Saturday 14 December 2019

செவ்வாய்


1.   செவ்வாய்
மலையாளத்தில்- கிரேஸி

தமிழில் - உதயசங்கர்
பரண் மீது போட்டிருந்த ஒரு சிறிய காகிதப்பெட்டி தான் அவர்களுடைய வீடாக இருந்தது. அதற்கு மேல்கூரையில்லை. பெட்டியின் சுவர்களில் பல நிறங்கள் உறைந்து கிடந்த வண்ணக்கலவைத்தட்டில் தலை சாய்த்து தூரிகை உறங்கிக் கொண்டிருந்தது. அருகில் ஒரு பெண்பொம்மை இருந்தது. ஆறு கோணத்தில் வலை பின்னி காத்துக்கொண்டிருந்த ஒரு சிலந்தியை உற்றுப்பார்த்த படி மல்லாந்து கிடந்தது. அவளுடைய ஒரு கண்ணை யாரோ நோண்டியெடுத்து விட்டார்கள். கவனித்துப்பார்க்கிற யாருக்கும் அந்த ஒரு கன்ணில் ஒரு காட்சியும் தெரியாது என்பது புரியும். வால் முறிந்து போன ஒரு எலிக்குட்டி இருந்தது. அதன் பஞ்சுத்தலையில் இருந்த கருப்புமுத்துக்கண்கள் எதையோ பார்த்துப் பயந்தமாதிரி மங்கிக் காணப்பட்டன. கருப்பு ஞெகிழி மூக்கு உரிந்த ஒரு குட்டிக்கரடி இழந்த வாசனைகளை மீண்டும் பிடித்து விட ஆசைப்பட்டு அட்டைப்பெட்டியின் அடியில் முகத்தை புதைத்துக் கிடந்தது. சிறகுகள் ஒடிந்த பச்சை பனைஓலைக்கிளி பாதி கிறக்கத்தில் அகாயத்தின் நீலநிறத்தைக் கனவில் காண்பது போல தோன்றியது.
கோடைமழை ஓட்டின் மீது விழுந்து முணுமுணுக்கிற சத்தம் கேட்டு குட்டிக்கரடி முகத்தை உயர்த்தினான்.
“ நண்பர்களே! இதோ மழை! “ என்று கூப்பிட்டு கத்தினான். சட்டென அவனுடைய குரல் சங்கடத்தால் தடுமாறியது.
“ கஷ்டம்! நாம இப்போ உள்ளே அல்லவா இருக்கோம்.. வெளியில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..”
மழையின் சத்தம் கேட்டு பெண்பொம்மையின் ஒரு கண்ணில் ஒரு சிறு ஒளி மின்னியது. எலிக்குட்டி வெடித்துச் சிரித்து ஒரு பாட்டுப் பாடினான்.
“ மழையும் பெய்யுது
மத்தளம் கொட்டுது
மந்தாரப்பூ பூத்து
வாசம் வீசுது..”
எலிக்குட்டி மூக்கைச் சுளித்து
“ மீதிப்பாட்டு மறந்து போச்சே! “ என்றது.
பனையோலை பச்சைக்கிளி நடுக்கத்துடன்,
“ நல்லதாப்போச்சு.. என்னுடைய சிறகுகள் ஒடிந்தபிறகு எனக்கு மழையைப் பிடிக்கலை.. மழைப்பாட்டும் பிடிக்கலை..”
என்றது. அப்போது ஓட்டின் விரிசல்வழியே நிறப்பலகையில் மழைத்துளிகள் சொட்டுச் சொட்டாய் விழத் தொடங்கின. தூரிகை திடுக்கிட்டு எழுந்து சிரித்தது.
“ ஆகா இனிமேல் என்னால் சித்திரம் வரைய முடியும்.. உறைந்திருந்த நிறங்கள் எல்லாம் மழைத்தண்ணீரில் கரைவதைப் பார்த்தீர்களா? “
வெளியில் மழை குலுங்கிச் சிரித்தபடி எங்கேயோ போய் விட்டது. தூரிகை வேகமாக அட்டைப்பெட்டியின் சுவர்களில் சித்திரம் வரையத் தொடங்கியது. இளநீல நிறத்தைத் தொட்டு ஒரு ஆற்றை வரைந்து பெருமூச்சு விட்டது.
“ முன்பு ஆறு இப்படியிருந்தது.. நல்ல சுத்தமான பளிங்குத் தண்ணீர்..”
இப்போது என்னவாயிற்று என்று எல்லோரும் தூரிகையை உற்றுப்பார்த்தனர். அது சங்கடப்பட்டது.
“ இப்போது வெறும் சகதிக்குட்டையா இருக்கு..”
தூரிகை இன்னொரு சித்திரம் வரையத்தொடங்கியது. நீல நிறமுள்ள தீற்றல்கள் வருவதைப் பார்த்த குட்டிக்கரடி,
“ உனக்கு நீல நிறச் சித்திரங்கள் மட்டும் தான் வரையத்தெரியுமா? “
தூரிகையின் குரல் கீச்சிட்டது.
“ இல்லையில்லை…முன்பெல்லாம் தூரத்திலிருந்து பார்க்கும்போது.. மலைகளெல்லாம்.. நீலநிறத்தில் இருந்தன.. நிறைய காடுகள் இருந்ததனால் அப்படித் தெரிந்தது.. இப்போது எல்லாம் மொட்டையாகி விட்டது இல்லையா? அது மட்டுமல்ல.. அவற்றின் மண்ணும் பாறையும் மனிதர்கள் அள்ளிக்கொண்டு போய் விட்டார்கள்..”
பின்னர் தூரிகை ஒரு மயானத்தை வரைந்தது. வரைந்த பிறகு உறைந்த குரலில் தொடர்ந்து சொன்னது,
“ முன்னால் இது ஒரு பெரிய வனமாக இருந்தது.. எல்லாவற்றையும் மனிதர்கள் அழித்து விட்டார்கள்.. இப்போது இங்கே ஒரு புல் கூட முளைக்காமல் மயானமாகி விட்டது..”
அட்டைப்பெட்டிக்குள்ளே ஒரு அனல்காற்று வீசி அவர்களை வாட்டத்தொடங்கியது. அப்போது பனையோலைப் பச்சைக்கிளி பயத்துடன் சொன்னது.
“ மழை பிடிக்கலைன்னு நான் இனி எப்போதும் சொல்லமாட்டேன்..”
கடைசியில் ஒரு சிவப்புக்கோளத்தை வரைந்த தூரிகை சொன்னது,
“ இது தான் செவ்வாய்.. மனிதர்கள் இப்போது செவ்வாயில் குடியேறத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.. அதற்குச் செலவாகும் பணத்தை வைத்து இந்த பூமியை செழுமைப்படுத்தலாம்.. அதெப்படி? பயன்படுத்தி விட்டு தூக்கியெறிவது தானே மனிதர்களின் பழக்கம்.. இந்த மாதிரி ஒழுக்கமில்லாத மனிதர்கள் செவ்வாய்க்குப் போனால் என்னாகும்? அதையும் குட்டிச்சுவராக்குவார்கள்!..”
அவர்களுக்கு மனிதர்களைப் பற்றி நினைத்து போதும் போதும் என்றாகிவிட்டது. பெண்பொம்மையின் ஒற்றைக்கண்ணில் உறைந்த பார்வை திரும்பி வந்தது. எலிக்குட்டியின் கருப்புமுத்துக்கண்களில் பழையபடி ஒளி மங்கியது. குட்டிக்கரடி அட்டைப்பெட்டியின் அடியில் முகத்தைப் புதைத்தது. பனையோலை பச்சைக்கிளி மறுபடியும் கண்களை மூடி பாதிமயக்கத்தில் ஆழ்ந்தது. பிறகு ஒரு கொட்டாவி விட்ட தூரிகை நிறப்பலகையில் தலை சாய்த்து உறங்கிப்போனது.

