Saturday, 7 December 2019

கருப்பையாவின் வனம்


கருப்பையாவின் வனம்

உதயசங்கர்

கருப்பையாவுக்கு நினைவு தப்பித் தப்பிப் பிழைத்துக் கொண்டிருந்தது. நாடி கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக் கொண்டிருந்தது. உற்றுப்பார்த்தால் மட்டுமே தெரிகிற மாதிரி மெலிதாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது நெஞ்சுக்கூடு. கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை கண்களைத் திறந்து மூடிக் கொண்டிருந்தார் கருப்பையா. யாரையும் பார்க்கவில்லை. அருகில் குஞ்சம்மாள் உட்கார்ந்து அவளுடைய கண்ணாடிக்கண்களை இடுக்கி அடிக்கடி கருப்பையாவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேல்முருகன் போஸ்ட் ஆபீசுக்குப் போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான். ஏற்கனவே ரெண்டு நாட்கள் லீவு போட்டு விட்டான். டாக்டர் நேற்றே சொல்லி விட்டார்.
“ வீட்டுக்குக் கூட்டிட்டு போங்க.. எதுக்கு வீணா செலவு பண்ணிகிட்டிருக்கீங்க…. இன்னும் ஒரு நாள் இல்லன்னா ரெண்டு நாள் தாங்கும் அவ்வளவு தான்…”
அதற்கப்புறம் தான் வீட்டுக்குக் கூட்டி கொண்டு வந்தார்கள். எதிர்வீட்டு கூனியாச்சி வந்து பார்த்து விட்டு ” ஏட்டி குஞ்சம்மா எப்பன்னாலும் சீவம்போகும்..கேட்டியா.. எப்படியும் நாளை அமாவாசை தாண்டறது கஷ்டம். பாக்கணும்கிறவுகளுக்குச் சொல்லி விட்ரு…இன்ன..”
என்று சொல்லி விட்டுப் போனாள். கூனியாச்சிக்கு வயது தொண்ணூறுக்கு மேலே இருக்கும். இன்னமும் கதியாக அலைந்துதிரியும். பார்வையும் தெளிவு. என்ன காது மட்டும் தான் மந்தம். ஆனால் கூனியாச்சி வாயசைவை வைத்தே புரிந்து கொள்வாள். கூனியாச்சி போன பிறகு தான் குஞ்சம்மாளூக்கு உணர்வு வந்தது. நரம்போடிய தன் கையை அசைத்து கருப்பையாவின் வெள்ளை முடியடர்ந்த நெஞ்சில் தடவிக் கொடுத்தாள். அவளுடைய கண்களில் அவளறியாமலேயே கண்ணீர் வழிந்தது. அதைத் துடைக்கும் உணர்வின்றி அப்படியே உட்கார்ந்திருந்தாள். கூனியாச்சி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த வேல்முருகன் அம்மாவிடம் கேட்பதற்காக உள்ளே நுழைந்தவன் அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு அப்படியே நின்றான். மனசை என்னவோ செய்தது. திரும்பி மறுபடியும் வராந்தாவுக்கே போய் உட்கார்ந்தான். அவனுடைய மனைவி சங்கரி அடுக்களையிலிருந்து சைகை செய்து கூப்பிட்டாள். அவன் அதைக் கவனிக்காதவன் மாதிரி வீட்டுக்கு எதிரிலிருந்த வேப்பமரத்தைப் பார்த்தான். வேப்பமரத்தில் ரெண்டு புறாக்கள் வந்து உட்கார்ந்திருந்தன. அதில் ஒரு புறா குதுகுதுவென ஜோடியின் அருகில் சென்று சத்தம் எழுப்பி சரசமாடியது. கருப்பையா பார்த்திருந்தால் அவை மணிப்புறாவா? மாடப்புறாவா? கர்ணப்புறாவா? வீட்டுப்புறாவா? என்று சொல்லியிருப்பார். அவர் கதியாக இருந்தவரைக்கும் அதாவது ஒரு வருடத்துக்கு முன்பு வரைக்கும் வீட்டில் புறாக்கூடு இருந்தது. அதில் ஒரு அஞ்சாறு ஜோடிப் புறாக்கள் வகைக்கொன்றாய் இருந்தன. ஒரு பொமரேனியன் நாய் இருந்தது. ஐந்தாறு கோழிகள் இருந்தன. ஒரு சண்டைச்சேவல் இருந்தது. இரண்டு கின்னிக் கோழிகள் இருந்தன.
