Wednesday, 17 July 2024

உங்கள் வீரத்தைக் கற்றுத்தாருங்கள அலெக்செய் மெரெய்யவ்!

 

உங்கள் வீரத்தைக் கற்றுத்தாருங்கள அலெக்செய் மெரெய்யவ்!

உதயசங்கர்

 


எப்பேர்ப்பட்ட மனிதர் நீங்கள்

மனித சாத்தியங்களின்  எல்லைகளை தகர்த்தவர் நீங்கள். நீங்கள் கூர்க்ஸ்க் பிரதேச ராணுவ முகாமில் பரீஸ் பொலொவோயைச் சந்தித்தது எங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு. நீங்கள் சோவியத் செஞ்சேனையின் மகத்தான தியாகத்தின் ஒரு துளி. பரீஸ் பொலொவோய் சிறந்த எழுத்தாளர். உங்களைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்

 

நீங்களிருவரும் அந்த இரவில் வோத்கா அருந்தி விட்டு உரையாடிய தருணங்கள் கண்முன்னால் அப்படியே அச்சசலாகத்தெரிகின்றன. உங்கள் முன்னால் தோலினாலும் அலுமினியத்தாலும் செய்யப்பட்ட உங்கள் இரண்டு கால்கள் கிடப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த இரண்டு கால்களும் பாசிச ஹிட்லரின் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய பெருமிதத்துடன், கிஞ்சம் கர்வத்துடன் பரீஸைப் பார்க்கின்றன. கவலைப்படாதீர்கள் அலெக்சேய் உங்கள் நண்பன் பெத் ரோவ் நலமாகி விடுவார்

 

ஓல்காவைப் பற்றிப் பேசும்போது உங்கள் இதயத்திலிருந்து காதல் ஊற்றெனப் பொங்கி உங்கள் கண்களின் வழியே வெளிப்படுவதைப் பார்த்தே பரீஸ் பொலோவோய் உலகின் மிகச்சிறந்த காதலை எழுதுவதென்று முடிவு செய்து விட்டிருக்க வேண்டும்ஒரு ரகசியம் தெரியுமா அலெக்சேய், ருஷ்ய சோவியத் நாவல்களை வாசித்து வாசித்து நாங்கள் ஒருபோதும் பார்த்திராத, சுவைத்திராத வோத்கா என்ற மதுவின் மீது அத்தனை பிரியம் தோன்றிவிட்டது

 

டீக்கடையில் டீ கிளாஸ்களைத் தட்டி,

 

 வாருங்கள் நாம் ஒரு கிளாஸ் வோத்கா அருந்திக் கொண்டாடுவோம்

 

 என்று கூக்குரலிடுமளவுக்குப் போய் விட்டோம்

 

மனிதனின் மகத்துவத்துவத்தையும் லட்சியஉறுதியையும் பேசும் சோவியத் நாவல்களில் ஒஸ்திராவ்ஸ்கி எழுதிய வீரம் விளைந்ததுபாரிஸ் பொலெயேவ் எழுதிய உண்மை மனிதனின் கதை இந்த இரண்டு நாவல்களுக்கும் தனித்துவமான இடம் உண்டு.

 

எங்கள் தோழர்கள் மாக்சிம் கார்க்கியின் தாய்க்கு அடுத்தபடியாக  இந்த இரண்டு நூல்களையும் வாசிக்கும்படி சொல்லிக் கொண்டே இருப்பார்கள்

 

உண்மை மனிதனின் கதையை அப்போது வாசிக்கும்போது என்ன உணர்வை ஏற்படுத்தியதோ அதே லட்சிய உணர்வையும், சாகச மனநிலையையும் காதலுணர்வையும் இப்போதும் ஏற்படுத்தியது.  

 

உலகின் மிகக்கொடிய போரான இரண்டாம் உலகயுத்தத்தில் பாசிச ஹிட்லரின் ஜெர்மன் படைகளுக்கெதிராக சோவியத் செஞ்சேனை நடத்திய வீரம்செறிந்த யுத்தம் பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்திருந்தாலும் உண்மை மனிதனின் கதைக்குத் தனியிடம் உண்டு.