நன்றி - பொம்மி


Tuesday 10 December 2019

அறை எண் 24 மாயா மேன்சன்


அறை எண் 24 மாயா மேன்சன்

உதயசங்கர்

திருவல்லிக்கேணியில் சந்துக்குச் சந்து மேன்சன்கள் இருந்தன. அதனால் தடுமாறிவிட்டான் பிரபு. மாயா மேன்சனைக் கண்டுபிடிக்க வேண்டும். இன்னமும் சாலைகள் இரவின் அசதியிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இவ்வளவு தான் குப்பைகளைப் போடமுடியுமா? என்கிற மாதிரி சாலையெங்கும் குப்பைகள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்தன. மெல்லிய குளிர் உடலைச் சூடேற்றத் தூண்டியது. தெருக்களெல்லாம் பள்ளிக்கூடம் போகிற குழந்தையைப்போல தூக்கம் கலையாமல் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தது. இதுவரை இரண்டு மூன்று சுற்று சுற்றிவந்து விட்டான். நாகு சொன்ன அடையாளம் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. மெயின் ரோட்டில் அப்போது தான் திறந்திருந்த ஒன்றிரண்டு டீக்கடைகளின் முன்னால் ஷார்ட்ஸ் அணிந்து ஒரு கையில் டீயும் ஒரு கையில் சிகரெட்டுமாய் அல்லது செய்தித்தாளுமாய் நின்றிருந்த ஒன்றிரண்டு பேரைப் பார்த்து நடந்தான். அவன் அருகில் வந்து நிற்பதையே பொருட்படுத்தாமல் அவர்களுடைய காரியத்தில் சிரத்தையாக இருந்தார்கள். அவன் சாம்பல் நிறத்தில் ஆஸ்க் மீ எனிதிங் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்த ஒரு இளைஞனிடம் போய்,
“ எக்ஸ்கியூஸ் மீ.. மாயா மேன்சன் எங்கேயிருக்கு சார்.? “ என்று கேட்டான். அவன்  இருக்கிறதா இல்லையா என்று நான்கு திசைகளையும் திரும்பிப்பார்த்தான். தலையைக்குனிந்து சிகரெட் புகையை பூமிக்கு அனுப்பினான். ஆனால் ஏழாவது திசையில் நின்று கொண்டிருந்த பிரபுவை மட்டும் பார்க்கவில்லை. பிரபு மறுபடியும் கேட்க முயற்சிக்கும்போது லேசாக தோள்பட்டையைக் குலுக்கினான். அப்படியே நேரெதிராகத் திரும்பிக்கொண்டான். அவனுக்கு அவமானமாக இருந்தது. அருகில் நின்று கொண்டிருந்த மற்றவன் அப்படியே நகர ஆரம்பித்தான். சரி. டீக்கடைக்காரரிடம் கேட்கலாம் என்று அவரிடம் சென்றான். அவர் நிமிரவில்லை. டீ அடிப்பதிலேயே குறியாக இருந்தார்.
“ அண்ணாச்சி.. இங்கன மாயா மேன்சன் எங்கேயிருக்கு? “ என்று கேட்டான். அவர் கவனிக்காத மாதிரி இருந்தார். ஒருவேளை ஓசி என்கொயரிக்குப் பதில் சொல்ல யோசிக்கிறாரோ.
“ அண்ணாச்சி ஒரு டீ சக்கரை கம்மியா..” என்று கேட்டான். அதையும் அவர் கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு நொடியில் அவனுக்கு முன்னால் டீக்கிளாஸ் நின்றது. அவன் டீக்கிளாசைக் கையில் எடுத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்தான். குரு மேன்சன், மகாலட்சுமி மேன்சன், முனியாண்டி மேன்சன், கணேஷ் மேன்சன், கவிதா மேன்சன், மதுரை மேன்சன், எல்லாம் தெரிந்தது. ஆனால் மாயாவை மட்டும் காணவில்லை. நாகு அந்த ஏரியாவில் யாரிடம் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள் என்று வேறு சொல்லியிருந்தான். டீயைக் குடித்து முடித்து விட்டு ரூபாயைக் கொடுத்தான். அதுவரை யந்திரம் மாதிரி ஆடிக்கொண்டிருந்தவர் சற்று நின்று அவனைப் பார்த்தார். அதுதான் சமயம் என்று அவன் மறுபடியும் கேட்டான்,
“ மாயா மேன்சன்?…” என்று இழுத்தான். அவர் தலையை இடப்பக்கமாக ஆட்டினார். அவன் இடது பக்கமாக இருக்கிறது என்று புரிந்து கொண்டான். அவன் இடது பக்கம் இருந்த ஒரு தெருவுக்குள் நுழைந்தான். அங்கே வீடுகள் தான் ஒன்றையொன்று நெருக்கியடித்துக் கொண்டிருந்தன. மேன்சன் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அந்தத் தெருவின் முடிவில் ஒரு சந்து திரும்பியது. திரும்புகிற இடத்தில் சுவரில் ஒரு சின்னஞ்சிறிய இருசக்கரவாகனங்களில் முன்பக்கம் சின்னதாக ஒரு நம்பர்பிளேட் இருக்குமே அதைவிடச் சின்னதாக ஒரு பெயிண்ட் உரிந்த தகரப்போர்டில் மாயா மேன்சன் என்று எழுதப்பட்டு அதில் ஒரு அம்புக்குறி வேறு போடப்பட்டிருந்தது. அவன் அந்தப்போர்டை முறைத்தான். அந்தப் போர்டும் அவனைப்பார்த்து முறைத்தது.
ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அந்த சந்துக்குள் நுழைந்தான். அந்தச் சந்து வலதுபக்கமாக திரும்பியது. அதில் திரும்பினான். எதிரே ஊதா நிறத்தில் பளீரென மாயா மேன்சன் சீரியல் பல்புகளில் பகல் வெளிச்சத்தில் மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் உள்ளே நுழைந்தான். வரவேற்பறையில் யாரும் இல்லை. சுற்றிச் சுற்றிப்பார்த்து விட்டு நின்றான். திடீரென அசரீரி போல ஒரு கனத்த குரல் கேட்டது,
“ என்ன வேணும்?..” 
குரல் வந்த திசை இருட்டாயிருந்தது. அவன் உத்தேசமாக இருட்டைப் பார்த்து,
“ ரூம் நம்பர் இருபத்திநாலு.. நாகுவைப் பார்க்கணும்..”
“ எத்தனை நாள் இருப்பீங்க?....”
“ இன்னக்கிப் போயிருவேன்..”
“ இப்படியே நேரேப்போய் லெஃப்டுல திரும்பி, வரிசையா பாத்துக்கிட்டே போங்க…”
“ ரொம்பத்தேங்கஸ் சார்..”
இருட்டு பதிலெதுவும் சொல்லவில்லை. அவன் தோள்ப்பையைச் சரி செய்து கொண்டு நேரே இருட்டாக இருந்த நடைபாதையில் நடந்தான். இடது பக்கம் திரும்பியதும் அறைகள் துவங்கிவிட்டன. அவன் நடைபாதையில் நடக்கும்போது அறை எண்களைப் பார்ப்பதற்காகத் தலையை உயர்த்தினான். அந்த அறைக்கதவுகள் திறந்து கிடந்தன. தற்செயலாக உள்ளே பார்த்தான்.
அறை எண் ஒன்று
உள்ளே அவனுடைய தாத்தா நின்று கொண்டிருந்தார். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. தாத்தா இறந்து போய் நாற்பது வருடங்களாகி விட்டது. அவனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது திடீரென வந்த நெஞ்சுவலியில் இறந்து விட்டார் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். அவர் எப்படி இங்கே? உடல் புல்லரித்தது. ஒருவேளை இது அவரில்லையோ. தாத்தாவின் கையில் இரண்டு குருவி பிஸ்கட்டுகள் இருந்தன. இடது கையில் ஒரு பிஸ்கட்டை முதுகுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டார். அவருக்கு எதிரே வீங்கிய வயிறுடன் குண்டியினால் தரையைத் தேய்த்துக்கொண்டு, தாத்தாவை நோக்கி கைகளை நீட்டிக்கொண்டு நகர்ந்து வந்து கொண்டிருந்தான் அவன். அவர் சிரித்துக்கொண்டே அவனிடம் ஒரு பிஸ்கட்டை நீட்டினார். அவன் ஒரு கணம் அந்த ஒரு பிஸ்கட்டைப் பார்த்தான். பின்னர் அப்படியே யு டர்ன் அடித்து அழ ஆரம்பித்தான். தாத்தாவுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. அவர் முன்பற்கள் விழுந்த தன் பொக்கை வாயால் கெக்க்கெக்கே என்று சிரித்துக்கொண்டே
“ படுக்காளிப்பய….கோபத்தைப்பாரு… அப்பனைப்போல..”
என்று சொல்லிக்கொண்டே திரும்பி உட்கார்ந்து கொண்டிருந்த அவனுக்கு முன்னால் இரண்டு பிஸ்கட்டுகளையும் நீட்டினார். அழுது கொண்டிருந்த அவன் சிரித்தான். படக்கென்று இரண்டு பிஸ்கட்டுகளையும் தாத்தாவின் கைகளிலிருந்து பறித்தான். கண்களில் நீர் ததும்ப தாத்தாவைப் பார்த்துச் சிரித்தான். தாத்தா அவனை அப்படியே அள்ளிக் கொண்டார். அவனுடைய கன்னத்தில் முத்தமிட்ட தாத்தா அப்படியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார். அவனைத் தரையில் நழுவவிட்டவர் அப்படியே படுத்து விட்டார்.
பிரபுவுக்கு ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவனுடைய அம்மா சொன்ன காட்சிகள் எப்படி இந்த அறையில் தெரிகிறது. மனப்பிரம்மையோ? வேகமாக நடந்தான். அடுத்த அறை எண் இரண்டுக்குப் பதில் பனிரெண்டாக இருந்தது. கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தான். அது அறை எண் பனிரெண்டு தான்.
அறை எண் பனிரெண்டு
அவன் தன்னறியாமலே திறந்திருந்த அறைக்குள் திரும்பிப் பார்த்தான். உள்ளே தீபாவளி டிரஸ்ஸோடு பிரபு நின்று கொண்டிருந்தான். அவனுடைய கையில் ரோல் துப்பாக்கி. ரோப் பொட்டுவெடியை அதில் மாட்டிக்கொண்டு எதிரே தெரிகிற எல்லாவற்றையும் சுட்டுக்கொண்டே தெருவுக்கு வந்தான். தெருவில் யாரும் இல்லை. ஒருவேளை இருளப்பசாமி கோவிலில் யாராவது இருக்கலாம் என்று அங்கே போனான். அங்கே முன்பின் தெரியாத ஒரு பையன் ஈக்கிமாரில் தென்னங்குருத்தைச் சொருகி ராக்கெட் விட்டுக்கொண்டிருந்தான். துப்பாக்கியால் சுடுவதையும் மறந்து அவன் ராக்கெட் விடுவதை வேடிக்கை பார்த்தான். அவன் தூக்கி வீசுகிற ஈர்க்குச்சி பறந்து பறந்து மெதுவாகக் கீழே இறங்குவதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. அந்தப் பையன்
“ நீ விடுறியா..” என்று அவனைப் பார்த்துக் கேட்டான். உடனே வேகமாகப்போன பிரபுவிடமிருந்து துப்பாக்கியை வாங்கிக் கொண்டான். பிரபு ஈக்கிமாரைத் தூக்கி வீசினான். அது கீழே வரும்போது கைதட்டினான். தன்னுடைய திறமையைப் பார்த்து பெருமை பீத்திக்க திரும்பினான். யாரும் இல்லை. ஈக்கிமார் கொடுத்த பையனைக் காணவில்லை. அவன் கையில் கொடுத்த துப்பாக்கியையும் காணவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழுகை பொங்கி வந்தது. அழ ஆரம்பித்தான். அழுது முரண்டு பிடித்து வாங்கிய துப்பாக்கியைக் காணவில்லை என்பதைவிட தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் அவனை மீளாத்துயரில் ஆழ்த்தியது. அங்கேயே உட்கார்ந்து இருட்டும்வரை அழுது கொண்டேயிருந்தான். அம்மா தேடி வந்தாள். அம்மாவைப் பார்த்ததும் இன்னும் அழுதான். அதைக்கேட்கச் சகிக்கவில்லை.
அறைக்கு வெளியே நின்ற பிரபுவுக்கு அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது. அவனுடைய மனதின் ஆழ் அறைகளில் ஒளிந்திருக்கும் உணர்வுகள் எப்படி இங்கே உருக்கொண்டு காட்சிகளாகிறது? மனதின் கண்ணாடியா? கண்ணாடியின் கண்ணாடியா?.தான் ஏதும் மாயச்சுழலில் சிக்கியிருக்கிறோமா? இல்லை ஏதும் போதையின் பள்ளத்தாக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறோமோ? அவனுக்குப் புரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால் அந்த அறையிலோ, நடைபாதையிலோ யாருமில்லை. அவன் அந்தப்புதிர்ப்பாதையில் நடந்தான்.
அடுத்த அறை இருபத்தி மூன்றாக இருந்தது. சரி. ஏதோ ஒரு மாயசக்தி விளையாடுகிறது. என்ன நடக்கிறதென்று பார்த்து விடலாம் என்ற முடிவோடு அறையைப் பார்த்தான்.
அறை எண் இருபத்திமூன்று
அறை முழுவதும் கும்மிருட்டு. மெல்லிய கிசுகிசுப்பான குரல்கள் கேட்டது. பிரபுவின் குரல் கேட்டது.
“ என்னோட செல்லம்ல.. உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கித் தாரேன்.. நாளைக்குச் சினிமாவுக்குப் போகலாம்.. புரோட்டாச்சால்னா சாப்பிடலாம்…”