கருப்பையா வாழைக்கிணற்றில் குளிக்கப்போகும்போது மாடு முட்டிக் கீழே விழுந்து விட்டார். பிட்டியில் சரியான அடி. எழுந்திரிக்க முடியாமல் இருந்தவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டான் ஆட்டோ முருகேசன். ஆர்த்தோ டாக்டர் இடுப்பு எலும்பு நொறுங்கி விட்டது என்றார். பிளேட் வைத்து ஆபரேஷன் செய்யலாம். ஆனால் கருப்பையாவின் எண்பத்தியிரெண்டு வயதை யோசிக்கும் போது அது அவ்வளவு சரி வருமா என்று தெரியவில்லை. யோசித்து விட்டுச் சொல்லுங்கள். என்று சொன்னார். கருப்பையாவுக்கும் அதில் அவ்வளவு விருப்பமில்லை. அவர் அவருடைய நண்பரான வைத்தியர் மதனகாமராஜரிடம் கூட்டிக் கொண்டு போகச் சொன்னார். ஆயுர்வேத வைத்தியரான மதனகாமராஜர் தொடையில் எண்ணெய்க்கட்டு போட்டு அசையாமல் ஒரு மண்டலத்துக்கு இருக்கும்படி சொன்னார். அவர் சொன்ன மாதிரி கருப்பையாவும் நாற்பத்தியெட்டு நாட்களுக்கு அசையாமல் கிடந்தார். உண்மையில் காமராஜர் கில்லாடி தான். கருப்பையா இரண்டு மாதங்களில் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார். என்ன இடது பக்கம் காலை கொஞ்சம் சாய்த்து நடந்தார். படுக்கையில் கிடத்தி விடுமோ என்று பயந்தவருக்கு நடக்க முடிந்த சந்தோசத்தை நடந்தே கொண்டாடினார். பொழுதன்னிக்கும் நடந்து கொண்டிருந்தார். ஆனால் ஏணியில் ஏறுவது, குத்துக்கால் வைத்து உட்காருவது, சம்மணம் போட்டு உட்காருவது எல்லாம் முடியவில்லை. எந்தப் பொருளையும் தூக்க முடியவில்லை. அப்போது தான் வேல்முருகன்,
“ யெப்பா.. காலம்போன காலத்தில எதுக்கு இந்தத் தொரட்டெல்லாம் இழுத்து வைச்சிகிட்டு.. எல்லாத்தையும் ஒழிச்சிக்கட்டுங்க… நிம்மதியா ரெஸ்ட் எடுங்க…”
என்று சொன்னான். கருப்பையா மகனுக்குப் பதில் சொல்ல இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டார். அவருடைய நண்பர்கள் ஒவ்வொருவராகக் கூப்பிட்டு புறாக்கள், கோழிகள், நாய், என்று கொடுத்தனுப்பினார். அதற்கப்புறத்திலிருந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஷீணமடைந்து கொண்டே வந்தார். தலைசுற்றல் வந்தது. இரத்தக்கொதிப்பு நோய் என்றார்கள். அடிக்கடி ஒண்ணுக்குப் போனது. சர்க்கரை வியாதி என்றார்கள். இப்படியே அடுத்தடுத்து நோய்களின் படையெடுப்பில் அவர் சரணாகதி அடைந்து விட்டார்.
வேல்முருகன் அருகில் நிழலாடுவதை உணர்ந்து திரும்பினான். அம்மா முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டே,
“ சின்னவனுக்குச் சொல்லி வந்து பாத்துட்டுப் போச்சொல்லு… பேரமாரையும் கூட்டிட்டு வரசொல்லு…அப்படியே மருதைக்கும் ஃபோனைப் போட்டு செல்லம்மாளையும் பிள்ளைகளைக் கூட்டிட்டு வரசொல்லு.”
