் மாத்திரும்னு நம்புறியா..? ”

“ எல்லாம் மாறாது..ஆனால் நிறைய மாற்றங்கள் வரும்னு சொல்றாங்க… இந்தியர்களுக்கு விடுதலை கிடைச்சிரும்..”

“ அப்படின்னா நம்மோட வட்டி? “ என்று ஒருவர் கேட்டார். அநேகமாக அவர்கள் வழக்குக்காக நகரத்துக்கு வந்த லேவாதேவிக்காரர்களாக இருக்க வேண்டும்.

“ உண்மையில் எனக்குத் தெரியல… வழக்கறிஞரைக் கேட்கணும்…” என்று அவருடைய நண்பர் பதில் சொன்னான்.

வாத்தியார் மங்கு ஏற்கனவே ஏழாவது சொர்க்கத்துக்குப் போய் விட்டான். சாதாரணமாக அவனுடைய குதிரை மெதுவாகப் போவதாக திட்டிக் கொண்டே வருகிற பழக்கம் உண்டு. அதோடு சவுக்கை வீசி அடிக்கவும் தயங்க மாட்டான். ஆனால் இன்று எதுவும் செய்யவில்லை. அவ்வப்போது அவன் திரும்பி அவனுடைய பயணிகளைப் பார்த்துக் கொண்டான். மீசையைத் தடவி விட்டுக் கொண்டான். குதிரையின் கடிவாளத்தை ஆதூரத்துடன் தளர்வாக விட்டு,” வாடா மகனே உன்னால என்ன செய்ய முடியும்னு அவங்களுக்குக் காட்டுவோம்…. போவோம் வா..” என்று சொன்னான்.

அவனுடைய சவாரிகளை இறக்கிவிட்டு விட்டு அனார்கலி வணிகவளாகத்தில் அவனுடைய மிட்டாய்க்கடை நண்பனான டினோவின் கடையின் முன் நிறுத்தினான். அவன் ஒரு பெரிய கிளாஸ் லஸ்ஸியை வாங்கிக் ஒரே மூச்சில் குடித்தான். திருப்தியுடன் ஒரு பெரிய ஏப்பமிட்டு, கூவினான், “ அவர்கள் நரகத்துக்குப் போக..! “.

அவன் சாயந்திரம் குதிரைவண்டி நிலையத்துக்குப் போனபோது அவனுடைய நண்பர்கள் யாரும் அங்கில்லை. அவன் வெகுவாக ஏமாற்றமடைந்தான். ஏனெனில் அவன் அந்தச் சிறந்த செய்தியை அவனுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் வந்திருந்தான். அவனுக்கு சீக்கிரத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் வரப்போகிறது… அது எல்லாவற்றையும் மாற்றப்போகிறது …என்று யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு அரைமணி நேரத்துக்கு அவனுடைய கையில் சவுக்கைப் பிடித்தபடி அமைதியின்றி சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தான். அவனுடைய மனசு பல விஷயங்களைப் பற்றி, எதிர்காலத்தில் நடக்கவிருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசித்தது. நாட்டில் வரப்போகிற புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய செய்தி புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டது. அவன் அவனுடைய மூளையின் அனைத்து விளக்குகளையும் எரிய விட்டான். இந்தியாவில் ஏப்ரல் 1 ஏற்படுத்தப்போகிற விளைவுகளைப் பற்றி கவனமாகப் பரிசீலித்தான். அவன் புளகாங்கிதமடைந்தான். அந்த கழிசடை லேவாதேவிக்காரர்கள் வட்டியைப் பற்றிப் பேசிக் கொண்டதைப் பற்றி நினைத்தவுடன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். ‘ இந்தப் புதிய சட்டம் கொதிக்கிற சுடுதண்ணீர் மாதிரி ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் இந்த மூட்டைப்பூச்சிகளை கொன்றொழித்து விடும் ‘ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டம் இந்த வெள்ளைஎலிகளை ( பிரிட்டிஷ்காரர்களுக்கு அவன் வைத்திருந்த பெயர்.) ஒரேயடியாக அவைகளுடைய இருண்டபொந்துகளுக்குள் விரட்டியடித்து விடும். இனி பூமியில் எங்கும் தலையெடுக்க முடியாது. சிறிது நேரம் கழித்து நாதூ என்ற வழுக்கைத்தலை குதிரைவண்டிக்காரன் அவனுடைய தலைப்பாகையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு மெல்ல நடந்து வந்தான். வாத்தியார் மங்கு அவனுடைய கையைப் பிடித்துப் பலமாகக் குலுக்கிக் கொண்டே, “ உனக்கு ஒரு சிறந்த செய்தி வைத்திருக்கிறேன்.. அதைக் கேட்டால் உன் வழுக்கைத் தலையில் முடி முளைச்சாலும் முளைச்சிரும்..” என்று சொன்னான்.