“ எனக்கு இது பிடிக்கல.. என்னய விட்ரு..” என்ற குரல் முரளிக்குச் சொந்தமானது. அதைத்தொடர்ந்து முத்தமிடும் சத்தம் கேட்டது.
“ அவ்வளவு தான்.. அவ்வளவு தான்.. “ என்று முனகுகிற சத்தமும் கேட்டது.
அறைக்கு வெளியில் நின்ற பிரபுவுக்கு வேர்த்துக் கொட்டியது. அந்த இடத்தை விட்டு உடனே ஓடிவிட வேண்டும் என்று நினைத்தான். நாகுவின் அறை இருபத்திநான்கு அடுத்தது தானே என்ற எண்ணமும் வந்தது. உடனே ஓடினான். ஆனால் இருபத்திமூன்றாம் எண் அறை முடியவேயில்லை. நீண்டு கொண்டே வந்தது. நடைபாதையில் ஓடும்போதே பல பெண்களின் குரல்களும், பல ஆண்களின் குரல்களும் கேட்டன. நடைபாதை முடிந்து வலப்பக்கமாக மடங்கியது. திரும்பியவுடன் இருந்த அறை எண்ணைப் பார்த்த அவன் அதிர்ந்தான்.
அறை எண் நாற்பத்தியிரண்டு
அந்த மேஜையைச் சுற்றி அவர்கள் நான்குபேர் இருந்தார்கள். பிரபு, நாகு, பேச்சிமுத்து, ரத்தினம், நான்குபேரின் முன்னால் மேஜையின் மீது இரண்டு பாட்டில் பட்டைச்சாராயம் இருந்தது. பட்டறைச்சேவுப்பொட்டலங்களும், ஊறுகாய் பட்டைகளும் கிடந்தன. பாட்டில்கள் ஒவ்வொருவர் கையிலும் மாறியது. ஊறுகாயை விரலால் எடுத்து உள்நாக்கில் தடவிக்கொண்டு சாராயத்தைக் குடித்தார்கள். அப்போது பேச்சிமுத்து சொன்னான்,
“ டேய்.. பிரபு.. காயத்திரியை நான் காதலிக்கிறேன்.. அவ பின்னாடி சுத்தாதே..” அவன் தலை நிற்கவில்லை. அங்குமிங்குமாக குழைந்து சரிந்து கொண்டிருந்தது.
“ உன்னால முடிஞ்சா நீ கவுத்திப்பாரு.. என்னால முடிஞ்சா நான் கவுத்துறேன்..” வாயில் புகைந்த பீடிப்புகையை பேச்சிமுத்து முகத்தில் விட்டபடியே சொன்னான் பிரபு.
“ வேண்டாம்.. விட்ரு.” என்று நாற்காலியை விட்டு எழுந்து நிற்க முடியாமல் ஆடினான். அவனைப் பார்த்துச் சிரித்தபடியே,
“ நான் சொடக்கு போட்டா போதும்.. படுத்திருவா பாக்கிறீயா..” என்று சொன்ன பிரபுவின் வாயில் உடைந்த கண்ணாடி பாட்டிலால் ஒரு குத்து. நல்லவேளை பாட்டில் முகத்தை உரசிக்கொண்டு போனதால் பெரிய ரத்தக்காயமில்லாமல் சிராய்ப்போடு போய்விட்டது. ஆனால் பிரபு பயந்து விட்டான். நெற்றியில் துளிர்த்த ரத்தத்தோடு அந்த இடத்தை விட்டு ஓடினான். பின்னால் அவனைக் கூப்பிடும் குரல்கள் தூரத்தில் மெலிந்து கொண்டே வந்தன.
அறை எண் நாற்பத்தியிரண்டில் நடந்ததைப் பார்த்த பிரபுவுக்கு நடுக்கம் ஏற்பட்டது. அவனுடைய கைகள் நெற்றியைத் தடவின. வடுவிலிருந்து ஒரு புழு குடைவதைப்போல இருந்தது. உடனே அந்த இடத்தை விட்டு ஓடினான். அடுத்த அறை இருபத்தியைந்தாக இருந்தது. ஒரு வேளை முந்திய அறை எண்ணைச் சரியாகப் பார்க்கவில்லையோ என்று திரும்பிப்போனான். இல்லை அது நாற்பத்தியிரண்டு தான். இன்னமும் அந்த அறையில் பேச்சிமுத்துவின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது.
என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்று புரியவில்லை. அவன் அறை எண் இருபத்தியைந்துக்கு முன்னால் நின்றான்.
அறை எண் 25
பத்தாங்கிளாஸ் படித்துக்கொண்டிருந்தான். பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் தினமும் சினிமாவுக்குப் போய்க்கொண்டிருந்தான் பிரபு. அரைப்பரிட்சையில் மூன்று பாடங்கள் ஃபெயில். வீட்டில் தேர்ச்சிச் சான்றிதழ் இன்னும் வரவில்லை என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். ஆனால் தேர்ச்சி சான்றிதழில் அப்பாவின் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்து விட்டான். போலிக்கையெழுத்தைக் கண்டுபிடித்த முத்தையா சார்வாள் வீட்டுக்கு ஆள்விட்டு அப்பாவை வரச்சொல்லிவிட்டார். பள்ளிக்கூட வகுப்பில் அப்பா அடி வெளுத்து விட்டார். அன்று மாலை வீட்டுக்குப் போகவில்லை. கதிரேசன் கோவில் மலையிலுள்ள புலிக்குகைப் பாறையில் போய் படுத்துக்கொண்டான்.
காலையில் பசி பொறுக்காமல் ஊருக்குள் வந்தவனை அவனுடைய நண்பர்கள் கூட்டிக்கொண்டு போய் வீட்டில் விட்டார்கள். அம்மாவும், தங்கையும் ஒரே அழுகை. அப்பா இனிமேல் உன் விஷயத்தில் தலையிட மாட்டேன். என்று தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்.
மறதியின் புதைசேற்றில் மறைந்து போன துர்க்கனவை நேரில் பார்த்தபோது பிரபுவுக்கு துயரமாக இருந்தது. அப்பாவின் நிராசையான அந்த முகம் அவனை ஏதோ செய்தது. அவன் சோர்வுடன் நடந்தான். அடுத்த அறை எண் என்ன என்று ஊகிக்க முயற்சி செய்தான். இது ஒரு சுவாரசியமான விளையாட்டாகவும் மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அடுத்த அறையில் காத்துக்கொண்டிருப்பது என்ன என்று அறிந்து கொள்ள ஆர்வமாகவும் இருந்தான்.
அறை எண் 52
அம்மா இரண்டு மூன்று சேலைகள் விரித்த படுக்கையில் படுத்திருந்தாள். ஒரு சிறிய பொம்மையைப் போல மாறிவிட்டாள். ஓங்குதாங்காக இருந்த அவளுடைய ஆகிருதியே அவள் எந்த இடத்திலிருந்தாலும் அந்த இடத்தை ஆளுமை செய்யும். அவளுடைய குரலில் இருந்த கம்பீரம் எல்லோரையும் வசீகரிக்கும். அப்பா அந்தக்குரலின் வழியாகத்தான் நடந்து திரிந்தார். அப்பா இதயத்தாக்கு நோயால் திடீரென இறந்த பிறகு அம்மாவின் ஆகிருதி மெல்ல சுருங்க ஆரம்பித்து விட்டது. அவளே எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்தாள். சர்க்கரை நோயின் தாக்கமே அது தீவிரமான பிறகுதான் தெரிந்தது. அம்மா விழித்திருந்தாள். ஆனால் அவனைப் பார்க்கவில்லை. அவனுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை. அவனுடைய தங்கை தான் பதில் சொன்னாள்.
அம்மா இப்போது பேசுவதில்லை. அவளால் அசைய முடியவில்லை. படுக்கைப்புண் வந்து விட்டது. ரெம்ப நாள் தாங்காது. அவன் பதிலெதுவும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அம்மா நேரே மேலே பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே அவளுடைய வாழ்க்கையின் வரலாறு எழுதப்பட்டிருப்பதைப் போல இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அரசு உத்தியோகத்தில் இருந்தான். அவனால் அம்மாவைக்கூட்டிக்கொண்டு போய் இன்னும் கொஞ்சநாள் வாழ்வதற்கான நம்பிக்கையையும், சம்ரட்சணையும் கொடுக்க முடியும். அங்கே அவனுடைய மனைவி வாசலை அடைத்துக் கொண்டு நின்றாள்.
அம்மாவிடம் எதுவும் பேசாமல் எழுந்து கொண்டான். தங்கையின் கையில் கொஞ்சம் ரூபாயைக் கொடுத்தான். அம்மா அப்போதும் திரும்பவில்லை. அவளுடைய கண்களின் ஓரத்தில் கண்ணீர் கோடுகளாய் இறங்கிக்கொண்டிருந்தது. பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு வெளியேறினான்.
அதைப்பார்க்கும் போது பிரபுவுக்கு இப்போதும் கண்கலங்கியது. மனம் தண்ணீரைப்போல தளும்பிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் சிந்தி விடும். அவன் அடுத்த அறையை நோக்கி நடந்தான்.
அறை எண் 14
கஞ்சாக்குடி கேசில் போலீஸ் ஸ்டேஷனில் இரவு முழுவதும் உட்கார்ந்திருந்தான். முகம் வீங்கியிருந்தது.
அறை எண் 75
அலுவலக வேலையாக திருச்சிக்குப் போன இடத்தில் உடன் வந்த அலுவலகப்பெண்ணை வற்புறுத்தி உறவு கொண்டான்.
அறை எண் 87
அம்மா அப்பாவின் நினைவாக அமாவாசை விரதம் இருந்தான். அன்று ஒரு நேரச்சாப்பாடு. பூஜை, சடங்குகள், என்று அமர்க்களப்படுத்தினான். அதில் அவனுடைய மனைவிக்குப் பெருமை.
அறை எண் 45
வேலைக்கான நேர்காணலுக்காக மதுரை போகும்போது பேருந்தில் முன்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணை நோண்டிக் கொண்டே வந்தான். அவள் சத்தமிட அந்த பேருந்தில் இருந்த அத்தனை பேரும் அடித்து அவமானப்படுத்தி இறக்கிவிட்டார்கள்.
அறை எண் 8
பள்ளிக்கூடத்தில் நடந்த பாட்டுப்போட்டியில் எத்தனை முயற்சித்தும் முதல் வரியைத் தவிர வேறு பாடமுடியாமல் அழுது கொண்டே வந்தான்.
பிரபுவால் தாங்கமுடியவில்லை. அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் ஒரு புதிர் விளையாட்டின் ஒரு பகுதி போல இருந்தது. அவனையறியாமலே அவன் அந்தப்புதிர் விளையாட்டில் சிக்கிக்கொண்டானா? இல்லை. இதிலிருந்து வெளியேறி விட வேண்டும். மாயா மேன்சன் என்ற ஒன்று இந்த உலகத்தில் இல்லை. இதெல்லாம் மனதில் நடக்கும் மாயக்காட்சிகள். அவன் நடைபாதை வழியே ஓடத்தொடங்கினான். அவன் ஓடும் போது அறைகளும் அவனுடன் ஓடத்தொடங்கின.
ஒரு வீட்டின் சமையலறை வழியே ஓடினான். ஒரு அலுவலகக் கக்கூஸ் வழியே ஓடினான். ஒரு ஆற்றை நீந்திக்கடந்து ஓடினான். கருப்பு மண் நிறைந்த பாலைவனத்தில் ஓடினான். மிகப்பெரிய மலைகளில் ஏறி இறங்கினான். மிகப்பெரிய பள்ளத்தாக்குகளில் ஓடினான். அடர்ந்த வனங்களில் ஓடினான். மிருகங்களை வேட்டையாடியபடி ஓடினான். மிருகங்கள் அவனை வேட்டையாடத் துரத்தின. ஓடி ஓடி மூச்சு இளைத்து நின்றபோது முன்னால் ஒரு வாசல் திறந்திருந்தது. அந்த வாசல் வழியே வேறொரு தெருவுக்கு வந்தான். அங்கும் மாயா மேன்சன் என்று சீரியல் பல்புகளில் எழுத்துகள் ஒளிர்ந்தன.
அவன் அந்தத் தெருவில் ஓடி இடது பக்கம் திரும்பினான். மறுபடியும் மாயா மேன்சன் தெரிந்தது. மாயா மேன்சன் உயிருள்ள ஒரு மண்ணுள்ளிப் பாம்பைப் போல அங்கும் இங்கும் தலையையும் வாலையும் காட்டிக் கொண்டிருந்தது. அவனுக்குள் புதிரான உணர்வு தோன்றியது. கண்ட காட்சிகளின் சித்திரங்களும் காணாத சித்திரங்களும் அவன் கண்முன்னால் வேகமாக ஓடின. வாழ்க்கை இவ்வளவு குழப்பமா என்று அயற்சியாய் இருந்தது. இன்னொரு முறை முதலிலிருந்து வாழமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தான். மாயா மேன்சன் அவனை அழைத்தது. வாழ்க்கையின் குறியீடு போல அதன் வெளிப்புறம் சீரியல் லைட்டுகளுடனும் உள்ளே இருட்கிடங்காகவும் இருந்தது. அவன் அதற்குள் போகவேண்டாம் என்று நினைத்தான். ஆனால் யாருமற்ற தெருவில் சமிக்ஞைகள் காட்டி  அழைக்கும் இளம்பெண்ணின் இடுப்பு மடிப்பைப்போல மாயா மேன்சன் அவனை அழைத்துக் கொண்டிருந்தது. கால்கள் அவன் கட்டுப்பாட்டை மீறி மாயா மேன்சனின் வாசலை நோக்கி நடந்தன. கலவிக்கு முன்னால் ஏற்படும் புல்லரிப்பு போல அவனுடல் சிலிர்த்தது. மறுபடியும் மாயா மேன்சனுக்குள் நுழைந்தான். வரவேற்பறை இருளிலிருந்து அதே குரல்,
“ என்ன இன்னும் இருபத்திநாலாம் நம்பரைக் கண்டு பிடிக்கலையா? “
அவன் வெட்கத்துடன் ஏதோ முணுமுணுத்தான். மீண்டும் அந்த புதிர் விளையாட்டுக்கு மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டான். முதல் அறையில் என்ன நிகழப்போகிறது என்று ஆவலுடன் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு அறைகளை நோக்கி நடந்தான்.
வலது பக்கம் திரும்பியவுடன் இருந்த அறை எண்ணைப் பார்த்தான். அறை எண் 24.
உள்ளே நாகு பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தான்.