என்று சொல்லி விட்டு மூக்கையுறிஞ்சினாள். பின் திரும்பி மெல்ல கருப்பையா படுத்திருந்த அறைக்குள் போனாள். இருட்டுக்குள் கருப்பையா அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். குஞ்சம்மாள் கண்ணாடியைக் கழட்டி சீலைத்துணியால் துடைத்தாள். மீண்டும் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தபோது கருப்பையா கண்களை மூடிக் கிடந்தார். திருமணம் முடித்த முதலிரவில் பார்த்த கருப்பையாவின் கண்கள் ஞாபகத்துக்கு வந்தன. சிவப்பு ரேகைகளோடிய சிறிய கண்கள். குறுகுறுவென அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கண்கள்! அந்தக் கண்கள் ஒரு மனிதனுடைய கண்களாக இல்லை. அவை ஒரு காட்டுமிருகத்தினுடைய கண்களாக மின்னின. பசி கொண்ட மிருகம் தனக்கெதிரே விரிந்து கிடக்கும் வனத்தை ஆவலுடன் வெறித்துப் பார்க்கும் கண்கள்! வனத்திற்குள் சென்று அத்தனையையும் குதறிப்போடத் துடிக்கிற கண்கள். அன்று அவளால் அந்தக் கண்களை பார்க்க முடியவில்லை. அந்தக் கண்களைப் பார்த்து அவள் பயந்தாள். அந்தக் கண்களில் இருந்த வெறியைப் பார்த்து பயந்தாள். அந்த வெறி அன்று இரவு மட்டுமல்ல தொடர்ந்த இரவுகளிலும் அவளைக் குதறிப் போட்டது. அவள் தன்னுடைய உடம்பு தன்னுடையதாக இல்லை என்று உணர்ந்தாள். நார் நாராகக் கிழிந்த உடல் உறுப்புகளோடு கூடாகி அவள் அலைந்து திரிவதைப் போல இருந்தது.
பகல் முழுவதும் பாவம் போல ரைஸ் மில்லுக்குப் போய் விட்டு வந்து அவளிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசும் கருப்பையா இரவானால் எப்படித்தான் அவ்வளவு சக்தி வருமோ பிசாசைப் போல அவளைக் கசக்கிப் பிழிந்தான். கலவியின் போது அவனுடைய உறுமல் கர்ணகடூரமாக இருந்தது. பகலில் நிர்மலமாக தோன்றும் அவனுடைய கண்கள் இரவானதும் செவ்வரி ஓடி ரத்தம் பாய்வதைக் கவனித்தாள். அன்றிலிருந்து அவள் கருப்பையாவின் கண்களைப் பார்த்து பேசுவதில்லை. அந்தக் கண்கள் இப்போது மூடியிருக்கின்றன. எப்போதாவது திறக்கும் அந்தக் கண்களில் பழைய ஒளி இல்லை. அந்த வேகம் இல்லை. அந்த பயங்கரம் இல்லை. இப்போது தான் அவள் அந்தப் பயங்கரத்தை எதிர்கொள்ளத் துணிந்தாள். கருப்பையா பழைய மாதிரி கண்களைத் திறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கிழிந்த துணிபோல கிடந்த கருப்பையா அவளுடைய ஆசையைக் கேட்டவர் போல கண்களைத் திறந்தார்.  காலத்தின் கடைசி நூலிழையில் அவர் தொங்கிக் கொண்டிருந்தார். நினைவுகளின் புதிர்வழிகளில் அவர் சுற்றியலைந்து கொண்டிருந்தார். ஆனால் கடைசிகடைசியாக நினைவுகள் அவர் மீது கருணைகூர்ந்து அவரை நினைவுகளற்ற பெருவெளியில் கொண்டு வந்து சேர்க்கப் பிரியம் கொண்டது. அவருடைய தவிப்பைத் தாங்கமுடியாமல் ஞாபகங்கள் ஒவ்வொன்றாக தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டிருந்தன. பிரக்ஞை மட்டும் இதுவரை இமையாமல் விழித்திருந்த தன் கண்களை மூடக் காத்திருந்தன அவருடைய ஆணையை எதிர்பார்த்து.
கருப்பையாவின் கண்கள் தாமாக மூடிக்கொண்டன. ஆனால் இமைகளின் துடிப்பும், கண்மணிகளின் அசைவும் இருந்து கொண்டேயிருந்தன.
