1.
செவ்வாய்
மலையாளத்தில்- கிரேஸி
தமிழில் - உதயசங்கர்
பரண் மீது
போட்டிருந்த ஒரு சிறிய காகிதப்பெட்டி தான் அவர்களுடைய வீடாக இருந்தது. அதற்கு மேல்கூரையில்லை.
பெட்டியின் சுவர்களில் பல நிறங்கள் உறைந்து கிடந்த வண்ணக்கலவைத்தட்டில் தலை சாய்த்து
தூரிகை உறங்கிக் கொண்டிருந்தது. அருகில் ஒரு பெண்பொம்மை இருந்தது. ஆறு கோணத்தில் வலை
பின்னி காத்துக்கொண்டிருந்த ஒரு சிலந்தியை உற்றுப்பார்த்த படி மல்லாந்து கிடந்தது.
அவளுடைய ஒரு கண்ணை யாரோ நோண்டியெடுத்து விட்டார்கள். கவனித்துப்பார்க்கிற யாருக்கும்
அந்த ஒரு கன்ணில் ஒரு காட்சியும் தெரியாது என்பது புரியும். வால் முறிந்து போன ஒரு
எலிக்குட்டி இருந்தது. அதன் பஞ்சுத்தலையில் இருந்த கருப்புமுத்துக்கண்கள் எதையோ பார்த்துப்
பயந்தமாதிரி மங்கிக் காணப்பட்டன. கருப்பு ஞெகிழி மூக்கு உரிந்த ஒரு குட்டிக்கரடி இழந்த
வாசனைகளை மீண்டும் பிடித்து விட ஆசைப்பட்டு அட்டைப்பெட்டியின் அடியில் முகத்தை புதைத்துக்
கிடந்தது. சிறகுகள் ஒடிந்த பச்சை பனைஓலைக்கிளி பாதி கிறக்கத்தில் அகாயத்தின் நீலநிறத்தைக்
கனவில் காண்பது போல தோன்றியது.
கோடைமழை
ஓட்டின் மீது விழுந்து முணுமுணுக்கிற சத்தம் கேட்டு குட்டிக்கரடி முகத்தை உயர்த்தினான்.
“ நண்பர்களே!
இதோ மழை! “ என்று கூப்பிட்டு கத்தினான். சட்டென அவனுடைய குரல் சங்கடத்தால் தடுமாறியது.
“ கஷ்டம்!
நாம இப்போ உள்ளே அல்லவா இருக்கோம்.. வெளியில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..”
மழையின்
சத்தம் கேட்டு பெண்பொம்மையின் ஒரு கண்ணில் ஒரு சிறு ஒளி மின்னியது. எலிக்குட்டி வெடித்துச்
சிரித்து ஒரு பாட்டுப் பாடினான்.
“ மழையும்
பெய்யுது
மத்தளம்
கொட்டுது
மந்தாரப்பூ
பூத்து
வாசம்
வீசுது..”
எலிக்குட்டி
மூக்கைச் சுளித்து
“ மீதிப்பாட்டு
மறந்து போச்சே! “ என்றது.
பனையோலை
பச்சைக்கிளி நடுக்கத்துடன்,
“ நல்லதாப்போச்சு..
என்னுடைய சிறகுகள் ஒடிந்தபிறகு எனக்கு மழையைப் பிடிக்கலை.. மழைப்பாட்டும் பிடிக்கலை..”
என்றது.
அப்போது ஓட்டின் விரிசல்வழியே நிறப்பலகையில் மழைத்துளிகள் சொட்டுச் சொட்டாய் விழத்
தொடங்கின. தூரிகை திடுக்கிட்டு எழுந்து சிரித்தது.
“ ஆகா
இனிமேல் என்னால் சித்திரம் வரைய முடியும்.. உறைந்திருந்த நிறங்கள் எல்லாம் மழைத்தண்ணீரில்
கரைவதைப் பார்த்தீர்களா? “
வெளியில்
மழை குலுங்கிச் சிரித்தபடி எங்கேயோ போய் விட்டது. தூரிகை வேகமாக அட்டைப்பெட்டியின்
சுவர்களில் சித்திரம் வரையத் தொடங்கியது. இளநீல நிறத்தைத் தொட்டு ஒரு ஆற்றை வரைந்து
பெருமூச்சு விட்டது.