 நன்றி - காணிநிலம்Saturday 7 December 2019

கருப்பையாவின் வனம்


கருப்பையாவின் வனம்

உதயசங்கர்

கருப்பையாவுக்கு நினைவு தப்பித் தப்பிப் பிழைத்துக் கொண்டிருந்தது. நாடி கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக் கொண்டிருந்தது. உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரிகிற மாதிரி மெலிதாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது நெஞ்சுக்கூடு. கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை கண்களைத் திறந்து மூடிக் கொண்டிருந்தார் கருப்பையா. யாரையும் பார்க்கவில்லை. அருகில் குஞ்சம்மாள் உட்கார்ந்து அவளுடைய கண்ணாடிக்கண்களை இடுக்கி அடிக்கடி கருப்பையாவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேல்முருகன் போஸ்ட் ஆபீசுக்குப் போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான். ஏற்கனவே ரெண்டு நாட்கள் லீவு போட்டு விட்டான். டாக்டர் நேற்றே சொல்லி விட்டார்.
“ வீட்டுக்குக் கூட்டிட்டு போங்க.. எதுக்கு வீணா செலவு பண்ணிகிட்டிருக்கீங்க…. இன்னும் ஒரு நாள் இல்லன்னா ரெண்டு நாள் தாங்கும் அவ்வளவு தான்…”
அதற்கப்புறம் தான் வீட்டுக்குக் கூட்டி கொண்டு வந்தார்கள். எதிர்வீட்டு கூனியாச்சி வந்து பார்த்து விட்டு ” ஏட்டி குஞ்சம்மா எப்பன்னாலும் சீவம்போகும்..கேட்டியா.. எப்படியும் நாளை அமாவாசை தாண்டறது கஷ்டம். பாக்கணும்கிறவுகளுக்குச் சொல்லி விட்ரு…இன்ன..”
என்று சொல்லி விட்டுப் போனாள். கூனியாச்சிக்கு வயது தொண்ணூறுக்கு மேலே இருக்கும். இன்னமும் கதியாக அலைந்துதிரியும். பார்வையும் தெளிவு. என்ன காது மட்டும் தான் மந்தம். ஆனால் கூனியாச்சி வாயசைவை வைத்தே புரிந்து கொள்வாள். கூனியாச்சி போன பிறகு தான் குஞ்சம்மாளூக்கு உணர்வு வந்தது. நரம்போடிய தன் கையை அசைத்து கருப்பையாவின் வெள்ளை முடியடர்ந்த நெஞ்சில் தடவிக் கொடுத்தாள். அவளுடைய கண்களில் அவளறியாமலேயே கண்ணீர் வழிந்தது. அதைத் துடைக்கும் உணர்வின்றி அப்படியே உட்கார்ந்திருந்தாள். கூனியாச்சி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த வேல்முருகன் அம்மாவிடம் கேட்பதற்காக உள்ளே நுழைந்தவன் அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு அப்படியே நின்றான். மனசை என்னவோ செய்தது. திரும்பி மறுபடியும் வராந்தாவுக்கே போய் உட்கார்ந்தான். அவனுடைய மனைவி சங்கரி அடுக்களையிலிருந்து சைகை செய்து கூப்பிட்டாள். அவன் அதைக் கவனிக்காதவன் மாதிரி வீட்டுக்கு எதிரிலிருந்த வேப்பமரத்தைப் பார்த்தான். வேப்பமரத்தில் ரெண்டு புறாக்கள் வந்து உட்கார்ந்திருந்தன. அதில் ஒரு புறா குதுகுதுவென ஜோடியின் அருகில் சென்று சத்தம் எழுப்பி சரசமாடியது. கருப்பையா பார்த்திருந்தால் அவை மணிப்புறாவா? மாடப்புறாவா? கர்ணப்புறாவா? வீட்டுப்புறாவா? என்று சொல்லியிருப்பார். அவர் கதியாக இருந்தவரைக்கும் அதாவது ஒரு வருடத்துக்கு முன்பு வரைக்கும் வீட்டில் புறாக்கூடு இருந்தது. அதில் ஒரு அஞ்சாறு ஜோடிப் புறாக்கள் வகைக்கொன்றாய் இருந்தன. ஒரு பொமரேனியன் நாய் இருந்தது. ஐந்தாறு கோழிகள் இருந்தன. ஒரு சண்டைச்சேவல் இருந்தது. இரண்டு கின்னிக் கோழிகள் இருந்தன.
கருப்பையா வாழைக்கிணற்றில் குளிக்கப்போகும்போது மாடு முட்டிக் கீழே விழுந்து விட்டார். பிட்டியில் சரியான அடி. எழுந்திரிக்க முடியாமல் இருந்தவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டான் ஆட்டோ முருகேசன். ஆர்த்தோ டாக்டர் இடுப்பு எலும்பு நொறுங்கி விட்டது என்றார். பிளேட் வைத்து ஆபரேஷன் செய்யலாம். ஆனால் கருப்பையாவின் எண்பத்தியிரெண்டு வயதை யோசிக்கும் போது அது அவ்வளவு சரி வருமா என்று தெரியவில்லை. யோசித்து விட்டுச் சொல்லுங்கள். என்று சொன்னார். கருப்பையாவுக்கும் அதில் அவ்வளவு விருப்பமில்லை. அவர் அவருடைய நண்பரான வைத்தியர் மதனகாமராஜரிடம் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார். ஆயுர்வேத வைத்தியரான மதனகாமராஜர் தொடையில் எண்ணெய்க்கட்டு போட்டு அசையாமல் ஒரு மண்டலத்துக்கு இருக்கும்படி சொன்னார். அவர் சொன்ன மாதிரி கருப்பையாவும் நாற்பத்தியெட்டு நாட்களுக்கு அசையாமல் கிடந்தார். உண்மையில் காமராஜர் கில்லாடி தான். கருப்பையா இரண்டு மாதங்களில் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார். என்ன இடது பக்கம் காலை கொஞ்சம் சாய்த்து நடந்தார். படுக்கையில் கிடத்தி விடுமோ என்று பயந்தவருக்கு நடக்க முடிந்த சந்தோசத்தை நடந்தே கொண்டாடினார். பொழுதன்னிக்கும் நடந்து கொண்டிருந்தார். ஆனால் ஏணியில் ஏறுவது, குத்துக்கால் வைத்து உட்காருவது, சம்மணம் போட்டு உட்காருவது எல்லாம் முடியவில்லை. எந்தப் பொருளையும் தூக்க முடியவில்லை. அப்போது தான் வேல்முருகன்,
“ யெப்பா.. காலம்போன காலத்தில எதுக்கு இந்தத் தொரட்டெல்லாம் இழுத்து வைச்சிகிட்டு.. எல்லாத்தையும் ஒழிச்சிக்கட்டுங்க… நிம்மதியா ரெஸ்ட் எடுங்க…”
என்று சொன்னான். கருப்பையா மகனுக்குப் பதில் சொல்ல இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டார். அவருடைய நண்பர்கள் ஒவ்வொருவராகக் கூப்பிட்டு புறாக்கள், கோழிகள், நாய், என்று கொடுத்தனுப்பினார். அதற்கப்புறத்திலிருந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஷீணமடைந்து கொண்டே வந்தார். தலைசுற்றல் வந்தது. இரத்தக்கொதிப்பு நோய் என்றார்கள். அடிக்கடி ஒண்ணுக்குப் போனது. சர்க்கரை வியாதி என்றார்கள். இப்படியே அடுத்தடுத்து நோய்களின் படையெடுப்பில் அவர் சரணாகதி அடைந்து விட்டார்.
வேல்முருகன் அருகில் நிழலாடுவதை உணர்ந்து திரும்பினான். அம்மா முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டே,
“ சின்னவனுக்குச் சொல்லி வந்து பாத்துட்டுப் போச்சொல்லு… பேரமாரையும் கூட்டிட்டு வரசொல்லு…அப்படியே மருதைக்கும் ஃபோனைப் போட்டு செல்லம்மாளையும் பிள்ளைகளைக் கூட்டிட்டு வரசொல்லு.”
என்று சொல்லி விட்டு மூக்கையுறிஞ்சினாள். பின் திரும்பி மெல்ல கருப்பையா படுத்திருந்த அறைக்குள் போனாள். இருட்டுக்குள் கருப்பையா அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். குஞ்சம்மாள் கண்ணாடியைக் கழட்டி சீலைத்துணியால் துடைத்தாள். மீண்டும் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தபோது கருப்பையா கண்களை மூடிக் கிடந்தார். திருமணம் முடித்த முதலிரவில் பார்த்த கருப்பையாவின் கண்கள் ஞாபகத்துக்கு வந்தன. சிவப்பு ரேகைகளோடிய சிறிய கண்கள். குறுகுறுவென அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கண்கள்! அந்தக் கண்கள் ஒரு மனிதனுடைய கண்களாக இல்லை. அவை ஒரு காட்டுமிருகத்தினுடைய கண்களாக மின்னின. பசி கொண்ட மிருகம் தனக்கெதிரே விரிந்து கிடக்கும் வனத்தை ஆவலுடன் வெறித்துப் பார்க்கும் கண்கள்! வனத்திற்குள் சென்று அத்தனையையும் குதறிப்போடத் துடிக்கிற கண்கள். அன்று அவளால் அந்தக் கண்களை பார்க்க முடியவில்லை. அந்தக் கண்களைப் பார்த்து அவள் பயந்தாள். அந்தக் கண்களில் இருந்த வெறியைப் பார்த்து பயந்தாள். அந்த வெறி அன்று இரவு மட்டுமல்ல தொடர்ந்த இரவுகளிலும் அவளைக் குதறிப் போட்டது. அவள் தன்னுடைய உடம்பு தன்னுடையதாக இல்லை என்று உணர்ந்தாள். நார் நாராகக் கிழிந்த உடல் உறுப்புகளோடு கூடாகி அவள் அலைந்து திரிவதைப் போல இருந்தது.
பகல் முழுவதும் பாவம் போல ரைஸ் மில்லுக்குப் போய் விட்டு வந்து அவளிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசும் கருப்பையா இரவானால் எப்படித்தான் அவ்வளவு சக்தி வருமோ பிசாசைப் போல அவளைக் கசக்கிப் பிழிந்தான். கலவியின் போது அவனுடைய உறுமல் கர்ணகடூரமாக இருந்தது. பகலில் நிர்மலமாக தோன்றும் அவனுடைய கண்கள் இரவானதும் செவ்வரி ஓடி ரத்தம் பாய்வதைக் கவனித்தாள். அன்றிலிருந்து அவள் கருப்பையாவின் கண்களைப் பார்த்து பேசுவதில்லை. அந்தக் கண்கள் இப்போது மூடியிருக்கின்றன. எப்போதாவது திறக்கும் அந்தக் கண்களில் பழைய ஒளி இல்லை. அந்த வேகம் இல்லை. அந்த பயங்கரம் இல்லை. இப்போது தான் அவள் அந்தப் பயங்கரத்தை எதிர்கொள்ளத் துணிந்தாள். கருப்பையா பழைய மாதிரி கண்களைத் திறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கிழிந்த துணிபோல கிடந்த கருப்பையா அவளுடைய ஆசையைக் கேட்டவர் போல கண்களைத் திறந்தார்.  காலத்தின் கடைசி நூலிழையில் அவர் தொங்கிக் கொண்டிருந்தார். நினைவுகளின் புதிர்வழிகளில் அவர் சுற்றியலைந்து கொண்டிருந்தார். ஆனால் கடைசிகடைசியாக நினைவுகள் அவர் மீது கருணைகூர்ந்து அவரை நினைவுகளற்ற பெருவெளியில் கொண்டு வந்து சேர்க்கப் பிரியம் கொண்டது. அவருடைய தவிப்பைத் தாங்கமுடியாமல் ஞாபகங்கள் ஒவ்வொன்றாக தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டிருந்தன. பிரக்ஞை மட்டும் இதுவரை இமையாமல் விழித்திருந்த தன் கண்களை மூடக் காத்திருந்தன அவருடைய ஆணையை எதிர்பார்த்து.
கருப்பையாவின் கண்கள் தாமாக மூடிக்கொண்டன. ஆனால் இமைகளின் துடிப்பும், கண்மணிகளின் அசைவும் இருந்து கொண்டேயிருந்தன.
அவன் நடந்து கொண்டிருந்தான். இன்னமும் மானுடவாடை படாத ஆதிக்காடு. வழிகளை மறந்த அடர்வனம். பூச்சிகளின் ரீங்காரம். பறவைகளின் கலவையான கெச்சட்டம் அதன் உச்சத்தில் கேட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ புலியின் உறுமல் தேய்ந்து வந்து கொண்டிருந்தது. மிக அருகில் யானைகளின் செல்லமான பிளிறல்கள் கேட்டன. அருகில் செடிகளுக்குப் பின்னால் மிளா ஒன்றின் செருமல் சத்தம் கேட்டது. இலைச்சருகுகளில் மான்களின் கூட்டம் நடக்கும் ஒலியும் நிற்கும் ஒலியும் கேட்டது. குயில்களின் நீண்ட கூவல் விட்டு விட்டு கேட்டது. ஆங்காங்கே சிறு சிறு ஓடைகளில் ஓடும் தெள்ளிய நீரின் சளப்  க்ளக் என்ற ஒலியில் ஒரு கன்னிப்பெண்ணின் கொலுசொலி கேட்டது. மலைப்பாறைகளிலிருந்து அருவிகள் விழும் பேரோசையும் கேட்டது. அந்த வனத்தில் இரவும் பகலும் முயங்கிக் ஒன்றாக கிடந்தன. அந்த முயங்கலின் ஒளியில் காடே புளகாங்கிதமடைந்தது. காட்டின் உடலில் கிளர்ந்த உணர்ச்சிகளை அந்தக் காட்டின் உயிர்கள் உணர்ந்து ஒன்று போலக் குரல் எழுப்பின. ஒரு மாபெரும் இசையமைப்பாளனின் இசைநிரலில் காடே ஒரு இசைக்கோர்வையின் கண்ணிகளை இசைத்துக் கொண்டிருந்தது. கருப்பையா காட்டினுள்ளே நடந்து கொண்டிருந்தான். அவனுடைய காலடிகள் கன்னிப்பெண்ணின் உடல் மீதான முதல் ஸ்பரிசம் பட்டது போல காடு அச்சம் கலந்த கிளர்ச்சியில் முணுமுணுத்தது. புற்கள் அந்தத்தொடுகையினால் தன் உணர்வை ஒரு கணம் இழந்து மறுபடியும் எழுந்தன. அப்போது ஏற்பட்ட  முணுமுணுப்புகள் காற்றில் ஒரு ரகசியம் போல பரவியது. இலைகள் அசைந்துஅசைந்து சங்கேதமொழியில் அந்நியனின் வரவை காட்டின் ஆத்மாவுக்கு செய்தி அனுப்பியது. அந்தத் தந்திச்செய்தியை இடைமறித்துக் கேட்ட புட்களும், பூச்சிகளும், மிருகங்களும், கலவரமடைந்து உச்சத்தில் அலறின. காடு அதன் அதிருப்தியை முட்களின்மூலம் அவனுக்குத் தெரிவித்தது.