அவன் நடந்து கொண்டிருந்தான். இன்னமும் மானுடவாடை படாத ஆதிக்காடு. வழிகளை மறந்த அடர்வனம். பூச்சிகளின் ரீங்காரம். பறவைகளின் கலவையான கெச்சட்டம் அதன் உச்சத்தில் கேட்டுக் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ புலியின் உறுமல் தேய்ந்து வந்து கொண்டிருந்தது. மிக அருகில் யானைகளின் செல்லமான பிளிறல்கள் கேட்டன. அருகில் செடிகளுக்குப் பின்னால் மிளா ஒன்றின் செருமல் சத்தம் கேட்டது. இலைச்சருகுகளில் மான்களின் கூட்டம் நடக்கும் ஒலியும் நிற்கும் ஒலியும் கேட்டது. குயில்களின் நீண்ட கூவல் விட்டு விட்டு கேட்டது. ஆங்காங்கே சிறு சிறு ஓடைகளில் ஓடும் தெள்ளிய நீரின் சளப்  க்ளக் என்ற ஒலியில் ஒரு கன்னிப்பெண்ணின் கொலுசொலி கேட்டது. மலைப்பாறைகளிலிருந்து அருவிகள் விழும் பேரோசையும் கேட்டது. அந்த வனத்தில் இரவும் பகலும் முயங்கிக் ஒன்றாக கிடந்தன. அந்த முயங்கலின் ஒளியில் காடே புளகாங்கிதமடைந்தது. காட்டின் உடலில் கிளர்ந்த உணர்ச்சிகளை அந்தக் காட்டின் உயிர்கள் உணர்ந்து ஒன்று போலக் குரல் எழுப்பின. ஒரு மாபெரும் இசையமைப்பாளனின் இசைநிரலில் காடே ஒரு இசைக்கோர்வையின் கண்ணிகளை இசைத்துக் கொண்டிருந்தது. கருப்பையா காட்டினுள்ளே நடந்து கொண்டிருந்தான். அவனுடைய காலடிகள் கன்னிப்பெண்ணின் உடல் மீதான முதல் ஸ்பரிசம் பட்டது போல காடு அச்சம் கலந்த கிளர்ச்சியில் முணுமுணுத்தது. புற்கள் அந்தத்தொடுகையினால் தன் உணர்வை ஒரு கணம் இழந்து மறுபடியும் எழுந்தன. அப்போது ஏற்பட்ட  முணுமுணுப்புகள் காற்றில் ஒரு ரகசியம் போல பரவியது. இலைகள் அசைந்துஅசைந்து சங்கேதமொழியில் அந்நியனின் வரவை காட்டின் ஆத்மாவுக்கு செய்தி அனுப்பியது. அந்தத் தந்திச்செய்தியை இடைமறித்துக் கேட்ட புட்களும், பூச்சிகளும், மிருகங்களும், கலவரமடைந்து உச்சத்தில் அலறின. காடு அதன் அதிருப்தியை முட்களின்மூலம் அவனுக்குத் தெரிவித்தது.
அவனுடைய உடலெங்கும் முட்காயங்கள். தோளில் கிடந்த துண்டு எப்போது எந்தச்செடியில் சிக்கியது என்ற உணர்வே இல்லை. இடுப்பில் கட்டியிருந்த வேட்டியும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கால்களிலிருந்து ரத்தத்துளிகள் அவன் நடந்து சென்ற ஒவ்வொரு அடியிலும் தங்கி காட்டின் ஆதித்தெய்வத்துக்கு ரத்தபலியாகத் தங்கின. அவனுக்கு எதைப்பற்றியும் பிரக்ஞையில்லை. காட்டின் சலசலப்பு அவனை அணுவும் அசைக்கவில்லை. ஆனால் காடு விடவில்லை. தன்உடல் மீதான அவனுடைய இந்த வன்முறையை எதிர்த்தது. அவனுடைய வேட்டியும் கிழிந்து ஒரு முள்மரத்தில் தொங்கியது. சிறு கோவணம் ஒன்றே அவனுடைய உடலில் இருக்கிறதா இல்லையா என்ற மாயையுடன் இருப்பதாகவும் இல்லையென்பதாகவும் தெரிந்தது. கருப்பையாவின் புலன்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை நோக்கி அவனை இழுத்துச் சென்றன.