“ முன்பு
ஆறு இப்படியிருந்தது.. நல்ல சுத்தமான பளிங்குத் தண்ணீர்..”
இப்போது
என்னவாயிற்று என்று எல்லோரும் தூரிகையை உற்றுப்பார்த்தனர். அது சங்கடப்பட்டது.
“ இப்போது
வெறும் சகதிக்குட்டையா இருக்கு..”
தூரிகை
இன்னொரு சித்திரம் வரையத்தொடங்கியது. நீல நிறமுள்ள தீற்றல்கள் வருவதைப் பார்த்த குட்டிக்கரடி,
“ உனக்கு
நீல நிறச் சித்திரங்கள் மட்டும் தான் வரையத்தெரியுமா? “
தூரிகையின்
குரல் கீச்சிட்டது.
“ இல்லையில்லை…முன்பெல்லாம்
தூரத்திலிருந்து பார்க்கும்போது.. மலைகளெல்லாம்.. நீலநிறத்தில் இருந்தன.. நிறைய காடுகள்
இருந்ததனால் அப்படித் தெரிந்தது.. இப்போது எல்லாம் மொட்டையாகி விட்டது இல்லையா? அது
மட்டுமல்ல.. அவற்றின் மண்ணும் பாறையும் மனிதர்கள் அள்ளிக்கொண்டு போய் விட்டார்கள்..”
பின்னர்
தூரிகை ஒரு மயானத்தை வரைந்தது. வரைந்த பிறகு உறைந்த குரலில் தொடர்ந்து சொன்னது,
“ முன்னால்
இது ஒரு பெரிய வனமாக இருந்தது.. எல்லாவற்றையும் மனிதர்கள் அழித்து விட்டார்கள்.. இப்போது
இங்கே ஒரு புல் கூட முளைக்காமல் மயானமாகி விட்டது..”
அட்டைப்பெட்டிக்குள்ளே
ஒரு அனல்காற்று வீசி அவர்களை வாட்டத்தொடங்கியது. அப்போது பனையோலைப் பச்சைக்கிளி பயத்துடன்
சொன்னது.
“ மழை
பிடிக்கலைன்னு நான் இனி எப்போதும் சொல்லமாட்டேன்..”
கடைசியில்
ஒரு சிவப்புக்கோளத்தை வரைந்த தூரிகை சொன்னது,
“ இது
தான் செவ்வாய்.. மனிதர்கள் இப்போது செவ்வாயில் குடியேறத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்..
அதற்குச் செலவாகும் பணத்தை வைத்து இந்த பூமியை செழுமைப்படுத்தலாம்.. அதெப்படி? பயன்படுத்தி
விட்டு தூக்கியெறிவது தானே மனிதர்களின் பழக்கம்.. இந்த மாதிரி ஒழுக்கமில்லாத மனிதர்கள்
செவ்வாய்க்குப் போனால் என்னாகும்? அதையும் குட்டிச்சுவராக்குவார்கள்!..”
அவர்களுக்கு
மனிதர்களைப் பற்றி நினைத்து போதும் போதும் என்றாகிவிட்டது. பெண்பொம்மையின் ஒற்றைக்கண்ணில்
உறைந்த பார்வை திரும்பி வந்தது. எலிக்குட்டியின் கருப்புமுத்துக்கண்களில் பழையபடி ஒளி
மங்கியது. குட்டிக்கரடி அட்டைப்பெட்டியின் அடியில் முகத்தைப் புதைத்தது. பனையோலை பச்சைக்கிளி
மறுபடியும் கண்களை மூடி பாதிமயக்கத்தில் ஆழ்ந்தது. பிறகு ஒரு கொட்டாவி விட்ட தூரிகை
நிறப்பலகையில் தலை சாய்த்து உறங்கிப்போனது.
நன்றி - பொம்மி
சிறப்பு.
ReplyDelete