அவனுடைய உடலெங்கும் முட்காயங்கள். தோளில் கிடந்த துண்டு எப்போது எந்தச்செடியில் சிக்கியது என்ற உணர்வே இல்லை. இடுப்பில் கட்டியிருந்த வேட்டியும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கால்களிலிருந்து ரத்தத்துளிகள் அவன் நடந்து சென்ற ஒவ்வொரு அடியிலும் தங்கி காட்டின் ஆதித்தெய்வத்துக்கு ரத்தபலியாகத் தங்கின. அவனுக்கு எதைப்பற்றியும் பிரக்ஞையில்லை. காட்டின் சலசலப்பு அவனை அணுவும் அசைக்கவில்லை. ஆனால் காடு விடவில்லை. தன்உடல் மீதான அவனுடைய இந்த வன்முறையை எதிர்த்தது. அவனுடைய வேட்டியும் கிழிந்து ஒரு முள்மரத்தில் தொங்கியது. சிறு கோவணம் ஒன்றே அவனுடைய உடலில் இருக்கிறதா இல்லையா என்ற மாயையுடன் இருப்பதாகவும் இல்லையென்பதாகவும் தெரிந்தது. கருப்பையாவின் புலன்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை நோக்கி அவனை இழுத்துச் சென்றன.
ஒரு சமயம் குமரி முனை முக்கடலில் அவனை கடல் கொள்ள அழைத்தது. அலைகளில் அவனைத் தாலாட்டித் தாலாட்டி தன் மடிக்குள் இழுத்துக் கொண்டிருந்தது. அப்போதும் அவன் அந்த அழைப்பைக் கேட்டான். வலம்புரிச்சங்கின் கர்ப்பத்தில் ஒலிக்கும் அதே அலையோசை. அதே ரீங்காரம். அவனுக்குக் கேட்டது. அவன் எல்லாவற்றையும் மறந்தான்.  களக்காட்டிலிருந்து ராமேஸ்வரத்துக்கு அவனுடைய அய்யா சொக்கலிங்கமும், ஆத்தா மீனாட்சியும் நடந்து சென்று பிரார்த்தித்த பிறகே குலக்கொழுந்தாய் வந்துதித்த கருப்பையா அவர்களை மறந்தான். .அவன் அமைச்சராக இருந்த களக்காடு அரண்மனையை மறந்தான். அவனுடைய வீடு, வாசல், சொத்து சுகம், எல்லாவற்றையும் மறந்தான். அவனுடைய இல்லக்கிழத்தி சங்கரகோமதியை மறந்தான். அவனுக்கென்றே பத்தமடையிலும்,அம்பையிலும், திருநெல்வேலி மாடத்தெருவிலும் காத்துக் கிடந்த தாசிகளை மறந்தான். எல்லாம் மறந்து போனது. அவனுடைய அகம் அழிந்து அவன் கடலின் ஒரு துளியாக மாறிவிட்டான். துளிக்கடல் அவனை இயற்கையோடு கலந்து விடச் செய்யத் தயாரானது. ஆனால் அந்த நேரத்தில் அவனுடைய காதுக்குள் ஒரு பிஞ்சுக்குழந்தையின் அழுகுரல் ஈனஸ்வரத்தில் கேட்டது. இத்தனை பேரிரைச்சலில் அந்தக் குரல் மட்டும் எப்படிக் கேட்டது?  ஒற்றை நாதசுரத்தின் அழுகுரல் போல அத்தனைத் தெளிவாகக் கேட்டது. அது சேதுராமலிங்கத்தின் குரல். அவனுடைய உதிரக்கொடி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் பிறந்த குலக்கொடி. அவனுடைய குரலே தான். உடனே அவனுக்குள் நிறைந்திருந்த அமைதி குலைந்து மூச்சுத் திணறியது. அதற்குப்பிறகு அந்த முக்கடலால் அவனை நிறுத்த முடியவில்லை. கரையில் அவனைக் காணோமே என்று தவித்துக் கொண்டிருந்த உறவினர்கள் முன்னால் சிரித்தபடியே கடலிலிருந்து தோன்றினான். ஆனால் அன்றே சங்கரகோமதிக்குத் தெரிந்து விட்டது. இனி கருப்பையாவை நிறுத்த முடியாது. அதன்பிறகு அவள் ஒவ்வொரு நாளும் கருப்பையா தொலைந்து போவதை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
இப்போது கருப்பையாவை எந்த நினைவுகளும் நிறுத்த முடியவில்லை. அவனுடைய அருமை மகன் சேதுராமலிங்கத்தின் குரல் இப்போதும் கேட்டது. முன்னெப்போதையும் விட இனிமையாய் கேட்டது. சங்கரகோமதியின் கண்ணீரின் சுவை கூட அவனுடைய நாசியில் மணத்தது. பத்தமடை மும்தாஜும், அம்பை அபிதாவும், மாடத்தெரு சரசுவும் கூடலின்போது அவனுக்கு உன்மத்தம் ஏற்றுகிற ம்..ம்..ஆ.. என்னயக் கொல்லுங்களேன்…. ஆ..ஆ… என்ற சரசக்குரல்கள் அவன் கண்முன்னே காட்சிகளாய் தெரிந்தன. அதிகாரத்தின் ருசி அவனுடைய நாவில் இனித்தது. ஏவலாட்கள் அவனை அழைத்துப் பணிந்தனர். ஆனால் எதுவும் கருப்பையாவின் சித்தத்தில் இறங்கவில்லை. இப்போது அவனுக்குக் கேட்ட ஒரே ஓங்காரக்குரல் காட்டின் கர்ப்பப்பையிலிருந்து கேட்டது. அந்தக்குரல் தான் அவனை வழிநடத்தியது. அந்தக்குரல் தான் அவனுடைய உடல் பொருள் ஆவி அத்தனையையும் பலிப்பொருளாய் மாற்றியிருந்தது. ஓங்காரமாய் ஒலித்த அந்தக் குரலுக்கு இசைவாக காட்டின் இந்தச் சத்தங்கள் எல்லாம் ஒரு பின்னணி இசை மாதிரி, ஒலித்தது. நாதசுரக்கச்சேரியில் ஒரே சீராக ஊதுகின்ற ஒத்து நாதசுரத்தின் ரீங்காரஒலி போல அவனுடைய உடலுக்குள் நுழைந்து அருளை ஏற்றிக் கொண்டிருந்தது. அந்தக்குரலின் அழைப்பு ஒரு பேரருவியின் பேரிசையைப் போல அவனுக்குள் நிறைந்து கொண்டிருந்தது. அவன் அந்த இசையின் குரலைப்பின் தொடர்ந்து போனான்.
வானுக்கும் மண்ணுக்குமாய் ஒரு மின்னல்கற்றையைப் போல அந்த அருவி விழுந்து கொண்டிருந்தது. அருவியின் நீர்வெளிச்சத்தில் அந்தப் பகுதியே ஒளிவீசியது. ஒளிவீசும் அந்த நீரினூடே  நீர்த்திரையில் ஓவியம்போல ஒரு கருத்த பளியர் பெண் ஆடைகளின்றி குளித்துக்கொண்டிருந்தாள். வனத்தில் ஆடைகள் எதற்கு? வனம் என்ன ஆடை உடுத்தியா அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது? அந்தப்பெண்ணின் இறுகிய தசைகளும், பருத்த முலைகளும் வடிவான உடலும், கருப்பையாவின் புலன்களுக்குள் பேரலைகளை ஏற்படுத்தின. ஒரு கணம் நின்று பார்த்த கருப்பையா அருவியின் நீரோடு நீராக மாறிவிட்ட அந்தப்பெண்ணைத் தொழுதான். தன் உடலில் ஏற்பட்ட பேரலைகளின் முன் மண்டியிட்டு தொழுதான். புலனறிவல்ல. புலனுணர்வல்ல. புலனறிவல்ல. புலனுணர்வல்ல. என்று மாறி மாறிச் சொல்லிப் புலம்பினான். தன் கால்களில் புலன்களைக் கட்டிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடந்தான்.
புதர்ச்செடிகளுக்குள் நுழைந்தும் விலகியும் வனத்தின் கருவறையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் கருப்பையா. வனத்தின் செடிகளும் கொடிகளும் அவன் நடக்க, நடக்க, நடந்து வந்த பாதையை அவசர அவசரமாக மூடின. வனம் தன் ரகசியத்தை யாருக்கும் இத்தனை எளிதாக திறந்து காட்டியதில்லை. இத்தனை சுளுவாக வனத்தின் தொடப்படாத உள்ப்பிரதேசங்களை தன்விருப்பம்போல கையாளும் கருப்பையாவைக் கண்டு பூச்சிகள் பயந்து அலறின. குரலில்லாத மிருகங்கள் கூட குரல் கொடுத்தன. இப்போது வனத்தினுள் இருள் கூடிக்கொண்டே வந்தது. பூச்சிகள், பறவைகள், மிருகங்கள் இவற்றின் சப்தங்கள் தேய்ந்து கொண்டே வந்தன. காட்டின் அந்தரங்கப்பிரதேசத்தைத் தொட்டு விட்டான் கருப்பையா. முதன்முதல் காட்டின் கர்ப்பவாசலில் மனிதனின் தொடுகை. அந்தத் தொடுகையில் காட்டின் புலன்கள் விழித்துக்கொண்டன. எப்போதாவது நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த விழிப்பு. காட்டிற்கு கோடிக்கணக்கான கண்கள் விழித்தன. அந்தக் கண்கள் கருப்பையாவை உற்றுக் கவனித்தன. கருப்பையின் கண்களில் இருந்த காமத்தை உணர்ந்தன. கண்பார்வையில் தெரியாமல் போகுமா காமம்? ஒரு விரல் தொடுகையில் உணர முடியாத காமம் என்ன காமம்? கருப்பையாவின் காமத்தில் பொங்கிப்பிரவகித்த நித்தியத்துவத்தைக் காடு உணந்து கொண்டது. காட்டின் அத்தனை கண்களும் யோனியாக மாறின. காடு இன்பத்தில் முனகி அசைந்தது. பின்பு அவனை அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டது. அவன் காட்டின் கருவறையில் இருந்தான். அங்கே அமைதி. மனம் என்ற ஒன்று இல்லாமல் ஆன அமைதி. சத்வ, ரஜோ, தமோ, குணங்களற்ற அமைதி. காமக்குரோதங்கள் என்றால் என்னவென்றே தெரியாத அமைதி. கருவறைக்குழந்தையின் களங்கமற்ற அமைதி. அந்த அமைதியின் மறுபக்கமாக அடர்இருள் கவிந்திருந்தது. அவனைச்சுற்றிலும் பச்சை இருள். அந்த இருள் ஒளிர்ந்தது. பச்சைமரகதக்கல்லில் சூரியவொளி புகுந்து வெளிவருவதைப் போல அந்த இருள் அமைதியாக ஒளிர்ந்தது. அவனுடைய கண்களில் இது வரை காணாத காட்சியெல்லாம் தெளிவானது. கண்களின் ஒளி கூடி வந்தது.
அங்கேயும் வன உயிர்கள் இருந்தன. யானைகள், புலிகள், மான்கள், மிளாக்கள், காட்டெருமைகள், முயல்கள், மயில்கள், வித விதமான பூச்சிகள், எல்லாம் இருந்தன. பச்சை ஒளியில் தங்கள் பூர்வகுணங்களை மறந்து பச்சையொளியைத் தின்றே அலைந்து கொண்டிருந்தன. கருப்பையாவின் மீதும் பச்சையொளி புகுந்தது. அவன் அப்படியே நின்றான். பிரபஞ்சமே அசையாமல் நின்று விட்ட மாதிரி இருந்தது. சின்னஞ்சிறு பூச்சிகளிலிருந்து மாபெரும் யானைகள் வரை அப்படியே அசையாமல் நின்றன. காலம் தன் கணக்கை இழந்திருந்தது. அவன் எவ்வளவு நேரம் அங்கெ நின்று கொண்டிருந்தான் என்று தெரியவில்லை. அங்கிருந்த ஜீவராசிகள் தங்களுடைய ஒவ்வொரு அசைவையும் மிக மிக மெதுவாக செய்தன.  அவனுக்கருகில் ஊர்ந்து இழைந்து சென்ற மலைப்பாம்பு அவனைக் கடந்து செல்ல ஒரு யுகமானது. யுகங்களைக் கடந்து வாழ்ந்த காடு அவனுக்கும் சிரஞ்சீவித்தனத்தையும் அளித்தது. யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் தன் யோனிக்குள் ஏற்றுக் கொள்ளாத முண்டந்துறைவனம் கருப்பையாவை எப்படி ஏற்றுக் கொண்டது?
கருப்பையாவின் வித்துக்குள்ளேயே அவனுடைய முப்பாட்டன் கருப்பசாமியின் சித்தம் இருந்தது. பிறந்தபோதே சித்தம் குலைந்து பித்துப்பிடித்த கருப்பசாமி இந்த வனத்தின் மர்மத்தில் நுழைந்து இருபது ஆண்டுகள் வரை காணவேயில்லை. பித்தனைப் புலி அடித்துத் தின்றிருக்கும் என்று ஊரார் சொன்னார்கள். அவனுடைய தாய், தந்தையரும், உற்றார் உறவினரும், கருமாதி செய்து பிறவிக்கடனைத் தீர்த்தார்கள். காட்டுக்குள் வழிதவறிச் சென்ற கன்றைத் தேடிப்போன கந்தப்பனின் கண்களில் ஒரு ஆலமரத்தடியில் கன்று நின்றிருப்பதையும், அதற்கு பசுந்தழைகளைத் தின்னக்கொடுத்துக் கொண்டிருந்த சடாமுடியுடன் ஆடையில்லாத திகம்பரச்சித்தனையும் கண்டன. சித்தன் அவனைப் பார்த்தான். அந்தக் கண்களின் ஒளியில் கந்தப்பன் தன்னை மறந்து நின்றான். எவ்வளவு நேரம் நின்றிருப்பான் என்று தெரியவில்லை. திடீரென கண்விழித்த போது சித்தனைக் காணவில்லை. கன்று மட்டும் நின்று கொண்டிருந்தது.
கன்றுடன் காட்டுக்குள் இதுவரை யாரும் போகாத பாதைகளில் இதுவரை யாரும் காணாத மர்மங்களைக் காண கருப்பசாமி அலைந்து கொண்டிருந்தான். வனத்தின் காற்று அவனை இன்னும் இன்னும் என்று அழைத்துக் கொண்டு போனது. அவன் வளர்ப்புநாயைப்போல காற்றின் சொல்படி கேட்டான். அவனை ஒரு குகை வாசலில் கொண்டுபோய் நிறுத்திய காற்று பேரோலமாய் மாறி அந்தக் குகை வாசலை அடைத்து விட்டது. குகையில் சமாதியான கருப்பசாமியின் வித்தான கருப்பையாவிடம் கருப்பசாமியிடம் அந்தச் சாயலைக் கண்டபிறகு தான் காடு நெகிழ்ந்து கொடுத்தது. இல்லையென்றால் யாராக இருந்தாலும் ராஜாவாக இருந்தாலும் வெளியே துப்பிவிடும். கருப்பையா இப்போது அந்தக்குகைக்குள் இருந்த கதகதப்பில் தன்னை மறந்து ஒரு மீனைப்போல நீந்திக்கொண்டிருந்தான். குகையின் ஆழத்திற்கு மூழ்கி மூழ்கிப் போய்க்கொண்டிருந்தான்.
மூடியிருந்த கருப்பையாவின் இமைகளில் துடிப்பில்லை. கண்மணிகள் அசையவில்லை. உடல் ஒரு இறகைப்போல மாறிக்கொண்டிருந்தது. இன்னும் சிலநொடிகளில் காற்றில் பறந்து விடலாம். ஒரு மாயப்போர்வை கால்விரல்களிலிருந்து மெல்ல மேலே ஏறிக்கொண்டிருந்தது.
“ ஏங்க.. இந்தா பேரப்பிள்ளைக வந்திருக்காக..சின்னவனும் வந்திருக்கான் பாருங்க.. “ என்ற குரல் எங்கோ கேட்டது கருப்பையா இப்போது அவருடைய அம்மா பொட்டையம்மாளின் மடியில் படுத்திருந்தார். அம்மா தலைகோதினாள். அவளுடைய மாராப்பை ஒதுக்கிவிட்டு பருத்த இடது முலையைக் கையினால் பிடித்து வாயில் வைத்து உறிஞ்சினார். பொட்டையம்மாள் சிரித்துக்கொண்டே,
“ ஏலெ மூதி இப்ப உனக்கு வயசு எழுபத்தைஞ்சில.. இன்னமும் அம்மைட்ட பால் வேணுமாக்கும்..”
என்று வாகாய் உட்கார்ந்தாள். அவளுடைய தாய்மையின் அருள் கருப்பையாவின் உடலில் பூரணமாக இறங்கியது. பால் பொங்கி வந்தது. அவருடைய மனம் குளிர்ந்து முலையிலிருந்து வாயை எடுத்தார். வாயிலிருந்து பால் வெளியே வழிந்து கொண்டிருந்தது.
“ இந்தா பாலும் வெளிய வந்திருச்சி.. அவ்வளவு தான் சீவன் போயிருச்சி… “
என்ற சத்தம் கருப்பையாவின் மனக்குகைக்குள் ஒரு அசரீரியைப் போல ஒலித்து மறைந்தது.