ஒரு சமயம் குமரி முனை முக்கடலில் அவனை கடல் கொள்ள அழைத்தது. அலைகளில் அவனைத் தாலாட்டித் தாலாட்டி தன் மடிக்குள் இழுத்துக் கொண்டிருந்தது. அப்போதும் அவன் அந்த அழைப்பைக் கேட்டான். வலம்புரிச்சங்கின் கர்ப்பத்தில் ஒலிக்கும் அதே அலையோசை. அதே ரீங்காரம். அவனுக்குக் கேட்டது. அவன் எல்லாவற்றையும் மறந்தான்.  களக்காட்டிலிருந்து ராமேஸ்வரத்துக்கு அவனுடைய அய்யா சொக்கலிங்கமும், ஆத்தா மீனாட்சியும் நடந்து சென்று பிரார்த்தித்த பிறகே குலக்கொழுந்தாய் வந்துதித்த கருப்பையா அவர்களை மறந்தான். .அவன் அமைச்சராக இருந்த களக்காடு அரண்மனையை மறந்தான். அவனுடைய வீடு, வாசல், சொத்து சுகம், எல்லாவற்றையும் மறந்தான். அவனுடைய இல்லக்கிழத்தி சங்கரகோமதியை மறந்தான். அவனுக்கென்றே பத்தமடையிலும்,அம்பையிலும், திருநெல்வேலி மாடத்தெருவிலும் காத்துக் கிடந்த தாசிகளை மறந்தான். எல்லாம் மறந்து போனது. அவனுடைய அகம் அழிந்து அவன் கடலின் ஒரு துளியாக மாறிவிட்டான். துளிக்கடல் அவனை இயற்கையோடு கலந்து விடச் செய்யத் தயாரானது. ஆனால் அந்த நேரத்தில் அவனுடைய காதுக்குள் ஒரு பிஞ்சுக்குழந்தையின் அழுகுரல் ஈனஸ்வரத்தில் கேட்டது. இத்தனை பேரிரைச்சலில் அந்தக் குரல் மட்டும் எப்படிக் கேட்டது?  ஒற்றை நாதசுரத்தின் அழுகுரல் போல அத்தனைத் தெளிவாகக் கேட்டது. அது சேதுராமலிங்கத்தின் குரல். அவனுடைய உதிரக்கொடி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் பிறந்த குலக்கொடி. அவனுடைய குரலே தான். உடனே அவனுக்குள் நிறைந்திருந்த அமைதி குலைந்து மூச்சுத் திணறியது. அதற்குப்பிறகு அந்த முக்கடலால் அவனை நிறுத்த முடியவில்லை. கரையில் அவனைக் காணோமே என்று தவித்துக் கொண்டிருந்த உறவினர்கள் முன்னால் சிரித்தபடியே கடலிலிருந்து தோன்றினான். ஆனால் அன்றே சங்கரகோமதிக்குத் தெரிந்து விட்டது. இனி கருப்பையாவை நிறுத்த முடியாது. அதன்பிறகு அவள் ஒவ்வொரு நாளும் கருப்பையா தொலைந்து போவதை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
இப்போது கருப்பையாவை எந்த நினைவுகளும் நிறுத்த முடியவில்லை. அவனுடைய அருமை மகன் சேதுராமலிங்கத்தின் குரல் இப்போதும் கேட்டது. முன்னெப்போதையும் விட இனிமையாய் கேட்டது. சங்கரகோமதியின் கண்ணீரின் சுவை கூட அவனுடைய நாசியில் மணத்தது. பத்தமடை மும்தாஜும், அம்பை அபிதாவும், மாடத்தெரு சரசுவும் கூடலின்போது அவனுக்கு உன்மத்தம் ஏற்றுகிற ம்..ம்..ஆ.. என்னயக் கொல்லுங்களேன்…. ஆ..