பிறகு அவன் அந்தப் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவுக்குக் கொண்டு வரப் போகிற மாற்றங்களைப் பற்றி விவரிக்கத் தொடங்கினான். “ கொஞ்சம் பொறுத்துப் பாரு… என்னெல்லாம் நடக்கப்போகுதுன்னு….நான் இன்னைக்குச் சொல்றேன் கேட்டுக்கோ…. ருஷ்யாவின் ராஜா அவர்கள் போகின்ற பாதையைக் காட்டப் போகிறார்..”.

வாத்தியார் மங்கு பல வருடங்களாக கம்யூனிச அரசாங்கத்தைப் பற்றிப் பல கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறான். அதிலுள்ள பல விஷயங்களை புதிய சட்டங்களை, இன்னும் புதிய திட்டங்களை, அவன் மிகவும் விரும்பினான்.அதனால் தான் அவன் இந்தியாவின் புதிய சட்டத்தோட ருஷ்யாவின் ராஜாவை தொடர்பு படுத்தினான். ஏப்ரல் 1 ஆம் தேதி வரப்போகிற மாற்றங்கள் ருஷ்யாராஜாவின் செல்வாக்கினால் தான் ஏற்படுகிறது என்று நம்பினான். அவனைப் பொறுத்தவரை உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் ஒரு ராஜாவினால் தான் ஆளப்படுகிறது என்று உறுதியாக நினைத்தான்.

சில வருடங்களாக பெஷாவர் நகரில் சிவப்புச் சட்டை இயக்கம் மிகவும் பிரபலமாக செய்திகளில் அடிபட்டது. வாத்தியார் மங்குவுக்கு இந்த இயக்கம் ருஷ்யராஜாவுக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையது அதனால் இயல்பாகவே புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் தொடர்புடையது. இந்தியாவின் பல நகரங்களில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாயின. வெடிபொருட்கள் வைத்திருந்ததாக பலர் பிடிபட்டதாக வாத்தியார் மங்கு கேள்விப்பட்டபோதும், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளில் பலர்மீது வழக்கு தொடர்ந்த போதும் அவன் புதிய சட்டம் வருவதற்கு இவையெல்லாம் காரணம் என்று விளங்கிக் கொண்டான்.

ஒருநாள் அவனுடைய குதிரைவண்டியில் இரண்டு பாரிஸ்டர்கள் ஏறினார்கள் அவர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி உரக்க விவாதித்துக் கொண்டே வந்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், “ அது சட்டத்தின் இரண்டாவது பிரிவு என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை…அது இந்திய கூட்டாட்சியைப் பற்றியது. அப்படி ஒரு கூட்டாட்சி உலகத்தில் எங்கேயும் இல்லை..அரசியல் ரீதியாகப் பார்த்தால் அது ஒரு பெரிய பேராபத்து…உண்மையில் சொல்லப்போனால், முன்மொழிந்திருப்பது கூட்டாட்சியைப் பற்றித் தான் வேறொன்றுமில்லை.”

அந்த பேச்சின் பெரும்பகுதியும் ஆங்கிலத்திலேயே நடந்ததால் வாத்தியார் மங்குவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த இரண்டு பாரிஸ்டர்களும் புதிய சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றும் இந்தியா விடுதலை அடைவதை விரும்பவில்லை என்றும் அவன் மனதில் பட்டது. ‘ தவளைகள் ’ என்று என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்தான்.

இந்த நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் மொசாங் போவதற்காக மூன்று அரசுக்கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு போனான். அவர்கள் புதிய சட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தார்கள்.

“ புதிய சட்டத்தோடு பல புதிய விஷயங்கள் நடக்கப்போகுதுன்னு நான் நெனைக்கிறேன்…கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாரு.. நாம சட்டசபைகளை தேர்ந்தெடுக்கப் போறோம்.. ஒருவேளை திருவாளர் ………………….. தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் எனக்கு எப்படியும் அரசாங்கவேலை கிடைத்து விடும்….”