நன்றி - கதைசொல்லி

Thursday 5 December 2019

சரக்கொன்றைப்பூக்கள்


சரக்கொன்றைப்பூக்கள்

உதயசங்கர்

உலகம்மை சித்தி இறந்த பதினாறாவது நாள் விசேசத்துக்கு வந்த அய்யர் பிண்டம் வைத்து கருமாதிச்சடங்குகளை எல்லாம் முடித்து விட்டுப் போய் விட்டார். அய்யர் சொன்னபடி பிண்டங்களை காகங்களுக்குப் போட்டுவிட்டு தாமிரபரணியில் போய் குளித்து விட்டு வந்து வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில் தான் அது நடந்தது.
“ செருப்பைக் கழட்டி அடிப்பேன்..”  சிவாவின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் தெறித்து விழுந்தன. கந்தையா சித்தப்பாவின் நண்பரான கலைஞானத்திடம் சிவா கத்திய அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து வாசலில் இருந்த சரக்கொன்றை மரத்தின் மஞ்சள் பூக்களின் இதழ்கள் அப்படியே கீழே கொட்டின. அப்படிக் கொட்டிக்கொண்டிருந்த பூவிதழ் ஒன்று காற்றில் காம்பவுண்ட் சுவரையொட்டி உட்கார்ந்திருந்த சிவாவின் மொட்டைத்தலையில் விழுந்து முகத்தை உரசிக் கொண்டு மடியில் விழுந்தது. கோபத்தால் சிவந்து போயிருந்த அவனுடைய முகம் பூவின் ஸ்பரிசத்தால் சற்று அடங்கியது மாதிரி இருந்தது.. சிவாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளின் கனம் தாங்கமுடியாமல் கலைஞானம் அங்கிருந்து வேகமாக எழுந்து போய் விட்டார். சிவாவின் முகம் இறுகி முகத்தசைகள் விரைத்திருந்தன. மொட்டைத்தலையில் கூட ரத்தக்குழாய்கள் விம்மித் தெறித்துக் கொண்டிருந்தன. அவன் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. யாராவது தொட்டால் கூட அடித்து விடுகிற மாதிரி கை நரம்புகள் புடைத்திருக்க நிதானமாக இருப்பதற்காக உட்கார்ந்திருந்த தேக்குமர நாற்காலியை இறுகப்பிடித்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து தள்ளி மேற்கே கிடந்த பெஞ்சில் சேர்மாதேவி மாமா வெங்குவிடம் பேசிக்கொண்டிருந்த கந்தையா சித்தப்பா தலையைக் குனிந்து கொண்டார். நிமிர்ந்து சிவாவைப் பார்க்க முடியவில்லை.
யாருக்கும் என்ன நடந்தது ஏன் இந்தக் களேபரம் என்று புரியாமல் ஒருவரையொருவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டனர். கை ஜாடையால் அடுக்களையிலிருந்து என்ன என்று வேலம்மை ஆச்சி கேட்டாள். பட்டாசலில் சாப்பிடுவதற்காக இடத்தை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த சிவாவின் அம்மை கமலம் வாசல்வரை வந்து பார்த்தாள். யாரிடமும் ஒரு அனக்கம் இல்லை. அமைதியாக இருந்தது. உரித்து உப்பைத் தடவிக்கொண்டிருந்த வெயிலின் புழுக்கம் இன்னும் கொஞ்சம் அதிகமான மாதிரி எல்லோரும் ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா என்று சத்தம் எழுப்பினார்கள். செங்கோட்டை குமார் அம்மாவைப் பார்த்ததும் சாப்பிடலாமா? என்று கைஜாடையில் கேட்டான். எல்லோருக்கும் சீக்கிரம் அங்கேயிருந்து போய் விடவேண்டும் என்ற உணர்வு வந்தது. திடீரென சரக்கொன்றைமரத்திலிருந்து சிறு காற்று வீசியது. அந்தக் காற்றின் குளுமை உலகம்மைச் சித்தியின் சிரித்த முகத்தைப் பார்த்த மாதிரி இருந்தது. அப்படியொரு காற்றுக்காக காத்திருந்தவர்கள் போல எல்லோரும் சட்டைக்காலரைத் தூக்கி சட்டையைப் பின்னுக்குத் தள்ளி காற்று உடல் முழுவதும் பரவி பொங்கி வரும் வியர்வையை ஆற்றவேண்டும் என்று யத்தனித்தார்கள். எப்பேர்ப்பட்ட மனுஷி அவள்! அந்தக் கணத்தில் உலகம்மையின் முகம் நினைவுக்கு வர எல்லோரும் நீண்ட பெருமூச்சு விட்டார்கள்.
சிவாவின் முகம் கூட மாறி நிதானமாகி விட்டது. அந்தக் கணத்தில் அவனுக்கு சிவகாமியையும் ராஜியையும், உமாவையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதில் ஆச்சரியமென்ன இருக்கிறது. அவர்களுடைய துக்கத்தை யாரால் ஆற்றமுடியும்? உலகம்மைச் சித்தியைப் போல ஒரு அம்மை இப்படித் திடீரென அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டு முங்கி விடுவாள் என்று யார் தான் எதிர்பார்த்திருப்பார்கள்?
சிவாவின் பள்ளிப்பருவத்தில் அவன் லீவுக்கு வரும்போதெல்லாம் சித்தியின் மடியில் தான் தலை வைத்து படுப்பான். அவள் அவனுடைய தலைமுடிக்குள் கை விரல்களால் கோதி விடுவாளே அப்போது ஒரு மென்மையான புளகாங்கிதம் அவனுடலில் ஏற்படும். அந்தச் சிலிர்ப்பு அடங்கி சிரிப்புப் பொங்கி வரும். சித்தியின் கையைப் பிடித்து உள்ளங்கையில் முத்துவான். சித்தியும் அப்படியே அவனுடைய முகத்தைத் தடவி அவள் உதடுகளுக்குக் கொண்டு போய் முத்துவாள். அப்போது அந்த முகத்தைப் பார்க்கவேண்டுமே. லேசான தெத்துப்பல் தெரிய உதடுகள் பிரிந்து கண்களை மூடுவாள். தாய்மையின் அபூர்வமான அழகுடன் ஒளி வீசும். அந்த முகத்தை அவனால் எப்படி மறக்கமுடியும்? அவன் அந்த முகத்தைப் பார்த்தபடியே உறங்கி விடுவான். இப்போதும் அந்தக்காற்றில் அப்படியொரு சிலிர்ப்பு வந்தது.
புதூரிலிருந்து வந்திருந்த போத்தித்தாத்தா
“ ஏலே என்னல ஏன் விசேசவீட்டுல கத்திகிட்டுருக்கே.என்ன விஷயம்? .” என்று அருகில் வந்து அவன் தோளில் கைகளை வைத்து சத்தமில்லாமல் பாந்தமாய் கேட்டார். சிவா நிமிர்ந்து கந்தையா சித்தப்பாவைப் பார்த்தான். அவர் பெஞ்சில் உட்கார்ந்தவாக்கில் மொட்டைத்தலையை குனிந்தபடி கால்பெருவிரலால் கீழே தரையில் கீறிக் கொண்டிருந்தார்.
“ ஒண்ணுமில்ல தாத்தா..” என்றான் சிவா. அவர் மேலும் ஏதோ கேட்பதற்குமுன் அவன் எழுந்து காம்பவுண்டை விட்டு வெளியே போய் விட்டான். வெளியே கொன்றைமரத்தடியில் மஞ்சள் பூக்கள் வட்டமாய் கொட்டிக்கிடந்தன. அந்தப்பூக்களின் நடுவே கொஞ்சநேரம் நின்றிருந்தான். சரம் சரமாய் பூத்துத் தொங்கிக்கொண்டிருந்த பூக்களை சித்திக்கு ரொம்பப்பிடிக்கும். அவள் தான் எப்போதோ அவளுடைய சொந்த ஊரான விக்கிரமசிங்கபுரத்திலிருந்து விதை கொண்டு வந்து போட்டு வளர்த்தாள். அது பூக்கத்தொடங்கி விட்டால் போதும் அவள் முகத்தில் அந்த மஞ்சள் ஒளி வீசத்தொடங்கி விடும். தினமும் ஒரு முறையாவது சின்னப்பிள்ளைகள் போல அந்த மரத்தடியில் கொஞ்சநேரம் நின்று மரத்தைத் தடவிக் கொடுப்பாள். கைக்கெட்டும் பூக்களைப் பறித்து சாமிப்படங்களுக்கு வைப்பாள்.
சிவா வந்து கடைசியாக முகத்தைப் பார்ப்பதற்க்காக இருபத்திநான்கு மணிநேரம் காத்திருந்தாள் உலகம்மை சித்தி.  சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவா அடித்து பிடித்து ஓடி வந்தான். அவனால் அழக்கூட முடியவில்லை. துக்கம் பாறாங்கல் மாதிரி மனதில் அடைத்துக் கிடந்தது. இறந்தபிறகும் கூட அந்தத்தாய்மை பொங்கும் ஒளி வீசும் முகம் இலங்கிக்கொண்டிருந்தது. முதலில் எதுவும் தோன்றவில்லை. உலகம்மை சித்திக்கு பிரியமான வளர்ப்பு மகனான சிவா அவளைப் பார்த்ததும் உடைந்து அழுவான் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவனும் சிவகாமியும் ஒருவட்டை. அவன் பிறந்தபோது அம்மையிடம் தாய்ப்பால் ஒருதுளி இல்லை. அப்போது உலகம்மை சித்தி கொஞ்சநாள் அவனுக்கும் முலையூட்டியிருக்கிறாள். அவளுடைய ரத்தம் அவனுடலில் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட பிரயாணத்தில் அவளைப்பற்றிய ஓர்மைகளை அவன் ஞாபகப்படுத்திக் கொண்டே வந்ததாலோ என்னவோ கண்ணாடிப்பெட்டிக்குள் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்றே தோன்றியது. அவளை எழுப்பி விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடனே அமைதியாக அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து நகன்று விட்டான். எல்லாக்காரியங்களும் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது தான் சிவாவுக்கு இனி அந்த வீட்டில் உலகம்மை சித்தி இல்லை என்ற உணர்வு வந்தது. அவனை உடைந்து அழுதான். சிவகாமியும், ராஜியும், உமாவும் சேர்ந்து அழுதார்கள். இப்போதும் கூட அதை நினைத்ததும் சிவாவின் கண்கள் கலங்கின.
 சிவா அப்படியே நடந்து ஆத்துத்தெரு வழியே இசக்கியம்மன் கோவில் படித்துறைக்குப் போனான். மதிய நேரம் என்பதால் ஆற்றில் ஆட்கள் இல்லை. அங்கே இங்கே என்று ஒன்றிரண்டு பெண்கள் துணிகளுக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்தார்கள். படித்துறையின் கடைசிப்படியில் தண்ணீரில் கால்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். தாமிரபரணியின் குளுமை உடலில் அப்படியே ஏறியது. எங்கிருந்தோ ஒரு கொக்கு தண்ணீரில் தாழப்பறந்து சென்றது. அதன் இறக்கைகள் அடிக்கிற சத்தம் கூட கேட்கிற நெருக்கத்தில் பறந்தது. சிவா அந்தக் கொக்கு பறந்தவழியே கண்களைப் போகவிட்டான். தூரத்தில் மஞ்சள் நிறத்தில் சேலை கட்டிய ஒரு பெண் குறுக்குமாராப்பு கட்டிச் சேலையை உணத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாய் தண்ணீரில் குறுக்கே பாய்ந்து இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போய்க் கொண்டிருந்தது. ஒடுங்கி ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணியின் நடுவில் இப்போது கருவேலமரங்களும் வந்து விட்டன. ஏன் இப்படி திடீரென்று உலகம்மைசித்தி போய் விட்டாள்? இன்னும் அவள் செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது? என்ன அவசரம் அவளுக்கு? என்று கோபம் கோபமாய் வந்தது. கால்களில் மீன்கள் வந்து நறுக் நறுக்கென்று கடித்துக் கொண்டிருந்தன. லேசாக வலித்தாலும் கால்களை அசைக்கவில்லை. சித்தியின் ஞாபகங்கள் பொங்கி வந்தன.
கலைஞானம் சாரிடம் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக்கூடாது என்று தோன்றியது. அவர் பாவம் என்ன செய்வார்? ஆனால் அவர் பேசிய விஷயம் இருக்கிறதே அதை அவனால் தாங்கமுடியவில்லை.
“ சிவா உங்க சித்தப்பாவுக்கு ரெண்டாவது கலியாணம் பண்ணிரலாம்.. பொம்பிளைப்பிள்ளைகளைக் கரையேத்த வீட்டுல பொம்பிளையாளுக இருந்தாத்தான நல்லாருக்கும்.என்ன சொல்றே..”
அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடியில் தான் அவனறியாமல் வார்த்தைகள் வந்து விட்டன. என்ன மனிதர்கள்? ஆனால் கந்தையா சித்தப்பா தான் இதை ஆரம்பிக்கச் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகமும் வந்தது. திருமணவயதில் மூன்று பொம்பிளைப்பிள்ளைகளை வைத்துக் கொண்டு எப்படி இப்படி யோசிக்க முடிந்தது?
தலையை உலுக்கினான். அவன் தலையிலிருந்து ஒரு சரக்கொன்றைப்பூவிதழ் தண்ணீரில் விழுந்தது. சுளித்தோடும் நீர்வழியே அது சுழன்று சுழன்று போய்க் கொண்டிருந்தது. யாராவது தேடி வருவார்களோ என்று பாதையைத் திரும்பிப்பார்த்தான். ஒருவர் கூட நடந்து வராத அந்தப்பாதையின் தனிமையைப் பார்க்கும்போது சிவாவின் மனதில் துக்கம் பொங்கியது. கைகளைக் குவித்து ஆற்றில் ஒரு கை நீரள்ளினான். அப்படியே வாய்க்கருகே கொண்டுபோய் சத்தமாய் உறிஞ்சிக்குடித்தான். இன்னொரு முறை நீரள்ளி கைவிரல் இடுக்குகள் வழியே ஒழுக விட்டுக்கொண்டே நடந்தான். குளித்து முடித்து போகும்போது உலகம்மை சித்தி அப்படிச் செய்வாள். கடைசிச் சொட்டு நீர் வரை சொட்டிக்கொண்டே ஈரச்சேலை கால்களைத் தட்ட மணலில் கால் புதைத்து நடந்து போவாள்
