ஸ்தெப்பி புல்வெளியும் சிங்கிஸ் ஐத்மாத்தவும்
உதயசங்கர்
நாற்பது நாற்பத்தியைந்து
ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டியின் தென்திசையில் ஆ.வை.மேல்நிலைப்பள்ளியைக் கடந்து விட்டாலே ஆப்பிரிக்காவின் சவானா காடுகளைப் போல புதர்க்காடுகளும்
புல்வெளிகளும் தொடங்கிவிடும்.
ஆள்நடமாட்டம் இருக்காது. எப்போதாவது தென்படும் ஆடு மாடு மேய்க்கும் இடையர்களைத்
தவிர வேறு மனிதர்களைப் பார்க்க முடியாது. கோவில்பட்டி ஊரே சிறிய மலைத்தொடரின் மீது அமைந்தது தான். அப்படியமைந்த கதிரேசன் கோவில் மலை தான் எங்கள் கனவுபூமி. மலையின் நான்கு திசைகளிலும் பச்சையும் மஞ்சளும் கலந்த சுக்குநாறிப்புல்
( இவை பச்சையாக இருக்கும்போதே தீ வைத்தால் எரியும்.) காற்று வீசும் திசைக்கேற்ப கடலைப் போல அலையலையாக வந்து கொண்டேயிருக்கும்.
மலைக்குமேல் இருக்கும் பாறையில் நின்று பார்த்தால் நான்கு திசைகளிலிருந்து புற்களின் அலைவீசும்போது நாங்கள் ருஷ்யாவின் ஸ்தெப்பி புல்வெளியில் இருப்பதாகக்
கனவு காண்போம். எதிரே விரிந்திருக்கும் பரந்த பொட்டல் வெளியில் தானியாரின் துயர்மிகுந்த பாடல் ஒலிக்கிறது. அந்தப் பாடலைக் கேட்டு ஜமீலா துணுக்குற்றதைப் போல ஸ்தெப்பியும் ஒரு கணம் துணுக்குற்று அசைவற்று நிற்கிறது.பின் அந்தத் துயரைத்தாங்க
முடியாமல் பெரும் ஓலத்துடன் ஓடி விட யத்தனிக்கிறது.
இதோ ஜமீலா என் அன்புக்குரிய ஜமீலா இதயம் துடிதுடிக்க இதுவரை வாழ்க்கையில் தான் கண்டிராத காதலின் பெருங்காற்றில் அலைப்புறுகிறாள்.
தானியாரின் ஏக்கத்துக்கும்
ஜமீலாவின் காதலுக்கும்
சாட்சியாக இருக்கும் அவளுடைய மச்சினன் கிச்சினே பாலா போருக்குச் சென்றிருக்கும்
தன்னுடைய அண்ணனைப் பற்றி நினைக்காமல் ஜமீலா தானியாருடன் செல்ல வேண்டுமென்று
மனதார வேண்டுகிறான்.
தானியாரின் குதிரைகள் பாடலைக் கேட்பதற்காக வேகத்தைக் குறைக்கின்றன. அந்தத் தருணத்துக்காகக்
காத்திருந்ததைப் போல ஜமீலா தானியாரின் வண்டியில் ஏறி அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்கிறாள். எல்லாம் சில நொடிப்பொழுதில் நடந்து விட்டது. ஜமீலா இறங்கியதும்
தானியாரின் வண்டியில் ஏறியதும் இயல்பானதென்று நினைக்கிறான்
கிச்சினே பாலா.
இதோ அவர்கள் ஸ்தெப்பி புல்வெளியைக் கடந்து மேற்கு திசையில் மறைகிறார்கள்.
கிராமமிருக்கும் கிழக்கு திசையில் பெருங்களிப்புடனும் பெருஞ்சோகத்துடனும் கிச்சினே பாலா போய்க்கொண்டிருக்கிறான்.
கதிரேசன் கோவில் மலையிலிருந்து நான் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மனம் விம்முகிறது.
ஏக்கப்பெருமூச்சு தோன்றுகிறது.
மேற்கில் மறைந்து கொண்டிருக்கும் சூரியன் இதுவரை இதயத்தின் ஆழத்தில் அமிழ்ந்திருந்த
சோகங்களை வெளிக்கொண்டு
வருகிறான். தாங்க முடியாத துயருடன் கண்ணில் கண்ணீர் பொங்கும்போது என் முதுகில் ஒரு கை ஆறுதலாய் தடவிக் கொடுக்கிறது.
எனக்கருகில் சிங்கிஸ் ஐத்மாத்தவ் தனது கிர்கீசிய புன்னகையுடன் தன் தோளில் என் தலையைச் சாய்த்துக் கொள்கிறார்.