“ ஓ பல புது விஷயங்களும் நிறையக் குழப்பங்களூம் நடக்கும். இன்னும் சொல்லப்போனால் நாம் ஏதோ ஒன்றில் நம் கைகளை வைக்கப்போகிறோம் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது..”

“ இதை என்னால ஒத்துக்கொள்ள முடியல..”

“ இயல்பாகவே இப்ப இருக்கிற ஆயிரக்கணக்கான வேலையில்லாப்பட்டதாரிகளின் எண்ணிக்கை குறையும்..”

இந்தப் பேச்சு வாத்தியார் மங்குவைப் பொறுத்தவரை அவனைப் புளகாங்கிதமடையச் செய்தது புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒளிமிக்கதாகவும் நம்பிக்கை நிறைந்ததாகவும் அவனுக்குத் தெரிந்தது. . ஒரே விஷயம் என்னவென்றால் அவன் புதிய சட்டத்தை ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனுடைய குதிரைவண்டிக்காக சௌத்ரி குடாபக்ஸிடமிருந்து வாங்கிய அற்புதமான பித்தளை முலாம் பூசிய அலங்காரவிளக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடிந்தது. புதிய சட்டம் அவனுக்கு கதகதப்பான இனிய உணர்வைத் தந்தது.

பின்வந்த வாரங்களில் வாத்தியார் மங்கு மாற்றங்களைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நிறையக் கேள்விப்பட்டான். ஆனால் அவனுடைய மனதில் உறுதியாக தோன்றிவிட்டது. அவன் ஏப்ரல் 1 ஆம் தேதியில் எல்லாம் மாறிவிடும் என்ற நம்பிக்கையை அவன் பாதுகாத்து வந்தான்.

கடைசியில் மார்ச் மாதத்தின் முப்பத்தியொரு நாட்களும் முடிவுக்கு வந்தன. வழக்கத்தை விட சீக்கிரமாக வாத்தியார் மங்கு எழுந்த போது குளிர்ந்த காற்று வீசியது. அவன் குதிரை லாயத்துக்குப் போனான். அவனுடைய குதிரை வண்டியைத் தயார் செய்து ரோட்டிற்கு கொண்டு போனான். இன்று அவன் அதீத மகிழ்ச்சியிலிருந்தான். ஏனெனில் புதிய சட்டம் வரப்போவதை அவனுடைய கண்களால் அவன் பார்க்கப்போகிறான்.

காலைப் பனியில் அவன் நகரத்தின் அகலமான, குறுகலான தெருக்களுக்குள் சுற்றி வந்தான். ஆனால் எல்லாம் அப்படியே பழைய மாதிரியே பாழடைந்து கிடந்தன. அவன் வண்ணங்களையும் ஒளியையும் பார்க்க விரும்பினான். அங்கே எதுவுமில்லை. அவன் அவனுடைய குதிரைக்காக புதிய இறகுக்குஞ்சம் ஒன்றை அந்தப் பெருநாளைக் கொண்டாடுவதற்காகக் கொண்டு வந்திருந்தான். அது ஒன்று தான் அங்கே அவனால் பார்க்கமுடிந்த சிறிதளவு வண்ணம். அது அவனுக்குக் கொஞ்சம் செலவையும் தந்து விட்டது.

குதிரையின் குளம்படிகளின் கீழே சாலை கருப்பாகவே இருந்தது. விளக்குதூண்கள் பழைய மாதிரியே இருந்தன. கடைகளின் விளம்பரப்பலகைகள் மாறவில்லை. புதிதாக எதுவும் நடக்காதமாதிரி மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். இருந்தாலும் அது ரெம்ப சீக்கிரம் தான். பெரும்பாலான கடைகள் மூடியிருந்தன. ஒன்பது மணிக்கு முன்னால் நீதிமன்றம் திறக்காது அதுக்கு அப்புறம் புதிய சட்டம் அமுலுக்கு வந்துவிடும் என்ற சிந்தனை வர அவனை அவனே ஆறுதல்படுத்திக் கொண்டான்.

