தனது
நீண்ட இலக்கிய வாழ்வனுபவத்தில் தன்முனைப்பில் பரிணமித்து தேர்ந்த சிறுகதையாளனாக, கவிஞனாக சிறகசைத்து ஒரு ஒழுங்கமைப்போடு பறந்து திரிந்த அவரின் வனாந்திர வெளியில், அழகு வர்ணங்களில் பூத்து குலுங்கும் அதிசய பூக்களெல்லாம்…. யாருமே சொல்லாத இரவுக் கதைகளை நட்சத்திரங்களிடம் சொல்லிச் சொல்லி, கதைகள் நிரம்பிய மேகக் கூட்டின் வழியே வடிந்த மழைத்துளிகளில் நினைந்த பூமிக் குழந்தைகளை கும்மாளமிடச் செய்த அவரின் சிறார் கதைகளில்………புதிய எல்கையை தொட்டுக் காண்பித்தவர் எழுத்தாளர் உதயசங்கர் என்பதே மறுக்க முடியாத உண்மை.
தமிழ்
சிறுகதைகள், குறுங்கதைகளில் அகவெளியும் புறவெளியும் இணைந்து பிறப்பிக்கும் கதைவெளியில்…………. வார்த்தைகளாகவோ, மெளனமாகவோ, இசையாகவோ, கோட்டுச் சித்திரமாகவோ வாசகனின் ஆழ் மனதில் ஒரு கதா அனுபவத்தை கட்டமைத்து, அதன் அனுபவச் செறிவும், கணமும்… அகமன உணர்வின் ஒத்திசைவில் அது சிறுகதையா? அல்லது குறுங்கதையா? என்பதை தன் இயல்பிலேயே தேர்வு செய்து மேலோங்கி நிற்கச் செய்கிறது.
உதயசங்கர்
தமிழுக்கு புதிதாக நுண் குறுங்கதைகள் என்ற ஏற்கனவே அதிகமாக பரிச்சயமில்லாத வடிவத்தை பரிசோதனை முயற்சியாக 49 குறுங்கதைகளை ஒரு அழகான கையடக்கமான புத்தக வடிவில் வெளிக் கொண்டு வந்திருப்பது ஒரு சந்தோசமான வரவேற்பை அளித்திருக்கிறது என
நம்புகிறேன்.
நுண்
குறுங்கதை என்பதை குறுங்கதைக்கும் கவிதைக்கும் இடைப்பட்ட வடிவம் எனலாம். குறுங்கதையில் ஒரு
சிறிய நிகழ்வனுபவம் புறவயமான விஸ்தரிப்பில் மன உணர்வில் சட்டென ஒரு மின்னல் வந்து போகும் நிகழ்வினை நிகழ்த்தும். அது போல் கவிதையோ அகமனத்தோடு வாழ்வின் பிடிபடாத நுட்பத்தின் விசாரணையை மி்ன்னல் ஒளியில் படர்ந்து முடிவற்று நிகழ்த்தும். ஆனால், நுண் குறுங்கதைகள் அகவய விஸ்தரிப்பில் மின்னல் ஒளிச் சிதறலின் தெறிப்பில் விழுந்த மின்னல் துகள்கள்………. தத்துவார்த்த விசாரணையையோ, தர்க்க விசாரணையையோ அகமன நுட்ப நுனியில் வாசகனிடம் பண்முகப்பார்வையில் செயல்படுத்தும் என்பதே…… இவரின்
“என்றுமுள இசை” குறுங்கதை தொகுப்பில் நுகர்ந்த……. என்
வாசக அனுபவம்.
இத்தொகுப்பிலுள்ள அத்தனை
குறுங்கதைகளும் என்னை பாதித்தது எனச் சொல்லவில்லை. ஆனால் சில குறுங்கதைகள் ஆச்சரியப்படுத்தியது. சிலவைகள் என்னை அதிசயப்படுத்தயது. இன்னும் சில மனதில் ஒரு கிளர்ச்சியை, உளவியல் விசாரணையை, தத்துவ விசாரணையை, உணர மட்டுமே செய்யும் ஒருவித உணர்வை.. இப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது.
