புதிய
வானம்! புதிய பறவைகள்!
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் ஒரு புதிய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் நுழைந்திருக்கிறது. சிறார் இலக்கியத்தின் வகைமைகளான பெரியவர்கள் சிறார்களுக்காக எழுதுகிற இலக்கியம், சிறார்களே சிறார்களுக்காக எழுதுகிற இலக்கியம், சிறார்களை மையமாக வைத்து பெரியவர்களுக்காக எழுதுகிற இலக்கியம் என்று பொதுவாகப் பிரிக்கலாம். அதில் குழந்தைகளே குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியிருக்கும் மிகச் சிறப்பான காலமிது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. குழந்தைகள் ஒரு புதிய வானத்தை வரைந்து புதிய சிறகுகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சமூகம் உச்சி முகர்ந்து நம்முடைய குழந்தைகளைப் பாராட்ட வேண்டும்.
குழந்தைகளின் கற்பனைக்கு
நம்முடைய நடைமுறை வாழ்வின் தர்க்கம் கிடையாது. கவித்துவத்தர்க்கம் மட்டுமே உண்டு. கவித்துவத் தர்க்கமென்றால் மண்ணும் மரமும் டி வி. யும் பிரிட்ஜும் நாயும் நரியும் குருவியும் கோழியும் பேசும். பாடும். ஆடும். ஓடும். காரணகாரியம் கிடையாது. கதை எப்போது தொடங்கி எப்போது முடியுமென்று யாருக்கும் தெரியாது. எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். எங்கு வேண்டுமானாலும் முடியலாம்.
சுயமான
கருத்துகளோ சிந்தனைகளோ உருவாகாத குழந்தைப்பருவத்தில் அவர்கள் எப்படி கதை எழுதுவார்கள்? பெரியவர்கள் எழுதுவதைப் போல ஒரு கருத்தை வலியுறுத்தியா? அறநெறியைச் சொல்லியா? நீதி நன்னெறிக்கதைகளையா? என்ற
கேள்வி எழுகிறது.
குழந்தைகள் உணர்வுமயமானவர்கள்.
வெளியுலகமும் பெரியவர்களும் அவர்களுக்குத் தரும் பாதிப்புகளை வெளிப்படுத்துகிறார்கள்.
நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகக் கதைகளாகச் சொல்கிறார்கள். அத்துடன் அவர்கள் வாசித்ததை, கண்டதை, கேட்டதை, கற்பனையை, அந்தக் கணநேரத்தில் தோன்றுவதைக் கதையாக்குகிறார்கள். தாங்கள்
எழுதுவது கதை என்று கூட அவர்களுக்குத் தெரியாது. ஒரு கதையின் அமைப்பு இப்படி
இப்படி இருக்கவேண்டுமென்று தெரியாது. ( பெரியவர்களுக்கே தெரியாது!!! ) உண்மையைச் சொல்லப்போனால்
குழந்தைகள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அப்படி வெளிப்படுத்தும் போது மகிழ்ச்சியடைகிறார்கள். அந்த மகிழ்ச்சி தான் அவர்களுடைய கலையின் சாராம்சம். அதைத் தாண்டி அவர்களின் படைப்புகளில்
இலக்கணத்தைத் தேடவோ, இலக்கியத்தைப் பார்க்கவோ கூடாது. அவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய
எழுத்தாளர்களாவார்களென்று பொய்யான நம்பிக்கைகளும் தேவையில்லை. அவர்கள் இப்போது இப்படி
வெளிப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.
அதைப் பெரியவர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கதைகளுக்குள்
கருத்தைத் திணிக்கவோ தேடவோ கூடாது. ஆனால் நுட்பமாக வாசிப்பவர்களுக்கு குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் யதார்த்த உலகத்தைத் தங்கள் கதைகளில் பிரதிபலிப்பதைக் கண்டுணர முடியும்.
மற்றொரு வகையில் குழந்தைகள்
கதைகளைச் சொல்லும்போதும் எழுதும்போதும் அவர்களுடைய சிந்தனையில் ஒருங்கிணைப்பும் தெளிவும்
புதிய காட்சிச்சித்திரங்களும் உருவாகும். அப்போது குழந்தைகள் தங்களுடைய சிந்தனையை ஒருமுகப்படுத்த,
புதிய கற்பனைகளைப் படைக்கத் தொடங்குவார்கள். அவர்களுடைய உளவியலில் ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்கும். ஆளுமை வளர்ச்சியிலும் மிக முக்கியமான
பங்களிப்பைச் செலுத்தும்.
தொடர்ந்து பேசுவோம்.
No comments:
Post a Comment