ஆ… என்ற சரசக்குரல்கள் அவன் கண்முன்னே காட்சிகளாய் தெரிந்தன. அதிகாரத்தின் ருசி அவனுடைய நாவில் இனித்தது. ஏவலாட்கள் அவனை அழைத்துப் பணிந்தனர். ஆனால் எதுவும் கருப்பையாவின் சித்தத்தில் இறங்கவில்லை. இப்போது அவனுக்குக் கேட்ட ஒரே ஓங்காரக்குரல் காட்டின் கர்ப்பப்பையிலிருந்து கேட்டது. அந்தக்குரல் தான் அவனை வழிநடத்தியது. அந்தக்குரல் தான் அவனுடைய உடல் பொருள் ஆவி அத்தனையையும் பலிப்பொருளாய் மாற்றியிருந்தது. ஓங்காரமாய் ஒலித்த அந்தக் குரலுக்கு இசைவாக காட்டின் இந்தச் சத்தங்கள் எல்லாம் ஒரு பின்னணி இசை மாதிரி, ஒலித்தது. நாதசுரக்கச்சேரியில் ஒரே சீராக ஊதுகின்ற ஒத்து நாதசுரத்தின் ரீங்காரஒலி போல அவனுடைய உடலுக்குள் நுழைந்து அருளை ஏற்றிக் கொண்டிருந்தது. அந்தக்குரலின் அழைப்பு ஒரு பேரருவியின் பேரிசையைப் போல அவனுக்குள் நிறைந்து கொண்டிருந்தது. அவன் அந்த இசையின் குரலைப்பின் தொடர்ந்து போனான்.
வானுக்கும் மண்ணுக்குமாய் ஒரு மின்னல்கற்றையைப் போல அந்த அருவி விழுந்து கொண்டிருந்தது. அருவியின் நீர்வெளிச்சத்தில் அந்தப் பகுதியே ஒளிவீசியது. ஒளிவீசும் அந்த நீரினூடே  நீர்த்திரையில் ஓவியம்போல ஒரு கருத்த பளியர் பெண் ஆடைகளின்றி குளித்துக்கொண்டிருந்தாள். வனத்தில் ஆடைகள் எதற்கு? வனம் என்ன ஆடை உடுத்தியா அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது? அந்தப்பெண்ணின் இறுகிய தசைகளும், பருத்த முலைகளும் வடிவான உடலும், கருப்பையாவின் புலன்களுக்குள் பேரலைகளை ஏற்படுத்தின. ஒரு கணம் நின்று பார்த்த கருப்பையா அருவியின் நீரோடு நீராக மாறிவிட்ட அந்தப்பெண்ணைத் தொழுதான். தன் உடலில் ஏற்பட்ட பேரலைகளின் முன் மண்டியிட்டு தொழுதான். புலனறிவல்ல. புலனுணர்வல்ல. புலனறிவல்ல. புலனுணர்வல்ல. என்று மாறி மாறிச் சொல்லிப் புலம்பினான். தன் கால்களில் புலன்களைக் கட்டிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடந்தான்.
புதர்ச்செடிகளுக்குள் நுழைந்தும் விலகியும் வனத்தின் கருவறையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் கருப்பையா. வனத்தின் செடிகளும் கொடிகளும் அவன் நடக்க, நடக்க, நடந்து வந்த பாதையை அவசர அவசரமாக மூடின. வனம் தன் ரகசியத்தை யாருக்கும் இத்தனை எளிதாக திறந்து காட்டியதில்லை. இத்தனை சுளுவாக வனத்தின் தொடப்படாத உள்ப்பிரதேசங்களை தன்விருப்பம்போல கையாளும் கருப்பையாவைக் கண்டு பூச்சிகள் பயந்து அலறின. குரலில்லாத மிருகங்கள் கூட குரல் கொடுத்தன. இப்போது வனத்தினுள் இருள் கூடிக்கொண்டே வந்தது. பூச்சிகள், பறவைகள், மிருகங்கள் இவற்றின் சப்தங்கள் தேய்ந்து கொண்டே வந்தன. காட்டின் அந்தரங்கப்பிரதேசத்தைத் தொட்டு விட்டான் கருப்பையா. முதன்முதல் காட்டின் கர்ப்பவாசலில் மனிதனின் தொடுகை. அந்தத் தொடுகையில் காட்டின் புலன்கள் விழித்துக்கொண்டன. எப்போதாவது நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த விழிப்பு. காட்டிற்கு கோடிக்கணக்கான கண்கள் விழித்தன. அந்தக் கண்கள் கருப்பையாவை உற்றுக் கவனித்தன. கருப்பையின் கண்களில் இருந்த காமத்தை உணர்ந்தன. கண்பார்வையில் தெரியாமல் போகுமா காமம்? ஒரு விரல் தொடுகையில் உணர முடியாத காமம் என்ன காமம்? கருப்பையாவின் காமத்தில் பொங்கிப்பிரவகித்த நித்தியத்துவத்தைக் காடு