இவருடைய
“எட்டிப்பார்த்த மரணம்” என்ற முதல் குறுங்கதையே உளவியல் ரீதியான தீராத மனோ விசாரணையை ஏற்படுத்துகிறது. மனித கண்களுக்கு ஒரு புள்ளிக்கு அப்பால் புலப்படாத இருள், தூரதூரமான அடர் இருளாய் மரணத்தின் வாசல் கதவை தட்டிய போது வாழ்வின் வெளிச்சத்தில் மூச்சு விடுகிறேன். காலகாலமான இருளும், மரணமும், ஒளியும் என்றுமே புலப்படாத மனப்பிரமையா.. மனக்கற்பிதமா? இப்படியான கேள்விகளை பல அடுக்குகளில் இந்த குறுங்கதை என்னை நகற்றுகிறது.
அது
போல், “இறுதியுணர்வு” என்ற குறுங்கதையில் கோதமனுக்கு வேட்டுவனிடம் பிச்சையாய் பெற்ற பன்றியிறைச்சி சீரணமாகாமல்.. மரண தியானத்தில் இருந்த போது, வாழ்க்கையை பற்றிய தத்துவத்தில் முக்கியமான ஒன்றைச் சிந்திக்க மறந்து விட்டேன்.“உழைப்பு”. உழைப்பு எதனையும் செரித்து தன்வயமாக்கிச் கொள்ளும். என்னைப் போல் சீரணமாகாமல் வெளித்தள்ளாது எனவும், மரண இறுதியில் கோதமனின் கடைசிப் புன்னகையில் பன்றிறைச்சியை கொடுத்த
வேட்டுவனின் முகம்
தெரிவதாக முடிக்கிறார். அது தத்துவ சிந்தனை மரபில் ஒன்றை புரட்டுகிறது போல் உணர்கிறேன்.
அதுபோல்
சொற்கள் பறவைகளாய் மாறி பறந்து கொண்டிருக்கின்றன. நட்சததிரங்கள் போல்
நிரந்தரமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன…..என சொற்கள் என்ற குறுங்கதையில் சொற்களின்
மாபெரும் வலிமையை உணர்ந்த
போது என் காதுகளில் “இன்குலாப் சிந்தாபாத்” என பலமுறை ஓங்கி ஒலிக்கிறது.
மனித
உறவுகளின் அர்த்தத்தை வேறு
வேறு நிலைகளில் புரிதலின் கோலங்கள்…… காட்சிப்பிழையாய் கண்முன் நகர்கிறது.
எவற்றின்
இயல்பு அது. எவற்றிடமிருந்து கற்றது. கொடூர அவஸ்தை. அன்பின் வலிதனை உணர்த்தும் இப்படி ஒரு குறுங்கதை “விளையாட்டு”.
அவரவர்
திரைச்சீலைக்குப்
பின்னால் அவரின் யாரோ வாழ்நாள் முழுவதும் “கண்ணாமூச்சி” யாய் தோன்றி மறைகிறார்கள். என் திரைச்சீலைக்குப் பின்னாலும் ஏதோ ஒன்று என்னை நகர்த்துகிறது. வாழ்க்கை நகர்கிறது.
இப்படி
சொல்லிக் கொண்டே போகலாம். பல குறுங்கதைகள் அவரவர் உலகத்தை ஆச்சரியப்படுத்தும். அழகு படுத்தும். பன்முகத் தன்மையில் வேறுவேறான படிமநிலையில் உங்கள் மனதோடு பேசும்.
வெளியீடு - செவ்வியல் பதிப்பகம்
தொடர்புக்கு - 9488406868

No comments:
Post a Comment