என் அன்புக்குரிய பஸாரவ்!
வணக்கம்.
கிட்டத்தட்ட நாற்பத்தியைந்து
ஆண்டுகளுக்கு முன்னால் இவான் துர்கனேவின் தந்தையரும் தனயர்களும் நாவலை வாசித்தபோது
நீங்கள் அறிமுகமானீர்கள்.
எங்கள் இளமைப்பருவத்தின்
கட்டற்ற , எதையும் கேள்வி கேட்கவும், எடுத்தெறிந்து
பேசவுமான மனப்போக்கு நிஹலிஸ்ட்டான உங்கள் மீது மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது.
நாற்றமடிக்கும் இந்தப் பூர்ஷ்வா சமூகத்தை உங்களைப் போலவே எள்ளி நகையாடினோம்.
எல்லாவற்றையும் தகர்த்து விட்டு புதியவற்றை நிர்மாணிக்கவேண்டுமென்று ஆசைப்பட்டோம்.
அதற்கு புரட்சி ஒன்றுதான் வழியென்று தோழர்களின் பின்னால் அணிவகுத்தோம். ஆனால் பாருங்கள் பஸாரவ் இன்னமும் புறப்பட்ட இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம்.
அறிவும் அலட்சியமும்
நிறைந்த பஸாரவ், நாவலில் உங்களுடன் வந்த அர்க்காதியை மறக்க முடியுமா?
அவரும் நீங்களும் காதலித்த அன்னா தான் எப்படிப்பட்ட பெண்! பிரபுக்குலச்சீமாட்டியாகவும் சாதாரணப்பெண்ணாகவும் கணப்பொழுதுகளில்
மாறும் அவளுடைய மனப்போராட்டத்தை துர்கனேவ் எவ்வளவு அழகாகப் படைத்திருக்கிறார்.
பஸாரவ் நீங்கள் இறக்கும்போது உங்கள் நெற்றியில் அவள் தரும் முத்தத்தின்
ஈரம் இன்னும் காயவில்லையே.
ஆனால் என்ன ஆச்சரியமென்றால் நிக்கலாயின் மனைவியான ஃபேனிக்ஷாவின் மீது மையல் கொண்டீர்கள். அதற்காக பாவெலுடன் துவந்த யுத்தத்திலும்
கலந்து கொண்டீர்கள்.
பழைய நிலப்பிரபுத்துவக்கால விழுமியங்களுக்கும் புதிய ஜனநாயக விழுமியங்களுக்குமிடையிலான முரண்பாட்டை
உரத்துக் கூவிய நீங்கள் குழப்பமானவாராகத்
தெரிவதில் ஆச்சரியமொன்றுமில்லை.
உங்கள் தந்தை வஸீலிக்கும் தாயார் அரீனா வுக்கும் துர்கனேவ் கோவில் கட்டியிருக்கிறார். அன்பின் திருவுருக்களான அவர்கள் வரும் காட்சியிலெல்லாம் என் கண்கள் தளும்புவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆனால் நீங்கள் தான் நிஹலிஸ்டாயிற்றே, அவர்களுடைய அன்பும் கூட பழஞ்சரக்காகத்
தான் தெரிந்தது உங்களுக்கு.
இந்த விஷயத்தில் நான் உங்களுடன் ஒத்துப் போக முடியவில்லை.
அர்க்காதி, கூ க் ஷினா, ஆன்னா, பாவெல், நிக்கொலாய், பியோத்தர், காத்யா, என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் துர்கனேவ்.
துர்கனேவின் மூன்று காதல்கதைகளை வாசித்து விட்டு தலை சுற்றித் திரிந்த எங்கள் கதாநாயகனாக நீங்கள் பஸாரவ் நீங்கள் தான் உருவானீர்கள். இதையும் கூட எள்ளி நகையாடலாம். உங்களை ஆசானாக வரித்த அர்க்காதியையே
கைவிட்டவர் தானே நீங்கள்.
அதோ இரண்டு முதியவர்கள் உங்கள் கல்லறைக்குச்
செல்லும் ஒத்தையடிப்பாதையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களுக்குப் பின்னால் சிவப்புநிற டூலிப் மலர்களுடன் நடக்கிறேன்.
எங்கள் அன்புக்குரியவரே!
நீங்கள் மரிக்கவில்லை.
மரிக்கவும் மாட்டீர்கள்.
எங்கள் துர்கனேவ் உங்களை அந்தளவுக்கு உலக இலக்கியத்தின் சிகரத்தில் வைத்திருக்கிறார்.
இந்த சிவப்பு நிற டூலிப் மலர்களை என் பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு என் வந்தனங்கள்.
துர்கனேவுக்கு என் பேரன்பு.
தொடர்புக்கு - +91 97515 49992
வெளியீடு - நூல்வனம்
|
|
No comments:
Post a Comment