அரசுக்கல்லூரிக்கு முன்னால் அவன் நின்ற போது மணிக்கூண்டுக் கடிகாரம் கிட்டத்தட்ட அதிகாரமாய் ஒன்பது தடவை அடித்து ஓய்ந்தது. மெயின் கேட் வழியே அழகாக உடையணிந்த மாணவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் அலங்கோலமாக வாத்தியார் மங்குவுக்குத் தெரிந்தார்கள். ஏதாவது வண்ணமயமாக, இன்னும் வியக்கிற மாதிரி நடக்க வேண்டும் என்று விரும்பினான்.

அவன் குதிரைவண்டியை முக்கிய வணிகவளாகமான அனார்கலியை நோக்கி ஓட்டினான். பாதிக்கடைகள் திறந்திருந்தன. மிட்டாய்க்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொது வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்களுடைய விற்பனைப் பொருட்கள் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் கடை ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் எதுவும் வாத்தியார் மங்குவை ஈர்க்கவில்லை. அவன் புதிய அரசியலமைப்பு சட்டத்தை அவனுடைய குதிரையைப் பார்ப்பது போல தெளிவாகப் பார்க்கவேண்டும் என்று விரும்பினான்.

வாத்தியார் மங்குவும் எதிர்பார்த்துக்காத்திருப்பதற்கு முடியாதவர்களில் ஒருவன். அவனுடைய முதல்குழந்தை பிறந்தபோதும் அவனால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. குழந்தை பிறப்பதற்கு முன்பே அதைப் பார்க்க விரும்பினான். பலமுறை மனைவியின் வயிற்றில் அவனுடைய காதுகளை வைத்து குழந்தை எப்போது வெளியில் வரும் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வான். அல்லது குழந்தை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வான். ஆனால் அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியாது. ஒருநாள் அவன் அவனுடைய மனைவியைப் பார்த்து எரிச்சலுடன் கத்தினான்,

“ என்ன ஆச்சு உனக்கு? நாள்பூரா படுக்கையிலே கிடக்கிறே..பிணம் மாதிரி..ஏன் நீ எழுந்து வெளியில் போய் சுற்றி நடந்து கொஞ்சம் சக்தியை சேர்த்து வைக்க வேண்டியது தானே..குழந்தை பிறப்பதற்கு உதவி செய்யலாம்ல.. நான் சொல்றேன் இப்படியே இருந்தா அவன் எப்படி வருவான்.”

வாத்தியார் மங்கு எப்போதும் அவசரத்திலிருந்தான். அவனால் காரியங்கள் ஒரு வடிவத்துக்கு வரும்வரை காத்திருக்க முடியவில்லை. அவனுக்கு எல்லாம் உடனே நடந்து விட வேண்டும். ஒருமுறை அவனுடைய மனைவி கங்காவதி அவனிடம் சொன்னாள்,

“ கிணறே இன்னும் தோண்ட ஆரம்பிக்கல.. அதுக்குள்ள பொறுமையில்லாம தண்ணி குடிக்க அவசரப்படறே…”

இன்று காலையில் அவன் எப்போதும் இருக்கிற மாதிரி அந்தளவுக்கு பொறுமையில்லாமல் இல்லை.அவன் சீக்கிரம் வந்ததே புதிய சட்டத்தை அவனுடைய கண்களால் பார்ப்பதற்குத் தான். எப்படி காந்திஜியையும், நேருவையும் பார்ப்பதற்காக அவன் பல மணி நேரம் காத்திருந்தானோ அப்படி அவன் புதிய சட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தான்.

பெரிய தலைவர்களென்றால் வாத்தியார் மங்குவைப் பொறுத்தவரை ஊர்வலமாக வரும்போது ஏராளமான மாலைகள் சூட்டப்பட்டும் வருபவர்கள். ஒருவேளை அந்த ஊர்வலத்தில் போலீசாரோடு ஏதாவது சில தள்ளுமுள்ளுகள் நடந்து விட்டால் அந்தத் தலைவர் மங்குவின் பார்வையில் எங்கோ உயரத்திற்கு போய் விடுவார். புதிய அரசியலமைப்பு சட்டமும் அப்படியான பரபரப்பாக அமுலாவதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினான்.

அனார்கலி வணிகவளாகத்திலிருந்து அவன் கடைவீதிக்குப் போனான். மோட்டார் ஷோ ரூம் முன்னால் அவனுக்கு ஒரு சவாரி படையணி நிலையத்துக்குக் கிடைத்தது. அவர்கள் பணத்தைக் கொடுத்து விட்டு உடனே அந்த இடத்தை விட்டு அவர்கள் வழியில் சென்றனர். வாத்தியார் மங்குவுக்கு இப்போது நம்பிக்கை வந்தது. படையணிநிலையத்திலிருந்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தான்.

