எனதருமை நாஸ்தென்கா!
உதயசங்கர்
மீண்டும் நாம் சந்தித்து விட்டோம். உங்கள் கைகளைக் கொடுங்கள். உள்ளங்கையின்
கதகதப்பை உணர்ந்து கொள்கிறேன். எத்தனையோ முறை சந்தித்திருந்தாலும் ஒவ்வொரு சந்திப்பும் முதல் சந்திப்பைப்
போலவே என்னிடம் ஏக்கத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. நான் உணர்ச்சிவயப்பட்டவனாகவேயிருக்கிறேன். என்னால் உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்த முடியவில்லையென்பதற்காக உன்னிடம் மன்னிப்பைக்
கோருகிறேன்.
தனிமையின் புதைசேற்றில்
விரக்தியுடன் புதைந்து கொண்டிருக்கும் தனியனான என்னிடம் இரக்கம் கொண்டு வந்திருக்கிறீர்களென்று நினைக்கிறேன்.
அன்புக்குரியவரே நாஸ்தென்கா, சலிப்பாகிவிட்டது. நீண்ட நாட்கள் வாழ்ந்ததைப் போல மனம் சோர்வடைந்து விட்டது.
ஆனால் உங்களைச் சந்தித்த இக்கணம் மீண்டும் நம்பிக்கை துளிர்விடுகிறது.
அப்படி என்ன மாயம் செய்கிறீர்கள்? சின்னஞ்சிறுபெண்ணே எனதருமை நாஸ்தென்கா,
1848-ல் தாஸ்தயேவ்ஸ்கி
என்ற மகத்தான படைப்பாளியெழுதிய வெண்ணிற இரவுகளில் பீட்டர்ஸ்பர்க் நகரின் புறநகர்ப்பிரதேசத்தில் வாய்க்காலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த வடிவத்திலேயே
1981 ஆம் ஆண்டு உங்களைச் சந்தித்தேன், அந்தக் கதையின் பெயரில்லாத நாயகனைப் போல.
உங்களைப் பற்றி எழுதுவதோ யோசிப்பதோ எப்போதுமே சலிப்பதில்லை. எத்தனை முறை எழுதி இருப்பேன் எத்தனை பேரிடம் உங்களைப் பற்றி பேசி இருப்பேனென்று எனக்கே தெரியாது.
காதல் பொங்கித்ததும்பும் என்னுடைய இளமைக் காலத்தில் 21-12-1981 அன்று பனிபொழியும்
மார்கழி இரவில் உங்களைச் சந்தித்தேன் நாஸ்தென்கா. காதலனுக்காகக் காத்திருக்கும் இளம்பெண்ணாக
அறிமுகமானீர்கள். இப்போதும் வெண்ணிற இரவுகளில் நீங்கள் அப்படியே இருக்கிறீர்கள்.
ஆனால் நானோ அன்பின் துளிச் சாயை கூடத்தெரியாத நீண்ட பாலைவனத்தைக்
கடக்கும் கிழட்டு ஒட்டகத்தைப் போல மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன்
நாஸ்தென்கா.
உங்களுக்காவது உங்கள் மீது அன்பு கொண்ட ( அது போரடித்த போதும் ) ஒரு பாட்டி இருந்தாள். உங்களை ஏமாற்றிவிடுவாரோ என்று வாசகர்களை அச்சப்பட வைத்து கடைசியில் காதலின் பெறுமதியை உணர்த்திய காதலர் இருந்தார். ஆனால் நானோ
பெயரில்லாத அந்தக் கனவுலகவாசியைப் போலவே தனிமை இழைகளினால் கற்பனைக் கோட்டைகளைக்
கட்டி இடித்து கட்டி இடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அப்போதும் எனக்குப் பெண்களிடம் பேசிப் பழக்கமில்லை.
முதல்முதலாக ஆத்மார்த்தமாகப்
பேசியதே உங்களிடம் மட்டும் தான் நாஸ்தென்கா என் மதிப்பிற்குரியவரே.
என்னுடைய அறியாமையினால்
நான் உளறியிருந்தால்
என்னை மன்னித்து விடுங்கள். தண்டனிட்டு கேட்டுக் கொள்கிறேன்.
உணர்ச்சிகரமான ஒரு சிறு குறுநாவலில் காலம் தாண்டிய கதாபாத்திரமாக நாஸ்தென்கா உங்களை என் அன்புக்குரிய
தாஸ்தயேவ்ஸ்கி படைத்து விட்டார். கோவில்பட்டியில் நாங்கள் வெண்ணிற இரவுகளைப் போன்ற கதையை எழுதிவிட முயற்சித்தோமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ.
அந்த அளவுக்கு நீங்கள் கோவில்பட்டியில் எல்லாருக்கும்
பரிச்சயமானவராக இருந்தீர்கள்.
எல்லோருக்கும் ஒரு நாஸ்தென்கா இருந்தார். யாராலும் அடைய முடியாத நாஸ்தென்கா. ஆனால் எப்போதும் கண்களுக்கு முன்னால் லட்சியக்காதலியாக உலவிக் கொண்டிருக்கும் நாஸ்தென்கா.
நான்கு இரவுகளின் கதை. நான்கு கதாபாத்திரங்களின் கதை. நாடகப்பாங்கான
மொழியில் கதை நாயகன் பேசுவது அவனுடைய கதாபாத்திரத்துக்கு அத்தனை பொருத்தமாக அமைந்து விட்டது. கதை முழுவதும் காதலின் சன்னதம் வந்ததைப் போல பேரன்பின் மழை பொழிந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு இரவிலும் குளிர்காலப் பனியும், காதலின் வெம்மையும் நம்மை மகிழ்ச்சியிலாழ்த்தும். மனம் நிலைகொள்ளாது
தவிக்கும்
. ஆணோ பெண்ணோ வாசிக்கும் போது இதயத்தின் ரகசிய அறையில் யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருக்கும்
முதல்காதல் ஞாபகத்துக்கு
வந்து துயருறும் இன்பமளிக்கும்.
ஒரு கஞ்சனைப் போல செலவழிக்காமல் அழுகிக் கொண்டிருக்கும் நம் அன்பு பொங்கிப் பிரவகிக்கும். அது நாஸ்தென்காவின் மீது மட்டுமல்ல, கண்தெரியாத பாட்டியின் மீது மட்டுல்ல, கனவுலக வாசியின் மீது மட்டுமல்ல, நாஸ்தென்காவின்
காதலர் மீது மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தையே
தழுவிக்கொள்ளும்.
ஆமாம். நாமெல்லோரும்
ஒரு நாஸ்தென்காவுக்காகவோ, ஒரு கனவுலக வாசிக்காகவோ வாழ்நாள் முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறோமில்லையா!
ஒரு கணமேனும் உன்னதத்தைத் தரிசிக்கத்தான் வாழ்நாள் முழுவதும் காத்துக் கொண்டிருக்கிறேன்..
அன்புக்குரிய நாஸ்தென்கா என் தனிமையிருளை உன் சுடர் ஒளி வீசும் தூய அன்பினால் போக்கினீர்கள்.
அதற்கு என் உயிர்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
உங்களுக்கும் என் பேரன்பின் தாஸ்தயேவ்ஸ்கிக்கும் ..
நாஸ்தென்கா.. என் இனிய நாஸ்தென்கா...
மொழிபெயர்ப்பு - ரா.கிருஷ்ணையா
வெளியீடு - நூல்வனம்
தொடர்புக்கு - +91 97515 49992
No comments:
Post a Comment