Thursday 5 December 2019

சரக்கொன்றைப்பூக்கள்


சரக்கொன்றைப்பூக்கள்

உதயசங்கர்

உலகம்மை சித்தி இறந்த பதினாறாவது நாள் விசேசத்துக்கு வந்த அய்யர் பிண்டம் வைத்து கருமாதிச்சடங்குகளை எல்லாம் முடித்து விட்டுப் போய் விட்டார். அய்யர் சொன்னபடி பிண்டங்களை காகங்களுக்குப் போட்டுவிட்டு தாமிரபரணியில் போய் குளித்து விட்டு வந்து வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில் தான் அது நடந்தது.
“ செருப்பைக் கழட்டி அடிப்பேன்..”  சிவாவின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் தெறித்து விழுந்தன. கந்தையா சித்தப்பாவின் நண்பரான கலைஞானத்திடம் சிவா கத்திய அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து வாசலில் இருந்த சரக்கொன்றை மரத்தின் மஞ்சள் பூக்களின் இதழ்கள் அப்படியே கீழே கொட்டின. அப்படிக் கொட்டிக்கொண்டிருந்த பூவிதழ் ஒன்று காற்றில் காம்பவுண்ட் சுவரையொட்டி உட்கார்ந்திருந்த சிவாவின் மொட்டைத்தலையில் விழுந்து முகத்தை உரசிக் கொண்டு மடியில் விழுந்தது. கோபத்தால் சிவந்து போயிருந்த அவனுடைய முகம் பூவின் ஸ்பரிசத்தால் சற்று அடங்கியது மாதிரி இருந்தது.. சிவாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளின் கனம் தாங்கமுடியாமல் கலைஞானம் அங்கிருந்து வேகமாக எழுந்து போய் விட்டார். சிவாவின் முகம் இறுகி முகத்தசைகள் விரைத்திருந்தன. மொட்டைத்தலையில் கூட ரத்தக்குழாய்கள் விம்மித் தெறித்துக் கொண்டிருந்தன. அவன் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. யாராவது தொட்டால் கூட அடித்து விடுகிற மாதிரி கை நரம்புகள் புடைத்திருக்க நிதானமாக இருப்பதற்காக உட்கார்ந்திருந்த தேக்குமர நாற்காலியை இறுகப்பிடித்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து தள்ளி மேற்கே கிடந்த பெஞ்சில் சேர்மாதேவி மாமா வெங்குவிடம் பேசிக்கொண்டிருந்த கந்தையா சித்தப்பா தலையைக் குனிந்து கொண்டார். நிமிர்ந்து சிவாவைப் பார்க்க முடியவில்லை.
யாருக்கும் என்ன நடந்தது ஏன் இந்தக் களேபரம் என்று புரியாமல் ஒருவரையொருவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டனர். கை ஜாடையால் அடுக்களையிலிருந்து என்ன என்று வேலம்மை ஆச்சி கேட்டாள். பட்டாசலில் சாப்பிடுவதற்காக இடத்தை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த சிவாவின் அம்மை கமலம் வாசல்வரை வந்து பார்த்தாள். யாரிடமும் ஒரு அனக்கம் இல்லை. அமைதியாக இருந்தது. உரித்து உப்பைத் தடவிக்கொண்டிருந்த வெயிலின் புழுக்கம் இன்னும் கொஞ்சம் அதிகமான மாதிரி எல்லோரும் ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா என்று சத்தம் எழுப்பினார்கள். செங்கோட்டை குமார் அம்மாவைப் பார்த்ததும் சாப்பிடலாமா? என்று கைஜாடையில் கேட்டான். எல்லோருக்கும் சீக்கிரம் அங்கேயிருந்து போய் விடவேண்டும் என்ற உணர்வு வந்தது. திடீரென சரக்கொன்றைமரத்திலிருந்து சிறு காற்று வீசியது. அந்தக் காற்றின் குளுமை உலகம்மைச் சித்தியின் சிரித்த முகத்தைப் பார்த்த மாதிரி இருந்தது. அப்படியொரு காற்றுக்காக காத்திருந்தவர்கள் போல எல்லோரும் சட்டைக்காலரைத் தூக்கி சட்டையைப் பின்னுக்குத் தள்ளி காற்று உடல் முழுவதும் பரவி பொங்கி வரும் வியர்வையை ஆற்றவேண்டும் என்று யத்தனித்தார்கள். எப்பேர்ப்பட்ட மனுஷி அவள்! அந்தக் கணத்தில் உலகம்மையின் முகம் நினைவுக்கு வர எல்லோரும் நீண்ட பெருமூச்சு விட்டார்கள்.