அவனுடைய சவாரி குதிரை வண்டியிலிருந்து இறங்கியதும் வாத்தியார் மங்கு குதிரை வண்டியின் பின்னிருக்கைக்குச் சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபடியே யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு நேரம் கிடைக்கும்போது இப்படித்தான் அவன் ஆசுவாசப்படுத்திக் கொள்வான். அவன் அடுத்த சவாரியைப் பார்க்கவில்லை. அவன் புதிய சட்டத்தினால் வரக்கூடிய மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான்.

குதிரைவண்டிகளுக்கு குதிரைவண்டி எண் கொடுக்கும் இப்போதைய முறையை புதிய சட்டஒழுங்குமுறையில் எப்படி மாற்றலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கோரா படைவீரன் விளக்குத்தூணுக்கருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அவனுக்கு ஏற்பட்ட முதல் உள்ளுணர்வு வண்டியில் அவனை ஏற்றக்கூடாது. அவன் அந்தக் குரங்குகளை வெறுத்தான். ஆனால் அவர்களுடைய பணத்தை ஏற்றுக் கொள்ளாமலிருப்பது புத்திசாலித்தனமுமல்ல என்று அவனுக்குத் தோன்றியது. புதிய இறகுக்குஞ்சம் வாங்க நான் செலவழித்த பணத்தை மீட்ட மாதிரி இருக்கும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவன் வண்டியைத் திருப்பி இருந்த இடத்திலிருந்து கொண்டே சாவகாசமான முறையில் கேட்டான், ” பகதூர் சாகிப் உங்கள எங்கே கூட்டிக் கொண்டு போக வேண்டும் ஐயா..? “ என்று கேட்டான். இந்த வார்த்தைகளை அவன் வெளிப்படையான வெறுப்புடனே கேட்டான். அப்போது அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அந்தத் துடுக்குத்தனமான கோரா உடனே அங்கிருந்து மறைந்து விடவேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் அவன் விரும்பவில்லை.

காற்றை எதிர்த்து சிகரெட்டைப் பற்றவைக்க முயற்சி செய்து கொண்டிருந்த கோரா திரும்பி குதிரைவண்டியைப் பார்த்து நடந்தான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். வாத்தியார் மங்குவுக்கு இரண்டு துப்பாக்கிகள் நேருக்குநேராக சுட்டுக் கொள்வதைப் போல உணர்ந்தான்.

கடைசியில் அவன் அடக்கிவைக்கப்பட்ட சீற்றத்தோடு அந்த படைவீரனைப் பார்த்துக் கொண்டே கீழே இறங்கினான்.

“ நீ பேசாம வாறீயா இல்ல ஏதாவது பிரச்னைப் பண்ணப்போறீயா “ என்று கோரா தன்னுடைய உடைந்த உருதுவில் கேட்டான். “ இந்தப் பன்னியை எனக்குத் தெரியும் “ என்று மங்கு தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். இது அவனே தான் ஒரு வருடத்துக்கு முன்னால் அவனிடம் சண்டை போட்டவனே தான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். அப்போது அவன் குடித்திருந்தான். வாத்தியார் மங்குவை அவன் வைதான். அத்தனை வசவுகளையும் அவமானங்களையும் அமைதியாக ஏற்றுக் கொண்டான். அந்த வேசைமகனின் மண்டையை உடைக்க வேண்டுமென்று விரும்பினான். ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனால் இந்த எளிய குதிரைவண்டிக்காரனின் கழுத்தைப் பிடிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

“ நீங்க எங்கே போகணும்? “ என்று வாத்தியார் மங்கு கேட்டான். இப்பொழுது இந்தியாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது என்பதை அவன் மறக்கவில்லை.

“ ஹீரா மண்டி… நடனமாடும் பெண்கள் கடைவீதிக்கு….” என்று கோரா சொன்னான்.

“ அதுக்கு அஞ்சு ரூபா ஆகும்..” என்று வாத்தியார் மங்கு சொன்னான், அப்போது அவனுடைய மீசை நடுங்கியது.

“ என்னது அஞ்சு ரூபாயா…உனக்கென்ன பைத்தியமா..” என்று கோரா நம்ப முடியாமல் கத்தினான்.