 

" ஊம்.. விமானம் ஓட்டப்போகிறாய் அல்லவா? ஆம்.. ஆம்.. அப்பனே இப்போதைய யுத்தம் அப்படிப்பட்டது.. கை பிய்ந்து போனவர்கள் படைப்பகுதியைத் தாக்குதலுக்குத் தலைமை வகித்து நடத்துகிறார்கள். மரணக்காயம் பட்டவர்கள் மெஷீன்கன்களைச் சடச்சட வென்று சுட்டுத் தள்ளுகிறார்கள். பீரங்கி அரண்வாய்களைத் தங்கள் மார்பினால் அடைக்கிறார்கள்.. ஆம்.. இறந்தவர்கள் மட்டுமே சண்டை செய்வதில்லை....-"-- இவ்வாறு சொல்கையில் கிழவரின் முகத்தில் நிழல் படர்ந்தது. அவர் பெருமூச்செறிந்தார்

 

" அவர்களுங்கூடத்தாம் போரிடுகிறார்கள், தங்கள் புகழினால். ஆம்.. நல்லது, மறுபடி தொடங்குவோம்.. தம்பீ "

 

என்றார். இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிசத்துக்கெதிரான போரில் அதிகமான மக்களை ஆகுதியாக்கியே இந்த உலகைச் சோவியத் காப்பாற்றியதென்பதை இந்த உலகத்துக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

 

நாவல் தொடங்கும்போது ஒரு சிறுகதையின் மையத்தில் தொடங்குவதைப் போலத் தொடங்கி அலெக்சேய் உடைந்து நொறுங்கிய கால்களுடன் ஊர்ந்து செல்லும் போது நாமும் ஊர்ந்து செல்கிறோம். உயிர்வாழும் உறுதி மட்டுமல்ல; மீண்டும் விமானமோட்டி யுத்தத்தில் கலந்து எதிரிகளை வீழ்த்த வேண்டுமென்ற உறுதிப்பாடே அலெக்சேயை இறுதிவரை இயக்குகிறது.

 

 எங்கள் அன்புக்குரிய மிகாய்லா தாத்தா! ஆண்களையெல்லாம் கொரில்லா யுத்தத்துக்கு அனுபி விட்டு ஆட்டுமந்தைக்கு நடுவில் கிழட்டுக்கிடாவாக கிராம மக்களின் நலனைப் பாதுகாக்கிறீர்கள். நீங்கள் தான் அலெக்சேயைக் காப்பாற்றுகிறீர்கள். பசியுடனிருந்தாலும் சோவியத்தின் மாண்பினைக் காக்கும் படைவீரனை அப்படிப் போற்றிப் பாதுகாக்கிறீர்கள். உங்களை நாவலின் கடைசிவரை அலெக்சேய் ஞாபகம் வைத்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உண்மையான சோவியத் வீரனைக் காப்பாற்றியிருக்கிறீர்கள் தாத்தா. ஆம் தாத்தா . உண்மையான சோவியத் செஞ்சேனை வீரன்.

 

அலெக்சேய் உங்களுக்குத் தெரியுமா? பரீஸ் பொலொவோய் தன்னுடைய பேனாவால் இந்த நாவலை எழுத வில்லை. இதயத்தால் எழுதியிருக்கிறார். அதனால் தான் இது ஒரு உண்மை மனிதனின் கதையாக இல்லை, பல உண்மை மனிதர்களின் கதைகளாக மலர்ந்திருக்கிறது

முகத்தில் பட்ட தீக்காயங்களால், மனம் வெதும்பி வாழ்க்கை முடிந்து விட்டதென, யாரிடமும் பேசாமல் தனிமையிலிருக்கும், க்வோஸ்தியவ் அன்யுக்தாவின் காதலால் மீண்டும் யுத்தகளத்துக்குத் திரும்புகிறான். அந்த உண்மை மனிதனின் கதை

 

தான் இறுதிக்காலத்தில் இருந்தாலும் காயம்பட்டு மருத்துவமனையில் ஆன்மபலம் குன்றியிருக்கும் வீரர்களிடம் வேடிக்கைக் கதைகளைப்பேசி மீண்டும் அவர்களை உற்சாகப்படுத்தும் கமிசார் ஸெம்யோன் என்ற உண்மை மனிதனின் கதை