வெயிலில் பொசுங்கிய ஆற்றுமணலில் எத்தனை காலடித்தடங்கள்! குறுக்கும் நெடுக்குமாய் மேலும் கீழுமாய் ஒன்றின் மீது ஒன்றாய் எத்தனையெத்தனை! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆற்றை நோக்கியே எவ்வளவு மனிதர்கள்  நடந்திருக்கிறார்கள். எத்தனை முறை நடந்திருக்கிறார்கள். ஏன் உலகம்மை சித்தியே கூட ஆற்றைப்போல தான். அவளைத் தேடி எல்லோரும் வந்தார்கள். திருநெல்வேலிக்கு வந்தால் உலகம்மை சித்தி வீட்டுக்கு வராமல் யாரும் போகமாட்டார்கள். அவளுடன் இரண்டு வார்த்தைகளைப் பேசி, பாடுகளைச் சொல்லி, ஒரு வாய்க்காப்பித்தண்ணி குடித்து விட்டுப் போனால் அவர்களுக்கு எவ்வளவோ நிம்மதி. இறக்கிவைக்கும் அத்தனை சுமைகளையும் கழுவிச் சுத்தப்படுத்துகிற ஆறாக இருந்தாள் உலகம்மை சித்தி. எந்த அழுக்கும் அவளிடம் தங்கவில்லை. எல்லோரும் அவரவர் அந்தரங்கரகசியங்களைச் சொல்லி பாவமன்னிப்பு கேட்கும் பள்ளியின் பாதர் போலவும் இருந்தாள். யாருடைய ரகசியங்களையும் அவள் யாரிடமும் சொன்னதில்லை. உன் ரகசியங்கள் தெரியுமே என்ற ஏளனமும் இல்லை. அவள் எல்லோருக்கும் ஆலோசனைகள் சொன்னாள். அவர்களுடைய பிரச்னைகளிலிருந்து விடுபட அவளுக்குத் தெரிந்த வழிகளைச் சொன்னாள். அந்த வழிகளெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவள் சொன்னபோது அது புதியதாகத் தெரிந்தது. களங்கமில்லாத அவளுடைய வார்த்தைகளில் இருந்த பரிசுத்தமே அவர்களை ஆற்றுப்படுத்தியது.
 உலகம்மைச் சித்தியும் ஆத்துக்கு தினமும் இரண்டுமுறையாவது வராமல் போகமாட்டாள். இந்தக் காலடித்தடங்களில் அவளுடைய காலடித்தடம் எது? பதினைந்து நாட்களுக்கு முன்னால் நடந்து வந்து இந்த படித்துறையில் தான் துவைத்துக் குளித்தாள். தாமிரபரணி எத்தனை மனிதர்களைப் பார்த்திருக்கிறது! எவ்வளவு பேரின் அழுக்குகளைக் கழுவியிருக்கிறது! எவ்வளவு பேரின் மகிழ்ச்சியை, துக்கத்தை, அழுகையை நீரில் கரைத்து ஓடவிட்டிருக்கிறது! மனிதர்களின் அத்தனை பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், பழி, அன்பு, பாசம், நேசம், எல்லாவற்றையும் தாங்குகிற வல்லமை தாமிரபரணிக்கு இருந்ததே. என் பிள்ளைகள். என் பிள்ளைகள் என்று வாரி வாரி அணைத்துக்கொண்டதே. ஒருகை நீரில் மனிதர்களின் வாழ்க்கையே தெரிந்த மாயத்தை என்ன சொல்ல முடியும்?  மணலில் பதிந்த காலடித்தடங்களில் என்னுடைய காலடி இது என்று யாராலாவது அடையாளம் சொல்லமுடியுமா? வாழ்ந்து மறைந்த எத்தனையோ பேரின் காலடித்தடங்களைப் போல உலகம்மைச் சித்தியின் காலடித்தடமும் மறைந்து விட்டது. அவனை அறியாமல் அவன் பெருமூச்சு விட்டான்.
அன்று அவன் வீடு திரும்பியபோது வெளியூர் உறவினர்கள் எல்லோரும் போய் விட்டிருந்தார்கள். வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் வருகிற அரவம் கேட்டு ராஜி தான் சாப்பாடு எடுத்து வைத்தாள். அவன் மௌனமாகச் சாப்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்பி விட்டான்.
அதன் பிறகு எவ்வளவோ காரியங்கள் நடந்தேறிவிட்டன. சிவகாமி ராஜபாளையத்திலும், ராஜி விழுப்புரத்திலும், உமா திருவனந்தபுரத்திலும் திருமணம் முடிந்து போய் விட்டார்கள். சிவா எல்லோருடைய திருமணத்துக்கும் போயிருந்தான். அதன்பிறகு திருநெல்வேலி வருவது குறைந்து போய் விட்டது. சென்னையிலிருந்து சிவகாசி என்ற எல்லையோடு அவன் பிரயாணம் முடிந்து போனது. அப்படியே கலியாணம், காதுகுத்து விசேசம் என்று திருநெல்வேலி வந்தாலும் வந்த வேலை முடிந்ததும் ஊருக்குக் கிளம்புகிற மாதிரியே சூழ்நிலை அமைந்து விட்டது. கந்தையா சித்தப்பா வீட்டுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. உலகம்மை சித்தி இறந்த பிறகு ஒன்றிரண்டு தடவை வந்திருக்கிற மாதிரி ஒரு தோணல் அவனுக்கு இருந்தது. வீட்டுக்குப் போகிற பாதையில் ஏராளமான கட்டிடங்கள் புதிது புதிதாக முளைத்திருந்தன. முன்பு வழிநெடுவும் இருந்த மரங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அந்தச் சாலையின் அழகே ஓங்கி உயர்ந்து நிற்கும் மருதமரங்கள் தான். அடி முதல் பாதம் வரை பசுமையான அந்த மரத்தைப் பார்த்தாலே மனம் குளிர்ந்து விடும். இப்போது எல்லாம் வணிகவளாகங்களாகவும், பெரிய பெரிய பங்களாக்களாகவும் மாறியிருந்தன. ஆனால் அந்தக்கட்டிடங்களுக்கு அருகிலும் சந்து பொந்துகளிலும் கருவேலஞ்செடிகள் அடர்ந்து கிளைவிட்டிருந்தன. சாலையில் மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடுகள் கருவெலஞ்செடிகளில் எக்கு போட்டு காய்களையும் கொழுந்து இலைகளையும் கடித்துக் கொண்டிருந்தன.
அவன் கந்தையா சித்தப்பா வீடு இருக்கும் தெருமுக்கில் திரும்பினான். எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் காம்பவுண்டுக்கு வெளியில் நின்றிருந்த சரக்கொன்றை மரத்தைக் காணவில்லை. அந்த இடத்தில் காம்பவுண்டு சுவரை இடித்து ஒரு பெட்டிக்கடை வாசல் முளைத்திருந்தது. அவன் காம்பவுண்டுக்குள் நுழைந்தான். கந்தையா சித்தப்பாவின் வீடு மேலக்கடைசியில் இருந்தது. வாசல் கதவு ஓரஞ்சரித்திருந்தது. அவன் மனதில் இனம்புரியாத ஒரு உணர்வு வயிற்றிலிருந்து தொண்டைக்கு ஏறிக் கொண்டிருந்தது. வாசலில் செருப்பைக் கழட்டினான். கதவை மெல்லத் திறந்தான். பாட்டலையில் ஒரு ஈசிசேரில் கந்தையா சித்தப்பா உட்கார்ந்திருந்தார். அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவன் உள்ளே வராண்டாவைக் கடந்தபோது தான் நிமிர்ந்து பார்த்தார். முதலில் புரியாதமாதிரி முழித்தார். சில நொடிகளில் அடையாளம் தெரிந்த பாவனையில் உதடுகளை பக்கவாட்டில் அசைத்து புன்னகைத்தார்.
“ வா சிவா..”
அவருக்கு எதிரே கலைஞர் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனலில் டாமும் செர்ரியும் ஒருவரையொருவர் விரட்டிக்கொண்டிருந்தார்கள். டி.வி.க்கு மேலே உலகம்மை சித்தியின் சட்டமிடப்பட்ட படம் தொங்கிக் கொண்டிருந்தது. படச்சத்தின் தலையில் கதம்பமாலை சூடப்பட்டிருந்தது. உலகம்மை சித்தி நெற்றியில் சந்தனம் குங்குமத்துடன் தன்னுடைய லேசான தெத்துப்பற்கள் தெரியச் சிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். சாயங்காலம் தான் பூ போட்டிருக்கவேண்டும். அவன் வாங்கி வந்திருந்த பழங்களை சித்தப்பாவிடம் நீட்டினான். கந்தையா சித்தப்பா இன்னமும் டி.வியையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்படியே சுவர் ஓரமாக பையை வைத்து விட்டு,
“ சுகமா இருக்கியளா சித்தப்பா “
என்று கேட்ட சிவா அருகிலிருந்த ஒரு முக்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். அவருக்குக் காது சரியாகக் கேட்கவில்லையோ அல்லது டி.வியில் கவனமாக இருந்ததாலோ அவர் பதில் சொல்லவில்லை. அவன் மீண்டும் சத்தமாய் அதே கேள்வியைக் கேட்டான். அந்தக் குரலைக் கேட்டு தலையைத் திரும்பி தலையசைத்தார். மறுபடியும் டி.வியைப் பார்க்கத் தொடங்கினார். சிவாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டில் சாமான்களே இல்லை. மூணுபத்தி வீடு தான் என்றாலும் மிகப்பெரிய வெட்டவெளியாகத் தெரிந்தது. திடீரென ஞாபகம் வந்தது போல,
“ புள்ளைக.. வீட்டுக்காரி நல்லா இருக்காகளா? “
“ நல்லா இருக்காக.. சித்தப்பா.. “
டி.வியில் விளம்பரம் ஓடியது. அவர் நிமிர்ந்து உலகம்மை சித்தியின் படத்தைப் பார்த்தார். அவன்,
“ செவாமி, ராஜி, உமா, எல்லோரும் நல்லாருக்காகளா? “
“ ம்ம் நல்லாருக்காகப்பா..”
“ ஏன் நீங்க தனியே இருக்கீங்க? பிள்ளைக கூடப் போய் இருக்கவேண்டியதானே..”
“ அதெல்லாம் சரிப்படுமா? மருமகன் வீட்டுல போய் மாமனார் உட்கார்ந்து சாப்பிட முடியுமா? இங்கே ஒண்ணும் பிரச்னையில்லை…வண்டி ஓடுது..மூட்டு வலி இருக்கு உக்கார எந்திரிக்க கஷ்டமா இருக்கு அவ்வளவு தான் மற்றபடி ஒண்ணுமில்லை உலகம்மை இருக்கா பாத்துக்கிடுவா”
அவருடைய குரல் தளர்ந்திருந்தது. அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எல்லாவிஷயங்களும் தெரியும் என்றாலும் பேசுவதற்கு ஏதாவது வேண்டுமே. அவன் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தான். தாகமாக இருந்தது. எழுந்து அடுக்களைக்குப் போனான். நாலே நாலு பாத்திரங்கள் மட்டும் இருந்தன. சிறியதொரு எவர்சில்வர் சருவப்பானையில் தண்ணீர் இருந்தது. தண்ணீரை எடுத்துக் குடித்தான். அடுப்பில் இரண்டு லிட்டர் குக்கர் மூடாமலிருந்தது. அவன் அதை எடுத்துப் பார்த்தான். மத்தியானம் சாப்பிட்டபிறகு மீதமிருந்த சோறு எறும்புகள் வர ஆரம்பித்திருந்தன.
“ சித்தப்பா சோத்துல தண்ணி ஊத்திரவா..” என்று கேட்டான். அவர் தலையாட்டினார். திறந்திருந்த ஊறுகாய் பாட்டிலை மூடி வைத்தான். அடுப்படி முழுவதும் கறையாக இருந்தது. அடுப்புக்கு மேல் நூலாம்படை அடைந்து கிடந்தது. அங்கணத்தில் தட்டுகளும் தம்ளரும் குழம்புச்சட்டியும் கழுவக்கிடந்தன. நேற்றைய பாத்திரங்கள் போல. அவனுக்கு வெறுமையுணர்வு தோன்றியது. மறுபடியும் வந்து முக்காலியில் உட்கார்ந்தான். கந்தையா சித்தப்பா இப்போது சேனலை மாத்தியிருந்தார். அவனும் சில நிமிடங்கள் டி.வி.யைப் பார்த்தான். போகலாம் என்று தோன்றியது. எட்டு மணிக்கு பஸ். ஏழு மணிக்கு ஜங்ஷன் போய் சாப்பிட்டு விட்டுப் போகச் சரியாக இருக்கும். எழுந்து ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த கைக்கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான். சீப்பினால் தலைவாரினான். திரும்பி உலக்ம்மை சித்தியைப் பார்த்தான். அவள் இன்னமும் சிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“ சித்தப்பா போய்ட்டு வாரேன்..எட்டு மணிக்குப் பஸ்ஸு..” என்றான். அவர் டி.வி.யிலிருந்து முகத்தைத் திருப்பி மறுபடியும் தலையாட்டினார். அவன் திரும்புவதற்குள் அவர் டி.வியைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். அவனுடைய மனசே சரியில்லை. குழப்பமாக இருந்தது.
அவன் காம்பவுண்டை விட்டு வெளியே வந்து சரக்கொன்றை மரம் நின்ற இடத்தில் சில நொடிகள் நின்றான். அவனுடைய தலைக்கு மேலே சரம் சரமாய் பூக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மரம் ஒரு குடை மாதிரி நிழலாய் விரிந்திருந்தது. நிமிர்ந்து பார்த்தான். அவன் மீது கொத்தாய் பூக்கள் உதிர்ந்தன. உலகம்மை சித்தியின் ஞாபகம் மின்னலென வந்து போனது.
பஸ் புறப்பட்டது. சன்னல் வழியே வீசிய காற்றில் அவன் தலையில் இருந்து எதுவோ அவன் மடியில் விழுந்தது. அவன் கையில் எடுத்தான். சரக்கொன்றைப்பூவின் மஞ்சள் இதழ் அவனைப் பார்த்துச் சிரித்தது.