சிவாவின் முகம் கூட மாறி நிதானமாகி விட்டது. அந்தக் கணத்தில் அவனுக்கு சிவகாமியையும் ராஜியையும், உமாவையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதில் ஆச்சரியமென்ன இருக்கிறது. அவர்களுடைய துக்கத்தை யாரால் ஆற்றமுடியும்? உலகம்மைச் சித்தியைப் போல ஒரு அம்மை இப்படித் திடீரென அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டு முங்கி விடுவாள் என்று யார் தான் எதிர்பார்த்திருப்பார்கள்?
சிவாவின் பள்ளிப்பருவத்தில் அவன் லீவுக்கு வரும்போதெல்லாம் சித்தியின் மடியில் தான் தலை வைத்து படுப்பான். அவள் அவனுடைய தலைமுடிக்குள் கை விரல்களால் கோதி விடுவாளே அப்போது ஒரு மென்மையான புளகாங்கிதம் அவனுடலில் ஏற்படும். அந்தச் சிலிர்ப்பு அடங்கி சிரிப்புப் பொங்கி வரும். சித்தியின் கையைப் பிடித்து உள்ளங்கையில் முத்துவான். சித்தியும் அப்படியே அவனுடைய முகத்தைத் தடவி அவள் உதடுகளுக்குக் கொண்டு போய் முத்துவாள். அப்போது அந்த முகத்தைப் பார்க்கவேண்டுமே. லேசான தெத்துப்பல் தெரிய உதடுகள் பிரிந்து கண்களை மூடுவாள். தாய்மையின் அபூர்வமான அழகுடன் ஒளி வீசும். அந்த முகத்தை அவனால் எப்படி மறக்கமுடியும்? அவன் அந்த முகத்தைப் பார்த்தபடியே உறங்கி விடுவான். இப்போதும் அந்தக்காற்றில் அப்படியொரு சிலிர்ப்பு வந்தது.
புதூரிலிருந்து வந்திருந்த போத்தித்தாத்தா
“ ஏலே என்னல ஏன் விசேசவீட்டுல கத்திகிட்டுருக்கே.என்ன விஷயம்? .” என்று அருகில் வந்து அவன் தோளில் கைகளை வைத்து சத்தமில்லாமல் பாந்தமாய் கேட்டார். சிவா நிமிர்ந்து கந்தையா சித்தப்பாவைப் பார்த்தான். அவர் பெஞ்சில் உட்கார்ந்தவாக்கில் மொட்டைத்தலையை குனிந்தபடி கால்பெருவிரலால் கீழே தரையில் கீறிக் கொண்டிருந்தார்.
“ ஒண்ணுமில்ல தாத்தா..” என்றான் சிவா. அவர் மேலும் ஏதோ கேட்பதற்குமுன் அவன் எழுந்து காம்பவுண்டை விட்டு வெளியே போய் விட்டான். வெளியே கொன்றைமரத்தடியில் மஞ்சள் பூக்கள் வட்டமாய் கொட்டிக்கிடந்தன. அந்தப்பூக்களின் நடுவே கொஞ்சநேரம் நின்றிருந்தான். சரம் சரமாய் பூத்துத் தொங்கிக்கொண்டிருந்த பூக்களை சித்திக்கு ரொம்பப்பிடிக்கும். அவள் தான் எப்போதோ அவளுடைய சொந்த ஊரான விக்கிரமசிங்கபுரத்திலிருந்து விதை கொண்டு வந்து போட்டு வளர்த்தாள். அது பூக்கத்தொடங்கி விட்டால் போதும் அவள் முகத்தில் அந்த மஞ்சள் ஒளி வீசத்தொடங்கி விடும். தினமும் ஒரு முறையாவது சின்னப்பிள்ளைகள் போல அந்த மரத்தடியில் கொஞ்சநேரம் நின்று மரத்தைத் தடவிக் கொடுப்பாள். கைக்கெட்டும் பூக்களைப் பறித்து சாமிப்படங்களுக்கு வைப்பாள்.