உணந்து கொண்டது. காட்டின் அத்தனை கண்களும் யோனியாக மாறின. காடு இன்பத்தில் முனகி அசைந்தது. பின்பு அவனை அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டது. அவன் காட்டின் கருவறையில் இருந்தான். அங்கே அமைதி. மனம் என்ற ஒன்று இல்லாமல் ஆன அமைதி. சத்வ, ரஜோ, தமோ, குணங்களற்ற அமைதி. காமக்குரோதங்கள் என்றால் என்னவென்றே தெரியாத அமைதி. கருவறைக்குழந்தையின் களங்கமற்ற அமைதி. அந்த அமைதியின் மறுபக்கமாக அடர்இருள் கவிந்திருந்தது. அவனைச்சுற்றிலும் பச்சை இருள். அந்த இருள் ஒளிர்ந்தது. பச்சைமரகதக்கல்லில் சூரியவொளி புகுந்து வெளிவருவதைப் போல அந்த இருள் அமைதியாக ஒளிர்ந்தது. அவனுடைய கண்களில் இது வரை காணாத காட்சியெல்லாம் தெளிவானது. கண்களின் ஒளி கூடி வந்தது.
அங்கேயும் வன உயிர்கள் இருந்தன. யானைகள், புலிகள், மான்கள், மிளாக்கள், காட்டெருமைகள், முயல்கள், மயில்கள், வித விதமான பூச்சிகள், எல்லாம் இருந்தன. பச்சை ஒளியில் தங்கள் பூர்வகுணங்களை மறந்து பச்சையொளியைத் தின்றே அலைந்து கொண்டிருந்தன. கருப்பையாவின் மீதும் பச்சையொளி புகுந்தது. அவன் அப்படியே நின்றான். பிரபஞ்சமே அசையாமல் நின்று விட்ட மாதிரி இருந்தது. சின்னஞ்சிறு பூச்சிகளிலிருந்து மாபெரும் யானைகள் வரை அப்படியே அசையாமல் நின்றன. காலம் தன் கணக்கை இழந்திருந்தது. அவன் எவ்வளவு நேரம் அங்கெ நின்று கொண்டிருந்தான் என்று தெரியவில்லை. அங்கிருந்த ஜீவராசிகள் தங்களுடைய ஒவ்வொரு அசைவையும் மிக மிக மெதுவாக செய்தன.  அவனுக்கருகில் ஊர்ந்து இழைந்து சென்ற மலைப்பாம்பு அவனைக் கடந்து செல்ல ஒரு யுகமானது. யுகங்களைக் கடந்து வாழ்ந்த காடு அவனுக்கும் சிரஞ்சீவித்தனத்தையும் அளித்தது. யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் தன் யோனிக்குள் ஏற்றுக் கொள்ளாத முண்டந்துறைவனம் கருப்பையாவை எப்படி ஏற்றுக் கொண்டது?
கருப்பையாவின் வித்துக்குள்ளேயே அவனுடைய முப்பாட்டன் கருப்பசாமியின் சித்தம் இருந்தது. பிறந்தபோதே சித்தம் குலைந்து பித்துப்பிடித்த கருப்பசாமி இந்த வனத்தின் மர்மத்தில் நுழைந்து இருபது ஆண்டுகள் வரை காணவேயில்லை. பித்தனைப் புலி அடித்துத் தின்றிருக்கும் என்று ஊரார் சொன்னார்கள். அவனுடைய தாய், தந்தையரும், உற்றார் உறவினரும், கருமாதி செய்து பிறவிக்கடனைத் தீர்த்தார்கள். காட்டுக்குள் வழிதவறிச் சென்ற கன்றைத் தேடிப்போன கந்தப்பனின் கண்களில் ஒரு ஆலமரத்தடியில் கன்று நின்றிருப்பதையும், அதற்கு பசுந்தழைகளைத் தின்னக்கொடுத்துக் கொண்டிருந்த சடாமுடியுடன் ஆடையில்லாத திகம்பரச்சித்தனையும் கண்டன. சித்தன் அவனைப் பார்த்தான். அந்தக் கண்களின் ஒளியில் கந்தப்பன் தன்னை மறந்து நின்றான். எவ்வளவு நேரம் நின்றிருப்பான் என்று தெரியவில்லை. திடீரென கண்விழித்த போது சித்தனைக் காணவில்லை. கன்று மட்டும் நின்று கொண்டிருந்தது.