நன்றி - பேசும் புதிய சக்தி

மீசை


 மீசை

உதயசங்கர்

முதன் முதலாக கிட்டு அதைச் சொன்னபோது கோபால் நம்பவில்லை. அடங்காத கோபத்துடன்  கிட்டுவோடு சண்டைக்குப் போனான். அவனுடன் இனி பேசவே கூடாது என்று முடிவெடுத்தான். பிறகென்ன?
 “ டேய் உங்கம்மாவுக்கு மீசை இருக்குடா.. “
என்று சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது. அதுவும் மார்கழி மாதம் திருவாதிரையன்று விடியற்காலை மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து எழுப்பி வெந்நீர் போட்டுக் குளித்து விட்டு பெரிய கோவிலில் செண்பகவல்லியம்மனைக் கும்பிட உள்ளே நுழையும்போது, வெளியே பெரிய மீசையுடன் இருந்த துவாரபாலகர்களைப் பார்த்த கிட்டு அதைச் சொன்னான். இதைச் சொல்வதற்காகத்தான் கிட்டு வீட்டுக்கு வந்து அவனை எழுப்பிக் கூட்டிக் கொண்டு வந்தானோ. இவ்வளவு நாளாய் ராமலிங்கம் தான் வீட்டுக்கு வருவான். ஆனால் இன்றைக்கு ஆச்சரியமாய் கிட்டு வந்து கூப்பிட்டபோது கோபாலுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. பள்ளிக்கூடத்தில் கிட்டு தான் எப்பவும் பர்ஸ்ட் வருவான். கோபால் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் மூன்றாவது இடத்துக்கு மேலே உன்னி ஏற முடியவில்லை. அதனால் கிட்டுவின் நெருக்கம் அவனுக்குக் கணக்கில் இருக்கும் சில தயக்கங்களைப் போக்க உதவும் என்று நினைத்தான். அதற்காக ராமலிங்கத்தின் நட்பைக்கூட தியாகம் செய்யத்தயாராக இருந்தான். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த அந்த அதிகாலைப் பொழுதில் தான் கிட்டு அப்படிச் சொல்லிவிட்டான். அதைக் கேட்டவுடன்
“ அதெல்லாம் கிடையாதுடா…”
“ உண்மைக்குமே.. என்னோட அம்மா தான் சொன்னா. செல்வியக்காவுக்கு மீசை இருக்கு.”
இதைக்கேட்ட கோபால் கோபத்துடன்,
“ இருந்தா என்ன? “ என்றான்.
“ பொம்பிளைக்கு மீசை இருக்கக்கூடாதுடா..மண்டு..” என்று சொல்லிச்சிரித்தான் கிட்டு. அதைக்கேட்ட கோபால் கிட்டுவை விட்டு விட்டு வேகமாக நடந்தான். பெரிய படிப்ஸ்னு தலைக்கனம். வாய்க்கு வந்ததைச் சொல்றான். அடுத்த பரீட்சையில பாரு நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குறேனா இல்லையான்னு என்று மனசுக்குள் கருவிக்கொண்டே வீட்டுக்குப் போய்விட்டான்.
. வீட்டுக்குப் போனதும் எழுந்து புறவாசலில் பல் தேய்த்துக்கொண்டிருந்த அம்மாவின் முகத்துக்கு நேரே போய் உதடுகளுக்கு மேல் உற்றுப்பார்த்தான். மஞ்சளாய் மெல்லிய பூனை ரோமங்கள் தெரிந்தன. உற்றுப்பார்த்தால் மட்டும் தான் அதுவும் தெரியும். அம்மா அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவன் சிரிக்காமல் உள்ளே போய்விட்டான். போகும்போது வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே போனான்.
“ என்ன ஆச்சி இந்தப் பயலுக்கு… “ என்று அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த அம்மா வாயைக் கொப்பளித்தாள். காலையில் அவளைப் பார்த்ததும் அப்படியே அடிவயிற்றில் முகம் பதிய கட்டிப்பிடிப்பான். அப்படியே தலையைத் தூக்கி,
“ அம்மா பூவாசனை அடிக்கும்மா உங்கிட்ட..” என்று முகத்தை உயர்த்திச் சிரிப்பான். அம்மா கோபாலின் தலையைக் கோதி அவன் தலையிலோ, நெற்றியிலோ, கன்னத்திலோ, முத்துவாள். கூச்சத்தில் கெக்க்க்க்கே என்று சிரிப்பான் கோபால். கோபாலுக்கு அவனுடைய  அம்மாவைப் பற்றி அவ்வளவு பெருமை. மஞ்சள் நிறத்தில் பச்சை நரம்புகள் வெளியே தெரிய ஒளிவீசிக் கொண்டிருப்பாள். அவளுடைய எல்லாநடவடிக்கைகளிலும் ஒரு அழகும் கம்பீரமும் இருக்கும். அவள் நடக்கும்போது மற்ற பெண்களைப்போல கைகளை ஆட்டிக் கொண்டோ, இடுப்பை வளைத்துக் கொண்டோ, முதுகைக் கூனிக்கொண்டோ, கால்களை ஒடுக்கிக்கொண்டோ, நடக்க மாட்டாள். நிமிர்ந்து நேராகக் கால்களை முன்னால் நீட்டி நடப்பாள். பள்ளிக்கூடத்தில் என்.சி.சி. மாணவர்கள் நடப்பார்களே அந்த மாதிரி. என்ன அவர்களை மாதிரி கைகளை வீசி நடக்க மாட்டாள் அவ்வளவு தான். தெருவில் அவளைப்பார்த்தவுடனே நின்று பேசாமல் போகிறவர்கள் குறைவு.
“ என்ன செல்வி எங்கே தூரமா? “ என்று கேட்காதவர்கள் கிடையாது. அவளிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டால் போதும் என்பது போல எல்லோரும் நடந்து கொள்வார்கள். திரும்பி ஒரு தடவையாவது பார்க்காமல் போகிறவர்கள் யாருமே கிடையாது. அதனால் அம்மா அலுவலகத்துக்கு ஒரு அரைமணிநேரமாவது முன்னால் கிளம்பிவிடுவாள். தெருவில் உள்ள அத்தனை பேருக்கும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பங்கள், என்று எழுதிக்கொடுப்பது அம்மா தான். அம்மாவுடன் வெளியே போவது என்றால் கோபாலுக்கு அவ்வளவு ஆனந்தம்! அம்மாவின் ஆகிருதி பிரம்மாண்டமாய் இருந்தது என்றால் அதில் நிழலாக நடமாடிக்கொண்டிருந்தார் அப்பா. அப்பாவும் மீசை வைத்ததில்லை. இப்படி அநியாயமாக கிட்டுப்பயல் அம்மாவைப்பற்றிச் சொல்லியிருக்கானே. அன்று முழுவதும் பல்வேறு சமயங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில், அம்மாவின் முகத்தை உற்று உற்றுப் பார்த்தான் கோபால்.
மறுநாள் பள்ளிக்கூடம் போனதும் கிட்டுவிடம் சண்டை போட்டான். இரண்டுபேரும் வகுப்பறையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். தேவகி டீச்சர் வந்து இரண்டு பேருக்கும் அடிஸ்கேலால் இரண்டு அடி போட்டு உட்காரவைத்தாள்.
“ எதுக்குடா சண்டை போட்டீங்க? “
“ இல்ல டீச்சர் எங்கம்மாவுக்கு மீசை இருக்குன்னு இவன் சொல்றான்.. டீச்சர்..”
“ இல்ல டீச்சர் எங்கம்மா தான் சொன்னாங்க.. கோபாலோட அம்மாவுக்கு மீசை இருக்கு…”
டீச்சருக்குச் சிரிப்பு வந்தது. அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிரித்துக்கொண்டே,
“ உட்காருங்கலே.. ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி பண்ண வந்துட்டாங்க..”
 டீச்சரின் முகத்திலும் மீசை அரும்பியிருந்ததை கோபால் பார்த்தான். அந்தச் சண்டையுடன் கிட்டுவுடன் பேசுவதை நிறுத்தி விட்டான். ஆனால் எந்தப் பெண்ணைப்பார்த்தாலும் அவளுடைய முகத்தில் மீசை இருக்கிறதா என்று பார்க்கத்தொடங்கினான். ஒருநாள் அரைக்கீரையைக் குப்பை பார்த்துக்கொடுக்க குச்சுவீட்டு கூனிப்பாட்டியிடம் கொடுப்பதற்காகப் போனான். அவளுக்கு வெள்ளை நிறத்தில் மீசை முடிகளும் நாடியில் சில முடிகளும் முளைத்திருந்தன.  இவர்கள் வீட்டுக்குப்பின்னால் இருந்த சுனந்தாக்கா அடிக்கடி அம்மாவிடம் வந்து ஏதாவது சமையல் டிப்ஸ் கேட்டுக் கொண்டேயிருப்பாள். அவளுடைய உதட்டுக்கு மேலே அங்கங்கே பூனை முடி முளைத்திருந்தது. அவள் விரல்களால் அதைப் பிடுங்கிக் கொண்டேயிருந்தாள். கோபால் செல்வியத்தை வீட்டுக்கு பலகாரம் கொண்டுபோய் கொடுக்கப்போகும்போது அத்தை அப்பாவை மாதிரி ஷேவிங் செய்து கொண்டிருந்தாள். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நந்தினியக்கா ஒரு ஞாயிற்றுக்கிழமை உடம்பு முழுவதும் ஒரு கிரீமைப் பூசிக் கொண்டிருந்தாள். அதைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.
“ எதுக்குக்கா இது ? “ என்று கேட்டான் கோபால்.
“ உடம்பு முழுசும் ஒரு முடி இல்லாம வழுவழுன்னாயிரும்…”
“ யெக்கா.. எனக்கும் கொஞ்சம்.. “
“ போடா லூசு.. இதை ஆம்பிளைங்க தேய்க்கக்கூடாது…”
“ ஏங்க்கா? “
“ உனக்கென்னடா.. நீ பெரிய மீசையே வைக்கலாம்.. உன்னிஷ்டப்படி நடந்துக்கலாம்.. நீ சொல்றத எல்லோரும் கேப்பாங்க.. உனக்கென்ன ராஜா? “
என்று கேலி செய்கிற மாதிரி சிரித்தாள். கோபாலுக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் சிரித்து வைத்தான்.
அம்மா எப்போதும் சனிக்கிழமை ராத்திரி மனசே இலகுவானது மாதிரி இருப்பாள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வரும் சுகமான உணர்வு. அன்று தெருவிலும் விளையாட பையன்கள் இல்லை. வாசலில் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள் அம்மா. கோபால் அம்மாவின் மடியில் தலை வைத்துப்படுத்திருந்தான். அம்மா அவன் தலைமுடியில் கைவிட்டு அளைந்து கொண்டிருந்தாள். வானத்தில் நட்சத்திரங்கள் கொய்யென்று மொய்த்துக்கிடந்தன. கோபால் அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக்குறைந்த ஒளியில் அம்மாவின் மஞ்சள்முகம் தன் உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டிருந்தது. அவளுடைய உதடுகள் துடிப்பதைப் போல நடுங்கின. அவள் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நானுனக்கு
அந்தப்பாடலை அவன் இதுவரை கேட்டதில்லை. அந்தப்பாடலை அவள் தன் தொண்டையிலிருந்து பாடவில்லை. அவள் இதயத்திலிருந்து பாடிக்கொண்டிருப்பதைப் போல குரல் அவ்வளவு இழைந்து வந்தது. கோபால் அமைதியாக இருந்தான். அவள் அவனுடைய நெஞ்சில் கை வைத்திருந்தாள். அவளுடைய விரல்கள் குரலின் அதிர்வுக்கேற்ப துடித்தன. அந்த விரல்களில் அந்தக்குரலின் உயிர்த்துடிப்பை உணர்ந்தான். அம்மா அவனை குனிந்து பார்க்கவில்லை என்றாலும் அவனைப் பார்த்துக் கொண்டேயிருப்பது போன்ற உணர்வு அவனுக்குத் தோன்றியது. அம்மாவின் உடலிலிருந்து  தாழம்பூவின் வாசனை வந்து கொண்டிருந்தது. அந்த வாசனைதான் அந்தப்பாடலாகக் கிளம்பியதோ அல்லது அந்தப்பாடல் தான் அந்த வாசனையைக் கிளப்பியதோ என்று சொல்லமுடியவில்லை. பாடல் நின்றதும் அம்மாவின் முகம் குனிந்தது. அந்தக் கண்கள் பளபளத்தன. கோபால் கண்களை மூடாமல் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். வலது கையினால் அம்மாவின் முகத்தைத் தடவினான். அவள் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு,
“ என்னடா ராஜா..”
அம்மாவின் குரலில் அத்தனை அன்பு தேனைப்போலச் சொட்டிக்கொண்டிருந்தது. அவனுக்கு அதைத் தாங்கமுடியவில்லை. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை புளகாங்கிதம் அடைந்தான். தன்னையறியாமலே தலையை அசைத்தான். ஆனந்தமான அந்தத் தருணத்தை அவனால் தாங்கமுடியவில்லை. கண்கள் செருகியது. அப்படியே உறங்கிப்போனான். அம்மா அவனுடைய நெஞ்சில் லேசாகத் தட்டிக்கொடுத்தபடி வானத்தைப் பார்த்தாள். மீசை நட்சத்திரங்கள் தெரிந்தன. தமிழ்ச்செல்வியின் உதடுகள் புன்னகை பூத்தன.
தமிழ்ச்செல்வியின் அப்பா பெரிய மீசை வைத்திருந்தார். அவருடைய பெரிய உதடுகளையும் மூக்குக்குக் கீழே இடைவெளியின்றியும் அடர்ந்து வளர்ந்திருக்கும். அவளுக்கு அந்த மீசையை மட்டுமல்ல அப்பாவையும் ரொம்பப்பிடிக்கும். அப்பா மீசையை ஒதுக்குவதில்லை. அப்படியே அதுபாட்டுக்கு வளர்ந்து கொண்டிருக்கும். அந்த மீசை அப்பாவுக்கு ஒரு முரட்டுத்தோற்றத்தைக் கொடுத்தது. எல்லோரும் அவரிடம் பேசப்பயந்தார்கள். அவர் சிரித்தால்கூட வெளியில் தெரியாது. அம்மா தேவையே இல்லாமல் அப்பாவைப் பார்த்துப் பயந்து கொண்டிருந்தாள். அதற்கு அப்பாவின் வித்தியாசமான நடவடிக்கைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர்களுடைய திருமணத்தில் வரதட்சணை என்ற பேச்சே எடுக்கக்கூடாது என்று வீட்டில் கறாராகச் சொல்லியது மட்டுமல்லாமல் மாமனாருக்கும் கடிதமாக எழுதிப்போட்டு விட்டார். கலியாணம் பதிவுத்திருமணமாக நடத்த வேண்டும். தாலிகூடாது. பட்டுப்புடவை வேண்டாம். எந்த வைதீகச்சடங்கு முறைகளும் நடத்தக்கூடாது திருமணச்செலவுகளை இரண்டு வீட்டாரும் பகிர்ந்து கொள்ளலாம். மிகக்குறைந்த உறவினர்களை, நண்பர்களை மட்டுமே அழைக்க வேண்டும். மொய், அன்பளிப்பு, வாங்கக்கூடாது. என்று ஏராளமான கட்டுப்பாடுகளைச் சொன்னதும் அப்படியே பயந்து போனார்கள். சரியான ஒரு அரைலூசைத் தன் தலையில்  கட்டுவதாகச் சொல்லி என்று அம்மாவிடம் அழுதாள்.
அப்பாவின் எண்ணப்படி சில நடந்தன. பல விஷயங்கள் நடக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அப்பா ஒரு மறை கழன்றவர் என்ற எண்ணம் அம்மாவிடமிருந்து கடைசி வரை மறையவே இல்லை. திருமணம் முடிந்த மறுவாரம் அலுவலகம் விட்டு வரும்போது அம்மாவுக்கென்று ஒரு பேண்ட் சட்டை வாங்கி வந்து போடச்சொன்னார். இனிமேல் சேலை கட்டக்கூடாது. தலைமுடியை வெட்டச்சொன்னார். அவ்வளவு தான் உடனே மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள். அப்பா அப்புறம் அதைப்பற்றிப் பேசவில்லை. ஆனால் ஒருவாரத்தில் இரண்டுபேரின் வீட்டிலிருந்தும் பெரியவர்கள் பஞ்சாயத்து பண்ண வந்து விட்டார்கள். கடைசியில் அம்மாவின் விருப்பமில்லாமல் அப்பா அதிரடியாக எதுவும் செய்யக்கூடாது என்று முடிவானது. அதன்பிறகு அப்பா இந்த மாதிரியான புதுமைகளை அம்மாவிடம் செய்யத்துணியவில்லை. ஆனால் அம்மாவுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். அம்மாவிடம் கேட்காமல் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை. அம்மாவும் அப்பாவுக்குப் பழகிக் கொண்டாள். கோபத்தின் நிழலைக்கூட அப்பாவிடம் அவள் பார்க்கவில்லை. அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் எப்போதும் சண்டைக்காடாகக் கிடக்கும்போது அவளுடைய வீடு அமைதியாக இருக்கும். அப்பா புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பார். தெருக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில சமயம் அப்பாவும் சேர்ந்து விளையாடுவார். வேறு எந்த சத்தமும் இருக்காது.
ஒரு தடவை பக்கத்து வீட்டுக் கோகிலாக்காவை அவளுடைய கணவன் செல்வம் தண்ணியடித்து விட்டு வந்து அவள் அவனைக் கேட்காமல் சமையல் செய்ய நல்லெண்ணெய்  நூறு வாங்கிவிட்டாள் என்று விறகுக்கட்டையால் அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தான். தெருவே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது தான் அலுவலகம் விட்டு வந்திருந்த அப்பா விறு விறுவென்று செல்வத்தைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினார். அவன் கையிலிருந்த விறகுக்கட்டையைப் பிடுங்கி எறிந்தார். கோபமாய் அப்பாவைப் பார்த்து,
“ எங்குடும்ப விஷயத்தில தலையிட நீ யாரு? “ என்று கேட்டு முடிப்பதற்குள் செல்வத்தின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். செல்வம் அப்படியே ஒடுங்கி நின்று விட்டான். அப்பாவின் கோபத்தை அப்போது தான் அம்மா பார்த்தாள். இரண்டு நாட்கள் செல்வம் முறைத்துக் கொண்டு திரிந்தார். அப்புறம் அப்பாவே அவரை அழைத்துச் சமாதனாப்படுத்தி விட்டார். பலநேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அப்பாவிடம் ஆலோசனை கேட்பார்கள். எந்தப்பிரச்னையாக இருந்தாலும் அப்பா வந்து விட்டால் தெருக்காரர்கள் அவரைக் கலக்காமல் முடிவெடுப்பதில்லை. அம்மாவுக்கு அப்பாவின் ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் தெரிய அவளுக்கு பெருமையாக இருந்தது.
அம்மாவிடம் மட்டுமல்ல தெருவில் அந்தச் சிறிய ஊரில் அவர் வேலை பார்த்த பஞ்சாயத்து அலுவலகத்தில் அப்பா எப்போதும் எல்லோராலும் விரும்பப்படுகிறவராக இருந்தார். அப்பாவின் ஆலோசனை எல்லோருக்கும் தேவையிருந்தது. அப்பா எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக யோசித்து தர்க்க நியாயங்களோடு முன்வைப்பார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் சொல்வதை மறுக்க முடியாமல்,
“ எல்லாம் அந்த ஈரோட்டு தாடிக்காரக்கிழவன் கெடுத்த கெடுதலை…”
என்று அவருக்குப் பின்னால் பேசுவார்கள்.
தமிழ்ச்செல்வி பிறந்தபிறகு அப்பா தினம் ஒருமணிநேரமாவது அவளிடம் பேசிக்கொண்டிருந்தார். அவளுக்குப் புரிகிறதோ இல்லையோ அவர் பேசிக்கொண்டிருந்தார். இந்த உலகத்தைப் பற்றி, பெண்களைப் பற்றி, கடவுள்களைப் பற்றி, சாதி, மதங்களைப் பற்றி, பேசுவார். அப்பா எதைப் பற்றித்தான் பேசவில்லை. உணர்ச்சி பொங்கும் அந்த முகமும், பேசும்போது துடிக்கும் அந்த மீசையும் அப்படியே கல்வெட்டாய் மனசில் பதிந்து விட்டது. எப்போதும் அப்பாவின் மடியில் உட்கார்ந்து அந்த மீசையைத் தடவி விட்டுக்கொண்டேயிருப்பாள் தமிழ்ச்செல்வி. அந்த மீசைக்குள்ளிருந்து தான் தைரியம் தமிழ்ச்செல்வியின் மனதில் உருக்காய் படிந்தது. அப்பாவிடமிருந்து ஏராளமாய் கற்றுக் கொண்டாள். கம்பிமுடி மாதிரி வார்வாராய் நீண்டிருக்கும் அந்த மீசை ஒரு நாள் தூக்கத்திலிருந்து எழுந்திரிக்கவில்லை. ஒரு வாரத்துக்கு தமிழ்ச்செல்வி பித்துப்பிடித்தவள் போல இருந்தாள்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆசிரியர் ஒருவர் பல்லையிளித்துக்கொண்டே அவளைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டு விட்டார். அவள் அந்த ஆசிரியரைக் கன்னத்தில் அடித்து விட்டாள். தலைமையாசிரியரிலிருந்து அனைத்து வாத்தியார்களும் அவளை மிரட்டி உருட்டினார்கள். அடுத்த வகுப்பு போகமுடியாது என்று பயமுறுத்தினார்கள். அவள் பயப்படாமல் மேலதிகாரிக்கும், கல்வித்துறைக்கும், புகார் அனுப்பினாள். அந்த ஆசிரியர் அங்கிருந்து மாற்றலாகிப் போகும்வரை விடவில்லை.
பள்ளி இறுதிவகுப்பு முடிந்ததும் கல்லூரிப்படிப்புக்காக வெளியூர் போகக்கூடாது என்று அம்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிணாள். படிப்பை இத்துடன் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கட்டும். இரண்டு மூன்று வருடங்களில் திருமணம் முடித்து விடலாம் என்றாள். தமிழ்ச்செல்வி கேட்கவில்லை. தமிழ்ச்செல்வி அம்மாவிடம்
“ அம்மா நீயா அனுப்பினா உன் சம்மதத்தோட போறேன்.. இல்லைன்னா உன் சம்மதமில்லாமப் போறேன்.. ஆனா போறது உறுதி..”
“ அப்படியே அப்பனை உரிச்சி வைச்சிப் பொறந்திருக்கு..” என்று ஒரு நாள் முழுவதும் பொருமிக்கொண்டே இருந்தாள் அம்மா. கல்லூரியில் பேரவைத்தேர்தலில் முதல் பெண்ணாக நின்று வெற்றி பெற்றாள். அந்த நாள் ஆகோஷம் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
படித்து முடித்ததும் வேலைக்குப் போனாள். உடன் வேலை பார்த்த கணேசனைக் காதலித்தாள். சாதி, மதம், பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கலியாண ஏற்பாடுகளில் அவளே முன்னின்று சபையில் பேசினாள். அப்பாவைப்போலவே கலியாணத்தின் போது பல கட்டுப்பாடுகளைச் சொன்னாள். தாலி கிடையாது. எளிமையான கலியாணம். வரதட்சணை, நகை, சீர், சீதனம், எதுவும் கிடையாது. கலியாணச்செலவு இருவருக்கும் சமப்பங்கு. அவள் அழகாக இருந்ததும் நல்ல வேலையில் இருந்ததும் பல விஷயங்களில் அவள் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளச்செய்தது. அவளுடைய கணவன் கணேசன் அவளைப் புரிந்து கொண்டான்.
எதிரே இருந்த வேம்பு பூக்களைக் கொட்டியது. வேப்பம்பூக்களின் மணம் காற்றில் மிதந்து வந்தது. அவள் அந்த மணத்தை நுகர்ந்தாள். அப்பாவின் மணம் அவள் நினைவில் பொங்கியது. ஒரு நாள் மாலை அப்பாவின் மடியில் உட்கார்ந்து அவருடைய மீசையைத் தடவிக் கொண்டே தமிழ்ச்செல்வி கேட்டாள்,
“ எனக்கு மீசை வளருமாப்பா.. வளந்தபிறகு உன்னை மாதிரி பெரிய மீசை வைப்பேன்..”
அதைக்கேட்ட அப்பா அவள் முகவாயில் தடவிக் கொடுத்தபடி, சிரித்தார்.
“ மீசைங்கிறது வெறும் மயிர்ல இல்லைடா..”
அப்போது தமிழ்ச்செல்விக்கு அது புரியவில்லை. வெளியே குளிரத்தொடங்கியது. கோபாலின் உடலில் சிறு நடுக்கம் ஏற்பட்டது. அம்மா கோபாலைத் தூக்கிக்கொண்டு உள்ளே போனாள்.
மறுநாள் காலை எழுந்தவுடன் கோபால் அம்மாவிடம் வந்து,
“ ஏம்மா பொம்பிளங்களுக்கு பெரிசா மீசை வளர மாட்டேங்கு..”
“ எதுக்குடா கேக்கிறே? ..”
“ இல்லைம்மா.. மீசை வைச்சா தான் எல்லோரும் பயப்படுவாங்கன்னு கிட்டுப்பயல் சொல்றான்..”
அம்மா சிரித்தாள்.
” நானும் பெரிசா மீசை வைச்சிருக்கேன்..” என்று விரல்களால் உதட்டுக்கு மேலே தடவிக் கொடுத்தாள்..”
கோபால் அம்மாவின் உதட்டுக்கு மேலே தடவினான்.
“ ஐயே ஒண்ணும் தெரியலை..”
“ கண்ணுக்குத் தெரியாதுடா செல்லம்! “
“ ஏன் தெரியாது? “
“ ஏன்னா மீசைங்கிறது வெறும் மயிர்ல இல்லைடா..”
என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் அம்மா. இப்போது கோபாலுக்குப் புரியவில்லை. ஆனால் அதை நாளை கிட்டுவைப் பார்க்கும்போது சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நன்றி - செம்மலர்