சிவா வந்து கடைசியாக முகத்தைப் பார்ப்பதற்க்காக இருபத்திநான்கு மணிநேரம் காத்திருந்தாள் உலகம்மை சித்தி.  சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவா அடித்து பிடித்து ஓடி வந்தான். அவனால் அழக்கூட முடியவில்லை. துக்கம் பாறாங்கல் மாதிரி மனதில் அடைத்துக் கிடந்தது. இறந்தபிறகும் கூட அந்தத்தாய்மை பொங்கும் ஒளி வீசும் முகம் இலங்கிக்கொண்டிருந்தது. முதலில் எதுவும் தோன்றவில்லை. உலகம்மை சித்திக்கு பிரியமான வளர்ப்பு மகனான சிவா அவளைப் பார்த்ததும் உடைந்து அழுவான் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவனும் சிவகாமியும் ஒருவட்டை. அவன் பிறந்தபோது அம்மையிடம் தாய்ப்பால் ஒருதுளி இல்லை. அப்போது உலகம்மை சித்தி கொஞ்சநாள் அவனுக்கும் முலையூட்டியிருக்கிறாள். அவளுடைய ரத்தம் அவனுடலில் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட பிரயாணத்தில் அவளைப்பற்றிய ஓர்மைகளை அவன் ஞாபகப்படுத்திக் கொண்டே வந்ததாலோ என்னவோ கண்ணாடிப்பெட்டிக்குள் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்றே தோன்றியது. அவளை எழுப்பி விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடனே அமைதியாக அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து நகன்று விட்டான். எல்லாக்காரியங்களும் முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது தான் சிவாவுக்கு இனி அந்த வீட்டில் உலகம்மை சித்தி இல்லை என்ற உணர்வு வந்தது. அவனை உடைந்து அழுதான். சிவகாமியும், ராஜியும், உமாவும் சேர்ந்து அழுதார்கள். இப்போதும் கூட அதை நினைத்ததும் சிவாவின் கண்கள் கலங்கின.
 சிவா அப்படியே நடந்து ஆத்துத்தெரு வழியே இசக்கியம்மன் கோவில் படித்துறைக்குப் போனான். மதிய நேரம் என்பதால் ஆற்றில் ஆட்கள் இல்லை. அங்கே இங்கே என்று ஒன்றிரண்டு பெண்கள் துணிகளுக்கு சோப்பு போட்டுக்கொண்டிருந்தார்கள். படித்துறையின் கடைசிப்படியில் தண்ணீரில் கால்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். தாமிரபரணியின் குளுமை உடலில் அப்படியே ஏறியது. எங்கிருந்தோ ஒரு கொக்கு தண்ணீரில் தாழப்பறந்து சென்றது. அதன் இறக்கைகள் அடிக்கிற சத்தம் கூட கேட்கிற நெருக்கத்தில் பறந்தது. சிவா அந்தக் கொக்கு பறந்தவழியே கண்களைப் போகவிட்டான். தூரத்தில் மஞ்சள் நிறத்தில் சேலை கட்டிய ஒரு பெண் குறுக்குமாராப்பு கட்டிச் சேலையை உணத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாய் தண்ணீரில் குறுக்கே பாய்ந்து இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போய்க் கொண்டிருந்தது. ஒடுங்கி ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணியின் நடுவில் இப்போது கருவேலமரங்களும் வந்து விட்டன. ஏன் இப்படி திடீரென்று உலகம்மைசித்தி போய் விட்டாள்? இன்னும் அவள் செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது? என்ன அவசரம் அவளுக்கு? என்று கோபம் கோபமாய் வந்தது. கால்களில் மீன்கள் வந்து நறுக் நறுக்கென்று கடித்துக் கொண்டிருந்தன. லேசாக வலித்தாலும் கால்களை அசைக்கவில்லை. சித்தியின் ஞாபகங்கள் பொங்கி வந்தன.
