Wednesday, 30 July 2025

இந்திய நாடோடிக்கதை 3

 

இந்திய நாடோடிக்கதை 3

பூனையைக் கொல்ல முடியாது.

ஆங்கிலம் வழி தமிழில்உதயசங்கர்




முன்பு ஒரு காலத்தில் ஒரு நாயும் பூனையும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டேயிருந்தன. பூனையை நாய் அடிக்கும். ஆனால் பூனைக்குக் காயம் ஏற்படாது. அதுமட்டுமல்ல, பூனை துள்ளிக்குதித்து,

எனக்குத் தான் வலிக்கலையே.. எனக்குத்தான் வலிக்கலையே.. தோள்பட்டை வலி போயே போச்சே..இப்ப எனக்கு வலிக்கலையே

என்று நடனம் ஆடும். நாய்க்குப் புரியவில்லை. மைனாவிடம் சென்ற நாய்,

இந்தப் பூனையை என்ன செய்வது? அடிச்சுட்டேன்.. கடிச்சுட்டேன்.. ஆனாலும் அதுக்கு வலிக்கலை.. நானும் பெரிய நாய் தான் அதுவும் பெரிய பூனை தான்..ஆனாலும் அதுக்கு வலிக்கலை.. ஆனால் அது என்னை அடிச்சா எனக்குப் பயங்கரமா வலிக்குது..”

என்று சொல்லி வருந்தியது. மைனா,

பூனையின் வாயை பயங்கரமாக் கடிச்சு வைச்சிரு.. நிச்சயம் அதுக்கு வலிக்கும்..”

என்று சொன்னது. மைனா சொன்ன மாதிரியே நாயும் பூனையின் வாயைப் பயங்கரமாகக் கடித்தது..ஆனால் பூனையோ,

எனக்கு வலிக்கலையே.. “ என்று துள்ளிக்குதித்து நடனம் ஆடியது. மறுபடியும் நாய் மைனாவிடம் சென்று,

என்ன செய்வது? “ என்று கேட்டது.

பூனையின் காதுகளைக் கடி..” என்றது மைனா. நாய் பூனையின் காதுகளைக் கடித்தது. அப்போதும் பூனை,

இப்பவும் வலிக்கலையே.. காதுல நான் கம்மல் போட்டுக்குவேனே..” என்று சொல்லி ஆட்டம் போட்ட்து.

நாய் யானையிடம் சென்றது.

உன்னால் இந்தப் பூனையைக் கொல்ல முடியுமா? எனக்குப் பெரிய தொந்திரவா இருக்குஎன்று கேட்டது.

இது என்ன பெரிய விஷயம்.. நான் கொன்னுருவேன்..நான் ரொம்ப்ப்பெரியவன் அது ரொம்பச்சின்னதுஎன்றது யானை.

யானை பூனையைத் தும்பிக்கையால் தூக்கி தூரமாய் வீசியது. தூரத்தில் விழுந்த பூனை மறுபடியும் துள்ளிக்குதித்து ஆடியது.

எனக்குக் கொஞ்சம் கூட வலிக்கலையே..” என்றது பூனை. யானைக்குக் கோபம் வந்து விட்டது.

உனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்கிறேன்..” என்று சொல்லிய படியே, பூனையைக் கீழே போட்டு தன்னுடைய பெரிய காலினால் ஓங்கி மிதித்தது. பூனை தரையிலிருந்து துள்ளி,

எனக்கு வலிக்கலையே..” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய கூர்மையான நகங்களால் யானையின் தும்பிக்கையைக் கீறிவிட்டது. யானை வலியினால் கத்திக் கொண்டே ஓடியே போய் விட்டது.

நாய்க்கு மிகுந்த கோபம்.

பூனையைக் கொல்வதற்கு என்ன செய்வது ? “ என்று யோசித்தது. பூனையின் மூக்கைப் பலமாகக் கடித்தது. மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. ஆனால் பூனை இப்போதும் ஆடிக் கொண்டே,

எனக்கு வலிக்கலையே.. இப்போ நான் மூக்குத்தி மாட்டிக்குவேன்..” என்றது. நாய் பூனையின் வாலைக் கடித்து இரண்டு துண்டாக்கியது. அப்போதும் பூனை ஆடிக் கொண்டிருந்தது.

பிறகு நாய் ஒரு சிறுத்தையிடம் சென்றது.

நீ இந்தப் பூனையைக் கொன்று விட்டால் நீ என்ன கேட்டாலும் தருவேன்..” என்றது. உடனே சிறுத்தையும், “ நான் கொல்றேன்..” என்று கத்தியது. இரண்டும் பூனையைத் தேடிப் போயின.

பூனை சிறுத்தையைப் பார்த்ததும்,

நில்லு..உங்கிட்டே கொஞ்சம் பேசணும்.. முதல்ல உனக்குச் சாப்பிட ஏதாச்சும் கொடுக்கிறேன்.. பிறகு என்ன சொல்லணுமோ சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு வெகுதூரம் ஓடிச் சென்றது. தூரத்தில் நின்று கொண்டு ,

நான் உனக்கு எதுவும் கொடுக்க மாட்டேன்.. இப்ப நீ என்னைக் கொல்லமுடியாதே..” என்று சொல்லியபடியே ஆடியது.

சிறுத்தைக்குக் கோபமான கோபம். “ எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறது இந்தப் பூனைஎன்று நினைத்தபடியே காட்டுக்குள் ஓடி விட்டது.

நாய் ஒரு மனிதனிடம் சென்று கேட்டது. மனிதனும்,

நான் கத்தியால பூனையின் வயிற்றைக் கிழிச்சிருவேன்..” என்று சொன்னான். சொன்னமாதிரியே பூனையின் வயிற்றில் குத்தினான். ஆனால் குத்திய இடம் மூடிக் கொண்ட்து. பூனையும் குதித்து எழுந்து ஆடியது. மனிதன் அப்படியே பயந்து போய் ஓடி விட்டான்.

நாய் ஒரு கரடியிடம் சென்றது.

உன்னால் கொல்லமுடியுமா? “ என்று கேட்டது.

நான் நிச்சயம் கொல்வேன்..” என்று சொன்ன கரடி தன்னுடைய நகங்களால் பூனையின் உடலைக் கிழித்தது. ஆனால் பூனையை எதுவும் செய்ய முடியவில்லை. பூனை தன்னுடைய நகங்களால் கரடியின் மூக்கைப் பலமாக்க் கிழித்து விட்டது. கரடி அங்கேயே செத்து விட்டது.

இதைப் பார்த்த நாய் விரக்தியுடன் ஓடிச் சென்று மலையிலிருந்து விழுந்து இறந்து போனது.

பூனை தன்னுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

 

சிம்லாவில் கேட்ட கதைகி.பி. 1876

 

 

No comments:

Post a Comment