அலெக்சேயின் லட்சிய வெறியினால் கவரப்பட்டு அவனுக்கு தன்னுடைய கைத்தடியை கொடுக்கும் இருபத்திநான்கு மணி நேரமும் மருத்துவமனையிலேயே இருக்கும் தலைமை மருத்துவர் பணிக்கிடையில் போரில் இறந்து போன தன்னுடைய மகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பும் வஸீலி வஸீலியெவிச் என்ற உண்மை மனிதனின் கதை.

அத்தனை வீரர்களையும் தனித்தனியாகத் தெரிந்து அவர்களுக்கு உளமாரப்பணிவிடைகளைச் செய்யும் மருத்துவத்தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னா என்ற உண்மை மனுஷியின் கதை.

சாதாரணக் கிராமப்பெண்ணான ஓல்கா சோவியத் படையில் சேர்ந்து இரண்டு கால்களுமற்ற தன் காதலன் அலெக்சேயிடம் கடைசி வரை அவன் சொல்லத்தயங்கிப் பாதுகாக்கும் அந்த ரகசியம் தனக்கு முதலிலேயே தெரியுமென்று சொல்லாமலேயே அவன் மீதான காதலை அரும்நிதியாக நினைக்கிறாளே; அந்த உண்மை மனுஷியின் கதை.  

 

விமானப்படை காப்பரணில் அலெக்சேய்க்குக்கும் பெத் ரோவுக்கும் படுக்க இடம் கொடுத்து , தங்கள் உயிரை இழக்கிறார்களே கிழவியும் மகளும் அவர்களின் உண்மைக் கதை

 

சுய முன்னேற்றம், மோட்டிவேஷன் என்று தனிமனிதர்கள் தங்கள் சுயநலனுக்காக தாங்கள் செய்த மொள்ளமாரி முடிச்சவிக்கித்தனங்களைப் பேசும் புத்தகங்கள் குவிந்து கொண்டிருக்கும் காலத்தில் ஒவ்வொரு இளைஞனும் வாசிக்க வேண்டிய புத்தகம் உண்மை மனிதனிந் கதை. இது தனிமனிதனின் மோட்டிவேஷன் மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்கே மோட்டிவேஷன் தரும் இலக்கியம்.

 

ஆமாம் அலெக்சேய்! உங்கள் இலக்கையடையும் வரை நீங்கள் ஒருபோதும் சோர்ந்து விடவில்லை. உங்கள் லட்சியத்தில் பின்னடைவு வரும்போதெல்லாம் புதிய யுக்திகளைக் கையாள்கிறீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டுகிறீர்கள். அதற்காக மனித சாத்தியங்களின் எல்லைகளைத் தகர்க்கிறீர்கள் அலெக்சேய். அதனால் தான் மனிதகுலத்தைக் காப்பாற்ற முடிந்தது. ஏனெனில் நீங்கள் போரிட்ட அந்த யுத்தம் தான் ஜெர்மானியர்களுக்கு விழுந்த இறுதி அடி. ஹிட்லரின் தோல்வியை உறுதி செய்த பேரிடி

 

இப்போது நாங்களும் பாசிச முற்றுகையின் விளிம்பில் தானிருக்கிறோம். சிவில் சமூகம் உள்ளிட்டு பொதுச்சமூகம் பாசிச அபாயத்தை உணரவில்லை. இந்த நேரத்தில் உங்கள் லட்சிய உறுதியையும், புதிய யுக்திகளைத் தீட்டும் அறிவையும், முன்னேறித்தாக்கும் துணிச்சலையும் எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள் அலெக்சேய்

 

உண்மையான மனிதன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டுமென்று என்று சொல்லிக் கொடுங்கள் எங்கள் கதாநாயகனே!

 

வணங்கிறோம் அலெக்சேய்!

 

இப்படியொரு காவியம் படைத்த பரீஸ் பொலொவோய்  உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த  நன்றிகள்!

 


No comments:

Post a Comment