கலைஞானம் சாரிடம் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக்கூடாது என்று தோன்றியது. அவர் பாவம் என்ன செய்வார்? ஆனால் அவர் பேசிய விஷயம் இருக்கிறதே அதை அவனால் தாங்கமுடியவில்லை.
“ சிவா உங்க சித்தப்பாவுக்கு ரெண்டாவது கலியாணம் பண்ணிரலாம்.. பொம்பிளைப்பிள்ளைகளைக் கரையேத்த வீட்டுல பொம்பிளையாளுக இருந்தாத்தான நல்லாருக்கும்.என்ன சொல்றே..”
அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடியில் தான் அவனறியாமல் வார்த்தைகள் வந்து விட்டன. என்ன மனிதர்கள்? ஆனால் கந்தையா சித்தப்பா தான் இதை ஆரம்பிக்கச் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகமும் வந்தது. திருமணவயதில் மூன்று பொம்பிளைப்பிள்ளைகளை வைத்துக் கொண்டு எப்படி இப்படி யோசிக்க முடிந்தது?
தலையை உலுக்கினான். அவன் தலையிலிருந்து ஒரு சரக்கொன்றைப்பூவிதழ் தண்ணீரில் விழுந்தது. சுளித்தோடும் நீர்வழியே அது சுழன்று சுழன்று போய்க் கொண்டிருந்தது. யாராவது தேடி வருவார்களோ என்று பாதையைத் திரும்பிப்பார்த்தான். ஒருவர் கூட நடந்து வராத அந்தப்பாதையின் தனிமையைப் பார்க்கும்போது சிவாவின் மனதில் துக்கம் பொங்கியது. கைகளைக் குவித்து ஆற்றில் ஒரு கை நீரள்ளினான். அப்படியே வாய்க்கருகே கொண்டுபோய் சத்தமாய் உறிஞ்சிக்குடித்தான். இன்னொரு முறை நீரள்ளி கைவிரல் இடுக்குகள் வழியே ஒழுக விட்டுக்கொண்டே நடந்தான். குளித்து முடித்து போகும்போது உலகம்மை சித்தி அப்படிச் செய்வாள். கடைசிச் சொட்டு நீர் வரை சொட்டிக்கொண்டே ஈரச்சேலை கால்களைத் தட்ட மணலில் கால் புதைத்து நடந்து போவாள்
வெயிலில் பொசுங்கிய ஆற்றுமணலில் எத்தனை காலடித்தடங்கள்! குறுக்கும் நெடுக்குமாய் மேலும் கீழுமாய் ஒன்றின் மீது ஒன்றாய் எத்தனையெத்தனை! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆற்றை நோக்கியே எவ்வளவு மனிதர்கள்  நடந்திருக்கிறார்கள். எத்தனை முறை நடந்திருக்கிறார்கள். ஏன் உலகம்மை சித்தியே கூட ஆற்றைப்போல தான். அவளைத் தேடி எல்லோரும் வந்தார்கள். திருநெல்வேலிக்கு வந்தால் உலகம்மை சித்தி வீட்டுக்கு வராமல் யாரும் போகமாட்டார்கள். அவளுடன் இரண்டு வார்த்தைகளைப் பேசி, பாடுகளைச் சொல்லி, ஒரு வாய்க்காப்பித்தண்ணி குடித்து விட்டுப் போனால் அவர்களுக்கு எவ்வளவோ நிம்மதி. இறக்கிவைக்கும் அத்தனை சுமைகளையும் கழுவிச் சுத்தப்படுத்துகிற ஆறாக இருந்தாள் உலகம்மை சித்தி. எந்த அழுக்கும் அவளிடம் தங்கவில்லை. எல்லோரும் அவரவர் அந்தரங்கரகசியங்களைச் சொல்லி பாவமன்னிப்பு கேட்கும் பள்ளியின் பாதர் போலவும் இருந்தாள். யாருடைய ரகசியங்களையும் அவள் யாரிடமும் சொன்னதில்லை. உன் ரகசியங்கள் தெரியுமே என்ற ஏளனமும் இல்லை. அவள் எல்லோருக்கும் ஆலோசனைகள் சொன்னாள். அவர்களுடைய பிரச்னைகளிலிருந்து விடுபட அவளுக்குத் தெரிந்த வழிகளைச் சொன்னாள். அந்த வழிகளெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவள் சொன்னபோது அது புதியதாகத் தெரிந்தது. களங்கமில்லாத அவளுடைய வார்த்தைகளில் இருந்த பரிசுத்தமே அவர்களை ஆற்றுப்படுத்தியது.