“ இந்தா பாரு.. உனக்கு உண்மையிலேயே போகணுமா… இல்ல என்னோட நேரத்த வீணாக்க விரும்புறீயா…” என்று வாத்தியார் மங்கு அவனுடைய முஷ்டியை இறுக்கிக் கொண்டு கேட்டான்.

கோராவுக்கு அவர்களுக்கிடையில் நடந்த சண்டை ஞாபகத்துக்கு வந்து விட்டதால் நெஞ்சை நிமிர்த்தும் வாத்தியார் மங்குவின் கோபத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனுடைய திமிர்த்தனத்துக்கு இன்னொரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான் கோரா. அவன் இரண்டடி முன்னால் போய் அவனுடைய பிரம்பை அந்த இந்தியனின் தொடை மீது வீசினான்.

வாத்தியார் மங்கு கடுமையான வெறுப்புடன் அவனை விட சிறிய உருவமான கோராவைப் பார்த்தான். பிறகு அவனுடைய கையை உயர்த்தி தாடையில் ஓங்கி அடித்தான். தொடர்ந்து இரக்கமில்லாமல் அந்த ஆங்கிலேயனை அடித்துக் கொண்டேயிருந்தான்.

கோராவுக்கு உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பமுடியவில்லை. அவன்மீது தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்த அடிகளைத் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு அதிர்ஷ்டமில்லை. அவனுடைய எதிரி கிட்டத்தட்ட பைத்தியக்காரமனநிலையை தொட்டுக் கொண்டிருந்ததை அவனால் பார்க்க முடிந்தது.கையறுநிலையில் அவன் உதவிக்காக சத்தம் போட ஆரம்பித்தான். இது இன்னும் வாத்தியார் மங்குவின் ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தியது. அடிகள் இன்னும் பலமாக விழுந்தது. அவன் கோபத்துடன் அலறினான், “ ஏப்ரல் 1 ஆம் தேதியிலும் அதே வீறாப்பா.. மகனே! இப்போ எங்களோட ராஜ்யம் நடந்துக்கிட்டிருக்கு ”

கூட்டம் கூடி விட்டது. எங்கிருந்தோ இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள் மிகுந்த முயற்சி செய்து அந்த துரதிருஷ்டசாலியான ஆங்கிலேயனைக் காப்பாற்றினார்கள். அது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அங்கே வாத்தியார் மங்குவை இடது பக்கம் ஒரு போலீஸ்காரனும் வலது பக்கம் இன்னொரு போலீஸ்காரனும் பிடித்துக் கொள்ள எதிர்த்து விரிந்த தன் நெஞ்சை முன்னுக்குத் தள்ளியபடி அவன் நின்று கொண்டிருந்தான்.+ அவன் வாயில் நுரை தள்ளியது. ஆனால் கண்களில் ஒரு விநோதஒளி வீசியது. சுற்றிலும் திகைத்துபோய் நின்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து வாத்தியார் மங்கு, “ அந்த நாட்கள் போய்விட்டன நண்பர்களே! நாம் எதற்கும் லாயக்கில்லாதவர்களாக இருந்த காலம்.. இப்போது புதிய சட்டம்…ஆம் புதிய அரசியலமைப்பு சட்டம்! புரிந்ததா? “ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த ஆங்கிலேயனின் முகம் வீங்கிப் போயிருந்தது. அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவனுக்கு இன்னும் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வாத்தியார் மங்கு உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எல்லாநேரமும் காவல்நிலையத்துக்குள்ளேயும் “ புதிய சட்டம்…புதிய அரசியலமைப்புச் சட்டம்..” என்று அலறிக் கொண்டிருந்தான்

“ என்ன முட்டாள்த்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்ன புதிய அரசியலமைப்புச் சட்டம்.. எல்லாம் அதே பழைய அரசியலமைப்புச் சட்டம்…தான் முட்டாளே..” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது.

பின்னர் அவர்கள் அவனை சிறையில் அடைத்தனர். 1400463_750454114981778_1170040150_oஅக்டோபர் 20 ஆம் தேதி தாம்பரத்தில்  சாதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதைத் தொகுப்பான ‘ சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்’ என்ற நூல்( மொழிபெயர்ப்பு- உதயசங்கர் )  மார்க்சியக்கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். சீதாராம் யெச்சூரி வெளியிட்டார். இது ஒரு நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீடு. விலை ரூ.145/-