இப்போது துயர் மெல்ல மாறுகிறது. சூரியனின் பொன்னந்திக்கதிர்கள் மகிழ்ச்சியைக்
கொண்டு வருகின்றன. நான் சிரிக்கத்தொடங்கினேன். தூய அன்பின் பிரவாகத்தில் மூழ்கி முத்தெடுத்தவனைப் போல மகிழ்ச்சியில்
பிதற்றினேன். சிங்கிஸ் மாறாத புன்னகையுடன் எதிரே இருந்த ஸ்தெப்பி புல்வெளியைப்
பார்த்துக் கொண்டிருந்தார்.
சோவியத்தின் இலக்கிய சிகரம் சிங்கிஸ் ஐத்மாத்தவின்
அனைத்து புதினங்களும்
புகழ் பெற்றவை. அவருடைய அன்னை வயல், குல்சாரி, லாரி டிரைவர், முதல் ஆசிரியர், ஜமீலா, போன்றவை எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் செம்மார்ந்த உணர்வைத் தருபவை. வால்யூம் வால்யூமாக எழுதி செவ்வியல் பிரதியென்று நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் காலத்தில் மிகக்குறைந்த பக்கங்களில் காவியங்களைப்
படைத்தவர் சிங்கிஸ். ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கையையும் வரலாற்றையும்
புவியியலையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருக்கும். அதிலும் குல்சாரி நாவல் ஒரு குதிரையைப் போலவே சிந்தித்து எழுதப்பட்ட அற்புதம். அன்னைவயல் கிராமப்புற சோவியத்தின் ஆன்மாவை வெளிக்கொணர்ந்த நாவல். முதன்முதல் நமக்குப் பாடம் சொன்ன ஆசிரியரை மறக்க முடியுமா? மனிதர்களின் அபூர்வ குணங்களை அவை மேன்மையானவையோ, கீழ்மையானவையோ
அதை வெளிச்சம் போடுவது கலைஞனின் வேலையல்லவா?
உங்களுக்குத் தெரியுமா?
உண்மையாகவே தொண்ணூறுகளில்
சிங்கிஸ் ஐத்மாத்தவ் கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி
சென்று கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியக்கூட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார். அப்போது அவ்வளவாக வெளியில் தெரியவில்லை.
அது பற்றிய தகவல்களிருந்தால் தோழர்கள் ஆவணப்படுத்த
வேண்டும்.
இப்போது தேடிப்பார்க்கும்போது கிடைத்த ஒட்டகக்கண் என்ற மிகச்சிறிய குறுநாவலும்
ஸ்தெப்பி புல்வெளியைப்
பற்றித்தான் பேசுகிறது.
அனர்ஹாய் ஸ்தெப்பி வெளி.
அந்த ஸ்தெப்பி வெளியில் ஒரு சுனையூற்று. ஒட்டகக்கண்ணைப் போலிருக்கும். அதிலிருந்து
தான் குடிப்பதற்கான
தண்ணீர் எடுக்க வேண்டும். அங்கே தான் அந்த நிலத்தைப் பண்படுத்தி விவசாயத்துக்குத் தயார்படுத்த சோவியத்தின்
வழிகாட்டலில் ஸ்ரோக்கின் தலைமையில் ஒரு சிறிய குழு உழைக்கிறார்கள்.
அதில் புதிதாக வந்து சேரும் கெமலை வந்ததிலிருந்தே அபக்கீருக்குப் பிடிக்கவில்லை.
படிப்பாளி படிப்பாளியென்று
மூச்சுக்கு முன்னூறு தடவை வன்மத்துடன் கேலி செய்கிறான். கடின உழைப்புக்குப்
பழக்கப்பட்டிராத கெமல் உழைப்பை வசப்படுத்துகிறான். யாரிடமும் சுமூகமான உறவில்லாத கடுமையான உழைப்பாளியான அபக்கீர் தன்னையே நம்பிய கலீபாவையும் ஏமாற்றுகிறான்.