 உலகம்மைச் சித்தியும் ஆத்துக்கு தினமும் இரண்டுமுறையாவது வராமல் போகமாட்டாள். இந்தக் காலடித்தடங்களில் அவளுடைய காலடித்தடம் எது? பதினைந்து நாட்களுக்கு முன்னால் நடந்து வந்து இந்த படித்துறையில் தான் துவைத்துக் குளித்தாள். தாமிரபரணி எத்தனை மனிதர்களைப் பார்த்திருக்கிறது! எவ்வளவு பேரின் அழுக்குகளைக் கழுவியிருக்கிறது! எவ்வளவு பேரின் மகிழ்ச்சியை, துக்கத்தை, அழுகையை நீரில் கரைத்து ஓடவிட்டிருக்கிறது! மனிதர்களின் அத்தனை பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், பழி, அன்பு, பாசம், நேசம், எல்லாவற்றையும் தாங்குகிற வல்லமை தாமிரபரணிக்கு இருந்ததே. என் பிள்ளைகள். என் பிள்ளைகள் என்று வாரி வாரி அணைத்துக்கொண்டதே. ஒருகை நீரில் மனிதர்களின் வாழ்க்கையே தெரிந்த மாயத்தை என்ன சொல்ல முடியும்?  மணலில் பதிந்த காலடித்தடங்களில் என்னுடைய காலடி இது என்று யாராலாவது அடையாளம் சொல்லமுடியுமா? வாழ்ந்து மறைந்த எத்தனையோ பேரின் காலடித்தடங்களைப் போல உலகம்மைச் சித்தியின் காலடித்தடமும் மறைந்து விட்டது. அவனை அறியாமல் அவன் பெருமூச்சு விட்டான்.
அன்று அவன் வீடு திரும்பியபோது வெளியூர் உறவினர்கள் எல்லோரும் போய் விட்டிருந்தார்கள். வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் வருகிற அரவம் கேட்டு ராஜி தான் சாப்பாடு எடுத்து வைத்தாள். அவன் மௌனமாகச் சாப்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்பி விட்டான்.
அதன் பிறகு எவ்வளவோ காரியங்கள் நடந்தேறிவிட்டன. சிவகாமி ராஜபாளையத்திலும், ராஜி விழுப்புரத்திலும், உமா திருவனந்தபுரத்திலும் திருமணம் முடிந்து போய் விட்டார்கள். சிவா எல்லோருடைய திருமணத்துக்கும் போயிருந்தான். அதன்பிறகு திருநெல்வேலி வருவது குறைந்து போய் விட்டது. சென்னையிலிருந்து சிவகாசி என்ற எல்லையோடு அவன் பிரயாணம் முடிந்து போனது. அப்படியே கலியாணம், காதுகுத்து விசேசம் என்று திருநெல்வேலி வந்தாலும் வந்த வேலை முடிந்ததும் ஊருக்குக் கிளம்புகிற மாதிரியே சூழ்நிலை அமைந்து விட்டது. கந்தையா சித்தப்பா வீட்டுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. உலகம்மை சித்தி இறந்த பிறகு ஒன்றிரண்டு தடவை வந்திருக்கிற மாதிரி ஒரு தோணல் அவனுக்கு இருந்தது. வீட்டுக்குப் போகிற பாதையில் ஏராளமான கட்டிடங்கள் புதிது புதிதாக முளைத்திருந்தன. முன்பு வழிநெடுவும் இருந்த மரங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அந்தச் சாலையின் அழகே ஓங்கி உயர்ந்து நிற்கும் மருதமரங்கள் தான். அடி முதல் பாதம் வரை பசுமையான அந்த மரத்தைப் பார்த்தாலே மனம் குளிர்ந்து விடும். இப்போது எல்லாம் வணிகவளாகங்களாகவும், பெரிய பெரிய பங்களாக்களாகவும் மாறியிருந்தன. ஆனால் அந்தக்கட்டிடங்களுக்கு அருகிலும் சந்து பொந்துகளிலும் கருவேலஞ்செடிகள் அடர்ந்து கிளைவிட்டிருந்தன. சாலையில் மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடுகள் கருவெலஞ்செடிகளில் எக்கு போட்டு காய்களையும் கொழுந்து இலைகளையும் கடித்துக் கொண்டிருந்தன.
