Monday, 8 July 2024

ஆறாவது வார்டுக்குள் சுழலும் உலகம்

 

ஆறாவது வார்டுக்குள் சுழலும் உலகம்

 


உதயசங்கர்

 

என் இனிய ஆசான் செகாவ்

 

மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் செகாவ்.

ஒருமுறை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.

 

 பெண்மை இலகும் உங்கள் முகத்தில் சுடர்விடும் வெட்கப் புன்னகையை நான் ரசிக்கிறேன்.

 

உங்கள் கதைகளைப் படித்தே யதார்த்தவுலகை எப்படியெல்லாம் சித்தரிக்கலாமென்று கற்றுக் கொண்டேன். அப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா என்பது வேறு விஷயம்

 

ருஷ்யாவில் இலக்கிய மேதைகளான துர்கனேவ், டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, லெர்மந்தேவ், கார்க்கி, போன்ற ஜாம்பவான்களெல்லாம் தண்டி தண்டியாக நாவல்களை எழுதிய காலத்தில்  நீங்கள் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் மட்டுமே எழுதிச் சாதித்தீர்கள். எங்கள் அன்புக்குரிய வண்ணதாசன் அண்ணாச்சியைப் போல. அதனாலேயே உங்களை மிகவும் பிடிக்கும்.

 

திடுக்கிடும் திருப்பங்களோ, அதிர்ச்சிகளோ, நம்ப முடியாத சம்பவங்களோ, யாரும் அறியாத மர்மமான சம்பவங்களோ உங்கள் கதைகளில் கிடையாது

 

ஸ்தெப்பி புற்களில் சொட்டும் பனித்துளிகள் சேர்ந்து ஓடையாகி ஓடுவதைப் போல அத்தனை தெளிவும் அழகும், எளிமையும் இலங்கும் கதைகளையே எழுதினீர்கள். மேலோட்டமாக வாசிக்கும்போது சாதாரணமாகத் தொடங்கி சாதாரணமாக முடியும். இதிலென்ன இருக்கிறது தெரிந்தது தானே என்று எல்லாரும் நினைக்கும்படி இருப்பது தான் உங்கள் கலையின் வெற்றி.

 

ஒவ்வொரு கதையும் வாழ்வின் சாதாரணத்திலுள்ள அசாதாரணத்தை இம்ப்ரஸினிச ஓவியம் போல, அதன் வண்ணத்தீற்றல்களைப் போல, எங்கள் மனதை விட்டு அகல்வதேயில்லை. அறுநூறுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருந்தாலும் ஒருபோதும் கதாபாத்திரங்களுக்குப் பஞ்சம் வந்ததேயில்லை.

 

மனதை உருக்கும் வான்கா, அரசியல் நையாண்டியான பச்சோந்தி, நாய்க்காரச்சீமாட்டி, அன்புக்குரிய டார்லிங், மூன்று ஆண்டுகள், என்று எத்தனை கதைகளைப் படித்துக் கொண்டாடியிருப்போம்

 

ஆனாலும் உங்கள் கதைகளின் சிகரம் ஆறாவது வார்டு தான். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு பரிமாணம் காட்டுகிற அற்புதமான படைப்பு

 

என்னை ஏன் இங்கே வைத்திருக்கிறீர்கள்?

 

நீங்கள் நோயுற்றவராய் இருக்கிறீர்கள் அதனால் தான் 

 

ஆம் நான் நோயுற்றவன் தான். ஆனால் நூற்றுக்கணக்கான பைத்தியக்காரர்கள் சுதந்திர மனிதர்களாக வெளியே இருந்து கொண்டிருக்கிறார்கள் சித்த சுவாதீனம் உள்ளவர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்தி இனம் கண்டுகொள்ளத் தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள்.

 இந்த ஒரே காரணத்தால் இவர்கள் சுதந்திரமாய் வெளியே இருக்கிறார்கள்.

 பிறகு ஏன் நானும் பரிதாபத்துக்குரிய இவர்களும் இங்கே கிடந்து அழிய வேண்டும்ஏனையோர் செய்யும் குற்றங்களுக்காக எங்களை பலிகிடாக்கள்  ஆக்குகிறீர்களே ஏன்?

 இங்குள்ள எங்களை விட நீங்களும் உங்கள் உதவியாளரும் மருத்துவமனை மேலாளரும் மற்றுமுள்ள அசட்டு கும்பல் அனைத்துமே ஒழுக்க நெறியில் படுமட்டமானவர்கள்.

 பிறகு ஏன் நீங்கள் அங்கே இருக்க நாங்கள் இங்கே இருக்க வேண்டும்?

.இது என்ன தர்க்க நியாயம்

 

ஒழுக்க நெறி தர்க்க நியாயம் இவற்றுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. யாவும் சந்தர்ப்பவசத்தை பொறுத்தவையாகும். இங்கு கொண்டு வந்து விடப்படுகிறவர்கள் இங்கே இருந்து வருகிறார்கள்கொண்டு வரப்படாதவர்கள் சுதந்திர மனிதர்களாய் வெளியே இருக்கிறார்கள் அவ்வளவுதான் நீங்கள் உளநோயாளியாகவும் நான் டாக்டராகவும் இருப்பதில் ஒழுக்க நெறிக்கோ தர்க்க நியாயத்திற்கோ இடமில்லை முற்றிலும் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தது இது

 

ஆந்திரேய் எபீமிச்சுக்கும் இவான் திமீத்திரிச்சுக்குமிடையில் நடக்கும் உரையாடலில் தான் எத்தனை அர்த்தம் பொதிந்திருக்கிறது.

 

உலகமே ஆறாவது வார்டாகவும் அதில் மனநலமுள்ளவர்கள் பைத்தியக்காரர்களாகவும், சந்தர்ப்பவாதிகளும் திருடர்களும் அதிகாரமிக்க காவல்காரர்களாகவும் மாறிவிடுகிற வாழ்வின் அபத்தத்தை செகாவ் என்ற மகத்தான கலைஞன் எவ்வளவு அற்புதமாகத் தீட்டி விடுகிறான்.

 

என் பிரியத்துக்குரிய செகாவ் உங்கள் ஆறாவது வார்டு கதை உலகில் பொய்மையும், போலித்தனமும், பாசாங்கும், சந்தர்ப்பவாதமும் இருக்கும்வரை சாகாவரம் பெற்றதாகத் திகழும்

 

உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

வணக்கங்கள்!

கொடுங்கள் உங்கள் கரங்களை பற்றி ஒரு முறை முத்தமிடுகிறேன்.

 

வெளியீடு - நூல்வனம்

தொடர்புக்கு - +91 97515 49992



 


No comments:

Post a Comment