கன்றுடன் காட்டுக்குள் இதுவரை யாரும் போகாத பாதைகளில் இதுவரை யாரும் காணாத மர்மங்களைக் காண கருப்பசாமி அலைந்து கொண்டிருந்தான். வனத்தின் காற்று அவனை இன்னும் இன்னும் என்று அழைத்துக் கொண்டு போனது. அவன் வளர்ப்புநாயைப்போல காற்றின் சொல்படி கேட்டான். அவனை ஒரு குகை வாசலில் கொண்டுபோய் நிறுத்திய காற்று பேரோலமாய் மாறி அந்தக் குகை வாசலை அடைத்து விட்டது. குகையில் சமாதியான கருப்பசாமியின் வித்தான கருப்பையாவிடம் கருப்பசாமியிடம் அந்தச் சாயலைக் கண்டபிறகு தான் காடு நெகிழ்ந்து கொடுத்தது. இல்லையென்றால் யாராக இருந்தாலும் ராஜாவாக இருந்தாலும் வெளியே துப்பிவிடும். கருப்பையா இப்போது அந்தக்குகைக்குள் இருந்த கதகதப்பில் தன்னை மறந்து ஒரு மீனைப்போல நீந்திக்கொண்டிருந்தான். குகையின் ஆழத்திற்கு மூழ்கி மூழ்கிப் போய்க்கொண்டிருந்தான்.
மூடியிருந்த கருப்பையாவின் இமைகளில் துடிப்பில்லை. கண்மணிகள் அசையவில்லை. உடல் ஒரு இறகைப்போல மாறிக்கொண்டிருந்தது. இன்னும் சிலநொடிகளில் காற்றில் பறந்து விடலாம். ஒரு மாயப்போர்வை கால்விரல்களிலிருந்து மெல்ல மேலே ஏறிக்கொண்டிருந்தது.
“ ஏங்க.. இந்தா பேரப்பிள்ளைக வந்திருக்காக..சின்னவனும் வந்திருக்கான் பாருங்க.. “ என்ற குரல் எங்கோ கேட்டது கருப்பையா இப்போது அவருடைய அம்மா பொட்டையம்மாளின் மடியில் படுத்திருந்தார். அம்மா தலைகோதினாள். அவளுடைய மாராப்பை ஒதுக்கிவிட்டு பருத்த இடது முலையைக் கையினால் பிடித்து வாயில் வைத்து உறிஞ்சினார். பொட்டையம்மாள் சிரித்துக்கொண்டே,
“ ஏலெ மூதி இப்ப உனக்கு வயசு எழுபத்தைஞ்சில.. இன்னமும் அம்மைட்ட பால் வேணுமாக்கும்..”
என்று வாகாய் உட்கார்ந்தாள். அவளுடைய தாய்மையின் அருள் கருப்பையாவின் உடலில் பூரணமாக இறங்கியது. பால் பொங்கி வந்தது. அவருடைய மனம் குளிர்ந்து முலையிலிருந்து வாயை எடுத்தார். வாயிலிருந்து பால் வெளியே வழிந்து கொண்டிருந்தது.
“ இந்தா பாலும் வெளிய வந்திருச்சி.. அவ்வளவு தான் சீவன் போயிருச்சி… “
என்ற சத்தம் கருப்பையாவின் மனக்குகைக்குள் ஒரு அசரீரியைப் போல ஒலித்து மறைந்தது.

நன்றி - கதைசொல்லி

No comments:

Post a Comment