அவன் கந்தையா சித்தப்பா வீடு இருக்கும் தெருமுக்கில் திரும்பினான். எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் காம்பவுண்டுக்கு வெளியில் நின்றிருந்த சரக்கொன்றை மரத்தைக் காணவில்லை. அந்த இடத்தில் காம்பவுண்டு சுவரை இடித்து ஒரு பெட்டிக்கடை வாசல் முளைத்திருந்தது. அவன் காம்பவுண்டுக்குள் நுழைந்தான். கந்தையா சித்தப்பாவின் வீடு மேலக்கடைசியில் இருந்தது. வாசல் கதவு ஓரஞ்சரித்திருந்தது. அவன் மனதில் இனம்புரியாத ஒரு உணர்வு வயிற்றிலிருந்து தொண்டைக்கு ஏறிக் கொண்டிருந்தது. வாசலில் செருப்பைக் கழட்டினான். கதவை மெல்லத் திறந்தான். பாட்டலையில் ஒரு ஈசிசேரில் கந்தையா சித்தப்பா உட்கார்ந்திருந்தார். அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவன் உள்ளே வராண்டாவைக் கடந்தபோது தான் நிமிர்ந்து பார்த்தார். முதலில் புரியாதமாதிரி முழித்தார். சில நொடிகளில் அடையாளம் தெரிந்த பாவனையில் உதடுகளை பக்கவாட்டில் அசைத்து புன்னகைத்தார்.
“ வா சிவா..”
அவருக்கு எதிரே கலைஞர் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனலில் டாமும் செர்ரியும் ஒருவரையொருவர் விரட்டிக்கொண்டிருந்தார்கள். டி.வி.க்கு மேலே உலகம்மை சித்தியின் சட்டமிடப்பட்ட படம் தொங்கிக் கொண்டிருந்தது. படச்சத்தின் தலையில் கதம்பமாலை சூடப்பட்டிருந்தது. உலகம்மை சித்தி நெற்றியில் சந்தனம் குங்குமத்துடன் தன்னுடைய லேசான தெத்துப்பற்கள் தெரியச் சிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். சாயங்காலம் தான் பூ போட்டிருக்கவேண்டும். அவன் வாங்கி வந்திருந்த பழங்களை சித்தப்பாவிடம் நீட்டினான். கந்தையா சித்தப்பா இன்னமும் டி.வியையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்படியே சுவர் ஓரமாக பையை வைத்து விட்டு,
“ சுகமா இருக்கியளா சித்தப்பா “
என்று கேட்ட சிவா அருகிலிருந்த ஒரு முக்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். அவருக்குக் காது சரியாகக் கேட்கவில்லையோ அல்லது டி.வியில் கவனமாக இருந்ததாலோ அவர் பதில் சொல்லவில்லை. அவன் மீண்டும் சத்தமாய் அதே கேள்வியைக் கேட்டான். அந்தக் குரலைக் கேட்டு தலையைத் திரும்பி தலையசைத்தார். மறுபடியும் டி.வியைப் பார்க்கத் தொடங்கினார். சிவாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டில் சாமான்களே இல்லை. மூணுபத்தி வீடு தான் என்றாலும் மிகப்பெரிய வெட்டவெளியாகத் தெரிந்தது. திடீரென ஞாபகம் வந்தது போல,
“ புள்ளைக.. வீட்டுக்காரி நல்லா இருக்காகளா? “
“ நல்லா இருக்காக.. சித்தப்பா.. “
டி.வியில் விளம்பரம் ஓடியது. அவர் நிமிர்ந்து உலகம்மை சித்தியின் படத்தைப் பார்த்தார். அவன்,
“ செவாமி, ராஜி, உமா, எல்லோரும் நல்லாருக்காகளா? “
“ ம்ம் நல்லாருக்காகப்பா..”
“ ஏன் நீங்க தனியே இருக்கீங்க? பிள்ளைக கூடப் போய் இருக்கவேண்டியதானே..”