" யுகங்களாக மனிதனின் பாதம்படாத அதியழகான அனர்ஹாய் ஸ்தெப்பி, குர்டாய் பீடபூமி முதல் பல்ஹாஷ் ஏரிவரை நீண்டு கிடக்கிறது. பழைய காலத்தில் பெரிய குதிரை மந்தைகள் அனர்ஹாய் குன்றுகளில்
வழிதவறி எங்கோ மறைந்தனவென்றும் வெகுகாலம் கழித்து காட்டுக்குதிரைகளாக ஸ்தெப்பி வெளியில் அலைந்து திரிந்தனவென்று
இதிகாசங்கள் கூறுகின்றன. அனேகப் போராட்டங்களின் மௌனசாட்சியான
அனர்ஹாய், நாடோடி வம்சங்களின் விளையாட்டுத் தொட்டிலாயிருந்தது. நமது காலத்தில் அனர்ஹாய் மிகப்பெரிய கால்நடை வளர்ப்புக் கேந்திரமாக மாறும். அதற்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது.. "
மங்கோலியர்களும், கல்மிக்குகளும்,
கிர்கீசியர்களும், கிப்சாக் இனத்தவர்களும் வாழ்ந்த வறண்ட பிரதேசத்தில் நடக்கின்ற நிலத்திற்கும்
மனிதனுக்கும் நடக்கின்ற போராட்டத்தைக் கண்களால் பார்க்கிற சாட்சியாக ஒட்டகக்கண் சுனையூற்று இருக்கிறது.
அபக்கீரின் அத்தனை கொடுமைகளையும் வன்மத்தையும் சகித்துக் கொண்டு கெமல் போராடுகிறான்.
ஒருவகையில் சோவியத்தில்
படித்தவர்க்கத்தின் மீது விவசாய வர்க்கத்தின் கோபத்தின் வெளிப்பாடாக அபக்கீர் இருக்கிறான்.
அந்த வறண்ட ஸ்தெப்பியின் தென்றலாக சுனையூற்றுக்கு
ஆடுகளை மேய்த்துக் கொண்டுவரும் ஒரு பெண் இருந்தாள். பெயர் தெரியாத அவளைச் சந்திக்க ஒவ்வொருமுறையும்
ஏங்குகிறான் கெமேல்.அவளும் அவனை எதிர்பார்த்து
சுனையூற்றில் காத்திருக்கிறாள்.
இளங்காதலின் சுனையாகவும்
இருக்கிறது ஒட்டகக்கண்.
இருளில் ஸ்தெப்பி வெளி பேசுகிறது. கெமேல் காணும் கனவுகளை அதுவும் காண்கிறது. அதை அவளாலும் காணமுடியும். புரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறான் கெமேல். ஆனால் அந்தப் பெண்ணை அதன்பிறகுப் பார்க்கவில்லை. ஆனால் கெமேலின் கனவு நிச்சயம் நிறைவேறுமென்று கெமேல் உறுதியாக நம்பினான்.
இந்தக்கதை 1956 -ல் எழுதப்பட்ட கதை. மனித குணபேதங்களை இவ்வளவு இயல்பாக அதன் குரூரத்துடன்,
பச்சையாகச் சொல்ல முடியுமா? ஆம். சிங்கிஸால் முடியும். கடுமையான உழைப்பாளியான
அபக்கீர் கடைசிவரை தன் வஞ்சகத்தை, வன்முறையைக்
கைவிடவில்லை. கலீபா, ஸதபேக், ஸரோக்கின், அல்டோய், அல்டிரோய் கலீபா என்று எல்லாக்கதாபாத்திரங்களும் அவரவர் இயல்பான வளர்ச்சியை அடைகிறார்கள்.
அபூர்வமான கதை ஓட்டகக்கண்.
ஆச்சரியம் தரும் மற்றுமொரு தற்செயல் நான் முன்னே குறிப்பிட்ட கதிரேசன் கோவில் ஸ்தெப்பி புல்வெளிக்கு
அடுத்து இருந்த ஒரு குன்றின் மடியில் ஒரு சுனை இருந்தது. பள்ளிப்பருவத்தில் அடிக்கடி நண்பர்களுடன் அங்கே சென்று விளையாடியிருக்கிறேன். ஆழ்ந்த, கருத்த ஒற்றைக்கண்ணினால் அந்த ஊற்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது. நாங்கள் அதில் நீரருந்தியிருக்கிறோம்.
இப்போது அந்தச் சுனையில்லை. குன்றில்லை. ஸ்தெப்பி புல்வெளியுமில்லை. பசும் மஞ்சள் அலைகளும் இல்லை மேற்கில் மறையும் . சூரியன் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தனிமையில் கிசுகிசுக்கும் புலம்பும் ஆர்ப்பரிக்கும்
காற்று கூட இல்லை.
ஆனால் தூரத்தில் தெரிகிற அந்தப் பெண் யார்?
ஒட்டகக்கண் ஊற்றில் பார்த்த பெயரறியாப் பெண்ணா? இல்லை.
. தானியாருடன் ஓடத்தயாராக இருக்கும் ஜமீலாவா?
சிங்கிஸ் ஐத்மாத்தவ் உங்கள் கரங்களைக் கொடுங்கள்.. ஒரு முறை கண்களில் ஒற்றிக் கொள்கிறேன்..
மொழிபெயர்ப்பு - யூமா வாசுகி.
No comments:
Post a Comment