“ அதெல்லாம் சரிப்படுமா? மருமகன் வீட்டுல போய் மாமனார் உட்கார்ந்து சாப்பிட முடியுமா? இங்கே ஒண்ணும் பிரச்னையில்லை…வண்டி ஓடுது..மூட்டு வலி இருக்கு உக்கார எந்திரிக்க கஷ்டமா இருக்கு அவ்வளவு தான் மற்றபடி ஒண்ணுமில்லை உலகம்மை இருக்கா பாத்துக்கிடுவா”
அவருடைய குரல் தளர்ந்திருந்தது. அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எல்லாவிஷயங்களும் தெரியும் என்றாலும் பேசுவதற்கு ஏதாவது வேண்டுமே. அவன் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தான். தாகமாக இருந்தது. எழுந்து அடுக்களைக்குப் போனான். நாலே நாலு பாத்திரங்கள் மட்டும் இருந்தன. சிறியதொரு எவர்சில்வர் சருவப்பானையில் தண்ணீர் இருந்தது. தண்ணீரை எடுத்துக் குடித்தான். அடுப்பில் இரண்டு லிட்டர் குக்கர் மூடாமலிருந்தது. அவன் அதை எடுத்துப் பார்த்தான். மத்தியானம் சாப்பிட்டபிறகு மீதமிருந்த சோறு எறும்புகள் வர ஆரம்பித்திருந்தன.
“ சித்தப்பா சோத்துல தண்ணி ஊத்திரவா..” என்று கேட்டான். அவர் தலையாட்டினார். திறந்திருந்த ஊறுகாய் பாட்டிலை மூடி வைத்தான். அடுப்படி முழுவதும் கறையாக இருந்தது. அடுப்புக்கு மேல் நூலாம்படை அடைந்து கிடந்தது. அங்கணத்தில் தட்டுகளும் தம்ளரும் குழம்புச்சட்டியும் கழுவக்கிடந்தன. நேற்றைய பாத்திரங்கள் போல. அவனுக்கு வெறுமையுணர்வு தோன்றியது. மறுபடியும் வந்து முக்காலியில் உட்கார்ந்தான். கந்தையா சித்தப்பா இப்போது சேனலை மாத்தியிருந்தார். அவனும் சில நிமிடங்கள் டி.வி.யைப் பார்த்தான். போகலாம் என்று தோன்றியது. எட்டு மணிக்கு பஸ். ஏழு மணிக்கு ஜங்ஷன் போய் சாப்பிட்டு விட்டுப் போகச் சரியாக இருக்கும். எழுந்து ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த கைக்கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான். சீப்பினால் தலைவாரினான். திரும்பி உலக்ம்மை சித்தியைப் பார்த்தான். அவள் இன்னமும் சிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“ சித்தப்பா போய்ட்டு வாரேன்..எட்டு மணிக்குப் பஸ்ஸு..” என்றான். அவர் டி.வி.யிலிருந்து முகத்தைத் திருப்பி மறுபடியும் தலையாட்டினார். அவன் திரும்புவதற்குள் அவர் டி.வியைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். அவனுடைய மனசே சரியில்லை. குழப்பமாக இருந்தது.
அவன் காம்பவுண்டை விட்டு வெளியே வந்து சரக்கொன்றை மரம் நின்ற இடத்தில் சில நொடிகள் நின்றான். அவனுடைய தலைக்கு மேலே சரம் சரமாய் பூக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மரம் ஒரு குடை மாதிரி நிழலாய் விரிந்திருந்தது. நிமிர்ந்து பார்த்தான். அவன் மீது கொத்தாய் பூக்கள் உதிர்ந்தன. உலகம்மை சித்தியின் ஞாபகம் மின்னலென வந்து போனது.
பஸ் புறப்பட்டது. சன்னல் வழியே வீசிய காற்றில் அவன் தலையில் இருந்து எதுவோ அவன் மடியில் விழுந்தது. அவன் கையில் எடுத்தான். சரக்கொன்றைப்பூவின் மஞ்சள் இதழ் அவனைப் பார்த்துச் சிரித்தது.

நன்றி - பேசும் புதிய சக்தி

No comments:

Post a Comment